31 Jul 2021

தலை சாய்க்க இடமற்றோர்!

 
கேரளா சுதந்திரம் அடைந்ததும், நிலப்பிரபுத்துவத்துவத்தை  அழிக்கும் நோக்கில் 1959ல் நிலச் சீர்திருத்த மசோதா   அறிமுகப்படுத்தப்பட்டது.  இதன்படி ஒரு குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் அல்லது ஒரு நபருக்கு ஒரு ஏக்கர் என்ற கணக்கில் ஒரு குடும்பம் 25 ஏக்கருக்கு மேல் கைவசம் வைத்து இருக்க  தடை வந்தது. 

அதை நடைபடுத்தும் முன் ஈ. எம். எஸ் அமைச்சரகம் கலைக்கப்பட்டது. அடுத்த  காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் ஆர் சங்கர் தலைமையில், நில சீர்திருத்தங்களுக்கான அடுத்த சட்டம் 1963 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அது நிலப்பிரபுக்களுக்கு சேதாராம் ஆகாதவிதம் வரையப்பட்டது. இதன் மூலம் நிலத்தை பயிரிட்டுக் கொண்டிருந்த குத்தகைதாரர்களுக்கு நிலத்தின் உரிமை கிடைத்தது. ஆனால் நிலங்களில் தொழிலாளிகளாக இருந்த பட்டியல் இனத்தவர்களோ பழங்குடி மக்களோ எந்த நலனையும் பெறவில்லை.

1970 களின் முற்பகுதியில் அச்சுத மேனன் அமைச்சகத்தால்  இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அத்தனை வருடங்கள் கடந்த நிலையில் கவுரியம்மா வரைந்த சட்டத்தின் பல சரத்துக்களை மாற்றி ’பல்லு போன கிழவி போல்’ இருந்தது சட்டம்.  இதன் படி பல சலுகைகளை நிலபிரபுக்களுக்கு வழங்கும் படியாகவே இருந்தது. இருந்தாலும் இந்த சட்டத்தால் நிலமற்ற 26 லட்சம் மக்கள் நில உடையவர்களாக மாறினார்கள்.

 நிலத்தை கையகப்படுத்த இயலாத வண்ணம் சட்டத்தில் ஓட்டை போட்டனர். அதாவது நிலத்தை கிருஷி பூமி என்றும் தோட்ட பூமி என்றும் பிரித்தனர். சட்டப்படி, கிருஷி பூமியை மட்டுமே அரசால் கையகப்படுத்த இயலும்.  நிலதாரர்கள் தங்கள் விவசாய( கிருஷி) நிலத்தை அவசர அவசரமாக தேயிலை, காப்பி, குருமிளகு போன்றவை பயறிட்டு தோட்டமாக மாற்றி தன்னகப்படுத்தி கொண்டனர்.

அடுத்து தங்கள் விவாசாய இடத்தை தோட்டமாக மாற்றப்போகிறோம் என்று அரசு கெசட்டில் ஒரு விளம்ரம் கொடுத்து தங்கள் நிலத்தை காப்பாற்ற வழி செய்தது.

அடுத்து இன்னொரு சூழ்ச்சியை செய்து கொடுத்தது அரசு!  ஆராதனை ஆலயங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் இருக்கும் நிலத்தை அரசு கையகப்படுத்த இயலாது.

பண்ணையாருக்கு பல மனைவிகள் அதில் பல மக்கள் இருந்தால் அவர்கள் எல்லோரும் பங்கிட்ட பின் மீதத்தை அரசிற்கு கொடுக்கலாம்.

நிலதாரருக்கு இன்னும் ஒரு சலுகையை வழங்கி இருந்த்து அரசு , அதாவது தங்கள் நிலத்தில் அளவிற்கு மீறினதை அரசிற்கு என்றில்லை,  தான் விரும்பிய நபர்களுக்கும் விருப்ப தானமாகவும் கொடுக்கலாம்

அடுத்து தங்கள் சொத்துக்களை அரசுசாரா நிறுவங்கள் கட்டுபாட்டில் மாற்றி தனி நபர் சொத்து என்ற நிலையில் இருந்து மாற்றி காப்பாற்றிக் கொள்ளலாம். இப்படியாக வலுவான சட்டத்தை பல சரத்துக்கள் இடச்சேர்க்கையாக சேர்த்து நீர்ந்து போகச்செய்தனர்.


