30 Oct 2010

எனது வீடு?

 எனக்கு திருமணம் நிச்சயம் ஆன போது, என் வீட்டை பிரிந்து செல்வதை நினைத்து தான் மிகவும் கவலை கொண்டேன்.

  விடுதியில் தங்கி படித்ததை தவிர்த்து வீட்டைவிட்டு பிரிந்ததே இல்லை. சிறு பிள்ளையாக இருந்த போது அத்தை வீட்டிற்கு ஆசையாக செல்வோம். அத்தை ஒரு ஜாலி பேர்வழி . என் அம்மா போல் இறுகிய முகம் இல்லாது எங்களுடன் நரி – கோழி, போலிஸ்-கள்ளன்  விளையாட்டுக்கு வருவார்.  நிறைய தின் பண்டங்கள் செய்து தருவார், மேலும் நல்ல கோழியாக பிடித்து சமைத்து தருவார். இருப்பினும் தூங்கும் நேரம் என் வீடு நினைவு வந்து அழுதுள்ளேன்.


எனக்கு 3 வயதாக இருந்த போது அப்பா எங்கள் வீட்டை வாங்கியதாக
கேள்விபட்டுள்ளேன்.  பின்பு ஒவ்வொரு அறையாக கட்டி பெரிது படுத்தினார்கள். முன் பக்கம் கடை, கடையோடு சேர்ந்துள்ள பின் அறையில் கூரையிலிருந்து வெளிச்சம் வருவதர்க்கென ஒரு கண்ணாடி பொருத்தபட்டிருக்கும் அந்த அறை நடுபகுதியில் இரு தூண்கள் உண்டு. அதில் சேட்டைக்கார தம்பியை கட்டி வைத்து, அம்மா அடித்தது நினைவுள்ளது. 

முன் பக்க அறையில் யேசுநாதரின் படம், ஜெபம் செய்யும் போது மெழுகுவத்தி பொருத்தி வைக்கும் நிலை,  பேயை துரத்தும் மிக்கேல் சம்மனசின் படம் என  பக்தி மயமாக இருக்கும் எங்கள் வீடு.  


 சுவரில் எங்கள் உறவினர்கள் மற்றும் எங்களுடைய புகைப்படங்கள் வரிசையாக  ஆணியறைந்து  மாட்டப்பட்டிருந்தது.  மேல் கூரை ஓடு என்பதால் கார்டு-போர்டால் தட்டி போன்று அடிக்கப்பட்டிருந்தது. விடுமுறை நாட்களில் எங்களுக்கு விளையாடும் கூடாரம் மட்டுமல்ல பெருச்சாளி, பூனை போன்றவை குட்டி போட்டு பெருக்கவும் அவ்விடத்தை பயன்படுத்தியது.
  
மழைவேளைகளில் சிறு பானைகளில் தண்ணிர் பிடிக்கும் அளவுக்கு, வீட்டின் அறைகள் ஒழுக ஆரம்பித்ததால் நான் 8 வகுப்பு படிக்கும் வேளையில் எங்கள் வீட்டை இரண்டு நிலையாக கட்ட அப்பா முடிவெடுத்தார்.

முன் பக்கம் கடை, பின் பகுதியில் வரவேற்பறை, அடுக்களை, சாப்பாட்டு அறை;  மேல் நிலையில் படுக்கை அறைகளும் குளியல் மற்றும் கழிவறையும் இருந்தது. 

 மொட்டை மாடியில் வித விதமான செடிகள், கிளிகள், முயல் என வளர்த்தோம். 

வீடு கட்டிமுடித்தவுடனே எனக்கு என ஒரு அறையை எடுத்து கொண்டேன்.  நெருங்கிய உறவினர்கள் வரும் போது எனது அறையை கொடுக்க வேண்டி வருவது தான் மிகப்பெரிய சோதனையாக இருந்தது.

