header-photo

புரக்கணிக்க வேண்டிய மாம்பழச் சங்க திருவிழா உதவல் நிகழ்வு

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஆண்டுதோறும் ஜுலை மாதத்தில் நடைபெறும் மாம்பழச் சங்க விழா  கடந்த 235 வருடங்களாக நடைபெறும் ஓர் நிகழ்வாகும். கிறிஸ்தவத்தை தழுவிய இந்து மக்கள் வருடத்தில் ஒரு முறையேனும் ஒன்று கூடி கொண்டாடும் நோக்கத்துடன் அறுப்பின் பண்டிகை என்ற பெயரில் துவங்கப்பட்டதாக கூறப்படும் திரு விழாவாகும் இது. தற்போது இந்த விழாவின் சிறப்பாக சொல்லப்படுவது அங்கு கூடும் ஆயிரக்கணக்கான ஏழை-எளியோருக்கு அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள் தங்களால் இயன்ற பொருளுதவியை செய்து வருவதாகும்.

கிறிஸ்தவ நம்பிக்கை கோட்பாடு பிரகாரம் வலது கரம் கொடுப்பது இடது கரம் அறியாது இருக்க வேண்டும் என்றே யேசு நாதர் கூறியுள்ளார். நாம் செய்யும் உபகாரங்கள் இன்னொருவரை அவமதிக்கவோ நம்மை அகங்கார நிலைக்கு கொண்டு செல்லவோ கூடாது என்பதே இதன் பொருள்.  ஆனால் இங்கு நடைபெற்ற நிகழ்வுகளை நேரடியாக கண்ட போது கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாட்டை  அவமதிப்பது போலவே தெரிந்தது. 

அங்கு பிச்சை எடுக்க வந்தவர்கள் ஏழை எளியோர் அல்ல அவர்கள் அரசின் எல்லா இனாமும் வளர்ச்சி திட்டங்களும் பெற்று சொந்த குடியிருப்புகளில் வசித்து வரும் எம் ஜி ஆர் காலனியை  சேர்ந்த குறவ இன மக்களே. இவர்களின் நோக்கவும் உதவி பெறுவதாக இருக்க வில்லை. தொழில் சார்ந்த பிச்சை எடுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடம் கொடுக்காது  பிச்சை இடும் மக்களுக்கு அச்சுறுதல் கொடுக்கும் வண்ணம் சண்டையிட்டு ,  தங்கள் இளவல்கள் கேளிக்கையில் அமர்ந்து  இருக்க; பள்ளி செல்லும் தங்கள் குழந்தைகளுடன் குடும்பத்துடன் ஆரவாரத்துடன் அமர்ந்திருந்தனர். உண்மையான தொழில் முறை பிச்சைக்காரர்கள் இடம் கிடைக்காது  பயந்து ஒடுங்கி பயந்து கொண்டு நின்றிருந்தனர். 

பிச்சை கொடுக்க வந்தவர்கள் கிறிஸ்தவ கோட்பாட்டுக்கு இணங்க தங்கள்  சொத்தின் பத்தில் ஒன்றோ அல்லது தங்கள் விளைவெடுப்பில் இருந்து  நல்ல ஒரு பகுதியோ அல்ல; மாம்பழச் சங்கம்  என்ற பெயரிற்கு இணங்க மாம்பழம் கூட கொண்டு வரவில்லை.  தமிழம் எங்கும் சிந்தி கிடக்கும் அரசின் விலையில்லா அரிசியுடன் வந்திருந்தனர்!
  

இன்றைய நிலைவரப்பிரகாரம் தமிழகத்தில் பல கிராமங்களில் 5 முதல் 35 கிலோ அரிசி இனாமாகவே மக்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் இவர்கள் உள்ளம் கைகளில் அள்ளி கொடுக்கும் அரிசி இவர்கள் பொய்மையான, உலகை ஏமாற்றும் வாழ்க்கையை  குறிக்கின்றது.   ஒரு பிடி அரிசியுடன் "உழைத்து சாப்பிடுங்கள் இரந்து சாப்பிடாதீர்கள் என  உபதேசித்த மூதாட்டியின் முகத்தில் அரிசியை திரும்பி எறிந்த சுவாரசிய நிகழ்வுகளையும் காண இயன்றது.

