Showing posts with label film reviw திரை விமர்சனம். Show all posts
Showing posts with label film reviw திரை விமர்சனம். Show all posts

27 Jul 2025

Silenced" (கொரியப் பெயர்: "도가니" – Dogani)

 

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கொரிய திரைப்படமான "Silenced" (கொரியப் பெயர்: "도가니" – Dogani) .

காங் இன்-ஹோ (Kang In-ho) என்பவர் ஜா-ஏ அகாடமி (Ja-ae Academy) எனும் சிறப்பு தேவைகள் கொண்ட  குழந்தைகளுக்கான பள்ளியில் கலை ஆசிரியராகப் பணியேற்க,  வட ஜியோல்லா மாகாணத்தில் அமைந்துள்ள முஜின் நகரம் செல்கிறார். 

பள்ளியில் வந்து சேர்ந்ததும், அவர் பள்ளித் தலைமையாசிரியர் லீ காங்-சொக் மற்றும் அவரின் இரட்டை சகோதரரான நிர்வாகத் தலைவர் லீ காங்-பொக் ஆகியோரை சந்திக்கிறார்.அது கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் நடத்தப்படும் பள்ளி. 


தனது புதிய மாணவர்களுக்கு கலை கற்பிப்பதில் உற்சாகம் கொண்டிருந்த #இன்-ஹோ, அந்த மாணவர்கள் தன்னை ஒதுக்கி, விலகிச் செல்வதை கவனிக்கிறார். இருப்பினும், அவர் மாணவர்களிடம் அக்கறையுடன் நடந்து கொள்கிறார். 


சிறிது காலத்திற்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை பகிர   தொடங்குகிறார்கள்.  அப்போது, இன்-ஹோ ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை அறிகிறார் –பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரால்.அந்த பள்ளியின் மாணவர்கள் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளனர்,   இன்-ஹோ, பள்ளியில் நடைபெறும் இந்த கொடுமைகளை வெளிக்கொணரத் தீர்மானிக்கிறார். இதற்காக மனித உரிமை போராளி #சோ யூ-ஜின் (Seo Yoo-jin) உடன் இணைந்து செயல்படுகிறார். 


ஆனால்,  பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமல்லாமல், போலீசார், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் உள்ளூர் சமூகம்கூட இந்த கொடுமைகளை மூடிமறைக்க ஒன்றிணைந்துள்ளனர் என அவர்கள் விரைவில் உணர்கிறார்கள் –

இன்-ஹோ தன் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். ஆனாலும், அவர் முஜின் நகரத்தில் தங்கி, அந்தக் குழந்தைகளுக்கான நீதி கோரி போராடத் தொடர்கிறார்.


வழக்கறிஞர், குற்றவாளிகளுக்காக "முந்தைய பதவியின் சிறப்புரிமைகளை" (Jeon-gwan ye-u) பயன்படுத்துகிறார்.  குற்றவாளிகள் நேரடியாக பொய் பேசுகிறார்கள், லஞ்சம் கொடுத்து சலுகை தண்டனை பெற்று விடுகிறார்கள். 


தண்டனை வழங்கப்படுவதற்கு முந்தைய இரவில், லீ சகோதரர்கள் மற்றும் பாலியல் வன்முறை செய்த ஆசிரியரான பார்க் போ-ஹ்யூன் (Park Bo-hyun) ஆகியோர், தங்களது வழக்கறிஞருடன் மகிழ்ச்சியாக சிரித்து பேசி கொண்டாடுகிறார்கள்.

################################################################################

#திரைப்படத்தால் சமூக மாற்றம்


இலக்கியமும் திரைப்படமும் கொண்டிருக்கும் சக்தி விவரிக்க முடியாதது. அவை நம் சிந்தனைகளை மாற்றி, சமூகத்தையே மாற்றும் திறன் கொண்டவை. அதனால்தான் ஒரு சிறந்த இலக்கியம் அல்லது திரைப்படம் என்பதை நாம் ஒரு மதிப்புமிக்க பண்பாட்டு உரையாகவும், முக்கியமான சமூக ஆவணமாகவும் கருக்கிறோம். “The Crucible” போன்ற நாவல்களையும், “Silenced” போன்ற திரைப்படங்களையும் தொடர்ந்து காணக்கூடிய நிலை இருக்க வேண்டும், அப்படி இருந்தால் நாம் நல்ல மனிதர்களாகவும், நல்ல சமுதாயத்தில் வாழக்கூடியவர்களாகவும் மாற முடியும். இந்தப் படம் வெளியான பிறகு நீதிமன்ற தீர்ப்புகளின் மென்மையான தன்மையை எதிர்த்து பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். 


#குவாஞ்சு இன்ஹ்வா பள்ளியின் ஆறு ஆசிரியர்களில் நால்வருக்கு கல்வித்துறை கடுமையான தண்டனை பரிந்துரை செய்திருந்தது. இருப்பினும், குற்றத்திற்கான வரம்புச் சட்டம் (Statute of Limitations) காரணமாக அவர்கள் தண்டனையின்றி தப்பியதுடன், பின்னர் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.  அவர்களில் இரண்டு பேர் மட்டுமே எட்டு சிறுமிகளை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டனர் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


#உண்மை சம்பவம் கதை

முன்னாள் ஆசிரியர் கிம் யோங்-இல் (வயது 71)  1964 ஆம் ஆண்டில் நடந்த இக்குற்றத்தால்  இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறினார். அதன்பின், துணைத் தலைமையாசிரியரால் அடிக்கப்பட்டு, வேலையிலிருந்து வலுக்கட்டாயமாக விலகச் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.


#படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குள், #2011 நவம்பரில் குவாஞ்சு நகராட்சி அந்த பள்ளியை அதிகாரப்பூர்வமாக மூடிவிட்டது.


2012 ஜூலையில், குவாஞ்சு மாவட்ட நீதிமன்றம் #அந்தப் பள்ளியின் 63 வயதான முன்னாள் நிர்வாகியை, 2005 ஏப்ரலில் 18 வயது மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், குற்றம் நடந்ததை சாட்சியமாகப் பார்த்த 17 வயது மாணவியை உடல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது (இருவரும் தற்கொலை செய்ய முயற்சித்தனர் என்ற தகவலும் உண்டு. குற்றவாளி கிம் என்ற பெயரால் அடையாளம் காணப்பட்டவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு 10 ஆண்டுகள் #மின் கண்காணிப்பு காலணி அணிய உத்தரவிடப்பட்டது.


மேலும்,  மிகவும் பலவீனமானவர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க புதிய #சட்ட மசோதாக்களை சட்டமன்ற உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தினர்.  2011 ஆம் ஆண்டு, கொரிய தேசிய சட்டமன்றம், இந்தப் படத்தின் கொரிய பெயரை அடிப்படையாகக் கொண்டு #“டோகானி சட்டம்” (Dogani Law) என்ற பெயரில் ஒரு முக்கிய #சட்டத்தை இயற்றியது. 


