20 Apr 2020

வரத்தன்-இடுக்கி மாவட்டம்

நேற்று பார்த்த திரைப்படம் வரத்தன்.
கேரளாவில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை நாட்டுக்கு போவது தான் வாழ்க்கையின் லட்சியமாக இருந்தது. இப்போது அந்த நிலையில் ஒரு மாற்றம் ; ஒரு தம்பதிகள் கேரளாவிற்கு திரும்பி வருகின்றனர். கொஞ்ச நாட்கள் அமைதியாக வாழ வேண்டும் சொந்த நாட்டில். பெண் பணக்கார வீடு; பையனுக்கு பெற்றோர் இல்லை நல்ல வேலை என்ற நிலையில் கல்யாணம் நடந்துள்ளது போல்.
வெளிநாட்டை விட்டு திரும்பவும் பிடிக்கவில்லை, ஆனால் அக்கா அம்மா , ஊர் என வாழ வேண்டும் என்ற அதி ஆசை.

பெண்ணின் தாத்தா , அப்பா அம்மா வாழ்ந்த வீட்டுக்கு வந்து சேருக்கிறார்கள். வெளிநாட்டில் தனிமையில் வேலை என பரபரப்பாக வாழ்ந்திருந்தாலும் ஒரு பாதுகாப்பு இருந்ததும், இங்கு எப்போதும் , யாரோ, மற்றவர்களின் கண் காணிப்பில் வாழ்வது போன்ற நிலை. அது எரிச்சலை கொடுக்குகிறது பின்பு அச்சமாக மாறுகிறது கடைசியில் சண்டையிட்டு ஜெயிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பல வருடம் வேலை விடயமாக அன்னிய நாட்டில் வாழ்ந்திருப்பார்கள் பின்பு சொந்த ஊரில் குடிபெயருகையில் இதே சூழலை எதிர் கொள்வார்கள். இந்த நிலையை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் கதாப்பாத்திர வடிவமைப்பு எரிச்சலப்படுத்துகிறது.

எப்போதும் கணவரை ஏதோ தனக்கு பாதுகாக்கவே பிறந்து உருவெடுத்தது மாதிரி நடத்துவது, ஒரு கணவரின் சுயத்தை கேலி செய்வது, கணவருக்கான வெளியை மதிக்காது இருப்பது. நீ ஆம்பளைன்னா சண்டை போட்டு, வான்னு எப்போதும் உசுபேத்தி விடுவது.
ஏதோ அணிவது மார்டேன் உடை, சாப்பிடுவது நவநாகரீக உணவு என்றாலும் செயல் நடவடிக்கை எல்லாம் சிறுபிள்ளைத்தனம். கடைசி சீனில் கணவர் அடிபட்டு சாகப்போக போவும் போது துப்பாக்கியை எடுத்து வருவார். இந்த மாதிரி கதை என்ன சமூகத்திற்கு சொல்ல வருகிறது என்பதை விட இதே போன்ற கதை சமூகத்திற்கு எந்த வித தாக்கத்தை தரப்போகிறது என சிந்திக்கிறேன்.
இந்த கதையின் தளம் இடுக்கி மாவட்டம், பீர்மேடு,(தேக்கடி) பருந்தன்பாறைக்கடுத்து ஒரு தோட்டம் வீடு.
25 வருடம் முன்பு கல்விக்கு என அந்த மலையை விட்டு கோட்டயம் வந்து அடைந்தோம். முதல் வகுப்பில் பேராசிரியர் கேட்பார்; ஊர் ஏது. இடுக்கி பீர்மேடு என்றதுமே அவர்கள் முகத்தின் மாற்றத்தை கவனிப்போம். ஏதோ காட்டுக்குள் இருந்து வந்த மனிதர்களை பிடித்து தின்னும் காட்டுவாசிகளை பார்த்தது போல பார்ப்பார்கள். அப்போது நாங்க கல்வி கற்க கோட்டயம் , அதை விட்டா திருவனந்தபுரம். ஒரு கல்லூரி கிடையாது , பல் பிடுங்க ஆஸ்பத்நிரி கூட கிடையாது. ஆனால் எப்போதும் கொடிபிடிக்கும் அரசியல் எங்களுடனே இருந்தது.

அங்கைய சில இளைஞர்களை பெண்கள் உள்ளாடையை வரை திருடும் மனப்பிளர்வு நோயாளிகளாக காட்டியுள்ளனர். Moral Policing செய்பவர்களாகவும் சொல்லப்படுகிறது. மலைப்பிரதேச மக்கள் உழைப்பாளிகள் அவர்களுக்கு இதற்கு நேரம் இல்லை. கொல்லம் , கொச்சி தான் பல போதும் செய்தியில் வந்துள்ளது. சொல்லப்போனால் 18 நூற்றாண்டில் காடு மலைக்குள் குடியேறி, காட்டு புலி யானைகளோடு போராடி அவர்களுக்கான இன்ப துன்பங்களில், மிகவும் எளிமையாக சொல்லப்போனால் அரசியல் அமைப்புகளால் மதவாதிகளால் நிராதரவாக மாற்றப்பட்ட மக்களை திரைத்துறையும் வேட்டையாடியுள்ளது.
பொதுவாகவே நாட்டு ஆட்கள் பெண் கொடுக்கக்கூட தயங்கும் இடங்கள் மலை தேயிலை சார்ந்த வாழ்விடங்கள். இனியும் அந்த பார்வை மாறப்போவது இல்லை.

