21 Sept 2026

கிளாரிந்தாவின் வெற்றி

ஏ. மாதவையா 1915-ஆம் ஆண்டு எழுதிய 'கிளாரிந்தா' எனும் வரலாற்றுப் புதினம், 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை பின்னணியாகக் கொண்டு துணிவு, சமூகச் சீர்திருத்தம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தும் ஒரு சீரிய படைப்பாகும். ​வரலாற்றில் நிஜமாகவே வாழ்ந்த கிளாரிந்தா என்ற பெண்ணின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது இந்நாவல். ஒடுக்குமுறை நிறைந்த சமூகக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, பண்பாட்டு எல்லைகளைத் தாண்டிய காதலை ஏற்று, பின்னர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவி, தன் சுதந்திரமான வாழ்வை முழுமையாகச் சமூகச் சேவைக்காக அர்ப்பணித்த ஒரு மராத்திய பிராமண விதவையின் எழுச்சிமிக்கப் பயணத்தை இது கம்பீரமாகப் பதிவு செய்கிறது.அ. மாதவையாவின் வரலாற்று நாவலான "கிளாரிந்தா", சரோகினி பாக்கியமுத்து அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும். . 
மூன்று பாகங்களாக அமைந்துள்ள இந்த நாவலின் முதல் பகுதியில், கிளாரிந்தாவின் வாழ்க்கைப் பின்னணியையும், அவள் வாழ்ந்த காலத்தின் அரசியல் மற்றும் சமூக பண்பாட்டு சூழலையும் விரிவாக எடுத்துரைக்கிறது. கி.பி. 1746ஆம் ஆண்டில், தஞ்சைக் கோட்டை பிரெஞ்சுப் படைகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது தஞ்சை அரசின் ஆட்சி, பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கிலிருந்து ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குச் செல்லும் வரலாற்றுப் பின்னணி சித்தரிக்கப்படுகிறது.

தஞ்சை மன்னரின் நிர்வாகத்தில் திவான், அரசு பண்டிதர் மற்றும் பிற உயரதிகாரிகள் முக்கியமாக பங்காற்றுகின்றனர்.
ராமண்ணா, அரசவையின் பிராமண பண்டிதர் , அமைச்சர் மற்றும் தலைமை ஜோதிடராகவும் மன்னரிடம் பெரும் செல்வாக்கு பெற்றவராகவும் இருகிறார். அப்போது தஞ்சை, மன்னர் பிரதாப் சிங்கின் ஆட்சியின் கீழ் இருந்தது.

தஞ்சை அரசின் படைத்தலைவராக இருந்த பண்டிதரின் மகன் முராரி வீரத்துடன் போராடிய நிகழ்வை போற்றும் வகையில், அவர் போர் களத்தில் இருக்கும் போது பிறந்த மகளுக்கு கிளாவிருந்தா பாய் என்று பெயரிட குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர். ஆனால் துரதிஷ்டம் போரின் முடியப்போகும் தருவாயில் முராரி ராவ் போரில் கொல்லப்படுகிறார் என்ற துயரமான செய்தி வந்தடைகிறது. அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், முராரியின் மனைவியும் மரணமடைகிறார். இதனால் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையின் முழுப் பொறுப்பும் அவளது தாத்தாவான அமைச்சரும் அறிஞருமான ராமண்ணா பண்டிதரின் மீது விழுகிறது.

போரில் மகனை இழந்த துயரத்தால் மனமுடைந்த ராமண்ணா பண்டிதர், தனது பேத்தியை தன் சகோதரியிடம் ஒப்படைத்துவிட்டு, உலக வாழ்க்கையைத் துறந்து வனத்தில் துறவற வாழ்வை மேற்கொள்கிறார். பின்னர் கிளாரிந்தா, அத்தையுடன் பணிப் பெண் சாரதாவின் அன்பிலும் அரவணைப்பில் வளரத் தொடங்குகிறாள்.
பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, லிட்டில்டன் என்ற ஆங்கிலேய இராணுவ அதிகாரியின் மூலம் நாட்டின் அரசியல் நிலவரத்தை அறிந்த பண்டிதர் ராமண்ணா, தஞ்சை மன்னருக்கு மீண்டும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அரண்மனைக்குத் திரும்புகிறார்.
தனது தாத்தாவின் திரும்பி வருகை கிளாரிந்தாவிற்கு தனது தாத்தா ராமண்ணாவின் வீட்டில் வழிகாட்டுதலின் கீழ் இந்து தர்மம், சாஸ்திரங்கள், வேதாந்தம் உள்ளிட்ட பல துறைகளில் கல்வி கற்று, சிந்திக்கும் திறனும், கேள்வி எழுப்பும் அறிவாற்றலும் கொண்ட மிடுக்கான இளம் பெண்ணாக உருவெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

கிளாரிந்தா திருமண வயதை எட்டியபோது, அவளுக்குத் தகுந்த மணமகனைத் தேடுகிறார் தாத்தா ராமண்ணா. திவானின் ராவின் . தம்பி மகனான மாதவனுடன் கிளாரிந்தாவை மணமுடித்துக் கொடுக்க ராமண்ணா விருப்பம் கொள்கிறார். ஆனால் ஜோதிடப் பொருத்தம் இல்லை என்று கூறி மாதவன் –கிளாரிந்தா திருமணம் நடைபெறவில்லை.
இந்த சூழலில் , பண்டிதரின் செல்வத்தை நோக்கமாகக் கொண்ட 56 வயதான திவான், கிளாரிந்தாவைத் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வேண்டுகிறார்.
சாதி மற்றும் குடும்ப மரபுச் சட்டங்கள், . சமூக அழுத்தங்களும் சூழ்நிலையின் காரணமாக, தனது பதினாறு வயது பேத்தியான கிளாரிந்தாவை வயதான திவானுக்கு திருமணம் செய்து வைக்க பண்டிதர் நிர்பந்திக்கப்படுகிறார். இந்த நிகழ்வே கிளாரிந்தாவின் வாழ்க்கையில் பின்னர் உருவாகும் பெரும் திருப்பங்களுக்கும், சிக்கல்களுக்கும் அடித்தளமாக அமைகிறது.


திவானுக்கு ஏற்கனவே தனது இறந்து போன சகோதனின் மனைவி கமலாபாயி ஆசைநாயகியாக உடன் வசித்து வருகிறாள். அதனால் திருமணம் முடித்து வந்த தனது இளம் மனைவி கிளாவிருந்தாவின் மீது உண்மையான அன்போ பாசமோ கொண்டவன் அல்ல. அவனுடைய மனம் முழுவதும் அவனது ஆசை நாயகியிடமே உள்ளது. தனது கர்வம் மற்றும் பெருமைக்காக இளம் பெண்ணை திருமணம் முடிப்பதால் கிளாவிருந்தாவின் குடும்பச் சொத்து தனக்கு கிடைக்கும் என்றும் பேராசை கொள்கிறான்..

திவான் சில மாதங்களில் நோயால் இறந்த போக கமலாபாயின் சூழ்ச்சியால், 'சதி' என்ற பெயரில் கிளாவிருந்தாவை உயிருடன் எரித்துக் கொல்ல திவானின் சகோதரன் அமத்தியாவுடன் சேர்ந்து திட்டமிடுகிறாள். யாரும் காப்பாற்ற வழி இல்லா நிலையில் கிளாவிருந்தாவின் ஊழியக்காரி சாரதா தப்பித்து போய் கிளாவிருந்தாவை காப்பாற்றும் படி ஆங்கிலேய ராணுவ அதிகாரியிடம் வேண்டுகிறாள். ஆங்கிலேய ராணுவ அதிகாரி லிட்டில்டன் சவாலான தருணத்தில் இருந்து அவளைக் காப்பாற்றுகிறார். தனது விருந்தினர் மாளிகையில் கிளாவிருத்தாவின் பணிப்பெண் சாரதாவின் பராமரிப்பில் பாதுகாப்பாக தங்கவைத்து இருக்கிறார்.
இருப்பினும், கிளாவிருந்தாவின் மனம் தனது உறவினரான மாதவன் வந்து தன்னைக் காப்பாற்றிச் செல்வான் என்ற நம்பிக்கையிலேயே நாட்களை கடத்துகிறாள். இதனிடையில் கிளாவிருந்தா எதிர்பார்த்தபடியே மாதவன் சந்திக்கிறான். . ஆனால் கைபெண்ணான கிளாவிருந்தாவை முக்கியமாக தனது பெரியப்பாவின் மனைவியாக இருந்த கிளாவிருந்தாவை தனது ஆஸ்தான மனைவியாக ஏற்றுக்கொள்ள பல தடைகள் உள்ளதை தெரிவிக்கிறான். அத்துடன் கிளாவிருந்தாவை ஆசைநாயகியாக வைத்துக்கொள்ள விரும்புவதாக வெளிப்படையாகக் கூறுகிறான். அந்த அவமானகரமான முன்மொழிவை கிளாவிருந்தா உறுதியாக நிராகரித்து விடுகிறாள்.
படிப்படியாக லிட்டிடன் தன்மேல் கொண்ட பரிவை உணர்ந்து, கிறிஸ்தவ கருத்தாக்கங்களில் உள்ள விடுதலை கருத்துக்கள் ஈர்க்க துவங்குகின்றன. லிட்டில்டனும் இவள் அழகிலும் அறிவிலும் நாட்டம் கொண்டு அவள் மேல் காதல் மலர்கிறது.

