header-photo

புனித வெள்ளி தரும் உண்மைகள்இன்று பெரியவெள்ளி அதாவது புனித வெள்ளி கொண்டாடப்படுகின்றது. எதனால் யேசு நாதர் கொல்லப்பட்டார்? யார் கொன்றார்கள்’? எனக்கேட்டால்  ஆழமான கருத்துக்கள் மரணத்தை பற்றி விளங்கும்.

மரணம் நிர்ணயிக்கப்பட்ட்து , அதை யாராலும் தவிற்க இயலாது. முன்பே அறிந்து கொண்டால் மிகவும் துயர் தருவது, அவ்வகையில் யேசுவின் மரணம் பற்றி அவருக்கே தெரிந்திருந்த்து. அந்த 'வியாழன்' விருந்து தான் தன் கடைசி உணவு நேரம் என்றும் தெரிந்திருந்த்து. எப்படி கொல்லப்படுவோம் என்றும் தெரிந்திருந்தார். இது ஒரு நிமித்தம் இது முன் கூட்டி வகுக்கப்பட்ட தொடர்ச்சியான சம்பவங்களும்  என அறிந்திருந்தார்.

யேசு நாதர் கடவுளிடம், இயன்றால் இந்த துன்பத்தை என்னிடம் இருந்து விலக்கி விடுங்கள் ஆனால் என் விரும்பமல்ல உங்களுடைய விருப்பமே  என பிராத்திக்கின்றார். அவர் கவலையால் வியர்வை துளிகள் இரத்த துளிகளாக விழுந்தது என சொல்லப்பட்டுள்ளது.

காட்டி கொடுக்க போவதும் உற்ற தோழன் யூதாஸ் என்றே தெரிந்திருப்பார். பூடகமாக தெரிவித்திருப்பார், காட்டிக்கொடுப்பவனுக்கு ஐய்யோ கேடு என்று என்று கூறுவார். யூதாஸ் ஒன்றும் தெரியாதது போல் 'நானா நண்பரே' என வினவுவார்.  யூதாஸ்  பண விடையத்தில் அக்கறை கொண்டவராக இருந்துள்ளார். ஒரு முறை  ஒரு பெண் பரிமள தைலத்தை காணிக்கையாக பூசிய போது பணத்தை ஏன் விரளப்படுத்த வேண்டும் அதை விற்று ஏழைகளுக்கு கொடுக்கலாமே  என கேள்வி எழுப்பியுள்ளார்.
30 வெள்ளிக்கசை பெற காட்டி கொடுத்தார் என எழுதப்பட்டுள்ளது. அந்த பணத்தில் நிலம் வாங்கியதாகவும் பின்பு மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் யூதாஸ் இல்லாவிடில் கடவுளின் திட்டம் நடைபெறாது போயிருக்கும். யேசுவை காட்டி கொடுத்தாலும் அவர் அற்புத வல்லமையில் தப்பித்து கொள்வார் என்ற தப்பிதங்கள் இருந்திருக்கும். எது எப்படியோ யேசுவை பற்றி பேசும் போது  முத்ததால் காட்டி கொடுத்த யூதாஸ் நினைவிற்கு வருகின்றார். கிறிஸ்தவத்தின் அடிப்படை மனித இரட்சிப்பின் பணியில் யூதாஸின்  இடத்தை மறுக்க இயலாது.

மரணத்தை யாராலும் தள்ளிபோட முடியாது, அனுவிப்பதை அனுபவித்தே கடந்து செல்லவேண்டும். எதுவும் நிரந்தரமல்ல என பல சிந்தனைகள் ஊடாக புனித வெள்ளி கடக்கின்றது.  கடந்த வாரம் ஓசானா என்று பாடி ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம் தான் சிலுவையிலும் அறைய கொண்டு போகின்றது.

யேசுவை யாருக்கு பிடிக்கவில்லை? யூதரான யேசுவின் மத குருக்களுக்கு. எதனால், யேசு மாறுபட்டு சிந்தித்தார், மதகுருக்களை சபித்தார் திட்டினார். சட்டப்படி கோயிலில் இருக்கும் பெரிய மனிதர்களால் தண்டிக்க இயலாது. அவர்கள். அரசு அதிகாரி கவர்னர் பிலாத்துவிடம் கொண்டு செல்கின்றனர். நாட்டின் ஆட்சியை பிடிப்பதாகவும் யூதர்களின் ராஜாவென்று கூறுகின்றார் என்கின்றனர். பிலாத்துவும் ஒன்று இரண்டு கேள்வியை கேட்கின்றார். பிலாத்தோ ‘ நான் ஏதும் குற்றம் காணவில்லையே’  என கைவிரிக்கின்றார். கலீலி முதல் யூத தேசமெங்கும் அவதூறு செய்திகள் பரவ விடுகின்றான் என்கின்றனர். பிலாத்துவுக்கு ஒரு தந்திரம் தோன்றுகின்றது. கலீலி என்றால் ஏரோதிவிடம் கொண்டு செல்லுங்கள் என்கின்றனர்.

ஏரோதுவுக்கு யேசு செய்யும் அற்புதங்களை கண்டுவிடலாம் என ஆர்வம் கொள்கின்றான். யேசு பதிலுரைக்காததால் சில கேலிகள் பேசி ஒரு பகிட்டான உடையை அணுவித்து பிலாத்திடமே அனுப்பி விடுகின்றான். அன்று முதல் எதிரணியில் இருந்த பிலாத்துவும் ஏரோதும் நட்பாக மாறுகின்றனர். ஏரோது யூத ராஜ வம்சம், பிலாத்தோ ரோம அரசின்   பிரதிநிதி.. அப்படி ஒரு நல்ல மனிதனை தண்டிப்பது மூலம்  இரு நாட்டு ஊழல்  தலைமைகள் ஒன்றாகின்றது.