இனி கொஞ்சநாட்களுக்கு தமிழ் , மலையாளம் பக்கம் இருந்து விடைவாங்கி ஆங்கிலம், ரஷியா மொழி படங்களில் சரணடைய போகிறேன்.
கலைப்படைப்பு என்பதை விட தமிழ் பார்முலாவில் பணம் ஈட்ட வேண்டும் என்றே படம் எடுக்க சில பல இயக்குனர்கள் மலையாளக்கரையிலும் பெருத்து விட்டனர்.
நடிகர் பகத் இது போன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்ற வேண்டுகோள் மட்டுமே.
இயக்குனர் அமல் நீரட்.

இசை , ஒளிப்பதிவு எதும் ஒரு வகைக்கும் ஆகாது. அதனால் அவர்கள் பெயரையும் அறியவில்லை.
மலைப்பிரதேச வாழ்க்கைக்கு ஒரு அழகு உண்டு. அப்படி ஒரு காட்சியும் இல்லை. பொறுப்பற்ற வெறும் மசாலப்படம்.

சங்கம்புழா சிருஷ்டிகள்

சங்கம்புழா கிருஷ்ண பிள்ளை என்ற கவிஞரை நினைத்துமே துயர் தொற்றி கொண்டாலும், அவருடைய கவிதைகள் ஒரு தாலாட்டும் சங்கீதம் போல நம்மை பின் தொடர்கிறது. நம் கவலைகளில் தேற்றும் இசையாக வருகிறது. உயிரோட்டமான அவருடைய வார்த்தைகள், ஆதரவாக, ஸ்நேகமாக நம்மை பின் தொடர்கிறது.
சங்கம்புழாயின் கவிதைகளுக்கு பின்புலமாக ஒலிக்கும் இசை, கேரளா திருவாதிரைக்களிக்கு பாடப்படும் நாடடுப்புற இசையாகும். தொட்டிலில், என்னை பாட்டுபாடி உறக்கிய நல்லம்மா - என் பாட்டியில் இருந்து தான் கவிதை ஞானம் கிடைத்தது எனக்கூறுகிறார்.
இவருடைய குடும்பம் இடைப்பள்ளியில் பெயர் பெற்ற பணக்காரக் குடும்பம். பணம் போனதும், புகழும் பெருமையும் சேர்ந்தே போய் விட்டது. கடைசியில் மிஞ்சினது அப்பா நோக்கிய வக்கீல் குமஸ்தா வேலை மட்டுமே. சங்கம்புழையின் 10 வது வயதில் அப்பா இறந்ததும் இவருடைய வாழ்க்கை தனிமையில் தள்ளப்பட்டு விட்டது.
ஒரே வீட்டில் இரு பெண்கள் அம்மா , பாட்டி கண்காணிப்பில் வளர்ந்த ஒரே ஒரு குழந்தை இவர். இவர்களுடைய தலையிடல் பலபோதும் தனது இயல்பான சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக இருந்தது.ஒருக்கா இவர் பொது கூட்டத்திற்கு போகக்கூடாது என்று இவருடைய அம்மா இவருக்கு இருந்த ஒரே வெள்ளை வேட்டியை ஒளித்து வைத்து விட்டாராம். இவர் துண்டை உடுத்து கொண்டு கூட்டத்திற்கு போய் பங்கு பெற்றுள்ளார்.
கட்டுப்பாடுகள் தான் மீறவும் வைத்தது கவியை. சங்கம்புழா இயல்பாகவே கனவு ஜீவி. 10 வயதினிலே கவிதை எழுத ஆரம்பித்து விட்டார்.
உள்ளூரில், இடைப்பள்ளி ராகவனும் சேர்ந்து இலக்கியப்பணி, பேச்சு என இலக்கியம் வளர்கின்றனர். உள்ளூர் ஷெல்லியும் கீட்ஸுமாக அறியப்பட்டவர்கள்.
கவியின் படிப்பு, கடினமான வறுமை மற்றும் இலக்கியப்பணியால் தடை பட்டது. வேலைக்கு போய் பணத்தை சேகரிப்பார். படிப்பை தொடர்வார், படிப்பை விடுவார் வேலைக்கு போய் பணம் ஈட்டுவார். இப்படி தான் கவியின் வாழ்க்கை போய் கொண்டிருந்தது.
காலம் ஓடுகிறது. துன்பங்கள் தனியா வருவது இல்லை தானே! காதல் உருவத்தில், பெண்களும் வந்து போய் கொண்டு இருக்கின்றனர். ஒரு பெண் உருகி நோக்கினால் நாலு வரியில் ஒரு கவிதையாவது எழுதிக்கொடுக்காது பின் வாங்குவதில்லை. பல பெண்கள் இவர் கடைக்கண் பார்வைக்கு ஏங்கியதாகவும் , இவருடைய கடிதம் பல பெண்கள் கைகளில் இன்றும் உண்டு என்கின்றனர்.
12 ஆம் வகுப்பு மகாராஜாஸ் கல்லூரியில் முடித்து விட்டு, கல்லூரி படிப்பிற்கு திருவனந்தபுரம் வந்து சேர்கிறார். கல்லூரியில் சேரும் போதே இவருக்கு 23 வயது ஆகி விட்டது. அந்நேரம் இரண்டு கவிதைத்தொகுப்பு வெளியிட்டு விட்டார். கல்லூரியில் முதல் வருடம் மலையாளம் மொழி பாடத்திற்கு இவருடைய கவிதைத்தொகுப்பும் இவருக்கு படிக்க இருந்துள்ளது‌.
கல்லூரியில் சேரும் போது ஒரு பேராசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுடன் சேர்ந்திருந்தாலும் அங்கும் இவரை ' உள்ளூர்' என்ற பேராசிரியர் வடிவில் துரத்தியது துன்பம். மற்று மாணவர்கள் இவர் கவிதையை படித்து 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் போது கவிக்கு 40 க்கு மேல் மதிப்பெண் கிடைக்காதாம். கவி மலையாள இலக்கண தேர்விலும் வெற்றியடையவில்லை.
அந்த நேரம் இவருக்கு ஒரு காதலும் இருந்துள்ளது. இது இவர் தாயாருக்கு பிடிக்கவில்லை. குடும்பப்பாங்கான ஸ்ரீ தேவியை கண்டு பிடித்து திருமணவும் முடித்து வைத்து விட்டனர்.
கவிக்கு, மறுபடியும் கல்லூரிக்கு போக இயலாத சூழல். கல்லூரிக்கு போவதை நிறுத்தி விட்டார். தனது 27 வது வயதில் மூன்றாம் தரத்தில் பட்டம் பெற்றாலும் "பேராசிரியர்" ஆகும் தகுதியை இழந்ததால்,பேராசிரியர் ஆகும் ஆசையை மூட்டை கட்டி வைக்க வேண்டியதாக போச்சு.
பிழைப்பிற்கு தனியார் டுயுட்டோரியல் கல்லூரியில் கற்பிக்கிறார், பின்பு ராணுவத்தில் கணக்கராக சேருகிறார்.

