Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

8 Jun 2021

மலையாளத் திரைப்படம் Kala (கள)! ஒரு பார்வை - ஜோ

 

Kala ’கள’ என்பதை  தமிழில் களைதல் எனப் பொருட்படுத்தலாம்.. மலையாளத்திரைப்படம்  ’கள’(Kala) பார்வையாளர்களிடம்  களையக்கூறுகிறது.  படித்தவன், பன்பானவன், பணக்காரன் என்ற ஈகோக்களை களைய சொல்கிறது இத்திரைப்படம்.

தன்னை மட்டுமே சிந்திக்காது, தன்னை சுற்றியுள்ள மனிதர்களை, இயற்கையை, மிருகங்களை எல்லாவற்றையும் பரிவுடன் பார்க்க கூறுகிறது. ஹீரோ என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் சீரோ ஆகுவதும், ஒன்றுமே இல்லாதவன்,  தாழ்ந்த இனம் என்று நினைத்துக்கொண்டு கீழ்மைப்படுத்தப்பட்டவன் வெற்றிக்களிப்புடன் நாயகனாக மாறுவதுமே ’கள’ திரைப்படம்.

இயக்கம் ரோகித் வி எஸ் , திரைக்கதை ரோகித் மற்றும்  புஷ்கரன், இசை டான் வின்சென்று, ஒளிப்பதிவு அகில் ஜோர்ஜ், படத்தொகுப்பு சமன் சாக்கோ என ஒரு இளைஞர்களின் கூட்டுப்  படைப்பு.

பொதுவாக கதாநாயகன் ,  சமூகத்தை, நபர்களை திருத்தும் படியாக கதை அமைத்து இருப்பார்கள். இத்திரைப்படத்தில் அகங்காரம் மற்றும் நாசீசிஸ்டிக் ஆன முதன்மை கதாப்பாத்திரத்தை எதிர்மறை கதாப்பாத்திரம் திருத்துகிறது  . படத்தின் முடிவில் பிரதான கதாப்பாத்திரம் எதிர்மறையாவதும், எதிர்மறை கதாப்பாதிரம் கெத்தாக ஹீரோ மாதிரி நடந்து போவதுடன் கதை முடிகிறது.

இந்த திரைப்படத்தில் ஆங்கிலத்திரைப்படம் ஜோன் விக்கின் சாயல் பல இடங்களில் தெரிகிறது. தன்னுடைய நாயை கொன்றவனை பழிவாங்குவது போல இத்திரைப்படத்தில் நாயை இழந்தவன், தன் நாயை கொன்ற முதன்மை கதாப்பாத்திரம் ஷாஜியை பழிவாங்குவதே கதையாகும். முதல்நாள் மாலை முதல் அடுத்த நாள் மாலை வரும் வரும் நடைபெறும் சம்பவங்கலை கோர்வையாக தொகுத்துள்ளர்.

பொதுவாக நாயக பிம்பம் உள்ளவர்கள் மிகவும் நல்லவர்ளும் வல்லவர்களாகவும்இருப்பார்கள். இதில் நாயக இடத்தில் இருப்பவன் தன் சொந்த வீட்டில் திருடும் அளவிற்கு தரம் கெட்டவனாக இருப்பான்.

கதையின் பின்புலனாக அட்டப்பாடி( பாலக்காடு); தமிழ்நாடு கேரளா எல்லை.  அட்டபாடியிலுள்ள ஒரு நில உரிமையாளரின் மகன் ஷாஜி. கல்லூரி தோழியான காதல் மனைவி, ஒரு மகன் மற்றும் கறுப்பி என்ற செல்ல நாய் இவர்களுடன் பூர்வீக  சொத்தை கட்டிகாத்து வரும்  அப்பா லால்.  தன் தந்தையை வயதான நேரம் கவனிக்க வேண்டும் என்ற நோக்கில் அட்டப்பாடிக்கு குடி பெயர்ந்துள்ளனர்.   ஷாஜியின் மனைவிக்கு தோட்டத்திலுள்ள வாழ்க்கை அலுப்பாக இருக்கிறது.  மகனின் கல்விக்காக மறுபடியும் பெங்களூர் போக விரும்புகிறார்.

அந்த வீட்டின் அடித்தளமாக, குடும்பச் சொத்து. அதை அனுபவிக்கும் மகன், அதை ஆகமட்டும் கண்காணித்து வரும் அப்பா! அப்பாவை கண்டு பயப்படும் மகன். தந்தை நிலத்தின் நிறம் கறுப்பாக உள்ளார். மகன் ஆடம்பர, படித்த தலைமுறையை பிரதிநித்துவப் படுத்தும் வெள்ளை நிறத்தொலி. நீளமாக வளந்த முடியுடன் மிருகம் மாதிரியான பார்வையும், தான் பணக்காரன் என்ற அகபாவவும், கறுப்பு நாயும்.

அந்த நாய் திமிறும் போது இழுத்து பிடிப்பான்,  நாய் என்பதை ஷாஜியில் ஈகோவுடன் பொருத்துகின்றனர்.  அந்த ஈகோவின் திசையில் ஈகோவை கைவிடாது வாழும் ஷாஜி. தன்னை கருணையாக நடத்தவில்லை என்று குமுறும் ஷாஜி , தன் மகனிடம், “ நீ ஆண், அழக்கூடாது, நீ விரும்புவதை போராடி எடுத்துக்கொள் என்பான்.  அந்த குழந்தையோ அந்த பெரிய வீட்டில் அத்தனை பெரிய நிலங்களுக்குள், வெளியே வர இயலாது, தன் தந்தையின் கண்டிப்பு மட்டுமல்ல தாத்தாவின் கண் காணிப்புடன் வீட்டினுள்ளில் வளர்கிறது.

பணக்கார வீடுகளில் இருக்கும் பெண்களுக்கும் நிம்மதி இல்லை.  பிறந்த வீட்டுக்கு கூட போராடித்தான் போக வேண்டி வருகிறது. தன் மனைவியுடன் உரையாடும் போதும் சிகரட் புகையை அவள் முகத்தில் ஊதி தள்ளும் செயல்பாடு, அவளோ புகை பிடிக்க கணவனிடம் அனுமதி கேட்கும் மன நிலை, அவள் விரும்பாத போதும் காமத்தை கட்டுப்படுத்த இயலாது சயனிக்கும் ஷாஜி.   இப்படி கதை நகர்கிறது.

ஷாஜியின் தகப்பனார், உதவியாளர் மணியன் ஊடாக தோட்ட வேலைக்கு ஆட்களை வருவிக்கிறார்கள். பாண்டிகளை (தமிழர்களை)அழைத்து வந்துள்ளேன், ஊதியம் குறைத்து கொடுத்தால் போதும் என்று கூறிக்கொண்டு மூன்று பேரை அறிமுகப்படுத்துகிறான்.

அடுத்த ட்ராக்கில் வேலையாட்கள் நான்கு பேர். அதின் தலைமையில் உள்ள பழங்குடி மனிதன், இதுவெல்லாம் நமது நிலம், மலையாளிகள் வசப்படுத்தி வைத்து நாம் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளோம் என்கிறான்.