அரிசியை திண்-பண்டங்களை கொடுக்க வந்த இடத்தில் வாங்குபவர்களும் கொடுப்பவர்களும் வாக்குவாதத்தில் ஏற்படுவதும் சண்டை இட்டு கொள்வது சாதாரண நிகழ்வாக இருந்தது. குறவ  ஆண்கள்  கைகளின் கம்புடன் வந்துள்ளனர். மிரட்டி தட்டில் பணம் போட வைக்கின்றனர்.

இந்த நிகழ்வில் ஒரு பக்கம் இரவல் கொடுப்பவர்கள் ஆணவம் வாங்குபவர்கள் அடாவடித்தனமான நடவடிக்கைகள்  மத்தியில் அல்லல் பட்ட காவல்த்துறை அதிகாரிகள் நிலை தான் பரிதாபமாக இருந்தது. 


இந்தியாவில் நெடுநாள் நிலவிய பல மோசமான பழக்கவழக்கங்களுக்கு சாவு மணியடித்த மதம். கிருஸ்தவம். மாம்பழச்சங்க திருவிழா என்ற பெயரில் நடைபெறும் இது போன்ற கீழ்த்தரமான நிகழ்ச்சிகளுக்கு எந்த மதச்சாயவும் பூசாது ஒழிக்க வேண்டும்.  உன்னிடம் இரு உடை இருந்தால் உடையில்லாதவனுக்கு ஒன்றை கொடு என்றும் "நான் ஆண்வரின் வழியில் வர என்ன செய்ய வேண்டும்" என்ற போது உனக்குள்ள அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடு என்றே கூறியுள்ளார் யேசுபிரான்.  அரசிடம் இருந்து இனாம் அரிசியை பெற்று ஏழைகளுக்கு என்று ஏழை அல்லாதோருக்கு கொடுப்பதால் எந்த பிரயோசனவும் இல்லை.

ஒரு ஏழைத்தாய் மற்றும்  ஒரு பரிசேயன்  காணிக்கை இடுவதை முன் நிறுத்தி கொடுப்பதற்கான மனநிலையை பற்றியும் பைபிளில் கூறப்பட்டுள்ளளது. ஆகையால் கொடுப்பது "எவ்வளவு?, என்ன?" என்பதையும் விட மனநிலையும் முக்கியம். காணிக்கை என்ற பெயரில் தான் எல்லாம் உள்ள வசதிபடைத்தவனாகவும் ஆண்டவரின் நேரடி ஆசிர்வாதம் பெற்றவராகவும் பெறுபவரை மிகவும் கீழ்த்தரமாக எண்ணுவதும் பாபமாகும் மனிதநேயமான செயல் அல்ல. 

அங்கு ஐஸ் விற்று கொண்டிருந்த முதியவரிடம் பேசி கொண்டிருந்த போது ஒன்று அல்லது இரண்டு ரூபாய் மட்டுமே காணிக்கை கிடைப்பதாகவும்,கிடைக்கும் அரிசியை இந்த மக்கள் உணவகங்களில் விற்பதாகவும் கூறினார். புளியம் பெட்டி போன்ற கோயில் வளாகத்தில் பிச்சை எடுக்கும் பெண் அங்கு 100 ரூபாய் கிடைப்பதாகவும் இங்கு வந்தும் அமரவும் இடம் கிடைக்கவில்லை, தரவில்லை என வருந்தி கொண்டு நின்றார். 

அங்கு காணிக்கை இட்டு சென்று கடந்து சென்ற முதிய பெண்மணியிடம் இரவல் ஒரு பிடி அரிசியை பற்றி வினவிய போது அவரின் கொடுப்பவள் என்ற ஆணவவும் பெறுபவரை பற்றிய அக்கறையின்மை யும் புலன் பட்டது. 