அப்போது இவருடைய கவிதையின் ரசிகை, ஒரு மருத்துவரின் மனைவியின் நட்பு கிடைக்கிறது. அந்த பெண்மணி இவரை சட்டம் படிக்க திருவனந்தபுரம் செல்லக் கூறுகிறார்.
இதற்குள் இரண்டு மகன் இரண்டு மகள் என நாலு குழந்தைகள்.
சில சூழலால் சட்டப்படிப்பையும் இடையில் நிறுத்தி சொந்த ஊர் வந்து சேருகிறார். முதலில் டைபாய்டு அதை தொடர்ந்து காசநோய் பிடித்து கொள்கிறது. 37 வது வயதில் விடை பெற்று விட்டார்.
இவருடைய பாதையை பின் தொடர்ந்து, மலையாள கவிதை உலகில் பாஸ்கரன், வயலார், வைலோப்பிள்ளி போன்றவர்கள் வந்தாலும், இன்னும் இவரை தாண்டி ஒரு கவிஞரும் கேரள மண்ணில் பிறக்கவில்லை.
நெஞ்சை உருக்கும் கவலை, பிரிவு, காதல் துயர் , வறுமை , இயற்கை, என இவர் எழுதின கவிதைகள் காலத்தை கடந்து வாசிப்பவர்களுக்கு இதமான உணர்வையும் ஆறுதலையும் தருகிறது.
ஒரு மயில் ஆடும் நடனம் போல, இதயத்தோடு அணைத்து சேர்த்து வைத்து பாடுவது போல உணர்வுகளை தந்து சங்கம்புழை கேரள மண்ணின் அடையாளமாக இப்போதும் எப்போதும் உள்ளார்.
ஒரு பெண்மையின் நளினம் கொண்ட மென்மையான வார்த்தைகளும் தாலாட்டு பாடும் பாட்டியின் குழைவும், பாசவும் கேரளாவின் நாட்டு பாடல்களின் மெட்டுகளுடன் கேட்பவர்களை மயக்கி தன்னகத்திற்குள் வைத்து கொள்கிறது இவருடைய கவிதைகள்.
தனது நண்பன் இடப்பள்ளி ராகவன் பிள்ளை , 27 வது வயதில் செய்து கொண்ட தற்கொலை ' ரமணன்' என்ற 'Master Piece' கவிதையை உருவாக்க வழி செய்தது.
நண்பனின் நினைவாக அன்றைய தினம் எழுதிய கவிதை இதுவே.

