23 Sept 2018

மேற்குத் தொடர்ச்சி மலை!


ஒரு திரைப்படம் எப்படி எடுக்கப்பட வேண்டும் காட்சி மொழி என்ன?திரைப்படம் என்ற ஊடகம்  எவ்வாறு  மக்களிடம் உரையாட வேண்டும் என்ற தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ’மேற்குத்தொடர்ச்சி’ மலை. என்ற திரைப்படத்தை பார்த்தே தீர வேண்டும். இரானியன் படத்தை உலகப்படம் என கொண்டாடும் நம் இயக்கங்கள் தமிழில் ஒரு சிறந்த மக்கள் படம் வரும் போது பார்க்கவேண்டியதும் ரசிக்க வேண்டியதும் இது போன்ற படங்கள் மேலும் வர ஊக்கமாக  அமையும்.

தனது 11 வயது வரை கோம்பையில் பிறந்து வளர்ந்த இயக்குனர் லெனின் பாரதி, பிற்பாடு சென்னைக்கு குடிபெயிற்கின்றார். அவர் கண்டுணர்ந்த  மாந்தர்களை பற்றிய படம் தான் இது. அப்படத்தின் திரைக்கதையை இரண்டரை மணிநேரத்தில்  எழுதி முடித்தாக நேர்முகத்தில் கூறியுள்ளார்.

தமிழக கரைகாட்டில் வாழவழியற்ற சூழலில் கேரளா மலைக்காடுகளை தேடிப்புறப்பட்ட மனிதர்களின் கதை இது. கேரளா தமிழ் மலையாள மொழி அரசியல், பண்பாடு, வேலைவாய்ப்பு, மனிதர்களில் வாழ்வியல் என இப்படம் ஒரு காலத்தின் ஒரு நிலைப்பகுதியின் வரலாற்று படமாக மாறுகின்றது.  இந்த மனிதர்கள் மலைமுகடில் இருந்து ஏலக்காயை மட்டும் சுமந்து வரவில்லை தகவல்கள் பணம், கொடுக்கல் வாங்கல்கள் என மலைக்கு  கரைக்குமான பாலமாக தொடர்கின்றனர். அப்படியான சில மனிதர்களில் முக்கியமாக ரங்கசாமியின் வாழ்க்கையை சொல்வதே இக்கதை. 

ரங்கசாமி நல்லவர் மட்டுமல்ல உழைப்பாளி.  அவரின் ஆகப்பெரிய கனவு சொந்தமாக ஒரு இடம் வாங்க வேண்டும்  என்பதாகும்.  தனது திருமணத்தையும் விட ஒரு இடம் வாங்க வேண்டும், அதும் தன் தாயின் பெயரில் வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு வேலை பார்த்து வருகின்றார்.

ரங்கராஜின் ஒரு நாள் என்பது அதிகாலை நாலுமணியுடன் ஒரு  கட்டன் காப்பியுடன் ஆரம்பமாகின்றது. வழியில் கடந்து செல்லும் பாம்பு, யானை ஒன்றும் அவர்களுக்கு தடையல்ல. சகஜீவிகளாகவே அவர்களுடன் அதுகளும் வாழ்ந்து வருகின்றது அல்லது அந்த ஜீவிகளுடன் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எளிய மனிதர்கள் வாழ்க்கை, கடம் சொல்லி குடிக்கும் காப்பியில் இருந்து, கழுதையுடன் மல்லுக்கட்டிய நடைபயணம், சின்ன சின்ன உரசல்கள் சண்டைகள் இட்டு, வெகு விரைவில்  சமரசமாகி, இரத்தம் கக்கி சாகும் வரை வேலை செய்யும் மனத்துணிவுடன் உழைத்தே வாழவேண்டும் என்ற வைராக்கியத்துடன்  வாழும் மக்களவர்கள். அவர்கள் உழைப்பு வெறும் பிழைப்பு சாந்தது அல்ல அவர்கள்  முதலாளியின் நலனும்  அன்பும் கலந்தது.
  
