Showing posts with label கதை-Story. Show all posts
Showing posts with label கதை-Story. Show all posts

2 Aug 2012

ஆண் ஆதிக்கம் கொண்ட பெண்கள்!

How to Face Paint Lady Devil Facesநான்கு தினங்களாக  வங்கிக்கு செல்ல வேண்டிய கட்டாயம்.  சில பல மணித்துளிகள் வங்கியில் இருக்க வேண்டிய சூழல்.  என்னருகில் இருக்கும் 70 வயதுக்கு மேலான பெரியவரை கவனித்தேன். உயர் ரக கைபேசியில் அமைதியாக இருந்து கொண்டு முகநூல் பாவித்து கொண்டிருந்தார்.

வங்கி மேலாளர் அறையை உற்று நோக்கினேன். அவர் வெகுநேரமாக ஒரு இளம் பெண் மற்றும் குடும்பத்தினரிடம் பேசி கொண்டே இருக்கின்றார்.   பணத்தை சேமிக்க வந்தவர்களாக தான் இருப்பார்கள். பணம் கடம் கேட்டு வருபவர்களுக்கு இந்த மரியாதையும், வசப்படுத்தல் நேரங்களும் கிடைப்பதில்லை,  தர்ம சங்கடத்துடன் வெளியேறுவது தான் தெரிந்தது. 

 மாமி தான் பணக்கூண்டுக்குள் இருகின்றார்.  94 எண் டோக்கன்  நபர் சென்று பணம் பெற்று கொண்டிருந்தார்.  என் டோக்கன் எண்  93! மறந்திருப்பாரோ என்று எண்ணி  என்  டோக்கன் எண் 93  என்றேன். அவர் மூக்கு கண்ணாடிக்கு கீழ் வழியாக நோக்கி கொண்டு டோக்கனா, என்ன? என்றார்.  கேள்வியில் கேலி, நக்கல், விக்கல் எல்லாம் தெரிகின்றது.  இருந்தாலும் காட்டி கொள்ளாது மேடம் என் டோக்கன் எண் 93 என்றேன். மின்சாரம் போய் விட்டது. பணத்தை இருட்டிலா எண்ண இயலும், மின்சாரம் வரும் வரை இருக்க வேண்டியது தானே என்று பள்ளி தலைமை ஆசிரியை மாதிரி சொன்னார். ஆகட்டும்  மின்சாரம் வரும் வரை காத்து இருக்கின்றேன் என்று சொல்லி விட்டு என் இருக்கையில் வந்திருந்த போது, என்னவர் மாமியிடம் பேசிக் கொண்டிருப்பதை கண்டேன். மாமி  பணத்தை சில நொடிகளில் எண்ணி கொடுத்து விட்டார். ஆணும் பெண்ணும் சமமா என்பதை மாமி படிப்பித்து தந்தார்.

மன்மோகன் சிங்கு போன்று ஒருவர் வாய் திறக்காது,  வெட்டி பேச்சு இல்லாது குனிந்த தலை நிவராது   வேலையில்   மும்முரமாக இருந்தார்.  ஐயா கணணி பயண்படுத்துவதை கண்ட போது தான் வங்கியில் வேகத்தின் காரணம் புரிந்தது. மனிதர்  ஆள் காட்டி விரலை  வைத்து அடித்து கொண்டு நத்தை வேகத்தில் இருந்தார்.

இன்னும் ஒரு நபர் தான் ஓயாது சத்தம் போட்டு பேசி கொண்டு வங்கி பணியாளரா என்று கேட்கும் வண்ணம்  அரசியல் பேச்சாளர் போல் சத்தமாக பேசிக் கொண்டே இருந்தார். 

வேலையில் இருந்து ஓய்வு பெற்ற வயதான  ஆசிரியை பாட்டி வந்து  9.5 வட்டி விகிததை 9 % என்று எழுதியுள்ளனர் என்றார். பாட்டியிடம் நாளை வந்து திருத்தி பெற்று செல்ல சொன்னார்கள். வீடு அருகில் இருக்கும் போல்.  பாட்டியும் குடையை  விரிக்க இப்போதே தயார் ஆகி கொண்டு புறப்பட தயார் ஆகினார். பாட்டியிடம்  செய்திபரப்பாளர் போன்று இருந்த வங்கி அதிகாரி; நாங்க கொடுத்தவுடனே பைக்குள்ள வைக்காமே திறந்து பார்த்து சரியா என்று பார்த்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் உரிமையல்லவா? தப்பாக எழுதி கொடுத்து பாட்டியை நடக்க வைப்பதற்க்கு என்ன உரிமை என்று சொல்வதாம் என்று தெரியவில்லை?

வேறொரு கூண்டுக்குள் இருந்து ஒரு பெண் அதிகாரி தமாஷ் பேச்சுடன்  இன்னொரு பணியாளருடன் செல்ல சண்டையில் இருந்தார்!  அம்மணி அப்படியே நடந்து வந்து புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் ஒரு இளம் பெண் பின்னால் நின்று கொண்டு வேலை செய்யும் விதத்தை பார்த்து கொண்டு நலம் விசாரித்து கொண்டிருந்தார். இந்த இளம் பெண் ஒரு வித பய உணர்வில் வேலை செய்து கொண்டிருக்கின்றாள். அவள் கண்களில் அப்படியொரு மிரட்சி. பக்கத்து இருக்கையில் இருப்பவர் சொல்வதும் அவளுக்கு புரிந்தது மாதிரியும் இல்லை. சீனியர் பெண் அதிகாரியின் பேச்சில், சிரிப்பில்; எள்ளாடல், கிண்டல் எல்லாம் நிறைந்து நிற்கின்றது. அந்த இளம் பெண் தன் இருக்கையில் இருந்து தர்மசங்கடத்துடன் நெளிகின்றாள்.




இது போன்று பல பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்பதை அறிந்தேன்.  கல்வி கற்று சுதந்திரம், தனி உரிமை எல்லாம் தெரிந்து கொண்டு, இவ்விதமான ஆதிக்க மனோபாவமான ஜென்மங்களிடம் வேலை இடங்களில் மாட்டி தவிப்பது இன்று பல படித்த பெண்களுக்கு சொல்ல இயலாத பிரச்சனையே. இது போன்றவர்கள் ஆண்களாக இருந்தால் ஆண் ஆதிக்கம் என்று குரல் கொடுக்கலாம், இந்த வகை பெண்களை எப்ப்படி  சமாளிப்பது. இவர்கள் ஆசை நிறைவேற  அழுது கண்ணீர் விடுவது மட்டுமல்ல, தோள் பையை எடுத்து தன் சித்து வித்தைகளை கையிலெடுத்து கொண்டு கோள் மூட்டி திரியவும் தயங்குவது இல்லை.

பொறியியல் கல்லூரியில் வேலை பார்க்கும் மூன்று வயது குழந்தையின் தாயான என் தோழியும் இதே நெருக்கத்தில் தான் வேலை செய்து வருகின்றார். காலை 8 மணி பேருந்தை பிடிப்பவர் மாலை 6 மணிக்கும் வீட்டிற்கு வரவிடாது மாலை சிறப்பு வகுப்பு நடத்தியே செல்ல வேண்டும் என கட்டளை இடுகின்றாராம் அவருடைய துறைத்தலைவியான பெண்.  ஆனால் துறைத் தலைவி முதல் பேருந்தில் வீட்டுக்கு போய் விடுவாராம்.

போலிஸ் மனைவியான இன்னொரு தோழியும்  இந்த கொடூரத்திற்க்கு விதிவிலக்கல்ல. உயர்த்தர வகுப்பு ஆசிரியையான தோழி பெறும் ஊதியம்  6 ஆயிரம் ரூபாய்.  ஆனால் பள்ளி நிர்வாகம் விதிக்கும் விதிகள், வேலையை வேண்டாம் என துறக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. 

ஒன்று சீனியராக  அல்லது அரசுத்துறையில் பணிபுரிய வேண்டும். தனியார் துறையில் வேலை செய்யும் பெண்கள் நிலை சொல்ல இயலாத துன்பம் கொண்டு பெண் மேல்- அதிகாரிகளால் காவு வாங்கப்படுகின்றது.

8 Jul 2012

ஜெ. ஷக்தி- அவள் முடிவும்!

முதல் பகுதி!  காலையில் நான் முன் வாசல் திறக்கும் போதே சக்தி வந்து  காத்து நிற்கின்றாள். அவள் அப்பாவின் இரண்டாவது மனைவி மகனையும் அழைத்து வந்திருந்தாள். அவள் வசிப்பது எங்கள் 3 தெருவு தள்ளியுள்ள குடிசைமாற்று குடியிருப்பில் தான்.

உண்மை தான் நாங்கள் 5 வருடம் முன்பு இங்கு வீடு கட்டிய போது சில வீடுகள் மட்டுமே இருந்தன.  இந்த குடிசை மாற்று குடியிருப்பு கூட ஒரு தமிழக மந்திரியின் கீழ் இருப்பதாகவும் இங்கு ஒரு கல்லூரி வர இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். ஒரு கல்லூரி வரவுள்ளது என்பது பக்கத்தில் குடியிருப்பவர்களுக்கு  பெருமையாகவும் இருந்தது .  ஒரு நாள் கட்டிட வேலை ஆரம்பித்தது. அரசு ஊழியர்கள் குடியிருப்பு என கூறினர், பின்பு இது அரசு கீழ்-நிலை ஊழியர் குடியிருப்பு என கூறி வந்தனர். சமீபத்தில்  குடியிருந்தவர்கள் கல்லூரி என சொன்னது பொய்யா என்று வாய் திறக்கும் முன் அடுத்த அறிவிப்பு வந்தது; இது குடிசை மாற்று வாரியம் என்று. காம்பவுண்டு வீட்டுக்காரர்கள் இந்த குடியிருப்பு தங்கள் பகுதிக்கு வருவதை ஆகும் மட்டும் எதிர்த்தார்கள். வழி இல்லை என கண்டவர்கள் வீட்டு சுற்று சுவர் உயரத்தை கூட்டி நல்ல நாயாக பார்த்து வளர்க்க ஆரம்பித்து விட்டனர்.

அரசு சொன்னது போல் இம்மக்களை இங்கு குடியமர்த்தியது இரண்டு வருடம் முன்பு.  இங்கு குடி வரக்கூடாது என்று இப் பகுதி சமீப மக்கள் எந்த அளவு எதிர்த்தார்களோ அதே போல்  இங்கு குடி வருவதில் துளி அளவும் விருப்பம் இருந்ததில்லை இவர்களுக்கும்.  அவர்கள் வாழ்வாதாரம் ஜங்ஷனை சுற்றியே   இருந்தது.  தாமிரை பரணி ஆற்றுக்கரையில் வீடு வைத்து குடியிருந்தவர்கள்.  இதில் பல மக்கள் லட்சம் செலவில் கட்டிய வீட்டை விட்டு வரும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். நடந்து அரசு பள்ளிக்கு போய் வந்த இவர்கள் பிள்ளைகள் பேருந்தில் பள்ளிக்கு சென்று வரப்பட்டனர். இம்மக்களும் தினம் குறைந்தது 24 ரூபாய் செலவாகியது வசிக்கும் இடத்திலிருந்து வாழ்வாதாரம் தேடி சென்று வர. மேலும் பெட்டி  போன்று கட்டியிருக்கும் வீடு அவர்களுக்கு பிடிக்கவே இல்லை. மூன்றாவது  மாடியில் குடியிருக்கும் முதியவர்கள் பெரும் அவதிக்கு உள்ளானர்கள். கோழி வளர்க்க ஆடு வளர்க்க தடை! அரசு வேப்பமரம் வைத்து கொடுத்துள்ளதாம்.  டவுண் சென்று வரவும் செலவு என்ற நிலையில் பக்கத்திலுள்ள வீடுகளில் துணி பாத்திரம் தேய்ப்பதே தங்கள் தொழிலாக வைத்திருந்தனர். சில பெண்கள் டவுணில் சென்று பூ வாங்கி வந்து கட்டி விற்றனர்.

இதில் இளைஞர்கள் முதியவர்கள் வெட்டி பேச்சுடன் அங்கு இருந்து காலம் தள்ளுவதையும்  காண இயன்றது. சில மக்கள் எங்கள் பகுதி மக்கள் அவர்களுடன் சகஜமாக கதைக்க விரும்பாததை கவலையுடன் குறிப்பிட்ட போது அதுவும் தங்களுக்கு பாதுகாப்பு தான் என்று மற்று சிலர் கூறி வந்தனர்.