யேசுவின் முதன்மை சீடர் பேருது, ‘யேசுவே யார் உம்மை விட்டு போனாலும் நான் உன்னுடன் இருப்பேன்’ என தற்பெருமை கொள்கின்றார். யேசுவோ இன்றைய தினம் கோழி கூவும் முன் மூன்று தடவை என்னை மறுதலிப்பாய் என பேருதுவின் பெருமையை உடைக்கின்றார்.

கிறிஸ்துவின் சீடர்களுக்கு கூட பெரிய ஏமாற்றம். அவர்கள் தொழிலை விட்டு விட்டு யேசுவை பின் தொடர்ந்ததும்; யேசு ஒரு போராட்டத்தின் ஊடாக  ரோமா சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தில் இருந்து யூதாவை மீட்பார் நமக்கு பதவிகள் கிடைக்கும் என்ற மோகம் தான். ஆனால் யேசு என்னுடைய ராஜ்ஜியம் இதுவல்ல கூறிய போது கலங்கி போயினர். அந்த ஏமாற்றம் கூட யூதாஸை துரோகியாக மாற்றியிருக்கலாம். யூதாவின் நற்செய்தி என்று பிற்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. அதில் உள்ள கதைகள் நாம் தற்போது வாசிக்கும் செய்திகளுக்கு மிகவும் மாறுபட்டதாகவே உள்ளது. 

பிலாத்துவிடம் மறுபடியும் கொண்டு வரப்படுகின்றார். சாட்டையினால்  அடித்து விட்டு விடுவிக்கவா என ஆராய்கின்றான். ஜனங்களோ இல்லை இல்லை கொன்றே ஆக வேன்டும் எனக் கொக்கரிக்கின்றனர்.
அடுத்த வாய்ப்பாக நபது குடியரசு தினத்தன்று விடுவிக்கும் குற்றவாளிகள் சலுகை அன்றும் இருந்துள்ளதை கையிலெடுக்கின்றான். பண்டிகை நாட்களானதால் விடுவிக்கவா என்றதும், இல்லை இல்லை யேசுவை சிலுவையில் அறையுங்கள் கொலைகாரன் கொள்ளைக்காரனான பராபாஸை விடுவிக்க கோருகின்றனர். எந்த வழியும் அற்று பிலாத்து கை கழுவி விட்டு இந்த மனிதனின் இரத்த பழி என்னை சேராது இருக்கட்டும். உங்களுக்கு தேவையானதை நீங்கள் செய்யுங்கள் என யேசுவை  மதத்  தலைவர்களிடம் விட்டு கொடுக்கப்படுகின்றார்.

யூதர்கள் வழக்கபிராகாரம் சிலவை மரணம் மிகவும் கேவலமானது. ஆனால் அதையே யேசுவுக்கு நிர்ணயிக்கின்றனர். இறந்த யேசுவை அடக்கம் செய்ய பொது கல்லறை கிடைத்த பாடில்லை. ஜோஸப் என்ற மனிதரின் தனியார் இடத்தில் தான் அடக்கம் செய்யப்படுகின்றார்.

யேசு யாரை திட்டினார் ? பணக்காரர்கள் சமூகத்தில் அந்தஸ்தில் இருந்து மக்களை சுரண்டி பிழைத்தவர்கள், கடவுள் பெயரில் மனிதர்களுக்கு அனாவசிய சட்டங்கள், ஆசாரங்கள் வழங்கி ஒடுக்கி வந்த புரோகிதர்களை, இரட்டை வாழ்க்கை வாழ்பவர்களை, கோயிலில் நடக்கும் வியாபாரத்தை, பெண்கள் மேல் கொன்டுள்ள இந்த சமூகத்தின் கேலியான பார்வையை கண்டித்தார்.  கிறிஸ்துவின் புரட்சி நாட்டை பிடிப்பதிலோ அதிகாரத்தை கைபற்றுவதிலோ இருக்கவில்லை. மனிதனின் சிந்தை, செயலிலுள்ள விடுதலையை, உண்மைக்காக போராட்டும் குணத்தை கற்று கொடுத்தார்.

 • இவர்கள் செய்வது என்னவென்று இவர்கள் அறியவில்லை. மன்னித்தருளும்
 • என் உடையையும் எடுத்து கொண்டார்கள்
 • கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்  போன்ற வார்த்தைகள் துயர் நேரத்திலும் மற்றவர்களை நோக்கும் பரிவை வாழ்க்கையின் நிஜத்தை உணர்த்துகின்றது.

 • உன்னை போல் அடுத்தவனை நேசி
 • உன் அன்பு உண்மையானதாக இருக்கட்டும்,
 • ஆசாரங்களில் அல்ல மனித நேயத்தில் தான் கடவுளை காண இயலும் என கற்று கொடுத்தார்.
 • நீதி, நியாயம் பேசுபவர்களின் வாழ்க்கை துன்பம் வழியே கடந்து போகும்.
 • பண ஆசை பல தகாத செயல்களுக்கு வழி வைக்கின்றது.
 • ·நம் நெருங்கிய வட்டத்தால் (முத்தம்) தான் துன்பத்திற்கு உள்ளாகுவோம்
 • துன்ப நேரத்தில் யாரும், மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் கூட அருகில் இருக்க மாட்டார்கள்.
 • வாழ்க்கையில் நடப்பது நடந்தே தீரும்,
 • வாழ்க்கை முன் கூட்டியே  நிர்ணயிக்கப்பட்டது
 • · கடந்து போவதே வாழ்க்கை வெற்றி  என பல உருக்கமான சிந்திக்க வைக்கும் கருத்தை சொல்லி செல்கின்றது இன்றைய தினம்.
         யாரையும் நாம் விதிக்கு உட்படுத்த இயலாது. யூதாஸ் இல்லாவிடில் யேசுவின் மீட்பு பணி வெற்றி பெற்றுருக்குமா?
·      யூதா தேசத்தில் துவங்கிய யேசு என்ற மனிதனின் சிந்தனை இன்று உலகில் அனைவரையும் ஆளுமை செய்வதை மறுக்க இயலாது.


