21 Aug 2022

இரவின்ஆன்மா...#திரைப்படங்களில்பெண்கள்-Thanappan Kathir

 


தனது கணவரை 25 வயதில் இழந்தாலும் கடைசி வரை தான் கொண்ட காதலையும் வாழ்ந்த வாழ்க்கையும் நினைத்துக் கொண்டாடி 2021 இல் மறைந்த தாய்வழிப் பாட்டி மாரியாகம்மா மரிய செபாஸ்டியன் அவர்களுக்கு இந்த புத்தகத்தை சமர்ப்பணம் செய்து துவங்குகிறது இந்நூல்.

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட இந்த அற்புதமான படைப்பு நல்லதொரு சமுதாயம் அமைய அடித்தளமாக இருக்கும் என்று பதிப்பகத்தார் பதிப்புரை தந்திருக்கின்றார்கள்

பெண்கள் எதிர் கொள்ளும் ஒடுக்குதல்கள் மற்றும் புறக்கணிப்புகள், சிக்கல்களையும் தீர்வுகளையும் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்ற பொருண்மையைப் பயன்படுத்தி "இரவின் ஆன்மா" நமக்கு செய்திகளை பகிர்கிறது என்று பேராசிரியர் கோ. ரவீந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்கள்

ஒரு சினிமாவை எப்படிப் பார்ப்பது? எப்படி புரிந்து கொள்வது? என்கிற பாடத்திட்டம் நமது கல்வித் திட்டத்தில் இல்லை. அதன் தேவைப்பாட்டை விளக்குவதாக இந்த நூல் அமையப்பெற்றிருக்கிறது என்று கிருஷ்ணகோபால் அவர்கள் வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்கள்.

திரைப்படம் ஒரு மாபெரும் கலை என்பது போலவே திரைப்படங்களை பார்ப்பதும், ரசிப்பதும் ஒரு கலையை என்று தன்னுரை தந்து நம்மை இந்த கட்டுரைத் தொகுப்பிற்குள் அழைத்துச் செல்கின்றார் பேராசிரியர் ஜோசபின் பாபா.

மொத்தம் 18 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. அனைத்துமே திரைப்படங்கள் குறித்தும், அதில் வருகின்ற பெண் கதாபாத்திரங்கள் குறித்தும் பேசுகின்றன. 9 உலக மொழி திரைப்படங்களும் 9 ஹிந்தி திரைப்படங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

உலகம் மொழித் திரைப்படங்களும், ஹிந்தி மொழி திரைப்படங்களும் கையாண்ட பெண்கள் பற்றி கருத்தியல் பேசுவதோடு உண்மை நிலையையும் இங்கே நமக்கு தெள்ளத் தெளிவாக இந்த கட்டுரைகள் விளக்குகின்றன.

சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் அல்லது அந்த சூழலில் அவர்கள் எவ்வாறு சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குறித்து பேசி அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டு வந்திருக்கின்றார்கள், இன்னும் இன்னும் வர காத்திருக்கின்றார்கள் என்பதனை திரைப்படங்கள் காண்பித்ததை தெள்ளத் தெளிவாக நமக்கு கடத்துகின்றார்.

ஒரு பெண்ணுடன் நேசம் கொள்ளுதல் என்பது அவளை சொந்தமாக்குவது அல்ல. அவள் மகிழ்ச்சியில், துன்பத்தில், பிரச்சனைகளிலும் பங்கு பெறுதல் என்ற புரிதலில் ஜேன் எடுத்த முடிவை லூயிஸும் ஏற்றுக் கொள்கிறார் என்று முதல் கட்டுரை பேசுவது அந்த படத்தை பார்க்க தூண்டுவதாக அமைகிறது. அந்தத் திரைப்படம் இரவில் எமது ஆன்மா. (Our Souls At Night) இதுவே புத்தகத் தலைப்புமாகும்.https://www.youtube.com/watch?v=lci71HjGvaM

தன் வாழ்க்கையில் ஆளுமை செய்த இரு பெண்களைப் பற்றிய படம் என்று இயக்குனர் சொன்ன அந்தத் திரைப்படம் ரோமா. அந்த இரு பெண்களில் ஒருவர் தன் தாய் இன்னொருவர் வளர்ப்புத்தாய். வளர்ப்புத்தாய்க்கு தான் எழுதிய அன்பின் மடலாகவே இந்த படத்தை காண்கிறேன் என்று குறிப்பிட்டிருப்பது, அந்தப் படத்தை தேடிப் பார்க்கக் கூடிய ஆவலை நமக்கு தூண்டுகிறது. படத்தின் பெயர் "Roma".