இரண்டு நாள், இரண்டு குட்டி யானையில் சென்று ஆணையர் அலுவலக ஒப்புதலுடன் இரண்டு பேருந்தை கொண்டு வந்தனர் எங்கள் பகுதிக்கு. பேருந்து வந்து சேர இன்னும் பல வருடங்கள் ஆகும் என ஏங்கிய நாங்களும் மகிழ்ச்சியுடன் பேருந்தில் பயணிக்க ஆரம்பித்தோம். வீட்டிலுள்ள  தோட்டத்தில் பப்பாளி கொய்யப்பழம், சீத்தா, சப்போட்டா, நெல்லி என  இரக்கமில்லாது கொய்யப்பட்டாலும் சகித்து கொள்ள வேண்டி வந்தது. அவர்கள் குடியிருப்பு நாயை விரட்டுகின்றது என்ற காரணத்தால் எங்கள் தெரு நாய்கள் எல்லாவற்றிர்க்கும் ஒரே நாள் விஷம் வைத்து கொன்றது தான் மறக்க இயலாத துக்கமாக மாறியது.  இரவுகளில் அவர்கள் வீட்டு குழந்தைகளை தெருக்களை பொது கழிவிடமாக மாற்றுவதும் தெருவெல்லாம் குப்பையும் குளவுமாக எங்கள் பகுதி அடையாளம் கூட மாற்றப்பட்டும் விட்டது இந்த இரண்டு ஆண்டுகளில். காவலர்கள் நடமாட்டவும் அதிகரித்துள்ளது தற்போது. சில வேளைகளில் சண்டையிட்டு மண்டை உடைத்தவர்களை கூட்டி செல்ல ஆம்புலன்ஸுகளும் ஆரவம் எழுப்பி வந்து சென்றது.  இருந்தாலும் ஆள் அரவம் அற்ற எங்கள்  தெருவு பெண்களுக்கு சக்தி போன்ற பெண்கள் மிகவும் உதவியாக இருந்தனர்.

வந்ததும் கொடுத்த சிறு உணவை எடுத்து கொண்டு கிச்சு கிச்சு என்று வேலையை ஆரம்பித்து விட்டாள்.  தன் கதையையும் வரண்ட சிரிப்புடன் சொல்லி கொண்டே வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். 8 ஆம் வகுப்பில் மூன்று முறை தோற்றதால் படிக்க வேண்டாம் என அவள் அப்பா சொல்லி விட்டாராம். ஜங்ஷனில் பல் பொடி கம்பனியில் பொதி நிறைக்கும் பணிக்கு சென்று வ்ந்தாளாம். காலை 9 முதல் இரவு மாலை 6 வரை வேலை இருக்கும் என்றும் அண்ணனும் கொத்தனாராக வேலை செய்வதால் வீட்டில் அடுப்பு ஊத பிரச்சனை இல்லை என்றும் சொல்லி கொண்டு வந்தாள். அவள் முதிர் வயதான பாட்டியும் வேலைக்கு செல்வதாகவும் தன்னை நன்றாக பார்த்து கொள்வதாகவும் தன் அப்பன் வேறு கல்யாணம் செய்து ஜங்ஷன் பக்கம் இருப்பதாகவும் கூறினாள்.

அவள் வேலை செய்யும் பாங்கு மிகவும் பிடித்திருந்தது எனக்கு. வேலையை ஒரு ஈடுபாட்டுடன் செய்தாள். காய்ந்த இலையும் கம்புமாக இருந்த முற்றம் தூய்மையாக மாறி விட்டது. என்னிடன் சில பழைய உடைகளும் வாங்கியவள் பக்கத்து வீட்டில் துணி துவைக்க தேவை என்றால் சொல்லி வைய்யுங்கள் என்று சொல்லி சென்றாள். நான் சிறிய பணம் கொடுத்த போது எனக்கு வேண்டாம் சைக்கிள் கிடைத்து விட்டதே என இன்முகத்துடன் மறுத்தாள். வற்புறுத்தி கையில் தினித்த போது வாங்கி கொண்டாள்.

ஒரு சில நாட்கள் பின் சைக்களுடன் தூரத்தில் வருவதை கண்டேன். ஷக்தி நலமா என்றதும் அக்கா நீங்கள் என் பெயரை மறக்கவில்லையா. சைக்கிளை பழுது பார்த்து விட்டேன். உங்களிடம் காட்டி விடலாம் என்றே வந்தேன். வாரக் கடைசி நாட்களில் வந்து துணி அலம்பி தருகின்றேன் என்று சொல்லி சென்றவள் சில வாரங்களில்  சொன்னது போல் வந்து வேலையும் செய்து தந்து சென்றாள்.

பின்பு பல மாதங்களாக காணாது இருந்ததால் எங்கள் வீட்டு முற்றவும் குப்பையாக காட்சியளிக்க; பூக்கார அக்காவிடம் ஷக்தியை தெரியுமோ என்ற போது உங்களுக்கு தெரியாதா அவளை போலிஸ் பிடித்து சென்று விட்டது. லோக்கல் தொலைகாட்சியில் பார்க்கவில்லையா அவள் 3 நபர்களுடன் பிடிக்கப்பட்டாள் என்றார். எனக்கு ஆச்சரியம் எப்படி இப்பிள்ளை இந்த சூழலில் விழுந்தது. அந்த குடியிருப்பில்  இந்த தொழில் செய்பவர்கள் வசிப்பதையும் சில பெண்கள் கந்து வட்டிக்காரர்களிடம் மாட்டி கொண்டு தவிப்பதையும் நேரிலே கண்டுள்ளேன். ஆனால் ஷக்தி போன்ற வேலையில் ஈடுபாடுள்ள பெண் எப்படி மாட்டினாள் என்று ஆயிரம் கேள்விகள்.  அக்கா, நேரம் பிந்தினால் பாட்டி தேடுவாள்  கிளவி கண்டமேனிக்கு திட்டுவா என்று சொல்லி சிரித்து கொண்டிருந்தாளே என்று என் மனம் பதறியது.

அவளை மறந்து விட்ட நிலையில் பல மாதங்கள் பின்  ஷக்தி போன்றே ஒரு சின்ன பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். உற்று நோக்கிய போது ஓ ஷக்தி தான் தலை கிராப் வெட்டி நவீன உடையுடன் சிரித்து கொண்டே வந்து கொண்டிருந்தாள். என்னம்மா நிறைய நாட்களாக காணவில்லையே என்ற போது  அக்கா பின் தலையில் அறுவை சிகித்சை, திருவனந்தபுரத்தில் சிகித்சையில் இருந்தேன் என்றாள். இப்போது கண் புருவம்  வில்லாக வளைத்து வெட்டப்பட்டிருந்தது.  பழைய ஷக்தி அல்லாது புது ஷக்தியாக தெரிந்தாள். ஆனால் கண்ணில் ஒரு சோகம் நிழலாடியது கண்டேன். உன்னை பற்றி கேள்வி பட்டேன் என்று அவளிடம் கேட்க மனம் வரவில்லை. இருந்தும் சிறிய மனக்குழப்பம் பயம்.  ஆனால் அவளோ  வேலை இருந்தால் செய்து தருகின்றேன் என்றாள். இந்த முறை துணி துவைத்து தந்தவள் பழையது போல் ஈடுபாடாக செய்யவில்லை அவ்வளவாக பேசவும் இல்லை.   வாரம் கடைசி நாள் வந்து பணம் வாங்கி கொள்கின்றேன் என்று சொல்லி சென்றவள் பின்பு வரவே இல்லை.

ஒரு நாள் முச்சந்தியில் வைத்து பார்த்தேன். ஒரு நாள்  குடியிருப்பில் கொட்டடி சத்தம் கேட்டதும் என்ன என விசாரித்த போது ஷக்தி என்ற ஒரு சிறு பெண்ணை அவள் அப்பன் அடித்து கொன்றுவிட்டான் என்றார் பூக்காரி !




3 Jul 2012

J.ஷக்தி- புதிரான மனிதர்கள்!

வாழ்க்கை நெடுக சம்பவங்கள் போன்றே பல புரியாத புதிரான மனிதர்களும் நம்மை கடந்து செல்கின்றனர்.   அது போல்   அன்பு, பாசம், துயர், வெறுப்பு, என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வினை தந்து செல்கின்றனர்.  அவ்வழியில் சமீபத்தில் என்னை சிந்தனையில் ஆழ்த்தியவள் ஜெ குடியிருப்பில் வசிக்கும் ஷக்தி என்ற 14 வயது இளம் பெண் சிறுமி!.

அவள் அறிமுகம் ஆகினதே  முற்றிலும் அறிமுகமே இல்லாத சூழலில். ஒரு நாள் வந்து என்னிடம் கேட்டாள் அக்கா உங்கள் வீட்டில் பயன்படுத்தாது 2 சைக்கிள் உண்டாமே.  அந்த வீட்டிலுள்ள பாட்டி சொன்னார்கள்.  எனக்கு ஒரு சைக்கிள் தந்தால் உதவியாக இருக்கும்.

எனக்கு இந்த பக்கத்து வீட்டு மூதாட்டியிடம் என்றுமே ஒரு குறையுண்டு.  ஒரு வித ஈனப்பிறவி. எந்த மனிதனும் மூதாட்டியின் புரணியில் இருந்து தப்பித்து கொள்வதில்லை. ஒரே புரணி. புகைச்சில் பிடித்த பெண்மணி.  அறுத்த கைக்கு சுன்னாம்பு கொடுக்காதவள், ஆனால் தன் பேச்சு  ஆற்றலால் ஊருக்கே பந்தல் போட்டு பந்தி வைத்து விடுவார்.

எம்மா....... உன்னை, என் மக மாதிரி நினைத்து சொல்லுதேன்,  ஆமா என் வயசுக்கான பேச்சான்னு நினைத்து விடாதே ...ஆனால் நேற்று மதியம் அந்த வீட்டில் ஒரு குண்டன் போனான்,  இவள் வீட்டுக்காரன் வீட்டு சன்னல் வழியாகத் தான் உச்சா போகிறான், அந்த வீட்டுல அப்பனை மகளை கொண்டு போய் விடுகின்றான்,  நேற்று எங்க பின் வீட்டுல, புருசனை பொண்டாட்டி மாட்டை வெளுப்பது போல் வெளுத்து விட்டாள் என்ற கதைகள் கற்பனை, எகத்தாளம் எல்லாம் கலந்து போய் கொண்டே இருக்கும்.  எங்கள் தெருவில் ஒவ்வொரு வீடு சந்திக்கவும் ஒவ்வொரு நேரம் வைத்திருந்தார் இந்த மூதாட்டி. அதில் எங்க வீட்டுக்கு வரும் நேரம் தான் எனக்கு பிடிக்காத நேரம். பிள்ளைகள் பள்ளியில் இருந்து வரும் நேரம் வந்து விட்டு மாலை சாயா, பலகாரம் சாப்பிட்டு அப்படியே கதைக்க  ஆரம்பித்தால் ஒரு நெடும் தொடர் போல் போய் கதை கொண்டே இருக்கும்.  இந்த கதையை ஒரு வழியாக முடிக்க வைத்ததால், மூதாட்டியும் கொஞ்சம் நாளாக எங்கள் வீட்டு பக்கம் வராது எதிர் வீட்டில் இருந்து எங்கள் வீட்டை நோட்டம் இடுவதை தான் கண்டுள்ளேன். மாமர மூட்டில் சாத்தி வைத்திருக்கும் சைக்கிள் கிளவி கண்ணில் எப்படி பட்டது என மனதில் கேட்டாலும் வந்து  கேட்கும் பிள்ளையின் முக பாவம்; 'இல்லை' என்று சொல்ல தோன்றவில்லை. மேலும்  சைக்கிளின்  தேவை  என்னை விட பல மடங்கு அதிகமாக இருந்தது அவளுக்கு என்று தோன்றியது.

பிள்ளைகளுக்கு  சைக்கிள் வேண்டும் என ஒரே பிடிவாதம். இளையவனுக்கு ஒரு பழைய சைக்கிள் கடையில் இருந்து வாங்கி கொடுத்து விட்டாச்சு. பெரியவருக்கு மேலும் கோபம், அவனுக்கு மட்டும் சைக்கிள், நான் உங்க பிள்ளையாக தெரியவில்லையா என்று பெரிய பெரிய கேள்வி எல்லாம் கேட்கின்றான்.

  தமிழகத்தில் வருடம் ஒரு முறை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு இலவச சைக்கிள் கொடுப்பது உண்டு.  அது பள்ளி தொடங்கி 6 மாதம் பின்பு தான் பல அறிக்கைகள் கொடுத்த பின்பு பள்ளி குழந்தைகள் கைகளில் கிடைக்கும்.  10, 11 வகுப்பு பிள்ளைகளுக்கு என்பதால் சில நேரம் தொடர்ந்து  இரண்டு வருடவும் சைக்கிள் கிடைக்கும்.  வீட்டில் 2 குழந்தைகளுக்கு மேல் உண்டு  கிடைத்த சைக்கிள் தேவை இல்லை என்று கருதினாலோ அல்லது குடிக்கார தகப்பனோ வீட்டில் கிடக்கும் சைக்கிளை பழைய கடையில் விற்று விடுவார்கள். அப்படி தான் புதிதான ஒரு அரசு பள்ளி சைக்கிள்  ஒன்று பழைய சைக்கிள் கடையில் இருந்து வாங்க இயன்றது.