இச்சட்டம் 13 வயதிற்குள் உள்ள குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், அதற்கான குற்றவரம்புச் சட்டத்தை (Statute of Limitations) நீக்குகிறது. மேலும், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது பாலியல் வன்முறைக்கு வாழ்நாள் சிறை வரையில் அதிகபட்ச தண்டனையை வழங்குகிறது. அதேபோல், “தனது மாற்றுத்திறன் காரணமாக எதிர்க்க முடியாத நிலை” என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற பிரிவையும் ஒழித்தது.


இத்திரைப்படம் பல விருதுகளை வென்றது. இந்தக் கோரிய திரைப்படத்தின் பன்னாட்டு தலைப்பு "Silenced" ஆகும்.

2011 நவம்பர் 4ஆம் தேதி, இந்த திரைப்படம் கீழ்க்கண்ட அமெரிக்க மற்றும் கனடிய ,லாஸ் ஏஞ்சல்ஸ், சான் ஹோசே, ஹண்டிங்க்டன் பீச், நியூ ஜெர்சி, பிலடெல்பியா, அட்லாண்டா, டல்லாஸ், சிகாகோ, சீட்டில், போர்ட்லாண்ட், லாஸ் வேகாஸ், டொராண்டோ மற்றும் வான்கூவர். நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது: 

இந்த படம் வெளியான பிறகு The Wall Street Journal, The Economist, மற்றும் The New York Times போன்ற புகழ்பெற்ற பத்திரிகைகளால் விமர்சிக்கப்பட்டது. 

2019 ஆம் ஆண்டு, இந்த திரைப்படம் Netflix தளத்தில் வெளியிடப்பட்டது.

#################

இயக்குனர் கருத்து!


இத் திரைப்படம் குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மீண்டும் உயிர்ப்பிக்கிறது  2000 முதல் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சிறப்புக் குழந்தைகளுக்காக இயங்கிய ஒரு சிறப்புப் பள்ளியில் நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து வெளிவந்ததற்கு ஆறாண்டுகளாகியும், அவை இன்னும் தீர்க்கப்படாமல் இருவந்தன. இது சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கி இருந்தது.

#2009 ஆம் ஆண்டு, #எழுத்தாளர் கொங் ஜி-யங், இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை வெளியிட்டார். அது அந்த வழக்கில் மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்தது. இப்போது, அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட புதிய திரைப்படம் மீண்டும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.


#திரைப்பட இயக்குநர் ஹ்வாங் டொங்-ஹ்யோக், இது குறித்து கூறுகையில்: "இந்த படம் விவாதத்தையும் கவனத்தையும் தூண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால் இத்தனை விரைவாகவும் வெடித்துவிடும் நான் நினைக்கவில்லை. "படத்தில் காட்டப்பட்டுள்ள குழந்தை பாலியல் வன்முறை, காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளின் ஊழல் தொடர்புகள், அதிகாரிகளின் புறக்கணிப்பு இவை கட்டுக்கதையல்ல. இவை நாள்தோறும் செய்திகளில் நாம் காண்பவை."

"இந்த சமூக அநியாயங்களை மக்கள் மீண்டும் மீண்டும் கேட்கும்போது அவர்களிடம் ஏற்படும் வெறுப்பு மற்றும் கோபம் இந்தப் படத்தின் மூலம் வெடித்து விட்டது." எனக் கூறி இருந்தார்


இத் திரைப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதில் காணப்படும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறையின் தோராயமான காட்சிகள், மற்றும் மிகவும் மனமுடைந்த முடிவு ஆகியவை காரணமாக, இது ஒரு மனச்சோர்வூட்டும் படம் என்று கூறப்பட்டது.

பலரும் இயக்குநரிடம் முடிவை மாற்றி, நாயகர்கள் வழக்கில் வெல்வதை போன்று காட்டும்படி கேட்டனர். ஏனெனில் மக்கள் சந்தோஷமான முடிவுகளை விரும்புகிறார்கள். ஆனால் இயக்குநர் சம்மதிக்கவில்லை

 

"நான் ஒரு உணர்ச்சி தூண்டும் படம் எடுக்கவில்லை; உண்மையைச் சொல்ல விரும்பினேன்." இது மக்களுக்கு அனுகூலமற்ற உணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத் தான் இப்படிச் செய்தேன். இரண்டு விஷயங்களை நினைத்தேன் — ஒன்று, இந்தச் சம்பவம் உலகத்திற்கு தெரியவேண்டும்; இரண்டாவது, இந்த வழக்கு எப்படிக் குழைப்ப பட்டது என்பதிலிருந்து, சமூகத்தின் கட்டமைப்பின் குறைபாடுகளை வெளிக்கொணர வேண்டும்." இந்த வழக்கால்   பாதிக்கப்பட்டோருக்காக போராடும் குழுவினர், இந்தப் படம் உண்மையை முழுமையாக வெளிக்கொணரவில்லை என்றும் கூறினர்:


"எழுத்தாளர் கொங் ஜி-யங் என்னிடம் சொன்னார், நாவலில் அவரால் உண்மையில் நடந்தவற்றில் மூன்றில் ஒரு பங்கையே மட்டும் எழுத முடிந்தது. என் படம், அந்த நூலில் இருந்த அனைத்தையும் கூட கையாள இயலவில்லை," என இயக்குநர் கூறினார்.


இயக்குனர் ஹ்வாங் #சூல் தேசிய பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறைப் பட்டம் பெற்றவர் :"மாணவராக இருந்தபோதே சமூகப் பிரச்சனைகளில் மிகுந்த ஆர்வம் இருந்ததால், நிறைய போராட்டங்களில் பங்கு பெற்றுள்ளதே படங்களை எடுக்க ஆரம்பித்ததற்குக் காரணம் என்கிறார்.  இந்த தீர்க்கப்படாத சமூக பிரச்சனைகள் மீது இருந்த நிராசை தான்." இப்படம் என்கிறார்.


"ஒரு படம் மூலம் சமூகத்தை மாற்ற முடியாது. ஆனால் இந்தப் படம் வெளிவந்து ஏற்படுத்திய தாக்கத்தை பார்த்தால், திரைப்படங்கள் சமூகத்தை நேர்மறையாக பாதிக்கக்கூடிய சக்தி உள்ளன என்று  நாம்  எண்ணிக் கொள்ளலாம்."என்கிறார்.


"இந்த வழக்கை மீண்டும் திறந்து குற்றவாளிகளை மறுபடியும் விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க முடியாது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு வேதனைப்பட்டனர் என்பதைக் காட்டலாம்;  ஏனெனில் அவர்கள் இன்னும் மன்னிப்பே கேட்கவில்லை என்கிறார்.

17 Jul 2025

நரிவேட்டை சில அரசியல் மனித உரிமை கேள்விகள் !