########₹₹₹#######
ஆதரவற்ற உன் எரிந்த மனதுமாக நீ மறைந்தாய்
இனி கேட்க இயலாது மென்மையான மெல்லிய குரல்கள்
இன்றுவரை மலர்தோப்பில்
நாம் சேர்ந்து பறந்து பாடி
இப்படியென்னை
இங்குதனித்து விட்டுவிட்டு நீ
ஐயோ பறந்து ஒளிந்தாய்?
____----________________
നിരാശ്രയാം നിൻ നീറും മനസ്സുമായ് നീ മറഞ്ഞു
കേൾക്കുകയില്ലിനിമേൽ നിന്റെ നേർത്തുനേർത്തുള്ള കളകളങ്ങൾ
ഇന്നോളമീ മലർത്തോപ്പിൽ നമ്മളൊന്നിച്ചു ചേർന്ന് പറന്നു പാടി
ഇന്നിളമെന്നെ തനിച്ചുവിട്ടിട്ടെങ്ങുനീ അയ്യോ പറന്നൊളിച്ചു?
---------+_____----------------
O blessed nightingale You have vanished with your scourging despair
Your songs of melancholy sweetness Alas! will not be heard again
Were we not like two chirping little birds singing in tuneful harmony?
Where have you gone leaving me all alone?
#######₹₹#####

"ஏதோ தீவிரமான உறவின் தோய்ந்து போன ஏமாற்ற உணர்வுதானே சிருஷ்டி"... ......இல்லை என்றால் இப்படியெல்லாம் வர்ணஜாலமிக்க மென் சிறகுகளால் பறக்கவே முடியாது , நிச்சயமாக"....(தூவானம் ஆ . மாதவன்

16 Apr 2020

சங்கப்புழா கிருஷ்ணபிள்ளா மலையாள மொழி 'மகாகவி' !

சங்கப்புழா கிருஷ்ணபிள்ளா மலையாள மொழிக் கவிதை உலகில் 'மகாகவி' என்று அறியப்படுகிறவர். கானகந்தர்வன், மக்கள் கவிஞர், ஜனரஞ்சக கவிஞர்,காதல் கவிஞர் என பல பெயர்களில் அன்பாக அழைத்தனர் கேரள மக்கள்.
கேரளாவின் ஷெல்லி என அறியப்பட்ட கவிஞர் சங்கம்புழாவிற்கு இடைசசேரியில் ஒரு நூலகம் , பூங்கா அமைத்து இன்றும் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றனர் .இன்று வாசிக்கையிலும் கவிஞரின் கவிதைகள் வீணையில் இதமாக மீட்கப்படும் குரலாக ஆறுதலாக, காதலாக, இயற்கையாக, பறைவையாக, பூக்களாக நம்முடன் பயணிக்கிறார்.

இன்றைய தினம் நோய்க்கு மருந்தற்று , 1 மீட்டர் இடவெளியில். பயத்தோடு தள்ளி நின்று நோக்கும் கொரோனா நோயின் இடத்தில் 1948 காலயளவில் காச நோய் இந்தியாவில் இருந்துள்ளது. அந்த கொடூர நோயின் பிடியில் சங்கம்புழா அன்று இருந்தார்.

பல பெண்களின் இதயத்தில் எந்த நிபந்தனையும் அற்று இடம் பிடித்திருந்த கவிக்கு தேய்ந்து மறைந்து கொண்டிருக்கும் உடலும் , வீங்கி போன தலையும் கவிதைகள் எழுதின நீண்ட கைவிரல்கள் மட்டுமே மிஞ்சியதாம்.

இனி மருத்துவம் இல்லை என்ற நிலையில் தனது பெரிய வீட்டின், தெக்கு மூலையில் ஒரு ஓலைக்குடில் அமைத்து தலைமாட்டில் சாராயக் குப்பியுடன், தன் குறை வயது ஜாதகத்தை நினைத்து பயந்து கொண்டு தனிமையாக கிடக்கிறார்.

மனைவிக்கு வருத்தம்; கவிஞர் தனித்து வீட்டிற்கு வெளியே இருப்பதில், நமது பிள்ளைகளுக்கு இந்த நோய் பிடித்து விடக்கூடாது, தனித்து இருந்து கொள்ளுகிறேன் என்கிறார். வெறும் 27 வயது தான் மனைவிக்கு .

அன்றைய மாத்ருபூமி பத்திரிக்கையில் மருத்துவ செலவிற்கு கூட பணமில்லாது தனது கடைசி நாட்களை கழிக்கிறார் கவிஞர் என்ற செய்தி வருகிறது. வெளிநாட்டு மலையாளிகள் அன்றைய நாள் 1949 ல்1000 ரூபாய் அனுப்பி விடுகின்றனர். தபால்க்காரர் கொண்டு கொடுக்கையில் எனக்கு யாருடைய தயவும் வேண்டாம் என்றுக்கூறி திருப்பி கொடுத்து விட்டார்.

சங்கம்புழாவின் நண்பரை தேடி செல்கிறார் மனைவி. நீங்கள் உங்கள் நண்பரிடம் பணத்தை ஏற்று கொள்ள செல்லுங்கள், வீட்டில் மருந்து வாங்கக்கூட பணம் இல்லை என்று அழுகிறார். நண்பர் வந்து சங்கப்புழையை தேற்றுகிறார், வாழ்க்கையை விரளப்படுத்தி விட்டேன் எனக்கூறி , அடுத்த நாள் பணத்தை பெற்று கொள்கிறார்.
உடனே திருச்சூர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்கின்றனர், அடுத்த இரண்டு நாட்களில் இறந்து போகிறார்.
எத்தனை பேருக்கோ ஆறுதல் கொடுத்த அவருடைய கவிதை வார்த்தைகள் மனைவிக்கு ஆறுதல் கொடுக்கவில்லை.
கையில் அன்று மூன்று குழந்தைகள். மூத்த மகனுக்கு 10 வயது இளைய மகளுக்கு ஒரு வயது.



