11 Jun 2020

சில்லுக்கருப்பட்டி

சில்லுக்கருப்பட்டி , ஒரு நல்ல தமிழ் திரைப்படத்தை பார்த்த திருப்தி தந்த  படம் இது.  நான்கு கதைகள் கொண்டது சில்லுக்கருப்பட்டி.  முதல் கதை பதின்ம வயது குழந்தைகளில் உருவாகும் அன்பிற்கும் காதலுக்கும் இடையிலான, நட்பும் காதலுமல்லாத ஒரு வித நேச உணர்வை கொண்டாடிய கதை.  இயல்பாக கதையை முடித்து இருந்தனர்.

அடுத்த கதை கேன்சர் நோயாளியான இளைஞனிடம் கொள்ளும் நட்பு, பின்பு அது அழகான காதல்  அடுத்த நிலையில் உறவாகவும் தொடர்கிறது.  ஒருத்தியின் உண்மையான எதிர்பாரா அன்பு, ஒருவனுக்கு தன் இருப்பிற்கான நம்பிக்கையை ஊட்டிய சூழலை எடுத்துக்கூறிய விதம் அருமை.

அடுத்து வயதான இரு நபர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கிறார்கள். இரு வயதான கதாப்பாத்திரங்களை அழகாக வடிவமைத்துள்ளனர். இது போன்ற ஆரோக்கியமான சிந்தனைகள், நமது தமிழ் சமூகத்திற்கு தரும் நம்பிக்கை கொஞ்சநஞ்சமல்ல.  வயோதிகர்களான இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுப்பதுடன் அடுத்த கதைக்குள் நகர்கிறோம்.

இக்கதையில் மத்திய வயது தம்பதிகளினுள் இருக்க வேண்டிய அன்பையும் கருதலையும் , திருமணம் என்பதின் முழுமையான புரிதல் அதன் எல்லா பரிமாணங்கள் பற்றியும் சொல்லியுள்ளது .   மூன்று குழந்தைகளின் பெற்றோர்கள்,  பல வருடம் ஒன்றாகவே ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்பதால் நல்ல தம்பதிகளாக இருப்பது இல்லை என்று கூறிய கதை. ஒருவர் தனது இணையை அதே நிறை குறையுடன் ஏற்றுக்கொள்ளுதல்,  கணவன் மனைக்குள் இருக்க வேண்டிய அன்னியோன்னியம், அவர்களுக்குள் இருக்க வேண்டிய காதல், உரையாடல்கள், எப்படியான உறவு பேண வேண்டும் என குறிப்பிட்ட கதை.

மனிதர்களின்  அதி நுண் உணர்வுகளையும், அதன் அடிநாதமாக இருக்க வேண்டிய அன்பும், காதலும், பரிவும் பற்றி இயல்பாக சொன்ன கதைகள்.  பிரசார நெடி  இல்லாது,  அது அதுவாக, ஒரு தெளிந்த அருவி போன்று சொல்லப்பட்ட கதைகள்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், எடிட்டிங் என நான்கு துறையையும் கையாண்டது  ஹலிதா ஷமீம் என்ற பெண் இயக்குனர்;   இணை இயக்குனராக புஷ்கர் காயத்திரி கூட்டணியுடனும் மிஷ்கினுடனும் பணியாற்றியவர்.   29 வயதான ஹலீதாகொடைக்கனாலில் பிறந்து வளர்ந்தவர்.  திரைத்துறையில் இணை இயக்குனராக பணி செய்து வந்திருந்தவர். இது இவருடைய இரண்டாவது திரைப்படம்.   தனது கல்லூரிப்படிப்பை சென்னை எஸ் ஆர் எம் கல்லுரியில் முடித்துள்ளார்.  இத்திரைப்படத்தை டிவைன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருந்தார்.  2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா வெளியிட்டார்.

ஒரு சிற்பி சிற்பத்தை செதுக்கியது போல திரைக்கதையை கச்சிதமாக எழுதி முடித்துள்ளார்.

நடிகர்கள் தேர்வு மிகவும் அபாரம்.   சமுத்திர கனியிலிருந்து, சுனைனா, மணிகண்டன், புது முகம் நிவேதிதா சதீஷ், நடன ஆசிரியரும் பல முக்கியமான சமூக நிறுவனங்களில் செயல்புரிந்துள்ள லீலா சாம்சன்,  சாரா அர்ஜுன், ராகுல் என எல்லோரும்  போட்டி போட்டு நடித்துள்ளனர்.

பல வருடங்களுக்கு பின்பு தமிழ் சாயல் கறுப்பு நிறத்துடன் கிடைத்த தமிழ் முகம் நிவேதிதா சதீஷ் படத்தின் சிறப்பு.  பிரதீப் குமாரின் பின்னணி இசை படத்தின் அழகை கூட்டியுள்ளது. ஒளிப்பதிவு ஆறு பெயர் அடங்கிய குழு. சிறப்பான திரைப்படம்.   நல்ல வசூலுடன் வெற்றி வாகை சூடிய திரைப்படம்.   சில்லுக்கருப்பட்டி நமது மண்ணின் மணமுள்ள, இதமான உணர்வை தந்த   சிறந்த தமிழ்ப்படம்.

டொரண்டோவில் நடைபெறும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.  சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படத்துக்கான 2-வது பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

 

 

1 comment:

  1. நல்ல விமர்சனம் நானும் படம் பார்த்திறுக்கிரேன். தரமான படம்.

    ReplyDelete