18 Aug 2022

இரவின் ஆன்மா- Kulashekar T (Writer and Filmmaker )

Kulashekar T (Writer and Filmmaker )

 இரவின் ஆன்மா


கொரோனா உலகம் முழுக்க ஒவ்வொருவர் வாழ்க்கையில் ஒவ்வொரு மாற்றத்தை விதைத்திருக்கிறது. நல்லதில் கெட்டதும், கெட்டதில் நல்லதுமென யின்-யாங் சுழற்சியில் ஒன்றின் தலையில் இன்னொன்று வாலாக பயணிக்கிறது. அப்படியாக அந்த நேரத்தின் பயன்பாடு, ஜோஸபின் வழியாக இப்படியொரு உலக சினிமா பற்றிய நூலாக வெளிப்பட்டிருக்கிறது. அவர் பார்த்து ரசித்ததில், வித்தியாசமான பெண் கதாபாத்திரங்களை கொண்ட சில படங்களை அவர் இந்த நூலில் ஆராதித்திருக்கிறார்.


இதற்கு இரவின் ஆன்மா என்று ஜோஸபின் தலைப்பு வைத்திருப்பதில் இருந்தே, இதில் ஊடாடும் பெண் கதாபாத்திரங்களின் அகவுலகம் எப்படியான நெருக்கடிக்குள் உந்தி தள்ளப்பட்டிருக்கிறது. எப்படியான ஓசை நிறைந்த மௌனத்திற்குள் அமிழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். அத்தனை அடர்வான இரண்டு சொற்களால் ஆன படிமம் இந்த நூலின் தலைப்பு. 



அவர் உலக சினிமா, இந்திய சினிமா என்று பிரித்து பயணித்து இருக்கிறார். இந்த கட்டுரையில் பிரதானமாக அவர் அலசியிருக்கும் உலக சினிமாக்களுக்குள் எப்படி எப்படி பயணித்திருக்கிறார் என்பதை பார்க்கலாம்.


அவர் ஸோல்’ஸ் அட் நைட்

வயது என்பது விசாலமான மனதை பொறுத்தமட்டில் வெறும் எண் தான். அப்படி ஐம்பதை கடந்த லூயிஸ், ஜேன் இருவரை பற்றிய காதல் கதை. லூயிஸிற்கு ஒரு மகள். மனைவி இல்லை. தனிக்கட்டை. ஜேனுக்கு ஒரு மகன். அவளும் தனிக்கட்டை தான். இருவருக்கும் இடையே காதல் அரும்புகிறது. சேர்ந்து வாழ ஆரம்பிக்கிற தருணத்தில், ஜேன் மகனின் மகனை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிறுவன் லூயிசுடன் அப்படி ஒட்டிக் கொள்கிறான்.  


ஆனாலும், ஒரு கட்டத்தில் ஜேன் தன் மகனுக்கு விவாகரத்தாகி, இருப்பிடம் மாற்றலாகி விட்டபடியால், அவன் இருப்பிடம் போய் அங்கிருந்தபடியே பேரனை பார்த்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி அவளின் மகன் மூலம் முன்வைக்கப்படுகிறது.


லூயிஸ் அந்த பிரிவை ஏற்றுக் கொள்கிறார். அவர்களுக்கிடையே உள்ள விசாலமான காதல், அந்த தடையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறது. நதியோட்டத்தோடு எந்தவித எதிர்வினையும் காட்டாமல் பயணிக்கிற சருகை போல அவர்கள் நடக்கிற அத்தனையையும் இயல்பாக எடுத்துக்கொண்டு பயணிக்க ஆரம்பிக்கிறார்கள்.


மீண்டும் தனிமை. இப்போது காதல் நினைவுகள் அவருக்கு துணையாக இருக்கிறது. ஒரு பெண்ணுடனான நேசம் என்பது அவளை உடமையாக்குவதல்ல. அவளின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு பெறுதல் என்கிற பரஸ்பர புரிதலே காதலின் கூறு என்பதை சொல்லாமல் சொல்லி செல்கிறது இந்த படைப்பு.