எத்தனையோ பெண்கள் மனதில் ஆசைநாயகனாக, இன்னும் பல பெண்களின் காதலனாக இருந்த சங்கம்ப்புழா மனைவிக்கு எந்த நிறைவும் தரவில்லை.

தன்னுடைய முதல் பெண்ணுக்கு வரன் தேடிய போது "ராணுவ வீரனாக இருந்தாலும் பரவாயில்லை ஒருபோதும் ஒரு இலக்கியவாதியாக இருக்க கூடாது" என்ற நிபந்தனையில் இருந்துள்ளார்.
1985 ஆம் ஆண்டு மகா கவியின் 78 வது பிறந்த நாள் தினத்தை கொண்டாடும் அவசரத்தில் கேரள அரசு இருக்க தனது 45 ஆவது வயதில் 24 வயது மகன், 19 வயது மகள் மற்றும் 50 வயது கண்வருடன் சாப்பாட்டில் விஷம் கலந்து முதல் மகள் அஜிதா தற்கொலை செய்து கொண்டார்.
வறுமை அவரை கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கி , யாரும், உதவ இயலாத அளவிற்கு நொறுக்கி விட்டது. வீட்டில் இருந்த அண்டா, குண்டா பொருட்களையும் விற்று நாட்களை கடத்தியாச்சு.
கடக்காரர்கள் இனி பொருள் தர இயலாது என்று திருப்பி அனுப்புகின்றனர். வட்டிக்கு கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து திட்ட ஆரம்பிகிறார்கள்.
யாரிடமாவது உதவி கிடைக்காதா என்று சொந்த வீட்டிற்கு போகிறார். அங்கும் கொடுத்து உதவும் நிலையில் யாரும் இல்லை. பக்கத்து வீட்டு பாட்டி 20 ரூபாய் கொடுத்துள்ளார். அந்த 20 ரூபாய்க்கு கடைசியாக விஷம் வாங்கி வருகிறார் தன் வீட்டிற்கு.
அஜிதா, பக்கத்து வீட்டு பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கும், சாந்தமான எளிமையான, அன்பான பெண்மணி. அந்த வீட்டில் அவர் எழுதி பிரசுரிக்காத இரண்டு நாவல் கிடந்ததாம்.
யாருடனும் வருத்தம் இல்லை. என்னால் என் வறுமையை தாங்க இயலவில்லை. தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட என் மகன் நினைவில் இருந்து என்னால் மீளவும் இயலவில்லை. என் மகன் நினைவாக வளர்த்த நாய் செத்ததும் என்னை வேட்டையாடுகிறது. இனி நாங்கள் வாழ தகுதியற்றவள்.
கணவருக்கு ஒரு கடிதம்! உங்களுடைய குடியால், வறுமையும் அவமானவும் என்னை பின் தொடர்கிறது. நாங்கள் விஷம் கலந்த சோறுண்டு, எங்கள் மகனிடம் போகிறோம். உங்களுக்கு விருப்பம் எனில் எங்களுடன் வரலாம் என்று எழுதி வைத்து விட்டு போய் சேர்ந்து விட்டார்.
இரவு முழுக்குடியுடன் வந்து சேர்ந்த 50 வயது கணவர், எல்லோரும் செத்துக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அவரும் மீதம் இருந்து சோற்றை உண்டு மரித்து போனார்.
சங்கம்புழையின் மாஸ்டர் பீஸ் 'ரமணன்' என்ற கவிதை! அந்த கவிதையை இப்போது வாசித்தாலும் வார்த்தைகளால் வருடும் கவிதை.
தன்னுடைய உயிர் நண்பன், இடப்பள்ளி ராகவன்  காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட போது விலாப காவியமாக எழுதினது . அதில் தானும் தன் நண்பனும் ஆடு மேய்க்க போவது போல் புனைவு செய்து அக்கவிதையை எழுதியிருப்பார். மரணத்தை அக்குவேர் ஆணிவேராக ஆழ்ந்து ஆராய்ந்து, அழுது, தத்துவார்த்தமாக எழுதின அழகியலான படைப்பு. அதில் நட்பு, காதல், மோகம், ஏமாற்றம் என எல்லாம் கலந்து; நண்பா ஒரு பெண்ணுக்காக உன் உயிரை விட்டு விட்டயே என்று வருந்தியிருப்பார். இந்த கவிதை 1930 ல் வெளிவந்தது. ஒரு லட்சம் பிரதிகள் விற்றழிக்கப்பட்டுள்ளது.இதை வாசித்த கல்லூரி மாணவிகள் , பெண்கள் நாங்கள் ஒரு போதும் காதலித்து ஏமாற்ற மாட்டோம் என கடிதம் எழுதியிருந்தார்களாம். அப்படியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின கவிதை.
இவருடைய கவிதையின் சிறப்பே சம்ஸ்கிருதம் மற்றும் மணிப்பிரவாள மலையாள வார்த்தைகள் கலராத; திராவிட மலையாளச் சொற்கள் தாங்கிய கவிதைகள். அவருடைய கவிதைகளை உருவிடாத ஒரு மலையாளி கூட இருக்க மாட்டார்கள்.
மரணத்தை வெறுத்தவர், அதிலும் தற்கொலை மரணத்தை அறவே வெறுத்தவர். ஆனால் அவரை மரணம் பின் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது. தனது 10 வது வயதில் தன் தகப்பனார், பின்பு தான் முதன்முதலில் ஆசைப்பட்ட முறைப்பெண் அவளுடைய 10 வது வயதில் மரித்தது. கவியுமே தனது மரணத்தை வலுக்கட்டாயமாக ஏற்று கொண்டவர். விதி யாரை விட்டது.
பிற்பாடு கவிஞரின் மனைவி ஸ்ரீதேவி வயதாகி 2002லும் 2004 ல் மகன் வாகன விபத்திலும் மரித்து விட மிஞ்சினது இளைய மகள் மட்டுமே. இளைய மகள் குறிப்பிடுகிறார்; தனது அம்மா எந்த பிள்ளையும் எழுத்துலகிற்கு வருவதை விரும்பவில்லை. இருந்தும் சங்கப்புழா மகன் இரு புத்தகம் வெளியிட்டுள்ளாராம்.
கவிஞரின் மனைவி .......இனியாவது
"திருமணம் என்பது ஒரு சூதாட்டம், அதில் மனிதர்கள் வெறும் பகடைக்காய்கள் என நம்புவாரா?
வாழ்க்கையே ஒரு நாடகம் என்கிற போது திருமணம் சூதாட்டமாக இருப்பது தானே இயல்பு ?