இளையராஜாவின் திடீர் ஞானம்

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1952 ல் எடுத்த முதல் மக்கள் கணக்கெடுப்பன்படி கிறிஸ்தவ மக்கள் தொகை 2.3% எனக் கணக்கெடுக்கப்பட்டது. 2011 எடுத்த கணக்கெடுப்புப்படியும் அதே 2.3 % தான் . தற்போது கிறிஸ்தவர்களில் 41 பிரிவுகள் உண்டு. 

இந்நிலையில் மோடி அரசு, எழுத்தாளர்கள் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், அறிவாளிகள் நிலையில் இருப்பவர்கள் வழியாக கிறிஸ்தவர்கள் மத மாற்றத்தில் ஏற்படுகின்றனர் என்பது போலவும், அடிப்படைவாதிகள் போன்றும் சித்தரிகரிப்பதின் பின்புலம் வெறும் அரசியலே. 

இளையராஜா பேச்சு. இளைய ராஜாவின் நோக்கம் ரமணரை புகழ்வது பரைசாற்றுவது மட்டுமே. 'டந்ததோ நடக்கவில்லையோ' என யேசுவின் உயிர்ப்பை கூறுவது மூலமாக தன் சந்தேகம் அல்லது அவநம்பிக்கை  வெளிப்படுத்துகின்றார்.   இது இளைய ராஜா என்ற தனி நபரின் நம்பிக்கை சார்ந்த விடையமே.  இதை கிறிஸ்தவர்கள் பெரிதுப் படுத்த தேவையில்லை,  கொந்தளிக்கவும் தேவையில்லை.  அவரவர் கருத்தை பேணுவதற்கான எல்லா சுதந்திரவும் உண்டு.  கிறிஸ்தவர்கள் இதற்கென  தேவையற்ற தங்கள் எதிர்ப்புணர்வை காட்டி , அல்லது எதிர்வினையாற்றி நேரம் விரயப்படுத்துவதால் எந்த பயனுமில்லை. 

கிறிஸ்தவம்  பெருவாரியாக பரவியுள்ள ஐரோப்பிய நாடுகளில் இருந்தே 'டாவின்ஸி கோட்', 'Temptation of Jesus' போன்ற படங்கள் வந்துள்ளது.  பொதுவாக வறிய, ஊழல் நிறைந்த கல்வியறிவு அற்ற நாடுகளான ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தான் மத அடிப்படைவாத சண்டைகள் மூளும், மூட்டிவிடப்படுவர். 

ஹிந்துத்துவா எழுத்தாளரான ஜெயமோகன் பல காலமாக கிறிஸ்தவ  தத்துவ மார்கத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றார்.   இதை தொடர்ந்து  எழுத்தாளார் சாரு நிவேதிதா,  கவிஞ்சி தாமரை போன்றோரும்  கிறிஸ்தவர்களை அடிப்படைவாதிகள் என  குற்றம் சுமத்தும் நோக்கத்தை  ஆராய வேண்டியுள்ளது.  

இரண்டாம் போர் காலத்தில் யூதர்கள்; ஹிட்லர் தலைமையில் அவதிக்குள்ள தான சூழல்  தான் தெரிகிறது .  கிறிஸ்தவ தலைமைகளும் தன் உறுப்பினர்களை காப்பாற்றும் .மனநிலையில் இல்லை.  ஆபத்தான சூழல் தான் இது. அரசு திட்டமிட்டபடி ஒரு வெறுப்பை கிறிஸ்தவ மக்கள் மேல் விதைக்கின்றனர். 

இருப்பினும் பந்தகோஸ்து, இவாஞலிக்கன் போன்ற கிறிஸ்தவ குழுவின் போக்கை அவதானிப்பது  கண்டிப்பதும்  மற்று கிறிஸ்தவர்களின் நலனுக்கும் காலத்தின் கட்டாயமாக மாறுகின்றது.  இவர்கள் கடந்த 25 வருடத்திற்கிடையில் கிறிஸ்தவத்தை தழுவியோர்.  பெருவாரியானோர் கிறிஸ்தவத்தின் மற்ற பிரிவுகளில் இருந்து தாவியோர்.  அடிப்படையான புரிதல் இல்லாது ஊழியர்கள் வேத வாக்கை மட்டும்   நம்பி இருப்போர்கள். 

கிறிஸ்து தன் போதனையை யாருக்கும் வலுக்கட்டாயமாக பயமுறுத்தி கூற சொல்லவில்லை. என் வார்த்தையை கூறுங்கள். மறுப்பின் காலிலுள்ள தூசியை தட்டிவிட்டு அந்த ஊரில் இருந்து வெளியேறத்தான் கூறியுள்ளார்.

உண்மையில் எளிய கிறிஸ்தவர்கள் பேய்க்கும் கடலுக்கும் நடுவில் என்பது போலவே முழித்து கொண்டு நிற்கின்றனர். சமீப காலமாக அரசு வேலையில் மிகவும் நுட்பமாக கிறிஸ்தவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். ஆனால் பணக்கார கிறிஸ்தவர்கள் பணத்தை கொடுத்து அந்த அநீதியையும் சரிக்கட்டி விடுகின்றனர். கிறிஸ்தவ தலைமையும் அடிப்படை உறுப்பினர்களின் நலனில் அக்கறை கொள்வதில்லை. கிறிஸ்தவ நிறுவங்களில் அடிமாட்டு கூலிகளாகவே பெரும் திரள் வாழ்கின்றது. 