அவர்கள் மனிதர்களிடம் மட்டும் நேசமாக நடந்து கொள்ளவில்லை; அவர்களுடன் பயனிக்கும் கழுதையுடனும் பரிவுடன் நடந்து கொள்கின்றனர். கொலைக்கார யானையை கூட பரிவு கலந்த மரியாதையுடன் நோக்குகின்றனர்.  மனம் பிளர்வுபட்ட பாட்டியையும்  கேலியாக எகத்தாளமாக அல்ல; பரிவாக நோக்குகின்றனர்.  

 சீனியை வாயில் போட்டு தன் அன்பை வெளிப்படுத்தும் பெண்ணாகட்டும்,  ஏலக்காட்டு முதலாளி, கோபக்கார கங்காணி, சகாவு சாக்கோ  என எல்லா மனிதர்களும் அன்பால் பிணையப்பட்டு ஒருவருக்கு ஒருவர் உதவும் மனநிலையில் உள்ளனர்.  மலை உச்சியில் வசிக்கும் சாக்கோவின் தந்தைக்கு மகன் கொடுத்து விட்ட மருந்தை பெற்ற சாக்கோவின் அம்மா ரங்கராஜை வெறும் கையாக அனுப்பவில்லை. உங்க அம்மா எப்படி இருக்காங்க? மரச்சீனியை கொண்டு கொடு என்று  வெட்டி வைத்திருந்த கப்பை கிழங்கை  கொடுத்து விடுகின்றார்.

பஞ்சம் பிழைக்க வந்த லோகு முதலாளியாவதும், முதலாளியானதும் தனது இனமான தமிழனை, மலையாளி முதலாளிக்கு விற்கவும் தயங்கவில்லை. தொழிலாளி தலைவர் சாக்கோ மக்கள் போராட்டத்தில் உண்மையாக நிலைகொள்வதை உடைக்க மொழி அரசியலை ( மலையாளி தமிழன்(பாண்டி) எடுத்த முதலாளியை; தொழிலாளி நலனுக்காக கொலை செய்யவும் தயங்கவில்லை.

உழைப்பவர்கள் கட்சி என்ற அடையாளத்தில் நிலைகொள்ளும் கம்னீஸ்ட் கட்சியில் உள்ள ஒரு பிரிவினரின் துரோகத்தையும் வெளிகொணர்ந்தது; இயக்குனரின் எஸ்டேட் அரசியல் ஆழத்தையும், தார்மீக கோபத்தையும் நேர்மையால் விளைந்த தைரியத்தையும் தான் காட்டுகின்றது.

மீரா அத்தாவிடம் கூட  கடன் கேட்க கூச்சப்பட்டு, தன்மானத்துடன் மனம் நிறைய நன்மைகளுடன் வாழ்ந்த ரங்கு, கடைசியில் தான் ஆசையாக வாங்கி சேர்ந்த கொஞ்ச இடத்தையும் இழந்து, வேட்டிகட்டி வாழ்ந்த  தன்மான வாழ்க்கை கால்சாட்டை யூனிபோம் மாட்டி சுயம் இழந்து   அடிமையாக மாறுவதுடன்  கதை முடிகிறது.

இந்த படம், விவசாய நிலத்தை இழந்த விவசாயியை மட்டுமல்ல சில்லறை  முதலாளிகளை பண்ணாட்டு நிறுவனங்களிடம்  இழந்து தவிக்கும் உள்ளூர் முதலாளிகள் ; கல்விகற்று அடிமைகளாக வேலை பார்க்க வேண்டிவந்த  புதிய  தலைமுறை பற்றிய திரைப்படவுமே இது.

