28 Mar 2020

பசி - திரைப்படம்

ஆண்களின் பலவகையான பசிகளும் அதனால் காயப்படும் பெண்களும்,  தான் கொண்ட அன்பை மரணம் வரை தூக்கி எறிய விரும்பாத பெண் மனநிலையும், ஒவ்வொரு பெண்ணுக்கும் இன்னொரு பெண் கரிசனையாக இருப்பதும் பசிப்படத்தில் காணலாம்.

பல பிற்போக்குத்தனங்களை தாங்கி படம் நகரும் போதும் அதன் பின்னால் இருக்கும் பெண்களின் உளவியலும்,
 தாய்மையுடன்  உலகை நோக்கும்  பரிவும் பகுந்தாய்ந்து 'பசி' என்ற  திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த கதைக்கருவெல்லாம் இன்னும் சில வருடங்களில் மண் மறைந்து போய் விடும்.

ஆண்களுக்கு பெண்கள் நிகர் என்றளவில் ;இன்றைய பெண்கள் எடுக்கும் முடிவுகளும் எதிர் வினையாற்றும் பாங்கும் இன்றைய இயல்பாகி விட்ட நிலையில்; என்னால் இன்னொரு பெண் பாதிக்கப்படக்கூடாது , என் உடன் பிறந்தவர்களை நான் தான் கவனிக்கனும், நான் அவசரத்தில் செய்த தப்புக்காக பிறக்க போகும் குழந்தையை எப்படி அழிப்பது இந்த வகை பெண் சிந்தனைகள் காலவெள்ளத்தில் அடித்து போன கருத்தாக்கமாக இருந்தாலும் அதன் அடிநாதமாக ஒழுகும் அன்பு கருணை எங்கு  போய் ஒளிந்து கொள்ளும்?

வளரும்  ஒரு கதையாசிரியரின் சாதனின் சிறு கதை வாசித்தேன். தன்னை காம இச்சையோடு நோக்கினவனை  ஒரு பெண் என்ன என்ன பாடுகள் படுத்தி விளையாண்டு அவமதிக்கிறாள் என்று கொஞ்சம் அச்ச உணர்வோடு நடுக்கத்தோடு வாசித்து முடித்தேன்.
கதையாசிரியரின் கற்பனையல்ல இன்றைய நிஜம் கூட அதுவே.
என்னால் அந்த கதையூடாக அவ்வளவு எளிதாக கடந்து செல்ல இயலவில்லை. மனித உறவுகளின் அடிநாதமாக ஒழுகும் அன்பு , கரிசனை அங்கு இல்லையே என அங்கலாய்த்து கதையாசிரியரிடம் கேட்டேன்.

கதையாசிரியரின் பதில் இன்றைய   நிலவரம் விளையாட்டு காட்டி  துன்புறுத்தி கடந்து போவது தான் நிஜம் என்றார்..
ஆற அமர சிந்தித்து பார்த்தால் கதாசிரியர் இரு தலைமுறையை  மிகவும் அவதானித்து தான் எழுதி உள்ளார் என்பதை என்னால் மறுக்க இயலாது.

கால ஓட்டத்தில்  காமம், காதல், நேயம் , பாசம் என பல பல உருவகங்களில் வரும்  அந்த ஒரே அன்பு கூட தோய்ந்து போய் விட்டதே?

இதை போன்ற பழைய படங்கள் கடந்து  வந்த  கற்று கொண்ட கலாச்சார வழியை ஏக்கத்துடன் நோக்கவும் தற்போதைய சமூக சூழலுகளை பொதிந்த  கதைகளின் ஓட்டம் இன்றைய அன்பின் பரிமாணங்களை நினைவுப்படுத்துகிறது.

இரு தலைமுறை மாற்றங்களில் எது சரி, எது நல்லது என்பதை விட எது காலத்திற்கு பொருந்துவது என்ற நிலையில்  நமது பூட்டன் , பெற்றோர் கொண்டாடிய பழைய தலைமுறைக்கும் நமது பிள்ளைகள்  வாழப்போகும்( வாழ வேண்டிய) புதிய தலைமுறைக்கும் இடையில் சிக்குண்டு நசுங்கி போனது போல் உள்ளது.
.
(அதில் நடித்திருந்த பிரவீணா, ஷோபா போன்ற நடிகைகள் தற்போது உயிரோடு இல்லை)

நவீன எழுத்தாளர் சாதனா

23 Mar 2020

ஆடும் கூத்து

 அன்னை அன்னை,ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை". பாரதியாரின் தெய்வப்பாடல்

"ஆடும் கூத்து மலையாள இயக்குனர் " டி. வி சந்திரன் இயக்கத்தில் சேரனின் தயாரிப்பில்   2005 வெளியான  திரைப்படம்.  37 வது சர்வதேச  திரைப்பட விழாவில், 2009 ல் தேசிய விருது பெற்றது. நவ்யா யர்  மிகமுக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருப்பார்.  


ஒரே கதையில் மூன்று காலவெளியில் நடந்த, மூன்று கதைகள், ஒரே நேர்கோட்டில் சில கதாப்பாத்திரங்களுடன் சந்திக்கும் கதை.

கதை துவக்கத்தில் கொஞ்சம் துவண்டது. அரைப் படத்திற்கு மேல் விருவிருப்பாக நகர்ந்தது. டாக்டர் கதாபாத்திரம் -மலையாள நடிகர் ஜகதீஷ் ஸ்ரீகுமார் எரிச்சல் அடைய செய்தது., தேவையே அற்ற அந்த கல்லூரி தமிழ் பேராசிரியர் கதாப்பாத்திரம் எதற்கு என இல்லை.