பிச்சைக்காரர்களுக்கு உதவுகின்றேன் என கூறி மனித இனத்தை அவமதிப்பது சரியான முறையல்ல.  பாளையம் கோட்டை என்பது கள்ள ஊழியக்காரர்களின் கோட்டையாகும். ஆயிரங்களை ஊழியம் என்ற பெயரில் கொள்ளை இடுபவர்களுக்கு கொடுத்து விட்டு அரசு கொடுக்கும் இனாம் அரிசியை  பிச்சையாக கொடுத்து புண்ணியத்தை தேடலாம் என்று நினைப்பது இறைவனை ஏமாற்றுவதற்கு சமம்  ஆகும்.

பிரார்த்தான கூடாரங்கள் கட்டும் கிறிஸ்தவர்கள் பிச்சைக்காரர்களுக்கு குடியிருப்புகள் வேலைவாய்ப்புகள், பண்பான வாழ்க்கை சூழல் அமைத்து கொடுக்கலாம். காணிக்கை என்று கள்ள தீர்க தரிசிகளிடம் கொடுப்பவர்கள் ஒரு ஏழை குழந்தைக்கு பள்ளி/கல்லூரி குழந்தைகளுக்கு விடுதி கட்டணம் தேர்தல் கட்டணம் கல்வி கட்டணம் போன்றவை நடத்தலாம். பிச்சைக்காரர்களை தேடி வீதிக்கு வர வேண்டாம். கிறிஸ்தவர்கள் பெரும் பகுதி வேலை இல்லா திண்டாட்டம்,  வாழ்க்கை சூழல் அற்று பிச்சைக்காரர்களாக மாறி கொண்டிருக்கின்றனர். . ஶ்ரீதனம் என்ற பெயரில் பெண் பிள்ளை பெற்றவகளை தென் தமிழக கிறிஸ்தவர்கள் பல குடும்பங்களை பிச்சைக்காரர்களாக மாற்றி வருகின்றனர். பல கிறிஸ்தவ  பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைக்க வசதி அற்றி முதிர் கன்னிகளாக உள்ளனர். 

இவர்களுக்கு உதவலாம். மைதானத்தில் ஆள் சேர்த்து, காவலர்களின் உதவியுடன் நிகழ்த்தி வரும் இந்த உதவி வைபவம் வெறும் ஆசாரம் மட்டுமே. இந்த நிகழ்ச்சியால் கொடுப்பவர்களுக்கோ வாங்குபவர்களுக்கோ எந்த நல்லதும் நடக்க போவது இல்லை. இதும் வெறும் படம் காட்டும் காட்சிகள் மட்டுமே.  இஸ்லாமியர்கள் பணக்காரர்கள் திருமண வைபத்தில் தங்கள் ஏழை உறவினர்கள் குழந்தைகள் திருமண வைபவத்தையும் நடத்த அனுமதித்து உதவுகின்றனர். இது போன்ற அர்த்தமுள்ள உதவும் குணம் தான் தேவை. லஞ்சம் வாங்கிய பணம் அநியாயமான சம்பாதித்த பணம் போன்றவத்தையாவது ஏழைகளுக்கு கொடுத்து பாவத்தை கழுவலாம். அவையையும் பெரிய கொள்ளக்காரர்களுக்கு கொடுத்து கடவுள் கிருபை தேடுபவர்கள் அரசு அரசியை ஏழைகளுக்கு கொடுத்து புண்ணியம் தேட நினைப்பது கிறிஸ்தவர்களின் அவல நிலையை மட்டுமே உணர்த்துகின்றது. 


மத நிகழ்வுகள் சமுதாயத்தில் நல்லுறவிற்கு, சமத்துவ நிலை வளர  உதவ வேண்டும்.  தான் உள்ளவன் எதிரே நிற்பவன் ஏழை, இல்லாதவன் என்ற ஏற்ற தாழ்வை வளர்த்த கூடாது.  

