12 Apr 2020

Trance phobia

மானியா, போஃபியா இந்த இரு விடயங்களுமே மிகவும் ஆபத்தானது.

சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் 'ட்ரான்ஸ்'. இந்த படத்தை முன்நிறுத்தி so called  தமிழக முற்போக்கு சமூக செயல்பாட்டாளர்கள் இப்படம் கிறிஸ்தவத்தை / சிறுபான்மையினரை தாக்குகிறது கண்டிக்க  வேண்டும் என்ற கூற்றுடன் கிளம்பியுள்ளார்கள்.

மிஷ்கின் சைக்கோ திரைப்படத்தில் ஒரு கன்யாஸ்தீரியை அவமதித்து ஒரு கதாப்பாத்திரம் வடிவமைத்திருந்தனர். சூப்பர் டீலக்ஸில் பொறுப்பற்ற ஒரு அல்லேலூய்யா குடும்பத்தலைவன் கதாப்பாத்திரம் இருந்தது.. அப்போது சிறுபான்மை பரிவு எங்கு போனது?.

பைபிளை வாசிக்கும் கிறிஸ்துவின் போதனைகளை நம்பும்  கிறிஸ்தவர்களுக்கு தெரியும் அல்லேலூய்யா கூட்டங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும்  தொடர்பே இல்லை என்று.

 கிறிஸ்து பணம் வாங்கி கொண்டு, எங்கும் யாருக்கும் அற்புதங்கள் நிகழ்த்தவுமில்லை, ஜெபிக்கிறேன் என்ற பெயரில்  கதறவோ, ஆடவோ  இல்லை. அவருடைய பல அறிவுரைகள் அவர் பின்பற்றிய யூதமதத்தை விமர்சிப்பதாகவே இருந்தது.
கிறிஸ்து விமர்சித்தது அன்றைய மத குருக்களை, அவர்கள் மக்கள் மேல் சுமத்திய  ஆசாரங்களை தான்.

அவர் ஆலயத்தில் வியாபாரத்தில் ஏற்பட்டிருந்தவர்களை தன்னுடைய இடுப்பில்  கட்டியிருந்த கச்சையால் அடித்து விரட்டியிருப்பார். முதல் போராளி கிறிஸ்து தான். மனித நேயமற்ற யூத சட்டங்களை மறுதலித்தவர்.

 Davinci code, Temptation of Jesu போன்ற படங்களை எடுத்தவர்கள் கிறிஸ்தவ நாடுகளில்  உள்ள கிறிஸ்வர்கள் தான். அங்கு யாரும் திரைப்படம் கிறிஸ்துவை அவமதித்தது என கொடிபிடிக்கவில்லை.  கிறிஸ்தவம் ஒவ்வொரு காலையளவிலும் சுயபரிசோதனை செய்து பழமையை விலக்கி புதுமைக்குள் கடக்கும் முற்போக்கு வாழ்க்கை முறை.

ட்ரான்ஸ் படத்தை  இயக்கியிருப்பது இஸ்லாமியர் நடித்திருப்பவர் இஸ்லாமியர், படத்தின் கதையை எழுதியவர் ஒரு கிறிஸ்தவர்.

இதே போன்று ஒரு இஸ்லாத்தை விமர்சிக்கும்  படத்தை கிறிஸ்தவரோ அல்லது இந்துவோ எடுத்திருந்தால் வெளியிட இயன்றிருக்குமா?ஒரு இஸ்லாமியரே எடுக்க இயலுமா? அவ்வகையில் கிறிஸ்தவத்திற்குள் இருக்கும் விமர்சனத்தை ஏற்று கொள்ளும் பாங்கை  பாராட்ட
 வேண்டியுள்ளது.

ட்ரான்ஸ்ப்படம் கிறிஸ்தவத்திலுள்ள ஒருவகை பிரார்த்தனை முறையை மற்றும் மக்களிடம்  இருந்து காணிக்கை என்ற பெயரில் நடத்தும் கொள்ளையை விமர்சிக்கிறது.


30 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து புகுந்த அல்லேலூயா கிறிஸ்தவத்தை யாரும் கேள்வி கேட்க இயலாது. காரணம் அதன் வழிபாட்டு முறை. முதல் நிலையிலே சிந்தனை சக்தியை மழுக்கி ஒரு  சட்டத்திற்குள் அடக்கி விடுவார்கள். அதற்கு அவர்கள் பைபிளிலுள்ள சில பகுதிகளை மட்டுமே பயண்படுத்துவார்கள். புது பெயர் கொடுப்பார்கள், தேவனிடம் பேச புது  மொழி கற்றுக்கொடுப்பார்கள். பைபிளிலுள்ள பல புத்தகங்களை வாசிக்கவே மாட்டார்கள். அவர்கள் மனிதர்கள்  பூமியில் வாழாது  பரலோக வாழ்ககைக்கு தயாரப்படுத்தி கொண்டு இருக்கும் அடிப்படைவாத நம்பிக்கை கொண்டோர்.

பல பல கட்டுப்பாடுகளை உடல் , உடை , சிந்தனை, கட்டுக்கதைகள் புகுத்தி, மனிதனின் கேள்வி கேட்கும் சுய சிந்தனையை மட்டுப்படுத்தி மனிதர்களை முடமாக்கி விடுவார்கள்.

இத் திரைப்படம் ஊடாக கேள்வி எழுப்புகிறான் ஒரு கலைஞன். மக்களை சிந்திக்க தூண்டுகிறான் கலைஞன். கலையில் பங்கும் அது தானே.