அதன் பின் அவர்கள் வெகுதூரத்திற்கு பிரித்தெடுக்கப்பட்டு கொண்டு போகப்பட்டாலும், மனதால் சேர்ந்தேயிருக்கிறார்கள். கைபேசி வழியாக அவர்கள் தங்களின் காதல் கதையின் பக்கங்களை ஒவ்வொன்றாக பேச ஆரம்பிக்கிறார்கள்.


தமிழில் ரிதம் என்றொரு திரைப்படம் வந்தது. அதிலும் இப்படியொரு விசயம் பேசப்பட்டிருக்கும்.


இது ஜேனின் பார்வையில் சொல்லப்பட்ட காதல் கதை அல்ல. லூயிஸின் பார்வையில் சொல்லப்பட்ட காதல் கதை. அந்த வகையில் இது லூயிஸின் காதல் கதை. இதில் ஜேனின் கதை ஒரு கிளைக்கதையாகி விடுகிறது. லூயிஸ் காதல் நிமித்தம் அத்தனையையும் ஏற்றுக் கொள்கிறவராக இருக்கிறார். ஜேன் தன் காதலின் நியாயம் பற்றி மகனிடம் எடுத்துப் பேச துணியவில்லை. ஆணாதிக்க உலகில் உலவும் உலகளாவிய பெண் மனதின் வெளிப்பாடாக இதனை பார்க்கலாம். அந்த வகையில் தன் சராசரி தனங்களில் இருந்து ஜேனினால் மீறி காதலை கைப்பிடிக்க முடியாததால், இதை ஒரு பெண்ணிய கதாபாத்திரமாக, கருவாக பார்க்க முடியாது. ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட மனிதம் ததும்பும் கருவென சொல்லலாம்.


இந்த கதையை சுவையாக தன் கட்டுரையில் ஜோஸபின் எழுத்தாக்கி இருக்கிறார். வெயில் காலத்தில் சொல்லாமல் கொள்ளாமல் வந்து செல்லும் தென்றலாய் இந்த படைப்பில் அப்படியொரு காதல் ஊடாடி நம் இதயங்களை சிலிர்க்க வைத்து விட்டுச் செல்கிறது. 

*

தி லான்ட்ரோமேட்


இந்த படத்தின் கரு அவசியம் பேசப்பட வேண்டியது. இந்த உலகத்தில் இன்சூரன்ஸ் என்கிற பெயரில் நடத்தப்படும் நிறுவனங்கள் எத்தனை மோசடியானவையாக மாறிப் போயிருக்கின்றன. அத்தனையும் வாயில் நெய் ஒழுக பேசுவார்கள். பிரபல நடிகர்களை வைத்து ஆஹா ஓஹோ என்று விளம்பரப்படுத்துவார்கள். அந்த நடிகர்களும் காசு வாங்கிக்கொண்டு வாய் கூசாமல் பொய்களை கயமை புன்னகையோடு கக்கிச் செல்வார்கள்.


பெரும்பாலும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏதாவது ஒரு வகையில் மோசடியில் ஈடுபட்டு மக்களை தந்திரமாக ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளிவந்த இமானுவேல் திரைப்படம் கூட அந்த விசயத்தை ஆழமாக பேசி இருக்கிறது. 


இந்த படைப்பு பொலீட்சர் விருது பெற்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து நடத்திய நிதி நிறுவனங்கள் எழுபத்தாறு நாடுகளில் வியாபித்து செய்த 3500 குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டிய கட்டுரை தொகுப்பே ‘சீக்ரஸி வேர்ட் இன்ஸைட் தி பனாமா பேப்பர்ஸ்’ என்கிற நூல்.


யெல்லா என்கிற மூதாட்டி தன் கணவன் இறந்ததற்கான இன்சூரன்ஸ் தொகையை வாங்க முயற்சிக்கையில், அந்த நிறுவனம் ஒரு டுபாகூர் நிறுவனம் என்பது தெரிய வருகிறது.  