திரைப்படத்தின் தலைப்பு நரி வேட்டை என்று வைத்துள்ளனர். நரவேட்டை /நரநாயாட்டு -மனிதவேட்டை என்று தானே வந்து இருக்க வேண்டும். நரி என்பது நரியாக குறிப்பிட்டால் இந்த அரசியல் அதிகாரத்தை நரிகள் வேட்டையாடுகின்றனர் என்று குறிப்பிடுகிறார் என புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

 'நரிவேட்டை’ கேரளாவில் 20 வருடங்களுக்கு முன்பு 2003ஆம் ஆண்டு நடைபெற்ற  வயநாடு, முத்தங்கா என்ற இடத்தில் நடந்த பழங்குடி (ஆதிவாசிகளின்) மக்களின் சொந்த நிலம் வேண்டி செய்த   போராட்டம் அதை தொடர்ந்து போலிஸ், அரசின் கட்டளைக்கு அடங்கி அம்மக்களை மனிதமற்ற முறையில் ஒடுக்கியதை பற்றிய உண்மை சம்பவத்தை ஆதாரமாக கொண்டு எடுக்கப்பட்ட  திரைப்படம் ஆகும்.  இத் திரைப்படம் தற்போது கேரளா முழுவதும் வெளியிட்டு  விமர்சன பாராட்டுகளை பெற்றுக்கொண்டு வருகிறது.


முத்தங்கா போராட்டம் நடந்த போது, 2003ஆம் ஆண்டு பிப்ரவரியில்,  பத்தாம் வகுப்பு மாணவராக இருந்த இயக்குனர்,  பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதே சம்பவத்தை ஆதாரமாக கொண்டு இயக்கியுள்ளார்.   “போலீசார் 18 முறை துப்பாக்கிச் சூடு நடத்தின இக்கலவரத்தில் ஒரு போலிசும், ஒரு பழங்குடி இளைஞனும் கொல்லப்பட்டதாக அரசு கணக்கு இருந்தாலும் நான்கு பழங்குடி இனத்தினரின் மரணம்,  பலர் துன்புறுத்தப்பட்டு காயப்பட காரணமான கலவரம் இது. 
 
முத்தங்கா சம்பவத்தின் கைரளி தொலைக்காட்சி  கேமெராமேன் ஷாஜி மரத்தில் ஏறி ரகசியமாக எடுத்த சுமார் ஆறு நிமிடத்து முப்பது வினாடி காட்சிகள் மட்டுமே  பதிவாகியுள்ளது.  


மூன்று மணி நேர பீதி, நெஞ்சை நெகிழ வைக்கும் உண்மை மற்றும் அதன் கலை வடிவம், இவற்றின் கலவையாக உருவானது ‘நரிவேட்டை திரைப்படம். அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உண்மை சம்பவங்களையும் புனைவையும் கலந்துரைத்த சினிமா நடையில், ஒரு பரபரப்பான மையக்கருத்து இத்திரைப்படத்துன் ஊடாக பேசப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக சிந்திக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட ஒரு திரைப்பயணம். ஆவணப்படமல்ல இது ஒரு புனைவு படைப்பு என்பதினால்   சில விஷயங்களை விட்டு விட்டு, சிலவற்றைச் சேர்த்தே எழுதியுள்ளோம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை எழுதும்போது, படைப்பாற்றலான கற்பனையும் இயல்பாகவே கலந்திருக்கும்.” என்ற தகவலை இதன் இயக்குநர் அனுராஜ் மனோஹர் பகிர்ந்துள்ளார்.   

முத்தங்கா போராட்டம், பழங்குடியின மக்களுக்கு நில உரிமையை கோரி ஆதிவாசி கோத்ர மகா சபா (AGMS) நடத்தியது. அந்தப் போராட்டம் துரதிருஷ்டவசமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவதற்குள் சென்றது. “பல ஊடகவியலாளர்களும், தனியார் விசாரணைகளும் பல ஆண்டுகள் முயற்சி செய்தாலும், உண்மையில் என்ன நடந்தது என்பதை உறுதியாக கண்டறிய முடியவில்லை. போராட்டக்காரர்கள், எதிர்ப்பாளர்கள் – எல்லோருக்கும் தங்கள் தனித்துவமான பக்கவாதக் கதைகள் இருந்தன. அதனால் படம் முழு உண்மையைவே இருக்க முடியாது என்றும் படக்குழுவினர்  குறிப்பிட்டு உள்ளனர்

திரைக்கதை எழுதியவர் அபின் ஜோசப். விருவிருப்பான திரைக்கதையாக உள்ளது.  தமிழ் நாட்டைச் சேர்ந்த விஜய் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.  கேரளா இயற்கை காட்சிகளுடன் போராட்ட களமும்  அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். இழந்த நிலத்தை  மீட்கும் போராட்டத்தில் கொட்டப்பட்ட ரத்தத்திற்குமான உணர்வுகளை சரியாகவே  காட்சிப்படுத்தியுள்ளனர்.   ஒரு திரைப்படத்தின் உள்ளார்ந்த உணர்வுடன் கூடிய இசையை  ஜேக்ஸ் பிஜாய்  கொடுத்துள்ளார். 'நரவேட்டை சினிமாவின்  வெற்றிக்கு  ஒரு முக்கிய காரணம் இசை எனலாம்.

“மலையாள சினிமாவும்  வணிக வெற்றிக்கு என ஓடிக்கொண்டு இருக்கிற இக்கால சூழலில், மலையாள சினிமாவின் இயல்பான பாணியான கலைத்துவத்துடன் அரசியலை பேசுவது, அரசியல் பின்புலம் கொண்ட கதைகளுடன் கலைத்துவமாக  மக்களிடம் அரசியல் உரையாடல் நடந்துள்ளது பாராட்டுதலுக்குறியது.  முக்கியமாக கேரளா போலிஸ் நிலை, உயர் அதிகாரிகள் மத்திய படை அரசியல்வாதிகளின் கூட்டு எவ்விதம் எளிய மக்களை ஒடுக்கியுள்ளது என இப்படத்தில் காணலாம்.   இளம் இயக்குனர்கள்,  பழைய மலையாள  இயக்குனர் வரலாற்றிலிருந்தே ஊக்கம்கொண்டு வந்துள்ளனர் என்பதும் பெரிமைக்குறிய விடயமே . 

முத்தங்கா போராட்ட குழுவுடன் போராட்டம் துவங்கி 40 நாட்களுக்கு பின்பு தான் முதலமைச்சர் பேச முன் வந்தார். பழங்குடிகளின் உரிமையை ஆதரித்த, கேரளா அரசின் பூமி பகுந்தளிக்கலில் நிகழ்ந்த ஊழலின் எதிரொலி தான் இக்கலவரம் என்று அன்றைய இடதுசாரி தலைவி கவுரிஅம்மா சொல்லியிருந்தார். முத்தங்கா நிலத்தை தனியாருக்கு சுற்றுலா வளர்ச்சிக்காக கொடுக்கும் ஒரு நோக்கமும் அரசிற்கு இருந்தது என்கின்றனர்.   காங்கிரஸ் கட்சியின் , ஏ.கே ஆண்டணியின் ஆட்சியில் நிகழ்ந்த,   20 வருடங்கள் ஆன நிலையில்   எளிய பழம்குடி மக்களின் ஜனநாயக உரிமையை நிலைநிறுத்த போராடிய மக்களை ஒடுக்க  அரசு கைகொண்ட நரித்தனம் பற்றி பேசிய திரைப்படம் இது. நரிவேட்டை’ திரைப்படம், மறக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்படாத உண்மைகளை இளைய தலைமுறைக்கும், கடந்த தலைமுறைக்கும் நினைவூட்டி உள்ளது.  அப்போதைய ஊடகத்தல் ஆந்திரா நக்சல்கள் ஈழப்புலிகள் இந்த போராட்ட குழுவினருடன் கலந்து உள்ளனர் என ஊடகவியாளர்களை வைத்து எழுதியும் தவறான செய்தியையும் பரவவிட்டனர்.  .