கத்தோலிக்க சபை  தலைமைகள் 7 முதல் 14 வருடம் கொண்ட பாடத்திட்டத்தின் கீழ்  ஆன்மீக கல்வி பெற்றவர்கள். அதே போல புரட்டஸ்டன்று பாதிரிகள்/ஐயர்களும் ஏழு வருடம் கல்வி கற்கின்றனர். பிரொஸ்டன்று சபையில் கூட பாதிரிகள் இடத்தை தனி நபர்கள் (மோகன் சி லாசரஸ், தினகரன்)  தன் பேச்சாற்றலால் பிடித்து விட்டனர்  ஆனால் இந்த இவாஞலிக்கன், பெந்தோகொஸ்தா பாதிரிகள் என்ன கல்வி கற்று வருகின்றனர். . ஏஞ்சல் தொலைக்காட்சியில் https://www.youtube.com/watch?v=nlGKuv0fuTM பேசி வரும் சாது சுந்தர் சிங், செல்வராஜ் போன்றவர்கள் எந்த நிறுவனத்தில் கற்று வந்தனர் என்றே தெரியவில்லை. அவர்கள் பேசுவதை கேட்டால் சகிப்பு தன்மையுள்ள கிறிஸ்தவனுக்கே பைத்தியம் பிடித்து விடும். 

கிறிஸ்தவர்கள்  பிறப்பு முதல் சாவு வரை  பல சிக்கலில் உழலுகின்றனர். அரசின் தாக்குதலால்  சாதாரண எளிய கிறிஸ்தவர்கள் மறுபடியும் பாதிக்கப்படுவர். அதிகார வர்க்க மேல்மட்ட கிறிஸ்தவர்கள்  அரசியல், பண பலத்தால்  தப்பித்து கொள்வர்.  இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை ஆள்பவர்களும் பன்முகத்தன்மை கொண்டு விளங்க வேண்டும். 

இளைய ராஜா போன்ற இசை ஆளுமைகள் , கவிதை உலகின் ஆளுமை தாமிரை போன்றவர்கள் இன்னும் பொறுப்புடன் பதிவிட வேண்டும்.  அவர்கள் அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவர்களை பொது வெளியில் இழுத்து விடாதிருக்கட்டும்.  கிறிஸ்தவர்கள் மேல் தாக்குதல் இது  முதல் முறையல்ல மணிரத்தினம் , பாலா போன்ற சினிமா இயக்குனர்கள்  கூட தங்கள் சினிமா  கதைத்தளத்தை கிறுஸ்தவத்தின் உண்மையான நிலையையோ சம்பவங்களையோ வெளிப்படுத்தும் படியாக இல்லை. 

