17 Jul 2018

சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்”


சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல்  வெளிவந்த சோம அழகின்  “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும்.  திருநெல்வேலி  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இலக்கியக்கூட்டத்தில் பாராட்டுப்பெற்ற நாங்கள் நாலுபேரில், ஒருவராவார் ’சோம அழகு.’ தற்போது மனோன்மணியம் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவியான இளம் தலைமுறையின் அடையாளமான சோம அழகு என்ற இளம் நங்கையின் புத்தகம் வாசிக்க ஆவல் கொண்டேன்.
தனது முதல் புத்தகத்தை தனக்கு மிகவும் பிரியமான தாத்தாவிற்கு சமர்ப்பித்துள்ளார் அழகு . பேரா. தொ. பரமசிவத்தின் வாழ்த்துரையுடன் புத்தகத்திற்குள் நுழைகின்றோம். எழுத்தாளர் பாமரன் தலைப்பை கண்டு, கோபம் கொண்டாலும் எழுத்தை வாசித்த பின்பு  பேரன்பு கொண்ட  அணிந்துரை வழங்கியுள்ளார் என்பது சோம அழகின் புத்தகத்திற்கு இன்னும் அழகு சேர்க்கின்றது.

சோம அழகிற்கு பின்புலமாக; அழகு வளர்ந்த இனிமையான கூட்டுக்குடும்ப சூழல், அவருடைய அன்பான தாத்தா, பல்கலைகழக கணித பேராசிரியரான தந்தை, தொ பரமசிவம் போன்ற  கருத்துற்ற எழுத்து ஆளுமைகள் என்பது அவருடைய ஆளுமைக்கு மட்டுமல்ல அதின் தொடர்ச்சியான  எழுத்தாளுமைக்கும் உருதுணையாக உள்ளது.

கட்டுரைக்கு ’மெய் அழகு’ என வாழ்த்தியுள்ளார் பதிப்பாசிரியர் காவ்யா சண்முக சுந்தரம். ஆம் அவருடைய ஒவ்வொரு கட்டுரைக்கு ஜீவநாடியாக உள்ளது அவர் எழுத்தில் இழையோடும்  மெய்மை தான். எந்த கற்பனையும் இல்லாது உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளார்.

21 கட்டுரையை அழகான ஒரு மலர்ச்சரம் போல் தொடுத்து வாசகர்களுக்கு கொடுத்துள்ளார். அவருடைய எழுத்தில் வயதிற்கு அதீதமான பக்குவவும், எதையும் கேள்வி கேட்கும் இளைமையின் துணிவும், தேடுதலின் ஞானவும், சமூக அநீதிமேலான  வெறுப்பும், சில வரட்டுத்தனம் பிடித்த மனிதர்கள் மேலுள்ள  கோபவும்  எழுத்தாக எரிமலை போன்று கொப்பளித்து வெளிவருகின்றது,

 முதல் கட்டுரையிலே தற்கால நுகர்வுக்கலாச்சாரத்தை சாடுவதுடன் நவீன  மனிதர்கள் அடிமைப்பட்டு கிடக்கும் ஆடம்பர கடைகளில் இருந்து துவங்குகின்றார். நமது தெருவிலிருக்கும் அண்ணாச்சி கடை என்பது வெறும் கடை மட்டுமல்ல அது ஒரு மனித நேயத்தின் உன்னத நிலையில் இருந்து  பெரிய கடைகளில் உணர்வற்ற மனநிலையில் பொருள் வாங்குவதும் பணம் கொடுப்பதுமாக ஒழிந்து போனதை பெரும் வருத்ததுடன் பதிந்துள்ளார். அடுத்த கட்டுரையிலோ தனது தெருமூலையில் சைக்கிள் கடை வைத்திருக்கும் ஏழை யாரும் நினைவில் வைத்து கொள்ளாத அங்கிளை நேசத்துடன் நினைவு கூறுகின்றார்.
இவருடைய நையாண்டி கலந்த கோப வார்த்தைக்கு இந்தியா அரசில் விளையாட்டுத்துறையையும் தப்பவில்லை,  தாத்தா என்ற கதைசொல்லியை நினைவு கூறுகின்றார். தன் உறவினர்களில் மறக்க இயலாத நல்ல ஆளுமையான பெரியமாவை  புகழ்ச்சி மாலையால் நினைவுறும் சோம அழகு, உணவகத்தின் தங்களுடைய அதிகாரப்பெருமையை காட்டிய உறவினர்களை கடிந்தும் உள்ளார்,

கல்யாண வீட்டில் காணும் அதீத ஆடம்பரம் மட்டுமல்ல மரணவீட்டில் கூட உறவினர்கள் மனித உணர்வற்று நடந்து கொள்வதை சோம அழகால் சகித்து கொள்ள இயலவில்லை.