14 Apr 2020

ஜல்லிக்கட்டு -மலையாளத்திரைப்பட விமர்சனம்


மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரியின் இன்னொரு திரைப்படம் ஜல்லிக்கட்டு!

கதைத்தளம் மலங்காடு, இடுக்கி மாவட்டம்..அங்குள்ள வாழ்வியல் காடு, ஏலைக்காய் தோட்டம் , கோயில் பாதிரியார், பணக்காரன், ஏழைகள், ஹிப்பிகள் அவர்கள் உணவு, காதல், போட்டி பொறாமை.

"அடிப்படையில் மனுஷங்க எவ்வளவு சல்லிப்பயல்கள், வெறும் வேட்டையாடும் காட்டுவாசிகள்" என முடித்துள்ளனர்.

இதில் மனிதனுக்கும் விலங்குக்குமான போராட்டமாக புறமே தோன்றினாலும் மனிதனின் இருபக்கங்கள் மனிதவும் தன்னுள் ஒளிந்து கிடக்கும் அரக்கத்தனத்திற்குமான போர் இதுவே மைய்யக்கருத்து. 

இறச்சிக்கடையில் இருந்து ஒரு எருது தப்பித்து போவதுடன் கதை ஆரம்பிக்கிறது. எருதை விரட்டுகின்றனர்.  வழியில் காண்பவை எல்லாம் உடைத்து போட்டு அது பாய்கிறது.  பணக்காரன், கோயில்காரன், பணியாளன்,  அரசு இயந்திரம் என எதுவும் அதற்கு பொருட்டல்ல.   எதிரில் காண்பவர்களை அழித்து கொண்டு அது மரணப்பாச்சில் எடுக்கிறது. நாம் இப்போது எதிர் கொள்ளும் கொரோனாவை இந்த எருதுடன் பொருத்தி பார்க்கலாம்.

முதலில் எருதின் உடமையாளனை திட்டுவார்கள், அடிக்க போவார்கள் "நீ ஏன் இது போன்ற எருதை அவுத்து விட்டாய்" என கேட்டு ஊரே பஞ்சாயித்து கூடும்.  சீனாக்காரனை திட்டுதோமே அது போலத்தான்.

ஒரு கட்டத்தில் இந்த எருதை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்றதும் ஒரு தோக்கு வைத்திருக்கும் வேட்டைக்காரன் குட்டப்பன், அந்த ஊரிலுள்ள சட்டம்பிகள் கும்பலிடவும் உதவியை நாடுவார்கள்.  இப்போதைக்கு பொது எதிராளி எருது இதை எப்படி ஆகினும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள். நாம் கைதட்டி, விளக்கு வைத்த மனநிலையில். நம்ம நாடுகள் மாறி மாறி மருத்துவ உதவி நாடுவது மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம்.

எருது ஓட அதன் பின்னால் ஊரே ஓட……….. காலையில் ஆரம்பித்த ஓட்டம், இரவு ஆன பின்பும் முடியவில்லை.  நான் அதை செய்வேன், இதைச் செய்வேன் என பெருமை பேசும் மனிதர்கள், எருதுவின் ஒரு பார்வையிலே கீழே விழுந்து கிடப்பான்.   இயற்கையை மனிதர்களால் மீற இயலாது என்று நினைவுப்படுத்தி  கதை நகர்கிறது.

