இன்று விபத்து என்றதும் தமிழக அரசால் 2 லட்சம், பிரதமர் இரங்கல் தந்தி என சிவகாசி செய்தியில் இடம் பிடித்துள்ளது. ஆனால் உலகசந்தையில் பட்டாசுத் தேவையின் 40%உம், இந்தியா சந்தையின் 90% இடம் பிடித்து குட்டி ஜப்பான் என்று பெருமை சேர்க்கும் நகரமே சிவகாசி. ஒரு காலத்தில் ஜாதிய கொடுமைகள் மத்தியில் பஞ்சம் பிழைக்க வந்த நாடார் இன மக்கள் குடியேறி தங்கள் அயராத உழைப்பால் உயர்ந்ததே சிவகாசி. இன்றும் ஏற்றுமதிக்கு முதலிடத்திலும் இந்திய-தமிழக அரசுக்கு வரிகள் வழியாக வருமானம் ஈட்டுவதில் முன்னிலை வகிக்கும் சிவகாசி தொழிலாளர்கள், ஒரு விபத்து என்றதும் அரசு தரும் ஆயிரங்களுக்கு கையேந்தும் நிலையில் இருக்க காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, தன்னலம் கொண்ட சிவகாசி பணக்காரர்களுமே. அவசரநிலையில் மக்கள் சிகித்சை பெற போதிய மருத்துவ வசதி கூட
இல்லை என்பது மிகவும் வருந்த தக்க செய்தி. உலகத்தரம் வாய்ந்த பல
தொழில்சாலைகள் நிறுவிய ஊரில் ஏன் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ மனை இல்லை
என்றால் பணக்காரர்களுக்கு தங்கள் மருத்துவ தேவைக்கு என பிளேன் பிடித்து வெளிநாடுகளுக்கு பறந்து விடலாம்,
ஆனால் ஏழைகளுக்கு அரசு மருத்துவமனை போதும் என்ற இருமாப்பு இகழ்ச்சியே! சிவகாசி பண முதலைகள் பணத்தில் எந்தளவு உயர்ந்தனரோ அந்த அளவு மனித நேயத்தில் தரம் இறங்கியதே இதை காட்டுகின்றது.
மூடவேண்டிய ஆலையை ஏன் மூடவில்லை என்றால் அங்கு அரசு அதிகாரிக்கு கையூட்டு லட்சங்கள் சென்றுள்ளது. இன்று பல அரசு அலுவலங்களில் லஞ்சம் தங்கள் உரிமை போன்று இத்தனை ரூபா என கேட்டு வாங்கப்படுகின்றது. பாகுபாடு இல்லாது எல்லா அரசியல் கட்சிகளும் கண்டும் காணாதது போல் தங்கள் இருப்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அரசியல் அதிகாரிகளும் கையூட்டு கொடுத்து தங்களுக்கு லஞ்சம் வாங்க தகுந்த இடமாக மாற்றலாகி பணவேட்டையை ஆரம்பித்து விடுகின்றனர்.
இத்தருணங்களில் தேயிலை தோட்டங்களை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்கள் நினைவுக்கு வருகின்றனர். தங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு என மிகவும் சுகாதார வசதி கொண்ட மருத்துவ மனைகள் அமைத்திருந்தனர், தொழிலாளர்கள் பிள்ளைகளை பராமரிக்க பாலவாடிகள் கூட இருந்தது. இதை ஆய்வகர்கள் மூலம் சரிபார்த்தும் வந்தனர். தற்போது இந்திய முதலாளியிடம் தேயிலத்தோட்ட உரிமைகள் வந்த போது தரம் குறைந்திருந்தாலும் இன்றும் தொழிலாளிகளை பராமரிக்க என்று ஆஸ்பத்திரிகள் உண்டு. ஆங்கில ஆட்சியை பற்றி வரிந்து கதை எழுதும்ம் ஊடகவும் தற்போதைய இந்திய அரசின் மக்கள் எதிர்போக்கை கண்டு கொள்ளாது பசையுள்ள பக்கமே சாய்ந்து நிற்கின்றது.