காட்சிப்படுத்தியிருக்கும் அழகு அலாதி. மேற்குத்தொடர்சி மலை என்பதே ஆச்சரியத்தின், அற்புதங்கள் நிரம்பிய செழுமையான காடுகள் நிரம்பியது தான். ஏரியல் ஷாட்டை மிகவும் அழகாக, தேவையான இடத்தில் பயண்படுத்தியிருக்கும் நுட்ப- அம்சம் கொண்ட படம் இது. வெறும் நடிப்புடன் நிறுத்தாது காட்சிகளும் கதையும் சூழலும் மாறும் போது மனிதனின் உடல் மொழியில் வரும் சிறு மாற்றங்களை கூட நுட்பமாக காட்சிபடுத்தியுள்ளனர். தோராது பெய்து கொண்டிருக்கும் மழை, மலைவேலையாட்கள் உடுத்தும் உடை, அணியும் கொங்காணி, அவர்கள் ஊர் டீக்கடைகள் எல்லாம் ஆராய்ச்சி மேற்கொண்டு அதே காலகட்டத்திற்கு அழைத்து சென்று விட்டனர்.

சினிமாத்தனம் இல்லா இயல்பான வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக சொல்லிய படம் இது. சினிமா என்றால் குத்தாட்டம் புளித்த ஜோக், தனிநபர் வணக்கம் இல்லாது நிஜ-சினிமா அல்லது வாழ்வியல் சினிமா என்ற வகையில்  மனிதர்களை கதையில் வாழவைத்து படமாக்கியுள்ள இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.

திரைக்கதையில்  கதாப்பாத்திர படைப்பை; காட்சி அமைப்பையும்  கடந்து அவர்கள் பேசும் உள்ளூர்  உரையாடல்கள் ஊடாக நகத்தியிருப்பது சிறப்பு. நல்லதையே நினைத்து,  சுயநலன் தேடாது நன்றாகவே வாழ்ந்த மனிதர்கள்;   தங்களுக்கு வெளியிலான உலகத்தை தெரிந்திருக்காத மக்கள் உலக அரசியலில், உலகமய வியாபாரத்தில் சிக்கி சின்னாபின்னமாக அழிந்த அவலம் ஒரு திரைப்படமாக  உருவாக்கிய படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.





பணம் ஈட்டுவது, ஆடம்பரம், பாலியல் இன்பம், புகழ் மோகம்  என படம் எடுத்துவரும் இளைஞர்கள் மத்தியில் படத்தொழிழ் நுட்பத்தை அழகியல் சார்ந்து மட்டுமல்ல சமூககருத்தாக்கத்தின் மீட்சியாக பயண்படுத்திய இயக்குனரை பாராட்டியே தீர வேண்டும்.

தயாரிப்பாளர் விஜய் சேதுபதியையும் பாராட்டவேண்டும். தான் நடிக்க வாய்ப்பில்லாத படமாக இருந்தாலும் ஒரு நல்ல திரைப்படம் சமூகத்திற்கு தரவேண்டும் என்ற நோக்கில் லாப நஷ்டத்தை முன்நிறுத்தாது சமூக விழிப்புணர்வை மட்டுமே முன்நோக்கி படத்தை இயக்கிய அவருடைய சமூக பார்வையை நல்லெண்னத்தை சீர்தூக்கி பார்க்க வேண்டியுள்ளது.

படம் வெளியாகும் முன்னே மரணப்பட்டு போன கணக்கப்பிள்ளை, மலையில் முகட்டில் ஹோட்டல் நடத்தும் அப்பத்தா, ரங்கசாமியின் மனைவியாக நடித்தவர்,   மீரா அத்தா என நடித்த அத்துணை பேரும்; எல்லோரும் நல்ல மனிதர்கள்.   உயிரோட்டமான, மனித நேயம் கொண்ட  மனிதர்களை பற்றி சொல்லிய நிஜ(ரியலிஸ்டிக்) திரைப்படம்.

இளையராஜாவில் இசை அருமை. 
எடிட்டர் விஷுவநாத் அவர்களின்கைவண்ணம் திரைப்படத்தை மென்மையாக பார்க்கும் சூழலை உருவாக்குகின்றது. தேனி ஈஷ்வரின் ஒளிபதிவு அருமையிலும் அருமை. க்லோசப் இல்லாது  நடிகரின் நடிப்பில்  அதீத நம்ப்பிக்கை வைக்காது கதையின் சாரத்தை நம்பி முன்நகத்திய அருமையான திரைப்படம் இது.


