9 Aug 2022

தாணப்பன் கதிரின் முதல் சிறுகதை தொகுப்பு-சுற்றந்தழால்

 


திருநெல்வேலியை சேர்ந்த பா. தாணப்பன் என்கிற தாணப்பன் கதிர்  எழுதிய முதல் சிறுகதை தொகுப்பாகும் ”சுற்றந்தழால்” . தனது தந்தை ப். பரதேசியா பிள்ளை அவர்களுக்கு இப்புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர், கவிஞர், நெல்லையின் பிதாமகன் வண்ணதாசன் அவர்கள் முன்னுரை எழுதி உள்ளார்.

 

முன்னுரையில் எழுத்தாளர் குறிப்பிட்டு உள்ளது போலவே எழுத்தாளரின் வாழ்வோடு இணைந்த காட்சிகளை சிறுகதை எனும் உருவத்திற்குள் கொண்டு வந்துள்ளார்.

 

இத்தொகுப்பில்  ஆக 15 கதைகள் இடம் பெற்றுள்ளன.

ஆசாரம் , தீட்டு என வாழும் பிராமண குடும்பத்தில்  ஆணாக பிறந்து  பெண்ணாகி மாறின நபர்,  தனது தகப்பனார் இறந்த போது தனது தாயை தன்னுடன் அழைத்து செல்வதுடன்  முதல் கதை பிருகன்னளை முடிகிறது.

தாங்கள் வளர்க்கும் பசு தொலைந்து போவது அது பிற்பாடு கோயில் பசுவாக மாறுவதும், பசுவை பிரியும் துயருடன் கதை முடிகிறது.  அடுத்த கதை கொரோனா தொற்று மக்களை பாதித்த விதம், திருநெல்வேலி வாழ்க்கை சூழல் மாறின விதம்,   கொரோனா வேளையில் ஆட்குறைப்பு  என்ற பெயரில் நிர்வாகம் முடிவெடுத்த போது, சிறப்பாக வேலை பார்த்து வந்த ஆசிரியை இழந்த வேலை அதனால் பாதிப்படைந்த ஆசிரியையின் குடும்பம் என கதை நகர்கிறது.

 

 சுற்றந்தழால் என்ற கதை; திருமணம் ஆகி சடுதியில் விவாகரத்து ஆன தம்பதிகள் பற்றிய கதை. அடுத்த கதையில் தனது தாயாரின் தூண்டுதலால் விவாகரத்து கேட்ட மனைவி, பின்பு மனம் மாறி தனது காதல் கணவருடன் இணையும் கதை. அடுத்த கதையில் பிரஞ்சை இல்லாது கடந்து போகும் திருநெல்வேலி வரலாற்று இடங்களில் ஒன்றான தைப் பூச மண்டபம் பற்றி குறிப்பிட்டு உள்ளார் என்பது சிறப்பு.

 

எப்போதும் அம்மா வீட்டில் இருந்த  கிடைக்கும் பொருட்கள் மேல் பெண்களுக்கு எப்போதும் ஒரு ஈடு பாடு உண்டு. அவ்வகையில் கிடைத்த சாதம் குக்கர் உடையும் வரை பயண்படுத்தி கடையில் பழைய பொருளாக கொடுக்க வேண்டி வந்த துயரை சொல்வது நெகிழ்ச்சியாக உள்ளது நெளிந்த நேசம் என்ற கதையில்

 

’இறங்கும் மனிதர்களும் இரங்கா மனிதர்கள்’ என்ற கதை ஊடாக கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் தொழிலாளகளின் துயரை பற்றி அறிகிறோம்.

 

ஈரம் என்ற கதையில் பக்கத்து மாநிலங்களிடம்  உள்ள தண்ணீர் பிரச்சினை அரசியலாக இருக்கும் வேளையில், பக்கத்து வீட்டுக்காரர்களுடன்  தண்ணீர் பிரச்சினையை தீர்க்க இயலாது உள்ள சூழலை  விளக்கியுள்ளார்.

அப்பாவிற்கும் தனக்குமான உணர்வு பூர்வமான உறவை,  டயறி எழுத்து போன்றவற்றுடன் இணைத்து எழுதி உள்ளது உணர்வு பூரமாக உள்ளது.

 


நவீன கலத்தில் வேலைக்கு போய் வந்து வாழும் அவசர வாழ்க்கையில் இணையம் ஊடாக பகிரும் வாழ்த்துக்கள் தரும் சின்ன சின்ன சந்தோஷங்கள் பறிறி அடுத்த கதையில் காணலாம்.

வீட்டில் வளர்த்த தென்னைம்பிள்ளை வெட்டப்பட்டதில் உள்ள சோகத்தை வடித்துள்ளார் அடுத்த கதையில்.

 

அடுத்த கதை ஒரே ஊரில் இருக்கும் காதலியின் பிரிந்து போக வேண்டிய பிரிவு அடுத்த  நிறைவு கதையாக திருநெல்வேலியில்  வயல்கள்  சாலைகளாகவும்  விபத்துக்களின் விளைனிலமாக மாறும் அவலம் பற்றி சொல்லப் பட்டுள்ளது.

 

இப்படி ஒவ்வொரு கதையும் திருநெல்வேலி மனிதர்களையும் திருநெல்வேலி வாழ்க்கையையும் இங்கய சமூக சூழலையும் விளக்கி விதம் எளிய, நேர்கோட்டில் கதை சொல்லும் பாங்காக இருந்தது. சில கதைகளுக்கு இன்னிம் மெனக்கெட்டு இருக்கலாம் என்று தோன்றியது.

மனித உறவுகள், சமூக பிரச்சினைகள், சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் என கதைகள் யாவும் சமக்காலத்தின் பிரச்சினையை  நினைவுப்படுத்தி கொண்டே இருந்தது என்றால் மிகை அல்ல.

 

1 comment:

  1. நல்ல நேர்த்தியான விமர்சனம் மேம். மகிழ்வும் நன்றியும்

    ReplyDelete