தான் இதுவரை நம்பின தன்னுடைய மதம், தன்னுடைய உறவினர்கள் மற்றும் தஞ்சாவூர் மன்னர் என எல்லார் வெறுப்பையும் கிளாவிருந்தா எதிர்கொள்கிறாள். அப்போது அவளுக்கு லிட்டில்டன் கனிவான அன்பும் கிறிஸ்தவத்தின் போதனைகளும் அவளுக்கு ஆறுதலும் துணிவும் வழங்குகிறது. அதன் மனிதநேயக் கருத்துகளையும் ஆட்கொண்ட . கிளாவிருந்தாவிற்கும் ஆறுதலாகவும் தெரிந்தது.

"இப்பிறவியிலும், நாம் அறியாக முற்பிறவிகளிலும் செய்த பாவங்களின் விளைவாகவே துன்பபாக்கியங்கள் நிகழ்கின்றன என்றும், அவரவர் விதியை தவிர்கவே முடியாது போன்ற கருத்தை விட வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்...போன்ற கிறிஸ்துவின் போதனைகளால் ஈர்கப்படுகிறாள். தன்னை மனமார நேசித்து, மரியாதையுடனும் சமமான மனைவியாகவும் நடத்த விரும்பின லிட்டில்டனின் அன்பை ஏற்றுக்கொள்கிறாள். தனது தாத்தாவின் கல்லறையின் முன், இருவரும் திருமண உறுதிமொழி மேற்கொண்டு கிளாவிருந்தா என்ற பெயரை ராணுவ குதிரை வீரரின் தாயின் பெயர் கிளாரிபெல் என்பதையும் இணைத்து கிளாரிந்தா என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொள்கிறாள். அந்தத் திருமணம் கிளாவிருந்தாவின் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை கொடுக்கிறது..
அவர்களுடைய வாழ்க்கை தனிப்பட்ட இருவரின் மகிழ்ச்சியில் மட்டும் நின்றுவிடாது மக்களின் முன்னேற்றமே தனது வாழ்வின் நோக்கம் என்பதை உணர்ந்த கிளாவிருந்தா, ஏழை மக்களுக்காக பள்ளிகளை நிறுவவும், குடிநீர்க் கிணறுகளை வெட்டவும், சமூக நலப் பணிகளில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறாள்.
இருப்பினும் கிறிஸ்தவளாக இன்னும் ஞ்சானஸ்தனம் பெறவில்லை என்ற ஒரு குறை வளுக்கு இருந்து கொண்டே இருந்தது.

😌வரட்டு மிஷனறியால் தொலைந்த கிளாரிந்தாவின் காதல் வாழ்க்கை

பாளையங்கோட்டையின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த ஐரோப்பியர் குடியிருப்பில் ஒரு வசதிஆன பங்களாவில் லிட்டில்டன் மற்றும் கிளாரிந்தா மகிழ்ச்ச்ஹியுடன் வாழ்ந்து வருகின்றனர். (பின்னாளிலும் அந்தக் கட்டிடம் வெடிமருந்துகளையும் மருத்துவப் பொருட்களையும் சேமித்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டது. )
பாளையங்கோட்டைக்கு வந்தபின் அவர்களின் வாழ்க்கை வெளிப்படையாக அமைதியாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் ஞானஸ்தானம் இதுவரை எடுக்கவில்லை. முறையான கிறிஸ்தவர்களாக வாழ இயலவில்லை என்பதில் ஒரு குற்ற உணர்ச்சியுடனே கிளாரிந்தாவின் வாழ்க்கை நகர்கிறது.

இன்னிலையில் தஞ்சாவூர் செல்ல தம்பதிகள் தயார் ஆகுகின்றனர். சுவார்ட்ஸைச் சந்தித்து ஞானஸ்தானம் பெறப் போவதை எண்ணி பூரிப்பாக உள்ளாள் ஆனால் லிட்டில்டனின் நிலை அதற்கு மாறுபட்டதாக உள்ளது. கிளார்ந்தாவை இழந்து விடக்கூடாது என்ற அவசரத்தில் உடல் நலமற்ற ஒரு மனைவி தனது சொந்த ஊரில் இருப்பதை மறைத்தது ஆனால் பாதரியாரிடம் பொய் சொல்ல இயலாதே என்ற நிலையில் மனக்கலக்கத்தில் உள்ளார். . தன் செயலால் உருவான குற்ற உணர்வு அவரை இடைவிடாமல் துன்புறுத்த்துகிறது . மனவேதனையை மறக்க மதுவை நாடுகிறார்; அதனால் உடல்நலமும் மனவலிமையும் குறைகிறது. .
தாம் செய்த தவறு மன்னிக்க முடியாத அளவுக்கு பெரிதல்ல என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டபோது, அவரது பழைய உற்சாகமும் ஓரளவு திரும்பியது.
ஆனால் கிளாரிந்தாவின் மனநிலை அப்படியல்ல. லிட்டில்டன் குற்ற உணர்வால் நோயுற்று படுக்கையில் கிடந்த காலமெல்லாம், அவள் எந்தப் புலம்பலும் இன்றி அன்புடனும் கருணையுடனும் அவரைப் பராமரித்தாள். அவர் குணமடைந்தால் அதுவே தன் வாழ்வின் பெரும் மகிழ்ச்சி என்று எண்ணி இரவும் பகலும் பணிவிடை செய்தாள்.
லிட்டில்டன், தன் ஐரோப்பிய நண்பர்கள் கிளாரிந்தாவை தனது எதிர்கால மனைவியாக மரியாதையுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்றும், அவள் வாழ்க்கையில் அனுபவித்த துயரங்களையும் தியாகங்களையும் புரிந்து கருணையுடன் நடத்துவார்கள் என்றும் நம்புகிறார். எனவே அவர்களுடன் அவளை அறிமுகப்படுத்தவும், சமூக நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்யவும் பலமுறை முயல்கிறார்.
ஆனால் கிளாரிந்தா ஒவ்வொரு முறையும் உறுதியாக மறுத்தாள். அவளுடைய மனச்சாட்சி அவளை விடவில்லை. தன்னை இன்னும் லிட்டில்டனின் உண்மையான மனைவியாக அவள் கருதவில்லை. உயிருடன் இருக்கும் மற்றொரு பெண்ணுக்குரிய மனைவி என்ற அந்தஸ்தை, அவளுடைய கணவனை பறித்துக்கொண்டு வாழ்கிறேன் என்ற எண்ணம் அவளை நாள்தோறும் வதைத்தது. மனைவியாக முழுமையாக வாழவும் முடியவில்லை; அவரைவிட்டு விலகிச் செல்லவும் அவளுக்கு வழியும் இருக்கவி ல்லை. இந்த இரு நிலைகளுக்கிடையே அவள் குற்ற உணர்ச்சியுடனும் மனவேதனையுடனும் தத்தளித்தாள்.
அதனால் லிட்டில்டனின் நண்பர்களை வீட்டில் வரவேற்பதையோ, அவர்களுடன் பழகுவதையோ அவள் விரும்பவில்லை. கிளாரிந்தாவின் இந்த நிலைப்பாடு லிட்டில்டனுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்துகிறாள் என்ற எண்ணம் அவருக்குள் வேரூன்றியது. எவ்வளவு நயமாக எடுத்துச் சொல்லியும், எவ்வளவு கெஞ்சியும், அவள் முடிவை மாற்ற முடியவில்லை. அதன் விளைவாக அவருக்குள் சலிப்பும் விரக்தியும் அதிகரித்தன.
மெல்ல மெல்ல அவர் கிளாரிந்தாவிடம் அக்கறையற்றவராக மாறினார். அதிக நேரத்தை ஐரோப்பிய நண்பர்களின் வீடுகளில் கழிக்கத் தொடங்கினார். சில சமயங்களில் அவர்களையே தன் வீட்டிற்கு அழைத்து, கிளாரிந்தாவின் பங்களிப்பின்றி விருந்தோம்பல் செய்தார். ஒருகாலத்தில் அன்பும் நம்பிக்கையும் நிரம்பியிருந்த அந்த இல்லறம், இப்போது குற்ற உணர்ச்சி, பிடிவாதம், மனக்கசப்பு, அவமானம் ஆகியவற்றின் பாரத்தில் சிக்கித் தவித்தது.
இருப்பினும் லிட்டில்டனின் நம்பிக்கை முற்றிலும் சிதறவில்லை. கிளாரிந்தவிற்கு ஞானஸ்நானம் கிடைத்த பின்னர் தன்னை சட்டப்படி திருமணம் செய்துகொண்டதாக சமூகத்தின் பார்வையில் அவள் கண்ணியமான மனைவியாக அங்கீகரிக்கப்படுவாள்; அவளுடைய மனச்சோர்வும் ஒரு கெட்ட கனவைப் போல மறைந்துவிடும் என்று அவர் எண்ணினார்.
அதற்காக ஐரோப்பாவில் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியின் தகவலு ம் தமக்குச் சாதகமாக மாறும் என்ற எதிர்பார்ப்புடன் காலத்தை கழித்தார். தஞ்சையில் அவர்கள் அனுபவித்த மகிழ்ச்சியான நாட்கள் மீண்டும் திரும்பிவரும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை கடத்திக்கொண்டு இருந்தனர்.