கிறிஸ்து மதம் கி.பி 54 ல் இந்தியாவிற்குள் நுழைந்திருந்தாலும்,  தங்கள் அன்பு, எளிமையால் மட்டுமே மனிதர்கள்  மனதில் இடம் பிடிக்க முடியும் என புரிதல் வேண்டும். இந்தியா என்ற தேசம்  சைவ புத்த இந்து மத ராஜ்சியமே.  கிறிஸ்தவர்கள்  வெறும் 2.3% மட்டுமே உள்ளோம். கிறிஸ்தவர்களும் அடிப்படையில் இந்து தேசத்தினுடைய ஹிந்துக்களே.  சில பண்பாட்டு ஜாதி தாக்குதலால் மதம் மாற உந்தபட்டவர்கள் தான்.   இரட்சிப்பு, ஜெபம், விசுவாசம் எல்லாம் தங்கள் கிறிஸ்தவ குழுவிற்குள் வைத்து கொள்ள வேண்டும். மதம் மனதை பண்படுத்துவது மட்டுமே.  அது ஆள்சேர்ப்பதல்ல, விற்பனைக்குரியது அல்ல..
கடந்த வாரம் ஒரு நாள் கடினமான வெயிலில் நின்று கொன்டிருந்தேன். ஓர் அம்மணி குடை வைத்து கொண்டு அருகில் நிற்பதையும் கவனித்தேன் . பின்பு பேருந்தில் இருவருக்கும் அருகருகே சீட் கிடைத்தது. அந்த அம்மையார் என்னை நோக்கி புன்சிரித்தார். நானும் பதில் புன்முறுவல் கொண்டேன்.
அவர் வைத்திருந்த கைப்பயில் இருந்து ஒரு சீட்டை கொடுத்தார். வாசியுங்கள் உலகம் ரொம்ப கெட்டு விட்டது, நீங்கள் இரச்சிக்கப்பட வேண்டும் என்றார். நான் வாங்கி பார்த்து விட்டு, நான் பைபிள் வாசித்து கொள்கின்றேன். நீங்களே வைத்து கொள்ளுங்கள் எனக்கு வேண்டாம் என திருப்பி கொடுத்தேன்.
உடன் அவர் நீங்கள் என்ன சபை என்றார் நான் சார்ந்த அந்த பிரதான இரண்டு சபைகளை பற்றி கூறினேன். உடன் அவர் இந்த இரு சபைக்கான வித்தியாசம் என்னவென்றார். அடிப்படை கிறிஸ்துவின் அன்பு, வித்தியாசம் நாம் பொருட்படுத்துவதை பொறுத்து என்றேன்.
நானும் ஒரு வினா எழுப்பினேன், நீங்கள் எப்போது கிறிஸ்தவரானீர்கள் . ஒரு முப்பது வருடம் இருக்கும் என்றார். நான் கூறினேன் என் கொள்ளு தாத்தா ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர். என் அப்பா வழி கொள்ளு தாத்தா ஆங்கிகன் சபையின் ஐயர். நாங்கெல்லாம் கிறிஸ்தவர்களாகி 200 வருடங்களுக்கு மேலாகி விட்டது.
அவர் நான் கூறினதை புரிந்து கொண்டதாகவும் இல்லை; நானோ, ஒரு போதும் அவர் சொல்லும் கிறிஸ்தவத்தை ஏற்று கொள்ள போவதும் இல்லை. என் இறங்கும் நிறுத்தம் வந்த போது குனிந்த தலையுடன் என்னை கண்டு கொள்ளாதது போல் இருந்தார். நான் அவரை அழைத்து, ' போய் வருகின்றேன்' என விடை பெற்றேன்.
அதே போல் ஞாயிறு ஆகிவிட்டது என்றால், சில ரிட்டயர்டு ஆசிரியர்கள், அரசு ஊதியக்காரர்கள் வீடு தேடி வருகின்றனர். உங்கள் கவலை மாறும் கண்ணீர் மாறும் யேசுவின் செய்தி என ஏதேதோ கதைக்கின்றனர். இந்த வயதான தாத்தாக்கள் எல்லாம் சேர்ந்து இலவசமா ஒரு பள்ளி நடத்தினா எவ்வளவு நலமாக இருக்கும், தெருவை சுத்தம் செய்யலாம், மருத்துவமனையில் நோயாளிகலிடம் நலம் விசாரிக்கலாம். வங்கியில் சேமித்து வைத்திப்பவற்றை ஏழைகளுக்கு கொடுக்கலாம்.
இன்னும் ஒரு அம்மையார் தன் வாலிப வயது மகள் , ஒரு சிறு மகனையும் அழைத்து வந்தார். தாய் பையனிடம் சாட்சியம் கூறு என சொல்ல; அந்த குழந்தை கிளிபிள்ளை மாதிரி ஒப்பிக்க ஆரம்பித்தான். நான் தாயை நோக்கி; நீங்களே சொல்லலாம் இந்த சிறுவனை அனாவசியமா வேலை வாங்குகின்றீர்கள். குழந்தை தொழிலாளியா என்றேன். உடன் தாய் மகளை நோக்கினார். அப்பெண் ஆரம்பித்தார். நான் பிள்ளையை எங்கள் மாணவி என கண்டு கொண்டேன். உருப்படியா ஏதும் வேலை பாருங்கோ. வாலிபப்பிள்ளையும் வைத்து கொண்டு வீடு வீடா போகாதீங்க என்று கூறி அனுப்பினேன். சாதாரண மக்களிடன் காசு பிடுங்க சபை தலைமை செய்யும் பிழப்பு வாதமாகும் இது .
இன்று அரசு அலுவலகம் சென்றால் அவன் கிறிஸ்தவன்ப்பா கைலஞ்சம் எல்லாம் வாங்க மாட்டான், அவ கிறிஸ்தவன் பொய் பேச மாட்டான், கொள்ளையிட மாட்டான் எளிமை தான் அவன் வாழ்க்கை வழி, அன்பு தான் அவர்கள் மதம் என்று கூறும்படி இல்லை. கூட்டத்தோடு சேர்ந்த ஊழல்காரர்களாக, பெயரளவில் கிறிஸ்தவர்களாக வாழ்கின்றனர்.
வெள்ளைக்கார மிஷனரிகள் இந்தியாவில் கண்ட  அனாவசிய சமூக மூடவழக்கங்களை, மூட நம்பிக்கையை களைய   கிறிஸ்தவத்தை  படிப்பத்தனர். தற்போதோ இந்திய ஊழியக்காரர்கள் தலைமையில்  பொய் பிரசாரம்,  துர் ஆசாரங்கள் கிறிஸ்தவத்திலும்  மலிந்து ஓட ஆரம்பித்து விட்டது.    ஊழியக்கூட்டம் , எழுப்புதல் ஜெபம் எனக்கூறி கொண்டு பணம் பறிக்கும் வேலையை தேவையற்ற பயத்தை மக்கள் மத்தியில் பரவ விடுகின்றனர். அதை கேள்வி கேட்காதே சகித்து கொள்கின்றோம். DVD FRAUD
சில ஊழியக்காரர்கள், யேசுவின் அடுத்த விசுவாசி எனக்கூறி  கொண்டு பொதுவெளியில்; மட்டுமல்ல சமூகவலைத்தளங்களிலும்  வன்மத்தை கொட்டுகின்றனர். . யேசுவே கூறியுள்ளார் 'என் சீடன் கர்த்தாவே கர்த்தாவே என அழைப்பவனல்ல, என் வழியே நடப்பவனும் என் பேச்சை கேட்பவனுமே' என்று. பல்லுக்கு பல்லு கண்ணுக்கு கண்ணல்ல  கிறிஸ்தவ கோட்பாடு; ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தை காட்டுவதே கிறிஸ்தவ கோட்பாடு.

கிறிஸ்து அவர் இருந்த யூத மதத்திற்காக மதத்தை பரவ வாழவில்லை; அவர் உண்மைக்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, பாவி என்று ஒதுக்கப்பட்ட பெண்களுக்காகவே குரல் கொடுத்தார். கிறிஸ்தவ பண்பு தனித்துவமானது அது அறிய பைபிள் வாசிக்க வேண்டும்.  ஊழியக்காரன் புலம்புவதை மட்டும் கேட்க கூடாது.  மதம் மனிதனின் மதத்தை விரட்ட வலு கொண்டதாக இருக்க வேண்டும். 

மனிதனனின் மனிதம் வளரவே மதம். அவ்வகையில்  யேசுகிறிஸ்து என்ற மனித நேயரை சமூக போராளியை கிறிஸ்தவர்கள் பின் பற்றுவோம். 