இந்த சட்டம் ஊடாக கையடக்கப்பட்ட அரசின் நிலங்கள் என கண்டு பிடிக்கப்பட்டது 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆகும். அரசு கையகப்படுத்த அணுகிய நிலையில் பல பிரச்சினைகள் நில உடைமையாளர்களால் வரத் துவங்கியது. மேலும் சட்டத்தில் கொடுத்துள்ள சலுகைகளால் விளைந்த மாற்றத்தால்  17 லட்சம் என்பதில் இருந்து 7 அரை லட்சம் நிலம் மட்டுமே புறம்போக்கு நிலம் கணக்கிற்குள் எடுக்க முடிந்தது.  இருந்தும் ஆனால் அரசால் கையகப்படுத்த பட்டது வெறும் 64 ஆயிரம் ஏக்கர் நிலம்  மட்டுமே.

இந்த சூழலில், நிலமற்ற  அடிமட்ட மக்களை திருப்தி படுத்தும் விதம் 25 அரிஜன் காலனி, 4167 பழங்குடி மக்கள் குடியிருப்பு, தேயிலை தொழிலாளர்களூக்காக 10 ஆயிரம் லயின் வீடுகள் , மீன் பிடி தொழிலாளிகளுக்காக 520 குடியிருப்பு உருவானது. இவர்கள் இப்போது தாங்கள் வசிக்கும் நிலத்தின் சொந்தக்காரர்கள் அல்ல.  வசிக்கலாம், நிலத்தை விற்கவோ சொந்தம் கொண்டாடவோ இயலாது.


 இப்போது அரசு தங்களிடம் மக்களுக்கு கொடுக்க புறம்போக்கு நிலம் இல்லை என்கின்றனர். சமீபத்தில் எடுத்த ஆராய்ச்சியில் டாட்டா மற்றும் மலையாளம் ஹாரிஷ் நிறுவங்களிடம் மட்டுமே  கணக்குக்கு மீறின 70 ஏக்கர் நிலம் உண்டு என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களூக்கு முன் நேர்மையான தமிழகத்தை சேர்ந்த கேரளா ஆட்சியாளர் 38 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயன்று கொண்டு இருக்கும் வேளையில் தற்போதைய  தொழிலாளர்கள் அரசு அதிகாரத்தில் வந்தது.

இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எஸ்டேட்  முதலாளிகள் கார்ப்பரேட்டுகளுக்கே உதவி வருகின்றனர். நேர்மை என்று பெயர் எடுத்த ராஜமாணிக்கத்தில் அதிகாரத்தை மட்டுப்படுத்தி ஒடுக்கி விட்டனர். நிலம் கையகப்படுத்தலி அரசிடம் மல்லுக்கட்டி வந்த, கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜித் என்ற நேர்மையான ஆட்சியாளரையும் ’ஹணி ட்ராப்’ ஊடாக முற்றும் முடக்கி விட்டனர். 


கடந்த வருடம் நிலம்கையகப்படுத்தும் வேளையில் ஒரு தம்பதி தீயிட்டு தங்களை மாய்க்கும் துயர் நிலையும் உருவானது. 

அப்படியாக கவுரியம்மா வரைந்த சட்ட மசோதாவின் பலனை இன்னும் எளிய மக்கள் அனுபவிக்கவில்லை. ஒரு பிடி இடம் கூட சொந்தமாக இல்லாது உள்ளூரிலே அகதிகளாக மாற்றப்பட்ட பல்லாயிரம் மக்கள் அல்லாடுகின்றனர்.  இதே நிலையை தான் சென்னை பூர்வகுடி மக்களும்  நிலமற்று நதிக்கரையில் ஒதுங்கி, அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர். 

arumbakkam

 


16 Jul 2021

இமையத்தின் பிற்போக்குத்தன கருத்துக்கள் கொண்ட ”செல்லாத பணம்”

 
”செல்லாத பணம்” க்ரியா பதிப்பகம் ஊடாக  2018 வெளிவந்த எழுத்தாளர் இமையத்தின் நூல் ஆகும் . இது 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.