400மேல் தொழில் நிறுவனங்கள் கொண்ட சிவகாசியில் 4000 மேல் ஆலைகளும் இயங்குகின்றன என கணக்குகள் தெரிவிக்கின்றன. உலகத்தேவையின் 60 % அச்சு சார்ந்த தேவைக்கு சிவகாசியையே நம்பி இருக்கின்றனர். ஜெர்மனிக்கு அடுத்தபடியாக அச்சு சாலைகள் சிவகாசியில் தான் இடம் பிடித்துள்ளன். மழை இல்லாத வெட்பநிலை கொண்ட இந்த நகரத்தை சுற்றியே பட்டாசு மற்று தீப்பெட்டி, அச்சு சார்ந்த தொழில்கள் கொடிகட்டி பறக்கின்றது. அரசுக்கு மிக பெரிய வருமானமாக சுங்கம், வருமான, விற்பனை வரியாக செலுத்தும் நகரங்களில் ஒன்றும் இது. ஆனால் சிவகாசியில் நடந்தது என்ன? ஏழைகள் இரத்ததை, உழைப்பை உறிஞ்சு பணம் சம்பாதிக்கும் ஆலை உரிமையாளர்கள் தங்கள் குழந்தைகள் கல்வி கற்க பல கல்வி நிறுவனங்கள் நிறுவியவர்கள் சிறந்த மருத்துவ மனைகள் நிறுவ ஏன் முன் வரவில்லை. தங்களுக்கு இருந்த தார்மீக கடமையும் மறந்து விட்டனர்.
நாய்க்கர் மன்னர்களால் வ்ந்த இழிநிலையை தங்கள் உழைப்பால் விரட்டி
தங்கள் அடையாளத்தை நாடார்கள் சிவகாசியில் மீட்டனர். சிவகாசியின் ஆளுமை பணக்கார நாடார்கள் வசமே உள்ளது. ஆனால் பணவெறி
பிடித்த நாடார் முதலாளிகளால் மறுபடியும் சமூக வெறுப்புக்கு செல்ல உள்ளனர். இன்றும் திருமண பந்ததில் இணைய மற்று பகுதியில் வசிக்கும் நாடார்களை தங்களுக்கு இணையாக மதிப்பதில்லை. இவர்களுக்கு என்ற தனி அந்தஸ்து பெற்று உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்க உதவிய தொழிலாளர்கள் நிலை பரிதாபமாகி விட்டது. கொள்ளைக்கார அரசை நாம் விமர்சிக்கும் போதும் ஒரு சமூகத்தின் எல்லா வாய்ப்புகளையும் வசதிகளையும் சொந்தமாக்கி முன் வந்த ஒரு சாரார் தங்கள் சக மனிதனையும் மனித நேயத்தோடு நடத்தியிருந்தால் இது போன்ற விபத்தில் அவர்கள் உயிரிழக்க நேர்ந்திருக்காது.
சிவகாசி என்று மட்டுமல்ல தமிழகத்திலுள்ள பெறும்வாரியான ஆலை முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களை அடிமாடுகளாக வைத்து வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய நியாமான சலுகைகளை கொடுக்காது, லஞ்சமாகவும் கையூட்டகாவும் அரசு அதிகாரிகளுக்கு கொடுத்து தங்கள் இருப்பை ஸ்தரப்படுத்தி கொள்கின்றனர்.
இன்றைய தினம் விபத்தை எண்களாக குறிப்பிட்டு தீயில் வெந்து போன பல குடும்பங்களை வசதியாக மறந்து விடுகின்றோம். பெற்றோர் இருவரும் வேலை செய்ய எத்தனை குழந்தைகள் இன்று அனாதமாகினதோ? அல்லது எத்தனை வயர்முதிர் பெற்றோர் அனாதமாகினரோ. இது தனி நபர் துக்கம் பாதிப்பு என எடுத்து கொண்டால் அரசு தரும் 2 இட்சம் என்பது 2 ரூபாய் மதிப்புக் கூட பெறாது. விளிம்பு நிலை மனிதனையே தேடி விபத்துக்கள் வருவதும் நாம் வாழும் சமூகத்தின் மனிதந்நேயத்தின் வீழ்ச்சியே. சிவகாசியில் நேற்று நடந்திருப்பது 85 வது விபத்து என்று அறியும் போது அரசியல் இயந்திரமும் அதிகார பணக்கார இயந்திரமும் இயந்திரன்மையோடு நடந்து கொள்வதையே காணப்போகின்றோம். இவர்களுக்கான வைப்பு நிதி, ஓய்வூதியம், காப்பீடு நிதி இருந்தா என்ற கேள்வி மூடி மறைக்கவே நிவாரண நிதி என்பதே என் கருத்து!
உலகறிந்த சிவகாசிக்கே இந்த நிலை என்றால் கூடன்குளம் அணு உலையால் என்ன நிகழபோகின்றது என்று பீதியுடன் நோக்க வேண்டியுள்ளது.