சைக்கிளை கொண்டு வந்து 3 வாரம் தான் ஓட்டியிருப்பான்.  2 வீடு தள்ளியிருக்கும்  அரசு வாகன சாரதியின் மகள் "அத்தை  ரேஷன் வாங்க போக உங்க வீட்டு சைக்கிளை  தருவீர்களா"  என்றாள்.  அவ வீட்டிலும் 2 சைக்கிள் பார்த்துள்ளேன். ஆனாலும் ஒரு சைக்கிள் கொடுத்து உதவுவதிலுன் நாலு கேள்வி கேட்கக்கூடாது என்பதால் எடுத்து விட்டு போக சொல்லி விட்டேன்.  அவள் திருப்பி சைக்கிளை கொண்டு வந்ததும் "அந்த தூண் பக்கம்  சாத்தி வைத்து விட்டு போம்மா" என்று கூறிவிட்டு நான் என் வேலையில் ஆழ்ந்து விட்டேன்.

பள்ளி விட்டு வந்த மகன் சைக்கிள் எடுத்து இரண்டு முறை ஓட்டி வந்தவன் அம்மா சங்கிலி அறுந்து விட்டது என்று சைக்கிளை படுக்க வைத்து பழுது பார்த்து கொண்டிருந்தான். அப்போது தான் கவனித்தோம் எங்கள் சைக்கிள் சங்கிலி கழற்றப்பட்டு ஒட்டப்பட்ட ஒரு சங்கிலி மாட்டப்பட்டுள்ளது.  ஆகா பகல் கொள்ளையல்லவா நடந்துள்ளது.  இனி போய் அவளிடம் சண்டை போட்டு நம் வாயை அசிங்கப்படுத்தவா என்று என் கைகாசு போட்டு ஒரு சைக்கிள்  சங்கிலி மாற்றி கொடுத்து விட்டேன்.

ஆனால் எங்கள் பிள்ளைகளை சைக்கிளை எடுத்து கொண்டு காடு மேடாக சுற்றுகின்றனர். ரோட்டோர பள்ளத்தில் விட்டு விளையாடுகின்றனர்.  குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் மாற்றி விட்டனர் சைக்கிளை!  சைக்கிள் பழுது பார்க்க வேண்டிய தொகையை எழுதி தந்தனர்.  தலையே சுற்றியது.  அந்த சைக்கிள் அப்படியே கவனிப்பாரற்று தெக்கு மூலைத் தென்னைக்கு கூட்டாக பல மாதங்களாக சாய்ந்து நின்று விட்டது.


ஷக்தி வந்து கேட்ட போது தான் சைக்கிள் மவுஸு தெரிகின்றது.  அவளுக்கு அம்மா இல்லையாம். அப்பன் ஒரு முழுக்குடிகாரனாம் மேலும் ஒரு பெண்டாட்டியை கட்டி கொண்டு இன்னும் சில குழந்தைகளை பெற்று கொண்டு பக்கத்து தெருவில் இருக்கானாம்.  இவளும் இவள் அண்ணனும் அம்மா வழி பாட்டியுடன் புதிதாக கட்டியிருக்கும் 'குடிசை மாற்று குடியிருப்பில்' குடி வந்துள்ளார்களாம்.

அவள் கொஞ்சம்  நேரம் பேசி கொண்டே இருந்தாள்.  பாட்டியும் வீட்டு வேலைக்கு போவாளாம்.  இவள் திருநெல்வேலி ஜங்ஷனில் கம்பனியில் பொதி நிரப்ப போவாளாம்.  இங்கு வந்ததால் வேலையற்று போய் விட்டது என்றும் இந்த சைக்கிள் தந்தால் பெருமாள் புரத்திலுள்ள சில வீடுகளுக்கு பாத்திரம் துணி, துவைத்து கொடுக்க போவதாக கூறினாள்.

எனக்கும் சைக்கிளை இனாமாக கொடுக்க விருப்பமில்லை.  இனாமாக கிடைக்கும் பொருட்களுக்கு மதிப்பு இருக்காது என்ற எண்ணமே காரணம். நான் அவளிடம், உனக்கு இந்த சைக்கிளை இனாமாக நான் தர வேண்டாம்  சைக்கிளுக்கு பதிலாக வீட்டை சுற்றி பெருக்கி தந்து விட்டு எடுத்து செல் என்றேன். அவளும் முழுச் சம்மததுடன் காலையில் வெயில் வரும் முன் வந்து விட்டு செல்வதாக சொல்லி சென்றாள்.


தொடரும்................................. முடிவு!



13 Jun 2012

ஒற்றை மரம்!

ஆமா ......அப்படி தான் வளர்ந்தேன்.

சண்டைக்கு வரும்  பெண்டாட்டி தான் கேட்பாள் " உங்க அம்மா எப்படி தான் வளர்த்துள்ளோ"! என்று.

யார் வளர்க்க..... நானா வளர்ந்தேன் என்று மனதில் நினைத்து கொண்டேன்.

அம்மா, பாட்டி ஊரில் இருந்து 600 கி.மீ தள்ளி கர்நாடகா மாநில காப்பி தோட்டத்தில் அதிகாரியாக  வேலை செய்யும் என் அப்பாவுடன் திருமணம்.  ஒரு நடுக்காடு. அம்மா வயல் மட்டும் பார்த்து வளந்தவ.  பாம்பு, காட்டு பன்றி காட்டுயானை, புள்ளிப்புலி  நடமாடும் கொடும் வனம். குலை நடுங்கும் குளிர். எப்போதும் பெய்யும் மழை!

நான் பிறந்து இரண்டு  வயது முடிந்ததும் பாட்டி வீட்டுல  விட்டுவிட்டு போனா.  அப்போது தான் புது பெண்டாட்டியோடு வந்திருந்தார் சின்ன மாமா.  அத்தைக்கு கொஞ்சி விளையாடும் பொம்மையாக நான் வளர்ந்தேன். பக்கத்து வீட்டில் பெரிய மாமா, அத்தை மச்சான்கள் இருந்ததால் விளையாட பஞ்சம் இருக்காது. பெரிய அத்தைக்கும் எனக்கும் என்னமோ ஆகாது. அவ சொத்தை பிடுங்க வந்தது மாதிரி திட்டிகிட்டே இருப்பா. அம்மா வீட்டில் இருந்த போது அத்தையிடம் சண்டை போட்டதை சொல்லியே  என்னை அடிப்பா.  சில நேரம்  "போடி கிறுக்கி" என்று சொல்லிவிட்டு ஓடும் நான்; அவள் அடியை பயந்து இரவு  தான் வீடு திரும்புவேன் .  வளர வளர மச்சான்களும் சண்டை பிடிக்க ஆரம்பிச்சிட்டானுக.  எடுத்து எல்லாம் குற்றம். "எங்க வீடு நீ போ" என்று திட்டுவது எனக்கு வெறுப்பாக இருந்தது.  எங்க அம்மா வளந்த வீடு எனக்கும் சொந்தம் தான் என்ற ஆணவவும் எனக்கு இருந்தது. அவனுக விளையாட, நான் முற்றத்தில் இருந்து பேசாம பார்த்து கொண்டே இருப்பேன். 


பாட்டியும் சொல்லிடுவாக மக்கா அவனுக கூட மல்லுக்கு நிக்காதட. உங்க அப்பன் அம்மை வரும் போது நல்ல படிச்சு மார்க்கு வாங்கி காட்டுன்னு. அதனாலே என் தோழர்கள் எல்லாம் எங்க பக்கத்து ஊர் முத்துகுமார், சம்பத்து, செந்தில்ன்னு இருந்தாக.

 தாத்தா இலங்கையில் கடை வைத்திருந்தவர்.  முதல் கலவரத்தில் ஊரு வந்து சேர்ந்தார். கையிலிருந்த காசை கொண்டு ஊரில் வீடு, நிலம் வாங்கி போட்டு விட்டு மதுரையில  கடை வத்திருக்கும் போது இறந்து விட்டார்.  அதன் பின் பாட்டி வயலில் இருந்து வரும் வருமானத்தில் என் மாமாக்கள் அம்மாவை வளர்த்துள்ளார்.   வீட்டில் பசு மாடு வளர்த்தாக.  காலையில் பால் எடுத்து விற்று விட்டு பழைய சோறும் காணத் தொவயலும் எடுத்து கொண்டு வயலுக்கு போயிடுவாக. எனக்குள்ள உணவு உறியில் வீட்டில் தொங்கும்.  நானும் சிலநாள்  வயலுக்கு போவேன். கூட்டாளிகளுடன் விளையாட உடன்காட்டுக்கு போவதுதான் நேரம் போக்காக இருந்தது. கருவண்டை பிடித்து தீப்பெட்டியில் அடைத்து விளையாடுவோம். சில நாள் ஓணான் முட்டை பெறுக்கி வருவோம். அது உடையவே உடையாது. ரப்பர் பந்து மாதிரி துள்ளி துள்ளி வரும். சில நாள் ஆழ்வாத்திருநகரி குளத்தில் குளித்து விட்டு கோயில் மதில் சுவரில் பேச்சிமுத்து சம்பத்துடன் அரட்டை அடித்து கொண்டிருப்போம்.  பேச்சி முத்து பேச்சே காமடி கலாட்டா தான்.
நண்பர்களுடன் பொழுதைகழிக்கும் நான் வீட்டுக்கு போகவே மறந்திடுவேன். சில நாள் நான் ஊர் எல்கை எட்டும் போது பாட்டி என்னை தேடி நாசரேத் கோயில் பக்கம் நிப்பாக.  அடிக்கவோ திட்டவோ மாட்டாக ஏன் ராசா எங்க போனே எங்கல்லாம் தேடுவதாம் ....என்று கையை பிடித்து கூட்டி சென்று குளிப்பித்து சாப்பாடு தருவாக.

மாமா விடுமுறைக்கு வீட்டில் வருவது தான் கொண்டாட்டம். மாமா ஆந்திராவில் மிட்டாய் கடை வைத்திருந்தார்கள். வரும் போது தின்பண்டம் துணிமணி என்று மச்சானுகளுக்கு மாதிரியே எனக்கும் வாங்கி வருவார் . அன்று வரை  கஞ்சி, தொவையல் என்றிருக்கும் பாட்டி ஆடு, மீன் கோழி என ருசியான சமையலாக செய்து தருவார்.


ஒரு முறை மாமா ஒரு  பாட்டுப்பெட்டி வாங்கி வந்தார்கள். அதை வைத்து பாட்டு கேட்டு கொண்டிருக்க, நானும் சென்று அவர்களுடன் பாட்டு கேட்டு கொண்டிருந்தேன். பாட்டுப்பெட்டி ஒலி வரும் பக்கம் கை வைத்து பார்த்த  போது மச்சான் கையை பிடித்து தள்ளி விட்டான். அன்று தான் மச்சான் மேல்  முதல் வெறுப்பு தோன்றியது.  அத்தைகாரி பார்த்து கொண்டே நின்றாள்  அவனை தடுக்கவில்லை. அவன் செய்தது தான் சரி என்பது போல் அவள் பார்வையும் இருந்தது. அம்மாவும் அவளும் வெங்கலபானைக்கு சண்டை பிடித்ததை இப்போதும் நினைவில் வைத்து கொண்டு ”அவெ.. அம்ம மாதிரி தானே இருப்பான் என்றாள்.

பாட்டி மாலை தான் வயலில் இருந்து வருவாக. பாட்டி வந்ததும் மாட்டு தொழுவத்திலே போய் சாணி அள்ள மாட்டுக்கு தீனி கொடுக்க இருப்பாக. பாட்டி என்ற ஒரே ஜீவன் தான் நான் பேசுவதை எல்லாம் ஆசையாய் கேட்டுது.  வேலை முடித்து பாட்டி வந்து சமையல் செய்து முடிக்கும் முன் நான் வீட்டு பாடம் எல்லாம் முடித்து விட்டு சாப்பிட ரெடியா இருப்பேன். அடுத்த வீட்டில் அத்தை மச்சான்கள் சிரித்து பேசி கொண்டிருக்க நாங்க இரண்டு பேரும் எங்க வீட்டில் இருந்து சாப்பிட்டு கொண்டு இருப்போம். கயிறு கட்டிலில் என்னை தூங்க சொல்லிட்டு வாசலில் இருந்து பக்கத்து வீட்டு லில்லி சித்தி, ஆறுமுகநேரி கிரேஸ் பாட்டி கூட பேசிக்கிட்டு இருப்பாங்க.