இன்று நெல்லையில் நடந்த பாராட்டுவிழாவிலும் என் மாணவர்களுடன்  பங்குபெறும் வாய்ப்பு கிட்டியது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாட இடது சாரிகளோ , நாம் நம்பும் சமூகப்போராளி தலைமைகளோ விரும்பவில்லை என அறிந்தேன்.. 


இது இடுக்கி சார்ந்த தோட்டதொழிலாளி அரசியல் நிலவரம் தெரியாது கோபப்படுவது ஆகும். தொழிலாளியின் உரிமையை மீட்டு எடுக்க இடதுசாரிகள் போராடினார்கள் என்பதில் எதிர்கருத்து இல்லை, ஆனால் முதலாளிகள் போடும் கேவலம் பிச்சைக்கு என தொழிலாளிகளை  ஏமாற்றினதும், கொலை செய்ததும், கொலைச் செயப்பட்டதிலும் இடதுசாரிகளின் கை உண்டு என்றால் பொய்யாகாது. 


தமிழர்கள் உரிமையை, குடியிருக்கும் இடத்தை அபகரித்து விட்டு எந்த ஆதாரவும் அற்ற நிலையில் தமிழர்கள் கொண்டு விட்டுள்ளனர். 

இது போன்ற நல்ல படங்களால் மட்டுமே மதி- மயக்கத்தில் கிடக்கும் மனிதர்களை விழிப்புணர்வு செய்ய இயலும். 

ஒரு பிரசார தொனி இல்லாது, தொண்டை கிழியும்  ஒன்றை உரையாடல் இல்லாது இயல்பாக  மனிதர்கள்  வாழ்க்கையாக உள்ள இத்திரைப்படம் வெற்றி பெற்று வேண்டும்







16 Sept 2018

மலர்வதியின் “தூப்புக்காரி”

2012ம் ஆண்டுக்கான இளம் படைப்பாளிகளுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற  நாவலாகும் மலர்வதியின் “தூப்புக்காரி”. இயற்பெயரான மேரிபுளோரா என்பதை தமிழ்மைப்படுத்தி மலர்வதி என்ற பெயரில் எழுதி வருகின்றார்.  

தனது 15 வது வயது முதலே, தன் வாழ்க்கையில் தான் கண்டுணர்ந்தவற்றை  தன்னை பாதித்த மனிதர்கள் வாழ்க்கையை எழுதி  இரும்பு பெட்டியில் பூட்டி வைத்திருந்த எழுத்தாளினி தனது முதல் நாவலை 2008 பதிப்பிட்டு வெளியிட்டுள்ளார். 


இப்புத்தகம் இவருடைய இரண்டாவது புதினமாகும். அச்சிட பணம் இல்லாத நிலையில் அச்சகரிடம் கடனாக அச்சிட்ட இப்புத்தகம் மூத்த எழுத்தாளர்கள் பொன்னீலன் போன்றோரின் உந்துதலின் பெயரில் சாகித்ய அகாடமி விருதிற்கு அனுப்பியதில் 2012ம் ஆண்டிற்கான இளம் சாகித்ய அகாடமி விருது,  தாமிர பட்டயமும், 50 ஆயிரம் ரூபாயும் பெற்றிருந்தது.  விருதை வாங்க பாட்னா செல்லவேண்டிய நிலையில் தனது வழிப்பயணத்திற்கு செல்ல பணபிரச்சினையால் அவதியுற்றது ஊடகச்செய்தியில் இடம் பிடித்திருந்தது. வறுமையில் பிறந்து, வறுமையில் வாழ்ந்த தற்போதும் வறுமையில் வாழும் ஒரு காதாசிரியரின் நாவல் என்பதும் இதன் சிறப்பாகும். 


