சங்கப்புழா கிருஷ்ணபிள்ளா மலையாள மொழிக் கவிதை உலகில் 'மகாகவி' என்று அறியப்படுகிறவர். கானகந்தர்வன், மக்கள் கவிஞர், ஜனரஞ்சக கவிஞர்,காதல் கவிஞர் என பல பெயர்களில் அன்பாக அழைத்தனர் கேரள மக்கள்.
கேரளாவின் ஷெல்லி என அறியப்பட்ட கவிஞர் சங்கம்புழாவிற்கு இடைசசேரியில் ஒரு நூலகம் , பூங்கா அமைத்து இன்றும் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றனர் .இன்று வாசிக்கையிலும் கவிஞரின் கவிதைகள் வீணையில் இதமாக மீட்கப்படும் குரலாக ஆறுதலாக, காதலாக, இயற்கையாக, பறைவையாக, பூக்களாக நம்முடன் பயணிக்கிறார்.
இன்றைய தினம் நோய்க்கு மருந்தற்று , 1 மீட்டர் இடவெளியில். பயத்தோடு தள்ளி நின்று நோக்கும் கொரோனா நோயின் இடத்தில் 1948 காலயளவில் காச நோய் இந்தியாவில் இருந்துள்ளது. அந்த கொடூர நோயின் பிடியில் சங்கம்புழா அன்று இருந்தார்.
பல பெண்களின் இதயத்தில் எந்த நிபந்தனையும் அற்று இடம் பிடித்திருந்த கவிக்கு தேய்ந்து மறைந்து கொண்டிருக்கும் உடலும் , வீங்கி போன தலையும் கவிதைகள் எழுதின நீண்ட கைவிரல்கள் மட்டுமே மிஞ்சியதாம்.
இனி மருத்துவம் இல்லை என்ற நிலையில் தனது பெரிய வீட்டின், தெக்கு மூலையில் ஒரு ஓலைக்குடில் அமைத்து தலைமாட்டில் சாராயக் குப்பியுடன், தன் குறை வயது ஜாதகத்தை நினைத்து பயந்து கொண்டு தனிமையாக கிடக்கிறார்.
மனைவிக்கு வருத்தம்; கவிஞர் தனித்து வீட்டிற்கு வெளியே இருப்பதில், நமது பிள்ளைகளுக்கு இந்த நோய் பிடித்து விடக்கூடாது, தனித்து இருந்து கொள்ளுகிறேன் என்கிறார். வெறும் 27 வயது தான் மனைவிக்கு .
அன்றைய மாத்ருபூமி பத்திரிக்கையில் மருத்துவ செலவிற்கு கூட பணமில்லாது தனது கடைசி நாட்களை கழிக்கிறார் கவிஞர் என்ற செய்தி வருகிறது. வெளிநாட்டு மலையாளிகள் அன்றைய நாள் 1949 ல்1000 ரூபாய் அனுப்பி விடுகின்றனர். தபால்க்காரர் கொண்டு கொடுக்கையில் எனக்கு யாருடைய தயவும் வேண்டாம் என்றுக்கூறி திருப்பி கொடுத்து விட்டார்.
சங்கம்புழாவின் நண்பரை தேடி செல்கிறார் மனைவி. நீங்கள் உங்கள் நண்பரிடம் பணத்தை ஏற்று கொள்ள செல்லுங்கள், வீட்டில் மருந்து வாங்கக்கூட பணம் இல்லை என்று அழுகிறார். நண்பர் வந்து சங்கப்புழையை தேற்றுகிறார், வாழ்க்கையை விரளப்படுத்தி விட்டேன் எனக்கூறி , அடுத்த நாள் பணத்தை பெற்று கொள்கிறார்.
உடனே திருச்சூர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்கின்றனர், அடுத்த இரண்டு நாட்களில் இறந்து போகிறார்.
எத்தனை பேருக்கோ ஆறுதல் கொடுத்த அவருடைய கவிதை வார்த்தைகள் மனைவிக்கு ஆறுதல் கொடுக்கவில்லை.
கையில் அன்று மூன்று குழந்தைகள். மூத்த மகனுக்கு 10 வயது இளைய மகளுக்கு ஒரு வயது.
எத்தனையோ பெண்கள் மனதில் ஆசைநாயகனாக, இன்னும் பல பெண்களின் காதலனாக இருந்த சங்கம்ப்புழா மனைவிக்கு எந்த நிறைவும் தரவில்லை.
தன்னுடைய முதல் பெண்ணுக்கு வரன் தேடிய போது "ராணுவ வீரனாக இருந்தாலும் பரவாயில்லை ஒருபோதும் ஒரு இலக்கியவாதியாக இருக்க கூடாது" என்ற நிபந்தனையில் இருந்துள்ளார்.
1985 ஆம் ஆண்டு மகா கவியின் 78 வது பிறந்த நாள் தினத்தை கொண்டாடும் அவசரத்தில் கேரள அரசு இருக்க தனது 45 ஆவது வயதில் 24 வயது மகன், 19 வயது மகள் மற்றும் 50 வயது கண்வருடன் சாப்பாட்டில் விஷம் கலந்து முதல் மகள் அஜிதா தற்கொலை செய்து கொண்டார்.
வறுமை அவரை கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கி , யாரும், உதவ இயலாத அளவிற்கு நொறுக்கி விட்டது. வீட்டில் இருந்த அண்டா, குண்டா பொருட்களையும் விற்று நாட்களை கடத்தியாச்சு.
