சலனச் சித்திரங்களில் சமூகம்
திரைப்படங்களில் மதிப்பாய்வு
ஒரு வருடமாக rough copy யை வைத்துக் கொண்டு சோம்பலில் இருந்த என்னை ஒரு புத்தகம் என்ற ஆசைக்குள் நடத்தினது தோழி Kala Sriranjan . ஆனால் அதை ஒரு புத்தகமாக மாற்ற நம்பிக்கை தந்தது நண்பர் Madhiyalagan Subbaiah மதிப்புரை தான்.
####№#############@#######
சலனச் சித்திரங்களில் வண்ணக் கிளைகள்
நல்ல, உணர்வுப்பூர்வமான விமர்சனம் என்பது எப்பொழுதுமே ஆகச் சிறந்த வியப்பாக இருக்கிறது- என்கிறார் பிரபல எழுத்தாளர் ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ். கலைப்படைப்புகள் எதுவாயினும் மதிப்புரைகளும் விமர்சனங்களுமே அவற்றிற்கு முகவரிகளாக இருக்கின்றன. படைப்பை அறிமுகப்படுத்துவது, படைப்பு குறித்த நேர்மையான கருத்தாகவே ,ருக்கிறது.
ஜோஸபின் பாபா அவர்களின் இந்நூலில், திரைப்படைப்புகள் குறித்த மதிப்பீடுகளும், பார்வைகளும், விமர்சனங்களும், ஆழமான புரிதல்களும், அவசியப்படுகையில் பாராட்டுகளும் என பலப்பல விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். படைப்புகளின் அறிமுகங்களைத் தாண்டி, அதன் கருத்துகள் குறித்த பல்நோக்குப் பார்வையும் கூர்மையான விமர்சனமும் பதிவாகி உள்ளது.
இந்நூலில் ஜோஸ்பின் அவர்கள் நாம் கண்டு கடந்த பல திரைப்படங்கள் குறித்து, மிக நேர்மையாக மற்றும் நுணுக்கமாக கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். தமிழ், மலையாளம் மற்றும் வங்காளத் திரைப்படங்கள் என முக்கியமான திரைப்படங்கள் குறித்துப் பதிவு செய்திருக்கிறார்.
திரைப்பட விமர்சனங்களைப் பதிவதாகச் சொல்லி கதையை நீட்டி முழக்கிச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், இறுதியாக சில தொழில்நுட்ப விஷயங்கள் குறித்த ஒற்றைவரிக் கருத்தோடு முடித்தும் கொள்வார்கள். ஆனால் இந்நூலில் ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் இதுவரை காணாத ஒரு கோணத்திலிருந்து கண்டு பதிவாகியிருப்பது மிகப் புதுமை. இது மாறுபட்ட திரைப்பார்வை என்று உறுதியாகச் சொல்லலாம்.
இந்நூலில் பதிவாகியிருக்கும் ஒவ்வொரு கட்டுரை குறித்தும் சிலாகித்துச் சொல்ல நிறைய உண்டு. ” அட ஆமால்ல” என்று வியப்புக்குள்ளாக்கும்படியான கருத்துகளும் நிரம்பியே கிடக்கின்றன.
குறிப்பாக ‘96’ திரைப்படம் குறித்தப் பதிவின் நேர்மைக்குப் பாராட்டலாம். ’பரியேறும் பெருமாள்’ திரைப்படம் குறித்து ஒரேமாதிரியான கருத்துகள் பதிவாகி அயர்வைத் தந்த நிலையில் ஜோஸ்பின் அவர்களின் கருத்து மாற்றுக் கருத்தாக மட்டுமல்ல, நேர்மையான பார்வையாகும் இருக்கிறது. பெரிதும் எழுதிச் சலித்த திரைப்படமான ‘அவள் அப்படித்தான்’ குறித்தும் புதிதாகச் சொல்ல ஜோஸபின் அவர்களிடம் சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இதில் நான் பார்க்காத சில படங்களும் உண்டு. ஆனால் அப்படங்கள் குறித்தப் பதிவை வாசிக்கும் போது படத்தைப் பற்றி அறிமுகத்தைத் தாண்டி புரிந்து கொள்ள முடிந்தது.
சமீபத்தில் மலையாளத் திரைப்படங்கள் குறித்துப் பேசுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்நூலில் மலையாளத் திரைப்படங்கள் குறித்தப் பதிவுக்காய் தேர்வு செய்திருக்கும் படங்கள் மிக முக்கியமானவைகள். மலையாளத் திரைப்படங்கள் மீது ’மாற்றான் தோட்டத்து மல்லிகை’ என்ற போற்றல் எண்ணத்துடன் இல்லாமல் நேர்மையாக பதிவு செய்திருக்கிறார். ‘ஜல்லிக்கட்டு’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’ என்று சமீபத்திய திரைப்படங்கள் குறித்த கருத்துப் பதிவு செரிவு. மேலும் ’மதில்கள்’ போன்ற திரைப்படங்கள் குறித்தப் பதிவு மிகவும் முக்கியமானதாகும்.
இந்திய திரைப்பட மேதை சத்தியஜித் ரே அவர்களின் படங்கள் குறித்தப் பதிவுகள் மிகச் சிறப்பாக உள்ளன. சத்தியஜித் ரே அவர்களின் திரைப்படங்கள் குறித்து எண்ணற்ற ஆய்வுகள் பதிவாகியுள்ள நிலையில் ஜோஸ்பின் அவர்களின் பார்வை கவனிக்கப்படாத சில பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
இப்படி குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டே போகலாம் தான்; ஆனால் உள்ளேயிருக்கும் கட்டுரைகளின் சிறப்புகளை இங்கே சொல்லிவிட சுவராஸ்யம் குறைந்து போகக் கூடும் என்ற ஐயம் காரணமாக அடக்கிக் கொள்ளலாம்.
திரைப்படக் காட்சிகளில் வெளிப்பட்டதாகச் சொல்லி குறியீடுகளுக்கு பல அர்த்தங்களை சகட்டு மேனிக்கு எழுதிக் குவிக்கும் சூழலில் ஒட்டுமொத்தமாக ஒரு படைப்பு வெளிப்படுத்தும் கருத்து இதுதான் என்று சாராம்சம் சொல்லும் நல்ல நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் கட்டுரையாசியர்.
வாசிக்க இயல்பான ஒரு மொழி ஜோஸ்பின் அவர்களுக்கு கைவந்திருக்கிறது. கருத்துகளை எப்படித் தெளிவாகச் சொல்லியிருக்கிறாரோ அப்படித்தான் மொழியும் எளிமையாக அதே நேரம் செரிவாக உள்ளது. ஒரு மூச்சில் வாசித்துக் கடக்கச் செய்யும் இயல்பைக் கொண்டுள்ளது.
சிறப்பான இந்தத் தொகுப்புக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து இப்படியான பதிவுகளை நூலாக்கித் தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளலாம்.
வாழ்த்துக்களுடன்,
மதியழகன் சுப்பையா,
திரைப்பட இயக்குனர்
0 Comments:
Post a Comment