தன்னை அத்தனையும் கைவிட, தான் கொண்ட தன்னம்பிக்கையோடு சட்ட யுத்தம் நடத்தி அறத்தை நிலை நாட்டுகிறாள் யெல்லா. 


பெண்மை சக்தி மகத்தான சக்தி. அத்தனை சக்திகளுக்கும் மூலம் அது. அதன் வீரியத்தை அதன் சுதந்திரமே பட்டவர்த்தணப்படுத்தும். யெல்லா ஒரு எளிய பெண். அவன் வலிய பெண்ணாக சூழ்நிலை நிமித்தம் ஆக்கப்படுகிறாள். இது சந்தேகமில்லாமல் ஒரு பெண்ணிய படைப்பு தான். மேக்சிம் கார்கியின் தாய் நாவலிலும் இப்படித்தான் எதுவும் தெரியாத அம்மா, சூழ்நிலை நிமித்தம் ஒட்டுமொத்த நாட்டின் அரசியல் விழிப்புணர்வாக ஒரு கட்டத்தில் விசுவரூபமெடுப்பாள்.


எஸ்கேப் ஃபிரம் சோபிபார்


போலந்து நாட்டில் உண்டாக்கப்பட்ட வதை முகாம்களில் யூதர்கள் பட்ட பாடுகளும், அதில் சிலர் தப்பித்த கதையையும் இந்த படைப்பு பேசுகிறது. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. அப்படியாக உண்மையிலேயே இந்த வதை முகாமில் இருந்து தப்பித்த, எஸ்தர் ராப் என்கிற பெண்மணி இந்த ஆக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறார். மோட்டார் சைக்கிள் டைரீஸ் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது, சேகுவேராவுடன் அந்த பயணத்தில் ஈடுபட்ட நண்பரின் நேரடி அனுபவத்தை அந்த இயக்குநர் இப்படித்தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறார். டைட்டானிக் படத்தில் கூட அதிலிருந்து தப்பித்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் நேரடி அனுபவத்தை ஜேம்ஸ் கேம்ரூன் கேட்டு அறிந்திருக்கிறார்.


எந்த போராக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. ஒரு யுத்தம் துவங்குகிறபோது, முதலில் அங்குள்ள பெண்களே குறி வைக்கப்படுகிறார்கள். எண்ணிலடங்காத பலாத்காரம், வன்புணர்வு இதுகாறும் நடைபெற்ற, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு யுத்தத்திற்கு பின்னும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. 


லிவ் டுவைஸ் லவ் ஒன்ஸ்


எமிலியோ என்கிற ஓய்வு பெற்ற கணித ஆசிரியருக்கு அல்சைமர் நோய் பிரச்னை வருகிறது. நினைவுகளை படிப்படியாக இழந்து கொண்டு வருகிறார். முழுமையாக நினைவு தப்புவதற்குள் தன் பால்ய கால சிநேகிதி மார்கரீட்டாவை சந்திக்க விரும்புகிறார். அவரின் பேத்தி பிளாங்கா அவருக்கு உதவுகிறாள். அவர்கள் பல சிரமங்களுக்கு பிற்பாடு அவளை சந்திக்கிறபோது, மார்கரிட்டாவும் அல்சைமர் நோயின் பிடியில் சிக்குண்டிருப்பதை தெரிந்து கொள்கிறார்கள். முடிவில் இருவருமே ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து கவனித்து கொள்ளப்படுகிறார்கள். அவர்களின் பால்ய கால சிநேகித நினைவுகளோடு அவர்களின் வாழ்க்கை அங்கே மறுபடி துவங்குகிறது. உடம்பு தாண்டிய காதலை கொண்டாடுகிற தாத்தாவை நவயுக பெண்ணான பேத்தி பிளாங்காவிற்கு பிடித்து போகிறது. அதன் காரணமாகவே அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க அவள் காரணமாக மாறிப் போகிறாள். பால்யமும், காதலும் மகத்துவமானது என்பதை பதின்பருவ பிளாங்கா உணர்ந்து கொள்கிற தருணம் இந்த படைப்பில் முக்கியமான ஒரு புள்ளி என்று தோன்றுகிறது.