கடக்காரர்கள் இனி பொருள் தர இயலாது என்று திருப்பி அனுப்புகின்றனர். வட்டிக்கு கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து திட்ட ஆரம்பிகிறார்கள்.
யாரிடமாவது உதவி கிடைக்காதா என்று சொந்த வீட்டிற்கு போகிறார். அங்கும் கொடுத்து உதவும் நிலையில் யாரும் இல்லை. பக்கத்து வீட்டு பாட்டி 20 ரூபாய் கொடுத்துள்ளார். அந்த 20 ரூபாய்க்கு கடைசியாக விஷம் வாங்கி வருகிறார் தன் வீட்டிற்கு.
அஜிதா, பக்கத்து வீட்டு பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கும், சாந்தமான எளிமையான, அன்பான பெண்மணி. அந்த வீட்டில் அவர் எழுதி பிரசுரிக்காத இரண்டு நாவல் கிடந்ததாம்.
யாருடனும் வருத்தம் இல்லை. என்னால் என் வறுமையை தாங்க இயலவில்லை. தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட என் மகன் நினைவில் இருந்து என்னால் மீளவும் இயலவில்லை. என் மகன் நினைவாக வளர்த்த நாய் செத்ததும் என்னை வேட்டையாடுகிறது. இனி நாங்கள் வாழ தகுதியற்றவள்.
கணவருக்கு ஒரு கடிதம்! உங்களுடைய குடியால், வறுமையும் அவமானவும் என்னை பின் தொடர்கிறது. நாங்கள் விஷம் கலந்த சோறுண்டு, எங்கள் மகனிடம் போகிறோம். உங்களுக்கு விருப்பம் எனில் எங்களுடன் வரலாம் என்று எழுதி வைத்து விட்டு போய் சேர்ந்து விட்டார்.
இரவு முழுக்குடியுடன் வந்து சேர்ந்த 50 வயது கணவர், எல்லோரும் செத்துக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அவரும் மீதம் இருந்து சோற்றை உண்டு மரித்து போனார்.
சங்கம்புழையின் மாஸ்டர் பீஸ் 'ரமணன்' என்ற கவிதை! அந்த கவிதையை இப்போது வாசித்தாலும் வார்த்தைகளால் வருடும் கவிதை.
தன்னுடைய உயிர் நண்பன், இடப்பள்ளி ராகவன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட போது விலாப காவியமாக எழுதினது . அதில் தானும் தன் நண்பனும் ஆடு மேய்க்க போவது போல் புனைவு செய்து அக்கவிதையை எழுதியிருப்பார். மரணத்தை அக்குவேர் ஆணிவேராக ஆழ்ந்து ஆராய்ந்து, அழுது, தத்துவார்த்தமாக எழுதின அழகியலான படைப்பு. அதில் நட்பு, காதல், மோகம், ஏமாற்றம் என எல்லாம் கலந்து; நண்பா ஒரு பெண்ணுக்காக உன் உயிரை விட்டு விட்டயே என்று வருந்தியிருப்பார். இந்த கவிதை 1930 ல் வெளிவந்தது. ஒரு லட்சம் பிரதிகள் விற்றழிக்கப்பட்டுள்ளது.இதை வாசித்த கல்லூரி மாணவிகள் , பெண்கள் நாங்கள் ஒரு போதும் காதலித்து ஏமாற்ற மாட்டோம் என கடிதம் எழுதியிருந்தார்களாம். அப்படியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின கவிதை.
இவருடைய கவிதையின் சிறப்பே சம்ஸ்கிருதம் மற்றும் மணிப்பிரவாள மலையாள வார்த்தைகள் கலராத; திராவிட மலையாளச் சொற்கள் தாங்கிய கவிதைகள். அவருடைய கவிதைகளை உருவிடாத ஒரு மலையாளி கூட இருக்க மாட்டார்கள்.
மரணத்தை வெறுத்தவர், அதிலும் தற்கொலை மரணத்தை அறவே வெறுத்தவர். ஆனால் அவரை மரணம் பின் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது. தனது 10 வது வயதில் தன் தகப்பனார், பின்பு தான் முதன்முதலில் ஆசைப்பட்ட முறைப்பெண் அவளுடைய 10 வது வயதில் மரித்தது. கவியுமே தனது மரணத்தை வலுக்கட்டாயமாக ஏற்று கொண்டவர். விதி யாரை விட்டது.
பிற்பாடு கவிஞரின் மனைவி ஸ்ரீதேவி வயதாகி 2002லும் 2004 ல் மகன் வாகன விபத்திலும் மரித்து விட மிஞ்சினது இளைய மகள் மட்டுமே. இளைய மகள் குறிப்பிடுகிறார்; தனது அம்மா எந்த பிள்ளையும் எழுத்துலகிற்கு வருவதை விரும்பவில்லை. இருந்தும் சங்கப்புழா மகன் இரு புத்தகம் வெளியிட்டுள்ளாராம்.
கவிஞரின் மனைவி .......இனியாவது
"திருமணம் என்பது ஒரு சூதாட்டம், அதில் மனிதர்கள் வெறும் பகடைக்காய்கள் என நம்புவாரா?
வாழ்க்கையே ஒரு நாடகம் என்கிற போது திருமணம் சூதாட்டமாக இருப்பது தானே இயல்பு ?
0 Comments:
Post a Comment