தந்தை முகம் பார்க்கும் முன்னே வேறு பெண்ணுடன் பிரிந்து சென்ற நிலையில்; தனது ஐந்து குழந்தைகளை காப்பாற்ற வீட்டின்  பக்கத்திலுள்ள கிறிஸ்தவ பள்ளியில் மாதம் 30 ரூபாய் கூலியில்  துப்புறவு தொழிலாளியாக வேலை செய்து வந்த தன் தாயின் துயரை கண்டு வளர்ந்தவர் தான் கதாசிரியை.  எழுத்தாழினியாலும்  9-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கும் சூழல் வீட்டில் இருக்கவில்லை. இன்னிலையில் இரண்டு வருடம் முந்திரி பருப்பு கம்பனியில் வேலை செய்கின்றார். பின்பு தனது அண்ணனின் உதவியுடன் படித்து தமிழில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது இந்தப்பகுதியில் இருந்து வரும் "முதற்சங்கு'என்ற மாத இதழிற்கும்,"இலக்கிய சிறகு' என்ற நாளிதழுக்கும் பொறுப்பாசிரியராக உள்ளார்

மலர்வதியின் தூப்புகாரி என்ற நாவல் விழிம்பு நிலை மக்களின் கதையாகும். கதை இப்படியாக நகர்கின்றது.  தனது கணவர்  நோய்வாய்ப்பட்டு மரித்த நிலையில், மருத்துவம் பார்த்த மருத்துவமனையின் கடன் அடைப்பதற்கு என  நாடார் சமுதாயத்தில் பிறந்த கனகம் துப்புறவு தொழிலை தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றார். ஒரு துப்புறவு தொழிலாளியான கனகத்தை தன்னுடன் சேர்த்து கொள்ள தயங்கிய  உறவினர்களால், ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கனகம் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றார் பூவரசியும் தனியாக விடப்படுகின்றார். 

கனகத்தின் மகளான் பூவரசியும் தான் வெறுத்த துப்புறவு தொழிலயை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகின்றது. இதனிடே தன் ஜாதிக்காரனான ஒரு பணக்கார பையனுடன் காதல் மலருகின்றது. அவன் ஒரு குழந்தையை கொடுத்து விட்டு, வீட்டில் பார்த்தை பெண்ணை திருமணம் செய்து மறைய, தனித்து விடப்பட்ட பூவரசுவை சக்கிலியனான மாரி, தன் மனைவியாக ஏற்று வீட்டுற்கு அழைத்து செல்கின்றான். பூவரசுவை பிடித்த வேதனைகள் தான் விட்ட பாடில்லை. மாரியும் ஒரு விபத்தில் மரித்த நிலையில் தன் பெண் குழந்தையுடன் அதே துப்புறவு தொழிலாளியாக கனகத்தின் மகளாக  பூவரசு வளர்ந்த வறுமை நிலையில், பூவரசு மகளும் வளர்க்க வேண்டிய  சூழலுக்கு தள்ளப்படுகின்றார்.

துப்புறவு சமூதாயம் மேல்கொண்டுள்ள சமூகத்தின் பார்வை, இந்த மக்கள் வெகுகாலமாக எதிர்கொள்ளும் சமூதாயா புரக்கணிப்பு அவமதிப்பு பல சம்பவங்கள் ஊடாக சொல்லியுள்ளார். கேரளா எல்கையோரமுள்ள கன்யாகுமாரியில் ஜாதி வகைப்படுத்தலின் கொடுமையை விட வர்க்க பாகுபாடான இருப்பவன் இல்லாதவன் நிலை  பற்றி சொல்லியுள்ளார். துப்புறவு தொழில் என்பது ஒரு குறிப்பிட்ட  மக்களின் ஜாதியுடன் இணைந்து தொழில் என்பதையும் கடந்து வசதி வாய்ப்பு அற்ற, மேல்ஜாதி ஏழை மக்கள் மேல் நிர்பந்தமாக திணிக்கப்படுகின்றது என்பதையும் வலியுறுத்துகின்றார். ஒரு தலிது பிரச்சினையை மீறி இது மக்களின், யாருமற்ற பெண்களின் பிரச்சினையாக உணரவைக்கின்றார்.