45 இயர்ஸ்


குடும்ப அமைப்புகளின் போதாமையை பற்றி பேசுகிற படம். ஒரு அந்யோன்யமான தம்பதியர் தங்களின் 45 வது திருமண நாளை கொண்டாடுகிற அதே வேளையில், 50 வருடத்திற்கு முன்னால் இறந்து போன காதலியின் உடல் ஆல்ப்ஸ் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி வருகிறது. 


உடனே அந்த கணவர் காதலியின் நினைவில் கரைந்து போகிறார். அதை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி, அத்தனை காலம் அந்யோன்யமாக இருந்தும், அவரை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவெடுக்கிறார்.


இதன் இயக்குநர் குடும்ப அமைப்பின் போதாமை குறித்து அவருக்கே உரித்தான கோணத்தில் யோசித்து இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறார். எப்போதும் குடும்ப அமைப்பு ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரிசமமான உரிமைகளை வழங்குவதில்லை. ஆணுக்கு இருக்கிற உரிமைகள், பெண்ணுக்கு வழங்கப்படுவதில்லை. ஆண் எப்போதும் குடும்ப அமைப்பில் முதன்மை பாத்திரம் தான். பெண் இரண்டாம் நிலை பாத்திரம் தான் என்பதை இந்த படைப்பு சொல்லாமல் சொல்லி செல்கிறது.


இந்த படைப்பு தனிநபர்களை குற்றம் சுமத்துவதில்லை. நடக்கிற சிடுக்குகளுக்கு குடும்ப அமைப்பின் பார்வையை, எதிர்பார்ப்பையே காரணமாக முன்நிறுத்துகிறது. குடும்ப அமைப்பில் உள்ள பாலின சமத்துவமற்ற போக்கு இதன் வழியாக பூடகமாய் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. காதல் இனிப்பதும், கல்யாணம் அதிருப்தியை தருவதும் இதன் பின்புலத்தில் தான்- காதலிக்கிற போது அன்கன்டிஷ்னல் லவ்வை உணர்கிறார்கள். கல்யாணம் என்று வருகிற போது குடும்ப அமைப்பு அதன் சமனற்ற நிமித்தங்களை, நிபந்தனைகளை விதிக்க ஆரம்பித்து விடுகிறது. எந்த ஒரு உறவிலும் அன்கன்டிஷ்னல் லவ் இருக்கிறபோதே, எதிர்பார்ப்பற்ற, அகம்பாவமற்ற, சுயநலமற்ற, சாசுவதமான அன்பை தரிசிக்க முடியும் என்பதை இந்த படைப்பு உணர்த்துகிறது.


தி டூ போப்ஸ்


இரண்டு அறம் சார்ந்த பாதிரியார்களுக்கிடைய நடைபெறுகிற ஆழ்மன விசாரனையே இந்த படைப்பு. ஒருவர் பிரான்சிஸ். இவர் கார்டினல் பதவி உயர்வு பெறுகிறார். ஆனால் தனக்கு எந்த அடையாளங்களும், அதிகாரங்களும் தேவையில்லை. பாதிரியாராகவே தொடர விரும்புகிறேன் என்கிறார். இவர் மரபை தாண்டிய சிந்தனை போக்கு கொண்டிருப்பவர். மற்றொருவர் போப் ஆக இருக்கிற பெனடிக். இவர் மரபார்ந்த சிந்தனை போக்கு கொண்டவர். இரண்டு பேருக்கும் இடையே உள்ள முரண்கள் அவர்களின் உரையாடல்களில் ஆக்கப்பூர்வமாக வெளிப்பட்டிருப்பதற்காக காரணம், இருவரும் மனிதத்தை மதிப்பவர்கள். 

மகாத்மா என்கிற பட்டம் கூட மோகன்தாஸை உறுத்தியே இருக்கும்.