ஒரு அதிஷ்டம், எருது நடுக்காட்டில் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டது. அப்பாடா….. ன்னு  ஆறுதலடைந்து மூச்சுவிட்ட மக்கள் கூட்டம்; எருதுவை கிணற்றினுள்ளில் வைத்தே துப்பாக்கியால் சுட்டு கொல்ல திட்டமிடுகின்றனர்.

மனிதன் தன் நோக்கத்தை அடைந்ததும், அவன் குணம் வந்த வழிகளும் மறந்து, அகம்பாவம் எடுத்து, அவனை எங்கு விட்டது துயர்கள்.  தன் முன் இருக்கும் ஆபத்து விலகியதும் மூளை குடிலமாக சிந்திக்க ஆரம்பிக்கிறது.

நான் தான் எருது கிணற்றில் தள்ள காரணமாக இருந்தேன். வெளியே எடுத்து நான் தான் கொல்லுவேன் என ஆண்டனி பிடிவாதம் பிடிக்கிறான். எருதை சுட்டு போட வந்த குட்டப்பனை தடுக்கிறான்.  அப்புறம் எருதை கொன்று ஊர் மக்களை காப்பாற்றின பெருமை குட்டப்பனுக்கே போய் சேர்ந்து விடும், அது தன் ஆளுமைக்கு குறைச்சில் என நினைக்கிறான். நம்ம அமெரிக்கா ட்ரம்பு குணம் என வைத்து கொள்வோம்.

இதனிடையில் சுவாரசியமான சில சம்பவங்கள். அப்பனுக்கு விடிந்தா மகள் திருமண நிச்சயத்தை நடத்த விருந்து வைக்க வேண்டும். அவரோ யாரை அழைப்பது, எந்தந்த உணவு பரிமாறுவது , எருது 7 கிலோ வாங்க வேண்டும் அதை எண்ணை ஊற்றி எப்படி வழற்றி கொடுப்பது என்று திட்டம் போட்டுக்கொண்டு இருப்பார். புள்ளை எவனோடோ தன்னை மறந்து கைபேசியில் கதைத்து கொண்டு  திரியும்.

விடியப் போவுது எருது கிடைக்குமா என்ற நம்பிக்கை இல்லை.  அப்போ நாட்டு கோழியாவது வாங்குவோம் என பக்கத்து வீடு கோழி விற்பவரிடம் போவார்.  தகாத நேரம் வந்ததால் யாரும் இவர் கோழி வாங்க வந்தார் என நம்பமாட்டார்கள்.  பெண் கோழி பிடிக்க வந்தார் என்ற நிலையில் இவரை பிடித்து கட்டி வைத்து அவமதிப்பார்கள்.

மகள் இதனிடையில் காதலனுடன் ஓடிப் போவதற்கு திட்டம் போட்டு அவனுடன் தப்பி போய் கொண்டிருப்பாள்.  எருது விரட்ட இரவில் நடமாடின மக்கள் இவளை கண்டு தகப்பன் வீட்டில் கொண்டு சேர்ப்பார்கள். அப்பனுக்கு மகளை கேள்வியும் கேட்க இயலாது........

இன்னொரு பக்கம் எருதை தொலைத்து சாவா-வாழ்க்கையான்னு போராடிக் கொண்டிருக்கும் இறச்சிக் கடைக்காரனின் தாத்தாவை பற்றி, இந்த ஊருக்கு வந்த வரலாற்றை பற்றி நையாண்டி செய்து கொணடு இருப்பார்கள் ஊர் மக்களில் சிலர்.

பெண் மேல் கொண்ட அதீத காதல் ஆண்டனியை வெறியனாக மாற்றி விடும். அந்த இக்கட்டான தத்திர கட்டத்திலும், தனக்கு முன் குட்டப்பன் அவளை அடைந்து விட்டானோ என்று ஓடி போய் அவள் வீட்டில் பார்ப்பான். நான் தான்  எருதை கிணற்றில் தள்ளி போட்டேன். இறச்சியோடு வருகிறேன் என்றதுமே பெண் மனதில் ஆண்டனி வலியவனாக தெரிய ஆரம்பிக்கிறான்.
 
நம்ம கிணற்றுக்குள் விழுந்த எருது என்னாச்சுன்னு பார்ப்போம்.
குட்டப்பனுக்கும், ஆண்டனிக்கும் ஒரு முன் பகை உள்ளது. இருவரும் மாடு வெட்டும் கடைக்காரரின் ஒரே தங்கையை காதலிக்கின்றனர். இந்த சூழலை பயண்படுத்தி அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும், கல்யாணம் செய்ய வேண்டும் என்ற பிடிவாதம் ஆண்டனிக்கு . பெண்ணோ ஆண்மையின் அடையாளமான குட்டப்பன் மேல் தான் மையல் கொண்டிருப்பாள்.

அடுத்து எருதை கிணற்றில் இருந்து மேலே எடுக்க வேண்டும். ஒரு எருதை எடுக்க ஊர் ஆண்களே தங்கள் வலிமையை பயண்படுத்தி கொண்டு இருப்பார்கள்.

