இந்த வாரம் ஒரே படபடப்பா போச்சுது. ஒரு டீ போட்டு குடிச்சா எல்லா மண்டைக்கனவும் போயிடும். அதான் டீ போட போறேன் உங்களுக்கும் ஒரு கப் டீ?
டீயில் ஒரே பொருட்கள் தான் சேர்த்தாலும் கூட அதன் சுவை, மணம், திடம் எல்லாம் டீ தயாரிக்கும் ஆளுக்கு ஆள் போல, சேர்க்கும் பொருளின் அளவுக்கு அளவு மாறுபடும். என் சித்தி வீட்டில் டீ என்பது ஹார்லிக்ஸ் மாதிரி தான் இருக்கும். சில வீடுகளில் குடிக்க தருவது டீயா? காப்பியா? என்று புரிவதில்லை! ஹிந்திக்கார நண்பிகள் இருந்தார்கள்; ஸ்வெட்டர் பின்னி படிக்க தோழியுடன் செல்வது உண்டு. அவர்கள் வீட்டில் வேலைக்காரர்கள் இருப்பதால் எங்களை கண்டவுடனே ‘மாடசாமி 2 கப் டீ கொண்டு வாங்கோ’ என்று கட்டளை இட்டு விடுவார்கள். நாங்களும் வேண்டாம், இப்போது தான் சாப்பிட்டு வந்தோம் என்று எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க. இல்லைங்கோ ஒரு டீ குடிங்கோ என்று அன்பாக சொல்லி தரும் டீயை குடிக்காது எப்படி இருப்பது? ஆனால் டீயுடன் சேர்ந்து அடிக்கும் ஒரு நெடி தான் இன்று நினைத்தாலும் பயமாக உள்ளது. நானும் என் தோழியும் நல்ல ஆற வைத்து ’டக்’கென்று ஒரே மடக்கில் குடித்து விட்டு கண்களால் பார்த்து ஆறுதல் பட்டு கொள்வோம். கழுவாத கப்பில் இருந்து வந்த நெடியா, அல்லது ‘டீ’ இனி கேட்கப்பிடாது என்று அவர்கள் வேலைக்காரர் ஏதும் சேர்ப்பாரா என்றும் தெரியாது.
சில வீடுகளில் ஒரு பாத்திரத்தில் பால், தண்ணீர் , சீனி, தேயிலை எல்லாம் மொத்தமாக போட்டு கொதிக்க வைத்து அதை அப்படியே வடிகட்டி தேயிலை டீ என்று தந்து விடுவார்கள். கொஞ்சம் முந்தி கொண்டு, காப்பி தாங்கோ என்று வாங்கி குடித்தால் தப்பிக்கலாம்.
மாமியார் வீட்டில் தான் சுவையான டீ அருந்தினேன். என்னவர் வீட்டில் பசுமாடுகள் இருந்ததால் பால் எப்போதும் சுண்ட சுண்ட அடுப்பில் காணும். அந்த பாலில் டீ போட்டு தரும் டீ எனக்கு மட்டும் ஹராமாக இருந்த்து. மாமியார், என்னவர், மாமனார் கொளுந்தனார் என அவர்கள் எல்லோருக்கும் 4 டம்ளருகளில் வரும் போது, எனக்கு மட்டும் அடுப்பாங்கரையில் உள்ளது கலந்து குடித்து கொள் என்று கூறி விடுவார்கள். யாரும் காணாது என்னவரிடம் டீ வாங்கி குடித்து விடுவதே என் வழக்கமாக இருந்தது. பின்பு எங்கள் வீட்டில் நான், இடும் டீயை என்னவர் குடித்து விட்டு “நாய் கூட குடிக்காது” என்ற போது தான் உருப்படியான ’டீ’ இட கற்று கொள்ள ஆவல் வந்தது!
எங்கள் ஊர் வண்டிபெரியார் ஏரியா (கேரளா) தேயிலை பயிறிட்டு தயாரிக்கும் இடம் ஆகும். ஒவ்வொரு எஸ்டேட் தேயிலைக்கும் அதன் தயாரிப்பு முறை சார்ந்து அதன் ருசியில் மாற்றம் காணும்.