கதையின் பிரதான பாத்திரம் மணிமேகலை ஒரு துணிக்கடை வியாபாரியின் கல்லூரியில் படிக்கும்  துடுக்கான பெண்.
மணிமேகலைக்கு சில கதைகள் காட்சி உருவத்தில் தெரிய ஆரம்பிக்கிறது.  புத்தி பேதலித்தது என உளவியல் மருத்துவரிடம் கொண்டு செல்கின்றனர் மணிமேகலையின் பெற்றோர்
அந்த ஆள் செயல்பாடுகள் மருத்துவர் மாதிரி அல்லாது மந்திரவாதி மாதிரி வடிவமைத்துள்ளனர்.  இயக்குனர் அதை பகடியாககருதினாரோ என்னவோ.

மணிமேகலை சோற்றை கட்டிக் கொண்டு மலை-மேடுன்னு கிராம சிறார்களுடன் நடந்து திரிந்து வீடு அணையும். அவுங்க அம்மாவாக பழம்பெரும் நடிகை ரேகா நடித்திருப்பார்கள். வீட்டுக்கு கட்டும் சாறிகள் எல்லாம் கல்லூரி பேராசிரியர்கள் கட்டுவது மாதிரியான காட்டன் சேலையில் வலம் வருகிறார். வீட்டுக்குள் ஒரே பெண்கள் பட்டாளம் தான்
சட்டப் போடாத சுகுமாரி பாட்டியிலிருந்து கணவர் அற்ற இரு அத்தைகள் வாழாவெட்டியாக வீட்டிலிருக்கும் மணிமேகலை அக்கா, அக்காவின் வீணாப்போன குடிகார கணவர் பாண்டியராஜன். பாட்டி, மூன்று பெண்களும் வீட்டு வேலைகளை செய்து கொண்டு தட்டு சாமான்கள் மாதிரி வீட்டில் ஒதுங்கி கிடப்பார்கள். பெரிய பங்களா வீட்டில்  மணிமேகலை மட்டுமே வீட்டின் இளவரசி மாதிரி  வாழ்கிறார்.  (காட்சியில் நமக்கு விவரிப்பதை அப்படியே எழுதியுள்ளேன்.)
வீட்டுக்குள்ளே முறை மாப்பிள்ளையும் வளருவார்.

தமிழ் கல்லூரி பேராசிரியர் திருட்டு முழியுடன் மணிமேகலை வீட்டுக்கு வருகிறார். மணிமேகலை கிராமத்தை சுற்றும் பிள்ளை என்பதால் பேராசிரியரை அழைத்துக் கொண்டு சுற்றி வருகிறார். அந்த வயதான பேராசிரியர் வெடித்த பருத்தி மாதிரி இருக்கும் மணிமேகலையிடம் தன் காதலை வெளிப்பெடுத்துவார். மணிமேகலை சிரித்து போட்டு கடந்து போயிடுவாள். அடுத்து பேராசிரியரின் ஆயுதமாக நான் ஊரை விட்டே மாற்றலாகி போகப்போறேன் என்கிற போது நான் கல்லூரிக்கு வரல சர், என் முறைமாப்பிள்ளையை கல்யாணம் பண்ண போறேன்னு படிப்பை இடையில் நிறுத்திடுவார்.

கோயில் திருவிழாவில் காதலன் ஒரு வளையல் பரிசாக வாங்கி கொடுத்திருப்பார். அந்த வளையலில் இருந்து   பிரத்தியேக ஒளி கதை சொல்ல ஆரம்பிக்கும்.  அந்த கதையின் உறவிடம் தேடி போகையில்  1971 ல் எடுத்து முடிக்க இயலாத படத்தில் பண்ணையாரா  நடித்திருந்த  ஒரு பள்ளி ஆசிரியரை கண்டு பிடிப்பார்கள். அந்த படத்தை எடுத்து முடிக்க ஜமீந்தார் மகன் அனுமதிக்கவில்லை என்று அறிவார்கள்.. அந்த கதை பண்ணையார் அவமதித்த வெள்ளையம்மா என்ற ஒரு தலிது பெண்ணுடைய கதையுடன் நிறைவு பெறும். அந்த படத்தில் நடித்த கதாநாயகிக்கும படத்தை இயக்கும் சேரனுக்கும் ஒரு காதல். அந்த காதலி தற்கொலை செய்து 1975 ல் இறந்திருப்பாள். நிகழ்கால கதையில் வருபவள் 1985 ல் பிறந்திருப்பாள். அப்படி  ஒரு கதையை இன்னொரு கதையுடன் இணைத்து முழுநீளக்கதையாக விரிந்திருக்கும்மறைந்த சுகுமாரி, மனோரமா போன்றவர்களின் நடிப்பையும் இப்படத்தில் ரசிக்கலாம்.  ம்மூன்றாம தலைமுறை  ஜமீந்தராக சீமான் ஒரே ஒரு ஷாட்டில் வந்து போவார். சேரன் நடிப்பு சிறப்பு. பழைய பெண்கள் தொடர்பான பல  பொல்லாத வழக்கங்களை மறுபடியும் ஊன்றல் கொடுத்திருப்பது தவிர்த்திருக்கலாம்.


மலையாள ஒளிப்பதிவாளர் மது அம்பாட் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு தரம் கூட்டுகிறது. ஒரே கதையில் இரு கதைகள் இணைவதும் மூன்று தலைமுறை பெண்கள் கடந்து போவதுமான திரைக்கதை அருமை. பல கதாப்பாத்திரங்கள் மலையாளத்தமிழ் பேசுவதுடம்பிங் படமா என சந்தேகம் கொள்ள வைக்கிறது.