Showing posts with label புத்தக அறிமுகம்- Book review. Show all posts
Showing posts with label புத்தக அறிமுகம்- Book review. Show all posts

10 Aug 2025

நாடார் வரலாறு கறுப்பா…? காவியா?.....


 முதல் பதிப்பாக  2019 ல் வெளி வந்த ”நாடார் வரலாறு கறுப்பா…? காவியா?” என்ற புத்தகத்தின்  ஐந்தாம் பதிப்பு 2021 ல் வெளியாகி உள்ளது.இப்புத்தகத்தின் ஆசிரியர் தி. லஜபதி ராய் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊரில் பிறந்தவர். தற்போது மெட்ராஸ் உயர் நீதிமன்ற,  மதுரை கிளையில் வழக்கறிஞராக பயிற்சி செய்கிறார்

 

இப்புத்தகம் ஊடாக நாடார்கள் வரலாற்றில் நடந்த மிக முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள், நாடார் தலைவர்களின் சமூக பங்களிப்பு, நாடார்களின் கல்வி பண்பாட்டு வழிபாடு சார்ந்த விடயங்கள், நாடார் இனத்தில் நடந்த மதமாற்றம் குறித்து மிகவும் தெளிவாக பதிந்து உள்ளார். வரலாற்று பூர்வமான ஆக்கபூர்வமான தகவல்கள் தெளிவாக பதிந்துள்ளார்.

 

இரண்டாம் பகுதியில் நாடார்கள் பற்றிய 1899ஆம் ஆண்டு வாக்கிலுள்ள ஆங்கிலேய மிஷினறி ஆய்வாளர்களின் தரவுகளை மேற்கோளாக காட்டி சில சம்வங்களை தொகுக்குகிறார்.  

 

18-19 நூற்றாண்டில் தோள் ஆடை அணியும் உரிமை இருந்த அகஸ்தீஸ்வரம் குமரசுவாமி நாகமணி மார்தாண்டன் நாடார் மற்றும் சுப்ரமணி நாகமணி மார்தாண்டன் நாடார் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

1855ஆம் ஆண்டு கழுகுமலை ஊரின் மையப்பகுதியியான தோடி தெருக்களில் நாடார்கள் ஊர்வலம் செல்லக்கூடாது என்பதால் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக மாறினர் என்ற தகவல் அறிகிறோம்.. தேர்த்திருவிழாவின் போது நடைபெற கலவரத்தில் ஏழு நாடார்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான எட்டயாபுரம் ஜமீனின் பார்ப்பன மேலாளரும் அவரது அடியாட்களும் நாடார்களால் கொல்லப்பட்டனர் என்று அறியத்தருகிறார். 1899ல் இந்து ஒடுக்குமுறையில் இருந்து தப்பிக்க இஸ்லாம் மதத்தை தழுவிகின்றனர் நாடார் இனத்தவர்.

 

சிவகாசி கலவரத்திற்கு காரணமானவர்கள் பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள் மறவர் சமூகத்தினரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

 

அடுத்த பகுதியில் குமுதி ஆலய நுழைவு முயற்சி பற்றி குறிப்பு உள்ளது. கோயிலுக்குள் அத்து மீறி நுழைந்த நாடார்கள் 2500 ரூபாய் திரு.பாஸ்கர சேதுபதிக்கு வழங்க பணிக்கப்படுகின்றனர்.  அத்துடன் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் நாடார்கள் தங்களுக்கு என தனிக் கோயில்களைக் கட்டிக் கொள்ளட்டும் அல்லது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றட்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார் ஆட்சியர். ஆனால் இந்த ஒப்பந்தத்தை பாஸ்கர சேதுபதி ஏற்றுக் கொள்ளவில்லை.  இந்த வழக்குகளை நடத்த நாடார்கள் 42 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. இந்த காலயளவில் தான் பாஸ்கர் சேதுபதி இந்து மதத்தின் பெருமையை சிக்காகோ எடுத்துச்சொல்ல 1893 ல் விவேகானந்தருக்கு பொருளுதவியும் செய்து இருக்கிறார். இந்த வழக்கில் பாஸ்கர் சேதுபதி சார்பாக 38பார்ப்பன சாட்சிகளும் நாடார்கள் சார்பில் 23 பார்ப்பன  சாட்சிகளும் சான்றளித்துள்ளனர்.

 

கமுதி கோயில் நுழைவிற்கு 42 வருடங்களுக்கு பின் 1939 ல் மதுரை  மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு நிகழ்ந்து உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

 

1925 ஆம் ஆண்டு நடந்த வைக்கம் போராட்டம் அதில்  பெரியாரின் பங்கு பற்றி குறிப்பிட்டு உள்ளார்

எட்டாவது பக்கத்தில் சாணார்கள் நாடார்களாக மாறிய நிகழ்வு என்ற பகுதியில், சாணார்கள் திருவாங்கூர் என்ற பகுதியில் மட்டும் சாணார்களாக பதியப்பட்டத்தை குறிப்பிடுகிறார். அடுத்த பகுதியில் தோழ் சீலை போராட்டம் பகுதியில் 1855 ஆம் ஆண்டு நாடார் பெண்கள் சீலை அணியும் உரிமையை பெறுகிறதை குறிப்பிடுகிறார். 1864 ஆம் ஆண்டு மற்றைய பெண்களும் சீலை அணியும் உரிமை பெறுகின்றனர். கிறிஸ்தவ மதமாற்றமும் அக்காலகட்டம் நிகழ்ந்ததை குறிப்பிடுகிறார்.

 

சுதந்திர இந்தியாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக பட்டியல் இனத்தபவர் தேர்வானதை குறிப்பிட்டு உள்ளார்.

 

டபிள்யூ .பிஏ .சௌந்தர பாண்டியன் பணிகளை பட்டியலிட்டுள்ளார். முக்கியமாக தேவதாசி ஒழிப்பு சட்டம் கொண்டு வந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பெயரை பதிந்துள்ளார்.

1980 ல் கிறிச்தவ மற்றும் இந்து நாடார்களுக்குள் நடந்த கலவரம், 1981 ல் நிகழ்ந்த மண்டைக்காடு கலவரம். அதில் பாதிக்கப்பாட்ட கிறிச்தவ கத்தோலிக்க மீனவர்கள் மற்றும் இந்து  நாடார்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

 

தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இன்று நாடார்கள் திரள்வதாக குற்றம் சாட்டுகிறார்.  நாஞ்சில் நாடன் கூறிய ஜாதிதூய்மைவாதத்தில் ஒப்புறவாகுகிறார்  ஆசிரியர் லஜபதிராய்.

 

கிறிஸ்தவ பணியாளர்கள் பணம் தொண்டு வந்தாக குறிப்பிடுகிறார். 16 வது பகுதியில் கறுப்பா காவியா என்ற கேள்வியுடன் நாடார்கள் இந்து முன்னனியில் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறார் எழுத்தாளர்.