வடக்குத்தெரு ஜோசப் பெரியப்பாவும் எஸ்டேட்டில தான் வேலை பார்த்தாங்க. பெரியப்பா பிள்ளைகள் புனிதா அக்கா, சகாயம் அக்கா, அவக அண்ணன் மோசஸும் எங்க காம்பவுண்டு வீட்டில தான் இருந்தாங்க. எனக்கு புனிதா அக்கா தான் பிடிக்கும். அவ தான் நான் திக்கி திக்கி பேசுவதை கிண்டல் செய்ய மாட்டா. எனக்கும் மோசஸுக்கும் சண்டை நடப்பதால்  பெரியம்மா தான் விடுமுறைக்கு வரும் போது திட்டுவாக. எலே நீ எப்பிள்ளைட்ட சண்ட போடுவீயோ? வாலை நறுக்கிருவேன்னு பயம் முறுத்துவாக.


 கிறுஸ்துமஸ் என்னக்கி வரும் பாட்டின்னு... பாட்டிட்டே கேட்டிட்டே இருந்தேன். பாட்டி ...... எலே எத்தனை தடவை தான் சொல்லிறது. அந்த கலண்டர பாரு. இன்னும் இருக்குடா 20 நாட்கள். பொறுடான்னு சொல்லிட்டே இருந்தாக.

இந்த முறை எங்க  வீட்டுல புதுசா பிறந்த தம்பியையும் கொண்டு வாராகளாம். அப்பா, அம்மா தம்பி  22 தியதி வருவாகன்னு கடிதாசி வந்துதுன்னு கிரேஸி பாட்டிட்டே சொல்வதை கேட்டிருந்தேன். பாட்டி;  விடுமுறைக்கு அம்மா வீட்டுக்கு வருவதை நினைத்து சந்தோஷபட்டாலும் பெரிய அத்தை கூட சண்டை இடுவதை நினைத்து கவலைப் பட்டுகிட்டே இருந்தாக.

அம்மா ஊரில் இருந்து வருவதால் காலையிலே பாட்டி மீன் வாங்க சந்தைக்கு போய்டாக.  நான் வாசலில் இருந்து பார்த்து கொண்டே இருந்தேன். தூரத்தில அம்மா இடுபில தம்பியும் அப்பா கையிலே பெட்டியுமா வந்து சேர்ந்தாக. 

அப்பா எப்போதும் போல்  இடி முழக்க சத்ததில ”எப்படிடா நல்லா படிக்கியா, முதல் இடம் உனக்கு தானேன்னு?” என்று கேட்டு விட்டு குளிக்க துண்டையும் எடுத்திட்டு குளத்திற்கு போய் விட்டார். பக்கத்து வீட்டு மோகன் மாமா சம்பத்தை தூக்குவது போல என்னையும் தூக்கி காத்தாடி போல சுத்த மாட்டாரா, தோளில் வைத்து கொண்டு குளத்திற்கு அழைத்து போக மாட்டாரா என்று ஆசையாக இருந்தது. கேட்கவும் பயமாக இருந்தது. முகத்தை பார்த்தேன். அப்பா என்னை பார்கவே இல்லை.  விருவிருன்னு நடந்து போயிட்டே  இருந்தார்.

குட்டி தம்பியை எட்டி பார்த்தேன்.  குண்டு குண்டா அழகா இருந்தான். என்னை பார்த்து சின்ன பல் காட்டி சிரித்தான். அம்மா உள்ளே போனதும்;  நான் ஓடி போய் அவனை தூக்க அவன் துள்ளி குதிக்க, அவனும் நானும் சேர்ந்து கீழை விழுந்து விட்டோம். அம்மா ஓடி வந்து கோபமாக  ”சனியனே, கூறு கெட்ட நாயே,’  என்று விறுகு கட்டயாலே  அடி அடின்னு அடிச்சா.

அந்த நேரம் பார்த்து பாட்டி வந்ததாலே தப்பிச்சேன்.  எலே வந்ததும் வராதுமா ஏலே பிள்ளையை போட்டு  அடிக்கேன்னே என்னை  மறைத்து பிடித்து  விட்டார்கள்.  சேலை முந்தனையால் என் கண்ணை துடச்சுவிட்ட  பாட்டி கைக்குள்ளாக இருந்து இப்போது என் தம்பியை திரும்பி பார்த்தேன் . அப்பவும்  அவன் என்னை பார்த்து சிரித்து கொண்டிருந்தான். ஆனால் நான் சிரிக்கல,  அப்போது முதல்  அவன்  முதல் எதிரியா தெரிஞ்சான் எனக்கு.

வீட்டுக்கு வெளியில் இருந்து அழுது கொண்டே இருந்தேன். குசினியில்  அம்மாவும்  பாட்டியும் பேசி கொண்டிருந்தார்கள். பாட்டி தம்பியை எடுத்து மடியில் போட்டு என் ராசா, என் தங்கமுன்னு  கொஞ்சி கிட்டு இருந்தாக.

 மச்சான் அடித்ததை விட அத்தைக்காரி அடித்தை விட அம்மா அடிச்சது முதல் முறையாக வலித்தது.
 வீட்டுக்கு வெளியே வந்தேன் என் சைக்கிளை எடுத்து கொண்டு, இனி இந்த வீட்டு பக்கம் வரவே கூடாது என்று எண்ணி கொண்டு திரும்பி பார்க்காமே வேகமா,  மிதிச்சு போய்கிட்டே இருந்தேன். என் சைக்கிள்  வயல், வாய்க்கால்,  பனங்காட்டு வழியே  போய் கொண்டே இருந்தது! 

28 May 2012

ராஜ மாணிக்கம் மகளும் வாத்தியும்!

ராஜ மாணிக்கம் கடை எங்கள் பக்கத்து கடை!   வெள்ளை வெளேர் என்று வாயில் எப்போதும் வெற்றிலையும், எகத்தாள பார்வையுடன் ராஜா போன்ற தோரணையுடன் வலம்  வருபவர்.  முதல் மனைவியின் முதல் பிள்ளை தூக்க வந்த பெண்ணுக்கு; பிள்ளைக்கு ஒரு வயது ஆகும் முன்  ஒரு பிள்ளையை கொடுத்து  இரண்டாவது பெண்ணாட்டியாக்கி கொண்டார்.  முதல் மனைவி சாத்தான்குளத்திலும் சின்ன வீடு கேரளாவிலும் இருந்தது. கதையிலிருக்கும் கலவரம் ஒன்றும் ராஜமாணிக்கம் உடையிலோ நடையிலோ இருந்தது இல்லை. தன் பெயரில் 3 லாறி 2 கடை என ராஜபோகமாக வாழ்ந்தவருக்கு எஸ்டாட்டிலுள்ள பல ஏழை பெண்களும் துணையாகி இருந்தனர் என்பதும் ஊரறிந்த உண்மை . யாரையும் மதிக்காது கீழ்த்தரமாக திட்டுவதால் முன்னுக்கு கூளை கும்பிடு போடுவனும் முதுகுக்கு பின் திட்டி விட்டு செல்வான்.

 பல நாட்களும் அடுப்பில் சட்டியை வைத்ததும் தான் கடுகு பருப்பு வாங்கி வர கடைக்கு அனுப்புவார்அம்மா. கல்கண்டு கையூட்டாக வாங்கி கொண்டு நானும் சலிக்காது கடைக்கு போய் பொருட்கள் வாங்கி கொடுப்பேன். என் பலவீனம் கல்கண்டுவில் உண்டு என புரிந்து கொண்ட ராஜமாணிக்கம் மகன்; அதாலே என்னை மடக்க 8 அணாவுக்கு கல்கண்டு கேட்டால் 2 ரூபாய்க்கு கல்கண்டு தருவான்.  தரும் போது கையில் தொட்டு தருவான்.  இதை அம்மாவிடம் சொன்ன போது "பாவிபய அப்பனை போல் இருப்பான் போல" என்று திட்டி... பத்து கடை தள்ளியுள்ள பெருமாள் கடைக்கு போக சொல்லிட்டாக.

ராஜமாணிக்கம் மக கோகிலா என் வயசு பெண். அவளும் நானும் நட்பாகவே இருந்தோம். என்னை கண்டால் ஆசை ஆசையாக ஓடி வந்து கதைப்பாள். எங்க ஊரில் கையில் கொஞ்சம் பணம் உள்ளவர்கள், எஸ்டேட் அதிகாரிகள் பிள்ளைகள் ஆங்கில வழி கல்வியில் படிப்பித்தனர். அம்மா என்னமோ அடுத்த வீட்டுக்கு போற பிள்ளைகளுக்கு பேருக்கு கல்வி இருந்தா போதும் என   என்னை சமீபத்திலுள்ள அரசு பள்ளியில் சேர்த்து விட்டார்கள். 

படிக்கிற பிள்ளை எங்கையும் படிக்கும் என்று தற்பெருமையாக பேசி கொண்டார்கள். 

கோகிலா, வேல் நாடார் மக மல்லிகா அந்தோணி சார் மக சுபா இவர்களை எல்லாம் பார்க்கும் போது என்னை அறியாமல் பொறாமையும் ஆற்றாமையும் ஒருங்கே சேர்ந்து வரும். அவக நல்லா பேசினா கூட பவுசு காட்டினாகளோ என்று மனது ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு கொள்ளும். அவக பேசுத  ஆங்கில-தமிழை உன்னிப்பாக கவனித்து கேட்டு கொள்வேன்.

ஆறாம் வகுப்பு முடிந்ததும் கிளாடிஸ் டீச்சர் வீட்டு டூயூஷன் போவதை நிப்பாட்டிய அம்மா வெங்கட் வீட்டுக்கு டியூஷன் அனுப்பினார்கள். வெங்கட், தமிழகத்தில் ஏதோ பல்கலைகழகத்தில் தங்க பதக்கத்துடன் பட்டபடிப்பு முடித்தவராம். மேலும் ஐ.எ.எஸ் தேற்வுக்கும் வீட்டிலிருந்து படித்து கொண்டிருந்தார் அப்போது.  வீட்டில் ஆராய்ச்சிக்கு என்றே விதவிதமான செடி வளர்த்தனர்.  அவன் அம்மா கூட இந்து  பெண் கடவுள் போல் அழகாக இருந்தாங்க. அவர்கள் அணிந்திருந்த ஒத்த மூக்குத்தி இன்னும் அழகு சேர்த்தது  அவர்களுக்கு. தினம் பூஜை கோயில் என்றே போய் வந்தார்கள்.


அழகான மிடுக்கான தோற்றத்துடன் உள்ள வெங்கட் முதல் வகுப்பிலே ஒழுக்கம் பற்றி தான் சொல்லி கொடுத்தான்.  ஒரு அட்டைவனை தயாராக்கி வீட்டில் தெரியும் இடத்தில் ஒட்டி வைக்கவும் சொன்னான். எழும் நேரம் படிக்கும் நேரம் விளையாட்டு நேரம் தூங்கும் நேரம் என பிரித்து அட்டவணையும் தயார் செய்து தந்து விட்டிருந்தான். அம்மாவிடம் கொண்டு காட்டின போது மெச்சினார்கள்.

பாத்தியா ஒழுங்கான இடத்தில் சேர்த்து விட்டால் படிப்பு தானா வரும் பீஸ் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை இங்கயே 10 வகுப்பு வரை படிக்க சொன்னாக.

டுயூஷன் 6 மணிக்கு சென்று விட வேண்டும். ஒரு நிமிடம் தாமதம் என்றாலும் பிரம்பு அடி விழும்.  நான் ராஜமாணிக்கம் மகள், அவ இளைய தம்பி, என் தம்பி என நாங்கள் 6 பேர் படித்தோம். டுயூஷனுக்கு வருவர்களை எல்லாம் சேர்க்க இயலாது நான் பீஸுக்காக படிப்பிக்கவில்லை பெயர் வேணும். நல்லா படிக்கவில்லை என்றால் எங்களையும் டியூஷன் வகுப்பில் இருந்து விரட்டி விடுவேன் என்று மிரட்டி கொண்டே இருந்தான்.  நான் ஆங்கிலம், கணக்கு பாடம் படித்தேன். ஆங்கில வழி கல்வி என்பதால் தமிழ் வாசிக்க தெரியவில்லை என்று கோகிலா தமிழ் படித்தாள்.