ஜென் மனநிலை என்பது அடையாளமற்று இருப்பது. மனதை கழுவி கழுவி எடையற்ற இறகாய் பறக்க விட்டிருப்பது. அப்படியான இலக்கு நோக்கியே இருவரும் வெவ்வேறு பாதை வழியே பயணிக்கிறார்கள். 


போஸ்ட் மார்டனிஸத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று அதிகாரத்தை துறப்பது. அந்த வகையில் இரு நாயகர்களும் பின்நவீனத்துவவாதிகளாக உணரத் தக்கவர்கள். இறுதியில் பெனடிக் புதிய போப்பாக பிரான்சிஸை நியமிக்கிறார். அடையாளங்களை தொலைக்க விரும்புகிற நபரிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் உச்சக்கட்ட காட்சி.


இவர்களின் உரையாடல் மதத்தின் சாதக, பாதக நிகழ்கால அம்சங்களை அலசுகின்றன. மதங்கள் மானுடத்தை பண்படுத்துவதற்காகவே தோன்றியிருக்கிறது. அதேசமயம், அதில் அரசியல் சாயம் கலக்கப்படும் போது, அது நிறுவனமயமாகி விடுகிறது. ஆணாதிக்க சமூகத்தின் கூறுகளும், மதங்களின் அடிப்படைவாததன்மையும் அதில் கூட்டாச்சி செய்ய ஆரம்பித்து விடுகின்றன.


மனோ தத்துவத்தின் தந்தையாக போற்றப்படும் ஃபிராய்டின் நீட்சியாக கருதப்படுகிற கார்ல் யூங் 1914 ல் கலெக்டிவ் அன்கான்ஷியஸ்னெஸ் என்கிற தன்னைத் தானே தன்னின் கனவு நிலை குறித்த அன்கான்சியஸ் மனநிலையை ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஒவ்வொரு மனிதரின் ஐடன்டிட்டியில் அடையாளத்தில் அவரவர் மட்டுமே தனித்திருப்பதில்லை. காலங்காலமாய், யுகம் யுகமாய் மரபணுக்களின் வழியாக பயணித்து வந்திருக்கும், அவர்களின் மூதாதய பண்புகள் தொன்மங்களாக அவர்களோடு கூட்டு பயணம் நிகழ்த்தியவண்ணம் இருக்கிறதை அவர் கனவில் கண்டடைந்த ஓவியங்கள் வழியாக, கனவை தொடர்ந்த அடுத்தடுத்த நொடிகளில் வரைந்து வரைந்து சேகரித்து, அதற்கான விளக்கத்தோடு நூலாக்கி இருக்கிறார். அப்படியான கூட்டு ஆழ்உறைமனநிலை பண்புகளின் கூறுகளே ஓரினச்சேர்க்கை முதலான பல விசயங்களுக்கு காரணிகளாக இருக்கின்றன என்பதை அதில் விளக்கியுமிருக்கிறார். அப்படியான ஒரு விசயம் இந்த படைப்பிலும் இடம் பெற்றிருக்கிறது. 


இருக்கட்டும். கார்ல் யூங் எழுதிய அந்த நூல், ஒரே ஒரு பிரதி மட்டும் தான் அவர் பிரத்யேகமாக அச்சிட்டிருக்கிறார். அந்த நூலை யாருக்கும் அவர் தரவில்லை.  ஆனால் பத்திரமாக தன்னுடைய சேஃட்டி லாக்கரில் வைத்து இருந்து இருக்கிறார். 2007 ல் அவரின் வழி வந்த மனோவியலாளர்கள் முயற்சியில் அந்த நூல் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு அறிவியல் உலகில் மிகுந்த கவனிப்பை பெறுகிறது. அப்படியான கலெக்டிவ் அன்கான்சியஸ்னெஸின் சூட்சுமங்களை தான் இரண்டு வெவ்வேறு கோணங்களில் இருந்து அலசி இறுதியில் அவர்களின் ஒற்றை இலக்கான மனிதம் என்கிற புள்ளிக்கு வந்து சேர்கிறார்கள். 