கிறிஸ்தவர்கள், இது போன்ற விமர்சன படங்களை எங்க மதத்தை குறைத்து எடுத்தாய் என வழக்காட மாட்டார்கள்.  கிறிஸ்தவர்கள் கல்வியறிவு சமூகத்துடனுள்ள உறவாடல் குறுகிய சிந்தனைக்குள் தங்களை நிறுத்தாது விசாலமாக சிந்திக்க தகுந்தவர்கள்.

அல்லேலூய்யா கும்பல் கிறிஸ்தவத்தை, மனிதத்தை வளர்க்கவில்லை மனிதனின் நோய் நொடிகள், மனச் சோர்வை வைத்து பணம் திரட்டும் கும்பல். இந்த கும்பலை பற்றி அரசிற்கும் எந்த அக்கறையும் இல்லை. அரசும் மதமாற்றம் என்ற குற்றச்சாட்டை கூறி   கிறிஸ்தவர்களை  ஒதுக்கவே பார்க்கிறது.

 பணம் திரட்டும் அல்லேலூய்யா  கும்பலுடன் சேர்ந்து பெரும் வியாபார உறவு தான் பேணுகிறது.  அல்லேலூயா கிறிஸ்தவத்தால் கிறிஸ்தவர்கள் மத்தியிலுள்ள rational thinking, logical thoughts மழுங்கி வருகிறது.
கிறிஸ்தவ வாழ்க்கையின் தன்மையே மாறி வருகிறது. பல அல்லேலூய்யா கும்பல் கிறிஸ்த குடும்பத்தின் அடிப்படை மகிழ்ச்சியை உடைத்து வருகிறது.

பல பெண்கள் குடும்பத்தில் கணவர் குழந்தை குட்டியுடன் இருப்பதை விட, அல்லேலூய்யா கூட்டத்தில் பங்கு பெற்று கணவரையே என் 'சகோதரனாக' பாவித்து பரிசுத்தமாக வாழ்கிறேன் என்று கூறிக்கொண்டு குடும்பங்களின் வேராக இருக்க வேண்டிய பெண்கள் குடும்ப அடித்தளத்தையே உடைத்து கொண்டு இருக்கின்றனர்

கிறிஸ்தவ வீட்டு குழந்தைகள் கலை , இசை கற்பதை விடுத்து 18 மணி நேரவும் அல்லோலூயா பாடல்கள் , அல்லேலூயா நாடகங்கள் , அல்லேலூயா உரைகளை  கேட்டு கொண்டு இருக்கும் சூழலில் தான்  தள்ளப்பட்டுள்ளனர்..

அல்லேலூயா கூட்டங்கள் கிறிஸ்தவ பெண்களுடைய வாழ்வியல்,  சிந்தனைகளிலும் பல பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.

வெள்ளைச் சேலை கட்டுதல், நெற்றியில் பொட்டு வைக்காது இருப்பது போன்ற வழக்கங்களை புகுத்தி இந்திய பெண்கள் என்ற அடையாளத்தை விலக்கி பர்தா இட்ட இஸ்லாமிய பெண்களை போன்று பொது வெளியில் இருந்து பிரித்து விடுகின்றனர்.

ட்ரான்ஸ் திரைப்படத்தில் நுணுக்கமாக, சரியாக ஆராய்ச்சி செய்து சிறப்பாக எடுத்துள்ளனர்.

சிறுபான்மையினர் உரிமை எங்கும் பறி போகவில்லை. யாராக இருந்தால் என்ன முதலில் இந்தியர்கள், தமிழர்கள், மலையாளிகள் அப்புறம் தான் அல்லேலூயா கிறிஸ்தவர்கள். அதனால் சமூக ஆர்வலர்கள் என்று சொல்ல கூடியவர்கள் இஸ்லாமியர்களை ஆதிரிக்கிறோம் என்ற பெயரில் அவர்களுக்கு செய்யும் துரோகத்தை கிறிஸ்தவர்களுக்கும் செய்ய வேண்டாம்.

அல்லேலூயா கூட்டத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கிறிஸ்தவர்கள் அல்லேலூயா கூட்டத்தில் சேர்ந்து பரலோக ராஜியம் போக துணியாமல் இந்திய ஆட்சி மன்றத்தில், உலக ஆட்சி மன்றத்திற்கு நடை போட வேண்டும். உங்கள் வருமானத்திலுள்ள 10 சதவீதம் பணத்தை உங்கள் குடும்பத்திலுள்ள ஏழைகளுக்கு , உங்கள் ஊரிலுள்ள ஏழைகளுக்கு கொடுத்து விட்டு ஜெபக்கூடத்தில் காணிக்க இடாது இருந்து பாருங்கள்  இந்த அறிவுரை அல்லேலூயா  கூட்டம் துண்டைக்காணோம் துணியை காணாம் என ஓடிவிடும்.

இந்த அல்லேலூயா கும்பல் இவர்கள் சுய லாபத்திற்காக‌ குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை .

இவர்களுக்கு உதவும் தமிழக முற்போக்கு போராளிகள்  கிறிஸ்தவர்களுக்கு உதவவில்லை, உங்கள் சிறுபான்மை அரசியலை வளர்க்கிறீர்கள். கிறிஸ்தவம் வேறு அல்லேலூயா கிறிஸ்தவம்  வேறு என்ற அடிப்படை அறிவையாவது வளர்த்து கொள்ளுங்கள்.

Mania:(mental illness by great excitement )Phobia: (an extreme or irrational fear of or aversion to something).

0 Comments:

Post a Comment