வீட்டிலுள்ளவர்கள் காலை உணவு எடுக்கின்றனர். அதே நேரம் வீட்டிற்கு வெளியே தொழிலாளர்களும் உணவு எடுக்கின்றனர். பணக்காரனுக்கும் ஏழைகளுக்குமான உணவு வேர்பாடுகள் காட்டப்படுகிறது.

 

வேலைக்கு வந்த தமிழர்களில் ஒருவன் மூறின் நாயை ஷாஜி கொலை செய்திருப்பான். அதற்கு பழிவாங்கவே தொழிலாளியை போன்று வந்திருக்கிறான் மூற். அவன் நிலத்தில் பன்றிகளை வேட்டையாடி தின்று பிழைத்து வருகிற ஒரு தமிழர்.  பன்றியை தனது ஈட்டியில் சொருகி சுமந்து செல்லும் அளவிற்கு வலுவானவன்.  ஆனால் ஷாஜி ஒரு காட்சியில் மூறை பன்றியை போன்று இழுத்து சென்று கொண்டு இருப்பான்..

கதையின் முடிவிற்குள் வந்து விட்டோம். ஷாஜி வெற்றி பெற்றானா தன்னை விட ஏழையான தன்னைவிட தாழ்ந்த இனமாக கருதப்படும் தமிழன் வெற்றி பெற்றானா?

மனைவி தகப்பன் முன்பே வைத்து ஓட ஓட அடித்து துவைத்து, என்னை விட்டால் போதும் என்று பணியும் மட்டும் சண்டை தொடர்கிறது. பணக்காரன், படித்தவன், மேல் இனம் இவர்களின் பொய்மை பேசும் , வஞ்சகமான ஈகோக்களை அடித்து நொறுக்கி, ஷாஜி வளர்க்கும் நாய்க்கும் விடுதலை தந்து தன்னுடன் அழைத்து செல்கிறான் மூற்.

ஷாஜி மனைவிக்கு தன் கணவர் மேல் இருந்த மதிப்பான அடையாளம் உடைக்கப்படுகிறது. தனது அப்பாவை இரத்தம் சொட்ட சொட்ட அடித்த மூறை ஷாஜி மகன் ஆராதனையுடன் பார்க்கிறான்.

இத்துடன் கதை முடிகிறது.

பார்வையாளனை இருக்கை நுனியில்  வைத்து படத்தை காட்டிய யுக்தி, ஒளிப்பதிவு, தொகுப்பு, அகலமான காட்சிதொகுப்பு  காட்சி  அழகியலுக்கு சான்று.

மலையாளி தமிழன் இன வேர்பாடு, ஏழைப் பணக்காரர்கள் அந்தரம் இவையை வன்மத்துடன் பார்த்துள்ளார்ளா? பார்வையாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

எதற்கு இத்தனை வன்முறை? நீண்ட சண்டைக்காட்சிகள்.  அரை மணிநேரம் இவர்களுக்குள் நிகழும் அடி தடி சண்டை  அலுப்பூட்டுகிறது. தமிழ் திரைப்படங்களில் கட்டுண்டு புல்லரிக்கும் மலையாளி பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதற்காகவா? தமிழர்களை இளக்காரமாக அழைக்கும் ’பாண்டி’ என்ற சொல்லாடலை சமீபகாலத்திரைப்படங்களில் பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.

இரத்தம் தெறிக்க தெறிக்க எடுத்து வைத்துள்ள இத்தகைய திரைப்படங்கள் குழந்தைகள் பார்வையில் படாது இருந்தால் நல்லது

https://youtu.be/9b9MovPPewk

ஒன்ஸ் அகெய்ன்(Once Again)-திரைப்பட விமர்சனம்

 மனைவியை இழந்த ஒரு நடுத்தர வர்க்க மனிதர் சஜ்ஜன்  பெர்னாண்டஸ் (இர்பான் கான்) உடனான இலா (நிம்ரத் கவுர்) வின் காதலை சொல்லிய கதை ”தி லஞ்சு போக்ஸ்”. https://www.ceylonmirror.net/40318.html

அதன் தொடர்ச்சி போன்று இரண்டு நடுத்தர வயது மனிதர்களின் பிரிவு, விரக்தி, ஏங்குதல், வாழ்க்கையின் மூச்சுத் திணறலில் இருந்து ஆறுதலான கசப்பைக் கண்டுகொண்ட இரு மனிதர்களின் கதையை, இந்தியா பிறப்பிடமாக கொண்ட ஜேர்மன் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கன்வால் சேதி எழுதி 2018ல் வெளிவந்த திரைப்படம் ”ஒன்ஸ் அகெய்ன்”.

 

தாரா, கணவரை இழந்த ஒரு பெண், தனது மகனின் உதவியுடன் ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார்.   தனது குழந்தைகளின் நலனைக்கருதி கவுரமாக உழைத்து கட்டுகோப்பாக வாழ்ந்து வருகிறவர்.  விவாகரத்து செய்யப்பட்ட ஒரு வயதான நடிகர் அமர், 15 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கனவுகளின் நகரம் மும்பையில்  தனியாக வசிக்கும் ஒரு செல்வந்தர். மற்றும் பிரபலமான திரைப்பட நட்சத்திரம்.தாரா அமரைப் பார்த்ததில்லை; ஆனால் தாராவின் உணவகத்தில் இருந்து தினம் அமருக்கு உணவு சென்று கொண்டு இருக்கிறது. எதிர்பாராத விதமாக ஆரம்பித்த அவர்கள் தொலைபேசி உரையாடல்கள், ஒருவருக்கொருவர் மணிநேரங்களுக்கு பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர்கிறது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, அவர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்கிறார்கள். அவர்களின் காதல் வெளி உலகிற்கு தெரிய வருகிறது.  இது தாராவின் மகனான தேவிற்கு பெரிய அவமானமாக உள்ளது. தாயின் தவறான நடத்தையாக எடுத்துக் கொள்கிறார். தாயும் மகனுக்குமான உறவு முற்றிலும் முறிந்து விட்டது. தான் எதிர்பார்த்த விடயம் முடிந்ததும், ஒரு கட்டத்தில் தாராவுடனான உறவு அமருக்கு தன் புகழுக்கான இழுக்கு என நினைக்க ஆரம்பிக்கிறார். தூய காதலுக்காக  எதையும் இழக்க தயாராக இருந்த தாரா உடைந்து போகிறார். ஒரு பக்கம் தான் நேசித்து பாசம் காட்டி வளர்த்த மகன் வெறுக்கிறார். அடுத்தோ மோகம் கொண்டு வீழ்த்தி விட்டு இனி தாராவில் இருந்து தப்பித்து போக முயலும் காதலன் அமர்.

 

தாராவாக ஷெபாலி ஷா மற்றும் அமராக நீரஜ் கபி ஆகியோர் கதாபாத்திரங்களாக உண்மையில் வாழ்ந்திருக்கிறார்கள். இரண்டு அற்புதமான நடிகர்களின் கைகளில் கிடைத்த  ஒரு நுட்பமான கதை. ஒவ்வொரு சட்டகத்திலும் அவர்களின் இயல்பான நடிப்பு அவர்களின்  திறமையை  நிரூபிக்கிறது.  தாராவின்  பெரிய அழகான கண்கள் அன்பைப் போலவே கோபத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகள் அத்தனை சிறப்பு.