இந்த நூலின் மைய பண்பிற்கேற்ப இந்த படைப்பில் பெண் கதாபாத்திரம் எதுவும் இடம் பெறவில்லையே என்று தோன்றுகிறதா? அப்படியான பெண் கதாபாத்திரம் இல்லை தான். ஆனால், பாலின சமத்துவத்தை அடிகோல துடிக்கிற பெண் மனதின் ஆன்மா குறித்து பெண்மையை சமமாக பாவிக்க விரும்புகிற இந்த இரண்டு கதாபாத்திரங்கள் வாயிலாக அலசப்படுகிறது. அப்படித்தான், மதங்களின் தலைபீடங்களில் எந்த ஒரு பெண்ணும் அமர்த்தப்படுவதில்லை என்கிற சமனற்றதன்மையை மனிதத்தோடு இதன் மைய கதாபாத்திரங்கள் ஆய்ந்து பட்டவர்த்தனப்படுத்துகின்றன.


ரோமா


இந்த திரைப்படம் வெளிநாட்டு திரைப்படங்களின் பிரிவில் மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறது. அதில் ஒன்று இதில் வளர்ப்பு தாயாக நடித்திருக்கும் நாயகிக்கு கிடைத்திருக்கிறது. இன்னொன்று இதில் குழந்தைகளின் தாயாக நடித்திருப்பவருக்கு சப்போர்ட்டிங் ஆக்ட்ரஸ் பிரிவில் கிடைத்திருக்கிறது. இதுவே இந்த படத்தை இந்த நூலின் ஆன்மா அலசுவதற்கான காரணமாகவும் அமைந்து விடுகிறது. 


நிராதரவாக விட்டுச் செல்லப்படுகிறது ஒரு வசதியான குடும்பம். அந்த குடும்பத்தின் ஆண் வேறொரு பெண்ணோடு சென்று விடுகிறான். இந்த குடும்பத்தில் இருந்த செவிலி பெண் அந்த குடும்பத்து அங்கத்தினராகவே மாறி அந்த குழந்தைகளை காப்பாற்றி, கரையேற்றுகிறாள். அவளுமே இந்த தாய் சந்தித்த துரோகங்களை சந்திக்கிறாள். அதன் விளைவாக கருவுற்று இறந்தே பிறக்கிறது அந்த குழந்தை. அதன் பிறகு தான் அந்த தாயின் மூன்று குழந்தைகளுக்கு அவள் பெறாத தாயாக உருவெடுக்கிறாள். இது இந்த படத்தின் இயக்குநர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் மீளுருவாக்கம். உண்மையான அந்த வளர்ப்பு தாய்க்கு இப்போது 72 வயது. பெயர் லிபோரியா ரோட்ரிக்ஸ். அவர் இந்த படத்தை பார்த்து விட்டு அழுது விட்டதாக தெரிவித்திருப்பதாக கூறுகிறார் இந்த நூலின் ஆசிரியர் ஜோஸபின்.


இந்த படத்தின் துவக்கத்தில் ஒரு படிம காட்சி இடம் பெற்றிருக்கும். அதில் படத்தின் நாயகியான அந்த பணிப்பெண் தரையை துடைத்துக் கொண்டிருப்பாள். அதில் ஒரு சாளரம். அதன் வழியாக வானம். அதில் கடந்து போகும் விமானம் என அத்தனை உயரங்களும் அவள் காலடிக்கு கீழ் பிம்பங்களாக நகரும். 


ஜோக்கர்


ஜோக்கர் என்கிற கதாபாத்திரம் நகைச்சுவை காமிக்ஸ் உலகில் மிக பிரபலம். அப்படியான ஆர்தர் ஃபிளெக் ஒர நகைச்சுவை நடிகராக ஆசைப்படும் ஒரு எளிய மனிதர் தான். நோய்வாய்ப்பட்ட அம்மா, ஏழ்மை, நிராசைகளின் படையெடுப்பால் ஆர்தரின் வாழ்க்கை தனது பிடியை படிப்படியாக இழக்க துவங்குவதாக இந்த கட்டுரை துவங்குகிறது.