பெண்ணின் கருவறையும் கற்பகிரகவும்


நேற்று மருத்துவமனையில் கண்ட இளம் பெண்ணின் சிரிப்பில் இருந்த சோகம் சில சம்பவங்களை நினைவூட்டி கொண்டிருந்தது. நானும் அத்தானுடன் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல். அவரோ டென்னீஸ் பார்ப்பது போல் பார்வையால் நேரம் போக்கி கொண்டிருக்கின்றார். நோயாளி தீவிர கவனிப்பு அறையில் இருப்பதால் குளிரூட்டப்பட்ட அறை, தனி கவனிப்பு என்று தூங்கி கொண்டிருக்கின்றார். நோயாளியுடன் இருப்பவர்களுக்கு தான் மருத்துவமனையின் பிரத்தியேக சத்தம், கழிவறை நாற்றம் என அல்லல் படவேண்டி வருகின்றது.  நோயாளிகளின் உறவினர்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய இருக்கைகளும்   தொலை நோக்கு பார்வை இல்லாது வசதியற்ற  நிலையில் உள்ள தான் நம் இடுப்பு வலியையும் தாங்கி தான் இருக்க வேண்டியுள்ளது. 


மருத்துவ மனைகள் நோயாளிக்கு ஆனது மட்டுமல்ல என்ற நோக்கில் வருங்காலத்திலாவது  இயற்கை காற்று புகிரும் வண்ணம், சில செடி கொடிகளுடன் கட்டமைக்க வேண்டும். காணும் இடம் யாவும் உயிரற்ற சுவருகளும் அழுக்கு படிந்த நடை பாதைகள் மூச்சடைக்கும் நாற்றம் என எரிச்சல் கொள்ள வைக்கின்றது.   இவையும் தாண்டி சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கும் மைதானமாகவும் மருத்துவ மனை நடைபாதைகளை பயண்படுத்துவது விழிப்புணர்வு இன்மையை காட்டுகின்றது.

அந்த இளம் தாயின் தாய், தன் ஆதங்கத்தை மிகவும் நிதானமாக கொட்டி கொண்டிருந்தார்.   எதிர்பார்த்த நாட்களை விட பிரசவம்  3 வாரம் முந்திவிட்டதால் குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை எடுத்து வரை இயலவில்லை. முன்கூட்டி பிறந்த குழந்தை என்பதால் மருத்தவ தனி கண்காணிப்பில்  இருக்க வேண்டிய சூழல். தாய், பால் கொடுக்க மட்டும் சென்று திரும்புகின்றார்.   கடினமான பிரவ நாட்களில் ஒரு தாய்க்கு ஆறுதலாக இருப்பது தன் மார்போடு சேர்ந்து உறங்கும் குழந்தை தான். அக்குழந்தையின் அருகாமையும் அருகில் இல்லை என்பது தாயின் சிரிப்பையும் மீறி சோகம் கண்ணில்  ஓடுகின்றது. 

குழந்தையின் தாய்க்கு இப்படியான வருத்தம் என்றால் சேயின் தாய்க்கு தன் மகளுக்கு பிரசவத்தோடு கொடுக்க வேண்டிய கவனிப்பு, உணவு  கொடுக்க இயலவில்லையே என்ற வருத்தம். வீட்டில் இருக்கும் மருமகள் சமைத்து கொடுக்கும் மனநிலையில் இல்லையாம். மகனிடம் கூறின போது  நான் அண்ணியிடம் சொல்ல இயலாது நீங்கள் அப்பாவிடம் கூறி அண்ணனிடம் சொல்ல சொல்லுங்கள் என கூறி சென்றாராம். 