படத்தில் எல்லா நேரத்திலும் இசை இல்லை, பெரும்பாலும் மவுனத்தை நம்பியுள்ளதும் சிறப்பாக உள்ளது. திரை வசனங்களும் மிகக்குறைவு,  அர்த்தச்செறிவான சிறு உரையாடல்களுடன் கதை இதமாக நகர்கிறது.  இது யதார்த்த சினிமாவின் கூறுகள் அடங்கிய  ஒரு திரைப்படம்.  சிறந்த கேமரா வேலை: மும்பை இரவுகள் அழகாக பிடிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பரந்த காட்சிகள் பான் ஷாட்களூடாகவும்,  இரவில் தெருக்களில் சலசலப்பு, ஷெபாலியின் உணவக சமையலின் காட்சிகள் படத்தின் சிறந்த தருணங்கள். மிகவும் அமைதியான மனநிலையில் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான தொலைபேசி உரையாடல்கள் சிறப்பாக செய்யப்பட்டன. வித்தியாசமான நடனம் மாண்டேஜ்களை உள்ளடங்கிய திரைப்படம் இது. எடிட்டிங்கில் மற்றும் நடன அசைவுகளில் இன்னும் கூர்மையை கடைபிடித்து இருக்கலாம். இந்த படத்தில் காட்டப்படும் ஆழ்ந்த காதலின் காட்சிகள்,  சில தருணங்களில் பார்வையாளர்களை பேச்சில்லாமல் செய்து விடுகிறது.

தனிமையின் கருப்பொருளைக் கொண்ட படமாக இருந்தாலும் படத்தின் முடிவில் அமர்  தாராவை தேடி வந்தாலும் கெஞ்சி கேட்டுகொண்டாலும், நட்பை பேணிக்கொண்டு அவரவர் விருப்பங்களுடன் தனித்து பயணிப்பதே சிறப்பு என முடிவெடுத்தது படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.  அமருடனான ஒரு சாதாரண உரையாடலில், கடலை பயப்படுவதாகக் குறிப்பிடும் தாரா, முடிவில் கடல் பயணம் மேற்கொள்வது போலவும் காட்டப்பட்டுள்ளது.  அமர்  எப்போதும் தான் வெல்ல வேண்டிய உயரங்களை பார்ப்பவர். சுய நல விரும்பியும் கூட!  ஒரே நேரத்தில் நல்லவராகும் கொடியவராக தோன்றும் கதாப்பாத்திரம்.

தாரா,  ஆழமான அன்பிற்கும் நேசத்திற்கும் மதிப்புக் கொடுத்து எங்கும் தங்கள் மரியாதையை இழக்காத வண்ணம், இனி ஒன்று சேர வேண்டாம் என முடிவெடுப்பது பெண்மையில் ஆளுமையை மிளிரச்செய்கிறது.  பெண்கள் பணத்திற்காகவோ, உணர்விற்காகவோ ஒரு போதும்  மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடாது என்று சொல்லிய படமிது.   வயதான காதலை பற்றிய அழகான சித்தரிப்பு கொண்ட இத்திரைப்படத்தை முழுமையாக ரசிக்கலாம்.  காதலில் வலிமை, பலவீனம், அன்பு மற்றும் மன்னிப்பும் உள்ளது என்று சொல்லிய திரைப்படம் இது.

https://www.firstpost.com/entertainment/once-again-movie-review-shefali-shah-neeraj-kabis-sweet-romance-would-have-been-richer-with-more-restraint-5084961.html

20 Apr 2020

வரத்தன்-இடுக்கி மாவட்டம்

நேற்று பார்த்த திரைப்படம் வரத்தன்.
கேரளாவில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை நாட்டுக்கு போவது தான் வாழ்க்கையின் லட்சியமாக இருந்தது. இப்போது அந்த நிலையில் ஒரு மாற்றம் ; ஒரு தம்பதிகள் கேரளாவிற்கு திரும்பி வருகின்றனர். கொஞ்ச நாட்கள் அமைதியாக வாழ வேண்டும் சொந்த நாட்டில். பெண் பணக்கார வீடு; பையனுக்கு பெற்றோர் இல்லை நல்ல வேலை என்ற நிலையில் கல்யாணம் நடந்துள்ளது போல்.
வெளிநாட்டை விட்டு திரும்பவும் பிடிக்கவில்லை, ஆனால் அக்கா அம்மா , ஊர் என வாழ வேண்டும் என்ற அதி ஆசை.

பெண்ணின் தாத்தா , அப்பா அம்மா வாழ்ந்த வீட்டுக்கு வந்து சேருக்கிறார்கள். வெளிநாட்டில் தனிமையில் வேலை என பரபரப்பாக வாழ்ந்திருந்தாலும் ஒரு பாதுகாப்பு இருந்ததும், இங்கு எப்போதும் , யாரோ, மற்றவர்களின் கண் காணிப்பில் வாழ்வது போன்ற நிலை. அது எரிச்சலை கொடுக்குகிறது பின்பு அச்சமாக மாறுகிறது கடைசியில் சண்டையிட்டு ஜெயிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பல வருடம் வேலை விடயமாக அன்னிய நாட்டில் வாழ்ந்திருப்பார்கள் பின்பு சொந்த ஊரில் குடிபெயருகையில் இதே சூழலை எதிர் கொள்வார்கள். இந்த நிலையை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் கதாப்பாத்திர வடிவமைப்பு எரிச்சலப்படுத்துகிறது.

எப்போதும் கணவரை ஏதோ தனக்கு பாதுகாக்கவே பிறந்து உருவெடுத்தது மாதிரி நடத்துவது, ஒரு கணவரின் சுயத்தை கேலி செய்வது, கணவருக்கான வெளியை மதிக்காது இருப்பது. நீ ஆம்பளைன்னா சண்டை போட்டு, வான்னு எப்போதும் உசுபேத்தி விடுவது.
ஏதோ அணிவது மார்டேன் உடை, சாப்பிடுவது நவநாகரீக உணவு என்றாலும் செயல் நடவடிக்கை எல்லாம் சிறுபிள்ளைத்தனம். கடைசி சீனில் கணவர் அடிபட்டு சாகப்போக போவும் போது துப்பாக்கியை எடுத்து வருவார். இந்த மாதிரி கதை என்ன சமூகத்திற்கு சொல்ல வருகிறது என்பதை விட இதே போன்ற கதை சமூகத்திற்கு எந்த வித தாக்கத்தை தரப்போகிறது என சிந்திக்கிறேன்.
இந்த கதையின் தளம் இடுக்கி மாவட்டம், பீர்மேடு,(தேக்கடி) பருந்தன்பாறைக்கடுத்து ஒரு தோட்டம் வீடு.
25 வருடம் முன்பு கல்விக்கு என அந்த மலையை விட்டு கோட்டயம் வந்து அடைந்தோம். முதல் வகுப்பில் பேராசிரியர் கேட்பார்; ஊர் ஏது. இடுக்கி பீர்மேடு என்றதுமே அவர்கள் முகத்தின் மாற்றத்தை கவனிப்போம். ஏதோ காட்டுக்குள் இருந்து வந்த மனிதர்களை பிடித்து தின்னும் காட்டுவாசிகளை பார்த்தது போல பார்ப்பார்கள். அப்போது நாங்க கல்வி கற்க கோட்டயம் , அதை விட்டா திருவனந்தபுரம். ஒரு கல்லூரி கிடையாது , பல் பிடுங்க ஆஸ்பத்நிரி கூட கிடையாது. ஆனால் எப்போதும் கொடிபிடிக்கும் அரசியல் எங்களுடனே இருந்தது.