 

“முத்தங்கா போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கீதானந்தன் போன்றவர்கள், படத்தில் தங்களை காட்டியிருப்பதை பற்றி விமர்சனங்கள் முன்வைத்துள்ளனர். இருப்பினும் இது பொதுவாக மக்களிடையே விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.  கூடுதல் உண்மைகளை வெளிவரவும் இத்திரைப்படம் காரணமாகலாம். பழங்குடிகளின் உரிமை பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு வரலாம். இவர்களுக்கான நிலம் மற்றும் உரிமைகள் பெறா வண்ணம் இவர்களின் மதமாற்றத்திற்கு உற்சாகப்படுத்துவதும் அரசின் உள்நோக்கம் கொண்ட செயலாகும். 


ஆர்யா சலீம் பழங்குடி தலைவியாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார், மேலும் பழங்குடி மக்களில் போராளியாக சி. கே. ஜனுவை நினைவூட்டியதற்காக  சிறப்பு பாராட்டுக்குரியவர். 


திரைப்படத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள வர்கீஸ் பீட்டர் என்னும் கதாபாத்திரம், உண்மையைச் சொல்ல முயலும் ஒரு இளைஞனின் உருவகமாக உள்ளது. நிஜத்தில்  இதுவரை உண்மையைச் சொல்ல யாரும் தைரியமாக முன்வரவில்லை என்பதே உண்மை.


டோவினோ தாமஸின்,  வர்கீஸ் பீட்டர் என்ற கதாப்பாத்திரப் பெயர் போலிஸால் கொலை செய்யப்பட்ட வயநாட்டை செர்ந்த வர்கீஸ் என்ற உண்மை நக்சலையும் நினைவுப்படுத்தியது. வர்கீஸ் ஒரு ஏழைத்தாயின் மகன். நன்றாக படித்து பட்டதாரியான இளைஞன். தான் விரும்பும் அரசு வேலைக்கு வர வேண்டும் என ஆசை கொண்டு பல அரசுத் தேர்வுகள் எழுதி வரும் இளைஞர். இந்நிலையில் போலிஸ் வேலைக்கு தேர்வு ஆகிறான். ஆனால் பிடிக்காத போலிஸ் வேலையை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவனுடைய வாழ்க்கை சூழல் உந்துகிறது. காதலி வங்கியில் பணி செய்து வரும் சூழலில் அவளை திருமணம் முடிக்க இந்த வேலையை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.  முதல் பணி இடமாகவே ஆதிவாசி போராட்ட களம் அமைகிறது. அங்கு தனது நண்பன் போலிஸ் பஷீர் கொல்லப்படுகிறார். அந்த மரணம் ஆதிவாசிகள் செய்தது என சந்தேகப்பட்டாலும் அதன் உண்மையை கண்டு பிடிக்கும் போது அதிற்சிக்கு உள்ளாகிறான். போலிஸ்காரர்கள் மிகவும் நம்பின மிகவும் மதித்த தமிழன்  உயர் அதிகாரி தான் இதன் பின்னால் என அறிந்து கொள்கிறான். இயக்குனர் சேரன் உயர் தமிழ் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். (எப்போதும் போல மலையாள திரையுலகின் தமிழ் இனம் மேலுள்ள வன்மமாகவும் தெரிகிறது இப்பாத்திரப்படைப்பு. கேரளாவில் ஏற்கனவே லக்‌ஷ்மணா, ஜயராம் படிக்கல் போன்ற கொடும் போலிஸ் அதிகாரிகள் இருக்கும் போது தமிழன் போலிஸ் உயர் அதிகாரியை கொடிய, வில்லத்தனம் பிடித்த கொடும் கோலன் அதிகாரியாக காட்டினது நெருடலாகத்தான் உள்ளது. சேரன் உயரமும் போலிஸ் அதிகாரியாக நடிக்க போதவில்லை என்றே தோன்றினது. ஆனால் வில்லனாக சிறப்பாக நடித்து இருந்தார் என்பதையும் மறுக்க இயலாது.)  



பிற்பாடு வர்கீஸால் போலிஸ்காரர்களால்  ஆதிவாசிகள் மேல் செய்த வன்முறையை மறைத்து போலிஸ் அதிகாரியாக தொடர மனம் அனுமதிக்கவில்லை.  நடந்த உண்மையை நீதிமன்றத்திற்கு எட்ட வைக்கிறார். கொடும்கோலனான போலிஸ் அதிகாரி நீதி விசாரணைக்கு உள்படுத்தபடுவதுடன் கதை முடிகிறது. வேடனின் பாட்டை கடைசி பாடலாக சேர்த்துள்ளனர். பெரும் போராட்டத்தை பற்றி சொல்லிய கதையில் ஜானு போன்ற பழங்குடி பெண் தலைமை தாங்கிய,  இந்திய அரசின் அரசியல்மைப்பு மீறலை,  தங்கள் உரிமையை தேசிய சர்வதேச அளவிற்கு கொண்டு சென்ற கதாப்பாத்திரங்களை கண்டு கடைசியில் வேடன் பாடல் அப்படி பெரிய தாக்கத்தை உணர்வு ரீதியாக ஏற்படுத்தவில்லை. உண்மையான போராட்டங்களை வேடன் போன்ற கலைஞர்களின் வேடத்திற்குள் ஒளித்து வைக்கும் தற்கால அரசியல் சூழ்சியை மட்டுமே நினைவுப்படுத்தியது.  1.3 சதவீதம் வரும் பழங்குடி மக்களின் உரிமை பற்றி எந்த அரசிற்கும் அக்கறை இல்லை. தற்கால பிரணாய் அரசு இது போன்ற போராட்டம் வராது இருக்க வேடன் போன்ற வேடம் போடும் பாடகர்களை  மக்களிடம் கடத்தி போராட்டத்தை பாடல் கஞ்சா பாவனை என மடை மாற்றி விடுவதில் வெற்றியும் கண்டுள்ளனர். 





பாதேரி (வயநாடு) அருகே நடத்தப்பட்ட சில பிரமாண்ட காட்சிகளில், 1800-க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் பங்கேற்றுள்ளனர். ”சினிமா ஒரு கலையும் , ஆனால் அதே சமயம் ஒரு தொழிலும் ஆக இருக்கையில் இது போன்ற திரைப்படங்கள் பெரும் நம்பிக்கையை தருகிறது. 



 அரசியல் கேள்விகளை நமது திரைப்படங்கள் எடுத்து உரைப்பது மகிழ்ச்சிக்குரியது. அந்த அர்த்தத்தில், ‘நரிவெட்ட’ ஒரு தைரியமான, தீவிரமான முயற்சி. சினிமா வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்ல, சவால் விடுக்கும் ஒரு மீடியம் ஆகவும் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், புதிய தலைமுறையை சிந்திக்க வைக்கும் இப்படைப்பு காலந்தோறும் நமக்குத் தேவை.