 எதெற்கும் பதில் கொடுப்பதால் கிறிஸ்தவர்களுக்கு நல்லது நடக்கப்போவதில்லை. கோழி கூவுவதால் நேரம் விடியப்போவதுமில்லை, நாய் குலைப்பதால் சூரியன் மறையப்போவதும் இல்லை. மதிபிற்குரிய பேரா. கோபாலன் ரவீந்திரன் -இவர்கள் செய்வது இவர்களுக்கு தெரியவில்லை!கடந்த இரு வாரங்களாக சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல், தொடர்பியல் துறைத் தலைவர் கோபாலன் ரவீந்திரன் அவர்களை பற்றி ஏதோ மூன்று மாணவர்கள் கூறினார்கள் என கூறி  ஜூனியர் விகடன் நடத்தி வரும் தர்ம யுத்தத்தை  பற்றி நினைத்தால் புல்லரித்து போகின்றது. மீடியாவின் வேலை சிண்டு முடித்து விடுவதா? எவ்வளவோ ஆக்க பூர்வமான செய்திகள் சம்வங்கள் இருக்க, மாணவர்கள்  சிறுபிள்ளைத்தனத்தை  ஏதோ சுதந்திரப்போர்  போராட்டத் தியாகிகள்    போன்று கட்டுரை எழுதுவது தான் கேலி கூத்தாக உள்ளது

கல்வி நிலையங்களில் நடைபெறும் போட்டி பொறாமையின் பிரதிபலிப்பு எவ்வளவு கோரமுகமாக உள்ளது என்று நினைத்து ஒவ்வொரு கல்வியாளனும் வெட்கப்பட வேண்டியது அவசியமாகும்சக பேராசிரியரை அச்சத்திற்குள்ளாக்க என நினைத்து தங்கள் மாணவர்களையை பயண்படுத்துவது படித்து பட்டம் பெற்றவர்களின் கையலாகத்தனத்தையை வெளிப்படுத்துகின்றது.

அந்த மாணவர்கள் சொல்லும் குற்றச்சாட்டில் எந்த பதிரும் இல்லை என்பது முதுகலைப்பட்டம் முடித்தவர்கள் அனைவருக்கும் புரியும். பேரா கோபால ரவீந்திரன் அவர்கள் மாணவர்களுக்கு  அது நன்றாகவே விளங்கும்.

முதுகலைப்பட்டத்தில் பாட்த்திட்டத்திலுள்ளவயை அப்படியே மனப்பாடம் செய்து, தாளில் எழுதி மதிப்பெண் வாங்க நினைப்பது முட்டாள் தனத்தின் உச்சம். மேல் நிலை கல்வி என்பதே;  தேடி, கண்டு படிப்பது தான். கல்வியை வகுப்பறையில் மட்டுமே படிப்போம்; ஆசிரியர் வந்து சொற்பொழிவு ஆற்றினால் மட்டுமே படிப்போம் என்பது சுத்த மடத்தனமாகும்.  ஆசிரியர் வழி நடத்த,  வாய்ப்பை உருவாக்கி தர மாணவன் வாய்ப்பை பயண்படுத்தி தன் அறிவை வளப்படுத்த வேண்டும்.

முதுகலைப்பட்டத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் சேர்ந்த போது  முதல் வருடம் பேராசிரியரின் மாணவியாக நானும்   இருந்தேன். என் வாழ்க்கையில் மறக்க இயலாத கல்வி நாட்கள் அது.  ஒரு போதி மரத்தினடியில் இருப்பது போல் கற்றோம்.

என் மகன் மூன்றாம் வகுப்பு போன போது, நான் முதுகலைபட்டத்திற்கு சேர்ந்தால் (படிக்கும் வயதை கடந்ததால்) பல்கலைகழகவளாகம் சிலபோது பதட்டத்தை, அச்சத்தை கொடுத்தது. என்னால் படிக்க முடியுமா?, தேர்வு எழுத இயலுமா என்ற மனநிலையில் இருந்த என்னை எந்த கலந்தாய்விலும்ஜோஸபின் எழுந்து கேள்வி கேளுங்கள் என உற்சாகம் ஊட்டியவர். என் எழுத்தை சிந்தனையை பட்டை தீட்டி தந்தவர். என் குறுகிய மன நிலையில் இருந்து வெளிகொணர உதவியவர். ஆற்பாட்டம் இல்லாது நாம் அறியாதே நம்மை வழி நடத்தும் பேராசிரியர் அவர்.

பேராசிரியருடைய ஒரு மணி நேர வகுப்பு என்பது மூன்று மணி நேர வகிப்பிற்கு ஈடாகும்.  அதில் வெட்டிக் கதை இருக்காது, ஊர் புரணி இருக்காது, மீடியா உள்ளடக்கம் மட்டுமே.  மீடியா என்பது  மக்கள் வாழ்க்கை, கலாச்சாரம் பண்பாடு என உணர வைத்தவர். உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை அவருடைய சொற்பொழிவு நீளும். எல்லா மதங்களையும் கேள்விக்கு உள்ளாக்கி போகும். எல்லா கட்டமிப்பையும் உடைப்பது அவருடைய கருத்தாக்கம்.  பெரியாரையும் மார்க்ஸையும் கற்று தந்தவர்.. இரண்டாம் உலகப்போர் என்றால் ஹிட்லர் மட்டுமல்ல, மனித உயிர் பலி வாங்குவது இன்றைய போரால் மட்டுமல்ல சோழப்போர் வைணவ-சைவ யுத்தம் என பேராசிரியர் அழைத்து செல்லாத வரலாறு இருக்க போவதில்லை.

அதிலும் ஆச்சரியம் எல்லா மாணவர்களையும் பாகுபாடு அற்று நடத்தும் அவருடைய பாங்கு ஆகும். எந்த மாணவரிடமும் அதிகம் பேச மாட்டார், ஆனால் எல்லா மாணவர்கள் பெயர்கள், அவர்கள் வாழ்வியல் சூழல், உளவியல் தெரிந்து வைத்திருப்பார். எப்போது சந்தேகம் என்று சென்றாலும் சலிக்காது அதன் அடிப்படை வரை சொல்லி கொடுக்கும் பெரும் மனது படைத்தவர். அவருடைய பல்கலைகழக நேரம் என்பது வெறும் கல்வி நேரம் மட்டுமே அதில் அரட்டை இருக்காது, கான்டீன்  இருக்காது.