அங்கைய சில இளைஞர்களை பெண்கள் உள்ளாடையை வரை திருடும் மனப்பிளர்வு நோயாளிகளாக காட்டியுள்ளனர். Moral Policing செய்பவர்களாகவும் சொல்லப்படுகிறது. மலைப்பிரதேச மக்கள் உழைப்பாளிகள் அவர்களுக்கு இதற்கு நேரம் இல்லை. கொல்லம் , கொச்சி தான் பல போதும் செய்தியில் வந்துள்ளது. சொல்லப்போனால் 18 நூற்றாண்டில் காடு மலைக்குள் குடியேறி, காட்டு புலி யானைகளோடு போராடி அவர்களுக்கான இன்ப துன்பங்களில், மிகவும் எளிமையாக சொல்லப்போனால் அரசியல் அமைப்புகளால் மதவாதிகளால் நிராதரவாக மாற்றப்பட்ட மக்களை திரைத்துறையும் வேட்டையாடியுள்ளது.
பொதுவாகவே நாட்டு ஆட்கள் பெண் கொடுக்கக்கூட தயங்கும் இடங்கள் மலை தேயிலை சார்ந்த வாழ்விடங்கள். இனியும் அந்த பார்வை மாறப்போவது இல்லை.

இனி கொஞ்சநாட்களுக்கு தமிழ் , மலையாளம் பக்கம் இருந்து விடைவாங்கி ஆங்கிலம், ரஷியா மொழி படங்களில் சரணடைய போகிறேன்.
கலைப்படைப்பு என்பதை விட தமிழ் பார்முலாவில் பணம் ஈட்ட வேண்டும் என்றே படம் எடுக்க சில பல இயக்குனர்கள் மலையாளக்கரையிலும் பெருத்து விட்டனர்.
நடிகர் பகத் இது போன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்ற வேண்டுகோள் மட்டுமே.
இயக்குனர் அமல் நீரட்.

இசை , ஒளிப்பதிவு எதும் ஒரு வகைக்கும் ஆகாது. அதனால் அவர்கள் பெயரையும் அறியவில்லை.
மலைப்பிரதேச வாழ்க்கைக்கு ஒரு அழகு உண்டு. அப்படி ஒரு காட்சியும் இல்லை. பொறுப்பற்ற வெறும் மசாலப்படம்.

22 May 2019

சூப்பர் டீலக்ஸ்- Super Deluxe


சமீபத்தில் கண்ட திரைப்படம்.  சராசரி தமிழ் திரைப்படங்களில் இருந்து வித்தியாசமான கதைத்தளம், கருத்து, உருவம் என தனித்து நிற்கும்  படம்.
ஹைப்பர் இணைப்பு(Hyper link) என்ற வகையை சேர்ந்து. ஒன்று ஒன்றோடு தொடர்பில்லா நாலுகதைகள், ஒரு  புள்ளிகளில் சந்தித்து கொள்ளுகின்றன.

முதல் கதை:
ஒரு புதுமண தம்பதி. கணவர் வெளியே போயிருக்கும் வேளையில் தன் கல்லூரி காதலனை வீட்டிற்கு அழைக்கும் வேம்பு என்ற கதாப்பாத்திரம். அவன் வந்த இடத்தில் செத்து போய் விடுகிறான். இனி அவன் உடலை மறைக்க வேண்டும். கணவருக்கும்  தெரிந்து விடுகிறது.  அந்த உடலை என்ன செய்தார்கள். இவர்களை துரத்தும் போலிஸ் அதிகாரி என்ன ஆனான். பிரிய முடிவெடுத்த தம்பதிகள் பிரிகின்றனரா? போலிஸ் அதிகாரியிடம் இருந்து வேம்பு(சமந்தா) கதாப்பாத்திரம் தப்பித்தாரா  இல்லையா?

இரண்டாம் கதை:
ஐந்து பதினமபருவ பள்ளி மாணவர்கள். பள்ளிக்கு  போகாது வீட்டில் ஒளிந்திருந்து பாலியல் படம் பார்த்து கொண்டு இருப்பதுடன் கதை ஆரம்பமாகிறது. படத்தில் வரும் பெண், அதில் ஒரு பையனின் தாய்! அத்துடன் கதை நகருகிறது. தாயை கொலை செய்ய ஓடி வருகையில் அவன் கொண்டு வந்த கத்தியால் காயத்திற்கு உள்ளாகி மரணத்திற்கு போராட, தாய் மகன் உயிரை காப்பாற்ற முயல்கிறார். தகப்பன் திடீர் கிறிஸ்தவனாக மாறின ஆள். அந்த நபரின் உலகம் தனி  உலகமாக நகர்கிறது. அங்கு மூன்று பெயருக்கு மட்டுமே இடம்!  அந்த நபர்,  அந்த நபரை மாற்றிய சுனாமி, புதிதாக கண்டு பிடித்த கடவுள், என நகருகிறது.

மூன்றாவது கதை:
பழைய ஆசாரம் கொண்ட ஒரு வீடு.  வீடு நிறைய மனிதர்கள்.  அந்த வீட்டில் பொறுப்பாக இருக்க வேண்டிய மகன் திருமணம் முடிந்து, குழந்தை இருந்த நிலையில்  வீட்டை விட்டு போய்விடுகிறவன்; ஏழரை வருடம் கடந்து திரும்பி வருகிறான்.  அவனாக அல்ல பாலினம் மாறிய அவளாக. கணவனை காத்திருந்த மனைவி நிலை என்ன? அப்பா என்ற பிம்பத்தை எதிர் பார்த்த மகன் நிலை என்ன? மூன்றாம் பாலினமாக மாறிய அப்பா -மகன் உறவு எவ்வாறு நகர்கிறது. அந்த வீட்டிலுள்ள மற்ற நபர்கள் இந்த சூழலை எப்படி பார்க்கின்றனர். அந்த நபரின் மனைவியும் மகனும் ஏற்றுகொள்கின்றனரா? இப்படியாக கதை நகர….

நாலாவது கதை:
ஐந்து பள்ளி சிறுவன்கள். தொலைக்காட்சி பெட்டி உடைந்து போய் விடுகிறது. அந்த பெட்டியை தன் தகப்பன் வேலைக்கு போய் வரும்முன் வீட்டில் கொண்டு வைக்க வேண்டும். அந்த அவசரத்தில் அவர்களை சந்திக்கும் நபர்கள் யார்? செட்டியார் வீட்டில் திருட போனவர்கள் என்னவானார்கள். ஒரு பெண் ஏலியனை சந்திக்கின்றனர். மாணவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டி கிடைத்ததா ?    பெண் என்பதை பற்றிய அவர்கள் பார்வை மாறினதா இல்லையா?

நாலு கதையையும் இணைக்கும் ஒரே புள்ளியாக மனிதனின் அடிப்படை தேவையான பாலியல் இச்சை உள்ளது.  Buttefly theory, Darwin Sex theory அவதானிக்க கூறிகின்றனர் சினிமா வல்லுனர்கள்.