ஆனால் விதி வேறு முடிவை எடுத்திருந்தது. பாளையங்கோட்டைக்கு வந்து ஒரு வருடம் கூட ஆகும் முன்னால், சூலைநோய் மீண்டும் அவரை கடுமையாகத் தாக்கியது. தன் குடும்பத்தில் இருவர் இதே நோயால் உயிரிழந்ததை அவர் நன்கு அறிந்திருந்ததால், இந்த முறை மனஅச்சமும் அதிகமாக இருந்தது. நோயின் தீவிரம் முந்தையதை விடக் கொடுமையானதாக இருந்தது. படுக்கையை விட்டு எழ முடியாத நிலை ஏற்பட்டது. தாங்க முடியாத வேதனை அவரை வாட்டியது.
நோயின் வலியால் லிட்டில்டன் எரிச்சலுடன் அவள்மீது கோபம் காட்டிய தருணங்களிலும், அவள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியுடனும் பொறுமையுடனும் அனைத்தையும் சகித்துக்கொண்டாள். அவளுடைய அன்பு சூழ்நிலைகளால் மாறாதது; ஆனால் அந்த அன்பை முழுமையான இல்லறமாக வாழ முடியாத வேதனை, இருவரின் வாழ்க்கையையும் தொடர்ந்து நிழல்போல் பின்தொடர்ந்தது.
இந்த நாவல் மனிதர்களின் கதைகள், அரசியல் வரலாறு, தத்துவம் , சமூக பழக்க வழக்கங்கள், கிறிஸ்தவ மதமாற்றம், மிஷனறிகளின் மக்கள் மேலுள்ள ஆதிக்கம், வரட்டுத்தனமான சட்டங்கள், ஆண்களின் முரட்டுத்தனம், பெண்களின் இயலாமை இவைக்கு மத்தியில் பெண்களை ஒடுக்க சதி எவ்விதம் பயன்படுத்தப்படுகிறது என்பதை விவரிக்கும் நாவல் இது. திருநெல்வேலி, பற்றிய தகவல்கள் நமக்கு சுவாரசியமாக உள்ளது. கிறிஸ்தவத்தின் துவக்க வரலாறு அறிய விரும்பும் மக்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான நாவல்.


____________________________________________________________________________________________________

பகுந்தாய்வு

கணவர்களின் தோல்வியும் கிளாரிந்தாவின் வெற்றியும்

நாவலில் கிளரிந்தாவின் இரண்டு கணவர்களில் ஒருவர் இந்து சமயத்தை சார்ந்தவர் , மற்றொருவர் கிறிஸ்தவர் தத்தமது மதங்களின் நெறிகளை பின்பற்ற செயல்படுத்தத் தவறிவிடுகின்றனர்:
திவான் (இந்து கணவர்); அவளைத் தாழ்வாக நடத்தி, அவளது அறிவாற்றலையும் அன்பையும் புறக்கணிக்கிறார். இது இந்து மதத்தில் பெண்களுக்கு குடுமபத்தில்ச் மரியாதை இல்லை, சுயகவுரவத்திற்கு இடமில்லை என்ற எதிர்மறைச் சித்திரத்தை உறுதிப்படுத்துவது போல் உள்ளது.

லிட்டில்டன் (கிறிஸ்தவ கணவர்): கிளாரிந்தா மீது உண்மையான அன்பு கொண்டிருந்தாலும், தனது ஆசையைத் தீர்த்துக்கொள்ள ஒரு 'பொய்த் திருமணம்' மூலம் அவளை ஏமாற்றுகிறான். இது காலனித்துவ பிரிட்டிஷ் ஆட்சியின் வஞ்சகமான போக்கைப் பிரதிபலிக்கிறது (பாதுகாப்பு தருவதாகக் கூறி வளங்களைச் சுரண்டும் அவர்கள் மனநிலையை பிரதிபலிக்கிறது. ).
ஆனால், இந்த ஆண்கள் தோல்வியடைந்த இடத்தில் கிளாரிந்தா என்ற பெண் வெற்றி பெறுகிறாள்.

லிட்டில்டன் செய்த துரோகம் தெரிந்த பிறகும், அவனது நோய்வாய்ப்பட்ட காலங்களில் அவனுக்குப் பணிவிடை செய்ய அவள் முடிவெடுக்கிறாள். இது அவளை ஒரு 'கிறிஸ்துவைப் போன்ற' (Christ-like) பிம்பமாக மாற்றுகிறது. அவனது உடலுக்குச் செவிலியராகவும், அவனது ஆன்மாவைக் காக்கும் இரட்சகராகவும் அவள் மாறுகிறாள். "நீயே எனது உண்மையான இரட்சகி" என்று லிட்டில்டன் மரணப்படுக்கையில் கூறுவது இதையே உணர்த்துகிறது.

கணவர் ஹென்றி லிட்டில்டன்னுடன் வாழ்ந்த போது ஞானஸ்தானம் கிடைக்காத கிளாரிந்தா, கிறிஸ்தவ கணவர் இறந்த பின்பு , சபையிடம் ஞானஸ்தானம் பெற்று பாளையம்கோட்டையின் முதல் கிறிஸ்தவர் ஆகி கொண்டார்.

கிளாரிந்தா பார்வையில் எழுதினால் அவர் பிறந்து -வளர்ந்தது மதம், வாழ்ந்து- மறைந்த மதம் யாரும் நியாயம் செய்யவில்லை. பெண்கள் எக்காலமும் ஒடுக்கப்படுகின்றனர். இருப்பினும் பெண்கள் தங்கள் கருணையான உள்ளத்தால் அன்பான செயல்களால் மறுபடியும் தங்களை நிரூபித்து கட்டமைத்துக் கொள்கின்றனர்.

மதமாற்றம்: 'கிறிஸ்தவ பதிவிரதை' மற்றும் சமூகத் தொண்டர்
மதமாற்றம் என்பது உயர்குடி பிராமணப் பெண்களின் நற்பண்புகளைச் சிதைத்துவிடுமோ என்று அஞ்சிய சீர்திருத்தவாதிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, மாதவய்யா கிளாரிந்தாவின் மதமாற்றத்தை ஒரு 'மறு உருவாக்கமாக சித்தரிக்கிறார். அதாவது, பிராமணப் பண்பாட்டின் உன்னதமான 'பதிவிரதை' எனும் லட்சியப் பெண் பிம்பத்தை அப்படியே சிதைக்காமல், ஒரு கிறிஸ்தவச் சூழலுக்கு அவர் மாற்றுகிறார்.
நாவலில் கிளாரிந்தா ஒரு பதிவிரதையாகவே விவரிக்கப்படுகிறாள். "உயர்குடியில் பிறந்த ஓர் இந்து மனைவிக்கு அவளது கணவன் வெறும் தலைவன் மட்டுமல்ல, அவன் அவளது தெய்வமும் கூட; அவனுக்குச் செய்யும் கடமைகளே அவளுக்கு ஒரு வகை வழிபாடு" என்று உரை கூறுகிறது.
லிட்டில்டனுடனான அவளது வாழ்க்கை அவளது 'பிராமணப் பெண்' என்ற அடையாளத்தை அழித்துவிடவில்லை. மாறாக, அவளது இயல்பிலேயே ஊறியிருந்த அந்தப் பதிவிரதை குணம், லிட்டில்டனுடனான காதலில் முழுமையான வெளிப்பாட்டை அடைகிறது. லிட்டில்டன் அவளது அர்ப்பணிப்பை மதித்து, அவளுக்கு ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த ஆடைகளை அள்ளித் தந்து அன்பு செலுத்துகிறான்

லிட்டில்டனுடன் திருமணத்திற்குப் பிறகு அவளுடைய உலகமே லிட்டில்டனைச் சுற்றியே சுருங்கிவிட்டது. அவர் மீதான அன்பு, இல்லறப் பொறுப்புகள், கல்விப் பயிற்சிகள் என்று நாட்கள் விரைந்து ஓடின. வெளி உலகத்தோடு பழகுவதற்கோ சமூக உறவுகளை வளர்ப்பதற்கோ அவளுக்கு நேரமும் மனமும் இல்லாமல் போயின.

