10 Jun 2020

திரைப்படம் 'மதிலுகள்'!


தமிழில் பொருட்படுத்த வேண்டியது சுவர்கள்!
இது ஒரு சுயபுராண கதை. புகழ்பெற்ற கேரளா எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரால் 1967 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு குறும் நாவலிது.
1989 ல் மலையாள திரை உலக ஜாம்பவான் அடூர் கோபாலகிருஷ்ணன் திரைக்கதை , இயக்கத்தில் வெளிவந்து பல விருதுகளை பெற்று தந்த திரைப்படம் ' மதிலுகள்'.
நடிப்பிற்கு மம்மூட்டிக்கும் இயக்கத்திற்கு அடூர் கோபாலகிருஷ்ணனுக்கும் தேசிய விருது பெற்று தந்தது. இதில் மறைந்த முரளி, ஸ்ரீ காந்து, திலகன் போன்ற திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர்.
1990ல் வெனீஸ் திரைப்பட திரைவிழாவில் சர்வதேச அளவிற்கு கவனம் கொள்ளப்பட்ட திரைப்படம்.
இசை சில இடங்களில் தேவையற்
ற சோக பாவத்தை தந்தாலும், விஜய பாஸ்கரின் இதமான பின்னணி இசை பல இடங்களில் மிகவும் நுண் உணர்வை வெளிக்கொணர்ந்து, அதன் ஆழமான பொருளை உணர்த்தியது. ஒளிப்பதிவு மங்கல ரவிவர்மன். எடிட்டிங் M. S மணி.
கதைக்குள் போவோம். எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரை ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு திருவனந்தபுரம் ஜெயிலில் அடைக்கப்படுகிறார். ஜெயில் இவருக்கு புதிதல்ல. இருப்பினும் நீளமான சுவரை கண்டு நடந்து வந்து தங்கும் இடைத்தை அடைகிறார். ஜெயில் வார்னுடனான அவருடைய உரையாடல்கள் அவருடைய விசாலமான குணத்தை வெளிப்படுத்துகிறது.
எல்லோரோடும் இன்முகமாக, அமைதியாக பேசும் சுபாவம், எல்லோருக்கும் உதவும் குணம். இடது,வலது என இல்லாது அனைவரிடவும் நட்பு பாராட்டும் மனம் என போகிறது ஜெயில் வாழ்க்கை.
எழுத்தாளர் என்பதால் சிறை நிர்வாகம், வார்டன், சிறை அடுக்களையில் இருந்தும் சிறப்பு அன்பை பெறுகிறார்.
ஒரு மனிதனை தூக்கிலிடப் போகயில் அவருக்கான கட்டன்( பாலில்லா) தேனீர் தயார் செய்து கொடுக்கிறார். மரணததில் இரண்டே விடயம் தான் ஒன்று அழுது கொண்டு சாவது இன்னொன்று சிரித்து கொண்டு தைரியமாக சாவது. தூக்கிலிடப்போகும் மனிதரிடம் தைரியமாக மரணத்தை எதிர் கொள்ள சொல்லுங்கள் எனக்கூறி தன்னிடம் இருக்கும் பீடியை கொடுக்கும் பேரன்பு.
அங்குள்ள ஒவ்வொருவருடனும் கொலைக்குற்றவாளியோ திருட்டு குற்றவாளியோ யாராகினும் கரிசனையாக நோக்குகிறார், பழகுகிறார்.
அங்கு வைத்து தான் தன்னுடைய பள்ளி தோழனை சந்திக்கிறார். சிறைச்சாலையில் ஜெயிலரை அடித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அநியாயமாக தண்டனை காலங்களை அதிகப்படுத்தி, கொடூர நிலையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
பஷீருக்கு எதிலும் எந்த எதிர்ப்பும் இல்லை, தனக்கு கிடைப்பதை உண்டு அங்குள்ள சிறைவாசிகளிடம் கதைத்து கொண்டு , சிலரை அவதானித்து , ஆறுதல் பகிர்ந்து நாட்கள் கடருகிறது. அவர் வசிக்கும் இடத்தை சுற்றி ரோஜா பூந்தோட்டமாக மாற்றுகிறார்.
இப்படி இருக்க அரசியல் கைதிகளை எல்லாம் விடுவிக்கிறது அரசு. மகிழ்ச்சியாக எல்லோரிடவும் விடை பெற்று வெளியேற காத்திருக்கும் வேளையில், இவர் பெயர் மட்டும் லிஸ்டில் இல்லை என்பது பெரும் ஏமாற்றமாக மாறுகிறது.
நண்பர்கள் எல்லோரும் போகயில், தனிமைப்பட்டு , சோர்ந்து, ஜெயிலில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது வரை திட்டம் இடும் மனநிலை கொண்டு கடும் மன அழுத்தற்கு உள்ளாகிறார்.
பின்பு காய்கறி தோட்டம் அமைக்கும் வேலையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு குருவி , அணில் போன்றவற்றோடு கதைத்து கொண்டு, தன் தனிமையை போக்கி வருகையில் சுவருக்கு அந்த பக்கம் இருந்து ஒரு பெண் குரல் எதிர்பாராவிதமாக வருகிறது, அந்த பெண் இவரிடம் ரோஜா செடி கேட்க, இவர் ரோஜா செடியை பூக்களுடன் கொடுக்க, அங்கு காதல் பற்றி கொள்ள ஆரம்பிக்கிறது.