  • வேம்பு/ சமந்தாவை துன்படுத்தும் போலிஸ் அதிகாரி,  மூன்றாவது பாலினமாக மாறின விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தையும் சித்திரவதை செய்யும். இவாஞ்சலிக்கன் யேசு பக்தரான அப்பா கதாப்பாத்திரவும் விஜய் சேதுபதி கதாப்பாத்திரவும் சுனாமியில் தப்பித்த நபர்கள்.
  • முதல் கதையில் சமந்தா/வேம்பு , விஜய்சேதுபதி, பதின்மவயது பையனுகள்,வயதான போலிஸ் அதிகாரி போன்ற கதாப்பாத்திரங்கள் பல அளவிலுள்ள பல உருவத்திலுள்ள பாலியல் பிரச்சினையை எதிர்கொள்வார்கள், உள்பட்டவர்கள்.

 பெண்களின் தெரிவு முக்கியப்படுத்தியுள்ளார்கள்.

  • · கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டுமா, வேண்டாமா? என கனத்த முடிவுகளை எடுக்கும் விஜய் சேதுபத் மனைவி கதாப்பாத்திரம்.
  • ·   காதலனை அழைத்த சமந்தா கதாப்பாத்திரம்,  கணவனுடன் இணையுவாரா? இல்லையா? போலிஸ் அதிகாரியின் விருப்பத்திற்கு உடன்படுவாரா? இல்லையா?
  • ·         அம்மா கதாப்பாத்திரம், யேசு பைத்தியத்திலுள்ள கணவன் கதாப்பாத்திரத்தை கேள்வி எழுப்பும். மகனின் அச்சத்திற்கு தயங்காது பதிலளிக்கும்.  இப்படியாக பெண்கள் தெரிவு செய்யும், தங்கள் செயலுக்கு பொறுப்பேற்கும்  இடத்திற்கு நகர்கின்றனர்.

உருகி உருகி வாடா…. உன்னை பெட்டரா பீஃல் பண்ண வைக்கேன்னு சொல்லிய  பெண் கதாப்பாத்திரம், அவன் இறந்ததும்….. அந்த கணவன் கதாப்பாத்திரம் கூட அவனை சக மனிதனாக நினைத்து பேசிக்கொண்டு இருக்கையில் அவனை மிகவும் பயத்துடன் கேவலமாக அது இது என அழைக்கும் காட்சிகள், தேவை முடிந்ததும் பெண்கள் இப்படி தான் என்ற மனநிலையை பற்றி சொல்ல வருகின்றனரா? .

காதலன் காதலி வீட்டில் வந்து சாவுவது அவனை பிரிட்ஜில் வைத்திருப்பது , மெத்தையில் கட்டி கீழை போட்டு எடுத்து செல்வது, இவர்களை போலிஸ் அதிகாரி துரத்துவது இவை லாஜிக்கை இடிக்கிறது.

இந்த சமூகத்திலுள்ள ஆண்களின் மனநிலை. தன் மனைவி என்பவர், தன் வீடு, தன் அறை, தன்  கட்டில், போன்ற ஓர் உடமை என நினைத்திருப்பது. வரம்பு மீறி போய் விட்டாள் என அறிந்ததும் புலம்பும் ஒவ்வொரு வார்த்தைகள் எல்லா வார்த்தைகளையும் சகித்து கொள்வார், ஆனால் கொலை குற்றத்தில் இருந்து தப்பிக்க தன்னிடம் பணிய வேண்டும் என போலிஸ் அதிகாரி கூறும் போது பெண் தயங்குவாள். செக்ஸ் தேர்வு என்பது விருப்பம் சார்ந்த, அன்பு கரிசனை சார்ந்த  தேர்வு, அதில் அதிகாரம் வஞ்சகம், கண்டிப்பு புகிரும் போது உயிர் போனாலும் பெண் விரும்ப மாட்டாள் என அடிவரை இட்டு சொல்லும் விதம் அருமை.

ஒரு மனைவிக்கு பிரச்சினை என்றதும் அது தன்னை மட்டுமல்ல தன் குடும்ப கவுரவத்தையும் பாதிக்கும் என்ற மனநிலை ஒருபுறம். மனைவிக்கு ஒரு பிரச்சினை என்றதும் அவளை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற கணவனின் தவிப்பு. கணவன் மனைவியின் உத்தமான உறவின் பக்கத்தை விளக்கியுள்ளனர்.

கணவன் மனைவியாக  சேர்ந்து இருந்த போது, இருந்த இறுக்கம் ’நாம் பிரிகிறோம்’ என்றதும் அது நட்பாக,புரிதலாக கரிசனையாக மாறி விடும். அதுவரை பயம் கொண்டு பேசின மனைவி பின்பு நட்பில் பேச ஆரம்பித்து விடுவார். கடைசியில் கணவன் கதாப்பாத்திரம் கொஞ்சம் வண்மமாக கிண்டல் அடிக்கும். ”உன்னை போட்டவன் செத்து விட்டான், போட நினைத்தவனும் செத்து விட்டான், நான் உயிர் போனாலும் நெருங்கவே மாட்டேன்”  என்கிற போது கூட… காதலின் பார்வையில் சிரித்து கொண்டு கடந்து விடுவார் மனைவி. கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் மனைவியின் சில சிறுமையையும் உள்கொண்டு, எதிர்கொள்ள துணை புரிந்து  நகர்வதே உண்மையான கணவனாக இருக்க இயலும்  என்ற கோணத்தில் சில காட்சிகள் அமைந்துள்ளது பாராட்டுதல்க்குறியது. கற்பு என்ற மனநிலை கடந்து உண்மையான புரிதலுடன் இணைவர்.

மேட்டர் படம் இருக்கா  மேடம்? ’சர்’ என ஆண்களை அழைப்பதற்கு இணையான ’மேடம்’ என்ற வார்த்தை மரியாதையான சொல்லாடல். பயண்படுத்திய விதம் திகக்கை வைக்கிறது. ’மேடம்’ என்றதும் பையா, பயப்படலாம் கூச்சப்படக்கூடாது        என்ற விளக்கத்துடன் மாணவர்களுக்கு சிடி விற்கும் அம்மா வயதான பெண்; அக்கா என்றதும் மாணவர்களை திட்டுவார்.  சில நாடுகளில் மேடம் என்ற வார்த்தைக்கும் பாலியல் தொழிலாளியை அழைக்கும் வார்த்தை என்றும் கேட்டுள்ளேன்.  அக்கா…. மேடம் லாஜிக் விளங்கவில்லை!

அவன் கவலையில் இருந்தான்,  எப்படி ஆறுதல் படுத்துவது. அவனுக்கு  மிட்டாயா கொடுக்க இயலும்?,  நான் ஐட்டம் இல்லை…. போன்ற ஒரு திரை வசனங்கள்  உண்டு . இது போன்ற வசனங்கள் தான் படம் ‘அடல்ட்’ படம் ’மோசமான படம்’, குடும்பத்துடன் பார்க்க இயலாது என கொக்கரிக்க வைத்தது. ஆனால் கணவன் மனைவி இணைந்து இருந்து பார்க்க வேண்டிய படம் இது. கண்டிப்பா ஆண்கள் ஈகோவை உடைக்கும். அதனாலோ மனைவிகள் இது போன்ற படங்களை பார்க்கக்கூடாது என கணவன் விரும்புவார்.