#பாளையங்கோட்டைக்கு வந்த பிறகு இந்தத் தனிமை இன்னும் ஆழமடைந்தது. திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாத நிலை , சமூகத்தின் பார்வை, தன் வாழ்க்கையைப் பற்றிய குற்ற உணர்வு ஆகியவை அவளை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்தன. யாரையும் சந்திக்க விரும்பவில்லை; யாருடைய இரக்கத்தையும் நாடவில்லை. உலகத்திலிருந்து தன்னைத் தானே விலக்கிக்கொண்டாள்.
ஆனால் அந்த இல்லற வாழ்க்கை நீண்டதாக அமையவில்லை. ஏழு ஆண்டுகள் மட்டுமே அவளோடு வாழ்ந்த லிட்டில்டன் திடீரென இறந்தார். அந்த மரணத்தோடு கிளாரிந்தாவின் வாழ்க்கையும் மீண்டும் ஒரு கேள்விக்குறியாகியது. ஒரு பெண் தனது சொந்த நாட்டிலும் சொந்த வீட்டிலும் இருந்தபோதும், கணவனை இழந்த கணமே அவள் அந்நியவளாக கருத்தப்படுகிறாள்.
அந்தச் சமயத்தில்தான் மேரி என்ற கிறிஸ்தவப் பெண் கிளாரிந்தாவின் வாழ்க்கைக்குள் அறிமுகமாகிறாள் . மேரியின் கணவன் பாளையங்கோட்டை சார்ஜெண்டாக இருந்தவர். தீவிர மதப்பற்றும் சுவிசேஷப் பணியிலும் ஈடுபாடும் கொண்ட குடும்பம் அது. கிளாரிந்தாவின் அழகு, செல்வம், உயர்ந்த பண்பாடு ஆகியவற்றைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த மேரி, பலமுறை நட்புகொள்ள முயன்றிருந்தாள். ஆனால் கிளாரிந்தாவின் தனிமை காரணமாக அது சாத்தியமாகவில்லை.
லிட்டில்டன் இறந்தபின், தனிமையில் நின்ற கிளாரிந்தாவை ஆறுதல் கூற வந்தவர் மேரி. தொடக்கத்தில் மேரியின் அணுகுமுறை ஒரு தீவிர கிறிஸ்தவ விசுவாசியின் பார்வையாக இருந்தது. கிளாரிந்தாவின் கடந்தகால வாழ்க்கையில் பாவத்தின் கறை இருப்பதை மெதுவாகச் சுட்டிக்காட்டி, உண்மையான மனந்திரும்புதலும் இரட்சகர் மீது முழு நம்பிக்கையும் மட்டுமே அவளுக்கு அமைதியைக் கொடுக்கும் என்று அறிவுறுத்தினாள். மேரியின் நடவடிக்கை பேச்சு கிளாரிந்தாவில் சலிப்பை உருவாக்கியது.
ஆனால் பழக்கம் வளர வளர மேரியின் எண்ணமும் மாறியது. வதந்திகளில் கேட்டது போல கிளாரிந்தா ஒழுக்கங்கெட்டவள் அல்ல; மாறாக உயர்ந்த பண்பும் நெகிழ்வான உள்ளமும் கொண்ட பெண் என்பதை உணர்ந்தாள். அதேபோல் கிளாரிந்தாவும் மேரியை வெறும் மதப்பிரசங்கியாக அல்ல, பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக எண்ணும் கருணைமிக்க மனிதராகக் காணத் தொடங்கினாள்.
வறுமை, நோய், பசி, சமூக ஒதுக்கல் ஆகியவற்றால் வாடிய மக்களைத் தேடி சென்று உதவுவதையும் தன் வாழ்க்கைப் பணியாகக் கொண்டிருந்தாள். இந்தப் பணிகளைத் தொடர்ந்து செய்ய பொருளாதார ஆதரவு தேவை என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். அதனால் தர்மப் பணிகளுக்கு துணைநிற்கக்கூடிய செல்வந்தர்களையும் தேடினாள்.
கிளாரிந்தாவுடன் நட்பு கொள்ள அவளுக்கு பல காரணங்கள் இருந்தன. செல்வம் இருந்தது; அதைவிட முக்கியமாக, ஆழமான இறைநம்பிக்கையும் கல்வியறிவும் இருந்தன. பழகியபின், கிளாரிந்தாவின் வேதாகம அறிவு தன்னைவிட விரிவானது என்பதை மேரி ஆச்சரியத்துடன் உணர்ந்தாள்.
அன்றாடம் தன் சேவைப் பணிகளில் கண்ட ஏழைகளின் கதைகள், நோயால் வாடியவர்களின் வேதனைகள், பட்டினியால் தவித்த குழந்தைகள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட குடும்பங்கள் பற்றிய அனுபவங்களை மேரி கிளாரிந்தாவிடம் பகிர்ந்தாள். அந்தக் கதைகள் கிளாரிந்தாவின் துயரமுற்ற இதயத்தை மெதுவாக மாற்றத் தொடங்கின. தன் தனிப்பட்ட துக்கத்தைத் தாண்டி, பிறரின் துயரத்தை நோக்கிப் பார்க்கும் புதிய வாழ்க்கை அவளுள் பிறந்தது.

முதலில் லிட்டில்டனின் இழப்பை மறப்பது மிகவும் கடினமாக இருந்தது. தத்தெடுத்த மகன் சின்னக் கோபாலன் அவளுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தான். அவனைச் சுற்றியே அவளுடைய பாசம் திரும்பியது.
லிட்டில்டன் விட்டுச் சென்ற பெரும் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பும் அவள்மீது இருந்தது. சாரதா மீண்டும் தஞ்சைக்குத் திரும்பலாம் என்று பலமுறை கூறினாள். ஆனால் கிளாரிந்தா மறுத்துவிட்டாள். லிட்டில்டன் தனது கடைசி நாட்களைக் கழித்த வீடும், அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் இருந்த பாளையங்கோட்டையை விட்டுப் பிரிய அவளால் முடியவில்லை.
இந்த முடிவுதான் பின்னாளில் திருநெல்வேலி வரலாற்றையே மாற்றியது. தனிப்பட்ட துயரத்தை சமூகத் தொண்டாக மாற்றிய கிளாரிந்தா, லிட்டில்டன் நினைவாகவும் இறைவனுக்கான நன்றிக்கடனாகவும் 1783ஆம் ஆண்டு தனது சொந்தச் செலவில் ஒரு சிற்றாலயத்தைக் கட்டினாள். அது திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் புராட்டஸ்டண்ட் ஆலயமாக வரலாற்றில் இடம்பிடித்தது.
பின்னர் உபதேசியர்களை நியமித்து, கிராமங்களில் வழிபாட்டுக் கூடங்களை நிறுவி, கல்வி, தர்மம், கிறிஸ்தவப் பணிகளை விரிவுபடுத்தினாள். லிட்டில்டன் விட்டுச் சென்ற செல்வத்தை தனக்காக அல்ல, துன்புற்ற மக்களின் வாழ்வை உயர்த்துவதற்காகச் செலவிட்டாள்.
இவ்வாறு, சமூகத்தின் கண்களில் "சந்தேகத்திற்குரிய பெண்" என்று தொடங்கிய கிளாரிந்தாவின் வாழ்க்கை, காலப்போக்கில் "திருநெல்வேலி புராட்டஸ்டண்ட் திருச்சபையின் அன்னை" என்று வரலாறு போற்றும் நிலைக்கு உயர்ந்தது. அவளுடைய தனிப்பட்ட காதல் வரலாறு, இறுதியில் ஒரு சமூக மறுமலர்ச்சியின் வரலாறாக மாறியது.