அடுக்களையில் விறகு அடுப்பு இருந்தது.  விறகு அடுப்புக்கு மேல் நேத்திர பழக்குலை, ஆட்டு கால், உறியில் கருவாட்டு மீன் கட்டி போட்டிருப்பார்கள். எங்கள் பகுதி குளிர் பிரதேசம் என்பதால் அடுப்பில் தீயும்  பானையில் வெந்நீரும் எப்போழுதும்சேர்ந்தே இருக்கும்.  எழுந்த உடன் பூனையை போன்று அடுப்பு கரையில் கொஞ்சம் நேரம் சுருண்டு இருந்து தீ காய்ந்த பின்பு தான் மற்று வேலைக்கு நான் செல்வேன்.

அப்பாவுக்கு தேக்கு மர சாமான்கள் மேல் அலாதி பிரியம் இருந்ததால் எங்கள் வீட்டிலுள்ள சன்னல் – கதவுகள் கலை நயத்தோடு டிசைன் செய்ய பட்டிருக்கும். இப்பொருட்களை சுத்தமாக  பாதுகாப்பது என் பொறுப்பாக இருந்தது. சுவரில் அழுக்கில்லாது பார்த்து கொள்வோம். மாமி ஊரில் இருந்து வந்து தும்மி தும்மி சளியை சுவரில் தேய்த்து வைப்பதும் பின்பு அவர் சென்றது நாங்கள் கழுவதும் நினைவில் உள்ளது.

எனது முதல் மகன் பிறக்கும் வரை என் அறை எனக்கு என்றே இருந்தது. பின்பு குழந்தை நலன் எனக் கூறி வேறு ஒரு அறை தரபட்டது.   எ
தம்பியின் திருமணத்தின் போது வீட்டின் அமைப்பை மாற்றி அமைத்த வேளையில் எனது அறை முழுதுமாக பறிபோனது.

 எங்கள் மாட்டு பெண் வந்த சில நாட்களில் ஒரு பெரும் சுழல் காற்று எங்கள் வீட்டை தாக்கியது.  எனது பெற்றோர் கூட அந்த காற்றில் அடித்து ஒதுக்கப்பட்ட ஒரு குப்பை போன்று ஒரு மூலையில் முடக்க பட்டபோது, வாழ வந்தவர்களுக்கு வழிவிடும் சூழலில், வாழ்ந்து வந்த நானும் எனது தங்கையும் வீட்டிற்கு வெளியில் தள்ளபட்டோம்.  பின்பு வீடு என்பது எண்ணங்களிலும் கனவுகளில் மட்டும் ஒதுங்கியது.

இப்போழுதும் விடுமுறைகளுக்கு வீட்டிற்கு  செல்லும் போது, முன்பு விரும்பாத விருந்தாளிகளுக்கு கொடுக்கப்படும் அறை எங்களுக்கு தரபட்டதை  கண்டுகொண்டோம்.  

எங்கள் வீட்டில் ஒரு முகம் பார்க்கும் ஆளுயர கண்ணாடி  ஒன்று இருந்தது. அந்த கண்ணாடியை நோக்கி நாங்கள் அலங்காரம் செய்ததை விட அக்கண்ணாடியை நாங்கள்  அலங்காரம் செய்ததே மிகையாக இருந்திருக்கும்.  விபூதி இட்டு தேய்த்து ,பேப்பரால் துடைத்து மினு மினுப்பாக வைத்திருப்போம். அதன் அறைகளை பங்கு இடுவதில் எனக்கும் என் தங்கைக்கும் ஒரு மகாபாரதப் போரை நடக்கும்.  அந்த காண்ணாடி இப்போழுது எங்கள் வீட்டு மூலையில் அரவணப்பு அற்று  முடக்க பட்டபோது இன்னும் வேதனையாக இருந்தது.