முதலில் எனக்கு அப்புறம் கோகிலா தம்பிக்கு என அனைவருக்கும்  பாடம் எடுத்து விட்டு வீட்டு பாடம் செய் என்று தள்ளி உட்கார வைத்து விட்டு கோகிலாவுக்கு நிறைய நேரம் தமிழ் சொல்லி கொடுக்க ஆரம்பித்து விடுவான். அப்படி தான் ஒரு முறை லக்ஷ்மி தேவியை பற்றி சொல்லி கொடுக்கும் போது மாதாவை இகழ்ச்சியாக பேச நான் துடுக்காக மறு கேள்வி கேட்க கோபம் கொண்டவன் தொடையில் நாலஞ்சு பிரம்பு அடி தந்து விட்டான். அன்றிருந்தே டியூஷனே பிடிக்கவில்லை.  இதும் போதாது என்று என்னையும்  கோகிலா தம்பியும் தள்ளி இருந்து படிக்க வைத்து விட்டு அவளை தன் அருகில் அமர வைத்து தமிழ் பாடம் சொல்லி  கொடுக்க என அவன் கை அவள் இடை பக்கம் சுற்றி சுற்றி போய் கொண்டிருந்தது .சினுங்கல் சத்தம் கேட்டு நான் கண்டு கொள்ள ஏதோ புரிந்தது ஆனால் தெளிவாக விளங்க வில்லை.  கெட்ட இடத்திற்க்கு வாத்தியான் கை போவுதுன்னு மட்டும் விளங்கியது. வீட்டுக்கு வந்து அம்மாவிடம் வகுப்பில் நடந்ததை விவரிக்கவும் டியூஷனே வேணாம்மா சே... படித்தவன் பார்க்க எவ்வளவு பண்பா இருக்கான் அவனுக்குள்ளும் இப்படியும் சாத்தானா என்று  சலித்து கொண்டார்கள். இந்த பொட்டை புள்ளைக்கும் விவரமில்லையே என்று வெறுத்து பேசி டியூஷனே வேண்டாம் என நிப்பாட்டி விட்டார்கள். 

பின்பு பள்ளி படிப்பு உயர் கல்வி, கல்லூரி திருமணம் என வாழ்கை உருண்ட நிலையில் இதை பற்றியே மறந்து விட்டேன். சமீபம் அந்த வாத்தியார் அப்பா மற்றும் ஒரே தம்பி ஒரு விபத்தில் இறந்த நேரம் இந்த வாத்தியானும் நான்கு வருடம் முன்பே எய்ட்ஸ் என்ற நோயால் மரணித்து விட்டான் என்று கேள்வி பட்டது திகிலாக தான் இருந்தது. ராஜ மாணிக்கவும் ஒரு நோய்க்கு என தமிழகத்தில் ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்க  தனக்கு இருந்த திமிர் பேச்சால் மருத்துவரிடம் இடற; மருத்துவர் விஷ ஊசி போட்டு கொன்று விட்டார் என்று வதந்தி  பரவி இருந்தது எங்கள் ஊரில்.  ராஜ மாணிக்கம் மகளும் தந்தை இறந்த ஒரு வருடத்தில் 10 பகுப்பு தோற்ற கவலையில் இருந்து  மீள கடை வேலைக்கார பையனுடன் ஓடி போய் விட்டாள் என்பது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை!

21 Jul 2011

என் பூந்தோட்டம் சொல்லும் கதைகள்............................



காலையில் அவசரமாக ஒரு பயணத்திற்க்கு தயாராகி கொண்டிருக்க  எங்கள் வீட்டு நுழைவு வாயில் பக்கம் இருந்து அக்கா என்று ஒரு விளி !  எட்டி பார்த்தேன் ஒரு பெண், உண்மையிலே என் அக்கா வயதுள்ளவர் ஒரு மிதி வண்டியில் மகனின் உதவியுடன் ஒரு பெரிய கட்டு துணி பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தார்.  நானும் என்னவென்று விசாரித்து கொண்டே வாசல் பக்கம் வந்தேன். 


பெண்கள், குழந்தைகளுக்கு   இரவு உடுப்பு விற்கின்றாராம்.   துணியை வாங்கி பார்க்க ஆவல் தான். வீட்டினுள்ளில் இருந்து ‘ லொள்’ என்ற எச்சரிக்கை ஒலி எந்த நேரவும் வந்து தாக்கலாம்  என்பதால்   “ அக்கா பின்பு காணலாம்  நான் தற்போது அவசர வேலையில் உள்ளேன்” என்றேன் அவரிடம்.  அவர் வீடும், என் வீடு தள்ளி 10-15 வீடு தள்ளி இருப்பதாக அடையாளம் கூறினார்.   ‘புரிந்தது இடம்’, உங்களுடைய வீட்டில் வந்து நோக்கி கொள்கின்றேன் என்றேன்.  அவரை எதிர் வீட்டு பெண்கள் 10 மணிக்கு மறுபடியும் வர சொல்லியுள்ளதாகவும் தெரிவித்தார். ஒரு கை குட்டை வாங்க கூட 8 மைல் தூரம் பயணிக்க தயங்காதவர்கள் பக்கத்து தெரு பெண்ணிடம் ஒரு பொருள் வாங்க இந்த வெட்டி பந்தா தேவை தானா? என்று மட்டும் நினைத்து கொண்டேன் .  எங்கள் தெருவில் மண் காலில் படாத அரச பரம்பரையை சேர்ந்த  பெண்கள் யாரும் இல்லை.  வெட்டியாக தொலைகாட்சி பார்த்து கொண்டு இருப்பவர்கள் தான் பலரும்.  நடைபயணம் செல்லும் போது கூட வாங்கலாம்.  இருப்பினும் பொருட்கள் விற்க வருபவர்களிடம் ஒருமேட்டிமை காட்டி கொள்வது வழியாக தங்களை பெரிய ஆட்களாக காட்டி கொள்ள தயங்குவது இல்லை இவரை போன்றவர்கள்.


என்னுடைய அனுபவம் கூட இப்படியாகத் தான் இருந்தது சுயமாக ஒரு தொழிலில் கால் ஊற்ற வேண்டும் என்று முடிவெடுத்த போது!  எங்கள் வீடு கட்டி முடித்த வேளையில் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் இருந்து விடுபட்டு வெட்டியாக வீட்டிலிருந்தேன்.  வீட்டை சுற்றி போதிய இடம் இருந்ததால் வீட்டிலிருந்தே செடிகள் வளர்ப்பதுடன் விற்றும் கொஞ்சம் காசும்  பார்த்து விட ஆசை வந்தது.


உடனே ஒரு வாகனத்துடன்  நாகர்கோயிலில் ஒரு பெரிய பூந்த தோட்டதை வந்து அடைந்தோம். அது ஒரு பூந்தோட்டம் அல்ல ஏதேன் தோட்டம் என்று சொல்ல வைத்தது அதன் அழகு!  ஒவ்வொரு செடியும் அதிலுள்ள பூவும் ஒவ்வொரு நிறம், அதன் வடிவு, தன்மை என திக்கு முக்கு ஆட வைத்தது.  விலை விசாரித்த போது ஒரு செடிக்கு 10 ரூபாய் என்றால் 20 செடியாக சேர்த்து வாங்கினால் ஒரு செடிக்கு 2 ரூபாய் என்றும் அறிந்த போது எங்கள் பரம்பரை தொழிலான வியாபாரத்தில் இணைந்து ஒரு பெரும் தொழில் முனைவர் ஆகிவிடலாம் என்று ஆசை கொளுந்துவிட்டு எரிந்தது.    ஒவ்வொன்றிலும் 10-20 என்று வாங்கி வந்தேன். 




பராமரிப்பு வேலை, தண்ணீர், மின்சாரம், செம்மண், இத்தியாதி செலவு தான் ‘புலி வாலை பிடித்து விட்டேனோ’ என்று எண்ணம் கொள்ள செய்தது.   திருநெல்வேலி சுடும், கொடும் வெயில் சில செடிகளுக்கு அதன் உயிரையை பறிப்பதாக இருந்தது.  சில செடியின் தோற்றம் பூந்தோட்டத்தில் கண்ட அழகு இங்குள்ள கால-சூழலுக்கு இருந்ததாக தெரியவில்லை.   சில செடிகளுக்கு குளிர்மையான சூழலுக்கு என தென்னை ஓலையில் கூரையும்  வேண்டி வந்தது.

 செடி கொண்டு வந்த மறு நாள் காலையில் என் வீட்டிலிருந்து 5 வீடு தள்ளி இருக்கும் 'ஏரியா- தாதா' பெண் வந்து “ நீங்கள் நர்சரி ஆரம்பிப்பதை பற்றி ஒன்றும் என்னிடம் சொல்ல வில்லை, எல்லோரையும் அனுசரித்து போக கற்று கொள்ளுங்கள்” என்று  எச்சரித்து  விட்டு அவர் தயவில் செம்பரத்தியில் 2 செடி,  இட்லி பூவில்  1 செடி என்று வாங்கி விட்டு, அடுத்த மாதம் மாமாவுக்கு(கணவர்) சம்பளம் போட்டவுடன் இன்னும் செடி வாங்கி விட்டு காசு தருகின்றேன் என்று சொல்லி வைத்தார்.   விடைபெறும் முன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தாங்கும் தெய்வ்ம் போல் கரிசனையுடன் “ நான் தான் கூழ்வத்தல் விற்க என வெயிலோடு மல்லடிக்கின்றேன் உங்களுக்கு என்ன நோக்காடு இந்த வீணா போன வெயிலில் மண்ணுடன்... என்று பாச மழை பொழிந்து விட்டு இந்த செடி கொடி எல்லாம் உங்களுக்கு பெருத்த நஷ்டத்தை தான் தரவுள்ளது என்று தன் ஆசிர்வாதத்தை இட்டு சென்றார்.  பின்பு நான் அறிந்தேன் அவர் தன் நட்பு வட்டத்தில் என் செடி வியாபரத்தை தடுக்கும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ளார்  என்று!                                                                                                                                                                                                                        
                                                                                                                                                                                                       சில பெண்கள் என் தோட்டததை காண ஏதோ கண்காட்சிக்கு வருவது போல் வந்து சென்றனர்.  சும்மா நடைபயணம் வந்தேன்  என்ன செடி வைத்திருக்கின்றீர்கள் என்று பார்க்க வந்தோம் ஊட்டி ரோஜா இருந்தா தான் வேண்டும் இப்படியாக என்னிடம் இல்லாத செடியின் முகவரியை கேட்டு கடுப்பு ஏற்றி சென்றனர் .
                                                                                                                                                                                                                                                       
 சில பெண்களோ இந்த பூஞ்செடி வைத்து என்ன பலன்? மின்சாரம் தண்ணீருக்கு தன் வந்த கேடா என சமூக உணர்வோடு கேள்வி கேட்டனர்? காய்கறி, பழம் செடி இருந்தால் வாங்கி கொள்வோம் என்றனர். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க செவ்விழனி, மாங்கனி, நெல்லி,  நாரத்தம் போன்ற  செடிகள் வருவித்தேன்.   கேட்டவர்கள் பின்பு அந்த வழி காணவில்லை.   ஆனால் செடியை பற்றிய சாஸ்த்திரங்கள் கற்று கொண்டேன்.  செவ்விழனி கோயிலில் மட்டும் தான் வளர வேண்டுமாம்,  வீட்டில் வளர்த்தால் வீடை கட்டமண்ணாகி விடுமாம்.   எலுமிச்சை, நெல்லி , முருங்கை போன்ற செடிகள் வீட்டு முன் பக்கம் வைக்க கூடாது என்ற அறிய கேட்டேன்.  மல்லிகை பூ செடியை வேண்டவே வேண்டாம் நல்ல பாம்பு வந்து இனாமாக  சட்டையை கழற்றி போட்டு படம் பிடிக்குமாம் என பல வித கதைகள் கதைத்தனர். இன்னும் சில பெண்களுக்கு செடி பிடிக்குமாம் ஆனால் அவர்கள் கையில் மண் பட்டால் அலர்ஜி எனபதால் நான் மண்ணுடன் சாணி எல்லாம் சேர்த்து செடியை நட்டு கொடுத்து செடியை பராமரித்தும் தந்தால் வாங்கி கொள்வதாக  சொன்னார்கள்.  நொந்து நூடில்ஸ் ஆகுவது எப்படி என்பதை அனுபவத்தால் புரிந்தது.  ஆனாலும் துன்பம் வரும் போது சிங்கம் போல தனி தனியாகவா வரும்  கூட்டத்தோடு அல்லவா வந்தது.  