1 Jul 2025

தி சில்ட்ரன்ஸ் டிரெயின் (The Children's Train)

 ட்ரெயின் ஆஃப் சில்ட்ரன் திரைப்படத்தை ட்ரெனோ டீ பாம்பினி மற்றும்  கிறிஸ்டினா கொமென்சினி இணைந்து எழுதி,  கிறிஸ்டினா கொமென்சினி  இயக்கி உள்ளார்.  இது வயோலா ஆர்டோனின்  2019 ஆம் ஆண்டு  வெளியான நாவலை அடிப்படையாகக்  கொண்டது.  தற்போது திரைப்படமாக நெட்ஃபிக்ஸ் தளத்தில் உலகளவில் கிடைக்கிறது.

 

தாய்மை,  தாய்க்கும் மகனுக்குமான  உறவு, அவர்களில் உருவாகும் மோதல் இவையை மையமாக கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. wஆட்டின் வறுமை, குடும்ப நிலை  குழந்தைகளின் குணநலத்தை எவ்விதம் நிர்ணயிக்கிறது என ஆராய்கிறது  இச்சினிமா. போர் காரணத்தால் வறுமையில் ஆன நிலத்திலுள்ள பெண்களின் உரிமைகள்  மற்றும்  அவர்ள் எதிர்கொள்ளும்   பிரச்சினைகளில்   பற்றி சொல்லும்  படமாகும்  இது .

 

ஆண்டு 1946, போரினால் பேரழிவிற்குள்ளான நேபிள்ஸிலில்  குழந்தைகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானர்.  பசியால் எலிகளை  உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டனர். , கொடுமையான  இச்சூழலில் இருந்து குழந்தைகளை மீட்கும் விதம், கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதியான இத்தாலிய பெண்கள் சங்கம் ஊடாக  ஒரு சமூகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.   இந்தத் திட்டத்தின் ஊடாக  தெற்கு இத்தாலியில் உள்ள  70,000 ஏழைக் குழந்தைகளை வடக்கில் உள்ள பணக்கார குடும்பங்களுடன் குளிர்காலத்தைக் கழிக்க அங்கு அவர்கள் வரவேற்கப்பட்டு, உணவளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு,  சில காலம் கழிந்து  தங்கள் சொந்த  வீடுகளுக்குத் திரும்பும் நம்பிக்கையுடன் வளர்கின்றனர். அமெரிகோவும் இச்சிறுவர்களில் ஒருவன்.

 


அவது உயிரியல் தாய், பல சிரமங்கள் இருந்தபோதிலும், அவனைத் தானே வளர்க்க முயற்சிக்கிறாள்,  ஆனால் தன்னால் வறுமையற்ற வாழ்க்கை வழங்க முடியாத நிலைய்யில்  தனது மகனுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னொரு ஊருக்கு அனுப்பவும்  ஒப்புக்கொள்கிறாள். அங்கு அவனுக்கு ஒரு அன்பான தாய் , வளர்ப்பு தாயின் சகோதரர் குடும்பம் கிடைக்கிறது.

  வளர்ப்புத் தாய் ஆரம்பத்தில் "தாய்மை" பாத்திரத்தை தயக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாள், ஆனால் இறுதியில் அவரது வாழ்க்கையை மாற்றும் குழந்தையாக அமெரியாவுடன்  ஒரு ஆழமான பிணைப்பு உருவாகுகிறது. வளர்ப்பு மகனை பிரிய மனமில்லாது திரும்ப அனுப்புகிறாள்.

 


மறுபடியும் சொந்த தாயுடன் வாழும் சூழல் வந்தாலும் தாய்க்கும் மகனுக்குமான உறவு மிகவும் தொலைவாகி விடுகிறது. தனது தாய் தான் ஒரு இசைக் கலைஞனாக இருப்பதை தடை செய்ததும் தன்னை ஒரு குழந்தை தொழிலாளியாக வேலைக்கு அனுப்பியதும் அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. குறிப்பாக தனது இசைக்கருவி வயலினை தாய் விற்று விட்டார் என அறிந்தும்  அவளை மிகவும் வெறுக்கிறான்.  தப்பித்து மறுபடியும் வளர்ப்பு தாயிடம் சேர்வதுடன் படம் நிறைவு பெறுகிறது.

 

வறுமை குழந்தைகளின் குணத்தில் வருவிக்கும் மாற்றத்தை மிகவும் தெளிவாக சொல்கிறது இப்படம். எலிக்கு கூட வண்ணம் பூசி விற்று பணம் ஈட்டும் இடத்தை எட்டுகிறது குழந்தை வாழ்க்கை. மற்றொரு நிலைப்பகுதிக்கு  இடம் பெயரும் போது அவர்களுக்கு உருவாகும் அடையாளச் சிக்கல், மற்றவர்கள் தங்களை துன்புறுத்தி விடுவார்களோ என்ற அச்சம் தொடர்ந்து பயணிக்கிறது.  

 

தனது தந்தை  அமெரிகோவின் மேல் கொள்ளும் பாசத்தைப் பார்த்து பொறாமைப்படும் லூசியோவுடன் முதலில் அமெரிகோ மோதலில் ஈடுபடுகிறான். பிற்பாடு நண்பர்களாக இணைகின்றனர்.

 

அல்சைடின் குடும்பத்தினர் அமெரிகோவை அடுப்பில் ரொட்டி சுட அழைக்கும்போது, ​​அவர்கள் தன்னை அடுப்பில் வைத்து  சமைக்க போகிறார்கள் என்று அஞ்சுகிறான். பிற்பாடு நம்பிக்கை கொண்டு அக்குடும்பத்துடன் மகிழ்ச்சியில் வாழ ஆரம்பிக்கிறான்.  அவனது வளர்ப்பு தாய்  கோதுமை அறுவடையின் முடிவில் வீட்டிற்குச் செல்வதாக உறுதியளிப்பது அவனுக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுக்கிறது.  


 

உங்கள் கருணை தேவை இல்லை என ஒரு பெண் குழந்தை வளர்ப்பு பெற்றோரிடம் சொல்வதும்,  எங்களை  உங்கள் இரக்கத்தால் தான் தத்து எடுத்து வளர்க்கிறீர்களா என்று கேட்பதும் மிகவும் முக்கிய பகுதி. தன்மானமுள்ள குழந்தைகள் இரக்கம், கருணையை விட  மனித நேயம், மனித உரிமையே விரும்புகின்றனர் எனச் சொல்லும் திரைப்படம் இது.

 

அமெரிகோ பள்ளியில் படிக்கிறார், அங்கு அவன் தெற்கத்தியன் என்பதால்  கேலிக்கு உள்ளாகிறான், அதே நேரத்தில் லூசியோவால் பாதுகாக்கப்படுகிறான்.  ஒரு மே தின விழாவில், லூசியோ தனது தாயைப் பற்றி கேலி செய்தான் என்பதாl  அமெரிகோ, இதனால் அமெரிகோ லூசியோவுடன் மல்லுக்கட்டி சண்டையிடுகிறான், இந்நிலையில் தனது வலர்ப்பு தாயை தேடி வரும் போது ஆணாதிக்கவாதியான சக ஊழியரால் டெர்னா தாக்கப்படுவதைக் ண்டு கலங்குகிறான். தனது தாய் என்றால் திரும்ப அடித்து இருப்பாள் என்று தைரியம் சொல்கிறான்.