மொட்டை மாடியில் துணி காயப்போடும் அசைக் கம்பியை இணைக்கும் ஒரு இருப்பிடம் இருந்தது. நான் படிப்பது, எனது பட்டணத்தை பார்த்து ரசிப்பது என என் உலகமே அதை சுற்றி இருந்தது. நாலு புறவும் தேயிலை தோட்டங்களால் சூழபட்ட எங்கள் பட்டணம், வீட்டிம் முன் பக்கம் கோட்டயம்–மதுரை ரோடு,  நாங்கள் செல்லும் ஆலயம், படித்த தொடக்க பள்ளி, மேல் நிலைபள்ளி, பேருந்து நிலையம்,  மழை வேளைகளில் பெருக்கெடுத்து ஓடும் எங்கள் பெரியார் நதியையும்  காணலாம்.
சமீபத்தில் சென்றபோது எங்கள் வீட்டு சொந்த வாரிசு அந்த கம்பியில் தொங்கி நின்று கொண்டு இது என்னுடையது அத்தை என கூறிய போது எனது அம்மாவும் சிரித்து கொண்டு எல்லாம் உன்னுடையது தான் என கூறிய போதும் மனதில் ஒரு முலையில் ஒரு முள் குத்துவதை போன்று உணர்ந்தேன். 
இப்போழுது என் வீட்டின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது போல் தோன்றுகின்றது, இல்லை  மறக்க ஆரம்பித்து விட்டேன்.  சில வேளைகளில் பழைய புகைப்பட ஆல்பமே சில நினைவுகளை மனதில் கொண்டு வருகின்றது.

 13 வருடம் முன்பு பிரிய மனம் இல்லாது இருந்த , என் உயிர் மூச்சாக இருந்த என் வீடு இன்று எனக்கு அந்நியமாகப் படுகின்றது.  நான் எனது குழந்தை பருவத்தில் கண்ட இன்பமான என் வீடு இன்று எனக்கு விருந்து வீடாகி விட்டது. 

இப்போழுது எங்களது வீட்டு முற்றத்தில் இருந்து கொண்டு, என் அறை சன்னல் வழியாக எங்கள் தென்னை மரம், மாமரம், பிச்சியை கண்டு கனவு காண ஆரம்பித்துள்ளேன்!!.










11 Oct 2010

கன்னியாகுமாரி செல்வோமா?

கன்னியாகுமாரி   எத்தனை முறை சென்றாலும் நம் அலுக்காது வரவேற்கும் அழகிய கடற்கரை.  எனது கணவர் அவருடைய இந்து  நண்பர்களுடன் ச்ல்ன்லெல்ல மிகவும் விரும்பும் இடம் ஆகும். என்னவரின் அப்பா சொந்த ஊர் கன்னியா குமாரி பக்கம் என்பதால் கன்னியாகுமாரி மேல் கொஞ்சம் பாசம் அதிகமே.


 திருவள்ளுவர்  அனுதாபிகள் என்னை அடிக்க வரலாம். ஆனால் என்னை போன்றவர்களின் கடல் காணும் ஆசையை திருவள்ளுவர் சிலையால் தடை செய்து விட்டனர் என்பதே உண்மை. நாகர்கோயில் செல்லும் வழியில் இருக்கும் பெரும்   பாறைகள் "குண்டப்பன்" மாதிரி நிற்பதே கவனித்துள்ளேன் . இதை சிற்பியால் கொத்தி வள்ளுவரும், பாரதியாருமாக வடிவமைத்திருக்கலாம். 



இன்று  சிவாஜி என்று கேட்டவுடன் சிவாஜி நினைவு வராது பல வேளைகளில் குச்சி ஸ்ரேயா,  மொட்டை ரஜனி தான் வருகின்றனர்.  திரை உலகில் 'சிவாஜி' என்ற படம் வழியாக சிவாஜி என்ற  மாபெரும் நடிகரின் பெயர், புகழ் எல்லாம் சாயம் பூசப்பட்டது போன்று திருவள்ளுவர் சிலையால் விவேகானந்தப் பாறையில் மவுசு இழந்து உள்ளது.   பிரசித்தி பெற்ற விவேகானந்த தியான மண்டபம்  இப்போழுதோ மலை அருகில் நிற்கும் சிறு மான் போல் காட்சியளிக்கின்றது. இருப்பினும் உலகு  எங்குமுள்ள மக்கள் சூரிய உதயம் காண கன்னியாகுமாரியை நோக்கி படையெடுக்க காரணமாகும் இயற்கையின் தலைவா "சூரியன்" உனக்கு ஒரு நமஸ்க்காரம்!!!

