சமீபத்தில் ஸ்வீடன் நாட்டு எழுத்தாளர் பெர் லாகர்கிவிஸ்ட் (Pär Lagerkvist) எழுதிய 'பாரபாஸ்' (Barabbas) நாவலை வாசித்தேன். 1951-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற நாவல் இது. மனிதகுலம் எதிர்நோக்கும் நித்திய கேள்விகளுக்கான பதில்களைத் தனது நாவலின் ஊடாகக் கண்டறிய அவர் மேற்கொண்ட கலைத்திறனுக்காகவும், உண்மையான சுதந்திரச் சிந்தனைக்காகவும் அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.
லாகர்கிவிஸ்ட் தனது இருபதுகளின் தொடக்கத்திலிருந்து எழுபதுகளின் இறுதி வரை கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான அடிப்படைப் போராட்டமே அவரது படைப்புகளின் மையக் கருப்பொருளாகத் திகழ்கிறது.
கதைக்களம்: வெறும் 144 பக்கங்களை மட்டுமே கொண்ட இந்தச் சிறு நாவல், மிகப்பெரிய தத்துவப் பாரத்தைச் சுமந்து நிற்கிறது. திருச்சபை கற்றுக்கொடுக்கும் கோட்பாடுகளையும் கடந்து, விவிலியப் பின்புலத்தில் கிறிஸ்தவ மரபிலிருந்து பாத்திரங்களையும் உருவகங்களையும் அவர் கையாண்டுள்ள விதம் சிறப்பானது.
கிறிஸ்துவின் சிலுவை மரண விசாரணையின்போது, இயேசுவுக்குப் பதிலாக விடுதலை செய்யுமாறு யூதர்கள் வேண்டியவன்தான் பாரபாஸ். கூட்டத்தினரின் விருப்பத்தால் இயேசு சிலுவைக்கு அனுப்பப்பட, மரண தண்டனையிலிருந்து தப்பித்த குற்றவாளியான 'பாரபாஸ்' வழியாகக் கிறிஸ்தவம், கடவுள் நம்பிக்கை போன்றவற்றை ஆசிரியர் ஆய்வு செய்துள்ளார்.
இயேசுவைச் சிலுவையில் அறையக் கொண்டு செல்லும்போது, அவர் துன்புறுத்தப்படுவதையும், பின்பு அவர் உயிர்த்தெழுந்ததாகப் பெண்கள் கூறுவதையும் மறைந்திருந்து பார்க்கிறான் பாரபாஸ். விடுதலையான போதிலும், அவனால் கிறிஸ்துவின் நினைவுகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை; ஏதோ ஒரு வகையில் கிறிஸ்துவுடன் பிணைக்கப்பட்டே இருக்கிறான்.
பாரபாஸின் ஊசலாட்டம்: கிறிஸ்துவால் ஈர்க்கப்பட்டாலும், அவரைக் கடவுளின் மகனாகவோ, இரட்சகராகவோ அவனால் நம்ப முடியவில்லை. விடுதலை வேண்டித் தன்னைப் பின்தொடர்ந்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் புறந்தள்ளி, மௌனமாக மரணத்தைக் கடந்துபோன கிறிஸ்து அவனுக்கு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றார். கிறிஸ்து சீடர்களுக்காக மரிக்கவில்லை, தனக்காகவே மரித்தார் என்று அவன் நம்புகிறான்.
கிறிஸ்துவின் சிலுவை மரணம் பற்றி அவன் இவ்வாறு சிந்திக்கிறான்: "அவர் பட்ட கஷ்டங்களையும் சிலுவையையும், அந்தப் பரிதாபகரமான பிரிவையும் அவர்கள் போற்றிப் புகழ்ந்தார்கள். அதில் பரிதாபமும் துயரமும் மட்டுமே நிறைந்திருந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லையா? அவர்கள் சாவையுமா வணங்கினார்கள்? அது மிகவும் பயங்கரமானது; கொடூரமானது." இது அவனுக்கு அருவருப்பையும் வெறுப்பையும் தந்தது. கிறிஸ்தவர்களின் உளவியலைச் சரியான இடத்தில் கேள்விக்குள்ளாக்குகிறான் பாரபாஸ்.
கிறிஸ்துவைக் கடவுளாக நம்புகிறவனும், நம்பாத பாரபாஸும் கழுத்தில் ஒரே அடையாளச் சின்னத்தை (பதக்கத்தை) அணிந்து திரிவது சிந்திக்க வைக்கிறது. கிறிஸ்து சிலுவையில் உயிர் நீத்ததை நேரில் கண்ட பாரபாஸால் அவரை நம்ப முடியவில்லை. ஆனால், பாரபாஸ் மூலமாக அங்கு நடந்த நிகழ்வைக் கேட்டறிந்தவன், ஆழமாகவும் உருக்கமாகவும் கிறிஸ்துவை நம்புகிறான்.