"பிளாக்" எனும் ஹிந்தித் திரைப்படம் அமிதாப்பச்சனும் ராணி முகர்ஜிம் நடித்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக இவ்விருவரும் பார்வையற்றவர்களுக்கான எழுத்து மொழி பிரெயிலியை ஏழு மாதம் கற்றனர் என்ற தகவல், எவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் அந்த ஒரு கதாபாத்திரத்தை நேர்த்தியுடன் செய்ய வேண்டும் என்று அந்த பிரெய்லி முறையினை இவர்கள் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பதனை நமக்குத் தெரிவிக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாகப் பார்த்த இந்தப் படத்தினை நினைவுகளால் நான் மீட்டிக் கொண்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.https://www.youtube.com/watch?v=J72Rlp5WAcA&t=23

பிங்க் திரைப்படமும் பெண்களினுடை ய புதிய சிந்தனையை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. வேண்டாம் என்றால் வேண்டாம் என்பதனை தெளிவாகச் சொல்லும் இத்திரைப்படம் தமிழில, நோ என்றால் நோ என்று அஜித் பேசி நடித்த "நேர்கொண்ட பார்வை" எனும் திரைப்படமாக வந்ததை நினைவுபடுத்துகின்றது.https://www.youtube.com/watch?v=TgADDuR1R68

இப்படி பெண்கள் எவ்வாறு சூழலில் சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள், அந்த பெண்களை மையப்படுத்திய படங்கள் பெண்களை முன்னிலை நிறுத்திய படங்கள் என்று பட்டியலிட்டு 18 படங்களை நமக்குத் தந்து அவற்றை தேடிப் பார்க்க வைத்திருக்கின்றார்.

திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல அவற்றின் மூலம் கருத்துக்களை வெளிக் கொண்டு வர முடியும். அந்தக் கருத்துக்களை கடத்த வேண்டிய பொறுப்பு இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இருக்கிறது. வாழ்வினுடைய நுண்ணிய பக்கங்களை, பன்முகத் திறமைகளை திரையில் காட்டிய படங்கள் வெகு குறைவு. அவற்றை காட்டுகின்ற நிலை வரவேண்டும் என்பது இந்த தொகுப்பினை வாசிக்கும் பொழுது நமக்கு தோன்றுகிறது. அந்தச் சிந்தனை இயக்குனர்களுக்கும் தோன்ற வேண்டும். புதிய புதிய இயக்குனர்கள் இதனை கருத்தில் கொண்டு படைப்புகளை கொண்டு வர வேண்டும்.
படம் பார்த்தோமா, அதைப் பற்றி சில பேரிடம் பேசினோமா என்றில்லாமல் உணர்ந்தவற்றை உணர்வுபூர்வமாக கடத்திடுவது என்பது எல்லோருக்கும் எளிதில் வாய்க்காது. எப்படி உள்வாங்கி இருந்தால் ஒரு திரைப்படத்தை கட்டுரையாக கொண்டுவர முடியும் என்பதனை இந்த கட்டுரைத் தொகுப்பு விளக்குகிறது.
தற்போதைய திரைப்படச் சூழல் ஆரோக்கியமானதாக இல்லை என்பதனை சுட்டும் இந்த கட்டுரை தொகுப்பு ஒரு புரட்சியினை வேண்டி திரையுலகம் காத்திருக்கிறது என்பதனை சுட்டுவதாக அமைகிறது. மாற்றங்கள் நிகழ வேண்டும். காத்திருப்போம்.
Dhanalakshmi Dhanalakshmi, Bala Murugan and 20 others
22 comments
1 share
Like
Comment
Share

0 Comments:

Post a Comment