முகப் புத்தகத்தில் தோழி Rj Parvathy Muthamil எழுதிய எமது புத்தக அறிமுகப் பதிவால்; முன்னாள் சட்டமன்ற உறுப்பினரால் புத்தகக் கண்காட்சியில் வாங்கப்பட்டுள்ளது என அறிந்த போது ஒரு மகிழ்ச்சி!
ஒரு புத்தகம் விலை கொடுத்து வாங்கப் படுவது என்பது எழுத்தாளருக்கு ஆகப் பெரிய ஊக்கமாகும்.
ஒரு பெண்ணின் எழுத்தை இன்னொரு பெண் அறியவைக்க முன் வருவது சாதாரணமல்ல. அவ்வகையில் என் புத்தகத்தை பற்றி முகநூலில் மட்டுமல்ல அரங்கத்தில் வந்து உரையாற்றியவர் தோழி பார்வதி அவர்கள். அவர்கள் குரலுக்கு நான் எப்போதும் ரசிகை. மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மிகவும் எளிமையும் பேரன்பும் கொண்ட தோழி அவர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சேவியர் கல்லூரியின் காட்சித்தொடர்பியல்
துறையின் துணைப்பேராசிரியர் திருமதி ஜோஸ்பின் பாபா அவர்களால் எழுதப்பட்ட "சலனச்சித்திரங்களில் சமூகம் "எனும் இந்த நூல் ,திரைப்படத்தை எப்படி விமர்சனம் செய்வது என்பதை மாணவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக உள்ளது. ஒரு திரைப்படத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ரசிப்பதுண்டு பார்ப்பவர்களின் பார்வைக்கேற்ப பல்வேறு விதமாக அதன் தன்மை மாறுவதுண்டு. அந்தவகையில் தமிழ்,மலையாளம்,வங்காள மொழி திரைப்படங்களை தனக்கு எப்படித்தோன்றுகிறதோ அப்படியே அதனை விமர்சனத்திற்குள்ளாக்கியிருக்கிறார்.ஒரு திரைப்படத்தின் விமர்சனம் என்பது அதை படிப்பவனின் உள்ளத்தில்,கேட்பவர்களின் உள்ளத்தில் ஒருவித கிளர்ச்சியை தூண்டி அதை பார்க்க,அதை கேட்க வைக்கவேண்டும்.சில படங்கள் கதைக்காக , பாடல்களுக்காக, காட்சியமைப்பிற்காக,
தொழில்நுட்பத்திற்காக,கதாநாயகர்களுக்காக,நாயகிகளுக்காக, நடிப்பிற்காக, திரைக்கதைக்காக,வசனத்திற்காக,சமூகத்தின் எதிரொளிப்பாக என்று பல பார்வைகளில் ஒரு ரசிகனை சென்றடைகிறது.இன்றைய டிஜிட்டல் உலகில் ஒரு திரைப்படம் வெளியான சில மணித்துளிகளுக்குள்ளேபல்வேறு தரப்பினரால் பல்வேறு விதமான விமர்சனத்திற்குள்ளாகிறது.ஒன்றுமே இல்லாத திரைப்படங்கள் கூட விளம்பரயுக்தியினால் மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி பார்க்க வைத்துவிடுகிறது.சில நல்ல திரைப்படங்கள் விமர்சனங்களும் விளம்பரயுக்திகளும் இல்லாமல் வந்த வேகத்திலேயே நம்மை கடந்து விடுகிறது.காரணம் திரைப்படம் குறித்த பார்வையும், அணுகுமுறையும் தான்.