ஒவ்வொருவரும் அவரவர் கதாப்பாத்திரம் ஏற்று மிகவும் சிறப்பாக நடித்தி இருந்தனர். விஜய்சேதுபதியின் நடிப்பை எடுத்து சொல்லாது இருக்க இயலாது. பகத் தனது இயல்பான நடிப்பில் அசத்தியுள்ளார். குட்டி பையன் நடிப்பு மிகவும் சிறப்பு. ஒரு அப்பாவின் இழப்பை அந்த குழந்தை எப்படி எடுக்கிறது ஆனால் அந்த வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் என்ன பார்வை. அந்த நபர் பெண்ணாக திரும்பி வந்ததை மற்றவர்கள் எப்படி எடுக்கின்றனர். தகப்பன் இல்லா குழந்தைகள் நிலையை ஒரே காட்சியில் சொல்லியிருப்பார்கள். வீடு நிறைய நபர்கள்; ஆனாலும் அந்த குட்டி பையன் சாப்பிடுவதும் அவன் மனைவி கூட யாரோடும் ஒட்ட இயலாது தனிமையில் தான் உழலுகிறார்கள். தாய் மாமியார் என யாரெல்லாமோ இருந்தாலும் அம்மாவிற்கு மகனும், மகனுக்கு அம்மாவும் மட்டுமே இருப்பார்கள். சேதுபதி கதாப்பாத்திரத்தை எல்லாரும் கேள்வி எழுப்பும் போதும், தாக்கும் போதும் மகனும் மனைவியும் அந்த நபரை அதே போன்று ஏற்க கொள்ளும் மனநிலைக்கு வருகின்றனர்.  மாற்று பாலினத்தார் முதலில் மதிக்கப்பட வேண்டியது ’தனது குடும்பத்தில் தான்’ என குறிப்பிடுகின்றனர்.

மனைவி மற்றொருவருடன் தனது  படுக்கையை பகிர்ந்தார் என்பது கணவனுக்கு  எவ்வளவு துயரோ அதே போன்று தான் ஒரு மகனுக்கு அம்மா பாலியல் படத்தில் நடித்தாள் என்பதும்.  அம்மாவின் விளக்கம் ஏற்று கொண்டதாக தெரியவில்லை.  நண்பனிடம் பின்பும் கேட்கிறான் எல்லாரும் பார்த்திருப்பார்களோ? பெண் என்பவள் தனது கணவனின் கேள்விக்கு மட்டுமல்ல மகனின் கேள்விகளுக்கும் பதில் கொடுக்க வேண்டிய நிர்பந்தத் நிலையில் தான் உள்ளனர். ”போடி தேவிடியா மோளே” என மகனிடவும் திட்டு வாங்கும் நிலையில் தான் தாய்மை உள்ளது. இருந்தாலும் மகன் உயிரை காப்பாற்றவும் தன் நிலையை புரிய வைக்கவும் பிரயத்னம் எடுக்கும்.

”நீ சுனாமியில ஜீசசு சிலையை பிடித்து தப்பித்ததால் கிறிஸ்தவனாக மாறின கரடியை பிடித்து தப்பித்தா எதா மாறியிருப்ப”? இந்த கேள்வி தற்கால ஹிந்துத்துவா அரசின் மதமாற்றத்தை முன் நிறுத்திய கேள்வியாகத்தான் படுகிறது. இருப்பினும் இவாஞ்சலிக்கன் மதவாதிகளின் குருட்டு பக்தியையும் கோட்பாடுகளையும் நம்பிக்கையையும் சரியான பார்வையில் கேள்வி எழுப்பி உள்ளதையும் மறுக்க இயலாது.

நீலன் கெ சேகர், மிஷ்கின் நளன் குமரசாமி,மூன்று பேரும்சேர்ந்து அவரவர் பகுதிக்கு  திரைவசனம் எழுதியுள்ளனர்.  இது ஒரு புது யுக்தியாக இருப்பதால் சிறப்பாகவும் திரை வசனம் பல அடுக்கு உருவகம் அர்த்தங்கள் கொண்டு விளங்குகிறது,  தெளிவும் உள்ளது. 

தம்பதிகள் பேசின உரைகள்  மிகவும் இயல்பானது. அதை மிகவும் ஆழமான புரிதலுடன் மனித உளவியலை அறிந்து நீலன் கே சேகர் எழுதியுள்ளார். ’நாம் சேர்ந்தே இருந்தோம்’ ஏன் ஒட்டவில்லை,…… மிஷ்கின் பகுதியான மூன்றாம் பாலினம்  சார்ந்த வசனங்கள் எடுத்து சொல்லக்கூடியது. அவரே சொல்லியுள்ளார் அவர் நேரிட்டு கண்டு உணர்ந்த அவருடைய நண்பர் வாழ்க்கையை போன்று இருந்ததால் வசனங்கள் அமைப்பது எளிதாக இருந்தது என்று. இவாஞ்சலிக்கன் கிறிஸ்தவ திரைவசனங்கள் நெடியதும் திரும்ப திரும்ப வருவதாக இருந்தது. முதலில் ’நான் கிறிஸ்தவன் இல்லை’ என்பதும் கடைசியில் மனைவியின், கிறிஸ்தவ மதமாற்றம் சார்ந்து கேள்வி எழுப்பும் போது பதிலில்லாது தலையாட்டுவதும் முரண்களை எழுப்புகிறது.
ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் காட்சி தொகுப்பிற்கும் மெனக்கெட்டுருப்பது  படத்தின் அழகை கூட்டுகிறது.

பார்ப்பவர்களை விட்டு விட்டு நடிப்பவர்களை குற்றம் சொல்கின்றனர் , போன்ற சில டயலோக்குகள் நெருடலாக இருந்தாலும் அர்த்த செறிவுள்ளதாக இருந்தது.  இது போன்று நேரடியாக  மகனிடம் கூற இயலும் சமூக சூழலிலா உள்ளோம்.

திரைப்படம் வாழ்க்கையில் காணும் முரண்கள், மனிதனின் இயல்புகளை , நாடகத்தன்மையான வாழ்வியலை சொல்கிறது. இந்த படத்தில் நான் காணும் குறைபாடு மனித உறவிலுள்ள சிக்கல்கள், மறக்கவேண்டிய இயல்பாக நடக்கக்கூடிய குற்றங்களை கூறும் படம் பல விடையங்களுக்கு தீர்வு அல்லது மாற்று வழி கொடுத்துள்ளதா?

பாலியல் படங்களில் நடிப்பது என்பது மற்று தொழில்களுக்கு இணையான தொழிலா?  மகன் தாயை கொலை செய்ய துரத்தும் சீன் அந்த அளவிற்கு தீவிரமாக வைக்க வேண்டிய அவசியம் என்ன? நவீன தலைமுறை மனநிலை அதே 19 நூற்றாண்டு மனநிலையில் தான் உள்ளதா?  சி. டி தேடி அலையும் பாலியல் வரட்சியில் தான் உள்ளனரா? போலிஸ் அதிகாரியிடம் கதறி அழும் நிலையில் தான் வேம்பு கதாப்பாத்திரம், மூன்றாம் பாலின பெண் கதாப்பாத்திரம் உள்ளதா? பெண்களின் வுலுவை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் தான் வளர்க்கும்? பாலியல் படம் எடுப்பவர்களை குறை சொல்லாது நடிப்பவர்களை குறை சொல்கின்றனர், படத்தில் நடிக்கும் அம்மாவை தவறாக பார்க்கும் மகனுக்கு தான் பார்ப்பது என்ன் தவறாக தெரியவில்லை. எதுவும் தவறில்லை என்பது திரைப்படங்களின் நோக்கமாக இருக்கலாமா? ஒரு தெளிவான முடிவு இல்லை. அதுவே இந்த படத்தின் பலவும் பலவீனவுமாக காண்கிறேன். முடிவு காண்பவர்களின் மனநிலையை பொறுத்து அமையும்.