 

 

அடுத்த சில பக்கங்களில் கால்டுவெல் போன்ற வெளிநாட்டினர் பரப்பின பல அவதூறுகளை- நாடார்களின் பரம்பரத் தொழில் பனையேறுவது, பேய்கள் வழிபாட்டில் இருந்தனர், சாணார்கள் போன்ற வார்த்தை பிரோயங்களை ஆசிரியரும் நிறுவுகிறார். மட்டுமல்ல பிற்போக்குத் தனமான மாட்டுச்சாண காலகட்டத்திற்கு போகும் என்று இரு முறை குறிப்பிட்டு கண்டிக்கவும் செய்கிறார் எழுத்தாளர்.

 

இன்றைய காலசூழலில் நாடார்கள் எதிர்கொள்ளும் பிரச்ச்சினைகளை குறிப்பிடாது, நாடார்கள்  யாருடன் சேர்ந்து அரசியல் செய்ய  வேண்டும் என்பதில் தனது எழுத்து ஊடாக பரப்புரை செய்கிறார் எழுத்தாளர்.. நாடார்கள் பரம்பரத்தொழில் என்பதை பனையோடு நிறுத்தும் ஆசிரியரின் தேவை கேள்விக்கு உட்படுத்த வேண்டியது.

 

.

 

பிஷப் கால்டுவெல்லை குறிப்பிடும் புத்தக ஆசிரியர் கால்டுவெல் இப்புத்தகம் வெளியிட்டது வழியாக எதிர்கொண்ட விடயங்களை சொல்வில்லை என்று மட்டுமல்ல, நாடார்களால் கோடைக்கனாலுக்கு விரட்டப்பட்டு அங்கையே இறந்தார் என்ற செய்தியை பகிரவில்லை.

 

 முதல் பகுதியில் சில புகழ் பெற்ற நாடார்களை அறிமுகப்படுத்துகிறார். அதில் சிலர் படம் தவிர்த்து இருக்கலாம். கலப்பு ஆட்களை நாடார் என கொண்டு வந்ததும் அரசியலாகத்தான் தெரிகிறது. எந்த ஜாதிக்குள்ளும் வர விரும்பாத திராவிட கட்சி ஆட்களையும் ஜாதிக்குள் புகுத்துவது தகுமா என்ற கேள்வி எழுகிறது .

 

நாடார்களில் கள்ளிறக்கிறவர்கள் குறிக்கும் வார்த்தைகளை அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்; 8,9 10, 11 நூற்றாண்டுகளில்  பயன்படுத்திய வார்த்தைகளை சான்றுகளாக  வரிசைப்படுத்துகிறார். சான்றோர் போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது  கேள்வி எழுப்புகிறது.

நாடார்களில் கள்ளிறக்கிறவர்கள் குறிக்கும் வார்த்தைகளை அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்; 8,9 10, 11 நூற்றாண்டுகளில்  பயன்படுத்திய வார்த்தைகளை சான்றுகளாக  வரிசைப்படுத்துகிறார். சான்றோர் போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது  கேள்வி எழுப்புகிறது. வெள்ளைத்தேவன் கொலையுண்ட போது எழுதப்பட்ட நாட்டுப்புறப்பாடல்களில் நாடார்கள் என்றுதான் குறிக்கப்பட்டுள்ளது.

 

 

நாடார், கிராமணி, சாணார் போன்ற வார்த்தைகள் உருவானதற்கான காரணங்கள் குறித்த உறுதியான தகவல்கள் இல்லை என்று கூறி எளிதாக கடக்கிறார்.

 

1903 ஆம் ஆண்டில் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில்; சாணார்கள் தாழ்ந்த ஜாதியினர் என்பதால், மரக்கட்டையில் பிணைக்கலாம் என்ற தீர்ப்பை எடுத்து கூறி நாடார்கள் தாழ்ந்தவர்கள் தான் என்று நிறுவ முயல்கிறார் எழுத்தாளர். ஐரோப்பியர்களின் ஜாதி ரீதியான தீர்ப்பை  ஒரு சான்றாக எடுத்துக் கொள்வது நெருடலாகத்தான் உள்ளது. தென்னிந்தியாவின் ஆன்மீகப் போராளியான 1809-1851 காலயளவில் வாழ்ந்த அய்யா வைகுண்டர் பற்றொறி சில குறிப்புகள் உள்ளன.இந்து நாடார்கள் மதம் மாறும் அவலமான  சமூக நிலையை மாற்ற அய்யா வைகுண்டர் பாடுபாட்டார் என்று மட்டுமல்ல, கிறிஸ்த மதமாற்றத்தை எதிர்த்தார் என்ற தகவலை மறைத்து விட்டார் ஆசிரியர்.

 


வடக்கன் குளத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் சூழல் அதிர்ச்சியை தருகிறது வாசிப்பவர்களுக்கு. சனாதன இந்துக்கள் அடக்கு முறையில் இருந்து வெளியேறின இந்து நாடார்கள் கிறிஸ்தவர்கள் ஆன போது 1752 ல் கட்டிய ஆலையத்தில் தென்பகுதி சூத்திர ஜாதியினருக்கும் அமரவும் வடபகுதி நாடார் உட்பட பட்டியில் இன மக்களுக்கும் ஒதுக்கப்பட்டதுடன் நடுவே சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. 1910 ஆம் ஆண்டு யேசு சபை பாதிரியார் கௌசானல் அவர்கள் பிரிவினைச் சுவரை இடித்தெறிந்து சமூகநீதி பக்கம் நின்ற சபையை குறிப்பிடும் எழுத்தாளர், நடுச்சுவர் கட்ட அனுமதித்த  வெளிநாட்டு கிறிஸ்தவ ஆலய தலைமையை பற்றி சொல்லாது விட்டுள்ளார்.

முக்கியமாக வெள்ளைக்கார மிஷினரிகளில் தர்ஸ்டன், சாமுவேல் பட்டீர், ஜெ. சார்க்  போன்றோரின் ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்ட ஆர்வம் கொள்கிறார் என்பதை கவனிக்கலாம். நாடார்கள், தங்களை  சாணார்கள் என்று அழைக்கப்படுவதை விரும்பமாட்டார்கள் என அறிந்தே வைத்துள்ளார் தாஸ்டன்.

 

முன் அட்டை கமுதி ஆலய நுழைவு காட்சி,  பின் அட்டையில் நங்கேலி முலவரி சார்ந்த சித்திரம். நங்கேலி வரலாறு ஒரு புனைவு என்று நிரூபிக்கப்பட்டதை வரலாற்று ஆசிரியர் கண்டு கொள்ளாது தனது பின் அட்டையாக வைத்ததை தவிர்த்து இருக்க வேண்டும்.

 

ஒரு சிறப்பான வரலாற்று எழுத்தாக ஆரம்பித்த புத்தகம்  பரப்புரை எழுத்தாக முடிவு பெற்றது  இப்புத்தகத்தின் பெரும் குறை தான்.

 

 

 

 

 

7 May 2025

கதையும் காரணமும் - சாந்தினி சொர்க்கம் !