[caption id="attachment_45693" align="aligncenter" width="297"] 
Late Artist Ilayaraja's paintings from google[/caption]

காதலித்து திருமணம் செய்த பெண், தன் கணவனின் மேலுள்ள கோபத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயல்கயில் பெற்றோர், சகோதரன், கணவன் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பதே இதன் ஒற்றைவரிக் கதை .

முக்கிய கதாப்பாத்திரங்கள் தீக்குளித்த ரேவதி, கணவன் ஆட்டோ ஓட்டுனரும் குடிகாரனுமான ரவி, ரேவதியின் அண்ணன் முருகன், தந்தை நடேசன், தாயார அமராவதி, அண்ணி அருண்மொழி இவர்களை கொண்டு  கதையை நகத்தியுள்ளார்.

எம் என் சியில் பணிபுரியும் அண்ணன் அண்ணி,  ஆங்கிலம் உரையாடும் கதாப்பாத்திரம் என இந்த  கதையின் காலவெளியை தற்காலத்துடையது என அறிமுகப்படுத்தி விட்டார் கதை ஆசிரியர்.

 

கதை அதன் போக்கில் போகும். வாசிப்பவர்கள் அவர்வர் தராதரம், சிந்தனையோட்டம், கல்வி சூழலில் நின்று விளங்கிக் கொள்ளலாம் என்பதே இக்கதையின் சிறப்பு.  கதையின் மையக்கருத்து அல்லது கதையின் நோக்கம் என ஆசிரியர் எதையும் கையாளவில்லை. அறமோ, வாழ்வின் தர்சனமோ அற்று தட்டையான கதை மாந்தர்களுடன்  வெறும் சாரமற்ற உரையாடல்களுடன் கதை நடர்கிறது.

அருண் மொழி, மற்றும் ரவியின் உரையாடல்கள் மட்டுமே ஓரளவேனும் சிந்தனைக்கு உள்ளாகுவது.  ஆனால் இவர்கள் அடங்கிய கதைப்பக்கங்கள் வெறும் ஓரிரு பக்கங்களில் மட்டுமே உள்ளது.  மற்றைய 219 பக்கவும் வெறுப்பும், கோபவும் ஏச்சும் பேச்சும், புலம்பலும் தற்பெருமைகளும் மட்டுமே.

ஜாதி மாறி, தராதரம் இல்லாது கல்யாணம் செய்து விட்டாளே என புலமபும் பெற்றோர்கள்.  கதை முடியும் தருவாயிலும் தங்கள் பார்வையை திருத்தியதாகவோ, மகளை ஏற்றுக்கொண்டதாகவோ இல்லை.  அவள் சாகட்டும் அவனோடு வாழ வேண்டாம் என்ற உரையாடல்கள், தாயே மகளை திட்டும்போது அறுதலி , முண்டச்சி போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் மட்டமானது.   பெற்றவர்கள் சொல்பேச்சு கேட்காது திருமணம் செய்யும் பெண்ணை தாய் அறுதலியாகக்கூட ஏற்றுக்கொள்கிறார்,  சாகட்டும்  என்பது போன்ற  வசைபாடல்கள் இன்னும் பிள்ளைகளை பெற்றவர்களின் உடைமைகள் போன்ற  காலம் சென்ற கருத்தாக்கங்களை தாங்கி பிடிப்பவையாகவே உள்ளது.

பிரதான கதாப்பாத்திரம் ஆசிரியரான தந்தை. ஆசிரியருக்கான எந்த மனவளர்ச்சியும் அற்று, பணத்திமிர் பிடித்த, அற்ப பெருமை கொண்ட ஒரு முதியவர்.  மகள் காதலிக்கிறாள் என தெரிந்ததும் விரும்பினவனோடு ஓடிப்போயிடக்கூடாது என கிடைக்க இருந்த வேலையும் செய்ய விடாது வீட்டில் அடைத்து வைக்கின்றனர்.   ஆனால் அதே அயோக்கியனுக்கே எப்படியோ போகட்டும் என்ற மனநிலையில் திருமணம் செய்தும் கொடுக்கின்றனர்.