கிளாரிந்தா வரலாறு: #மிஷனரிகளின் அணுகுமுறையைப் பற்றிய சில கேள்விகள்
மாதவையாவின் கிளாரிந்தா நாவலில், ஒரு முக்கியமான சம்பவம் இடம்பெறுகிறது:
"அவர் ஞானஸ்நானம் பெற விரும்பியதற்கான காரணத்தை நான் கேட்டேன். அதற்கு, 'அவர் என்னைக் காப்பாற்றி கொள்வதற்காக' என்று பதிலளித்தார்."
இந்தச் சிறிய குறிப்பே பல கேள்விகளை எழுப்புகிறது.
முதலாவதாக, கிளாரிந்தாவுக்கு உடனடியாக ஞானஸ்நானம் வழங்க சுவார்ட்ஸ் மற்றும் மிஷனரிகள் தயக்கம் காட்டுகிறனர். அவருக்கு கிறிஸ்தவ போதனையை முழுமையாகக் கற்பிக்க போதிய காலம் இல்லை என்பதே அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், ஞானஸ்நானம் வழங்குவதில் ஒரு எச்சரிக்கை அல்லது தயக்கம் இருந்தது என்பதை அறிய முடிகிறது.
இரண்டாவதாக, அந்தப் பதிவில் கிளாரிந்தா "ராணுவ அதிகாரி லிட்டில்டனின் மனைவி" என்று அல்ல, "மராட்டிய பிராமண அதிகாரியின் மனைவி", "அரச வம்சத்தைச் சேர்ந்தவர்" என்ற அடையாளத்திலேயே குறிப்பிடப்படுகிறார். தன் பிறந்த ஊரை விட்டு வெளியேறி, லிட்டில்டனுடன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த பின்னரும், அவரது பழைய சமூக அடையாளமே முக்கியமாக பதிவு செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
மேலும், லிட்டில்டன் செய்த செயல் அக்காலச் சூழலில் ஒரு மிகப்பெரிய சமூகப் புரட்சியாகக் கருதப்பட வேண்டும்.. சதி மரபிலிருந்து ஒரு இளம் பிராமண விதவையை உயிருடன் காப்பாற்றி, அவளுக்குப் புதிய வாழ்க்கை அளித்தார். ஆனால் இந்தச் செயலை மிஷனரி பதிவுகளில் பெரிதாகப் பாராட்டியதற்கான சான்றுகள் இல்லை. மாறாக, திருமண உறவு முறையாக இல்லையென விமர்சனங்களே காணப்படுகின்றன.
லிட்டில்டனின் வாழ்க்கையும் சேவையும் தனித்த வரலாறாக பதிவு செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால், லிட்டில்டன் இறந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே கிளாரிந்தா ஞானஸ்நானம் பெற்றார் என்பதும் முக்கியமான உண்மை. அக்காலத்தில் பிராமண விதவைகளின் மறுமணத்திற்கு கடுமையான சமூகத் தடை இருந்தது. லிட்டில்டன் இறந்தபோது கிளாரிந்தாவின் வயது சுமார் 26 முதல் 30 வரை இருந்திருக்கலாம்.
கிளாரிந்தா தனது செல்வத்தைப் பயன்படுத்தி தேவாலயம் கட்டிக் கொடுத்ததையும், பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டதையும் மிஷனரிகள் பாராட்டினாலும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, சமூகப் போராட்டம் மற்றும் தியாகம் ஆகியவற்றுக்கு அதே அளவிலான அங்கீகாரம் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவரை ஏற்றுக்கொள்வதற்கு முன், அவரது வாழ்க்கையை மதிப்பீடு செய்து பார்த்த மனநிலை மிஷனரி பதிவுகளில் காணப்படுகிறது.
கிளாரிந்தா ஞானஸ்நானம் கோரியபோது, தனது உயிரைக் காப்பாற்றிய லிட்டில்டனின் நினைவையே முதன்மைக் காரணமாகக் கூறுகிறார். இது ஆழமான #இறையியல் நம்பிக்கையை விட, தனது வாழ்க்கைப் #பாதுகாப்பு மற்றும் #நன்றியுணர்வு ஆகியவை அப்போது முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் என்ற கேள்வியை எழுப்புகிறது. அத்துடன், மீண்டும் தஞ்சாவூருக்குத் திரும்பினால் தமக்குப் பாதுகாப்பு இருக்காது என்ற அச்சமும் இருந்திருக்கலாம்.
மேலும், கிளாரிந்தாவின் இயற்பெயர் "கோகிலா" என்று பின்னாளில் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெயருக்கான முதன்மை ஆவண ஆதாரம் என்ன என்பது இன்னும் தெளிவாக விளக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது.
இன்று பரவலாக அறியப்படும் கிளாரிந்தா வரலாற்றின் முக்கிய ஆதாரமாக அ. மாதவையாவின் 1915 ஆம் ஆண்டின் Clarinda நாவலே கருதப்படுகிறது. பின்னர் அது 1956 மற்றும் 1976 காலகட்டங்களில் மொழிபெயர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் அவர் கதை பரவியது. ஆனால், கிளாரிந்தா வாழ்ந்த காலத்திலேயே பல மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறுகள் விரிவாக எழுதப்பட்டிருந்தும், கிளாரிந்தாவின் வாழ்க்கை தனித்த வரலாறாக ஏன் பதிவு செய்யப்படவில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இது, அவர் உயிருடன் வாழ்ந்த காலத்தில் மிஷனரி அமைப்புகளிடம் முழுமையான அங்கீகாரம் பெறவில்லை என்ற கருத்திற்கும் வழிவகுக்கிறது.
அதேபோல், கிளாரிந்தாவின் சொத்துக்கள் பின்னர் தேவாலய நிர்வாகத்துடன் இணைக்கப் பட்டு உள்ளதை கவனிக்கலாம். ஆனால், அதற்கு மாற்றாக தேவாலயத் தலைமைகள் கிளாரிந்தாவின் தனிப்பட்ட நலன், பாதுகாப்பு அல்லது வாழ்க்கை முன்னேற்றத்திற்காக என்ன செய்தார்கள் என்பதற்கான தெளிவான ஆவணங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.
இதனைப் பார்க்கும்போது, கிளாரிந்தா பல ஆண்டுகள் மிஷனரி தலைவர்களிடம் கிறிஸ்தவராக வேண்டுதல் வைத்தது, பெண் ஊழியர்களுடன் தொடர்பு வைத்திருந்தது, முதன்மையாக பாதுகாப்பு மற்றும் சமூக ஆதரவை நாடியதற்காக இருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றுகிறது. மேலும், அவர் மதம் மாறுவதற்கு முன்பே சமூகச் சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்தவர் என்பதற்கான சான்றுகளும் அவரது வாழ்க்கையில் காணப்படுகின்றன. அவரது தொண்டுணர்வு, மதமாற்றத்திற்குப் பிறகு உருவானது அல்ல; அதற்கு முன்பே அவரது வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்தது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்



கிறிஸ்தவ மிஷனரி சான்றுகள்


பாளையங்கோட்டையில் புராட்டஸ்டாண்டு ஆலயம் இல்லையே என்ற குறை அவள் உள்ளத்தை உறுத்தியது. அந்தக் குறையைப் போக்க தனது கணவரின் பூதவுடலை வைத்த கல்லறைக்கு அருகே ஒரு சிற்றாலயத்தை #1783ஆம் ஆண்டு தனது செலவிலேயே கட்டி முடித்தாள். திருநெல்வேலி மாவட்டத்தில் கிளாரிந்தா கட்டிய ஆலயமே #முதல் முதலில் தோன்றிய புராட்டஸ்டாண்டு ஆலயமாகும். லிட்டில்டன் வைத்துச் சென்ற சொத்துக்களைப் பிறர் துன்பங்களைத் துடைப்பதற்குத் தங்குதடையின்றித் தாராளமாகச் செலவிட்டு வந்தாள்.
கிளாரிந்தாவின் சமயச் சொற்பொழிவுகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. தனது பணியில் உதவியாக இருக்கும்படி, தன் செலவிலேயே மரிய சவரி என்ற பெயருடைய உபதேசியாரை நியமித்து கிறிஸ்தவ சமயத்துக்காக அவர் தொண்டு செய்துகொண்டிருந்தார் ..
கிறிஸ்தவத்தின் செறிவான அறிவை எட்டுவதற்குள் கிளாரிந்தாவிற்கு ஞானஸ்நானம் செய்து வைத்தது எங்களுக்கு வருத்தமளித்தது’ என்று சுவார்ட்ஸ்’சொல்லி உள்ளதாக ஜர்னல்ஸ், 1771 குறிப்பிடப் பட்டுள்ளது.