தேயிலை 4500 வருடங்களுக்கு முன்பே சீனாவில் பயன்படுத்தியாதாக சொல்லப்படுகின்றனர். சீனர்கள் கியா(kia) என்றது சா(cha) என்று மாறியது. பின்பு வெள்ளகாரர்கள் சொல்வது தான் வேதவாக்கு என வந்த போது ‘சா’ டீ யாக மாறியது.
2.5 மிலியன் டன் தேயிலை உற்பத்தி செய்யும் இந்தியாவில் 3 மிலியன் டாலர் அன்னிய செலாவணி ஈட்டி தருவதாக தேயிலை உள்ளது. அருணாசல் பிரதேஷ், பர்மா போன்ற இடங்களில் 12 நூற்றாண்டில் இருந்தே பயன்படுத்தியதாக சொல்கின்றனர். இந்த தேயிலை செடி 40 உலக நாடுகளிலும் பயிர் செய்கின்றனர். இந்தியாவில் டார்லிஜிங், ஆசாம், கேரளா தமிழகத்தில் நீலகிரி போன்ற மாவட்டங்களில் தேயிலை பயிர் செய்யப்படுகின்றது.
ஷென் நங் என்ற ஒரு வைத்தியர் மருந்து தயாரித்து கொண்டிருக்கும் போது தவறுதலாக தேயிலை இலை வென்னீரில் விழுந்ததாகவும் அவர் அதன் மகிமையை கண்டு தேயிலை பயன்படுத்த ஆரம்பித்தாகவும் சொல்லப்படுவது உண்டு. இன்னும் ஒரு கதையும் உண்டு; இந்தியாவில் இருந்து தியானத்திற்கு சீனா சென்ற போதிதர்மா என்ற துறைவி தான் தூங்காது தியானத்தில் இருக்க தன் சக்தியால் உருவாக்கியதே தேயிலை செடிகள் என்றும் ஒரு சுவாரசியமான கதை உலாவுகிறது.
எது எப்படியோ வெள்ளைகாரர்கள் இந்தியாவில் ஆட்சி செய்தபோது பஞ்சபாண்டவர்கள் தங்கள் மனைவி பாஞ்சாலியுடன் மறைந்திருந்து வாழ்ந்து வந்தகொடூர மேற்கு தொடர்ச்சி மலையில் தேயிலை பயிரிட்டு பல லட்சம் மக்களுக்கு, சிறப்பாக தமிழகத்தில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் வந்த மலையக தமிழ் தமிழர்களுக்கு வாழ்வாதாரமாகவும் வாழ்வு அளித்ததும் இத்தேயிலை தோட்டங்களே. ஒரு காலத்தில் தமிழர்களின் உழைப்பின் வழியாக தமிழர்களின் கோட்டையாக இருந்த தேயிலை தோட்டங்கள் வெளிமாநில முதலாளிகள் கைகளில் இருந்து மலையாளி முதலாளிகள் கைவசம் மாறும் தோறும் தமிழன் இடம் நகர்ந்து தமிழகம் நோக்கி நகர உந்த படுகின்றான்.
தேயிலை தோட்டங்கள் பார்க்க பச்சை பட்டு சேலை உடுத்திய அழகான மங்கையாக எல்லோருக்கும் காட்சி அளித்தாலும் அதில் தங்கள் உழைப்பை சிந்தும் மக்கள் வாழ்க்கை அவர்கள் பண்பாட்டு தளங்கள் என பல வித்தியாசமான வியற்பூட்டும் பரிணாம கதைகள் கொண்டது! எப்படி ஜாதியும் மதவும் சமூகத்தை பிரித்து வைத்ததோ, அதே போல் தேயிலை தோட்ட மனிதர்களை அரசியலும் அதிகாரமும் ஆணவவும் ஆண்டு கொண்டிருக்கிறது.
சரி சரி கதைத்தது போதும். தேத் தண்ணீர் போட ஆரம்பிப்போம்
·
1.அடுப்பை பற்ற வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைய்யுங்கள்.