எனக்கோ சந்தேகம் ஓய்ந்த பாடில்லை. போரை பற்றி மதங்களை பற்றி கலாச்சாரத்தை பற்றி அறியும் உன்றுதலில் வாசித்த புத்தகங்களுடன் சென்று சந்திப்பேன். நான் என்றில்லை சந்தேகம் என எந்த மாணவர் வந்தாலும் அமர கதிரை கொடுத்து, புரியும் மட்டும் விளக்கி கற்று கொடுப்பார். ஆசிரியர் முன்பு அமரும் வாய்ப்பை கொடுத்தவர் பேராசிரியர் கோ. ரவிந்திரன் மட்டுமே.

பேராசிரியர் அறையில் நிதாந்த அமைதி மட்டுமே தவழும், அங்கு பேச்சுக்கு, சிரிப்பிற்கு இடமில்லை. அவருடைய மேஜை நிறைய புத்தங்கள் இரைந்து கிடக்கும். அருகில் ஒரு அலமாரையில் சந்தையில் கிடைக்கும் எல்லா மாத, வார இதழ்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒரே இதழில் தமிழ் மற்றும் ஆங்கில என இரு மொழியில் வைத்திருப்பார். ஒரு நோட்டு புத்தகவும் பேனாவும் புத்தக அலமாரையில் இருக்கும். நாங்கள் எடுத்த புத்தகத்தை எழுதி வைத்து  விட்டு, எடுத்து வாசித்த பின்பு திருப்பி வைத்து விட வேண்டும். அவ்வளவே. வாசித்தவையை, புரிந்தவையை எழுதியும் கொடுக்க வேண்டும். நாம் எழுதி கொடுக்கும் அறியா தவறுகளையும் நிதானமாக வாசித்து கருத்து பகிர்வார். அந்த விளக்கத்தில்  அறிவும் ஞானவும் மட்டுமே மேல் ஓங்கி இருக்கும்.


பேராசிரியர் இங்கு இருந்த போதும்; சின்டிகேட் பதவிகளில் இருந்ததால் பல முறை வகுப்பிற்கு வர இயலாது.  இருப்பினும் வகிப்பிற்கு வரும்போது  மூன்று மணி நேரம் கூட தொடர்ந்து வகுப்பு நடக்கும்.  வகுப்பு மாணவர்கள் அல்லாது இருப்பினும் பேராசிரியர் வகுப்பில் கலந்து கொள்ள விரும்பினால்  அனுமதிப்பார் 
அவருடைய சொற்பொழிவை கவனித்து கேட்க வேண்டும். அதன் உள்ளடக்கம் வலுவானதாக இருக்கும். எனக்கு சந்தேகம் தோன்றினால் குறுக்கே பாய்ந்து சந்தேகம் எழுப்புவேன். ஒரு போதும் முகம் சுளித்தது இல்லை, புரியும் வரை தெளிவு படுத்துவார்.


கற்பித்தல் என்பதை சொல்லிக்கொடுத்து படிப்பது மட்டுமல்ல  சுயசிந்தனையால் தேடி கற்று வலுபெறுவது என புரியவைத்தார்.

பேராசிரியர்,  தேர்வு நடத்தும் விதம் கூட வித்தியாசமானது பொதுவாக பேராசிரியர்கள் கேள்வித்தாளையும் பதில் எழுதும் தாளையும் கொடுத்து விட்டு காப்பி அடிக்கின்றோமா என  எங்களை ஆழ்ந்து கவனித்து கொண்டு கண்காணிப்பாளர்களை நியமித்து அவதானிக்கும் வேளையில்; எங்கள் கட்டுப்பட்டை எங்களிடமே தந்து எழுதி விட்டு பேப்பரை என் மேஜை மேல் வைத்து விடுங்கள் எனக்கூறி கடந்து விடுவார்

ஒரு முறை நாங்கள்; பேராசிரியர் கூறிய நேரம் வைக்காது, அடுத்த நாள் கொண்டு வைத்து விட்டோம் என அறிந்த போது; அன்று தான் முதலும் கடைசியுமாக எங்களிடம் கடிந்து பேசினார்.  கல்வி என்பது பட்டம் பெறுவது மட்டுமல்ல நேர்மையான தனி நபர்களை  உருவாக்குவது என திடமாக நம்பினார்.  மாணவர்கள் மது அருந்தும் பழக்கத்தை மிகவும் கடிந்துள்ளார். 'படித்த உங்களால் கூட  கட்டுப்பாட்டோடு வாழ இயலவில்லை என்றால் உங்களால் எப்படி ஒரு சமூகத்திற்கு நேர்மையான கருத்து பகிர முடியும்' என ஒவ்வொரு வேளையிலும் சிந்திக்க  வைத்தவர் .

பல்கலைகழக வளாகத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நாங்கள் பங்கு பெற வேண்டும், பங்கு பெற்ற நிகழ்ச்சியை தொகுத்து எழுதி கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. எங்கள் பார்வையை எங்கள் கருத்தை நெறிப்படுத்தியும் தந்து கொண்டு இருந்தார்.  

என் வலைப்பதிவு என்பது பேராசிரியரின் 'நவீன மீடியா' என்ற பாடத்தின் பாடதிட்டத்தில் மார்க்கு பெற துவங்கப்பட்டு, பின்பு வலைப்பதிவையே என் ஆராய்ச்சிக்கும் தளமாக தேர்ந்து சிறப்பாக முடித்தேன்.