நூலாசிரியர் பத்திரிக்கை மற்றும் தகவல் தொடர்பியல் துறையை மிக அழகாக கையாள்பவர்,களத்தை தம் மாணவர்கள் எளிமையாக கற்றுக்கொள்ள பயிற்சி பல தந்து திறமையானவர்களை அழைத்து செயல்முறை பயிற்சி அளித்து துறையில் சிறக்கச்செய்தல் பணியை மாணவர்களுக்கு அளிப்பதில் சிறந்தவர் தொடர்பியல் துறையில் மாணவர்களுக்கு விமர்சனம் எழுதுதல் என்னும் பயிற்சி தர தானே முன்மாதிரியாக இந்த நூலினை எழுதியுள்ளார்.பதிமூன்று தமிழ் திரைப்படங்கள்,பதிமூன்று மலையாளப்படங்கள்,சத்யஜித்ரேயின் மூன்று திரைக்காவியங்கள்,சத்யஜித்ரேயின் இரண்டு குறும்படங்கள் என தன் பார்வையில் தோன்றிய கருத்தை சமூக நோக்கில் விமர்சனம் செய்திருக்கிறார்.இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது என்று கேட்கலாம் நீங்கள் கேட்பதும் நியாயம்தான் படங்கள் பலவற்றிற்கும் பல்வேறு தரப்பிலிருந்து
ஏற்றுக்கொள்ளக்கூடிய,ஏற்றுக்கொள்ளமுடியாத பல விமர்சனங்கள் இதழ்கள்வழியாகவும்,வலைதளம் வழியாகவும்,நாம் அறிந்திருந்தாலும் கூட கல்லூரி ஆசிரியர் வழி அதை பார்க்கும் விதம் ,சற்றுவித்தியாசமாக இருக்கிறது.இதில் சில படங்கள் நான் பார்க்கவில்லை என்றாலும் விமர்சனங்களை வாசித்திருக்கிறோம் என்ற நோக்கில் சற்று வித்தியாசமாக இருக்கிறது.சூப்பர்டீலக்ஸ்,பரியேறும் பெருமாள்,96, அவள் அப்படித்தான் போன்றவற்றின் விமர்சனங்களில் தன்னுடைய கண்ணோட்டம் சமூகம் சார்ந்து எப்படியுள்ளது என்பதை பதிவுசெய்துள்ளார். கும்பளங்கி நைட்ஸ்,அய்யப்பனும் கோசியும்,தி கிரேட் இந்தியன் கிச்சன்,சாராஸ், போன்ற படங்களிலும்,சத்யஜித்ரேயின் திரைக்காவியங்களிலும்,வித்தியாசமான பார்வையில் தன் விமர்சனத்தை அணுகியிருக்கிறார்.பரியேறும் பெருமாளில் அடுக்கடுக்காய் பல கேள்விகள் காட்சியமைப்புகள்,சித்தரிப்பு என பலவும் முரணாக உள்ளதை சாடியுள்ள விதம் குறிப்பிடத்தக்கது.இதுபோன்று ஒவ்வொன்றிலும் நாம் பார்த்த பார்வைக்கும்,அவர் பார்த்த பார்வைக்கும் பல வித்தியாசங்கள்.யாரென்ன சொல்வார்கள் என்று பயப்படாமல் தனக்கு தோன்றியதை வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து படைத்துள்ளார்.
பல விமர்சனங்கள் நம் மனதிலும் சலனத்தை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த காலம்,வளராத காலத்தில் ரேயின் சினிமாவின் நிலை வளர்ந்த காலம் வரை பேசப்படுவது,இயக்குனர்களின் முரண்பட்ட காட்சி அமைப்பு,கதையமைப்பு,பெண் இயக்குனர்களின் திரைக்கள நிலை, என சமூகம் பார்க்கும் பார்வையிலிருந்து சற்று வித்தியாசமாக சாடியிருக்கிறார்.ஒரே கோணத்தில் பார்ப்பவர்களை இப்படிப்பாருங்கள் என சொல்லும் விதமே வித்தியாசமாக உள்ளது .பெண் எழுத்தாளர்கள் மிகக்குறைவாக இருக்கும் நிலையில் எழுத்துத்துறைக்குள் வந்திருக்கும் புதிய எழுத்தாளரின் படைப்பை அவரின் சமூக சிந்தனைக்கு ஒரு சபாஷ் சொல்லி வரவேற்கலாம்.சலனச்சித்திரங்களில் சமூகம் சற்று சலனத்தை ஏற்படுத்துகிறது என்பது மிகையில்லை
0 Comments:
Post a Comment