மனநோயினால் அவதிப்படும் ஆர்தரின் வாழ்க்கை கட்டுப்பாடற்ற பிரமைகள், வன்முறை, அராஜகம் என சுழல்கிறது என்கிற வாக்கியம் ஜோக்கர் பற்றிய துல்லியமான சித்திரத்தை மனதில் பதிய வைத்து விடுகிறது. 

இரயிலில் ஒரு பெண்ணை சீண்டிய மூன்று நபர்களை கொலை செய்கிறவன், சோஃபி என்கிற கற்பனை காதலி எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன்னை கைவிடாதல் அவள் என கற்பனை செய்து கொண்டு கொண்டாடுகிறவன், சிறுபிராயத்தில் தன்னை அம்மாவின் காதலன் கொடுமைப்படுத்தியதை அம்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் என்பதை உணர்ந்ததும், அவளை கொலை செய்கிறவன் தான் மனபிறழ்விற்கு உட்படுத்தப்பட்ட இந்த ஜோக்கர்.


பெற்றோர்களின் நீட்சி அல்ல குழந்தைகள். பெற்றோர்களின் வழியாக வருகிறவர்கள். அவ்வளவே என்று கலீல் ஜிப்ரான் சொன்னது இங்கே போகிற போக்கில் ஞாபகம் வருகிறதை தடுக்க முடியவில்லை.


சராசரி பொதுபுத்தியும், சுயநலமுமாக இருக்கிற பெண்ணை எதிர்நாயகனின் தாய் கதாபாத்திரம் வழியாக காட்சிக்கு வைக்கிறது. இதுவும் உண்மையான பெண்ணியம் நோக்கிய பயணத்திற்கு சிந்தனையில் வழி வகுக்கிற பாதையை கட்டமைக்கிறது என்பது உண்மை தான்.


லாலாலேண்ட்


இந்த படம் காதலுக்காக காதலையே தியாகம் செய்கிற காதலை பற்றி கவித்துவமாய் பேசுகிறது. காதல் என்பது பெறுவதல்ல. கொடுப்பது. கொடுத்துக் கொண்டே இருப்பது என்பதை இங்கே பெண்மை தொட்டு செல்கிறது.


இதனை தொடர்ந்து சில இந்திய படங்களின் கட்டுரைகளையும் இந்த நூலில் இணைத்துள்ளார். அவை பற்றி சில வரிகளில் பார்க்கலாம். குயின். இந்த படம் தமிழில் முன்பு வெளிவந்த புது வசந்தம் என்கிற கதையின் மீளுருவாக்கம் என்று சொல்லலாம். தன்னை புரிந்து கொள்ளாத காதலனை துறந்து, தன்னை நம்புகிற நண்பர்களுக்காக வாழ துவங்குவது தான் இரண்டு படைப்பின் அடிநாதம். அப்படியாக தன்னை புரிந்து கொள்ளாத காதலனை துறந்து, புதிதாக கிடைத்த நண்பன் இத்தாலிக்காரனிடம் காதல் வயப்படுகிறாள் கதை நாயகி ராணி. தன் காதலை அவமதிக்கும் எதிர்நாயகனை நிராகரித்து, தன் காதலை மதிக்கும் இன்னொரு நபரை ஒரு பெண் காதலிக்கலாம் என்கிற சிந்தனையை பதிக்கிறாள் இந்த குயின்.