ஒரு மகன், தன் தாயின் மரணப்படுக்கை அருகே இருந்து கவனித்து கொண்டு இருப்பார். சத்தம் கேட்டதும் என்ன நடக்கிறது என்று கூட்டத்தோடு வேடிக்கை பார்க்க நின்று கொண்டிருப்பார். எருதை ஊரே சேர்ந்து மேலே கொண்டு வரும் நேரம், மழையும் ஆரம்பிக்க எருது குதறி தப்பித்து ஓடிடும். மறுபடியும் எருது பின்னால் ஓடுக் கொண்டு இருக்கும் கூட்டம்.


ஒரு அருவியில் ஆண்டனியும், குட்டப்பனும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள். அந்த எருதால் வந்த உயிர் அச்சம் , ஊர், மக்கள் பிரச்சினை எல்லாம் மறந்து அந்த பெண் பெயரைச் சொல்லி கட்டி புரண்டு சண்டை போட்டு கொண்டிருப்பார்கள்.  எருது அங்கே வந்திடும் குட்டப்பன் ஆணியை கொடுத்து எருதை குத்துடா; என்றால் இப்போது ஆண்டனிக்கு எருதை விட குட்டப்பன் தான் பிரச்சினை. குட்டப்பனை குத்தி போட்டு தப்பி ஓடிக்கொண்டு இருப்பான்.
ஆக்கள் குட்டப்பனை கண்டுஎருது குத்துன மாதிரி இல்லையே, யார் குத்தினது” என்றதும் எருது தான் எனக்கூறி ஆண்டனியை காப்பாற்றுவான்.

ஒவ்வொரு பிரச்சினைக்கு இடையில் காவல்த்துறை வந்து பஞ்சாயத்து வைக்கும் வழக்கை தீர்த்து விடும். ஆனால் போலிஸ்காரனுக்கும் அவர் பெண்டாட்டிக்கும் தீராத தீர்க்கப்படாத வழக்குகள். 

இப்போது எருது மேல் பலருடைய ஈட்டி பாய்ந்திருக்கும். ஆண்டனிக்கு இப்போதும் வெறி தீரவில்லை. அந்த குத்தின ஈட்டி தன்னுடையது என்பான். ஊர் ஹிப்பிகளும் வந்து சேருவார்கள்.  மனிதrகள், தெரியாதே ஆட்டு மந்தை மாதிரி ஒருத்தன் ஒருத்தனை அடித்து கொண்டு நான் தான் எருதை கொன்றேன் என்று போட்டி போட்டு கொண்டு இருப்பார்கள். கொரோனாவிலும் கட்சிக்கொடிக் கலரில் முகமூடி கொடுக்கிறார்களே அது மாதிரி.


எந்த துன்பவும், எந்த உருவில் வந்தாலும் கடந்து போயிடும். இந்த போராட்டத்தில் யார் அழியுவார்கள் என்று தான் தெரியாதுநேரடி தொடர்பு  இல்லாத குட்டப்பன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில், தன் வயதான அம்மாவை பார்த்து கொண்டிருந்த மகன் மரணம் பக்கம் . எருதின் உடமையாளரின் பிரச்சினை தான் இது. ஆனால் அவர் அறியாதே பிரச்சினை அவர் கைவிட்டு போய் ஆண்டனி, அடுத்து குட்டப்பன் பிரச்சினையுமாகி, ஊரே பின்ன  தனக்க பிரச்சினை மாதிரி எடுத்து போராடிக் கொண்டிருக்கும். கொரோனா, ஏதாவது ஒரு நாட்டின் பிரச்சினை அல்ல, எல்லா நாட்டின் பிரச்சினை ஆவது மாதிரி. 

நடிப்பு அபாரம். சொல்லவே வேண்டாம். ஒரு காலையில் ஆரம்பித்த நிகழ்வு, அடுத்த நாள் மாலையோடு முடிகிற வரை.

ஹ்ரீஷின் கதை, எஸ் ஹரீஷ் (S. Hareesh) மற்றும் ஆர் ஜெயக்குமாரின் ( R. Jayakumar) சிறப்பான திரைக்கதை, மிகவும் குறைந்த உரையாடல்கள், யதார்த்தமான சண்டை காட்சிகள். கிரீஷ் கங்காதரனின் (Girish Gangadharan)  ஒளிப்பதிவு அட்டகாசம் பல காட்சிகள் இரவு இருட்டில் தான்.  ஒலிபிராஷந்த் பிள்ளையின் பின்னனி இசை   அருமையிலும் அருமை. பாடல்கள் தான் ஒன்று கூட இல்லை பின்னனி இசையிலும் , எடிட்டிங்கிலும் சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது. 

ஒன்றேகால் மணி நேரம்; எருது கிடைக்குமா கிடைக்காதா? நாமும் இந்த ஊர்க்காரர்களுடன் காடு, மலை தோட்டம் என ஓடி ஓடி அந்த சதுப்புல எருது பிடிபடுவதுடன் நேரம் போனதே தெரியவில்லை. நடிகர்களை நம்பாது கதைக்கருவை முன்னிலைப்படுத்தி எடுத்த இயக்குனர் படம். 


ஜல்லிக்கட்டு மைதானத்தில் இருப்பதாகத் தோன்றியது.