இங்கு விற்கும் பொருட்கள் விலை அதிகமே.  தின் பண்டங்கள் அல்வா போன்றவை வயறு சுத்தம் செய்யும் மருந்து போல் பயண்படுத்தலாம்.
சிப்பிகள் துணி மணிகள் வெளிநாட்டு பயணிகளுக்கு என தனி விலையுடன் விற்க படுகின்றது. இருப்பினும் கைவினை பொருட்கள் அழகுடன் காட்சி தருகின்றதை காணலாம்.

மூன்று கடல்கள்  சங்கமம் ஆகும் பகுதி இருப்பதால் இந்து சகோதரர்கள் மத்தியில் கன்னியாகுமாரி என்றும் கன்னி போல் விளங்குகின்றது. எனது கணவரின் நண்பர்களும் தண்ணீரை தலையில் தளித்து ஜெபித்தாக கூறினார். 

10 Oct 2010

4 Oct 2010

திருட்டு முதலாளிகள்.....

                                                                                                                                                     நாடு வளம்பெற மக்களுக்கு தொழில் வாய்ப்பு பெருகும் என ஒரு கூற்றுண்டு. ஆனால் போல் சமீப காலமாக தமிழகத்தில் எங்கு நோக்கினும் உழவர் சந்தை என்பது போல் வேலை வாய்ப்பு சந்தை என ஒன்று நடத்துகின்றனர்.  அரசியல்வாதிகள் வேறு வந்து,  வேலை தருவதை சும்மா த்ர்மத்திற்க்கு பிச்சை போடுவது போல் பேசி செல்கின்றனர். ஆனால் இதன் உண்மை நிலைவரம் கண்டால் பரிதாபமே.                                                                                                                              எங்கள் பகுதியில் ஒரு துப்புரவு தொழிலாளிக்கு ஒரு கழிவறைஐ சுத்தம் செய்ய 300 ரூபாய் தர வேண்டும். அதே போல் தோட்டம் சுத்தப்படுத்த 250 ரூபாய், ஒரு கொத்தனாருக்கு 300-500 ரூபாய், ஒரு வீட்டு பணிபெண்ணுக்கு ஒரு வாளி துணி துவக்க 50 ரூபாய், ஆனால் ஒரு  பட்டதாரி ஒரு மாதத்திற்க்கு 3-4 ஆயிரம் ரூபாய்க்கு அடிமையாக எளிதாக கிடைப்பான். அவனை வைத்து மேலாளருக்கு காப்பி வாழ்கி வர வைக்கலாம்; முதலாளி அம்மா  துணி இஸ்திரி கொடுத்ததை கூட வாங்கி வர வைக்கலாம்.                                                                                                                 ஆறு மாதம் முன்பு நடந்த வேலை வாய்ப்பு சந்தையின் மறு நாள் தொடங்கி இளம் பெண்கள் 3- 4 பேராக திருநெல்வேலி கார்ப்பரேஷன் எல்லையோரமுள்ள எங்கள் பகுதிக்கும் படயெடுத்தனர் பம்பு செட்டு, மின் துடைப்பம் போன்றவை விற்பதற்க்காக. வீணாபோன வெயிலில் பேசக்கூட திராணியற்று மேடம்,மேடம் என கூவி அழைத்து நிற்பதை பார்க்க எங்கள் ஊர் கீரக்கார அக்காவை விட பரிதாபமாக இருந்தது.                                                                                                                      
                                                                                                                                       முதுகலை பட்டம் பெற்ற என்னுடைய நண்பர்கள் 4 ஆயிரம் ரூபாய்க்கு 2 வருடமாக ஊடகத்துறையில் வேலை செய்து வருகின்றனர்.  அவர்கள் கூறுவது என்னவெற்றால் நாங்கள் படித்த படிப்புற்க்கும் வேலைக்கும் சம்பந்தமேயில்லை. எங்களை மனிதர்களாக கூட மதிப்பதில்லை ஊதியம் பெறும் அடிமைகளாகவே பார்க்கின்றனர் என்பதே.                                                                                                                                                                        ஒரு முறை எங்கள் பல்கலைகழகத்திற்க்கு வேலை  தருவதாக வந்தவர்கள் ஒரே வேலைக்கு சென்னை என்றால் ஒரு ஊதியமாம், திருநெல்வேலியென்றால் அதன் அரைப்பகுதி ஊதியமாம்.  