இலக்கியவாதிகளுடன் உரையாட வாய்ப்பு அமைத்து தருவது ,  மக்களை சந்தித்து தகவல் சேகரிப்பது, சென்னை பல்கலைகழகம்  கருத்தரங்கில் பங்கு கொள்வது, உள்ளூர் ஊடகவியாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது என ஏட்டு கல்வியை உயிரோட்டமான கல்வி முறையாக மாற்றினார்.

என் ஆராய்ச்சியின் போது அறிமுகமான ஈழ தேச கவிஞர் மற்றும் ஊடகவியாளர், சென்னை வந்து படிக்க விரும்பிய போது நான் மாணவரின் தகவலை பேராசிரியரிடம் தெரிவிக்க; மாணவர் சென்னை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற காரணமாக இருந்தார். பின்தங்கிய தென் மாவட்ட  நெல்லை மாணவரை பரிந்துரைத்த போதும் பல்கலைகழக சேர்க்கைக்கு வாய்ப்பை கொடுத்தார்.  அவ்விதம் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் அவர்கள் மனித நேயத்தை கற்பிக்க மட்டுமல்ல வாழ்ந்தே காட்டி வந்தவர்.   

ஒரு பேராசிரியரை நேர்வழியாக தாக்க இயலாது என்பதால் 'கன்று குட்டி' மாணவர்களை ஆயுதமாக பயண்படுத்துவது மிகவும் கேவலமான, படித்த மேதாவிகளின் ஈனச்செயலாகும். மாணவர்கள் கூறும் ஒரு குற்றச்சாட்டு கூட உண்மையாக இல்லாது வன்மமாகவே தெரிகிறது.
 
பல போதும் கல்லூரி மற்றும் பல்கலைகழங்களில் பேராசிரியர்களை மாணவிகளை வைத்து புகார் கூறி ஒடுக்கி உள்ளனர், கள்ள அவதூறுகள் பரப்பி நசுக்கியுள்ளனர். இப்போதோ மைனாரிட்டி என்ற பெயரில் மாணவர்களை களம் இறக்கியுள்ளனர்.

மாணவர்களுக்கு நிச்சயமாக பேராசிரியரிடம்  பேச வாய்ப்பு இருந்திருக்கும். எல்லா வாய்ப்பையும் புறம் தள்ளி ஒரு நாடகம் போன்று சம்பவத்தை நகத்தி பேராசிரியரை அவமதிப்பதே அதன் உள்நோக்கம் வெளிப்படுத்துகின்றது. ஒரு ஆசிரியர் மாணவர் உறவு என்பது படிக்கும் காலத்தின் உடையது மட்டுமல்ல, வேலைபெற, பதவி உயர்வு, சில போது வாழ்க்கையில் அடிபட்டு நிற்கும் போதும் கூட தாங்கும் சக்தியாக படித்த கல்வி நிறுவனம், ஆசிரியர்கள் மாணவர்களுடன் இருப்பார்கள்.  

படிக்கும் போது இது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவது மாணவர்களின் எதிர் காலத்தை நிச்சயமாக பாதிக்கும். இவர்களை நம்பி ஆராய்ச்சி படிப்பிற்கோ வேலை தரவோ யாரும் முன் வர மாட்டார்கள். போராட்ட உணர்வு நியாயமான உணர்வு மனிதனுக்கு அவசியம். அதை இன்னொரு மனிதனை; அதும் தன்னுடைய குருவை அச்சுறுத்த என்பது மாணவர்களின் நல் வரும் வாழ்க்கைக்கு ஒரு போதும் பலம், அல்லது பலன் சேர்ப்பதில்லை. பின்புலனாக நிற்கும் நரி தந்திரம் பிடித்த பேராசிரியர்கள் தக்க நேரத்தில் ஓடி விடுவார்கள். வித்தையை கற்கும் இடத்தில் தன் பங்கை, தன் பலத்தை, தன் நிலையை, தன் வாழ்க்கையை உணர்ந்து படித்து பட்டம் பெறுவதே மாணவனுக்கு அழகு.

இந்த நிகழ்வுகள் ஒவ்வொரு நல்ல ஆசிரியருக்கும்  ஓர் அனுபவம். நவீன யுகத்தின் ஆயுதங்கள் கூட நவீனப்படுத்தபட்டுள்ள விதம்  அருவருக்க தகுந்ததாக உள்ளது. மாணவனே விலை போகாதே. ஒரு வேளை உன் தவறு உனக்கு புரிந்தால்  உடன் வெளியே வந்து விடு.

இந்தியா போன்ற ஏழை தேசத்தில் மத்திய அரசின் கீழ் வேலை நோக்கும் ஒவ்வொரு பேராசிரியரும் 40 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50, ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். இவர்கள் பெறும் வசதிகள் எண்ணில் அடங்காதவை. ஒரு புறம் தனியார் நிறுவங்கண்களில் இதே தகுதியிலுள்ள பேராசிரியர்கள் 3 ஆயிரம் துவங்கி 7 அல்லது 10 ஆயிரம் பெறும் அவல நிலையே உள்ளது. இந்த சமூக அநீதியின் விளைவே இது போன்ற கழுத்தறுப்பு போட்டிகளால் வரும் சூழல்கள். படித்தவர்கள் திருந்த நினையாது எதுவும் மாறப்போவதில்லை.

எந்த அவதூறும் பேராசிரியர் கோபால. ரவீந்திரன் அவர்களை பாதிக்கப்போவதில்லை. பழுத்த பழ மரமான அவர் கம்பீரமாக எல்லாவற்றையும் அமைதியாக அவதானித்து கொண்டு அவர் வேலையில் மூழ்கியிருப்பார். ஆனால் எந்த அரசியலும் தெரியாதே வீழ்ந்து கிடக்கும் இந்த மாணவர்களை நினைத்து தான் 'இவர்கள் செய்வது இவர்களுக்கு தெரியவில்லை, இவர்களை பொறுத்தருளும் எங்கள் குருவே" என்று மட்டுமே கூற இயலும்.Followers

Statistics