சில பெண்கள் வந்து தங்கள் சோகக்கதையை கதைத்தனர்; அவர்களுக்கு செடி என்றால் உயிராம் ஆனால் மண் பட்டு அவர்கள் டைல்ஸ் தரை எல்லாம் அழுக்கு ஆகுவதால் பூந்தொட்டிகள் வாங்கி தந்தால் நலமாயிருக்கும் என்றனர். எனக்கு தான் வலது கரமாக  அத்தான் உள்ளாரே; செடிகளையும் விற்க வேண்டும் என்ற நோக்கவும் இருந்தது. என்னவரையும் அழைத்து நெல்லை அருகிலுள்ள கூனியூர் போய் குட்டியானையில் (அது ஒரு சிறிய ரக லாரி) பூந்தொட்டிகள் மட்டுமல்ல குடி தண்ணீர் வைக்கும்  அழகான பானைகளும் வாங்கி வந்து வீட்டு மாடியில் அடுக்கி வைத்தேன். பூந்தொட்டி வாங்க வந்தவர்கள் துணிக்கடையில் பெண்கள் முந்தானைக்கு டிசைன் பார்ப்பதை விட காத்திரமாக உற்று நோக்கினர் அந்த மண் பூந்தொட்டிகளை!  இது ரொம்ப குண்டு, இந்த கரைப் பக்கம் இப்படி இருந்தால் இன்னும் நல்லது, இதன் வாய் கொஞ்சம் சிறிதாக இருந்திருக்கணும் என்று ஆளாளுக்கு பெண் பார்க்க வந்து விட்டு சொல்லி விட்டு செல்லுவது போல் சென்றனர்.  இன்னும் ஒரு அறிவான அம்மா வந்தார் 10 தொட்டி வாங்கினால் 3 இனாமாக தரலாம் அல்லவா என்று நச்சரித்து கேட்டு கொண்டிருந்தார்.  தொட்டி விற்றதோ இல்லையோ அது மாடியில் ஆடி மாச காற்றில் ஆட ஆட  எத்தனை தொட்டி உடைந்ததோ என்று என் இதயம் தான் நிதம் நிதம் உடைந்து கொண்டே இருந்தது.                                                      
சுகமாக பகல் நித்திரை கொண்டு நிம்மதியாக இருந்த எனக்கு இரவு உறக்கவும் கெட்டு குட்டி சுவரானது.  விடியும் முன் மாடியில் போய் பூந்தொட்டிகளின் நலம் விசாரிக்க உந்த பட்டேன்.
                                                                                                                                                                                                              சில பக்கத்து வீட்டு பெண்கள் தங்கள் ஆறுதலை தந்து விட்டு  இனாமா கொடுத்தா கூட மண் தொட்டிகள் எங்களுக்கு வேண்டாம் ‘சிமின்று தொட்டின்னா எங்கள் பேர குழந்தைகள் காலம் வரை இருக்கும்’ என்று கூறி சென்றனர்.  ஒரு நாள் அழகான இளம் பெண் கழுத்து கையில்  25 சவரன் நகையுடன் பூந்தொட்டி செடிகள்  வாங்க வந்திருந்தார். 100 ரூபாய்க்கு வாங்கிய பூந்தொட்டிக்கு பதில்  85 ரூபாய் மட்டும் தந்து விட்டு  பையன் வரும் வழியில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டு விட்டான். பையனிடம் பின்பு  கொடுத்து விடுகின்றேன்  என்று கூறி சென்றார். அந்த பையனோ, என் குட்டி பையனுடன் இன்றும் வீட்டிற்க்கு  விளையாட வந்து தான் செல்கின்றான் ஆனால் பணம் மட்டும் இன்னும் வந்து சேரவில்லை.

 மக்களை காக்கும் உயிர் நண்பனாம் காவல் அதிகாரி  எங்கள் பகுதிக்கு; ரோந்துக்கு வருபவர் என் பூந்தோட்டத்திற்க்கு வந்தார்.  செடியை கண்டு  பூரிப்படைந்து  ஒரு விருது தான் எனக்கு வாங்கி தரவில்லை ஆனால் புகழ்ந்தார் புகழ்ந்தார்  வான எல்லைமட்டும் புகழ்ந்தார்!   அப்படியே சொன்னார், சகோதரி செடி வளர்ப்பது என்பது பணம் ஈட்டும் தொழிலாக நாம் ஒரு போதும் பார்க்க கூடாது இதில் ஒரு மன மகிழ்ச்சி ஆன்ம திருப்தி உண்டு!  காக்கி யூனிபார்முக்கு உள்ளும் இப்படி ஒரு கலை இதையமா என்று நான் நினைக்கும் முன் தன் கால்ப்படி, கைப்படி  போலிஸுகளை அழைத்து, உரமிட்டு கொழு கொழு என்று வளர்த்து வைத்த பல செடிகளை எடுத்து தன் வாகனத்திற்க்குள் வைக்க சொன்னார்.  இனாமாகவா என்று கலங்கி நிற்கையில், பையில் கைவைத்து கொண்டு எவ்வளவு தர வேண்டும் என்றார் நானும் 850 ரூபாய் என்றேன். ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து நீட்டி விட்டு “மனைவிக்கு பூஞ்செடினா ரொம்ப பிடிக்கும்” என்று தன் மனைவிக்கு செடியால் மரியாதை செலுத்த போவதாக தெரிவித்து கொண்டு மீதம் தொகையை மறுபடி வரும் போது தருவதாக கூறி விடை பெற்று சென்றார்.  சமீபத்தில் D.I.G  ஆகி மாற்றலாகி போயுள்ளார் என்று பத்திரிக்கை செய்தி வழியாக அறிந்து கொண்டேன்.  போலிஸ் நிலையம் போய் கேட்கவும் பயம் மறுத்து விட்டது பின்பு நானே ஒரு பெட்டி கேஸ் ஆகிவிட்டால்!

அழகா, அமைதியாக என்னவரிடம் மட்டும் வம்பு தும்பு செய்து கொண்டு  நிம்மதியா தூங்கி எழுந்த எனக்கு,  சுயமாக நானும் சாதிக்க வேண்டும் என்று எண்ணிய போது நான் கண்ட பாதைகள் மிகவும் கொடூரமானதாக இருந்தது. செடிகள் வாங்க வரும் பெண்- ஆண் மனநிலைகள் ஒரு ஆய்வு கட்டுரைக்கு என்ற வண்ணம் தெரிந்து கொண்டேன்.
                                                                                                         ஒரு கல்லூரியை ஒரே நாளில் அழகு படுத்த வேண்டிய சூழலில் ஒரு பூந்தோட்ட அமைப்பாளர் மொத்தமாக செடிகள், பூந்தொட்டிகள் எடுத்து செல்லும் வரை என் துயர் ஓயவில்லை ! 
                                                                              பேசாது தமிழக சுய உதவுக் குழுவில் சேர்ந்திருந்தால் கூட ஒன்றுக்கு இரண்டு குழுவில் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்து ஒரு பெரும் தொழில் அதிபராக ஆகியிருப்பேன்.  அத்தானின் கொஞ்சம் பணத்தை குளத்தில் போட்டு குஞ்சு பொரிக்கும் என்று காத்திருந்தது தான் மிச்சம்!!! "பச்சை தாழ்வாரம்" (Green wally) என்ற என் பூந்தோட்ட பெயர் பலகையை எங்கள் ரிக்கி நாய் குட்டிக்கு கூரையாக்கி விட்டு என் கூரைக்குள் நிம்மதியாக இருந்து இப்போது வெட்டியாக என் மந்திர பெட்டியுடன்  என் பொழுதை போக்குகின்றேன் !

10 Jul 2011

பிறந்த நாள் நினைவுகள்!

பிறந்த நாள் விழாக்கள் பெரிதாக கொண்டாடப் பட்டதாக நினைவில் இல்லை. இருப்பினும் பிறந்த நாள் அன்று பாயசம் செய்து பக்கத்து இரு வீடுகள் எதிர் வீடு சேச்சிக்கும் எங்கள் குடும்ப நண்பர் தாசன் மாமா  வீட்டுக்கு சென்று கொடுத்ததும் ஞாபகம் உள்ளது. பிறந்த நாள் அடி, திட்டு வாங்க கூடாது என்று முன் நாளே அறிவுறுத்தப்பட்டிருக்கும். அன்றய நாள், திடீர் தாக்குதலான அம்மாவின் விளக்குமார், செருப்படிக்கும் பயப்பட தேவையில்லை. புது உடுப்பு கிடைத்திருக்கும் அந்த உடுப்பை இட்டு காலை ஆலயம் சென்று திருப்பலியில் ஆண்டவரிடம் ஆசிர்வாதம் பெற்று திரும்ப வேண்டும் என்பது அம்மாவின் கட்டாய சட்டமாக இருந்த்து.  பள்ளிக்கு, சீருடை என்பதால்  புது துணி, அப்படியே வரும் ஞாயிறு ஆலயம் செல்லும் வரை பெட்டியில்  காத்து இருக்கும் என்பதே வழமை!

புது துணி வாங்கி தருவது அம்மா என்பதால் அம்மாவுக்கு பிடித்த மாடல், கலர் என்பது என் மலையாள தோழிகளிடம் ஜாடை காட்ட இயலாது என்பதும் ஒளித்து வைக்கப்பட்ட மாபெரும் துயர்களில் ஒன்றாக இருந்தது.  என் மலையாளத் தோழிகள் குட்டை பாவாடை, விதவிதமான உடுப்புகள், கையில்லாத சட்டையுடன் டயான கட்- ஸ்டெப் கட் என்று நாகரிக தலை முடி கட்டுடன் பள்ளிக்கு ஸ்டையிலாக வரும் போது நம் கலாசாரம்… அவளுக காலை கையை காட்டும் போல் ஆகாது, நம் சொந்தகாரர்கள் பார்த்தால் ஏதும் கதைத்து விடுவார்கள் என்று அரைப் பாவாடை முக்கால் பாவாடையாகவும் முடி பின்னி பூவைத்து விடும் அளவுக்கு வளர்த்து பின்னி  அனுப்பினார்.

அம்மாவுக்கு எல்லாம் முழுமையாக அழகாக அவரின் ரசனையில் இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் உண்டு! அதனால் துணிமணிகள் துவைப்பது, தேய்த்து அடக்கி வைத்து அதை அந்தந்த நாட்களுக்கு இடுவிப்பது மட்டும் அல்லாது;  என்ன வேலையாக இருந்தாலும் தலையையும் அம்மாவை வாரிவிட்டு,  சொல்லியும் கேட்காது சில பொழுது இரட்டை சடை பின்னி பூவை தோரணமாக வைத்து கண் மறையும் வரை வீட்டில் இருந்து பார்த்து டாடா இட்டு வழியனுப்பி ஒரு ஆயிரம் அறிவுரைகள் தந்து அனுப்பி விடுவார்.  மலையாளப் பயலுகளை நம்ப இயலாது தேவை இல்லாத வம்பில் மாட்டி விட கூடாது நாம் பிழைக்க வந்த இடம்; பார்வையை அங்கு இங்கு அலைய விடாக்கூடாது பார்த்துக்கோ; நேரா ரோட்டை பார்த்து நடக்கணும் போகும் போது அந்த வலது பக்கமா போ வரும் போது இடது பக்கமா விரைந்து வா....  இப்படியாக என் தாத்தா, அப்பா என எங்கள் குடும்ப மானமே என் தலையில் சுமக்க வைத்து அனுப்பி விடுவார்கள்.

அம்மா கண் மறையும் மட்டும் தலையில் பூ இருக்கும் பின்பு பூவை எடுத்து என் மலையாளி கூட்டாளிகள் போல; ஒரு எலி வால் அளவுக்கு மல்லிகை அல்லது பிச்சிபூ மட்டும் தலையில் வைத்து விட்டு, வைத்திருக்கும் கனகாம்பரம் ரோஜாப்பூ எல்லாம் பைக்குள் பத்திரமாக இருக்கும் மாலை சூட்டி கொள்ள என.  ஒரு பிறந்த நாள் அன்று இப்படி தான் நான், ஒரு தமிழ் இரட்டை வால் குருவியாக போக என் நண்பிகள் இதை விட “வைசாலி” கெட்டு உனக்கு நன்றாக இருக்கும் என புதியதாக வந்த படத்தின் மோடலில் வடிவா சீவி சிங்காரித்து அனுப்பினர்.  என்னை எதிர்பார்த்து நின்ற அம்மாவுக்கு என்னையும் முந்தி தலையும் புது மாடல் கொண்டையும் தெரிய அம்மாவுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது. வாழ்க்கையில் அந்த தலைமுடிக் கெட்டை நினைத்து பார்க்க கூடாது என்றளவுக்கு தலையை கலைத்து முடியை கையில் சுற்றி  மாவு ஆட்டுவது போல் ஒரு ஆட்டு ஆட்டி, எண்ணை தேய்த்து அவர் விரும்பும் மாடலுக்கு கட்டி விடும் வரை அடங்கவில்லை!  