உண்மையில் சென்னையை விட பொருட்கள் இங்கு விலை அதிகமாகவே உள்ளது. இங்குள்ள ஆசிரியர்களுக்காகவே விலைஐ அதிகமாக வசூலிக்குகின்றனர்.  மேலும் தமிழகத்திற்க்குள்ளே சென்னை தமிழர்களுக்கு ஒரு நியாயம் மற்ற தமிழர்களுக்கு ஒரு நியாயம் என்றால் என்ன சொல்ல?                                                                                                                                                                                      எனது கணவர் 3 வருடம் முன்பு ஒரு கனேடிய கணக்கு நிறுவனத்தில் தணிக்கையாளராக (internal auditor)பணிபுரிந்தார்.  இங்குள்ள அலுவலகமும்  கனடாவிலுள்ள அலுவலகவும் இணைந்து வேலை செய்யும். அங்குள்ள ஒரு நபருக்கும் தரும் 2000 டாளர் வைத்து இங்கு 10 பேருக்கு ஊதியம் தந்தனர்.  தென் தமிழக முதலூர் என்ற கிராமத்தை  சேர்ந்த முதலாளி ஒவ்வொரு முறை வரும் போதும் ஊதியம் உயரலாம் என எதிர்பார்த்திருப்பார்கள். அந்த முதலாளியோ வாய்க்கு கனடா நாட்டு மிட்டாய் , தலைக்கு போட தொப்பி, போட்டு தூங்க டீ ஷர்ட் கொண்டு கொடுப்பார். போவதற்க்கு முன்பு ஊழியர்களை அழைத்து ஒரு உயர்ரக உணவகத்தில் உணவு வாங்கி தருவார்.  பின்பு விடைபெரும் வேளையில்  தற்போது உலகளவில் நிதிநிலை மோசமாக உள்ளது.  கடவுள் அனுமதித்தால் அடுத்த முறை ஊதியம் உயர்த்தபடும் என கூறி செல்வார்.அவ்வாறே மூன்று வருடம் ஓடியது.  வேலை நேரவும் மாலை 5 தொடங்கி காலை 2 வரை, பின்பு காலை 9 முதல் மதியம் 2 வரை. போதாதற்க்கு கண்காணிக்கும் காமரா, உளவு சொல்வதற்க்கு என்றே முதுகெலும்பில்லா சில அலுவலர்கள் மேல்ப் படியாக முதலாளியின் இந்திய உறவு கண்காணிகள் என பட்டயை தீட்டுவார்.  இந்தியா  உறவின- முதலாளிகளின் கொட்டகம் தாங்காது.  அவர்கள் வீட்டு கைப்பிள்ளை கூட உதவி இயக்குனர், நிறுவன அதிகாரி என பதவி பெற்றிருக்கும்.  இங்குள்ள விடுமுறை கிடையாது, பஞ்சபடி,போனசு என கேட்பதே பெரும் குற்றம்!.     அதற்க்கு எங்கள் ஏழை!! இந்திய முதலாளிகள் எவ்வளவோ மேல் தாத்தா, பாட்டி செத்தால் விடுமுறையுண்டு, காதுகுத்து,கோயில் கொடைக்கெல்லாம் அனுமதியுடன் செல்லலாம், தீவாளிக்கு கொஞ்சம் பணவும் தருவர்.   சில இரக்க குணமுள்ளோர் குழந்தைகள் கல்வி கட்டனத்தைக்கூட ஏற்று கொள்வர்.(எல்லோருக்கும் பொருந்தாது,உயர் நிலை அலுவலகர்களுக்கு மட்டும், முதலாளி விருப்பினாலும் இந்த விசுவாசமான அதிகாரிகள் கீழ் நிலை வேலையாட்களுக்கு தர அனுமதிக்க மாட்டார்கள்)                                                                                                                       தற்போது இந்திய பத்திரிக்கையை எடுத்தால்  தனியார் ஊழியர்கள் கோடிகள் வாங்குவது போலவும் கலாச்சாரத்தை அளிப்பது போலவும் நம்ம ஊர் கலக்டரை விட ஊதியம் வாங்குவதாகவும் கதை எழுதுகின்றனர்.  சென்னையில் கூட தனியார் நிறுவனங்களில் 30 ஆயிரம் என எழுதிகொடுக்க பட்டிருக்கும் ஆனால் பெறுவதோ 15 ஆயிரம் மட்டுமே. பெரும் சம்பளம் பெறுவது மிக சொற்ப்ப தமிழர்களே. தமிழ் பேச தெரியாதா மலையாளம்,வட மாநிலத்தவர்க்கே மவுசு. சென்னையில் கூட வணிகத்தில் பட்டம் பெற்ற பெண்கள் 3 ஆயிரம் ரூபாய்க்கே வேலை செய்கின்றனர்.                                                                                                                                                   காற்றோட்டம் அற்ற குளிரூற்ற பட்டஅறைகளில் வேலை செய்து ஆரோக்கியமான வாழ்வை இழப்பது மட்டுமே மிச்சம்!!.