தனக்கு தேவை என்றால் காலில் விழப்போவதும், மற்றவர்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள விரும்பாத வரட்டு கவுரவம் பிடித்த தகப்பன்.  தன் மகள் மரணத்தை இழப்பாக காணும் மனம்,  பள்ளி வாகனத்தில் விபத்தில் இறந்த குழந்தை மேல் அந்த கரிசனை இல்லை.  மூன்று வீடு இருந்தும் ஒரு வீட்டில் மகளை குடியிருத்த மனமில்லாது இருந்த தகப்பன், மகளிடம் கடந்த ஆறு வருடங்களாக பேசாதிருந்த தகப்பன்  டாக்டரின் மேஜையில் ”நகை, பத்து லட்சம் பணத்தை வைத்து  எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் என் மகளை மீட்டு தாங்கள் என கெஞ்சுகிறது” அந்த இக்கட்டான சூழலிலும் தான் வைத்து இருக்கும் பணத்தால் சாதிக்கலாம் என்ற அற்ப திமிர்த்தனத்தயே காட்டுகிறது.  

Photo courtesy: Late artist Ilayaraja painting www.google.com[/caption]

அடுத்து அண்ணன். இத்தனை படித்தும்,  நகரத்தில் வேலையிலிருந்தும், தானே காதலித்து திருமணம் செய்திருந்தவனாக இருந்தும்; தங்கை விரும்பின ஒருவனை திருமணம் செய்தாள் என்ற ஆதங்கத்தில், தங்கையிடம் ஆறு வருடமாக முகம் கொடுக்காது இருந்தவன் , தங்கையை சுயகாலில் நிற்க ஊக்கப்படுத்தாது இருந்த நவீன அண்ணன் , மருத்துவ மனையில் மரணத்திற்கு போராடுகையில்  “கோடி போனாலும் பரவாயில்லை என் தங்கையை காப்பாற்றி விடுவேன் என அழுகிறது” தன் தந்தையை போலவே கல்வி பெற்றும் மாற்றம் பெறாத மூர்க்க குணம் உடைய ஆண் கதாப்பாத்திரத்தையே நினைவுப்படுத்துகிறது.  



அடுத்து அமராவதி என்ற தாய் கதாப்பாத்திரம்.   எந்த சூழலிலும் கணவன் மகன் தவறை அவர்களிடம் எடுத்துக் கூறாது, தங்கள் சமூக அந்தஸ்துக்காக மகளை பலி கொடுத்துக்கொண்டிருந்த தாய்.  இடம் கிடைக்கும் போது மருமகளை கீழ்மையாக நடத்தும் விதம், மகளின் கணவனிடம் கொண்டுள்ள மனப்பாங்கு, ”ஒற்றத்துணி இல்லாம மருத்துவர் முன் கிடைக்காளே என்ற ’கற்பு ஓலம்’, அருவருப்பாக உள்ளது.  தகப்பனும் சகோதனுக்கும் மகள் நிலையை தெரிவிக்காது மகளை எப்போதும்  தங்களுக்கு கையேந்தும் படி வைத்திருந்த விதம், மகளின் குழந்தைகளை கூட அருவருப்பாக பார்க்கும் தாய்மை.  இது போன்ற கயமை கொண்ட குணத்தை வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதம் கண்டிக்கும் விதம் கதையில் உரையாடல்கள் இல்லை.

அடுத்தது ரேவதி? இத்தனை அபத்தமாக கதாப்பாத்திரத்தை உருவாக்க இயலுமா?  நெஞ்சில் பச்சை குத்தியிருந்தான் என்ற ஒரே காரணத்திற்காக மணம் முடிக்க விரும்பும் சொந்த புத்தியில்லாத பிடிவாதக்காரியான, பொறியியல் பட்டதாரியான ரேவதி.   ரேவதியை மாதிரியான கதாப்பாத்திரங்கள் மேல் இரக்கம் வரவில்லை வெறுப்பு தான் வருகிறது.