தஞ்சாவூரில் இருந்தபொழுதே அவர் சுவார்ட்ஸிடம் ஞானஸ்நானம் செய்து வைக்கும்படி கேட்டிருந்தார். ஆனால் அவர் அந்தத் தகாத உறவில் ஈடுபட்டிருக்கும்வரை அது மறுக்கப்பட்டிருந்தது. அந்த அதிகாரி கீழ்வாத நோயால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அவருக்கு மிகவும் விசுவாசமாகப் பணிவிடைகள் செய்துவந்தார். திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்ததாகவும் கூறப்படுகிறது. தமது சொத்துக்கள் முழுவதையும் அவருடைய பெயரில் எழுதி வைத்ததை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கருத்து உருவாகியிருக்கலாம்.
அந்த அதிகாரிக்கு சுவார்ட்ஸ் நேரடியாக அளித்த எச்சரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படாமலே போயின. என்றாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் அவர் தமது ஆசைநாயகிக்கு விவிலியக் கதைகளும் கிறிஸ்தவக் கொள்கைகளையும் தொடர்ந்து போதித்து வந்தார்.
சில ஆண்டுகள் கழித்து பாளையங்கோட்டையில் தமக்குக் கிறிஸ்தவத்தைப் போதிக்குமாறு அவர் மீண்டும் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். பல்வேறு தரப்புகளிலிருந்தும் அவரைப் பற்றி நல்ல முறையில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதால், இம்முறை ஞானஸ்நானம் என்பது அவருக்கு மறுக்கவியலாத ஒன்றாக ஆனது. மிகுந்த உணர்ச்சி பூர்வமாக அவர் ஞானஸ்நானத்தை ஏற்றுக்கொண்டார்.

அவருடைய விருப்பப்படி கிளாரிந்தா என்று பெயர் சூட்டப்பட்டார். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் பொதுமக்கள் மத்தியில் #ராசா வீட்டு கிளாரிந்தா என்று அழைக்கப்பட்டார். தெய்வ வசனத்தைப் பரவச் செய்வதில் இது ஒரு பெரும் ஊன்று சக்தியாக விளங்கும் என்று சுவார்ட்ஸ் எதிர்பார்த்தார்.


‘1778 பிப்ரவரி இறுதியில் சுவார்ட்ஸ் திருநெல்வேலியிலுள்ள ஒரு ஐரோப்பியர்
திருமணத்திற்காக பாளையங்கோட்டை வந்திருந்த போது , ‘சுவார்ட்ஸ் சில குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்துவைக்க இருந்தபோது, ஒரு இளம் பிராமணப் பெண்மணி தமது வளர்ப்பு. மகனோடு முன்வந்து ஞானஸ்நானம் செய்து வைக்கும்படி கேட்டுக் கொண்டதாக தகவல் உள்ளது.


1780இல் பாளையங்கோட்டைக்கு வந்திருந்த திரு. பவுல் கிளாரிந்தாவைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்: ‘
அவள் கிறிஸ்தவ மதத்தை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டிருந்தார்.
அவளைச் சுற்றியுள்ளோரின் நலனைப்பற்றியும் மிகவும் அக்கறை கொண்டிருக்கிறாள். அவளைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்புக்காக நான் மகிழ்ச்சியுறுகிறேன்.’ ,ஊழியர் பவுல் கிளாரிந்தாவின் வேலையாளுக்கு யோவான் என்று பெயரிட்டு ஞானஸ்நானம் அளித்தார்.

தரங்கம்பாடியில் உள்ள ஒரு இந்திய உபதேசியார், ‘அவளுடைய ஆழ்ந்த ஞானத்தையும் முன்மாதிரி வாழ்க்கையையும் சான்று பகர்கிறார்.
பிஷப் கால்டுவெல் எழுதிய ‘தின்னெவேலி மிஷன்’ என்னும் நூலின் தொடக்ககால வரலாற்றின் பதிவுகளிலிருந்து சில தகவல்களில் கிளாரிந்தா பற்றிய தகவல்கள் இவ்வாறாக உள்ளது . ‘ஓர் #ஆங்கிலேய அதிகாரிடைய மனைவி நமது திருச்சபையில் உறுப்பினராக இருந்தார். அவர் ஒரு மராட்டியப் பிராமணரின் விதவை. அந்தப் பிராமணர் தஞ்சையில் அரசருக்காகப் பணியாற்றி வந்தார். தமது கணவரின் இறப்புக்குப் பிறகு லிட்டில்டன் என்ற ஆங்கிலேய அதிகாரியுடன் மணமுடிக்காமலே இணைந்து வாழ்ந்தார். அந்த அதிகாரி சில காலத்திற்குத் தஞ்சையில் பொறுப்பு வகித்ததாகத் தெரிகிறது.

‘பாளையங்கோட்டைக்குத் தெற்கே உள்ள தேரிவிளையிலும் 24 பேர் இருந்தனர். தேரிவிளை என்பது கிளாரிந்தாவிடம் அடகு வைக்கப்பட்ட பல கிராமங்ளுள் ஒன்று. அந்த 24 பேர்களுள் சாணார்கள் அல்லது பனையேறிகள் சாதியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களும் இருந்தன. அந்தச் சாதியில் முதன்முதலில் மதம் மாறியவர்கள்... மரிய மற்றும் சவரி.
1785 ஜனவரியில் சுவார்ட்ஸ் பெருமதிப்பிற்குரிய சத்தியநாதனைப் பாளையங்கோட்டைக்கு அனுப்பிவைத்தார். அவர் வல்லத்தில் மிகுந்த விசுவாசத்தோடு நீண்ட நாள் பணியாற்றியவர்.
அதன்படி, ஊர்வழக்கத்திற்கு மாறாக, பாளையங்கோட்டையில் பொதுப் பிரார்த்தனைக் கூட்டங்களில் பிச்சமுத்துவையும் சலவைக்கார சாதியைச் சேர்ந்த மற்றும் பலரையும் உடன் சேர்த்துக்கொள்ள அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

ஆங்கிலேய அதிகாரி, தேவாலயம் கட்டும் பணிக்கு உதவும் வகையில் கிளாரிந்தாவுக்கு சுண்ணாம் பையும் பல்வேறு பொருட்களையும் அளித்தார். மீதமுள்ள பணியைக் கிளாரிந்தா தனது சொந்தச் செலவில் மேற்கொண்டார்.
‘அந்தக் கட்டடம் தூய்மையானது; சிறியது; ஓடுவேய்ந்த கூரை கொண்டது. சுவார்ட்ஸால் போதனை செய்யப்பட்டு, ஞானஸ்நானம் செய்யப்பட்ட ஒரு பிராமணப் பெண்மணியால் கட்டப்பட்டது. இதில் ஒன்றிரண்டு ஆங்கிலேய கனவான்கள் அவருக்குக் கட்டுமானப் பொருட்கள் அளித்து உதவினர்’ (*எஸ்பிசிகேயின் 1788 ஆண்டுக்கான அறிக்கையிலிருந்து*)
பாளையங்கோட்டையில் அதிக வெற்றி அனுபவம் கிட்டும் என்று சுவார்ட்ஸ் கணக்கிட்டார்.
குறிப்புகள் பிஷப் வெஸ்டர்னின் 'தின்னெவேலி தேவாலய வரலாற்றி'லிருந்து திரட்டியவை)
1779 ஜூன் மாதம்16ஆம் நாள்இல் தரங்கம்பாடியிலிருந்து வந்த ஃபிலிப் என்ற ஒரு மேல்நாட்டு அமைச்சர் பாளையங்கோட்டையில் கிளாரிந்தாவைச் சந்தித்துள்ளார். புனித விருந்தில் அவள் மிகுந்த பக்தியுடன் கலந்து கொண்டதைப் பற்றி அவர் கூறியுள்ளார்.


சுவார்ட்ஸ் மீண்டும் 1785ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ர் - கிளாரிந்தா கட்டிய தேவாலயத்தைப் புனிதப்படுத்துவதற்காக பாளையங்கோட்டைக்கு வந்ததாக தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்:
கிளாரித்தா பள்ளியை பராமரித்து வந்துள்ளார். மேலும் ஏழை, எளிய மக்களுக்குப் பெரிதும் உதவியுள்ளார்.

கிளாரிந்தா ஏறத்தாழ 1806இல் மறைந்தார்.

