நாட்டின் உயர்கல்வி அமைப்பே, நாட்டின் உயர்ந்த பொறுப்புகளில் அமரப்போகும் நிர்வாகிகள், கல்வியாளர்கள், நீதிபதிகள், அரசியல்வாதிகள் மற்றும் சமூகத் தலைவர்களை உருவாக்கும் அடித்தளமாக உள்ளது. அந்த அமைப்பின் மையத்தில் இருப்பவர்கள் பேராசிரியர்கள்.
ஆனால், ஒரு பேராசிரியருக்கு அநீதி நடந்தால், பல கல்வி நிறுவனங்களில் நிலவும் மௌனச் சூழல் வேதனையளிக்கிறது. கூட்டங்களில் “யாருக்காவது கருத்து இருக்கிறதா?” என்று கேட்பார்கள். ஆனால் கருத்து தெரிவித்தால் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக பெரும்பாலோர் அமைதியாக இருப்பார்கள். சுதந்திரமான சிந்தனையும், விமர்சன மனப்பான்மையும் வளர்க்கப்பட வேண்டிய இடங்களில் கூட, மௌனமே பாதுகாப்பான தேர்வாக மாறிவிடுகிறது.
ஒருமுறை, பத்து ஆண்டுகளுக்குள் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பதினாறு நாள் பயிற்சியில் கலந்து கொண்டிருந்தோம். பதினான்காம் நாள் காலை, ஒரு மூத்த பேராசிரியர் மரணமடைந்த செய்தி வந்தது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. “தேவைப்பட்டால் மதிய உணவு நேரத்தில் போய்விட்டு வாருங்கள்” என்றனர். அவசரமாக ஒரு ஆட்டோ பிடித்து சென்று வந்து கடமையை முடித்தோம்.
மற்றொரு நாள், ஒரு பேராசிரியர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பரவியது. ஆனால் யாரும் அதைப் பற்றி பேசவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய திருமணத்தில் கலந்து கொண்டவர்களும், கல்லூரி குடும்ப விழாக்களில் ஒன்றாக இருந்தவர்களும் கூட, எதுவும் தெரியாதது போல நடந்துகொண்டனர். காரணம், அவரைப் பற்றி பேசுவதையே நிர்வாகத்திற்கு எதிரான செயலாகக் கருதும் சூழல். பின்னர் அவரை நேரில் சந்திக்க நேர்ந்தாலும், பலர் வேறு வழியில் செல்வதைத் தேர்ந்தெடுத்தனர்.
ஒரு பெண் ஆசிரியைக்கு திடீரென பணி நீக்கக் கடிதம் வழங்கப்பட்டது. அந்த நாளிலிருந்து பலர் அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டனர். அவருடைய குடும்பம், கல்வி கற்கும் குழந்தைகள், மாதம் கிடைத்த சம்பளத்தை நம்பி வாழ்ந்த வாழ்க்கை, எதுவும் கல்வியறிவு மிக்க சமூகத்தின் கவலையாக மாறவில்லை. அவர் மட்டுமல்ல, அவருடைய குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டது. இருந்தும் பெரும்பாலோர் மௌனமாக இருந்தனர்.
சமூக அக்கறை இல்லாமல், தனிப்பட்ட பாதுகாப்பும் பதவியும் மட்டுமே முக்கியம் என்ற மனநிலையில் வாழும் கல்வியாளர்களால், ஒரு சமூகத்தின் மனசாட்சி, அறம், மனிதநேயம் ஆகியவற்றை பாதுகாக்க முடியுமா?
அப்படி முடியாவிட்டால், அவர்கள் சமூகத்திற்கு எந்த வகையான தலைவர்களை உருவாக்கப் போகிறார்கள்? கல்வி என்பது வெறும் அறிவை வழங்குவது மட்டுமல்ல; நீதியுணர்வு, பொறுப்பு உணர்வு, மனிதநேயம் ஆகியவற்றையும் வளர்க்க வேண்டிய ஒன்று.
முன்பு மாணவர்கள் அநீதியைக் கண்டால் எதிர்த்துப் பேசுவார்கள். இன்று பல இடங்களில் அக்கறையற்ற மௌனம் நிலவுகிறது. தாய்மொழியையும், தங்கள் மண்ணின் அறத்தத்தையும் , சமூகப் பொறுப்புணர்வையும் இழந்த ஒரு தலைமுறையாக மாறிவருகிறது என்ற கவலை எழுகிறது.அதற்கு காரணம் அவர்கள் கண்டு கற்று தெளிவு பெற ஆசிரிய மாதிரிகள் இல்லை.
இப்போது பல கல்வி நிறுவனங்களில் பேசப்படுவது, “யார் அதிக ஊதியம் பெறுகிறார்கள்?”, “யார் எந்தப் பதவியைப் பெறுகிறார்கள்?”, “எப்படி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது?” என்பதுதான். கல்வி உலகமும் படிப்படியாக கார்ப்பரேட் மனநிலைக்குள் தள்ளப்பட்டு வருகிறது.
ஒருகாலத்தில் நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்கத் துணிந்த சில ஆசிரியர்கள் இருந்தனர். பொதுவாக அவர்கள் பணியில் அனுபவம் மிக்கவர்களாகவும், ஓய்வுபெற இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இன்று அந்த எதிர்ப்புக் குரல்களையும் பல நிர்வாகங்கள் மெதுவாக பலவீனப்படுத்தி விட்டன.
ஓய்வூதியமாக மாதம் இரண்டு லட்சம் ரூபாய் பெறும் நிலையிலும், “மீண்டும் வாருங்கள்; முப்பது ஆயிரம் ரூபாய் தருகிறோம்; ஆலோசகராக இருங்கள்” என்றால் பதவிக்காக ஒட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கட்டும், குடும்பத்துடன் வாழ்வை அனுபவிக்கலாம் என்ற மனப்பான்மை குறைந்து வருகிறது.
பணம் வாழ்க்கைக்கு அவசியம். ஆனால் மனிதநேயத்தையும், சுயமரியாதையையும், சமூகப் பொறுப்பையும் விட பணமும் பதவியும் மேலிடத்தைப் பெறும்போது கல்வியின் ஆன்மா சிதையத் தொடங்குகிறது.
பல பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் இன்று போட்டியும் பொறாமையும் அதிகமாகக் காணப்படுகின்றன. “எத்தனை ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளோம்” என்பது பெருமையாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த ஆய்வுகள் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றினவா? சமூகத்திற்கு ஏதேனும் நன்மை செய்தனவா? என்ற கேள்விக்கு பல இடங்களில் தெளிவான பதில் இல்லை.
ஒரு பல்கலைக்கழகத்தை கல்லூரியை அதன் கட்டிடங்களாலும் தரவரிசையாலும் மட்டுமல்ல, அது சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்பாலும் மதிப்பிட வேண்டும். அறிவு உருவாக வேண்டிய இடங்கள், மனிதநேயம் மலர வேண்டிய இடங்கள், சில சமயங்களில் பணமும் பதவியும் மையமாகக் கொண்ட இடங்களாக மாறிவருவது காலத்தின் வேதனையான முரண்பாடாக உள்ளது.
எல்லாம் மாறும்.
கார்ப்பரேட் அதிகாரமும் மாறும்.
பணம் மற்றும் பதவி ஆசை மனிதநேயத்தை மாற்றியிருக்கும் இந்த நிலையும் மாறும்.
மனிதம் மீண்டும் மையமாக வர வேண்டியது அவசியம். அதுவே கல்வியின் உண்மையான வெற்றி.

0 Comments:
Post a Comment