கல்யாண வீட்டில் மேசையை சுத்தம் செய்ய நிற்கும் ஏழை வயதான பெண்களை கண்டு கடந்து போயுள்ளோம். விருந்துக்கு பந்திவைக்கும் மக்கள் அனைவரும் உண்ட பின் தன் வயிற்று பசிக்காக காத்து நிற்க வேண்டிய கொடிய நிலையும், கொலைப்பசியால் உணவை நேரமே உண்டார் என்று ஏளனப்படுத்தும், பசியை பற்றி தெரிந்திராத பணக்கார இரக்கமற்ற மனநிலையும் ஒரு சம்பவத்தால் எளிதாக வடிவமைத்துள்ளார்.   

பணம் இல்லா எளியவர்கள் என்ற ஒரே காரணத்தால் மிகவும் துச்சமான ஊதியத்தை கொடுத்து தலைமுறை தலைமுறையாக அடிமை நிலையை பேணவைக்கும் மருத்துவ நிர்வாகி என்ற பணக்கார கும்பலின் மனநிலையும் விளங்க பண்ணியுள்ளார். கதைமுடிவில் பூவரசிக்கு இருந்த ஆகமொத்த உரிமையான மகளையும் உன்னால் பிள்ளையை வசதியாக வளர்க்க இயலாது தத்து கொடுத்து விடு” என பிரிக்க நினைக்கும் முதலாளி மனநிலையும் விவரித்துள்ளார்.

ஆண் பெண் காதல் எந்த வகை காதல் மேன்மையானது, பண்பானவன் என்ற நினைத்த மனோவை விட அழுக்கன் என்ற அடையாளமுள்ள மாரி எவ்வளவோ மேல் என அவன் குணத்தால் அழுத்தமாக பதிந்துள்ளார்.

ஜாதிபெருமையும் வசதி பெருமையும் ஏழைகளின் வாழ்க்கைகோ வறுமையை போக்கவோ உதவவில்லை என்பதையும் அழகாக குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறை தூப்புக்காரி என கதாப்பாத்திரம் அழைக்கப்படும் போதும் வாசகர்கள் நாமும் அந்த அவமான சொல்லில் மதிப்பற்ற விளியில் சுருங்கி போவதை உணரலாம்.

இலக்கியம் என்பது வாழ்க்கை, அது கற்பனை கலந்த வார்த்தை பிரயோகம் அல்ல என்பதை மலர்வதி நிரூபித்து விட்டார். கழிவறைகளும்,  அந்த நாற்றத்திலும் அழுக்குலும் அல்லல் படும் மனிதர்கள் நம்மை விட்டு அகலவில்லை. அது ஒரு தீராத அழுகையின்  அவலக்குரலாகவே உள்ளது. வாசிக்கும் ஒவ்வொருவரும் ’தூப்புக்காரி’ என்று விளிப்பதை விடுத்து மனித நேயத்தோடு அவர்களை நோக்கவும் அழைக்கவும் கற்று கொண்டிருப்பார்கள். அவ்வகையில் இது ஒரு விழிப்புணர்வு மனிதநேய நாவல் தான்.

