3 Apr 2020

திரைப்படம்: கும்பளங்கி நைட்ஸ்.Malayalam Movie!

ஒரு அழகான காயல் கிராமம். அந்த கிராமத்தில் ஒதுக்கு மூலையில் ஒரு இடிந்து- உடைந்த வீட்டில் நான்கு சகோதரர்கள் வசிப்பார்கள். சகோதரர்கள் தங்களுக்குள் சண்டை போட்டு , குடித்து கொண்டு , உழைக்காது ஏதோ ஒரு வாழ்க்கை நடத்தி கொண்டு இருப்பார்கள். அந்த வீட்டிலுள்ள இளைய சகோதரன் மட்டும் கல்லூரியில் சேர்ந்து படித்து கொண்டு இருப்பான். அவனுக்கு மட்டும் தான் தன் வீட்டு நிலையை நினைத்து வருத்தம்.

பானை நிறைய கோழிக்குழம்பு செய்து வைத்து தன் சகோதர்களுக்காக காத்திருப்பான். ஒருவன் தின்பான் இன்னொருத்தன் பேசி பேசி சண்டையிட்டு மல்லிட்டு கொண்டு இருப்பார்கள். பொங்கி வைத்தவன் மனம் நொந்து அந்த ஊர் சின்ன குழந்தைகளுடன் விளையாட போய் கொண்டிருப்பான்.

அவர்களை இணைக்க ஒரு வீடு என்ற ஒரு கட்டிடம் இருந்தாலும் மனதால் இணையாது ஆளாளுக்கு தங்களுக்கான மனநிலையில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.அந்த வீட்டு இரண்டாவது பையன் திருமணம் என்ற நீடிய பந்தத்திற்குள் செல்லும் மனநிலையில்லாது அப்போதைய உடல் தேவைக்கு ஒரு பெண் கிடைத்தாள் என நினைத்து கொண்டு ஒரு உறவிற்குள் விழ எத்தனிப்பான்.. ஆனால் அப்பெண்ணோ "நாம் ஏன் திருமணம் செய்து வாழக்கூடாது" என சிந்திக்கவைப்பாள். திருமணம் என்றதும் ஒரு நிரந்தர வேலை வேண்டும், ஒரு நல்ல குடும்பம் என்ற அடையாளம் வேண்டும், தங்களை வழி நடத்த பெற்றோர் வேண்டும் என தெரிய வரும்.

இப்படி கதை நகருகையில் அந்த வீட்டிலுள்ள மூத்த சகோதரனுக்கு ஒரு தமிழன் நண்பன் கிடைப்பான். தமிழ் நண்பன் காதல் திருமணம் செய்து வந்து கேரளாவில் வாழ்க்கை நடத்தும் பொறுப்பான மனிதன். அவன் உழைப்பில் இவனும் காலத்தையும் ஓட்டிக் கொண்டு இருப்பான். எதிர்பாராத ஒரு சம்பவத்தில் தமிழ் நண்பன் இறந்து விடுவான். கொலைப்பழி இவன் மேல் விழும். அந்த கேஸில் இருந்து விடுதலையாகி நண்பனின் மனைவியிடம் மன்னிப்பு கேட்க போயிருப்பான். மனைவிக்கு பிரசவ நாள் நெருங்கிய வேளையில் கணவரும் இறந்த நிலையில் நண்பனின் மனைவிக்கு உதவ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவான்.

குழந்தை பிறந்ததும் தன்னுடைய வீட்டுக்கு கொண்டு வரவேண்டிய கட்டாயம். ஊர்க்காரர்கள் நண்பன் மனைவியை பற்றி அவள் ஒழுக்கத்தை சொல்லி பழிப்பார்கள். ஒரு பாழடைந்த வீட்டில் மனித மனங்கள் ஒட்டாத வீட்டில் ஒரு தாயும் குழந்தையும் வந்து சேர்வது, அந்த வீட்டில் உடைந்த இதயங்களை ஒட்ட வைக்க உதவும். குழந்தை வளர வளர அச்சகோதர்கள் மனவும் சேர்ந்து மகிழ ஆரம்பிப்பார்கள்.

தங்களது தாய் தங்களுடன் இருந்தால் நல்லது என்ற எண்ணத்தில், தாயை சந்தித்து தங்களுடன் வந்து 10 நாளாவது தங்குங்கள் என கெஞ்சுவார்கள். தாய் அல்லேலூயா குழுவில் சேர்ந்ததால் தன்னால் இனி குடும்பத்தில் இணைய இயலாது, உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்று மறுத்து விடுவார்.

காதலித்த பெண் வீட்டில் அக்கா புருஷன் ஒருத்தன் இருப்பான். அவர் ஒரு சைக்கோ பேர்வழி. அவனுக்கு தன் கொளுந்தியாள் விரும்பிகிறவன் தகுதியை பற்றி நிறைய குறைகள் இருக்கும். சைக்கோ, தகப்பன் இல்லா அவ்வீட்டில் பெண்ணையும் கட்டி, அங்கைய அப்பா ஸ்தானத்தை பிடித்து அராஜக ஆட்சி செய்து கொண்டிருப்பதை திறம்பட காட்சி மொழியாக விரிந்திருக்கும்.

ஆண்கள் வசித்து வந்த கதவு சண்ணல் இல்லாத வீடு அன்பான கருதலான பெண்கள் வருகையில் எப்படியாக மாறுகிறது என அழகாக கதை சொல்லியிருப்பார்கள். தமிழ் பெண்ணை எதற்கு கொண்டு வந்தாய் என்று கேட்ட இடத்தில் இருந்து 'அண்ணி' என அவர்கள் எற்று கொள்ளும் இடம் அருமை. 

படத்தின் ஒளிபதிவின் அழகை பற்றி சொல்லவே தேவையில்லை. மலையாளப்படத்தில் பல படங்களில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் பகத் பாசில் இப்படத்தில் அக்கா கணவர் என்ற எதிர்மறை கதாப்பாத்திரமாக நடித்திருப்பார்.


வாழ்வியலின் ஆழத்தை , மனித உறவுகளின் அடிநாதமான அன்பின் அதி அழகான பாவங்களை, காதலுக்குள் இருக்கும் பொறுப்பை சொல்லிய அழகான படம். மனித உறவில் நிகழும் ஆண் பெண் உறவின் தேவையும் அதன் தாக்கவும் அதன் வழி நடத்துதலையும் சரியாக எடுத்து காட்டிய படம்.

எல்லா நடிகர்களும் தங்கள் பாத்திரங்களை அறிந்து கூடவும் குறையவும் இல்லாது சிறப்பாக அதன் தன்மையுடன் நடித்திருந்தனர். கல்யாணம் தாலி கட்டினா தானா? காதலில் காமமா அன்பா என விவாதிப்பவர்களுக்கு அனுபவமாக கிடைக்கும் படம் நல்ல உணர்வைத்தரும் படம். உறவோ, நட்போ, காதலோ , உறவுகள் மனிதனை மேம்படுத்துவதை கதையில் காணலாம்.

இந்த அல்லேலூயா கிறிஸ்தவம், பல பெண்களை தங்கள் தாய் , மனைவி என்ற கடமையை மறுதலித்து ஜெபத்தில் தங்களை ஈடுபடுத்தி குடும்ப வாழ்க்கையில் இருந்து தப்பித்து கொள்வதையும் குறிப்பிட்டுள்ளனர்.

0 Comments:

Post a Comment