லஞ்ச் பாக்ஸ் கணவனால் தன் கனவுகள் யாவும் நிராசையாகி போன ஒரு பெண் புதிய காதலை தேடிக் கொள்கிற கதை. ஒன்ஸ் அகெய்ன் பெண் என்பவள் எதற்காகவும் பிறரை சார்ந்திருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிற படம். சார் என்கிற இந்தி படம் ரத்னா என்கிற கைம்பெண் அவள் வேலை செய்கிற வீட்டில் உரிமையாளரின் மனதில் இடம் பிடித்து எப்படி கரம் பிடிக்கிறாள் என்பதை பேசுகிறது. அவளுக்குள் எழும் தன்னெழுச்சி காரணமாக அவளுக்குள் இருந்த பொருளாதார ரீதியிலான காம்ளக்சில் இருந்து மீண்டு அவள் எப்படி மிளிர்கிறாள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த காதல் கதை. வித்யா பாலன் நடித்த ஷெர்னி வனங்கள், இயற்கை, விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே நடக்கிற யுத்தம் என்பது இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையே நடக்கிற யுத்தகமாக விரிகிறது. இந்த உலகம் மானுடத்திற்கு மட்டுமானதல்ல. எல்லா உயிரினங்களுக்குமானது என்பதை இந்த படைப்பு அடிக்கோடிட்டு காட்டுகிறது. வனவிலங்கு பாதுகாப்பு என்பது வாயில்லா ஜீவன்கள் மீது காட்ட வேண்டிய கருணை. அதை தான் முன்பே பல்லுயிர் ஓம்புதல் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். வனங்களையும், வனவிலங்குகளையும் மதிக்கிற போதே சுற்றுச்சூழல் சிறக்கும். கொரோனா போன்ற இயற்கை பிறழ்வுகளின் விசித்திரங்கள் வராது தடுக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி செல்கிற கதை. காது கேட்காமல், வாய் பேசாமல் பிறந்த ஹெலன் கெல்லர் எப்படி பிரெய்ல் எழுத்துகளை கண்டுபிடிக்க காரணமாக இருந்தாரோ, அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜி இந்த பிளாக் திரைப்படத்தில் வாழ்ந்து இருக்கிறார். தொடுவுணர்ச்சி வழியாக அவர் எப்படி ஒரு கல்விமானாக பரிமளித்தார். வாழ்வின் சவால்களை எப்படி எதிர்கொண்டார் என்பதை உணர்வார்த்தமாக வெளிப்படுத்துகிறது இந்த கதை. ஷிகாரா. விதுவினோத் சோப்ரா இயக்கிய படம். முக்கிய கதாபாத்திரங்களாக சிவ்குமார் அவனின் மனைவி சாந்தி மற்றும் அவனின் நண்பன் லத்தீஃப் ஆகியோர் இடம் பெறுகிறார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான காஷ்மீர் பண்டிட்டுகளை இசுலாமிய அடிப்படைவாதிகள் காஷ்மீரை விட்டு வெளியேற்றிய மனித உரிமை மீறல் சம்பவத்தை பின்புலமாக வைத்து பின்னப்பப்டட கதை. இந்த படைப்பின் வாயிலாக தலைமை என்பது மக்களை பிரித்து ஆள்வது அல்ல. ஒற்றுமையாக சேர்த்து வைத்து ஆள்வதே என்கிற கருப்பொருளை முன்நிறுத்துவதாக இந்த கட்டுரை வாயிலாக ஜோஸபின் குறிப்பிடுவது சிந்தனையை தூண்டுகிற வரிகள். முத்தாய்ப்பாக, பிங்க் என்கிற படம் தாப்சி கதாபாத்திரம் வழியாக நோ மீன்ஸ் நோ என்பதை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. பிங்க் என்றால் பெண்களின் சுதந்திரம் என்று அர்த்தம். 


இப்படியாக தரமான உலக சினிமாக்களோடு, இந்திய சினிமாகளையும் சேர்த்து தான் எழுதிய கட்டுரைகளை தொகுத்து இந்த நூலை சிருட்டித்திருக்கிற ஜோஸபின், புதிய சினிமா என்பதற்கு கலை அந்தஸ்தை இந்த புத்தகம் வாயிலாக வழங்கி இருப்பதை மனப்பூர்வமாக உணர முடிகிறது. எத்தனை விதமான பெண் ஆளுமைகள் இந்த படைப்புகளுக்குள் ஊடாடுகிறார்கள். அத்தனையையும் ஒரு சேர தரிசிக்கிற வாய்ப்பை இந்த நூல் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

*


      




0 Comments:

Post a Comment