 

1994 ஆம் ஆண்டில், தற்போது வெற்றிகரமான வயலின் கலைஞராக இருக்கும் ஒரு வயது வந்த அமெரிகோவுக்கு தனது தாய் அன்டோனியெட்டாவின் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது. சொந்த ஊர் நேபிள்ஸுக்கு வந்த அவர், தனது பழைய வயலின் தனது வீட்டில் இருப்பதை  கண்டுபிடித்து, வளர்ப்பு தாயிடம் போக அனுமதித்த தாயை எண்ணி கண்ணீர் விடுகிறான்.


இதில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகார்களூம் சிறப்புற தத்துவரூபமாக நடித்துள்ளனர்.  
இந்தப் படம் அக்டோபர் 20, 2024 அன்று 19வது ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.  இது டிசம்பர் 4, 2024 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியிடுள்ளது.

3 Jan 2022

ஷிகாரா’

விது வினோத் சோப்ராவின் திரைப்படம்  ‘ஷிகாரா’.   இது 2020 ல் வெளிவந்தது. 1990 ல் காஷ்மீர் பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டதை பின்புலனாக கொண்டு   இளம்  தம்பதிகளான சிவ்குமார் தார் மற்றும் சாந்தி தார் வாழ்க்கையைத் மையமாகச் சொன்ன  கதை இது. காஷ்மீரி பண்டிதர்களின் அவலநிலையையும், துன்பங்களை எதிர்கொள்ளும் அவர்களின் தீர்க்கமுடியாத வலிமையையும் தைரியத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த முயற்சியாகும் இத்திரைப்படம்.

பல தசாப்தங்களாக இருக்கும் தங்கள் சொந்த பூர்வீக ஊரில், அக்கம் பக்கத்தின் ஆதரவுடன் பாதுகாப்பாக இருப்பதாக  நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் ஆசிரியரும், இலக்கிய ஆர்வலர் சிவ் மற்றும் அவரது மனைவி சாந்தியும்.  திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிய நிலையில்  அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் வகுப்புவாத பதற்றம் ஒவ்வொரு நாளிலும் அதிகரித்து வருகிறது தம்பதியினரை கலக்கம் கொள்ள செய்கிறது.  சிவ்வின் உயிர் நண்பன் லத்தீப்பின் அரசியல்வாதியான தகப்பனார்  கொல்லப்படுகிறார்.  அத்துடன் கிரிக்கட் விளையாட்டு வீரரான  லத்தீப், தீவிரவாத இயக்கங்களில் இணைந்து கொள்கிறார்.

 தங்களுக்கு தினம் பால் கொண்டு வரும் பால் வியாபாரி ”இனி உங்கள் வீடுகளில் நாங்கள் குடியிருப்போம், நீங்கள் தில்லிக்கு போக வேண்டியது தான்” என்கிறான் குடூரச்சிரிப்புடன்.பைத்தியக்காரன் புலம்புகிறான் என எண்ணி ஆறுதல் அடைகின்றனர்.  ஆனால் ஜனவரி 19, 1990 இன் கொடூரமான இரவு தங்கள் உயிரை  காப்பாற்றிக் கொள்ள,  பல்லாயிரம்  காஷ்மீரி பண்டிதர்களுடன் தங்கள் பிறப்பிடத்தை விட்டு வெளியேறி அகதிகளாக தில்லி வந்து சேர்கின்றனர்.   

முனைவர் பட்டத்திற்கு சேர இருந்த சிவ், அகதிமுகாமில் ஆசிரியராக தன்னார்வத்துடன் பணிசெய்து கொண்டு தனது காதல் மனைவியுடன், எல்லாவித துன்பங்களையும் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்.  அத்துடன் முப்பது வருடமாக அமெரிக்கா அதிபருக்கு தங்கள் நிலையை குறிப்பிட்டு  தொடர்ந்து  கடிதங்களும் எழுதி வருகிறார்.   இத்தனை துன்பத்திலும் தங்கள் குழந்தைகள் கல்வி பெற வேண்டும், மனித நேயர்களாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்.

காஷ்மீரில், ஆப்பிள் மலிவாக கிடைக்க பெற்றவர்கள், தில்லியில் தக்காளிப் பழத்தை உண்டு வாழும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். ஒரு திருமண நிகழ்விற்கு பங்கு கொள்ளும் தம்பதிகள், தங்கள் தனித்த காஷ்மீர் கலாச்சாரம் மறைந்து, சினிமா கேளிக்கை கலாச்சாரத்திற்குள் புதுத்தலைமுறை வந்தடைந்ததை கண்டு வருந்துகின்றனர்.


30 வருடம் ஆகிவிட்ட நிலையில் இந்திய அரசாலும் தீர்வை கொடுக்க இயலவில்லை, அமெரிக்கா அரசும் எந்த பதிலும் தரவில்லை.  அப்படி இருக்க தனது மனைவி, மூளை சம்பந்தமான நோய்க்கு தாக்கப்பட்டதை அறிந்து கொள்கிறார் சிவ்.  என்றாவது தாயகம் திரும்பி போவோம் என்ற நம்பிக்கையில் விற்காது வைத்து இருந்த தனது பூர்வீக வீட்டை விற்று சிகித்சை மேற்கொள்ள முடிவெடுத்த நிலையில் மனைவியும் இறந்து போகிறார். மனைவியின் அஸ்தியை பூர்வீக வீட்டில் சேர்ப்பதுடன் கதை முடிகிறது.

இந்த திரைப்படத்தில் ஒரு கருத்தாக ‘தலைமை’ என்பது மக்களை பிரித்து ஆள்வது அல்ல, ஒற்றுமையாக சேர்த்து வைத்து ஆள்வதே என்ற கருப்பொருளை முன்நிறுத்த துணிகிறார் இயக்குனர்.  முஸ்லீம் தீவிரவாதியான தனது நண்பன் லத்தீபுடன் கடைசி வரை நட்பு பேணுகிறார் சிவ். ஆயுத வியாபாரிகளான அமெரிக்காவால் தான்; சகோதர்கள் போல் வாழ்ந்த இஸ்லாமியர்களும் காஷ்மீர் பண்டிதர்களுக்கும் இடையில் தொடர்ச்சியான மோதல் உருவானது  என்று  சொல்கிறார் இயக்குனர்.

1980 இல், அப்துல்லா காஷ்மீரின் இஸ்லாமியமயமாக்கலைத் தொடங்கினார். அவரது அரசாங்கம் சுமார் 2,500 கிராமங்களின் பெயர்களை அவற்றின் உண்மைப் பெயர்களிலிருந்து புதிய இஸ்லாமிய பெயர்களாக மாற்றியது.

