10 Mar 2012

நெல்லை பல்கலைகழக கருத்தரங்கம்- நடந்தது என்ன?

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் குற்றவியில் துறை சார்பாக நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பங்கு பெற வந்த பெண் சிங்கள பேராசிரியர் ஒருவரை சில இயக்கங்கள் பேச விடாது வெளியேற்றியுள்ளனர்.   கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை ஜீவா நிரியல்லா என்பவரே அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்.  வெள்ளி அன்று தன்னுடைய கட்டுரையை சமர்ப்பிக்க இருந்த சூழலில் வியாழன் மாலை அன்றே வெளியேற்றப்பட்டுள்ளார்.  தினமணி பத்திரிக்கையில் முதல் பக்க செய்தியாக அறிய கிடைத்த இச்செய்தியில் ஆசிரியையின் கருத்துக்கள் பதியப்பட வில்லை.

 ஒரு பேராசிரியையிடம் கட்டுரை சமர்ப்பிக்க வந்த இடத்தில் நடந்து கொண்ட விதம்  சரியானதா? மேலும்  அவர் சமர்ப்பிக்க இருந்த கட்டுரை பற்றி ஒரு புரிதல் பல்கலைகழக குற்றவியல் துறைக்குக் தெரிந்திருந்தே அனுமதிக்கப்பட்டுள்ளார். பேராசிரியை பேசுவது இந்திய இறையாண்மைக்கு, தமிழ் உணர்வாளர்களுக்கு காயப்படுத்துகின்றது என்றால் ஏன் அனுமதித்திருக்க வேண்டும்.  அவர் கட்டுரை சமர்ப்பிக்கும் முன்னே ஆர்ப்பாட்டகாரர்களால் தடை செய்யப்பட காரணம் என்ன? பெருன்பான்மையான தமிழகர்கள் மத்தியில்  சிறுபான்மை சிங்கள பெண்ணாக இருந்ததாலா? என பல கேள்விகள் எழுகின்றன. சிறப்பாக  பெண்கள் தினத்தற்றே ஒரு பெண்ணை அவமதித்ததின் காரணம் தான் என்ன? 

மேலும் பல்கலைகழகம் என்பது கல்வித்துறை, மாணவர்கள், குறிப்பாக ஆராய்ச்சி சம்பந்தப்பட்டதாக இருக்கும் போது   கருத்தரங்கு அறைக்குள் நுழைந்து கோஷங்கள் எழுப்ப "எ.பி.சி.டி" கட்சிகளுக்கு உரிமை கொடுத்தது யார்?  சட்டப்படி இது நியாயப்படுத்த தகுமா என்பதும் சிந்திக்க வேண்டியுள்ளது. கருத்தரங்கில் பேராசிரியை முரண்பட்ட கருத்துக்கள் கூறியிருந்தாலும் அவரிடம் விவாதம் செய்ய மாணவர்கள் பேராசிரியர்களுக்கு வாய்ப்பு உள்ள போது;  பல்கலைகழகம் வெளியில் இருந்து வரவழைக்கப்பட்ட சிலரால் விரட்டப்பட்டதின் நோக்கம், தாக்கம் என்ன என்றும் வினவ வேண்டியுள்ளது. 

கட்சி போராளிகளுக்கு பயந்து, தலை வணங்கி ஒரு பேராசிரியை நாட்டில் இருந்து வெளியேற்றிய பல்கலைகழகம் எந்த விதத்தில் நீதியாக செயல் கொண்டது என்பதையும் நோக்க வேண்டியுள்ளது. அல்லது பல்கலைகழகம் சார்பில் நடத்தப்படும் ஒரு கருத்தரங்கம் ஆரம்பிக்கும் முன் “கானா- மான” கட்சிகளிடம் அனுமதி வாங்கியே நடத்த வேண்டும் என்றால் கல்வித் துறை அரசியல் கட்சிகளின் கையேந்திகளா? அல்லது அடிமைகளா?  சமூகத்தில் ஆக்க பூர்வமான கருத்துரையாடல்கள் நடைபெறாத  சூழலில், கல்வி நிலையங்களிலாவது சுதந்திரமான ஆக்க பூர்வமான கருத்தாக்கங்கள்; சமூக-அரசியலில் தீர்வு காணாத பல பிரச்ச்னைகளுக்கு தீர்வாக பல ஆராய்ச்சிகள் இருக்கும் போது ஒரு பேராசிரியையில் பேச்சாற்றல் எழுத்தாற்றலை தடை செய்வது வழியாக மறுபடியும் ஒரு எமெர்ஜன்ஸி நாட்டில் ஏற்படுத்துகின்றனர்.http://tamil.oneindia.in/news/2012/03/09/tamilnadu-lankan-academic-evicted-from-nellai-varsity-function-aid0091.html

கல்வியும் அரசியலும் கூட்டி கலர்ந்து கல்வியில் தரம் குறைப்பது மட்டுமல்லாது கல்வியாளர்களையும் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பேராசிரியர்கள் சங்கமோ ஆசிரிய பெருமக்களோ எந்த கருத்தையும் தெரிவிக்காது தங்கள் நிலையை தக்கவைத்து கொள்வது வழியாக சுயநலவாதிகள் என்றே அறிய தருகின்றனர். தீவிரவாதம் என்பது ஆயுதம் ஏந்துவது மட்டுமல்ல , மற்றவர்கள் கருத்தை கட்டாயமாக மறுப்பதும் திணிப்பதும்  தீவிரவாதம் தான் !