பிள்ளைகள் வளர்ந்து விட்ட நிலையில் எதிர்வீட்டுகளில் 48 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்த முதியவர்கள் சந்திக்கின்றனர். ஒன்றாக வசிக்கலாமே என்ற விருப்பத்தை தெரிவிக்கிறார் முதிர் பெண்மணி ஜேன் லூயிசிடம்.
ஒரு மகளுக்கு தகப்பனான லூயிஸ், மனைவியை இழந்தவர். அவருடைய வயது ஒத்த நண்பர்களுடன் சந்திப்பு, சாயா குடிப்பது, கதைப்பது என காலத்தை தள்ளுகிறவர்.
ஜேன் அழைப்பு விடுத்ததும் , அதிர்ச்சியானவர், அவசரம் கொள்ளவில்லை ஆலோசித்து பதில் சொல்கிறேன் என்கிறார்.
அவர்கள் சந்திப்பு நட்பாகி காதல் கொண்டு, சேர்ந்து உலகறிய வாழலாம் என முடிவெடுக்குகையில், ஜேனின் மகன் தன் மகனை பார்க்க வேண்டிய பொறுப்பை தாயாரிடம் கொடுக்கிறார்.
சிறுவன் மனிதர்களிடமே பேச விரும்பாத மனநிலையில் கைபேசி விளையாட்டில், எப்போதும் கைபேசியுடனே காலத்தை கழிக்க பழக்கப்பட்டவன்.
தன் அப்பா வழி பாட்டியுடன் தங்க விருப்பமில்லாது ஆனால் வேறு வழியற்று பாட்டி வீட்டில் தங்கி இருக்க முடிவெடுக்கிறான்.
பின்பு சிறுவனுடன் விளையாடுவது,சிறுவனை பயணம் அழைத்து போகுவது என லூயிஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்கிறது. சிறுவனுக்கும் லூயிசை பிடித்து போக சிறுவன் கைபேசியை தானாக தவிர்த்து, லூயிஸ் நட்பில் மகிழ்ந்து படம் வரைய கற்கிறான், லூயிசுடன் பயணிக்கிறான் லூயிஸ் பரிந்துரையில் ஒரு நாயை வளர்க்க ஆரம்பிக்கிறான்.
இப்படியாக இருக்கையில் ஜேனின் மகன் வந்து சேர்கிறான்.
தாயின் புது உறவில் மகனுக்கு விருப்பவும் இல்லை. அதிலுள்ள பல பிரச்சினைகளை சொல்கிறார். லூயிசை பற்றிய எதிர்மறை எண்ணங்கள், தன் தாயார் லூயிசுடன் பழகுவதை ஏற்று கொள்ள தடுக்கிறது.
தனது மனைவி பிரிந்து போய் விட்ட நிலையில், தன் மகனை வளர்ப்பதற்கு தாயின் உதவியை நாடுவதுடன், தன்னுடன் தங்க கேட்கிறான்.
அவருக்கோ மலர்ந்த காதலை விட்டு போக மனம் வராவிடிலும் தன் தனிப்பட்ட விருப்பத்தை விட தாய்மையின் கடமையில் உந்தப்பட்டவராக பேரனுக்காக தன் வீட்டை விற்று விட்டு, லூயிசை பிரிந்து, மகன் ஊரில் குடிபெயர்கிறார்.
லூயிஸ் பழைய படி தன் தனிமை உலகில்,தானே சமைத்து, தானே உண்டு ஆனால் இளமையில் விட்டுப்போன படம் வரைதலை மறுபடியும் துவங்குகிறார்.
ஒரு பெண்ணுடன் நேசம் கொள்ளுதல் என்பது அவளை சொந்தமாக்குவது அல்ல, அவள் மகிழ்ச்சியில், துன்பத்தில், பிரச்சினையிலும் பங்கு பெறுதல் என்ற புரிதலில் ஜேன் எடுத்த முடிவை ஏற்று கொள்கிறார் லூயிஸ்.
இருவரும் இடத்தால் விலகியிருந்தாலும் மனதால் பிரியாத நிலையில் தங்கள் நட்பை கைபேசி ஊடாக தொடர முடிவு செய்வதுடன் கதை முடிகிறது.
ஆண் பெண் உறவிலுள்ள நட்பும், அன்பும் புரிதலும் அழகாக படமாக்கிய திரைப்படம்.
இரு மனிதர்கள் உறவில்; புரிதல், தங்கள் குறை நிறைகளையும் பகிர்ந்து கொள்ளுதல், ஒன்றாக உணவு அருந்துதல், பயணம் செய்தல், கதைப்புதலும் உள்ளடங்கியுள்ளது என இரு மனிதர்களின் உறவை அழகாக சொல்லிய திரைப்படம்.
கலாச்சாரம் என்ற பெயரில் தனிநபர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது, குற்றப்படுத்துவது, அதிகாரம் செலுத்துவது என எதையும் கதைக்குள் முன்னிலைப்படுத்தாது இரு மனிதர்களின் அழகான இயல்பான உறவிலுள்ள சுதந்திரத்தின் தேவையை எடுத்து சென்ற விதம் அருமை.
முக்கிய கதாப்பாத்திரங்கள் இருவரும் 50 வருடங்களுக்கு பின் மறுபடியும் நடித்து உள்ளனர்.
ஜேன் லூயிசை மறந்து விட்டாரோ என வருத்தம் கொள்கையில் இரு மனிதர்களின் அன்பு என்பது அடுத்து இருப்பது மட்டுமல்ல நெடு தூரத்தில் இருந்தாலும் மனதால் சேர்ந்திருப்பது என்ற கருத்தாக்கத்தில் அவர்கள் மறுபடியும் கைபேசியூடாக கதை பேச ஆரம்பிக்கையில் திரைப்படத்தை முடித்துள்ளனர்..
கென்ட் ஹாரப்ஃன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
அமெரிக்கன் முன்னாள் அதிபர் கிளிண்டன் முகச்சாயலுள்ள ரோபட் ரெட்போர்ட் நடிப்பு அபாரம். அவருக்கு போட்டியாக போஃண்டாவின் நடிப்பு அதிலும் சிறப்பு.
ஒவ்வொரு சட்டத்திற்கும், காட்சிக்கும் கொடுத்துள்ள ஆழவும் ( deep) மெனக்கெடலும் (treatment) அருமை.
இயக்குனர் பட்ராவின் கற்பனையும் அதை காட்சியாக வடித்த அவருடைய திறமையையும் பாராட்ட வேண்டும்.
காட்சியல் அழகியலுக்கும் முக்கியவத்துவம் கொடுத்த ரசனையான திரைப்படம்.
2018 ல். சிறந்த காதல் படத்திற்கான கோல்டன் ட்ரெயிலர் விருது பெறப்பட்டுள்ளது.
முதியவர்கள் வாழ்க்கையை மையக்கருத்தாக வைத்து முதியவர்களின் மனநிலையை ஆக்கபூர்வாக நம்பிக்கையூட்டும் விதமாக சொல்லியுள்ளதால் நான் விரும்பிய படங்களில் இதையும் சேர்க்க விரும்புகிறேன்.
தமிழகத்தில் திரைப்பட ஆட்கள், முதியவர்கள் என்றாலே இகழ்ச்சி, எள்ளாடல், கொலை உணர்வு துன்புறும் வதைக் கதைகளை தேர்வு செய்யாது; வயதானவர்கள் உணர்வுகளையும் மதிக்கும் இது போன்ற மனிதநேயத்தை குறிக்கும் படங்கள் எடுக்கும் காலம் விரைவில் வரவேண்டும.
0 Comments:
Post a Comment