இயக்கம் தியாகராஜா குமரராஜா.  திரை இசை யுவன் சங்கர் ராஜா. 









8 May 2019

வளர்ப்பு தாய்க்கு ஓர் அன்பின் மடல் - திரைப்படம் ரோமா Roma 2018


கதைத்தளம் 1970-ல் மெக்ஸிகோவில் நடக்கிறது
ஒரு நடுத்தர வசதியான குடும்பம். பெரிய வீடு, ஹால்புத்தக அலமாரைகள்.  மேல் மாடியில் பல அறைகள்; நாலு குழந்தைகள் ஒரு வயதான பாட்டி, நாய்.


மிஸ்ட்டக்கோ இனத்தை சேர்ந்த கிளியோ (Cleo)  அங்கு தான் வீட்டு பணியாளராக வேலை செய்து வருக்கிறார்.  காலை, நாய் கழிவை  சுத்தம் செய்வதில் இருந்து குழந்தைகளை பாங்காக எழுப்புவது, ஒவ்வொருவருக்கும் தேவையான உணவுகளை எடுத்து கொடுப்பது, வீட்டு சமையல், சந்தைக்கு போவது  என வீட்டு விளக்குகளை அணைத்து விட்டு தன் அறைக்கு செல்வது வரை  சிரித்த முகத்துடன்,  மகிழ்ச்சியுடன் பணியாற்றி வருகிறார்.

வாரத்திற்கு ஒரு முறை கிளியோ(Cleo)வும் அவருடைய தோழியும் வெளியே சென்று திரைப்படம் காண்பது  கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது என காலத்தை கழித்து வருகின்றனர்.  அப்படியான ஒரு பொழுதில் தான் போராட்ட இயக்கத்தில் இருப்பவனுடன்  பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த  நெருக்கத்தில் கர்ப்பவும் ஆகி விடுகிறார்.  அந்த நபரிடம் தான்  கருவுற்று இருப்பதை கூறுகிறார்.  அவனோ  மனசாட்சியே இல்லாது  மறைந்து விடுகிறான், தேடி செல்பவளை பின்பு விரட்டியும்  விடுகிறான்.

மனம் ஒடிந்த நிலையில் கிளியோவின் முகத்தில் சிரிப்பிற்கு பதில் கவலையும், சுறுசுறுப்பான நடைக்கு பதில் பதட்டவும், குற்ற உணர்ச்சியும் ஒட்டி கொள்கிறது. மாதவும் மூன்றாகி விடுகிறது.  எப்படி தன் யஜமானியிடம் சொல்வது என தயங்கி கொண்டு இருக்கிறார்.


அந்த வீட்டு குடும்ப தலைவன் வேறு பெண்ணுடன் போனதால்;   குடும்ப தலைவியையும்(சோபியா) நாலு குழந்தைகள், வயதான தாய் (Veronica Garcia), வேலை என மிகவும் மன அழுத்ததில் உள்ளார்.

இரு பெண்கள், வெவ்வேறு நிலையிலுள்ள பெண்கள்; ஒருவர் யஜமானத்தி, இன்னொருவர் அந்த வீட்டு பணியாளர்!; தாங்கள் நம்பினவர்களால் ஏமாற்றப்பட்டு  மனமொடிந்த நிலையில்  உள்ளனர்.

காதலியுடன் ஓடிப்போனவன் போய்விட்டான். தாயின் தலையில் பாரிய சுமை விடிகிறது. தான் பெற்ற நாலு குழந்தைகளைளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும், அவர்களை விட்டு, அவர்கள் அப்பா போனதை பற்றி புரியவைக்க வேண்டும்.  அதற்கான முயற்சியில் தாய் இறங்குகிறார்.  குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட அவர்களை வெளியிடங்களுக்கு அழைத்து செல்கிறார். இப்படியாக  தன் வாழ்க்கையை குழந்தைகளுடன்  நகர்த்துகிறார்.

அதே வேளையில், பணிப்பெண் கிளியோவும்;  காதலித்தவன் பிள்ளையை கொடுத்துவிட்டு தன் பாதை நாட்டின்  போராட்டம் என போய் விட்டான். கிளியோவிற்கு குழந்தையை பெற்று எடுக்க யஜமானத்தியின் உதவியும் தேவையாக இருக்கிறது.  

வேறு வழியே இல்லை. ....தன் யஜமானியிடம் கருவுற்று இருப்பதை சொல்ல வேண்டும். யஜமானி, பணிப்பெண் தன் நிலையை கூறிய போது அது வேறு ஒரு பெண் பிரச்சினையாக பார்க்கவில்லை. தன் பிரச்சினையாகவே உணர்ந்து  சக மனிதையாக மதித்து ஆறுதலாக  தன் ஆதரவை பணிப்பெண்ணுக்கு தருகிறார்.

அங்கு விசாரணயில்லை, குற்றப்படுத்துதல் இல்லை, பிரச்சினைக்கு உள்ளான பணியாள் பெண்ணை ஒதுக்கி விடவும் விரும்பவில்லை. அங்கு மனிதத்தின் உச்சம் என்கிற கரிசனை, அன்பு மட்டுமே உருவாகிறது.  தானே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார், குழந்தையை பெற்றெடுக்கும் நல்ல சூழலை உருவாக்குகிறார்.  மனிதன் இன்னொரு மனிதனுக்கு உதவிட  சமூக நிலையோ,  சூழலோ தடை நிற்கவில்லை. ஒருவர் மற்றொருவரை புரிந்து கொள்ளும் மனிதமே அங்கு மேல் ஓங்கி நிற்கிறது.

அந்த வீட்டிலிருக்கும் பத்து வயது பாலன், அம்மா ”ஏன் கிளியோ இப்போது பேசுவதில்லை, அவர் ஏன் அழுகிறார் என கேட்பான். தாயும் அவளுக்கு  வயிற்று வலி என்றதும் அந்த பாலகன் தன் கையால் வயிற்றை தடவி கொடுப்பான். அந்த பத்து வயது பாலன் தான்; தனது 56 ஆவது வயதில் தன் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை நினைவு கூர்ந்து ரோமா என்ற படத்தை இயக்கியுள்ள   அல்போஃன்ஸோ குவரோன்(Alfonso Cuarón)

என் வாழ்க்கையில் ஆளுமை செய்த இரு பெண்களை பற்றிய படம். ஒன்று என் தாய்(Fernando Grediaga), இன்னொருவர் வளர்ப்பு தாய். வளர்ப்பு தாய்க்கு நான் எழுதின அன்பின் மடலாகவே இப்படத்தை காண்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.  