தனது குழந்தைப் பருவம் முதல் தனக்கு குழந்தை பிறக்க போகும் காலயளவு வரை கதையை ஒரே(லீனியர்) அடுக்கில் வரிசைப்படுத்தி எழுதியிருப்பது வாசிக்க எளிதாக உள்ளது. மிகவும் சுவாரசியமான, கொஞ்சம் பண்ணையார்த்தனமுள்ள உரையாடல்கள், இயல்பான எளிமையான மொழி என கதையை சுவாரசியமாக நகத்தி செல்கிறார். ஒளிவு மறைவு இன்றி நேர்மையாக எழுதிய பாங்கு அவருடைய எழுத்தின் பலம் ஆகும் . ஒரு இனத்தின் தனித்துவமான வட்டார மொழி வழக்கில் எழுதப்பட்டுள்ளதால் இன்னொரு நிலப்பகுத்திக்கு பயணித்தது போல உள்ளது.

குழந்தைப் பருவத்தில் செய்த சேட்டைகள், நட்புகள், முக்கியமாக முறைப்பெண்களுடன் உள்ள உறவு, அதில் வேம்புவை தனது நண்பன் விரும்புவதால் விட்டு வைத்ததாகவும் தேன் மொழியை தனக்கு இருந்த சோசிய நம்பிக்கையால் திருமணம் செய்ய இயலாது இருந்ததும், மறுபடியும் அவர்களை வாழ்க்கையின் சந்தித்த தருணங்களில் உருகி பேசினது, பேயின் துணையுடன் சல்லபித்தது என எதையும் விட்டு வைக்காது, ஒரு மனிதனின் நிஜமான வாழ்க்கையை அப்படியே பதிந்து வைத்துள்ளதற்கு எழுத்தாளரில் இருக்கும் இயல்பான துடுக்கும், அதையும் கடந்த தைரியமே சான்று..

சுயவரலாறாக எழுதப்பட்ட புத்தகம், பிற்பாடு பேய்க்கதையுடன் ஃபிக்ஷனாக உருமாறுகிறது. பேய் உண்டா இல்லையா என வாசிப்பவர்களை கடைசி வரை மிரட்டிக் கொண்டே இருந்தாலும் பேயை கண்தாக தோன்றின காரணத்தை சிறப்பாகவே சொல்லி விட்டார்.
கேள்வியும் நானே பதிலும் நானே என்று ஒவ்வொரு கேள்விக்கும் காரண காரியகளுடன் தனது மரபணு, தனது முன்னோர் வழக்கம் என தன்னுடைய பார்வையும் கலந்து கதையை ஒரு கருத்தாக்கத்திற்குள் கொண்டு வந்து உள்ளார்.

பேயையும் தன்னுடனே பயணிக்க வைத்து, பேயின் தாக்கத்தால் முறைப்பெண் , செல்வி என பெண்கள் உடன் ஏற்பட்ட உறவுகளை சமப்படுத்தி உள்ளார். இவர் கதையின் கதாப்பாத்திரங்களில் இருந்து பெண்கள் பிடிவாதத்தால், ஆண்கள் வல்லுறவிற்குள் தள்ளப்படுவது போன்ற ஒரு பார்வையும் ஏற்படுகிறது. வலிமையான ஆண்களால் பெண்கள் எப்போதும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதை விட பெண்களின் கட்டுக்குள் அடங்கா ஆசை மற்றும் பிடிவாதம் ஆண்களுக்கு வாய்ப்பு உருவாக்குகிறது என்ற கோட்பாட்டை நிறுவுகிறார்.

பழைய தலைமுறையில் இருந்து தாத்தா, அப்பா, மகன் என உருமாறும் ஆண்மை, அதன் நீட்சியான ஆண் அதிகாரம் உருமாறுவதையும் இக்கதையில் அவதானிக்கலாம்.
அடுத்து கதாசிரியரின் உரையாடல்களை; மனைவியிடம் பேசும் போது பயன்படுத்தும் வார்த்தைகள், தேன் மொழியிடம் பேசும் வார்த்தைகள், அடுத்து வேம்பு, கடைசியில் செல்வியிடம் உரையாடும் வார்த்தைகள் இவயை ஒரு வகைப்படுத்தி வேற்பாடுகளையும் பொருத்தங்களையும் ஆராயவே செய்யலாம். என்னதான் ஆணாதிக்கத்தின் நீட்சியான உரையாடல்கள் வழியாக பெண்கள் மனமுகுந்தே அக்கட்டுகளில் அகப்படுவதை, அல்லது பெண்களை வார்த்தைகளால் கட்டிப்போடும் வித்தையை அவதானிக்க வேண்டியுள்ளது. இத்தனை நேர்மையாக தன் மன ஓட்டத்தை எழுத இயலுமா என நாம் சந்தேகம் கொள்ளும் போதே, சாந்தினி பேயை கொண்டு வந்து நீதி விசாரணைக்கு உட்படாமல் தப்பித்தும் கொள்கிறார் கதாசிரியர்.


எல்லா பெண் கதாப்பாத்திரங்களையும் மிகவும் ஆக்கபூர்வமானவர்களாக தன்னிறவு கொண்டவர்களாக குறிப்பாக பேய் சாந்தினியை கூட வலுவான கதாப்பாத்திரமாகவே படைத்துள்ளார். இவரின் பேச்சில் மயங்குவதிலும் அப்பெண்களுக்கான தேர்வு, விருப்பம், பிடிவாதம் ஒவ்வொரு உறவிலும் வந்து செல்கிறது. பெண்கள் குற்ற உணர்ச்சியற்று தங்கள் வாழ்க்கைக்குள் நகரும் போது, எதனால் இப்படி நிகழ்கிறது என உளமருத்துவர், சோசியக்காரர், சாமியிடம் அறியும் நோக்கிலே பயணிக்கிறது கதை. முக்கியமாக தான் விரும்பின தன்னை விரும்பின பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முன்னெடுக்கும் ஒரு தன்னலமற்ற ஆணாகவே பரிணமிக்கிறது குணசீலன் கதாப்பாத்திரம்.
எல்லா பெண்களை விட பேயை விட தன் மனைவியை பயப்படுவதும் மரியாதை செலுத்துவதும் மதிப்பதும் நமது பண்பாட்டில் மனைவிக்கான முக்கியத்துவத்தையும் சொல்லாது சொல்லி செல்கிறது கதைப்பின்னல்.

உள நல மருத்துவர் இவருக்கு என்ன பிரச்சினை என வழி சொல்ல போகிறார் என வாசகர்கள் காத்து இருக்கும் போது மருத்துவரை ஒரு மனகுழப்பத்தில் தள்ளும் பகிடி சிந்திக்கவும் சிரிக்கும் படி தான் இருந்தது.