உறவின் மாட்சிமையில் நிலைகொள்ளும் நம் குடும்ப அமைப்பில் இது போன்ற மனப்பாங்குகள்  பொறுப்பின்மை உறவின் அர்த்தத்தை மறைக்க செய்கின்றது.   மகளை காண வந்த  மாமியார் வீட்டினரோ தங்கள் பாட்டிற்கு சில உபதேசங்களை போகும் வழியே சொல்லி மறைகின்றனர்.


இதே மாமியார் குழந்தை வளர்ந்து வரும் போது தன் வாரிசு என கொண்டாடுவதும் பெண் வீட்டார் ஒதுங்கி இருந்து பெண்ணின் சுகங்களை காணும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.   தன் வயதான நாட்களில் தன் மருமகள் தயவில்  சேவையும் மகன் உதவியுடன்  அதிகாரத்தில் பெறும் நிலையில் தான் உள்ளனர் . பெண் குழந்தைகள் அற்ற வெறும் மகன்களை மட்டும் வளர்க்கும் தாய்மார்கள் இரக்க குணத்தில் சிறிது பிந்தங்கி இருப்பதாகவே  சொல்கின்றனர். 

பொதுவாக முதல் பிரசவம் வரை மென்மையாக வளரும் பெண்கள் மனதில் வன்மம் வளரவும் முதல் பிரசம் காரணமாகின்றது. என்ன தான் காலாகாலம் கொண்ட முறை என்றாலும் பிரசவ நேரம் பிறந்த வீடு புகுந்த வீடு என்ற பாகுபாடு இல்லாது அளவற்ற அரவணைப்பு, அன்பு பெரிதும் தேவையாக உள்ளது.  ஆனால் நம் கலாச்சார சூழலில் முதல் பிரசம் என்பதை 'முறை' என்ற பெயரில் பெண் வீட்டார் தலையில் முளகரப்பதற்கும் பெண் வீட்டாரிடம் தங்கள் அதிகாரத்தை நாட்டவும் முறை பெற மட்டுமே பயண்படுத்துகின்றனர் எனபது மிகவும் வருந்த தக்கது. இது போன்ற சூழலை எதிர் கொள்ளும் பெண்களால் ஒரு கடமை என்பதை கடந்து அன்பால் நேசத்தால் மாமியாரை ஒரு போதும் நோக்க இயலாது. 

இவையும் போதாது என்று பிரசம் ஆன தாய்மார்களை மருத்துவ மனை நிர்வாகம் வழி பாதைகளில் கட்டில் போட்டு கிடத்தியிருப்பது பெரும் அவலம். பல பெண்களுக்கு பிரசம் பின்பு நரம்பு சம்பந்தமான நோய்கள், கர்ப்பபை தொற்று என பல நோய்களுக்கு உள்ளாகவும் இது காரணமாகின்றது. இது போன்ற சூழலை முன் கூட்டியை கண்டு தான் இறைவனை வழிபடும் தலமாக கற்ப கிரகத்தை உருவகப்படுத்தியுள்ளனர். நம் இறை நம்பிக்கை வழிமுறைகள் எல்லாம்  வாழ்க்கையோடு ஒட்டாது வெறும் ஆசாரமாகவே முடிவுறுவதும்   சமூக அவலம் தான்.

சமூக மாற்றம் என்பதை தனி நபர் விருப்பம், மாற்றம் என்பதை கடந்து    ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்றால் கணவருக்கு விடுப்பு மட்டுமல்ல உடன்  இருந்து கவனித்து  கொள்ளவும் பயிற்சி தேவை. பிரசவ நேரம் கணவன் அருகாமையை சட்டத்தால் நடைமுறைப்படுத்த வேண்டும். பிரசவம் என்பதின் வலியை பெண் மட்டும் ஏற்று கொள்ளாது ஆணும் சரிசமமாக பங்கிட்டு கொள்ளவேண்டிய சூழல் அமைய வேண்டும். பிரசம் என்பதை பெண்வீட்டார் கடமையாக பார்க்காது ஆண் வீட்டாரும் தங்கள் சுமையை ஏற்கும் சூழலுக்கு இறங்க வேண்டும்.

Followers

Statistics