வெறும் வாசிப்பு வாசிப்பு என்றே ஒரு பக்க சிந்தனையோடு , திரிந்து கொண்டிருந்த என்னை அப்படியே மடை மாற்றிப் போட்டுவிட்டது பேராசிரியை ஜெ .பி .ஜோஸ்பின் பாபா எழுதிய "இரவின் ஆன்மா " (திரைப்படங்களில் பெண்கள்) என்ற புத்தகம் . முதலில் காய்ச்சிய பாலில் தயாரித்த டிகிரி காப்பி போல , முதலில் பிழிந்தெடுத்த தேங்காய்ப் பாலின் அடர்த்தியாக , பல்வகைக் கனிகளின் பழக் கலவையாக தான் பார்த்து ரசித்த உலகமொழித் திரைப்படங்களில் தான் ரசித்தவற்றை பிறரும் படித்து இன்பம் பெறட்டும் என்று நினைத்து தன் புத்தகம் மூலம் சாரமாகப் பிழிந்து தந்த இந்த நற்குணத்திற்காகவே இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தரமான ஒன்பது வெளிநாட்டுப் படங்களும், ஒன்பது ஹிந்தித் திரைப்படங்களின் வழியாகவும் அதில் நடித்த பெண்பாத்திரங்களை மிகச் சிறப்பாக திறனாய்வு செய்து தந்திருக்கிறார் நூலாசிரியர் பேராசிரியை ஜோஸ்பின் பாபா. .
இந்த நூல் தந்த விளைவு , இவர் தந்த செம்மையான விமரிசனம் தந்த தூண்டுகோலால் இரண்டு படங்களை ( "பிங்க் " https://www.youtube.com/watch?v=TgADDuR1R68 மற்றும் "our souls at night "https://www.youtube.com/watch?v=ybPX-sd_b1Y ) பல வேலைகளுக்கு நடுவில் தேர்வு செய்து பார்த்த நான் (சொன்னால் நம்பமாட்டீர்கள்! ) எஞ்சிய மீதம் பதினாறு படங்களை பார்த்தே தீர்வதென்ற வெறியோடு எண்ணம் முழுக்க அதே சிந்தனையோடு செயல்படத் துவங்கியிருக்கிறேன் ! நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல் இது . என் மனம் கவர்ந்த எந்த படைப்புகளையும் வாசிக்க நேர்ந்து விட்டால் பெரும்பாலும் படைப்பாளரோடு அலைபேசியில் உரையாடி விடுவதை வழக்கமாய் கொண்டுள்ளேன். அப்படித்தான் இவரோடு மிகக் கூடுதல் மணித்தியாலங்கள் கதைகளை பற்றிய இவரது கண்ணோட்டத்தையே வியந்து பேசினேன் .
அப்போது அவர் மிக்க மகிழ்ச்சியோடு கூறியது :- " தனா ! பல கலை உருவங்கள் சேர்ந்த ஒருமித்த கலைப்படைப்பு திரைப்படங்கள். சமூகத்தைப் பற்றி சிந்திக்க வைப்பதுடன் சில பிரச்சினைகளுக்கு விவாத களமாகவும் ,தீர்வாகவும், சில போழ்து பார்ப்பவர்களின் எண்ணங்களை விசாலப்படுத்தவும், வாழ்க்கையைத் தத்துவ விசாரணையோடு அணுகவும் வைக்கின்றன . உலகமெங்கும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் ஒரே போன்றதுதான். அதைப் பெண்கள் எவ்விதம் அணுகுகின்றனர், சவால்களை எப்படி கையாண்டு கடக்கின்றனர், அதன் தீர்வுகள் எப்படி இருந்திருக்கின்றன என்பதைத் தான் இந்நூலில் பதிவு செய்திருக்கிறேன்" என்றார். இப்போது எனது நோக்கமெல்லாம், என் முக நூல் நட்புகள் அனைவரும் குறிப்பாக, பெண்களும் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும். உங்கள் கருத்துகளை அதன் பின் அவரது மின்னஞ்சலுக்கு இடலாம்(jpjosephinebaba5@gmail.com) பாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறையில் (Visual communication ) துணைப் பேராசிரியராக பணியாற்றிவரும் இவரது படைப்புகள் சிறப்பானவை .(நான் தேடும் வெளிச்சங்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு) தனது வளர்ந்த இரு மகன்கள் சாம், ஜெரோம் மற்றும் உறவினர், நட்புகளோடு இணைந்து குடும்பத்தையும் கவனித்து , கல்லூரி மாணவர்களோடு வழிகாட்டியாய், நல்ல நட்பு பாராட்டிக் கொண்டு, இணைய பத்திரிக்கைகளில் துணிந்து தனது கருத்துகளை சில எதிர்ப்புகளுக்கு இடையேயும் வெளிப்படுத்தும் இவரை எனது மிகச் சிறந்த நட்புகளில் ஒன்றாய் ஆக்கிக் கொண்டது எனக்குப் பெருமையே!
நூல் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :-
ஜெ.இ.பதிப்பகம், 2-123 பெருவிளை அஞ்சல்,நாகர்கோவில் ,
கன்னியாகுமாரி மாவட்டம்-629 003 அ .பே :97896 14
0 Comments:
Post a Comment