கோலான்பும் ஹாரேஸும் எஸ்பிசிகேவிற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதுகிறார்கள்: ‘பிராமண சாதியைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவப் பெண்மணி சில ஆண்டுகளுக்குமுன் பாளையங்கோட்டைக்கு அருகே மறைந்தார். அவர் தமது தத்துப்பிள்ளைக்கும் அவருடைய மனைவிக்கும் பெருமளவு பணத்தை வைத்துள்ளார். ஆனால் அந்தப் பணம் மலபாரைச் சேர்ந்த ஒரு பணக்காரரிடம் இருந்தது. அவர்களால் அதை அவரிடமிருந்து பெற முடிந்திருக்வில்லை.’
ஜேம்ஸ் எச்யுக் 1818இல் இவ்வாறாக் குறிப்பிட்டு உள்ளார் -‘(கிளாரிந்தாவின்) இந்தத் தேவாலயம் தற்போது பராமரிப்பின்றி இருக்கிறது. என்றாலும் உள்ளூர் திருச்சபை இன்னமும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேவாலயத் திருவிழாக்கள் போதும் அதைப் பயன்படுத்துகிறார்கள்.’
1821இல் காலத்தில் அது சீரமைக்கப்பட்டுப் பின்னர் தொடர்ந்து ஆங்கிலத் திருச்சபையாலும் இந்தியத் திருச்சபையாலும் தேவாலயமாகப் பயன்படுத்தப்பட்டது.
1826 ல் #மதராஸ் அரசாங்கம் ரூ.1174 செலவில் தேவாலயத்தைச் சுற்றி புதிய, வலுவான சுவரொன்றை எழுப்பியது.
1848இல் எஸ்பிசிகேயின் மதறாஸ் குழு ரூ.277 செலவில் தேவாலயத்தை மீண்டும் செப்பனிட்டது. இதில் பாளையங்கோட்டையில் வாழும் ஐரோப்பிய மக்களும் உதவினர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏



#வரலாற்றுக் குறிப்புகள்
ஓர்மே எழுதிய ஹிஸ்டரி ஆஃப் இந்துஸ்தான் (*ஹிந்துஸ்தானத்தின் வரலாறு*);
ரனாடே எழுதிய ரைஸ் ஆஃப் த மராட்டா பவர் (*மராட்டிய அரசின் வளர்ச்சி*);
ஹெமிங்வே எழுதிய கெஜெட்டர் ஆஃப் த டாஞ்சூர் டிஸ்ட்ரிக்ட் (*தஞ்சாவூர் மாவட்ட அரசுக் குறிப்பேடு*);
பிஷப் கால்டுவெல் எழுதிய த தின்னெவேலி மிஷன் (*திருநெல்வேலி சரித்திரம்*); .
கானன் பென்னி எழுதிய த ஹிஸ்டரி ஆஃப் த சர்ச் இன் மெட்ராஸ் (*சென்னையிலுள்ள தேவாலயத்தின் வரலாறு*);
கர்னல் மலிசன் எழுதிய க்ளைவ் அண்ட் ட்யூப்ளை (*க்ளைவையும் ட்யூப்ளேயையும் – இந்தியாவை ஆட்சி செய்தவர்கள்*);
சர் சார்ள்ஸ் வில்சன் எழுதிய க்ளைவ் (*சாகசமிக்க ஆங்கிலேயர்கள்*);
ஹிக்கி எழுதிய த டாஞ்சூர் ப்ரின்சிபாலிடி (*தஞ்சாவூர் மாகாணம்*);
பையர் லைய்ன் எழுதிய த லேண்ட் ஆஃப் த தமுலியன்ஸ் (*தமிழர்களின் நாடு*);
நரசிம்மலு எழுதிய தமிழ் ஹிஸ்டரி ஆஃப் சவுத் இந்தியா & சி (*தென்னிந்தியாவின் தமிழ் வரலாறு*).
History of Hindustan by Orme.
Rise of the Maratha Power by Ranade.
Gazetteer of the Tanjore District by Hemingway.
The Tinnevelly Mission by Bishop Robert கால்டவெல்ல்
The History of the Church in Madras by Canon Penny.
Clive and Dupleix by Colonel George Bruce Malleson.
Clive by Sir Charles Wilson.
The Tanjore Principality by Hickey.
The Land of the Tamulians by Pierre Lannoy.
Tamil History of South India & Ceylon by M. N. Narasimhalu.
மேற்கூறிய நூல்களுள் அந்தக் காலகட்டத்தின் வரலாற்று நுணுக்கங்களை அறிந்துகொள்வதில் பெரிதும் உதவியவை இந்த நூலின் ஆசிரியர்களுக்கு தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து உள்ளார் நூல் ஆசிரியர்.


பாரம்பரிய இந்து தர்மமும் கிளரிண்டாவின் அறப்பணிகளும்
இருப்பினும், தனது இந்து வாழ்விலிருந்து கிறிஸ்தவ வாழ்விற்கு மாறும்போது, சமூகத்தில் நலிந்தவர்களுக்கு உதவ வேண்டும் மற்றும் அறப்பணிகள் மூலம் தனது சமூகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற ஆவலைக் கிளாரிந்தா தன்னுடன் எடுத்துச் செல்கிறாள்.
கிளாரிந்தாவின் சொத்துக்காகவே அவளைத் திருமணம் செய்துகொண்ட முதல் கணவர் திவான், அவளதுசொத்துக்களைத் தனது மருமகனுக்கு உயிலாக எழுதித் தருமாறு அவளை வற்புறுத்துகிறார். சட்டப்படி ஒரு பெண் தனது திருமணத்தின் போது கொண்டு வரும் சொத்து அவளது முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். கிளாரிந்தாவின் வசம் சில வீடுகளும், இரண்டு கிராமங்களின் வருவாயும் இருந்தன.
தனது கல்வி அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தும் விதமாக, திவானுக்கு மராத்திய மொழியில் ஒரு கடிதம் எழுதும் கிளாரிந்தா, ஒரு கிராமத்தின் வருவாயைக் கொண்டு அறக்கட்டளைகளை நிறுவ வேண்டும் என்ற தனது தாத்தாவின் விருப்பத்தை நிறைவேற்றப்போவதாக உறுதிபடக் கூறுகிறாள். இந்த அறச்செயலைத் தனது தாத்தாவின் "புனித நினைவுக்குச் செய்யும் கடமை" என்று அவள் குறிப்பிட்டாலும், அது அவளது குடும்ப வட்டத்தைத் தாண்டிப் பிறருக்கு உதவ வேண்டும் என்ற வளர்ந்து வரும் ஆசையையும் வெளிப்படுத்துகிறது.
திவானின் மறைவுக்குப் பிறகு, அவளது கணவர் குடும்பத்தினர் மீண்டும் அந்தச் சொத்துக்களைப் பறிக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றவுடன், கிளாரிந்தா உடனடியாகப் பின்வரும் பணிகளைச் செய்கிறார்:
அனைத்துச் சாதியினரும் தங்குவதற்காக ஒரு 'சத்திரம்'.
108 சமஸ்கிருத அறிஞர்களுக்கு உணவும் இருப்பிடமும் அளிக்கும் ஒரு 'பாடசாலை'.
தொடர்ச்சியாகப் பல கிணறுகள்.
தனது வாழ்வாதாரத்திற்காக மிகக் குறைந்த தொகையை மட்டும் வைத்துக்கொண்டு மீதி அனைத்தையும் தர்மத்திற்காகச் செலவிடுகிறாள். இந்த அறப்பணிகள் அனைத்தும் வசதியுள்ள இந்துக்களின் பாரம்பரியத் தொண்டு நடைமுறைகளுக்கு (Traditional Philanthropy) இணங்கவே இருந்தன.
கிளாரிந்தாவின் ஆரம்பகால அறப்பணிகள், தனது சமூகத்தின் ஆன்மீக, கல்வி மற்றும் பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பாரம்பரிய மனப்போக்கைப் பிரதிபலிக்கின்றன. பாரம்பரிய இந்து நடைமுறைகளில் அவளுக்கு ஏற்கனவே ஒரு வலுவான தார்மீக அடிப்படை இருந்ததை இது காட்டுகிறது.
"சமூகச் சீர்திருத்தம் என்பது மேற்கத்திய மற்றும் கிறிஸ்தவ கலாச்சாரங்களுக்கு மட்டுமே உரியது" என்று வாதிடும் மிஷனரி சொல்லாடல்களுக்கு, மாதவய்யாவின் இந்தச் சித்தரிப்பு ஒரு சவாலாக அமைகிறது. இந்து மரபுகளுக்குள்ளேயே கருணையும் அறப்பணிகளைச் செய்வதற்கான தூண்டுதலும் ஏற்கனவே உள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