தலிது எழுத்து என எழுத்தாளர் பொன்னீலன் முன்னுரையில் கூறியுள்ளார். ஒரு நாடார் இனத்தை சேர்ந்த பெண் எப்படி தலிது எழுத்தாளர் என்ற அனுகூலங்களை பெற இயலும் என விமர்சங்களுக்கும் உள்ளாகியுள்ளார். தான் தலிது எழுத்தாளர் அல்ல ஒரு எழுத்து போராளி என தன்னை முன் நிறுத்த அம்பை போன்ற எழுத்தாளர்கள் பணிந்துள்ளனர்.  ஆனான் என் வாசிப்பில் நான் கண்டது ஒரு குறிப்பிட்ட தலிது மக்கள் பிரச்சினை மட்டுமல்ல, ஏழ்மையால் சூழலால் தெருவிற்கு வேலைக்கு என வந்த  எல்லா எளிய நிலை பெண்களும் அனுபவிக்கும் அவலைநிலையாகும் தூப்புக்காரி என்ற நாவல் வழியாக நாம் காண்பது. சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் தலிது என அறியப்படவேண்டும் என்பது எழுத்தாழியின் ஆவாலாகும். அவர் வார்த்தைகளில் சொன்னால் ”நான் வாழும் சமூகத்தில் தலித் என்ற அடையாளம் பெற்று எவரும் இல்லை.. இங்கே பணத்தின் பெயரால், படிப்பின் பெயரால் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளும் தலித்திய வலிகளே.. பாதிக்கப்பட்ட அத்தனைப் பேரும் என்னைப் பொறுத்தவரை தலித்துகள் தான்”



நாவலை கையிலெடுத்தால் வாசித்து முடிக்கும்  வரை நம்மை வைக்கவிடாது நகத்தும் வாழ்வியல் கதை. பல கதைமாந்தர்கள்; நாமும் நம் வாழ்க்கையில் கண்டு விலகி சென்றவர்கள், கண்டு கொள்ளாது கடந்து சென்றவர்கள் தான்.

கனகம் பட்ட வேதனையில் அவளின் ஒரே லட்சியம் தனது மகள் தன் தொழிலில் வரக்கூடது என்பதாகும். தன் இனத்தில் யாரேனும் கல்யாணம் செய்து அவ நிம்மதியாக வாழ வேண்டும் என்பதாவே இருந்தது. என் மகளை சக்கிலியன் பெண் கேட்பதா என்று வருந்திய தாய், சக்கிலியன் மாரியாவது தன் மகளை கல்யாணம் செய்து விடக்கூடாதா என ஏங்கும் நிலையில் வாழ்க்கை கொண்டு விடுகிறது, கணவன் கடத்தை அடைக்க கனகம் செய்த வேலை, தன் தாய் மருத்துவ கடன் அடைக்க என பூவரசியும் வேலையில் சேருகின்றார். 

இடையில் பாதுகாவலனாக காப்பாற்றி பூவரசுவிற்கு நல்ல வாழ்க்கை வேண்டும் அவ சந்தோசஷமா இருக்கனும் அவ பிள்ளைக்கு தகப்பனா இருக்கனும் என நினைத்த மாரியும் விபத்தில் மரிக்க; பூவரசு அதே கனகாவின் இடத்தில் வந்து சேருவது தான் திகைக்க வைக்கின்றது, வருந்த வைக்கின்றது. என்னடா வாழ்க்கை? ஏழை பரம்பரையா ஏழை தானா? விடிவே இல்லையா என நம்பிக்கையின்மைக்கு கொண்டு செல்கின்றது. மாரியை கதாசிரியர் எதனால் சாவடித்தார்? தான் வளர்ந்த அதே சூழலில் தன் மகளையும் வளர்க்க ஏன் துணிந்தார்? என்பது காதாசிரியரின் மாந்தர் படைப்பை பொறுத்தது. இருப்பினும் பூவரசின் வாழ்க்கையில் இனி வசந்தமே இல்லை என்பது முடிவில் ஒரு அகலாத வருத்ததையும் நம்பிக்கையின்மையும் விதத்துள்ளதா? என சிந்திக்க வேண்டியுள்ளது.  

மலர்வதியின் இப்புத்தகத்தை எனக்கு தருவித்த எழுத்தாளர் நாறும்பூ நாதனுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். காட்டுக்குட்டியும் உடன் கொடுத்து விட்டுள்ளார். ஒரு விமர்சனத்துடன் சந்திக்கின்றேன். 

மலர்வதிக்கு என் வாழ்த்துக்கள் மென்மேலும் பல புத்தகங்கள் பதிப்பிக்க,