ஆனால் கதாசிரியருக்கு எல்லா மருத்துவம் விட ஆழமான சோசிய நம்பிக்கை உள்ளதை கதையில் பல இடங்களில் நிறுவ பார்க்கிறார். ஒரு விமர்சனமாக அல்லது பகுந்தாய்வாக பார்த்தாலும் சோசியத்தை நம்பாத என்னால் சில நேரம் சோசியம் பார்த்து பர்சோதித்து விடுவோமா என்று தோன்றாதும் இல்லை. கதாசிரியரின் எழுத்தின் வலிமையே அதுதான். தான் நம்பும் நம்பிக்கையை, பயத்தை, அச்சத்தை ஏதோ வகையில் வாசகரிலும் கடத்த இயல்கிறது.

சாந்தினிப் பேய்க்கு கண் காது வைத்து நகத்திய விதம் அருமை. கடைசியில் மந்திரவாதியின் உதவியுடன் பேய்களை ஜோடியாக வெளியேற்றுவது வரை கதையில் வந்துள்ளது. சாந்தினிப் பேயால் தேனு, செல்வி போன்றோர் வந்து போனாலும் ஒரு கணவன் மனைவி உறவை பற்றி அதற்குள் இருக்க வேண்டிய அன்பு அன்னியோன்னியம் மனைவியின் சாதுரியம், குடும்பத்தில் மனைவிக்கான இடம் என கதை இந்திய பண்பாட்டு அறத்தில் பயணிகிறது.

என்னதான் பேய்களை வைத்து விளையாடி தேனு , செல்வி கதை சொன்னாலும் அதன் உள்ளிருக்கும் புரியாத புதிரான ஆண்கள் இயல்பு விளங்குகிறது. உள டாக்டர் போலவே சாமியாரும் கதாசிரியரிடம் இருந்து கவனமாக தப்பித்து செல்கிறார்.

ஒரு மனிதனின் குணம் நிர்ணயிப்பது குழந்தைப்பரும் என்பதற்கு இணங்க கதாசிரியர் சிந்தையிலும் செயலிலும் , கருத்தாக்கத்திலும், தன் கருத்தால் மற்றவர்களை நிலைகுலைய வைப்பதிலும் பண்ணையார் தனமான குழந்தைப்பருவம் கூடவே பயணிக்கிறது.

சிவயோகியை பிரேமானந்தா ஆக்குவது முதல் உளமருத்துவரின் மனநிலைய கேள்விக்கு உள்ளாக்குவது என கதாசிரியர் தன்னுடைய வலுவான இடத்தை கதையில் திடமாக பதிப்பித்து செல்கிறார்.

தன்னுடைய கல்வியறிவு, செய்யும் தொழில்களில் கையாளும் நுட்பம் என விளாவரியாக தனது சிந்தனையை அப்படியே குறித்து வைத்து உள்ளார். கதாயாசிரியரின் தொழில் சார்ந்த முனைப்பு, தன்னம்பிக்கை, உழைப்பின் மேல் இருக்கும் அசையாத நம்பிக்கை, ஒவ்வொரு அத்தியாயத்லும் வாசிப்பவனுக்கு ஆக்கபூர்வமான சிந்தனையை தூண்டுகிறது. எத்தனை சோதனை வந்தாலும் நினைத்தை முடிக்கும், ஒரு தொழிலில் இருந்து இன்னொரு தொழிலுக்கு தாவும் வேகம், அறிந்து வைத்திருக்கும் விடயங்களை பற்றிய ஆழமான அறிவு, விவேகம் , கல்வி அறிவையும் தாண்டின ஞானம் அதை குறித்த கதாசிரியரின் சுயத்தில் கொண்ட பெருமையும் வாசிப்பவனை ஊக்கப்படுத்துகிறது.


எலிக் கால் பட்டு ஒரு கதாப்பாத்திரம் கத்தும். அது பேய் அல்ல, சொல்லாமல் கொள்ளாமல் வந்த செல்வி தான் என்பதை வாசகர்கள் எடுத்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். தாயத்து எலுமிச்சம், விபூதி இவை அனைத்தும் பல இடங்களில் வந்து செல்கிறது. விபூதி பூசியும் எலுமிச்சம் அருகில் இருந்தும் சாந்தினி பேய் உருமாறி வருவது மனதின் குடிகொண்டு இருக்கும் நிறைவேறாத அடிமனது ஆசைகள் தான் உண்மையில் வெல்லும் என சொல்ல வருகிறார் என எண்ணம் கொள்கிறேன்.

மோகனூ முதல் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் வாசகனின் மனதில் பதிப்பித்து சென்றுள்ளார். கதாசிரியரின் மனசாட்சியாக நண்பன் மோகனுவை வைத்து கேட்கவைக்கப்பட்டுள்ள கேள்விகள் ஒவ்வொன்றும் சிந்திக்க வைப்பவை. கடைசி பக்கம் 556 வரை சுவாரசியம் குறையாது வாசித்து விடலாம். சில பக்கங்கள் வாசிக்கும் போது உறக்க சிரித்தே வாசிக்கலாம். வீட்டில் உள்ளவர்கள் நமக்கு பேய் பிடித்து விட்டது என எண்ணி விபூதி அடிக்காது இருந்தால் சரி.

இது அமேசான் pen to publish 2019 போட்டியில் 50,000 பரிசு பெற்ற நாவல் என்பது குறிப்பிடத் தக்கது. 

17 Mar 2025

எனது ஆண்கள்- சாகித்ய அக்காதமி விருது/ காலச்சுவடு பதிப்பகம்

 

மலையாளம் மொழியில் என்ற  ஆணுங்கள் என்ற பெயரில் கேரளாவில் வெளியான புத்தகம், எனது ஆண்கள் என்ற பெயரில், தமிழில் முனைவர் பா. விமலாவால் மொழிபெயர்க்கபட்டு சாகித்திய அக்காதமி விருதும் பெற்றுள்ளது.  

 

இது ஒரு சுயவரலாறு என்பதால் இன்னொருவரின் வாழ்க்கையை  விமர்சிக்கவோ அதைபற்றி விவாதிக்கவோ இங்கு இடம் இல்லை. இருப்பினும்  தமிழ் வெளிக்கு  விருதுடன் வருகை தரும் போது எவ்விதமான புத்தகங்கள் தமிழுக்கு வருகிறது என்பதை அவதானிக்க பகிர்கிறேன்.   

 

பொருளடக்கம்

  •  முன்னுரை: கேரளத்தில் ஆண்கள்
  • மொழி பெயர்ப்பாளர் முன்னுரை
  • ரவுடிக் கட்டும் வரப்பு முத்தமும்
  • தட்டான் தொட்டால்...
  • சிறிலங்குச்சீ கதை
  • மசாலா தோசையும் கூரைப்பேனும்
  • இடைச்சந்துகளில் காதல்
  • சாராயமும் ஆணும் மங்களூரும்
  • விஜயா லாட்ஜில் மூன்று காதலர்கள்
  • பாரிஜாதம் பூத்துக் குலுங்கிய... 
  • காதலுக்கு பயதில்லை!
  • உண்மையான காதலன்

 

இப்படியான தலைப்பில் தமிழில் இப்புத்தகம் வெளிவந்து உள்ளது. 

