உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் தங்களது மதிப்பை நிர்வாகத்திடம் உயர்த்திக் காட்டுவதற்கான சிறந்த வழி, தங்களது கற்பித்தல் மற்றும் மாணவர் மேம்பாட்டு பணிகளில் சிறந்து விளங்குவதுதான். ஒரு ஆசிரியரின் உண்மையான பெருமை, அவரால் எத்தனை மாணவர்கள் நல்ல வேலைவாய்ப்பு பெறுகின்றனர், எத்தனை மாணவர்கள் ஒழுக்கமான மற்றும் மேம்பட்ட வாழ்க்கை நோக்கிச் செலுத்தப்படுகின்றனர் என்பதில்தான் இருக்க வேண்டும்.
ஆனால் சில கல்வி நிறுவனங்களில், கற்பித்தல் மற்றும் கல்விசார் பங்களிப்புகளை விட மேலிடத்தின் கவனத்தைப் பெறுவதற்கான தனிப்பட்ட முயற்சிகளே முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.
அதிகார மையங்களுக்கு நெருக்கமாக இருப்பதற்காக சிலர் தேவையற்ற புகழ்ச்சிகளிலும், #தனிப்பட்ட உறவுகளை வளர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்துவற்காக பல பல குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றனர். ஆசிரியர்கள் #பிராந்தி விருந்து வரை அமைத்துக் கொடுக்கின்றனர் என்பது கல்வி சூழலில் உள்ள ஒரு அவலமாகும். இத்தகைய பண்பாடு கல்வி நிறுவனங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவாது.
சில இடங்களில், நிர்வாகத்தை அணுகும் நோக்கில் #சக ஆசிரியர்கள் குறித்த வதந்திகள் மற்றும் தேவையற்ற தகவல்களை பரப்பும் போக்கும்
உள்ளன. குறிப்பாக ஆசிரியர்–மாணவர் உறவுகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உருவாக்குவது, கல்விச் சூழலை பாதிப்பதோடு, தனிநபர்களின் தொழில்முறை நற்பெயருக்கும் சேதத்தை ஏற்படுத்துகிறது .
கற்பித்தல் பணியில் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, அறிவு, திறன் மற்றும் மனிதநேய வளர்ச்சியை முன்னெடுக்கும் ஆசிரியர்கள் ஏராளமாக இருந்தாலும், கல்விப் பணிகளை விட நிர்வாக கவனத்தை ஈர்ப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடும் ஆசிரியர்கள் உண்டு. இதில் பெண் ஆசிரியர்கள் சிலர் செய்யும் ஈனச் செயல் சொல்லி மாளாது.
கல்லூரி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களைவிட மாணவர்களின் கூர்மையான கவனிப்புக்கும் விமர்சனங்களுக்கும் உட்படுகின்றனர். அவர்களின் நடத்தையும், வாழ்க்கை முறையும், பேச்சும், பழக்கவழக்கங்களும் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நல்ல முன்னுதாரணமாக இருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையை உயர்த்த முடியும்; அதேபோல் தவறான முன்மாதிரிகளும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
சில ஆசிரியர்கள் பணியிடத்தை தங்களது தனிப்பட்ட புகழ் மற்றும் தங்களை காட்சிப்படுத்தலுக்கான இடமாகக் கருதும் நிலையும் காணப்படுகிறது. அதே நேரத்தில், பெரும்பாலான ஆசிரியர்கள் குடும்பப் பொறுப்புகளையும் தொழில்முறை கடமைகளையும் சமநிலைப்படுத்தி அமைதியாகப் பணியாற்றியும் வருகின்றனர். சிலரின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு முழு ஆசிரியர் சமூகத்தையும் மதிப்பிட முடியாது. ஆனால் முறையற்ற அடிப்படை அறமற்ற ஆசிரியர்கள் பெருகி வருவதை மறுக்க இயலாது.
கல்வி நிறுவனங்களில் மாணவர்களைப் பயன்படுத்தி சக ஆசிரியர்களை ஒடுக்க முயற்சிப்பது, குழு அரசியலை வளர்ப்பது அல்லது மாணவர்களுடன் தேவையற்ற நெருக்கங்களை உருவாக்கி தங்கள் பிடியில் வைத்துக் கொண்டு சக ஆசிரியருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள் கல்வி நெறிமுறைகளுக்கு முரணானவை. மாணவர்கள் கல்விக் காலத்தில் வெளிப்படையாகப் பேசாவிட்டாலும், பின்னர் தங்கள் ஆசிரியர்களின் ஆளுமை மற்றும் நடத்தை குறித்து தெளிவான மதிப்பீடுகளை வைத்து இருப்பார்கள் அதை வெளியில் இகழுச்சியக்க சொல்லவும் செய்வார்கள்.
.
எனவே, பேராசிரியர் என்ற நிலையில் அறிவாற்றலோடு மட்டுமல்லாமல், உயர்ந்த ஆளுமை, தொழில்முறை ஒழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் முன்னுதாரணமான நடத்தை ஆகியவற்றையும் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானதாகும். ஒரு ஆசிரியரின் தாக்கம் வகுப்பறையைத் தாண்டி மாணவர்களின் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது என்பதை கல்விச் சமூகமும் நிர்வாகங்களும் உணர வேண்டும்.

0 Comments:
Post a Comment