துணைக் கதாபாத்திரங்கள்: பாரபாஸோடு தொடர்புடைய 'முயல் உதடு' (hare-lipped) கொண்ட ஒரு பெண், கிறிஸ்துவை ஆழமாக நேசிக்கிறாள். பின்னர், அவள் சீசரை நிந்தனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கல்லெறிந்து கொல்லப்படுகிறாள். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இயலாத கிறிஸ்துவுக்காக அவள் கொல்லப்படுவதை நினைத்து அவள் மேல் இரக்கம் கொள்கிறான் பாரபாஸ். கண்பார்வை இல்லாவிட்டாலும், செவிவழிச் செய்தியை வைத்து அவளைக் காட்டிக்கொடுத்த குருடனை அவன் கத்தியால் குத்திக் கொல்கிறான். அவள் உயிரோடு இருந்தபோது அவள் காட்டிய அன்பைப் புறக்கணித்தவன், அவள் இறந்த பின்பு அவள் மீதான மரியாதை மற்றும் மறைத்து வைத்திருந்த பிரியத்தின் நிமித்தம் அவளது உடலை எடுத்து அடக்கம் செய்கிறான்.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, சங்கிலியால் பிணைக்கப்பட்ட மற்றொரு அடிமையான சஹாக் (Sahak) என்ற தீவிர கிறிஸ்தவ விசுவாசியுடன் பாரபாஸ் வாழும் சூழல் உருவாகிறது. இருவரும் கழுத்தில் ஒரே பதக்கத்தை அணிந்திருந்தாலும், அதன் பொருளை இருவரும் வெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றனர். ஒரு பக்கம் 'கிறிஸ்துவின் அடையாளம்' என்றும், மறுபக்கம் 'சீசரின் அடையாளம்' என்றும் பாராட்டி மதிக்கிறான் சஹாக். ஆனால் பாரபாஸுக்கோ அத்தகைய உணர்வு ஏதுமில்லை. அதிகாரிகள் அவர்களைச் சீசரின் முன் கொண்டு நிறுத்தும் போது, கிறிஸ்துவின் சாட்சியாக நண்பன் சஹாக் உயிர் விடுகிறான்; ஆனால் பாரபாஸ் கிறிஸ்துவை மறுதலித்துத் தப்பித்துக்கொள்கிறான்.
முடிவும் தத்துவமும்: இறுதியாக, ரோமானிய ஆளுநரின் நம்பிக்கைக்குரியவனாக ரோம் செல்கிறான். அந்தப் பட்டணத்தில் நடந்த பெரும் தீ விபத்திற்குக் காரணமான கிறிஸ்தவர்களுடன் பாரபாஸும் கைது செய்யப்படுகிறான். கிறிஸ்து உலகை மறுசீரமைக்க வருகிறார் என்று தவறாக எண்ணி, அவனும் தீ வைப்பதில் இணைகிறான். இறுதியில் கிறிஸ்தவர்களோடு சேர்த்து அவனும் சிலுவையில் அறையப்படுகிறான்.
"சீசர்தான் தீயிட்டுவிட்டு, கிறிஸ்தவர்கள் மீது அநியாயமாகக் குற்றம் சாட்டினார்; கிறிஸ்துவுக்கு அல்ல, சீசருக்குத்தான் நான் உதவினேன்" என்கிறான் பாரபாஸ்.
"எங்கள் குருநாதர் ஆத்துமாவுக்குப் புனிதத் தீ இடுவாரே தவிர, நகரங்களுக்குத் தீ இடமாத்தார்" என்ற ஆன்மீகச் சிந்தனையை விட்டுச் செல்கிறது
இந்த நாவல் கடவுளின் கிருபை, கடவுள் மேலுள்ள நம்பிக்கையின் தெளிவற்ற நிலை மற்றும் தியாகம் போன்ற கருப்பொருள்களைக் கையாள்கிறது. இது ஒரு "தலைகீழ் நற்செய்தி" (upside-down gospel) போன்றது. மீட்பிற்குப் பதிலாக மறுப்பையும், தெளிவிற்குப் பதிலாகக் குழப்பத்தையும் பாரபாஸ் அனுபவிக்கிறான்.