செப்டம்பர் 14, 1989 வக்கீல் மற்றும் பாஜக தலைவரான டிக்கா லால் தபூவை அவரது இல்லத்திற்கு வெளியே கொடூரமாக கொலை செய்யப்பட்டது;  சிறுபான்மை சமூகமான பண்டிட்டுகளுக்கு   அச்சத்தை ஏற்படுத்தியது.  மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஜே.கே.எல்.எஃப் இன் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான மக்பூல் பட்டுக்கு  மரண தண்டனை விதித்திருந்த  ஓய்வுபெற்ற நீதிபதி நிகலந்த் கஞ்சூ  பகலில் கொல்லப்பட்டார்.  டிசம்பர் 8, 1989 அன்று, ஜே.கே.எல்.எஃப் உறுப்பினர்களால் அப்போதைய வி.பி.சிங் அரசாங்கத்தில்  உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா சயீத்  கடத்தப்பட்டார்.  அப்துல்லா தலைமையிலான அரசின் சிறையில் அடைக்கப்பட்ட 13 தீவிரவாதி உறுப்பினர்களை விடுவித்த பின்னர் ரூபையா சயீத்   விடுவித்தனர்.

இதற்கிடையில், செய்தித்தாள்கள், சுவரொட்டிகள் மற்றும் மசூதிகள் மூலமாக காஷ்மீரி பண்டிதர்களுக்கு  இஸ்லாத்திற்கு மாறவும், காஷ்மீரை விட்டு வெளியேறவும் அல்லதுகொல்லப்படுவீர்கள் போன்ற மூன்று வாய்ப்புக்களை அறிவித்து சுவரொட்டிகள் காணப்பட்டன.   ஒரு உள்ளூர் உருது தினசரி, அப்தாப் இந்துக்களை வெளியேறுமாறு அச்சுறுத்தும் செய்திகளையும் எடுத்துச் சென்றது.

 ஜனவரி 19 அன்று, ஃபாரூக் அப்துல்லா அரசாங்கத்தை அகற்றி , ஆளுநரின் ஆட்சி அமலுக்கு வந்தது.  அத்துடன் பண்டிட் சமூகம் ஜனவரி 20 ஆம் தேதி,   காஷ்மீர்  பள்ளத்தாக்கிலிருந்து முதன்முதலாக வெளியேறத் தொடங்கியது.  ஜனவரி 21 அன்று, காஷ்மீர் மோதலில் சி.ஆர்.பி.எஃப், 160 காஷ்மீர் முஸ்லீம் எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொன்றது.  காவல்துறையினர் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறியதால் பண்டிதர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவானது.  ஸ்ரீநகரில், பிப்ரவரி 13 ஆம் தேதி, தூர்தர்ஷன் நிலைய இயக்குநர் லாசா கவுல் சுட்டுக் கொல்லப்பட்டார். பி.எஸ்.எஃப் பணியாளரின் மனைவி எம்.என். பால் என்ற அரசாங்க அதிகாரியின் மனைவி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பகவத் கீதையை காஷ்மீரிக்கு மொழிபெயர்த்த பிரேமி, தனது மகனுடன் அவரது வீட்டின் அருகே கொல்லப்பட்டார். அதன்பின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டாவது, பெரிய வெளியேற்றம் நிகழ்ந்தது.  அரசியல் போட்டிகள், தீவிர இஸ்லாமியமயமாக்கல் மற்றும் கொடூரமான கிளர்ச்சியின் மத்தியில், சிறுபான்மை சமூகமான  காஷ்மீர்  பண்டிதர்களுக்கு தங்கள் தாய் நாடு, சொத்துக்கள், வேலைகள், பண்ணைகள் மற்றும் கோயில்களை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை..  இந்தியாவின் வரலாற்றில் முன்பு இல்லாத வகையில் நடந்த வெளியேற்றங்களில் ஒன்றாகும்.

 அரசியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் எவன்ஸின் கூற்றுப்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் காஷ்மீர் பண்டிதர்களில் 95 சதவீதம் (1,50,000 முதல் 1,60,000 )  பேர் 1990 ல் வெளியேறினர் என்கிறது.  மறுபுறம், நோர்வே அகதிகள் கவுன்சிலின் உள்ள இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தின்  அறிக்கையின் படி  2,50,000 பண்டிதர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.  இதற்கிடையில், ஒரு சிஐஏ அறிக்கையின் படி  மொத்த மாநிலத்திலிருந்து 3,00,000 பேர் இடம்பெயர்ந்ததாகக் கூறுகின்றனர்.  


காஷ்மீர் பத்திரிகையாளர் கோவர் கிலானி, சில காஷ்மீர் முஸ்லிம்களின் வேண்டுகோளின் பேரில், இந்திய மூத்த நிர்வாகி ஜக்மோகனிடம் பண்டிதர்களை பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறவிடாமல் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலாக, பண்டிதர்கள் வெளியேற முடிவு செய்தால், அவர்களுக்காக அகதி முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், புறப்படும் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என்றும் ஜக்மோகன் கூறினார்.  அவர்கள் வெளியேறுவதில் இருந்து பின்வாங்கினால் அவர்களுடைய பாதுகாப்பிற்கு தன்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் அவர் அறிவித்து இருந்தார்.

 தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றப்பட்டு ஜம்மு மற்றும் டெல்லியில் உள்ள அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட் அகதிகள் சிறிய அறைகளில் குடியேறி, மோசமான நிலைமைகளுக்கு உள்ளாகினர். அவர்களில் பலர் தங்கள் மூதாதையர் நிலத்திற்குத் திரும்புவதாக 30 வருடங்களாக நம்பிக்யோடு  இருக்கின்றனர்.

2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது, ​​காஷ்மீர் பண்டிதர்களை உள்ளடக்கிய 64 குடிமக்கள் “இதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் செய்தனர்..

இப்படி வரலாறு இருக்க, கதையில் காதல் வாழ்க்கைக்கு கொடுத்த முக்கியம்  வரலாற்றில் நிகழ்ந்த கொடூர சம்பவங்களூக்கு கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.  ஒரு சில  குறிப்புகளுக்கு அப்பால்  படம் துயர் சம்பவங்களை பற்றி செல்லவில்லை, திரைக்கதையின் சில பகுதிகள்  அவசரமாக எழுதப்பட்டதைப் போல கடந்து சென்றது என்றும்  சிலர் குறை கூறினர். .

அறிமுக ஜோடிகளான சாடியா மற்றும் ஆதில் கான் ஆகியோர் திரையில் ஒரு அழகான  ஜோடியாக திறம்பட நடித்துள்ளனர்.  ‘ஷிகாரா’வின் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சந்தேஷ் ஷாண்டில்யாவின்  இசை மற்றும் பின்னணி இசை  இதமாக கதையை கொண்டு செல்ல உதவுகிறது. காட்சி அமைப்பு சிறப்பாக செய்ட்திருந்தனர்.  திரைக்கதையிலும் தேவையான ஆழம் இருந்தது. 