அ மாதவையா (1872 - 1925)
அ. மாதவையர், திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் ,1872-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ந் தேதி பிறந்தவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர்.
தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், இதழாளர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டு வருவதில் நம்பிக்கை உடையவர்.
1914 ஆம் ஆண்டில் ‘இந்திய கும்மி’ என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் மாதவையா. இப்போட்டியில் சுப்பிரமணிய பாரதியாரும் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது .
மாதவையர் தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார்.
1924-ல் பஞ்சாமிருதம் என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் தமிழில் சில கட்டுரைகள், கருத்துக்கள், போன்றவற்றை 1924 முதல் 1925 வரை வெளியிட்டு வந்தார் .
நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் இவர் எழுதிய ‘சாவித்திரியின் கதை’ என்ற தொடர் 1903 ஆம் ஆண்டு ‘முத்துமீனாக்ஷி’ என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது.
(ஷேக்ஸ்பியர் எழுதிய 'ஒத்தெல்லோ எனும் வெனிசு மோரியன்' நாடகத்தின் தமிழாக்கம் உதயலன் என்னும் கொற்கைச் சிங்களவன் (1903) வெளியிட்டு இருந்தார்.
ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன.
மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் (1892) படிக்கும் காலத்தில், பிரிட்டிஷ் மிஷனரிகளுடனும் இந்திய கிறிஸ்தவ மதமாற்றம் பெற்றவர்களுடனும் நெருக்கமான அறிவுசார் உறவுகளை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் வாழ்நாள் முழுவதும் இந்துவாகவே இருந்தபோதிலும், அவரது முதல் ஆங்கில நாவலான Thillai Govindan (1903)ல் சில மிஷனரிகளின் உயர்ந்த ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் பாராட்டுகிறது; குறிப்பாக மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியின் முதல்வராக இருந்த வில்லியம் மில்லர் (1838–1923) அவர்களைப் புகழ்கிறது. அதே நேரத்தில், அதே நாவலில் பெயர் குறிப்பிடப்படாத சில மெட்ராஸ் மிஷனரிகள் ஆடம்பர வாழ்க்கை நடத்துவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியப் பெண்களின் சீர்திருத்த இயக்கங்களில் விதவை மறுமணம், குழந்தைத் திருமண ஒழிப்பு, பெண்கள் கல்வி போன்றவற்றில் மாதவையா ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
இவ்வகை சீர்திருத்தங்களை ஆதரித்த பிரிட்டிஷ் மிஷனரிகளுடன் அவர் பல நேரங்களில் கருத்து ஒற்றுமை கொண்டிருந்தார். ஆனால் அவரது ஆரம்பகால நாவல்கள், குறிப்பாக கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட மதமாற்றப் பிரசார நடவடிக்கைகளை கடுமையாக விமர்சிக்கின்றன.
அவரது தமிழ் நாவலான Padmavati Carittiram (1898, 1899) மற்றும் ஆங்கில நாவலான Satyananda (1909) ஆகியவற்றில், ஒரு இளம் மாணவனின் அனுபவக் குறைபாட்டைப் பயன்படுத்தி அல்லது மாணவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் இடையிலான முரண்பாட்டைச் சாதகமாக்கி மதமாற்றத்தை ஏற்படுத்த முயன்ற மிஷனரி நடவடிக்கைகளை மாதவையா வெளிப்படுத்துகிறார்.
இதற்கு மாறாக, அவரது இறுதி ஆங்கில நாவலான Clarinda: A Historical Novel (1915), அவரது படைப்புகளில் இந்திய கிறிஸ்தவ மதமாற்றத்தை மிக நேர்மறையாக சித்தரிக்கும் நாவலாக விளங்குகிறது.
தஞ்சாவூரில் வாழ்ந்த பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மராத்தா பிராமணப் பெண் மதமாற்றம் பெற்றவரின் வாழ்க்கையை மறுஆக்கமாக (reimagination) உருவாக்கும் இந்த வரலாற்று நாவலில், இளம் கிளாரிண்டாவுக்கான கிறிஸ்தவ மதமாற்றம் ஒரு விடுதலையான முடிவாகக் காட்டப்படுகிறது.
அவளது மதமாற்றம், விதவையாகிய அவளை, கணவரின் குடும்பத்தின் தந்தைமையாதிக்க (patriarchal) கட்டுப்பாட்டிலிருந்தும் கொடுமையிலிருந்தும் விடுவித்து, சமூகத்திற்கு சேவை செய்யும் ஒரு நன்கொடையாளர் மற்றும் ஆரம்பகால சமூக சீர்திருத்தவாதியாக உருவாக அனுமதிக்கிறது.
சில மதமாற்ற உத்திகள் ஒழுக்க வரம்புகளை மீறக்கூடும் என்பதில் மாதவையா விமர்சன மனப்பாங்கைக் கொண்டிருந்தபோதிலும், பெண்களின் சமூக நிலையை மேம்படுத்தும் மிஷனரி நோக்கங்கள் தனது சொந்த நம்பிக்கைகளுடன் பல இடங்களில் ஒத்துப்போகின்றன என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
காலனித்துவ மிஷன்களுக்கு எதிரானதும் ஆதரவானதும் கலந்த இந்த அணுகுமுறை, பல பண்பாடுகள், மத மரபுகள், மொழிகள் ஆகியவற்றுக்கிடையில் பயணிக்கக் கூடிய ஒரு காலனித்துவ இந்திய அறிவுஜீவியாக மாதவையாவின் திறனை வெளிப்படுத்துகிறது.
இளமைப் பருவத்தில் அவர் காலனித்துவ ஆங்கிலக் கல்வியையும், தமிழில் ஒரு பண்டிதரிடம் பாரம்பரிய கல்வியையும் பெற்றிருந்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். சொற்பொழிவின் பொழுதே கீழே விழுந்து மரணமடைந்தார்.
முக்கிய நூல்களில் ஒன்று கிளாரிந்தா.
இது ஒரு வரலாற்று நாவலாகும். யாரிந்த கிளாரிந்தா
அவள் சதி செய்யத் தயாராக இருந்த வேளையில், ஹென்றி லிட்டில்டன் என்ற ஆங்கில அதிகாரி அவளின் அவல நிலையை கண்டு, உயிருடன் எரிக்கப்படுவதிலிருந்து அவளை மீட்டார். லிட்டில்டன் அவளுக்கு கிறிஸ்தவ வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தினார்.
அவள் கிறிஸ்தவத்தை முழுமையாக தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப வாழ்க்கையையும் நடத்தத் தொடங்கியிருந்தாள். கிறிஸ்தவ போதனையின்படி , திருமுழுக்கு (பாப்திஸம்) அவசியமானதாகக் கருதப்படுவதால், 1774ஆம் ஆண்டில், அந்தப் பகுதிகளில் பணியாற்றி வந்தும் அவளுக்கு அறிமுகமானவருமான பிரித்தானிய CMS (Church Mission Society) மிஷனரியான மத. சி. எப். ஷ்வார்ட்ஸ் அவர்களிடம் தன்னை திருமுழுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டாள்.
ஆனால், அவள் சட்டபூர்வமற்ற உறவுடன் கூடிய பாவமான வாழ்க்கை நடத்துகிறாள் என்று கருதிய ஷ்வார்ட்ஸ், அந்த வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார். இதற்கிடையில், லிட்டில்டன் என்பவர் கௌட் (gout) நோயால் திடீரென இறந்தார்.
சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு (1778), தனது துணைவர் இறந்துவிட்டதால், கடந்தகால வாழ்க்கை இனி திருமுழுக்கிற்கு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி, கிளாரிண்டா மீண்டும் ஒருமுறை ஷ்வார்ட்ஸிடம் திருமுழுக்கு கோரிக்கை வைத்தாள்.
இந்த முறை, அவளின் பக்தி நிறைந்த வாழ்க்கையையும் தன்னலமற்ற சேவையையும் கருத்தில் கொண்டு, ஷ்வார்ட்ஸ் மறுப்பில்லாமல் அவளுக்கு திருமுழுக்கு அளித்தார் (1778). அப்போது அவளின் பெயரும் கிளாரிண்டா என மாற்றப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய முதல் நபர் அவளே ஆவாள்.
திருமுழுக்குக்குப் பிறகு விரைவிலேயே, கிளாரிண்டா தன்னை முழுமையாக மிஷனரி பணிக்காக அர்ப்பணித்தாள். அவள் பாளையங்கோட்டை நோக்கி இடம்பெயர்ந்து, குறிப்பாக பெண்கள் மத்தியில்—அதிலும் விதவைகள், அநாதைகள், மற்றும் பின்தங்கிய மக்களிடையே ஆன்மிக மற்றும் சேவைப் பணிகளை மேற்கொண்டாள்.
திருநெல்வேலியில் மிஷனறி பணிசெய்த ஆண்கள் பற்றி வரலாறு அல்லது சுயவரலாறு ஆக எழுத்து வடிவில் பதியப்பட்டு உள்ளது.
பெண் மிஷனறியான கிளாரிந்தாவின் வரலாறு ஒரு நாவலில் மட்டுமே உள்ளது என்பது முரண் தான். பெண்கள் வரலாறு எக்காலமும் சமூகம் விரும்புவது இல்லையா என்ற கேள்வியும் இல்லாது இல்லை.

See less