இதன் மலையாளப்பதிப்பு டிசி பதிப்பகத்தால் எட்டாவது பதிப்பு கண்டுள்ளது. பக்கம் 118 ரூபாய் 125 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதே புத்தகம் தமிழில் 159 பக்கத்துடன் 200 ரூபாய்க்கு காலச்சுவடு வெளியிடுகிறது. 2020 ல் முதல் பதிப்பு வந்துள்ளது


என்டே ஆணுங்கள் என்ற தனது புத்தகத்தின் மூலம்,  ஜமீலா மீண்டும் ஒருமுறை மலையாளிகளின் ஆண்-பெண் உறவுகளுக்கான அணுகுமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார். இந்த வெளிப்பாடுகள் நிச்சயமாக சமூகத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று பின் அட்டையில் சூளுரைக்கப்பட்டுள்ளது

ஜெமிலாவின் தனி மனித வாழ்க்கை சார்ந்த மற்றும் பார்வைகள் உள்ளடங்கிய இப்புத்தகம் மலையாளி ஆண் பெண் உறவு நிலை பற்றி அறிய எவ்விதம் உதவும் என்ற கேள்வியுடன் புத்தகத்தை அணுகினால்  ஜெமீலாவின் தொழில் சார்ந்த வெளிப்பாடுகளை காணலாம்

தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் இவ்வாறாக குறிப்பிட்டு உள்ளனர், கேரளா பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார், மேலும் பெண்கள் மீதான ஆண்கள் கண்ணோட்த்தை அணுகுமுறைகளை தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் எடுத்துக் காட்டுகிறார். 


தனது சொந்த அனுபவம் என்கிற போது தான் நளினி யார் என்ற கேள்வி எழுகிறது. அந்த சொந்த அனுபவம் பெருவாரி பெண்களுக்கான அனுபவமாக இருக்க வாய்ப்பில்லை.  அதனால் பெருவாரி மக்கள் அடங்கிய சமூகத்தை பற்றிய ஜெமீலாவின் பார்வை எவ்விதம் இருந்தது என அறியலாம்.

வீட்டு வறுமையால் தனது 17 வயதில் மண் அள்ள போன இடத்தில் இருந்து துவங்கிய பதின்ம வயது விளையாட்டில் இருந்து ஆரம்பிக்கிறது வரலாறு. (இவருடைய முதல் புத்தகத்தில் ஒன்பது  வயது துவங்கி வேலைக்கு போனதாக குறிப்பிட்டு உள்ளார். நளினியை, லாறியில் மண் அள்ள வந்த ஜோணி ஜொள்ளு விட்டது, அதன் பின்பு முத்தம் தந்தது  என நகரும் கதையில், நளினியின் ஒரு சுய விளம்பரத்துடன் துவங்குகிறது “நான் எதற்குமே வளைந்து கொடுக்காதவள், நான் தான் சரி,  நான் பெரிய வீட்டு பெண் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்தது ஜோணிடம் தோன்றின காதல் யாரிடமும் பின்பு தோன்றவில்லை என தன் வரலாற்றை ஆரம்பிக்கிறார். 


கல்யாணம் ஆகி இரு குழந்தைகளுக்கு தாய் ஆன நிலையில், தனது 27 வது வயதில் பாலியல் குழுவில் வேலைக்கு சேர்கிறார். இவர்கள் இது போன்ற குழுவில் நிலைத்து நிற்க சிலருடன் சில உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதற்கு காதல் என்கின்றனர். அந்நிலையில் மானிக்கா மேலும்  அதே காலபகுதியில் இன்னொருவருடனும் உறவு என்கிறார். இந்த உறவு என்பதை தனி உறவு தொழில் முறை உறவு என்று பயன்படுத்தி கொள்கின்றனர்.


இவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து சாராயம் மது, சிகரட் போன்றவை பரிசாக கிடைப்பதாக குறிப்பிடுகிறார். 1979 காலப்பகுதியில் வாரம் கடைசி நாட்களில் ஒரு தையல் டீச்சர் பாலியல் வேலைக்கு வந்தாகவும் சொல்கிறார். அவ்வகையில் டீச்சரை பார்க்க வரும் தங்க ஆசாரி இவருக்கும் வாடிக்கையாளர் ஆகிறார். அவர் தனக்கு விருப்பமான ஒருவர் என்கிறார்.  ஒன்றைரை வருடம் நீடித்த உறவை குட்டநாட்டை விட்டு வெளியேறியதால் தொடர இயலாது முறிந்தது  என்றாலும், அவன் நினைப்பு கனக்காலம் இருந்து என நினைவு கூற்கிறாள் ஜெமீலா.


அந்த பாலியல் குழுவில் இருந்து சண்டையிட்டு வெளியேறின ஜெமீலா திருச்சூர் தெருவை வந்தடைகிறாள். அங்கு தெருவில் நின்று வாடிக்கையாளர்களை பிடிக்கும் லைலாவுடன் கூட்டு கிடைக்க அவள் வீட்டுக்கு செல்கிறாள். அங்கு இவர்களுக்கு வாடிக்கையாளர்களை,இவர்கள் பக்கம் வருவித்து கொடுக்கும் பாலன் போன்ற எடுபிடிகள் சகவாசம், பணத்திற்காக கூட்டிகொடுக்கும் தொழில் செய்யும் ஆண்களை கண்டு கொள்ளவும் தங்கள் இணைப்பை விரிவாக்கவும் இயல்கிறது. 


இவர்கள் வாழ்க்கையில் சாராயம் சாதாரணமாக உள்ளது. பெண்களே சாராயக்கடை சென்று மது அருந்துகின்றனர். அப்போதைய திருப்தி, அப்போதைக்கு கிடைக்கும் வாடிக்கையாளர்கள் என்பதை தவிர்த்து , சமூக அக்கறை என எதுவும் இருப்பதாக இல்லை.  கள்ளு வாங்கி கொடுத்த பாலண்ணா, அவன் மனைவியை அவள் தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு ஜெமீலாவை தேடி வருகிறான். எவன் வந்தாலும் ஜெமீலா கண் பணத்தில் தான். எவனிடம் பணம் எவ்வளவு இருக்கும் எதற்கு எவ்வளவு வாங்க வேண்டும் என்ற கணக்கு உள்ளது. அவ்வகையில் பணத்தை வாங்கி விட்டு வேலை பார்க்கும் ஆளாகவே உள்ளாள்.உணர்வால் ஏமாற்றப்படும் போது கடந்து போகும் ஜெமீலா பணத்தால் ஏமாறாது இருக்க மிகவும் கவனமாக உள்ளாள். அதை தனக்கு இழுக்கு என்றும் நினைத்துக் கொள்கிறாள்.