· 2. ஒரு சிறு பாத்திரத்தில் ஒரு நபருக்கு ஒரு சிறு கரண்டி தேயிலையை எடுத்து கொள்ளுங்கள்.
· 3. நன்றாக கொதித்த நீரை டீத்தூள் போட்டு வைத்துள்ள பாத்திரத்தில் நேரடியாக ஊற்றி 5-6 நிமிடம் மூடி வைத்து விடுங்கள்.
6.ஒஒரு போதும் டீ தூளை இட்ட பின்பு தண்ணீரை கொதிக்க விட கூடாது டீயின் உண்மையான ருசி மாறி கசப்பு கலந்து விடும்.
· 4. இனி கொதித்த பாலை சீனி கலந்து ஒரு கோப்பையில் எடுத்து அதில் இந்த டீ கலவையையும் வடி கட்டி ஊற்றி கலர் வைத்தே கடுப்பம் போதுமா என்று தெரிந்து கொள்ளலாம்.
·
டீ ரெடி வாங்கோ குடிப்போம்.
(குறிப்பு: இலை தேயிலை என்பவையை கொதிக்க வைத்தால் அதன் உண்மை சுவை மறைந்து விடும். இவ்வகையான தேயிலை தூள்களை டிக்காஷன் போன்று எடுத்து பயண்படுத்த மட்டுமே வேண்டும். )
இந்த கட்டன் சாயாவுடன் எலுமிச்சம். இஞ்சி, புதினா இலை போன்றவையில் ஏதாவது ஒன்று சேர்த்து குடித்தால் இன்னும் பல வகை சுவையில் குடிக்கலாம். தற்போது பல வித ருசிகளில் தேயிலை பொடியாகவே தயாரிக்கப்பட்டு வருகின்றது. டீ குடிப்பதால் பித்தம் தாக்க கூடும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அற்புத நோய் வராது தடுக்க கட்டன் சாயா நல்லது என்றும் சொல்கின்றனர். தேயிலையை காற்று புகிராத டின்னுகளில் போட்டு வைத்து பாதுகாக்க வேண்டும் மற்று பொருட்களுடன் வைத்தால் அதன் மணத்தையும் சுவாகரித்து இதன் சுவை மணம் மாறி போக வாய்ப்பு உண்டு.
ஏழைகள் வீட்டில் பால் எப்போதும் இருப்பதில்லை, மேலும் சில பணக்காரர்களுக்கு கொழுப்பு, சர்க்கரை வியாதி தாக்கி விடுவதால் பாலை தவிற்கும் நோக்குடன் கட்டன் சாயா குடிக்க உந்தப்படுவது உண்டு. தேயிலை தோட்ட தொழிலாளிகள் வீட்டு தேத்தண்ணீர் வித்தியாசமான கருப்பட்டி சேர்த்த ருசியான ‘டீ’யாக இருக்கும். சிறிய பீங்கான் பாத்திரத்தில் ஸ்டைலுக்கு குடிப்பவர்கள் அல்ல அவர்கள். காலை 6.30 மணிக்கே வேலைக்கு செல்ல வேண்டி வருவதால் பெரிய சட்டியில் கொதிக்க வைத்து கருப்பட்டியும் சேர்த்து செம்பு போன்ற பாத்திரங்களில் எடுத்து செல்வர்கள். மேலும் பல்லு கூசும் குளிரில் தேத்தண்ணீர் அவர்களுக்கு உணவு, குளிர் நிவாரணி எல்லாமாகின்றது.
மேலும் black tea என்று அழைக்கப்படும் இந்த “கட்டன்” சாயாதான் மருத்துவர்கள் பரிந்துரைப்பது.
அற்புத நோய்க்கு சிறந்த நிவாரணி என்று சொல்லி வந்தாலும் தற்போதைய காலத்தில் தேயிலை தோட்டங்களுக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்து இதை எல்லாம் கேள்விக் குறியாக்குகின்றது.
கழிவு டிக்காஷனை குப்பையில் போடாது, ரோஜா செடிக்கு இட்டால், செடி அழகான பூக்களை நமக்கு தரும்.