சர்க்கஸ் என்ற விளையாட்டை அழகால் ரசிக்க மட்டுமல்ல,  கயிற்றில் நடந்து சாகசம் புரியும் மனிதர்கள், அங்கிருந்த மிருகங்களையும் கரிசனையுடன் நினைத்து பார்க்கும் நெகிழ்ச்சியான மனம் கொண்டவராக இருக்கின்றார் அழகு.


சாதாரணமாக இளம் பெண்கள் என்ற ஒற்றை பார்வையில் இருந்து வாழ்வியல் தத்துவங்களிலும் வாழ்க்கையை பற்றிய கனவிலும் ஒன்றை யானையாக தன் தனி வழியில் மிகவும் மிடுக்காக அறிவுச்செறுக்குடன் தலைநிமிர்ந்து பெருமையாக நடந்து செல்கின்றார். 

அழகின் சிறப்பே அவரின் பார்வையில் உதித்த  மாற்று கருத்துக்களும்,  தன் கருத்தில் நிலைகொள்ள வேண்டும் என்ற அவருடைய விருப்பவும் பிடிவாதவுமாகும். 

அழகு ஒரு வித்தியாசமான சிந்தனைவளம் கொண்ட பெண்ணே. கடவுளை கண் மூடித்தனமாக நம்புவதை கேள்வி எழுப்புகின்றார். பெண்களுக்கான சுதந்திரத்தை கெடுக்கும் உறவுகளை தைரியமாக சாடும் துர்கையாகவும் சில இடங்களில் காட்சி தருகின்றார். பக்கத்து வீட்டு குழந்தையை கொஞ்சும் அன்பில் பேரன்பின் உருவமாயும் மாறுகின்றார்.

காணும் சமூக புரட்சி கொண்ட பெண்ணாக அன்பான நேசம் கொண்ட சிந்தனை வளமிக்க பெண்ணாக, சோம அழகு மிளிர்வதில் இவரின் தாத்தாவின் இடம் இன்றிமையாதது. அதனாலே தாத்தாவின் மரணத்தையும் அழகால் ஜீரணிக்க இயலவில்லை. ஆழமான அன்பின் காயமாகவே அவர் மனதில் நிலைகொள்கின்றது. தாத்தாவின் நோய், மரணம், அதன் பின் நடந்த சங்குகள், ஒரு பெண்ணாகையால் தனக்கு சுடுகாடு சென்று தாத்தாவிற்கு அஞ்சலி செலுத்த தடை விதித்தது எல்லாம் கனத்த இதயத்துடன் பதிந்துள்ளார்.

சோம அழகின் எழுத்தில் ஒரு  மெய்மையை தேடிய பயணம், கோபம், மகிழ்ச்சி, அப்பாவின் பாசமிகு மகள், பக்கத்து வீட்டு பைத்தியக்கார பாதிரியாரையும்  கரிசனையாக நோக்கும் இளகிய மனம் கொண்ட தாயுள்ளம், தான் ஒருபோதும் காணாத ஆனால் கதைகளில் கேட்ட வாழ்க்கையின் கொடூர சதியால் மிகவும் அவலநிலையில் மரித்த தற்கொலை செய்து கொண்ட  ஆச்சிகளையும் நினைவால் நினைத்து வருந்துகின்றார்,.

தனியாக சென்று வந்த இத்தாலிபயணத்தை பற்றியும் எழுதியுள்ளார்.

சோம அழகு நிறைய எழுத வேண்டும். தற்கால பெண்களின் அடையாளமான சோம அழகால் பல நல்ல கருத்தாக்கங்களை இளைய தலைமுறைக்கு சேர்க்கும் வலு உள்ளது,

அழகின் எழுத்திலுள்ள வார்த்தை ஜாலம் அழகு, அழகின் சமூக பார்வை மேன்மை பொருந்தியது, அவ்வகையில் இப்புத்தகம் மிகவும் அழகான அனுபவம் தந்த புத்தகம்.