”பாலண்ணா,  பணத்தை பார்த்தால் தான் இதில் எல்லாம் எனக்கு விருப்பம் வரும் என்கிறாள்”. அவன் கன நாட்களாக  கஷ்டப்பட்டு சேர்த்து வைத்து இருந்த ஐந்து  ரூபாயை கொடுக்கிறான். அப்படி தனது மனைவி லக்‌ஷ்மிக்கு தெரியாம பாலா தன்னுடன் வந்ததில் ஜெமீலாவிற்கு அப்படி ஒரு பெருமை. ஜெமீலாவில் இந்த பெருமை எங்கும் குறைவில்லை. வாழ்வது பிழைப்பது எல்லாம் ஈன வழியாக இருந்தாலும்  தன் அழகை பற்றிய ஒரு மேம்பட்ட பிம்பம் ஒட்டிக் கொண்டே இருக்கிறது.  தன் அழகை, முடியை, கண்னை பார்த்தால் எந்த கொம்பனும் விழுந்து விடுவான் என பலபோதும் பெருமை கொள்கிறாள்.  அதே போல் தலைக்கனமாக தெரிகிறவனை தனக்கு பின்னால் வரவைப்பதில் ஒரு வன்மம் பிடித்த இன்பத்தை தொடர்ந்து பேணுகிறாள்.  இதே பாலன் பின்பு ஜெமீலாவிற்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் ஆளாக வலம் வருகிறான்.  பாலன் என்பவனை கூட்டி கொடுப்பவன் என்று அல்ல அறிமுகப்டுத்தி கொடுப்பவன் என்று சொல்ல வேண்டும் என சொல்கிறாள்.  நளினி வாழ்க்கை முழுக்க மற்றவர்களை தனக்கு கீழ் வைக்கும்  ஒரு தந்திரம் உள்ளது. அதை திட்டமிட்டே செய்கிறாள்.


இப்படியே போய் கொண்டு இருக்க லைலாவிற்கும் ஜெமீலாவும் தங்களது வாடிக்கையாளர்களை; ஒருத்திக்கு தெரியாது இன்னொருத்தி திருடிக்  கொள்கிறார்கள்.  இதில் ஒரே வீட்டில் தங்கி இருந்தாலும் இவர்களுக்குள்  பாலியல் வியாபாரத்தில் போட்டி நிலவுகிறது.  இதனிடையில் அரசு கொடுக்கும் வீட்டை கைபற்ற வேண்டும், வீட்டின்  உடமையாளன் ரவியையும்  தன்வசப்படுத்தி காசு பணம் பார்க்க வேண்டும் என ஜெமீலாவில் எண்ணம் பரபரக்கிறது.  ஜெமீலாவின் தேடல்களில்  முழுக்க பணம் பணம் என்றே உள்ளது . ஆனால் ஒரு போதும் பணத்துடன் வாழவும் இல்லை. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் உடை கிடைக்கும்  கிடைக்கும் இடத்தில் வாழ்க்கை என காலத்தை நகத்துகிறாள்.

 இதில் கரீம் என்பவன் லைலா மற்றும் ஜெமீலாவை ஒரே நேரம் வைத்துக்கொள்ள திட்டமிட; ஜமீலாவிற்கு   இரண்டாம் நிலையில் விருப்பம் இல்லை என்பதால் கார் ஓட்டுனர் பழனிமலையை பின்பு காதலன்/ வாடிக்கையாளன் ஆக்கி கொள்கிறாள். அதற்கு முக்கிய காரணமாக பழனி கையில் பணம் இருக்கிறது என்கிறாள். 

 நளினி ஜெமீலாவிற்கு  இவர்கள் மனைவியை விட்டு வருவதால் அவர்கள் குடும்பங்களில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் எல்லாம் தெரிகிறது.  ஆனால் ஜெனீலாவின் நினைப்பு ’தான் ஒரு ஆல்பா பெண்’ என்பதாகவே பல போதும் உள்ளது. தனது முடி மற்றும் முக அழகை வாடிக்கையாளர்கள் மனைவியுடன் பொருத்தி பார்த்து தன்னில் பெருமைப் பட்டுகொள்கிறாள். . பழனி நளினிக்காக தன் மனைவியை விட்டுவிட தயாராக இருந்தான் என்பதை பெருமையாக நினைத்துக் கொள்கிறாள். இதில் மலையாளியான பழனி பூ வாங்கி கொடுத்து தன்னை சினிமாவிற்கு அழைத்து செல்வதில் தமிழ் சாயல் இருந்தது என புளகாகிதம் அடைகிறாள். இதில் பழனிக்கு தன் மேல் காதல் உருவானது என சில உருட்டும் விடுகிறார் ஜெமீலா. வேசியிடம் போய் பேசி தன் சகோதரி கணவனை பிரித்து கொண்டு வருவதை சிறுமையாக நினைத்தார்களாம் பழனியின் மச்சிர்கள் ஆனால் அவர்கள் வந்தாலும் ஜெமீலாவிற்கு வாடிக்கையாளர்கள் ஆகி இருப்பார்கள் என்று பெருமிதம் கொள்கிறாள். ஒரு வழியாக பழனியை இவளிடம் இருந்து மீட்டு பழனி மச்சினன்கள் தன் தங்கையில் வாழ்க்கையை உறுதிப்படுத்துகின்றனர்.


 ஜெமீலா கண், மனம் முழுக்க 20, 30 50 ரூபாய் என்று தான் உள்ளதே தவிற அவளுக்கு யாரிடமும் ஒரு பரிவும் இல்லை. இங்கே நிறைய ஆண்களை தனக்கு சுற்றும் சேர்த்து இடியப்ப சிக்கலாகும் வாழ்க்கையில் இருந்து விடுபட கேரளா திருச்சூர் செல்கிறாள் நளினி. அங்கு கண்ணாடி விற்கும் பாபு அறிமுகம் ஆகிறான். அவன்  மனைவியை போன்றே உடன் அழைத்து செல்கிறான். இவர்கள் தொடர்பை அறிந்த பாபுவின் காதலி பிரியாவும் பிரிந்து போய் விடுகிறாள்.

அக்காலத்தில் இருந்து நான் அழகானவள் என்ற எண்ணம் தனக்கு உண்டு எனவும் உடல்முழுக்க சீலப்பேன் பிடித்த பாபு, இவளை கல்யாணம் செய்ய எண்ணினாலும் தன்னுடைய மற்ற விஷயங்கள் எல்லாம் நின்று விடுமே என்று நினைத்த ஜெமீலா,  விருப்பம் அது இதுன்னு தன்னுடைய பணத்தை கொடுக்காது போய் விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாள். அதே போல பாபுவை தேவை முடிந்ததும் களட்டி விடுவதிலும் உன்னிப்பாக இருக்கிறாள்.