ரஷியா புரட்சி முதலாம் சுதந்திர போராட்டத்தின் முடிவில்  ஆரம்பித்திருக்கலாம் ஆனால் என் சுதந்திர  போராட்டம் இடுப்பளவு உள்ள தலை முடியை கழுத்தளவு வெட்டுவதில் தான் ஆரம்பித்தது. பின்பு மிகவும் வற்புறுத்தபட்டு திருமணத்திற்க்கு என மறுபடியும் தலைமுடியை இடுப்பளவாக வளர்க்கப்பட்டேன். மாமியார், பெண் என்றால் தலை முடி தான் அவசியம் நீ ஒரு போதும் முடியை வெட்ட கூடாது அது எங்கள் குடும்ப சட்டம் என்று தலை நிறைய வலுகட்டாயமாக தேங்காய் அண்ணை பண்ணையாக மாற்றியதும்; அவரிடம்  வந்த கோபம் அவர் தலையையா   வெட்ட இயலும் என் தலை முடியை வெட்டி கோபத்தை என் சுதந்திரத்தை வெளிப்படுத்தி கொண்டேன்!

இப்படியாக பிறந்த நாள் என்றவுடனே என் குழந்தைப் பருவ நினைவாக வருவது பாயசம் சாப்பிடுவதும் செய்த விசேஷ உடை சிகை அலங்காரமாகும்.

பின்பு பெரியகுளம் கல்லூரியில் படித்த போது தான் ‘பிறந்தது’ இவ்வளவு நல்லதா என்று எண்ண வைத்தது அங்குள்ள கொண்டாட்ட நாட்கள்! காலையில் குளிக்க வரிசை பிடிக்க வேண்டும் என்ற யாராலும் அசைக்க இயலாத விதி, பிறந்த நாள் குழந்தைக்கு மட்டும் தளர்த்தப்படும்(திடீர் என்று தண்ணீர் நின்று அன்று கூட அவரால் குளிக்காவிடில் என்னாவது?).   காலை முதல் அன்றைய இரவு வரை கனவு கன்னி போன்று அவர் அன்றைய ஸ்போன்சர் குழந்தையாக பவனி வருவார். எங்கள் வார்டன் அன்று சேட்டை செய்தாலும்  திட்ட மாட்டார். அவருக்கான உணவுக்கு வேண்டி சண்டையிட்டு முண்டி அடித்து வரிசயில் நிற்க வேண்டியதில்லை. சில ரொம்ப நல்ல தோழிகள் என்றால் அவருக்கு தெரியாதே பணம் தங்களுக்குள் பிரித்து கேக் வாங்கி happy birth day to you……பாட்டு பாடி தங்கள் பாசத்தை தங்கள் அப்பாக்களின் காசால் வாங்கிய பொருளால் பரிசு கொடுத்து கொண்டாட முன் வருவார்கள். 

இவை யாவும் கேலி கிண்டலுடன் அவதானிக்கும் மாற்று கருத்து குழுவில் இருந்ததால் எங்கள் பிறந்த நாட்கள் வரும் போது மிகவும் ரகசியமாக காக்கப் பட்டு காலேஜ் காண்டீனில் நான் பச்சி -வடை மட்டும் வாங்கி தருவேன்  நீங்க காப்பி- டீ வாங்கி கொள்ள வேண்டும் என்ற டீலுடன் எங்கள் கொண்டாட்டங்கள் நடைபெறும். 

மூன்றாம் வருடம் வந்த போது நாங்கள் கல்லூரியிலும் விடுதியிலும் பெரிய அக்காக்கள் என்பதால் பல இறுக்கங்கள் தளர்த்த வேண்டி வந்தது. அந்த வருடம் பிறந்த நாள் கொண்டாட்டம் தோழிகளின் வற்புறுத்தலால் சிறப்பாக நடைபெற்றது.   தலையில் வைக்க 50 மல்லிகைப்பூ தேவையுள்ள எனக்கு 1000 மல்லிகை பூக்களால் அலங்கரித்தனர் . நட்பினால் வந்த அன்பு தொல்லையால் அன்றைய படிப்பு நேரத்தையும் விரையப்படுத்தி கோமாளியாக்கினர். ஆனால் அதன் சந்தோஷத்தை அடுத்த வருடம் என்னவர் வீட்டில் இருந்து கொண்டு மலரும் நினைவாக மிகவும் ஆசையுடன் அனுபவித்தேன். என்னவர் வீட்டில் ஆண்களுக்கே பிறந்த தினம் கொண்டாடுவது இல்லை (பெண்களுக்கு தேவை இல்லை) என்ற விதி உள்ளதாகவும் {ஆனால் வயதை மட்டும் கேட்டு மறுபடியும் சரிபார்த்து கொண்டனர்} திருமணமான பின்பு திருமண நாட்கள் மட்டும் தான் குடும்ப பெண்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் பணியப்பட்டேன்.  பின்பு எங்கள் மகன் பிறந்த பின்பு அவனுடைய பிறந்த நாட்கள் தான் எங்கள் கொண்டாட்ட நாட்களாகின. அத்தானோ தான் பார்க்கும் பல நிறுவனங்களின் கணக்கு வழக்கை தன் சுண்டு விரலில் வைத்திருந்தாலும் என் பிறந்த நாள் மட்டும் ஜூலை 6 , மே 6, ஜுன் 7 என்று நாளையே குழப்பி விடுவார். பலபொழுதும்   நினைவு படுத்தி நான் கொண்டாடுவது என்பது தன்மானப் பிரச்சனையாக  இருந்ததாலும், கொண்டாட்டங்களில் நம்பிக்கை அற்று இருந்ததாலும்  நானும் மறந்தே போயுள்ளேன்.  கடந்த வருடம், ஒரு கோப்பில் தியதியுடன் கையெழுத்து இட்ட போது தான் “ஓ இன்று தான் என் பிறந்த நாள் என்று அறிந்து கொண்டேன்”.  இருப்பினும் ஒவ்வொரு பிறந்த நாளும் ஆயுசின் ஒரு வருடம் குறைந்து வாழும் பூமியை விட்டு விடை பெறும் நாட்கள் சமீபம் வருவது மட்டும் தெரிந்திருந்தது.

3 May 2011

நேர்முகத்தில் காணும் கொடிய முகங்கள்!!!


நேர்முகத் தேற்வு எப்போதும் சங்கோஜத்தோடும் ஒரு வித ஐயத்தோடும் என்னால் நோக்கப்படுவதாகவே இருந்து வருகின்றது. ஒவ்வொரு நேர்முகம் நிகழும் போதும் அடுத்த முறை இந்நிகழ்ச்சிக்கு இனி வரப் போவதில்லை என்ற உறுதியுடனே வெளியேறி வருகின்றேன். அணியும் உடையில் இருந்து, செயல் எல்லாம் அளக்கப்படும் மேடை.! இந்திய மரபு அனுசரித்து 6 மீ சேலையை சுற்றி செல்ல வேண்டியுள்ளதால் என்னையும் அழைத்துள்ள என்னவருடைய அன்றய பயணம் ½ டண் மூட்டையை சுமந்தது சென்றது போல் இருந்திருக்கும். பானல் என்ற பெயரில் 5 -6 பேர் வரிசையாக இருந்து கேள்வி எழுப்புவதை நினைத்தாலே குளிரூட்ட அறையில் இருந்தால் கூட நான் வியர்த்து நடுங்கி தவிப்பது உண்டு. என் நண்பர்கள் உங்களுக்கு என்ன எளிதாக ஜெயித்து விடுவீர்கள் என்று வாழ்த்துவார்கள். என்னை மதிப்பிட போகின்றார்கள் என்று அறியும் போதே வரும் வார்த்தை தொண்டையில் இருந்து வாய் பக்கம் வர தயங்குகின்றது. நெருங்கிய நட்பு வட்டத்தில் நான் கலகலப்பான நபராக இருந்தால் கூட ஒரு புது கூட்டத்தில் பூனை போல் அவதானித்து கொண்டு பம்மியிருக்கவே எனக்கு எப்போதும் பிடித்தாக இருந்துள்ளது.


சில நேர்முகத் தேற்வுகள் வழமைக்கும் மீறி சுவராசியமாக மாறுவதும் உண்டு. நேர்முக தேற்வுக்கு  சென்ற இடத்தில் முதல் முதலாக ஆங்கிலத்தில் பாடம் எடுத்த அனுபவவும் உண்டு. சென்னையில் நடைபெறும் நேர்முகத் தேர்வு போல் நெல்லையில் இல்லை. இங்கு ஒரு வித இறுக்கம் இரு பக்கவும் நிகழும். ஒரு முறை நேற்முகம் கண்டவர் என் பெயரின் அர்த்தம் கேட்டார். அது ஒரு எதிர்பாராத கேள்வியாக இருந்தால் கூட பெயரை பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்ததால் மகிழ்ச்சியாக விவரித்தேன்.




நாகர்கோயிலில் ஒரு நேர்முகம் சென்ற போது உட்கார ஒரு நாற்காலி கூட தரவில்லை. கணவருடன் தான் பேசுவோம் என்று கூறினர். என் சாற்றிதழ் நோக்காது என்னவரிடம் உள்ள பணத்துக்கு தான் மதிப்பு என்பது பின்பு புரிந்தத போது அந்த வேலை மேல் எனக்கு இருந்த மதிப்பு அற்று போனது!!.


இன்றும் அது போல் தான் ஒரு நேர்முகத்துக்கு வந்து சேர்ந்தேன். பெண்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். வர வேண்டிய சிறப்பு தேற்வாளர்களுக்கு என காத்திருந்தனர்.  அலுவலகத்தில் விசாரித்த போது நான் இன்னும் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று தெரிந்ததால் நாற்காலி தேடி என் கால்கள் போயன. பெண்கள் அவர்களுக்கு ஒன்றும் அவர்கள் கை பைக்கும் என இடம் பிடித்து இருந்ததால் ஒரு ஓரமாக ஒரு இளைஞர் பக்கம் 5 நாற்காலி தள்ளி இடம் பிடித்தேன். பெண்கள் பக்கம் இடம் கிடைக்காததில் மகிழ்ச்சியும் தான் அவர்கள் படபடப்பு என்னையும் பற்றி கொள்ள கூடாது என்று கருதலாக இருப்பது உண்டு. ஆனால் ஓரந்தில் குந்தியிருந்த நபர் நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில் தன் இருப்பை பற்றி தன் நண்பர்களுடன் அலைபேசியூடாகவும் குறும் செய்தி வழியாகவும்  உரையாடி கொண்டிருந்தார் என்பது பின்பு தான் புலன்பட்டது.

கொஞ்சம் நேரத்தில் அவர் நண்பன் வியர்வை நெடியுடன் வந்து, நெல்லையில் அப்படி பார்க்க ஒன்று மில்லை ஆலயம் அல்லது அறிவியல் மையம் சென்று வரலாம் என்று நெல்லையின் இல்லாமையை பற்றி சாடி கொண்டிருந்தார். அந்த கொடிய நெடியோ, திருநெல்வேலி வெயிலோ அல்லது நேர்முகம் எண்ணிய கலக்கமோ நான் தலைவலியால் சுழன்று கொண்டிருந்தேன் அப்போது! “இதோ பதில் வந்து விட்டது” என்ற குறும் செய்தி ஒலி என் தலைவலியை இன்னும் கூட்டியது. அவர் காதலி இப்போது இணைப்பில் வந்து விட்டார் போலும். கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தாள். அவரும் விலாவரியாக நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். பல போது கொஞ்சியும் பின்பு மிஞ்சியும் பேசுவது அவர் காதலியிடம் தான் என்று உறுதி செய்தேன். இந்த கலவரத்திற்க்கு அந்த பெண்கள் பக்கமே இருந்திருக்கலாம் என்று எட்டி பார்த்த போது அங்கு காலி இருக்கைகள் ஒன்றும் தென்படவில்லை. கொஞ்சம் நேரத்தில் தோழன் வந்தவுடன் இடத்தை காலி செய்து என் தலை வலி மட்டுபடுத்த உதவினார் அந்த இளைஞன்.