அருண்மொழி கதாப்பாத்திரம் மட்டுமே ஒரே ஒரு ஆறுதல். அறிவு பூர்வமாக சிந்திக்கும், உரையாடும், செயல்படும் ஒரே ஒரு கதாப்பாத்திரம். ரவியை புரிந்து கொள்ள முயன்று ரவிக்கு உதவி அந்தஸ்தை வழங்கியிருந்தால்,  தாழ்வு மனப்பான்மை இல்லாது வாழ்ந்திருப்பார்களே என்று ஏக்கம் கொள்கிறது.

 அடுத்து ரவியின் கதாப்பாத்திரம். நல்லவனா கெட்டவனா என்று நிச்சயம் கொள்ளாத அளவிற்கு மாறிக்கொண்டே இருந்த முக்கிய  கதாப்பாத்திரம்.  கடைசி வரை ரவியை ரேவதியின் குடும்பம் புரிந்து கொள்ளவில்லை. ரேவதி குடும்பம் அடிக்கும் போதும், திட்டும் போதும் எந்த எதிர்ப்பும் இல்லாது ஏற்று கொள்கிறான்.   கடைசியில் மனைவியின் உடலை ரேவதி குடும்பம் எடுத்துக்கொண்டு போகும் மவுன சாட்சியாக ஒதுங்கி நிற்கிறான் குடிகாரனான தன்  இயலாமையினால்.

தீயிட்டு கொளுத்தின ரேவதியின் வாக்குமூலம் வாங்க வரும் போது போலிஸ் அதிகாரி வாங்கின கைலஞ்சம் ரூபாய் ஆயிரத்தை; ரேவதி இறந்து விட்டாள் என அறிந்ததும் திரும்பிக்கொடுக்கிறார்.  கையூட்டு வாங்குனதே அநியாயம், அந்த அரசு ஊழியர்களின்  அத்து மீறல்களுக்கு வக்காலத்து வாங்கும் படியாக உள்ளது.  பல இடங்களில் மீண்டும் மீண்டும்  ஒரே தூஷணவார்த்தைகள் தொடர்ந்து வருவது அலுப்பாக உள்ளது.

பெண்கள், பிறந்த வீட்டு ஆட்களாலும் துன்புறுத்தப்படும் அவலம். பெற்றவர்கள் ரவியுடன் ஓடிப்போய் விடுவாள் என்ற பயத்தில் வேலைக்கு அனுப்பவில்லை. ரவியோ எவனோடாவது ஓடிப்போயிடுவாள் என்ற  ஆச்சத்தில் வேலைக்கு அனுப்பவில்லை.  

 மொத்ததில் சாகித்ய அக்காடமி விருது கொடுக்கும் அளவிற்கு இதில் என்ன கதைக்கரு உண்டு என்றே விளங்கவில்லை. வாசகர்களை 222 பக்கம் முடியும் மட்டும் மருத்துவமனையிலே நிற்கவைத்து பார்த்த கொடூரம்.  அடுத்து தங்கள் பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நடேசன் குடும்பத்தாரின் /மேல்த்தட்டு படித்த வர்கத்தின் அகங்காரம். இப்படி சமூகத்திற்கு எடுத்துக்காட்டு அல்லாத கதாப்பாத்திரங்களை கொண்டு கதை சொல்லியதால் சமூகத்திற்கு என்ன பலம் கிடைக்க போகிறது.

ஒரு கதை என்பது காலத்தால் அழியாத உணர்வுகளாக இருக்கவேண்டும்.  முழுக்கதையுமே  மரண வீட்டின் ஓலம்,  உணர்வு கொந்தளிப்பு , சோகம் என வாசகர்களை சிந்திக்கவிடாதே  தடுக்கும் உணர்ச்சி கொப்பளிப்பு  நாவல் இது!