ஆரம்பகாலக் கிறிஸ்தவர்கள் பொதுவான நம்பிக்கை காரணமாகக் குழுக்களாகச் சேர்ந்தே காணப்பட்டனர். தங்களைச் சாராதவர்கள் யாரையும் அருகில் விட அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் சகோதரத்துவம் பாராட்டி, அன்பு விருந்துகள் நடத்தி, ஒரே குடும்பம் போல வாழ்ந்தனர். "ஒருவரை ஒருவர் நேசியுங்கள்" என்று போதிக்கும் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தங்களைச் சாராதவர்களை அவர்கள் நேசித்தார்களா என்று சொல்வது மிகவும் சிரமமான காரியம் என்கிறான் பாரபாஸ்.
நவீனப் பொருத்தம்: வாழ்க்கையின் இருத்தலியல் (Existentialism) சார்ந்த அபத்தங்களுக்கும், சீரற்ற நிலைக்கும் இடையே ஒரு நோக்கத்தைக் கண்டறிய பாரபாஸ் போராடுகிறான்.
சிலுவையிலிருந்து தப்பித்தாலும், தான் உயிர் பிழைத்ததற்காக அவன் அடையும் குற்ற உணர்வு (survivor's guilt) மற்றும் அதிர்ச்சி அவனைச் சிதைக்கிறது.
ஒரு அடக்குமுறை கொண்ட அரசியல் அமைப்பு, மனிதர்களின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் எப்படிச் சிதைக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. உதாரணமாக, ஒருவன் நான்கு படி மாவைத் திருடித் தின்றான் என்பதற்காக, அவனது ஒரு கண்ணைத் தோண்டி எடுத்துவிட்ட கொடூரத்தைச் சான்றாகக் கூறலாம்.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய நாவலாக இருந்தாலும், இது இன்றும் நவீனமாகச் சிந்திக்க வைக்கிறது. தனிமை, வன்முறை, அரசியல் ஒடுக்குமுறை மற்றும் அடையாளத் தேடல் போன்ற இன்றைய சிக்கல்களையும் இது பேசுகிறது.
சஹாக்கைச் சித்திரவதை செய்ய ஆளுநர் உத்தரவிடவில்லை எனினும், அதிகாரிகள் வழக்கமாகச் செய்வது போலவே சித்திரவதை செய்துதான் அவனைச் சிலுவையில் ஏற்றினார்கள். இறுதியில், பாரபாஸ் தனியாகச் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தான். இன்னமும் அவனுக்கு உயிர் இருந்தது. வாழ்நாள் முழுவதும் தான் பயந்து நடுங்கிய சாவு நெருங்கியதை உணர்ந்ததும், அவன் தன்னைச் சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்து, அதனிடம் பேசுவது போலச் சொன்னான்: "உன்னிடமே என் ஆத்துமாவை ஒப்படைக்கிறேன்." யாருடைய மரணத்தால் அவனுக்கு விடுதலை கிடைத்ததோ, அதே மரணத்தை அவனும் தழுவுகிறான்.
விமர்சனம்: க.நா. சுப்ரமணியம் அவர்களின் மொழிபெயர்ப்பில், அகஸ்த்துமத்தாக, ருசுக்கள், ருசுவித்து, துரியம் போன்ற வழக்கொழிந்த சொற்கள் மலிந்து கிடக்கின்றன; இது வாசிப்புக்குத் தடையாக உள்ளது. பல இடங்களில் வார்த்தை அமைப்பு தமிழ் இலக்கிய நடையில் இல்லை என்பதும் ஒரு குறைதான். மற்றபடி, சிந்திக்க வைக்கும் சுவாரசியமான வாசிப்பை இது தருகிறது. மதம், சமூகம் ஆகியவற்றில் மனிதனின் இடம் என்ன என்பதை மதங்களை விமர்சிப்பவர்கள் இன்றும் இந்நூல் வாயிலாகப் புரிந்துகொள்ளலாம். சந்தியா பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பியக் கிறிஸ்தவர்களால் சுதந்திரமாகத் தங்கள் மதத்தை, நம்பிக்கையை, கடவுளைப் பகுத்தாய்வு செய்து எழுத முடிகிறது. ஆனால், அரைகுறை இந்தியத் தமிழகக் கிறிஸ்தவர்கள் சிந்தனையே அற்ற மதவாதிகளாகவும், மத அடிமைகளாகவும் மாறி வருவதைச் சிந்திக்க வேண்டியுள்ளது. அதிலும் தமிழகக் கிறிஸ்தவ மதகுருக்கள், "அவர் நம்மோடு இருப்பது போல, நாம் அவரோடு..." போன்ற அடுக்குமொழிகள் ஊடாகத் தங்களை ரோமானிய ஆளுநர்களாகவே தற்போதும் நிரூபித்து வருகின்றனர்.