3 Oct 2010

சமரசம்

சமரசம் பற்றி விசரன் அண்ணா அவருடைய பதிவில் கதைத்திருந்தார். 




நான் மேற்கொண்ட சில சமரசத்தை பற்றி அப்போழுது ஞாபகம் வந்தது. சமரசம் செய்து கொள்வது அவ்வளவு எளிதோ மகிழ்ச்சியானதோ ஆன  செயல் அல்ல என்பதே உண்மை. துன்பத்திலும் துன்பமாக இருப்பினும் சூழல்,  கலவரம் அற்று வாழும் ஆசை, என பல காரணங்கள் நாம் சமரசப்படுத்தி கொண்டு வாழகொள்ள நிற்பந்திக்கபடுகின்றோம்.


 3 வயதிலே தம்பி தங்கையிடம் சமரசத்துடன் வாழு வேண்டிய கட்டாயத்தில் என் அம்மாவின் மடியை அவர்களுக்கு விட்டு கொடுத்தேன். வளர வளர சமரசமே வாழ்க்கையாகி போனது. அம்மாவிடம் சமரசத்துடன் வாழ வேண்டுமென்றால் அம்மா விரும்புவதுபோல் உடையணிய வேண்டும், அம்மா ஆசைப்படுவது போல் சடை கட்ட வேண்டும், அம்மா அனுமதிப்பவர்களிடம் பேச வேண்டும், அம்மா சொல்லும் போது தூங்க வேண்டும் அம்மா எழுப்பும் முன் எழும்பவேண்டும் என ஆகியது.
“வீட்டு சூழலே பார் தம்பி தங்கை வாழ்க்கையும் பார் “ என கூறியபோது கனவு காண துவங்கும் முன்னே திருமணத்திற்கும் சம்மதித்தேன்.                            
பின்பு புகுந்த வீட்டிலும் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் மாமியார் விருப்படி பூ வைக்க வேண்டும் நகையணியவேண்டும், அவர் சொல்வது போலவே  எண்ணவேண்டும் , ஏன் சாப்பிட கூட வேண்டும் என கற்று கொண்டேன்.
இப்போழுது கூட என் மகன்களிடம் சமரசம் கொள்ள வேண்டுமென்றால்  ஒருவனுக்கு என் கணிணியை தர வேண்டும் அடுத்தவனுக்கு என் அலை பேசியை தரவேண்டும்.
எங்கெல்லாம் சமரசமாக போக மனம் ஒத்துழைக்கவில்லயோ அங்கெல்லாம் பெரும் சண்டை வெடித்தது, எங்கெல்லாம் சமரசத்துடன் வாழ வேண்டுமென முடிவெடுத்தேனோ அங்கெல்லாம் வெடித்தது என் இதயமே!!!.  சமரசபட்டு வாழ்ந்ததில் வருத்தவுமில்லை, சமரசம் கொள்ளாது இருந்ததால் தனிமைப்படுத்த பட்டதில் துயரவுமில்லை.


சமரசப்படாது வாழத்துடிக்கும் மனிதர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் மட்டுமல்ல வாழும் சமூகம் மட்டுமல்லாது சில வேளைகளில் நாடுகள் கூட சேர்ந்து  ஒடுக்குவதை கண்டு என் மனம் கலவரம் கொள்கின்றது.