என் துறை சார்ந்த இன்னொரு பெண்ணும் வந்திருந்தார். எனக்கு அவரிடம் கதைக்க கனக்க ஆசை தான்! ஆனால் எனக்கு ஒரு நேற்முகம் வைத்து. உள்ள தைரியத்திலும் மண் அள்ளி போட்டு விட கூடாது என்பதால் சிரிப்புடன் என் இருக்கையில் பற்றி கொண்டு இருந்து விட்டேன். நேற்முகத்துக்கான சிறப்பு அழைப்பு மணி ஒலித்து விட்டது. என்னை அழைத்து அலுவலகத்துக்குள் போருக்கு தயாராகும் போர்ப் படை வீரர் போல் உட்கார வைத்திருந்தனர்.  திடீர் என்று ஓடி வந்து அந்த பெண் "மேடம் நீங்கள் ஜோசபின் தானே, உங்களுக்கு வகுப்பு எடுத்தலில் முன் அனுபவம் உண்டா?" என்று பதட்டத்துடன் வினவினார் என் எதிராளி பெண். அது இல்லை என்பது தான் என்னுடைய பதட்டமே. நான் வெளியில் காட்டி கொள்ளாது ஆமாம் சிறிய காலம் என்று மொழிந்து நீங்கள் எந்த கல்லூரியில் பணி புரிகின்றீர்கள் என்றேன். அவர் கூறிய கல்லூரியில் எங்கள் துறையை சேர்ந்த ஒரு தம்பதி இருப்பது எனக்கு தெரியும். இருப்பினும் வம்பை விலைகொடுத்து வாங்க வேண்டாம் என எண்ணி மிதமான சிரிப்புடன் அமைதியாக நின்று கொண்டேன். அவர் என்னை விட்ட பாடில்லை உங்களை எங்கள் கல்லூரியில் வேலை பார்ப்பவருக்கு தெரியுமாமே உங்களுக்கு அவர்களை தெரியுமா எந்த வருடம் முடித்தீர்கள் என்று புலனாய்வுத் துறை போன்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார். எத்தனை பேர் வேலைக்கு தேவை என்பது தெரியாது அவருக்கு ஏற்கனவே வேலை உள்ளது, இருந்தும் அவரும் முகம் சிவந்து என்னையும் நீல நிறம் ஆக்குகின்றார். இதே போல் பலர் தங்கள் போட்டி, வெற்றி வெறியால் கொள்ளும் பதட்டம் அவர்களை மட்டும் அடையாது பக்கத்தில் இருப்பவர்களையும் பதட்டத்தில் தள்ளுவது உண்டு!



1998 ல் ஒரு தனியார் ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் 4 பெண்களில் ஒருவராக நானும் வலியை தாங்கி என் முதல் குழந்தையின் வரவுக்காக காத்திருக்கின்றேன். அதில் என் வலப்பக்கம் ஒரு பெண் இளம் பெண்; மிகவும் இக்கட்டான சூழலில் அனுமதிக்கப் பட்டிருந்தார் மாப்பிள்ளை உயர்பதவியிலுள்ள கறுப்பு தமிழன் அவருக்கு வெளுத்த பெண் வேண்டும் என்றது வாழ்க்கை லட்சியம் என்பதால்; 18 வயது நிரம்பாத சிவப்பு நிறம் கொண்ட அழகான சிறு மலையாளப் பெண்ணை மணம் முடித்து ஆஸ்பத்திரியில் அனுமத்திருந்தார். அவர் பக்கத்தில் திடகாத்திரமான மலையாள பெண்குட்டி, பக்கத்தில் வேறு யாரோ 2 பெண்கள் இரண்டாவது பிரசவத்திற்க்கு என . எங்கள் 3 பேருக்கும் முதல் பிரசவ அம்மாக்கள் என்பதால் தனி கவனிப்பு இருந்தது எங்களுக்கு. ஒவ்வொரு முறை செவிலியர் பரிசோதனை கழிந்து செல்லும் போது இப்பெண் ஒரு வித பதட்டம் பொறாமையுடன் உங்களுக்கு நோவு வந்து விட்டதா என்று விசாரித்து கொண்டே இருப்பார். நானோ 3 நாட்களுக்கு முன்பே அனுமதிக்கப் பட்டு ஊசி இட நரம்புகள் இல்லாத அளவுக்கு மருத்துவ சேவை வாங்கி கொண்டிருக்கின்றேன். சிறுத்தை படம் நாயகன் போல் 'வலியிலும் சிரிப்பு உதடுகளில் மறையாது இருக்க வேண்டும் ' என்ற எண்ணத்தில் முகம் வாடாது கருத்தாக இருக்கும் என்னிடம் இப்பெண்ணின் கேள்வி பதட்டத்தை கொடுக்க ஆரம்பித்தது. இப்படியாக தங்களை மட்டும் நோக்காது பக்கத்தில் இருப்பவர்களையும் இரத்த கொதிப்புக்கு அழைத்து செல்லும் இரத்ததின் இரத்ததமான இந்த உடன் பிறவா எங்கள் இனத்தை பற்றி என்ன சொல்ல ?

27 Feb 2011

29 Jan 2011

சூத்திரம் போன சுப்பன்!


எங்க ஊரில் நல்ல காதல் ஜோடியை விட கள்ள காதல் ஜோடி பெருகியிருந்தது. 


எளிய மனிதர்களுக்கு உணவு, உறவிடம், கல்வி என தேவையுள்ளவை எல்லாம் மிக இக்கட்டான; போராட்டமான சூழலில் பெறபட்டபோது ‘காதல்’ தான் மிக எளிதாக மலிவாக பெறப்படுவதாக இருந்தது .

மேலும் ஆண்கள்  சம்பாதித்து பெண்களை காப்பாறும் சூழல் இருக்கவில்லை. பெண்களும் ஆண்களை போன்றே பல பொழுதும் அவர்களை விட ஊதியம் பெறும் நபராகவே இருந்தனர். வீட்டு சண்டையில் கூட தன்னை அடிக்கும் ஆண்களுக்கு மறு கன்னத்தை காட்டாது, அடிக்கும் கணவனின் மறு கன்னத்தை பதம் பார்க்கும் பெண்களும் இருந்தனர். கள்ள காதலிலும் பொது உடமை கொள்கையை பின்பற்றும் சுதந்திரமும் இருந்தது. காங்கிரஸ்காரர்கள் பெண்களை விற்று பெண் வியாபாரம் செய்தபோது, கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சியிலுள்ள பெண்களை தங்கள் பொது உடமையாகவே  நோக்கினர் என்பதும் ஒரு சொல்லப்படாத உண்மையாக இருந்தது.


                            `சில கேரள தமிழ் தொழிலாளரகளான ஆண்கள், தங்கள் ஊர் சென்று திரும்பும்போது ஒரு புது பெண்ணுடன் அதாவது அடுத்தவன் மனைவியையும் கொண்டு வந்து விடுவதும்  உண்டு.  கேரளா உடை, நடை, பாவனை கண்டு பல பெண்கள் தங்கள் வீடு வசதி மட்டுமல்ல மூன்றும் நாலு குழந்தைகளை கூட விட்டு விட்டு கையில் கிடைத்த நகை நட்டுடன் வந்து விடுவார்கள்.

                            எங்கள் வீட்டிற்கு பெயின்டு அடித்த, காலை இழுத்து இழுத்து நடக்கும் கந்தன் நினைவிற்கு வருகின்றார்.  அவர் அடுக்களை பெட்டியின் கதவில் வரைந்த ஒரு சித்திரம், ஓடும் நதியும் அதன் கரையில் முயல் காரட் தின்பதும், இருவர் அதன் கரையில் இருந்து மீன் பிடிப்பதும் ஒரு பெண் புல்லு கட்டுடன் அவ்வழியாக நடந்து போய் கொண்டிருப்பது போலவும் பல கோடுகளை அங்கும் இங்குமாக இட்டு சேர்த்து வரைந்த  படம்  இன்றும் நினைவில் நிற்கிறது.  

                    அவருக்கு ஒரு மனைவியும் ஒரு பெண், ஆண் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர் மனைவி எப்போதும் இஞ்சி தின்ற குரங்கை போன்ற முகத்துடன்  இருந்தாலும், நல்ல வேலை செய்யும் உழைப்பாளி மட்டுமல்ல அழகான பெண்மணியும் கூட! கந்தன் வேலைக்கு போகாது டிமிக்கி கொடுப்பதற்கு  சண்டையிட்டு கொள்வதும் கண்ட மேனிக்கு திட்டுவதும் அக்காவின் சகஜமான குணம்.  ஒரு முறை கந்தன் தன் மனைவியிடம் பெயின்ட் அடிக்க என கம்பத்திற்கு சென்று விட்டார்.  அக்காவும் பெரிதாக ஒன்றும் நினைக்க வில்லை. வேலை முடிந்தவுடன் பணத்துடன் வருவார் என்று ஒரு வருடம் அல்ல இரண்டு வருடம் காத்திருந்தார். 

                            ஒரு நாள் பொங்கலுக்கு  வந்த ஐய்யப்பன், புது பெண்டாட்டி, இரண்டு பெண் குழந்தைகளுடன் பொங்கல் படியுடன் பம்மி பம்மி தன் வீடு வந்து சேர்ந்தார். அதிற்சியடைந்த மனைவி   ஐயப்பனிடம்  அதன்பின் பேசவே இல்லை,  மட்டுமல்ல முகத்தில் கூட முழிக்கவே இல்லை. ஆனால் அக்குழந்தைகளை தன் குழந்தைகள் போன்று ஏற்று கொண்டார்  எல்லா விடுமுறைக்கும் கம்பத்தில் இருந்து எஸ்டேட் வந்து விடுமுறை நாட்களை கழிக்கவும் அனுமதித்தார்.  இதுவும் ஒரு விந்தையான உண்மையாக தான் இருந்தது .
  

                  அதே போல் தான் “சூத்திரம் போன சுப்பன்”னின்  தம்பி தமிழகத்திலுள்ள தன் சொந்த ஊருக்கு வந்து திருப்பிய போது, மூன்று குழந்தைகளின் தாயையும் தள்ளி கொண்டு வந்து விட்டான்.  நகை எல்லாம் விற்று தீர்ந்ததும், தேங்கி இருந்த காதலும் நீர்ந்து போனது.  தன் தம்பி வீட்டிற்கு வந்த சுப்பன்; வாடி வதங்கிப் போன  இப்பெண்ணின் நிலையை கண்டு கலங்கி, “கவலைப்படாதே என் தம்பி உன் வாழ்க்கையை கெடுத்து விட்டான் என கவலைப்படாதே என்னுடன் வா, உனக்கு நான் வேலை வாங்கி தாரேன்” என சுப்பன் தான் வேலை பார்த்த எஸ்டேட்டுக்கு அழைத்து வந்து; தன்  வீட்டு  வராந்தாவில் தங்க இடம் கொடுத்து வேலையும் வாங்கி தந்துள்ளான்.  

                         

   
ஒரு நாள் ஆசை வார்த்தை கூறி "சினிமாவுக்கு போவோம்" என டவுணுக்கு அழைத்து வந்தவன், அவள் மனம் குளிர ஆசை ஆசையாக சேலை வாங்கி கொடுத்து சினிமாவுக்கும் அழைத்து  சென்றுள்ளான்.  உச்ச கட்ட அன்பில்  தேயிலை காட்டுக்குள் இருந்து பேசிவிட்டு செல்லாம் என  அழைத்துள்ளான். ஏற்கனவே சூடு பட்டவளாக இருந்தவள் தன் பாதுகாப்பிற்கு என  ஒரு கத்தியும் தன் வசம் வைத்திருந்துள்ளாள். இதை எதிர் பார்க்காத சுப்பனின் “அதை” அறுத்து அவனிடமே கொடுத்துவிட்டு அவள் போலிஸ் ஸ்டேஷனுக்கு மிக லாவகமாக நடந்து வந்து சேர்ந்தாள். 


                உயிர் வலியில் துடித்த சுப்பனோ, தன் சூத்திரத்தையும் எடுத்து கொண்டு ஓட்டமாக வந்து காவலர்களிடம் கொடுத்து விட்டு மயங்கி விழுந்து விட்டான். பின்னால் நடந்து வந்த அப்பெண் போலிஸிடம் நடந்தவற்றை மிக தெளிவாக கூறியுள்ளாள். அதிற்சியில் உறைந்து போன மலையாள போலிஸ், சுப்பனை ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றி நான்கு மணி நேரத்தில் கோட்டயம் மெடிக்கல் காலேஜ் சேர்த்துள்ளனர்.

                      பல பெண்கள் அப்பெண்ணின் செயலை பாராட்டினாலும் ‘சூத்திரம் போன சுப்பன்’  என்ற பத்திரிக்கை செய்தி பல மலையாளிகள் கேலிக்கு தமிழர்களை கொண்டு சென்றது மட்டுமல்ல, மக்கள் மத்தியில் சுப்பன் இனி வருவானா வரமாட்டானா என்ற விவாதவும் விட்டபாடில்லை . ஆனால் சுப்பன் 2-3 மாதம் பின்பு உயிர் அங்கு இல்லை என கண்டுபிடிக்க நான் உதவியாக இருந்தேன் என பெருமையாக கூறி, தான் மருத்துவ உலகிற்கு ஆற்றிய சேவையை சொல்லி மலையாளி டாக்டர்ஸ் தன்னை அருமையாக கவனித்து கொண்டார்கள் என பூரிப்புடன் வந்து சேர்ந்தான்.


                ஆண்-பெண் மத்தியில் ஒரு பயமிருக்கும் என பேச பட்டாலும், அதன் பின்பும்  காதல் கொள்ளாமலும் இருக்கவில்லை, காதல் கொண்டு ஓடி போகாதும் இருக்க வில்லை எம்மக்கள். அப்படி இருந்தால் பூமி நின்று விடாதா என்ன?