திரைப்படம் கற்பனை என்ற் பெயரில் திரைப்படம் எடுப்பவர்கள் மத்தியில் ஒரு வரலாற்றை மிகவும் அழகியலுடன் ஆழமான கருத்தாங்களுடன் ஒரு சில வரலாற்று சம்பவங்குளடன் எடுத்த இந்த திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய வரலாற்று திரைப்படம். 


https://www.ceylonmirror.net/46049.html?fbclid=IwAR3J4dvKjLzARdxIe4kI-RzOi0aAbyj-Ixov54z7wGjJv4CsUGoNsLFrofI

 

 


27 Jun 2021

நாலு பெண்ணுங்கள்!(நான்கு பெண்கள்!)

 தகழி சிவசங்கர பிள்ளையின் நான்கு சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு அடூர் கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய நாலு பெண்ணுங்கள்(நான்கு பெண்கள்) என்ற மலையாள திரைப்படம் 2007ல் வெளியானது. இப்படத்தில் பத்மபிரியா, கீது மோகன்தாஸ், மஞ்சு பிள்ளை, நந்திதா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமூகத்தின் வெவ்வேறு காலகட்டங்களில்(1940 முதல் 1960 வரையிலான ஆண்டுகள்), கேரளா ஆலப்புழா குட்டநாட்டுப் பகுதி மற்றும் விவித சமூக அடுக்குகளைச் சேர்ந்த பெண்கள் வாழ்க்கையை பற்றிய கதையிது.

இந்த திரைப்படம், கதைக்கரு, திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை மற்றும் திரை நுட்பங்கள் சிறப்பாக ஒருங்கிணைந்து அழகிய பிரேம்களுடன் இத்திரைப்படம் பெண்மையின் பயணத்தை விவரிக்கிறது.

இசை தாமஸ் காட்டுகடப்பள்ளி, ஒளிப்பதிவு ராதா கிருஸ்ணன் எம்.ஜெ,  எடிட்டிங் பி. அஜிதகுமார், கலை மார்தாண்டம் ராஜசேகரன் செய்ட்துள்ளனர்.  55 வது இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் அடூர் கோபாலகிருஷ்ணன் சிறந்த இயக்குநராகவும், பி. அஜித்குமார் சிறந்த எடிங்க் விருதையும் பெற்றார்.

முதல் கதை ‘ ஒரு சட்டத்தை மீறியதின் கதை!’


ஒருவனுக்கு மனைவியாக வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்யும் ஒரு தெரு விபச்சாரி குஞ்சிபென்னு (பத்மபிரியா) எதிர் கொள்ளும் பிரச்சினை தான் இதில்.  விபச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கும் போது கண்டிக்காத நீதிமன்றம், தன் காணவருடன் வாழும் போது விபசாரம்  குற்றம் என்ற பெயரில்  நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் காட்சியுடன் கதை முடிகிறது. இந்திய நீதி அமைப்பை கேலி பண்ணும் விதம் இக்கதை அமைந்திருந்தது.

கன்னி


குமாரி (கீது மோகன்தாஸ்)   ஒரு ஒரு ஏழைத் தொழிலாளி. தனது தகப்பன் சுகவீனமாக இருப்பதால் வீட்டை நடத்தும் பொறுப்பை மிகச் சிறிய வயதிலேயே ஏற்றுக் கொள்கிறார். இருப்பினும் மகள் கல்யாண வயதை எட்டுவதை தொடர்ந்து நாராயணன்(நந்து) என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்கின்றனர். நந்துவின் செய்லபாடுகள் வினோதமாக உள்ளது. மனைவியிடம் உரையாடக்கூட  விரும்புவதில்லை. நேரா நேரம் நல்ல சாப்பிட்டு விட்டு தனியாக தூங்கி விடுகிறார். சில காலம் கழிந்து  குமாரியை அவளது வீட்டில் கொண்டு விட்டு விட்டு திரும்ப அழைத்துச் செல்ல வரவேயில்லை. நாட்கள் செல்ல செல்ல, அவளுடைய குணம் சரியில்லாததால் தான் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவுகின்றன.  கடைசியாக குமாரி, தனக்கும் நாராயணனுக்கும் திருமணம் நடக்கவில்லை என்று சொல்வதுடன் கதை முடிகிறது.

சின்னு அம்மா

குழந்தைகள் இல்லாத சின்னு (மஞ்சு பிள்ளை) தனது அன்பான கணவருடன்  மிகவும் திருப்திகரமான  வாழ்ந்து வருகிறார்.  நீண்ட காலத்திற்கு முன்பே தமிழகத்திற்கு ஓடி போன நாராயண பிள்ளை, தமிழகத்தில் மனைவி மக்களுடன் வசதியாக வாழ்ந்து வருகிறவர். சொந்த ஊர் வந்த நாராயணன் தனது பள்ளி தோழி சின்னுவை  அவள் வீட்டில் தனியாக இருக்கும் போது சந்திக்க வருகிறான்.  சின்னுவிற்கு குழந்தை இல்லை என அறிந்ததும்,தன்னால் சின்னுவிற்கு ஒரு குழந்தை தரும் என ஆசை வார்த்தை கூறுகிறான். குழந்தை இல்லை என்ற அத்தனை ஏக்கவும், வருத்தவும் இருந்தும் கணவருக்கு நம்பிக்கை துரோகம் செய்த தகாத உறவில் தனக்கு ஒரு குழந்தை தேவை இல்லை என்பதை முடிவெடுத்து மறுக்கிறார்.

நித்ய கன்யகா(முதிர் கன்னி)

கடைசியாக, ஒரு நடுத்தர வர்க்கப் பெண் (நந்திதா தாஸ்) பற்றியது. அவரது தாய் , ஒரு மூத்த சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் அடங்கிய குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்.  நந்திதாவை பெண் பார்க்க வரும் மணமகன் அவளது இளைய தங்கையை  விரும்புவதாகக் கூறி திருமணம் செய்து கொண்டு போகிறார்.

ஆண்டுகள் செல்ல செல்ல, மூத்த சகோதரனும் திருமணம் செய்து கொள்கிறான்.  பின்பு இளைய சகோதரியும் திருமணம் செய்து கொண்டு போக, தன் தாய் இறந்தவுடன், தங்கையின் குடும்பத்துடன் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறாள்.
அங்கு தங்கை குழந்தைகளை கவனித்துக்கொண்டு வாழ்க்கை சுமூகமாக போய் கொண்டு இருக்க , தங்கைக்கு அக்கா மேல் சந்தேகவும் பொறாமையும் பீடித்துக் கொள்கிறது. மனம் நொந்த நந்திதா தனியாக தனது வீட்டில் வாழ முடிவு எடுக்கிறார்.  தனிமையில் கள்ள உறவிற்கு ஒருவன் அழைக்கிறான்.  இறுதியாக தனது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் மற்றவர்களின் விருப்பங்களை உடைத்து, சொந்தமாக வாழ முடிவு செய்தாள்.

இந்த படம் செப்டம்பர், 2007 இல் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா, 51 வது லண்டன் திரைப்பட விழா,வியன்னா திரைப்பட விழா, சியாட்டில் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. . இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட விழாக்களில் இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளன.

மியாமி சர்வதேச திரைப்பட விழா அடூர் கோபாலகிருஷ்ணனின் நாலு பெண்ணுங்களைத் தேர்ந்தெடுத்தது.