ஒரு காய்ந்த குச்சியை மேல் நோக்கி எறியுவேன் உங்கள் சுவர் பக்கம். நான் இங்கு இருக்கிறேன் என்ற அடையாளம் , கதைக்க வரவேண்டும் என பணிகிறது பெண் குரல்.
வாழ்க்கையே பிடிக்கவில்லை , சோர்வாக உள்ளது, கவலையாக உள்ளது என சொல்லிக் கொண்டிருந்த பஷீர், இந்த காய்ந்த குச்சி எப்போது வருமென சுவரையே பார்த்து கொண்டு இருக்க ஆரம்பிக்கிறார். குச்சியை கண்டதும் ஆயிரம் பூக்கள் பூக்கிறது, நெஞ்செல்லாம் பனி பொழிகிறது, இப்படியாக காதல் மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறார்.
அந்த பெண்ணிடம் கதைப்பது , இவருக்கு கிடைத்த முட்டை, மீன் போன்றவற்றை அந்த பெண்ணுக்கு கொடுக்க, அப்பெண் நொறுக்கு தீனிகளை இவருக்கு கொடுக்க முகம் அறியா அக்காதல் , ஒலியினூடாக சுவாரசியமாக, உற்சாகமாக காதல் முன்னேறிக் கொண்டு இருக்கிறது.
இப்போது தனிமையும் இல்லை. ஜெயில் விட்டு புறம் உலகம் போகக்கூட விரும்பவில்லை.
சில உரையாடல்கள் மிகவும் சுவாரசியம்.
ஆண்: உன் வயது என்ன?
பெண் : உன் கண் எப்படி இருக்கும்.
பெண்: நீ என்னை மட்டும் தானே காதலிப்பாய்?
அழுகையாக வருது...
ஆண் : இப்போது கதை; அழாதே, இரவு அழுது கொள்
பெண் : நான் முதலில் சாக வேண்டும்
ஆண்: மரணம் யார் கையிலென்று சொல்ல ஏலாது...
இப்படி நாட்கள் நகர ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ள செவ்வாய்க்கிழமை அன்று வியாழன் அன்று சந்திக்கலாம் என முடிவு எடுக்கின்றனர். புதன்கிழமை பஷீருக்கு ஜெயில் விடுதலை கிடைக்கிறது.
பெண்ணின் காதல் அந்தரத்தில் அல்லல்ப்படுவதை , ஒரு காய்ந்த குச்சி மேல் வருவதும் , விழுவதும், எழுவதுமாக காட்சிப்படுத்தியுள்ளார் அடூர், மிக அழகியலான திரை மொழியில்.
அவர்கள் சந்தித்து கொள்ளவே இல்லை. காணாது தொடாது காதலித்து, காணாதே கரைந்து காதல் செத்து
போனதால் இந்த காதல் கதை; சாகாவரம் பெற்று ,புத்தகம், நாடகம், சினிமா சிற்பம் என மக்கள் மனதில் மாறாது, மறையாது, பஷீரையும் இன்றும் நினைக்க வைத்து கொண்டே இந்த கதை வாழ்கிறது.
யாருக்கு வேண்டும் சுதந்திரம். என்ற டயலோக் உடன் கதை முடிகிறது.
ஜெயில் உள்ளில் வாழ்ந்த உண்மையான சுதந்திர வாழ்க்கை, ஜெயிலுக்கு வெளியில் இனி இருக்க போவதில்லை. நடித்துக் கொண்டு சுதந்திரமற்று வாழப்போவதை நினைவுப்படுத்தும் உரையாடல். அந்த பெண்ணை சந்திக்கும் எல்லா வாய்ப்பு இருந்தும் அந்த ஆண் சந்திக்க மாட்டார்.
ஒருவேளை சந்தித்து இவர்கள் கல்யாணம் செய்து குட்டிகள் பெற்று வாழ்ந்திருந்தால் இது சாதாரண கதையாக முடிந்திருக்கும்.
பார்க்காதே காதலின் உச்சத்தை தொட்டு ,காதலை தொலைத்த, காதலை கொன்ற காதல்கள் தான் என்றும் சாகாவரம் பெற்றவை.
இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும், உரையாடல்களும் , ஏதோ ஒன்றை வெளிப்படுத்தும். படம் பார்த்து முடிக்கையில் ஏதோ ஒரு திருப்தி. காதல் தோல்வியிலும் ஒரு சுகமான அனுபவம் பெறுவதை காட்சியூடாக உணரலாம். அதுவே அடூர் கோபால கிருஷ்ணன் என்ற இயக்குனரின் வெற்றியும்.
இப்போதும் பஷீர் மேல் வெறுப்பு வராது, அன்பு மட்டுமே பெருகும். கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கும் அழகும் அதுவே......மிகவும் எளிமையான இயல்பான காதல் கதை.
இந்த சிற்பம் பாலக்காட்டு சுல்தான் கோட்டையில் சிற்பி M.J இனாசால் செதுக்கி வைத்துள்ளனர். கதைகளுக்கு கலை உருவங்கள் மாறலாம் கலை கலையாகவே நிலை நிற்கிறது.

1 comment:

  1. நல்ல கதை. உயர்ந்த காதல்.

    ReplyDelete