22 Jun 2020

சுபி அக்கா மல்லிகைச் செடி


நேற்று, சுபி அக்கா அனுப்பி தந்தார்கள் ஒரு மல்லிகைச்செடி படத்தை. பின்பு உற்சாகமாகி விட்டேன். செடியை கண்ட மகிழ்ச்சியில் நடை போனேன் , என் கல்லூரித் தோழியை கண்டேன், மகிழ்ச்சியாக துங்க போனேன்
இந்தச் செடிககும் எனக்குமான தொடர்பு 22 வருட கால பழக்கம். பூப்போன்ற மனதுடன் புதுப் பெண்ணாக, மனமெல்லாம் ஆசையுடன் மாமியார் வீடு புகுந்த காலம்.
நினைத்தது போல என்னை காத்துக் கிடக்கவில்லை மாமியார் வீட்டு வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள், விசர்கள்.... ஆனால் என்னை ஒவ்வொரு நாளும் புத்துணர்வாக வைத்தது இந்த மல்லிகைச் செடி தான்.
அது ஒரு காடு,கொடும் வனம். பல மாதங்கள் மழை, பனி தான். யார் நட்டு வைத்த மல்லிகையோ வீட்டு வேலியாக இந்த மல்லியை மூங்கில் கம்புகளால் கட்டி, நல்ல பலமான செடி வேலியாக வைத்திருந்தனர்.
பல மாதங்கள் பூக்கும். அதன் வாசனை ஆகா .....மறக்கவே ஏலாது. வசந்தகாலம் என எழுதிவைத்தது போல் ஊரே பூக்களை பார்த்து பார்த்து போகும்படி இருந்தது..
எனக்கு செடியில் பூவைப் பார்க்கதான் ஆசை. ஆனால் சில எளிய பெண்கள் வந்து "இந்த அம்மாவிற்கு பூக்கள் பிடிக்காது " எனக்கூறி பறித்து செல்வார்கள்.
யாராரோ பறித்து செல்கிறார்களே என்ற ஆதங்கத்தில், நானும் பறித்து பூக் கட்டினாலும்,ஒழுங்காக பூ கட்ட தெரியாததால் பூ நழுவி கீழை விழும் . வாழை நாரு வைத்து, துணி நூல் வைத்தும் கட்டிப்பார்த்தாச்சு. பூவைப் பறித்து ஊசி நூலால் கொருத்தாலும் ஐய்யோ.... அதன் காம்பு என்ன வேதனைப்பட்டிருக்கும் என அதையும் விட்டு விட்டேன்.
அதன் பின் வட்டப்பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, பூக்களை அதில் மெதக்கவிட்டு அழகு பார்த்துக்கொண்டு இருந்தேன்.
காலவும் ஓடினது. அந்த ஊரை விட்டு வெளியேற முடிவெடுத்தோம். இயற்கை, மலை, மழை , அருவிகள், என ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த ஊரை விட்டு விரட்டியது உலக மயமாக்கல். 2002 தூத்துக்குடி வந்து சேர்ந்தோம். பனியில் இருந்து தீயில் போட்டது மாதிரி ஆகி விட்டது அடுத்த வாழ்க்கை.
350 கிலோ மீட்டர் பயணித்து தெரியாத ஊர் வந்து சேர்ந்த போது மகனுடன் எடுத்து வந்தது இந்த மல்லிகைச்செடியையும் தான்.
பின்பு 8 வருடத்தில் 12 வாடகை வீடு மாறியிருப்போம். சில வீடுகளில் உப்பு தண்ணீர், சில வீடுகளில் செடி வைக்க இடமில்லை, சில வீடுகளில் செடி வைக்க அனுமதி இல்லை. இருந்தும் இந்தச் செடியும் எங்களுடனே பயணித்தது.
சொந்த வீடு வந்த பின்பு அதற்கும் நிலையான ஒரு இடம் கிடைத்தது. வீட்டுப்பிராணிகள் போன்றே செடிக்கும், அதை வளர்க்கும் மனிதர்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு . சில வருடங்களாக நான் செடியை கவனிக்கவில்லை. பின்பு மறுபடியும் இணைந்துள்ளோம்.
சுபி அக்கா என்னிடம் பெற்றுக் கொள்ளும் ஒரே பொருள் செடி மட்டுமே. அப்படித்தான் இந்த செடியில் இரு கம்புகளை வெட்டி கொடுத்திருந்தேன். 7500 கி.மீ பயணம் செய்து லண்டனை அடைந்தது.
இந்த வெயில் பழகின செடி லண்டனில் வளருமா , பூக்குமா என பல அச்சப்பாடுகள் இருந்தாலும்; அக்கா பூவில்லாத செடியை கூட தனது அன்பால் பூக்க வைத்து விடுவார்கள்.
நேற்று முதல் பூவுடன் செடியின் படத்தை அனுப்பியிருந்தார்கள்.
அக்கா கை பட்டதும் செடி அதன் அழகிலும், நளினத்திலும் பூத்து நிற்பதை கண்டதும் மகிழ்ச்சிக்கு மட்டில்லை.
என் உலகம், பூக்களால் , இலைகளால் நிரம்ப ஆசைப்பட்ட உலகம்.
அக்காவை பற்றி கூறினால் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த கொரோனாக் காலத்தில் , எங்கள் இருவருக்கும் விடுமுறை என்பதால் வாரம் ஒரு முறை கதைக்க இயல்கிறது.
செடிகளை பற்றி,செடி வளர்ப்பை பற்றிக்கதைக்கிறோம். அக்காவின் ரோஜா பூந்தோட்டம் முன் ஊட்டி, மைசூர் ரோஜா தோட்டங்கள் அருகே வர இயலாது. "அக்கா, நீங்கள் இலை இல்லா பூக்களுக்காக என்ன மேஜிக் செய்கிறீர்கள் என்பேன்.
ஒவ்வொரு காலசூழலுக்கு இணங்க செடிகளை இடம் மாறி வைப்பது , செடிகளை வெட்டிக்கவனிப்பது, அக்காவை மாதிரி யாராலும் நேசிக்க இயலாது.
தமிழகம் வந்தாலும் நாங்கள் விரும்பிச்செல்லும் இடம் பூந்தோட்டங்களும் தான்.
அக்கா வீட்டில் பூத்த மல்லியை நினைத்து பூரித்து பூரித்து இன்னும் நிறைய எழுதலாம். செடி தரும் மகிழ்ச்சி அதிவல்லது‌.
Naren K Narendran, Gladwin Moses and 80 others
22 comments
1 share
Like
Comment
Share

0 Comments:

Post a Comment