10 வருடமாக மெருகேற்றி கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட ஸ்பானிஷ் மொழியிலான இப்படம் ஆங்கில மொழி அல்லாத வெளிநாட்டு பட வரிசையில்; 2018 ற்கான  மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது.  

இப்படத்தில் பணியாளர் பெண்ணாக நடித்திருப்பவர் புதுமுக நடிகை Yalitza Aparicio ஒரு பள்ளியின் ஆசிரியராக இருக்கையில் இப்படத்தில் நடிக்க தேர்வானவர். இவர் முதல் படத்திலே  ஆஸ்கார் பெற்றிருக்கிறார் என்பது அவரின் நடிப்பின் சிறப்பாகும்.  தாயாரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் Marina de Tavira சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். ஒளிபதிவு, இயக்கம் என மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

ஒவ்வொரு காட்சியிலும் காட்டியிருக்கும்  ஒழுங்கு, அதன் உள் கட்டமைப்பு, உண்மை தன்மை ஆச்சரியப்படுகிறது. வீட்டில் விரைந்து கிடக்கும்  பொருட்கள், வீட்டு அலமாரைகள், அலங்காரம், தன் தாயார் பயண்படுத்திய கார் மாடல், அதன்  நிறம், இயக்குனர்  வாழ்ந்து வந்த   தெருவு துவங்கி; வீட்டில் மற்றொரு ப்குதியில் பணிப்பெண்கள் தங்கியிருக்கும் அறைகள் அவர்கள் துணிகாயப்போடும் இடம் என தன் 10 வயதில் நிறைந்திருந்த  நினைவுகளை மறுகட்டமைப்பு செய்து எடுக்கப்பட்ட படம். தாங்கள் வாழ்ந்த கிராமத்தில்  செட்டுகள் போட்டு படம் ஷுட் செய்துள்ளார்

இந்த படத்தின் ஒளிபதிவு இயக்கம் திரைக்கதை எல்லாம் பார்த்து பார்த்து செதுக்கிய ஒரு சிலை போல் வடிவமைத்துள்ளார். இப்படத்தின் காட்சிகள் அவ்வளவு எளிதாக மனதை விட்டு மறைவதில்லை. இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பற்றி சொல்லப்போனால்எளிமையில் உருவான பிரமாண்டம்எனலாம்.  படம் முழுவதும் கறுப்பு வெள்ளையில். அதுவே ஒரு மயக்கும் mesmerising effect-உணர்வை  கொடுக்கிறது. ஒவ்வொரு frame-லும் அனைத்தும் (மனிதர்களும் பொருட்களும்துல்லியமாக உள்ளது . படம் மெதுவாக நகர்ந்தாலும் அழுத்தம் குறையாமல் இறுதிவரை செல்கிறது.

சொந்த தாயை போல்; நான்கு குழந்தைகளை கவனித்து வரும் கிளியோ தனக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது என்றதும் பிரத்தியேக மகிழ்ச்சியில், கற்பனையில் குவிந்திருப்பது அழகு.   ஆனால் சோதனை யாரை விட்டது குழந்தை இறந்து பிறந்திருப்பது அவரை மட்டுமல்ல நம்மையும்  அழவைத்து விடும்.

பின்புள்ள கிளியோவின் வாழ்க்கை பழைய வாழ்க்கையின் மகிழ்ச்சி இல்லாது, சுருதி அற்று செல்லும்.  ஒரு நாள்  யஜமானியின்  குழந்தைகள் அலைகளில் மாட்டி கொள்வார்கள். தன் உயிரையும் மதிக்காது காப்பாற்றி வருவார்.  அந்த காட்சியில் ஒரு பணிப்பெண் தாயாகும் நிலையை காட்சி மொழியில் காட்டியிருக்கும் விதம் அருமை.

மனித வாழ்க்கை அன்பால் கட்டமைக்க வேண்டியது. பிற மனிதனை தான் பேணும் நெறிகளின் பொருட்டு துன்பப்பட வைப்பது அல்ல என்பதை விளக்கியிருப்பார். பணக்காரர்கள் விருந்தில் சுவாரசியம் அற்று கிடக்கும் பணிப் பெண்கள், பணியாளர்கள் கலந்து கொள்ளும் விருந்திற்கு சென்று விட்டு தாமதமாக திரும்புவார். அப்போது  தனது யஜமானியின் தனிமையை களவான ஒருவன் முயன்று கொண்டு இருப்பான்.  யஜமானி நெறி தவறாதவள். அவனை தட்டி விட்டு விட்டு கடந்து செல்வார்.  யஜமானி தனதான நெறியில் கட்டுகோப்பானவளாக இருந்தாலும் தன் பணிப்பெண்ணின் தவறை, நீதியிடும் இடத்தில் இருந்து நோக்காது மனித நேயத்துடன் அணுகும் ஈரநெஞ்சக்காரியாக இருப்பார்.  பெண்கள் ஒருவருக்கொருவர்`            `தங்கள் பேரன்பால் தழுவி கொண்ட  பேரன்பை சொல்லிய திரைப்படம் இது.  

பொதுவாக வாழ்க்கை கதை சொல்லும்படங்கள்; படம் எடுப்பவரை பற்றியதாக அல்லது வரலாற்றில் இடம் பெற்ற மாபெரும் ஆளுமைகளை பற்றிய படங்களாகவே இருந்துள்ளது. ஆனால் இப்படம் தன் வீட்டில் ஒன்பது மாதத்தில் இருந்து தன்னை வளர்த்திய வளர்ப்பு தாயை பற்றி எடுத்த படம் என்பது இன்னொரு சிறப்பாகும்.  , தற்போது 72 வயதாகும் லிபோரியா ரோட்ரிகெஸ் (Liboria Rodriguez) இந்த படத்தை பார்த்த போது அழுதார் எனக்குறிப்பிட்டுள்ளார்.
 
நல்ல படம் என்பது நல்ல மனிதர்களை, ஈரமான மனங்களை உருவாக்குவது அவ்வகையில் ரோமா சிறந்த படம்

 1970 களில் தாங்கள் குடியிருந்த காலனியின் பெயரான ரோமா என்பதை படத்தின் தலைப்பாகவும் தேர்வு செய்துள்ளார் இயக்குனர்.

நெட்ஃப்லிக்ஸின் முதல் படமே 10க்கு மேற்பட்ட ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இது ஒரு. 17 வயதிற்கு மேலுள்ள நபர்கள் பார்க்க அனுமதியுள்ள  R-சாற்றிதழ் பெற்ற படம் ஆகும்.

இந்த படத்தில் தயாரிப்பு டிசைனராக தன்னுடைய தந்தை பணியாற்றியதையும் நினைவு கூறுகிறார்.  தன் குழந்தைப்பருவத்தில் தன் சகோதரி விளையாண்ட விளையாட்டு பொம்மைகளை  கூட இயக்குனர் நினைவு வைத்திருப்பதை நினைத்து  தந்தை ஆச்சரிப்படுகிறார்.

உலகம் முழுக்க இருந்து நெட்ஃப்லிக்ஷ் ஊடாக 137.1 மிலியன் மக்கள் பார்த்துள்ளனர் .  பல  தியேட்டருகளிலும் திரையிடப்பட்டுள்ளது.