அடுத்து சுனில் என்ற பிராமணன் உடன் சுற்றுகிறாள். இரவில் ஒரு பள்ளிக்கூட அறையை தாங்கள்  பயன்படுத்தியதாக சொல்கிறாள் ஜெமீலா. பாடசாலை அறையை பள்ளியறையாக மாற்றினதில் ஜெமீலாவிற்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை.  அப்படி இரவில் கிடைக்கும் பணத்தை வைத்து பகலில் சுற்றித்திரிந்து வாழ்வதாக சொல்கிறாள். ஆனால் பிராமணன் 50 ரூபாய் கொடுத்து தன்னுடன் மட்டுமே வரவேண்டும் என நிபந்தனை விதிக்கிறான். அவனுடன் சேர்ந்து வீட்டு மாடிகளில் ஏணி வைத்து செல்வது என உற்சாகமாக திரிலிங்காக இருப்பதாக சொல்கிறாள். பணம் கொடுப்பவன் நிர்ணயிக்கும் இடங்களுக்கு செல்வது அவர்கள் கட்டுபாட்டில் பயணிப்பது என இவர்கள் கட்டற்ற கட்டுப்பாடு 50 ரூபாய் கொடுப்பவனில் அடிமையாக மாறுகிற போது ஜெமீலா பணத்திற்காக சகித்தும் கொள்கிறாள். 

ஜெமீலா பாலியல் தொழிலாளியான பின்பு சுனிலிடம் முதல் காதல் வந்ததாம். 5-6 மாதங்கள் கடந்த நிலையில் சுனிலின் வீட்டில் மாட்டி கொள்கிறார்கள். அங்கு அவன் அண்ணன் கருணன் இவளை தனக்கு அமைத்து தர சுனிலிடம் கேட்டதாக  எழுதி வைத்து உள்ளாள். பின்பு திரில் போய்  சுனில் மறைய, தோட்டிக்காரன் தங்கப்பனுடன் செல்கிறாள். தோட்டியுடன் தான் செல்வதால் பிராமணன் சுனில் தன்னில் விரும்பவில்லை என்ற சமூக ஜாதி புரட்சி பொய்யையும் எழுதி வைத்துள்ளார்.அப்படி எழுத்துக் கலையையும் தன் நலம்  சார்ந்து உருவாக்க மெனெக்கெட்டுள்ளார்.


அந்த ஆண்கள் இவளிடன் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்கள் அழகு, எதிர்பார்ப்பை  பற்றி நளினியிடம் சொல்கிறது  நளினிக்கு  பொறாமையையும் இயலாமையும் உருவாக்குகிறது. நளினி தனது வாடிக்கையாளர்களில் தனது இதமான காதல் அனுபவத்தை, பரிவான கணவனை தெரிந்தோ தெரியாமலோ  தேடுகிறாள் ஆனால் யாருக்கும் மனைவி ஆகி கட்டுக்குள் வாழவும் விரும்பவில்லை.  ஆனால் நளினிக்கு நல்ல குடும்பம் கணவன் அமைய வில்லை என்பதை எங்கும் குறையாக வைத்துக் கொள்ளவும் இல்லை.  

அடுத்து நளினியின் பயணம் மாங்களூர் பார்த்து செல்கிறது.  அங்கு வேலாயுதன் என்ற ஒருவன் கணவன் பணிக்கு கிடைக்கிறான். அதில் மாத்தூஸ் என்ற ஒருவனுடன் சண்டையிடும் சூழல் வருகிறது. அதன் பின் கோயக்கா ரவுடி தொடர்பு கிடைத்த நளினிக்கு,  தான் ஒரு பேட்டை ரவுடி என்ற நினைப்பை வரவைக்கிறது. தான் ரோட்டில் நடந்து செல்லும் போது    வழியில் செல்பவர்கள் வணக்கம் சொல்வார்கள் என்பதில் பெருமை கொள்கிறாள். இவள் ரவுடி ஆனதால் ஹமீதுக்கு இவள் மேல் ஆராதனை என்றும் நினைத்துக் கொள்கிறாள். மாத்தூஸிடம் சண்டை என்றதும் மாத்தூஸுடன் வாழும் பெண்ணை குறை சொல்ல ஜெமீலா தயங்கவில்லை. அவள் தன் கணவனை விட்டு விட்டு மாத்தூஸுடன் சேர்ந்து வாழ்கிறாள் என்பது ஜெமீலாவிற்கு இகழ்ச்சியாக உள்ளது. 

 

அடுத்து  கேரளா வந்து லாட்ஜுகளில் பாலியல் தொழில் செய்து வருகிறதை  விண்வெளிக்கு சென்றது மாதிரி கதை விடுகிறார். அங்கு வைத்து சாகுல் ஹமீதை சந்தித்தாகவும் அவனை கல்யாணம் செய்ததாகவும் அடுத்த வரலாற்று பொய் புரள்கிறது. சாகுல் ஜெயிலுக்கு போக வேண்டி வந்ததால் அவனை காப்பாற்ற மறுபடியும் பாலியல் தொழில் செய்தது போலவும் கதை விடுகிறார்.

 இவருடைய முதல் புத்தகம் ஒரு பாலியல்தொழிலாளியில் சரித்திரத்தில் சொன்ன சாகுல் கதைக்கும் இங்கு சொல்லும் கதைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. https://josephinetalks.blogspot.com/2014/07/blog-post_27.html


அப்படி 5 ரூபாயில் ஆரம்பித்து, 2000 ஆண்டுகளில் 200 ரூபாய் கட்டணம் பெறும் தொழிலாளியாக மாறுகிறாள் நளினி. ஆனால் வழியே வந்தது வழியே போகும் என நளினி பணத்தை துரத்த, திட்டமிடாத செலவு வாழ்க்கையால் வறுமை நளினியை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

 

நளினி இனி தன் சரிதை என எழுதாமல் புனைவு புதினம் என்றே எழுதி துவங்கலாம்.

இந்த கதை எப்படி கேரளா பண்பாட்டு தளத்தை கேள்விக்கு உள்ளாக்கும். அரசே மீட்பு பணி செய்து இவர்களுக்கு வேலைகள் அமைத்து கொடுத்தாலும் இவர்கள் விரும்பும் ’திரில் பாலியல்’ வாழ்க்கையை விட்டு வரப்போவது மாதிரி இல்லை.

இப்புத்தகம் ஒரு சராசரி பெண்ணுக்கு என்ன கருத்தாக்கம் தருகிறது. திரில் காதல் போன்ற வார்த்தைகள் தேன் புரட்டின ரொட்டி  இருப்பது போல இருந்தாலும்,  அதை சுற்றி ஈக்கள் மொய்த்தது  போன்ற வாழ்க்கையை சராசரி பெண்கள் விரும்புவார்களா? பெருவாரி நளினியின் வாடிக்கையாளர்களான ஆண்கள் ஒரு நாள், ஒரு முறை, ஒரு மாதம், கூடிப்போனால் ஒரு வருடத்துடன் இவளை விட்டு போய் விடுகின்றனர் அல்லது நளினி இடம் பெயர்ந்து தப்பித்து போய் விடுகிறாள்.

முதல் புத்தகத்தில் இருந்த நேர்மையான எழுத்தை சவால் விடும் விதம் பொய்களில் மெனையப்பட்ட, கட்டற்ற கற்பனையின்  தொகுப்பாக  இப்புத்தகம் உள்ளது.

முன்னுரையில் தமிழ் ஆண்களுக்கு மலையாளி பெண்கள் மேல் இருக்கும் மரியாதை மலையாளி ஆண்களுக்கு இல்லை என குறைபடுகிறார்.  தமிழ் ஆண்கள், சாதாரண மலையாளிப் பெண்களை பற்றி கொண்டு இருக்கும்  இளக்கார பார்வையை  நாகர்கோயிலில் குடிபுகுந்து இருக்கும் நளினிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தால் நல்லது.

கட்டற்ற பாலியல் தேவை, வெட்கம் மானம் அற்ற ஒரு பெண்ணின் பணத்திற்கான வேட்கையும், ஆண்கள் மேல் கொண்ட வன்மமும், தனது பிடிவாதங்களுக்காக எவ்வித  சகதியிலும் உருள்வேன் என்ற பிடிவாதம் கொண்ட பெண்ணின் வாழ்க்கை சரிதையை தமிழ் வெளிக்கு கொண்டு வரும் நமது இலக்கிய அரசியல் உலகின் நோக்கம் என்னவாக இருக்கும். 

 இப்படியான ஒரு சூழலில் எந்த தமிழ் பெண்ணும் வரக்கூடாது என்றா! என்று தெரியவில்லை. ஆனால் நளினிக்கு தான் வாழ்ந்த வாழ்க்கை மேல் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அவருக்கு ஆண்கள் மேலுள்ள எகத்தாளம் ஆள்மனதில் உள்ள வெறுப்பை ஆண்களை வெறும் பிண்டம் போல நினைத்து எழுதி வைத்து உள்ளார்.


இலக்கியவாதிகளுக்கும் பாலியல்தொழிலாளிகளுக்கும் நிறைய இலக்கிய உறவுகள் உண்டு, அதை மலையாள எழுத்தாளர்கள் பூனத்தில் குஞ்சப்துள்ள போன்றோர் சொல்வது மாதிரி எந்த தமிழ் எழுத்தாளனும் உண்மையை சொல்லப் போவது இல்லை.


 இது பெண்ணியமா?  பெண் விடுதலையா, பெண் பார்வையா, ஆண் விரோதமா என்றில்லாது இந்திய அரசியல் அமைப்பு தரவேண்டிய கவுரவமான வாழ்க்கைக்கு எதிரான வாழ்வியல் ஆக உள்ளது. இது போன்ற புத்தகங்கள் அரசின் கண்ணை திறக்க வேண்டும். 


ஒரு பாலியல் தொழிலாளியான பெண் ஆண்கள் மேல் வைத்துள்ள நையாண்டியை வாசித்து தெரிந்து கொள்ளலாம். பாலியல் தொழிலாளி எழுதிய புத்தகம் என்பதால் பாலியல் கல்வி சார்ந்து ஏதும் கற்க உண்டா என்று பார்த்தால் மொத்ததில்  மனப்பிறழ்வு பாலியல் இன்பத்தை எடுத்துரைப்பது போல தான் உள்ளது. தொட்டால் 10 ரூபாய், பார்த்தால் 20, பேசினால் 30, படுத்தால் 50 என ஜெமீலாவில் பணப்பாலியல் எண்ணங்களின் தொகுப்பாகவே உள்ளது.

உள்ளடக்கம் யாருக்கானது என்பதே கேள்வி. பாலியல் தொழிலை எடுக்க போகும் பெண்களுக்கு என்றாலும் இப்புத்தகம் மிகவும் நுணுக்கமற்றது, அருவருப்பான வாழ்க்கை பார்வையை சொல்வது. பெண்களை பயன்படுத்தும் ஆண்கள், ஆண்களுக்காக சண்டையிடும் பெண்கள் என பெண்களை வெறும் சதை பிண்டமாக பார்க்கும் சமூகத்திற்கு  தன்னை முழுமனதோடு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொடுத்த 'திரில்' நளினியுடையது மட்டுமே இதன் கருத்தாக்கம். 

பாலியல் தொழிலில் உள்ள நுட்பத்தை, எங்கே நிற்க வேண்டும் எவ்விதம் உடை அணிய வேண்டும், எப்படி பேசவேண்டும்,  யார் யாருடன் இருந்தார் போன்ற பெருமை  தவிர்த்து இத்தொழிலால் உடல், உள்ள நிலையில் பாதிக்கப்பட்டதை பகிரவே இல்லை. இத்தொழிலில் இருக்கும் போது தன்னுடைய பெற்ற பிள்ளைகள் பாதிப்படைந்ததை பற்றியோ, ஊர் ஊராக இடம் பெயர்வதால் தங்களுக்கான பாதுகாப்பான வாழ்க்கையை இழப்பதை பற்றியோ குறிப்புகள் இல்லை. 

இன்னொரு புறம் அரசு பெண்களுக்கான கன்னியமான வாழ்க்கை உரிமையை பெற்றுதரவேண்டும். அதை கண்டு கொள்ளாத விதம் பெண்களை மேலும் பாலியல் பொருளாக மாற்றும் பொதுமைப்படுத்தும் ஒரு தந்திரமும் இப்புத்தக குரலில் உள்ளது 

பொதுவாக மலையாளப்புத்தகம் அதன் மூல மொழி மலையாளத்தில் வாசிக்க விரும்பும் நான், இப்புத்தகத்தின் மொழிப்பெயர்பாளரான என் தோழிக்காக வாங்கி வாசித்தேன்.  மொழி பெயர்ப்பு சிறப்பு எளிதாக வாசிக்க இயன்றது. புத்தக அட்டையும் ஆண்களை விழுங்கும் பெரும் பாம்பின் படத்துடன் சிறப்பாக வந்துள்ளது 


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பல திரைப்படங்களில், விபச்சாரம் தவறில்லை என்றும், விபச்சாரிகள் அனுதாபம் தேடுபவர்களாகவும், சில சமயங்களில் மற்ற தொழில்களைப் போலவே இது ஒரு உன்னதமான தொழிலாகவும் காட்டப்படுகிறது. விபச்சாரம் உலகின் மிகப் பழமையான தொழில் என்று மக்கள் கூறுகிறார்கள். அது ஒரு தொழிலா? இது மனிதகுலத்திற்கு எதிராக செய்யப்பட்ட மிகப் பழமையான குற்றம் என்றும், அது நிறுத்தப்பட வேண்டும். பாலியல் தொழிலாளர்களை சமூகத்தின் மற்றவர்களுடன் ஒருங்கிணைப்பதில் அரசாங்கங்கள் கடுமையாக பாடுபட்டு அவர்களை இந்தக் கொடூரமான தொழிலில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி, பெண்களை விற்காமல் கண்ணியத்துடனும், பிரகாசமான எதிர்காலத்துடனும் வாழ அனைவருக்கும் உரிமை உண்டு .

 பாலியல் தொழிலை கைவிடத் தயாராக இருக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு  அரசை கேட்க வேண்டும். அத்துடன் பாலியல் தொழிலாளிகளூக்கான லைசன்ஸ் கொடுக்கலாம். அதற்காக தான் நளினி போராடியும் வருகிறார்.