19 Jun 2026

உயர்கல்வி வளாகங்களில் பேராசிரியர்களின் #சுதந்திரம் மற்றும் #பாதுகாப்பு


உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களின் மதிப்பு குறைவதற்கான காரணங்களை ஆராயும்போது, ஊதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிர்வாக ஆதிக்கம் மட்டுமல்லாமல், ஆசிரியர்களைக் #கண்காணிக்கும் மற்றும் #கட்டுப்படுத்தும் சில #நடைமுறைகளையும் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பல கல்லூரிகளில் மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்களைப் பற்றிய கருத்து மற்றும் மதிப்பீடுகள் பெறப்படுகின்றன. இதன் நோக்கம் கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், நடைமுறையில் அது எப்போதும் அப்படியே செயல்படுவதில்லை. மாணவர்கள் வழங்கும் மதிப்பீடுகள் பல நேரங்களில் கல்வித் தரத்தின் அடிப்படையில் அல்லாமல், தனிப்பட்ட விருப்பங்கள், கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் அல்லது பிற காரணிகளால் பாதிக்கப்படுகிறது . இதனால் ஆசிரியர்களின் உண்மையான கற்பித்தல் திறனை அளவிட முடியாத சூழல் உருவாகிறது.மேலும் இது போன்ற தரப்படுத்தால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அசுர பலம் கொடுக்கிறது. அவர்கள் ஏற்கனவே வாங்கி வைத்து இருக்கும் அதிகாரம் எந்த நெறியும் இல்லாது எந்த விசாரணையும் இல்லாது ஆசிரியரை மாணவரின் கருத்து என்று பொய் ஆவணத்துடன் வெளியேற்ற இயலும்.

அதேபோல், பல கல்வி நிறுவனங்களில் மாணவர் குறைதீர்ப்பு மையங்கள், புகார் பரிசீலனை அமைப்புகள் மற்றும் ஆலோசனை அமைப்புகள் செயல்படுகின்றன. இவை மாணவர்களின் நலனுக்காக அவசியமானவை என்றாலும், சில நேரங்களில் உரிய விசாரணை நடைமுறைகள் இல்லாது நிர்வாகத்தின் தன்னலம் சார்நது தவறாகப் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் கூட ஒரு ஆசிரியரின் நற்பெயரையும் தொழில் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும். மேலும் ஆசிரியரை உயர் அதிகார வட்டத்தில் உள்ளவர்களின் பாலியல் அச்சுறுத்தலுக்கும் கொண்டு செல்கிறது. தமிழகத்தில் 50 சதவீதம் பேராசிரியர்கள் விவாகரத்து ஆகிறதின் சமூக சூழல் கவனித்தால் கல்வி நிலையங்களும் பாலியல் அச்சுறுத்தல்களும் வெளிச்சத்திற்கு வரும்.

#வேலைப் பாதுகாப்பு குறைவாக உள்ள ஆசிரியர்கள் இத்தகைய சூழல்களில் அதிகமான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக தனியாக குடும்பப் பொறுப்புகளை ஏற்றிருக்கும் பெண் ஆசிரியர்கள் மற்றும் தற்காலிகப் பணியில் இருப்பவர்கள் கூடுதல் பாதுகாப்பின்மையை உணர்வத்தால் எல்லா நிலையிலும் பணிந்து போகும் சுழலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். வேலை இழக்கும் அச்சம் காரணமாக அவர்கள் பல அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்கும் நிலையும் உருவாகிறது.

மேலும், முனைவர் பட்டம் உள்ளிட்ட உயர்கல்வித் தகுதிகளைப் பெற்றிருந்தாலும், பல கல்லூரிகளில் வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதால், ஓரளவு சிறந்த ஊதியம் உள்ள கல்வி நிறுவனங்களில் வேலை பெற கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டி ஆரோக்கியமான கல்விசார் வளர்ச்சியாக அமையாமல், சில நேரங்களில் குழு அரசியல், ஆதிக்கப் போட்டி, ஜாதி வன்மம் மற்றும் தொழில்முறை மோதல்களாக மாறிவிடுகிறது.

சில கல்வி நிறுவனங்களில் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை குறைவாக இருப்பதும் ஒரு சிக்கலாகும். ஆசிரியர்கள் சுயமாக சிந்தித்து செயல்படும் கல்வியாளர்களாக அல்லாமல், முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டிய பணியாளர்களாகக் கருதப்படும் சூழல் உருவானதால், கல்விச் சூழலின் தரத்தையே பாதிக்கிறது.

ஒரு பேராசிரியர் தனது கல்வி, அனுபவம் மற்றும் அறிவின் அடிப்படையில் கருத்து தெரிவிக்கவும், நிர்வாகத்துடன் தொழில்முறை உறவுகளை வைத்திருக்கவும் உரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.ஆனால் இயல்பில் அதிகாரம் உள்ளவர்களின் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டுமே இடம் கிடைக்கிறது.

கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி என்பது கட்டிடங்கள், தரவரிசைகள் அல்லது அங்கீகாரங்களால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் சுதந்திரம், பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் தொழில்முறை மரியாதை ஆகியவற்றினால்தான் உண்மையான கல்வித் தரம் உருவாகிறது.

எனவே, உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த விரும்பினால், ஆசிரியர்களை கட்டுப்படுத்தும் அமைப்புகளை உருவாக்குவதை விட, அவர்களின் திறமையை வளர்க்கும், நியாயமான மதிப்பீட்டை உறுதி செய்யும், பாதுகாப்பான மற்றும் மரியாதையான பணிச்சூழலை உருவாக்குவதே முக்கியமாகும்.

0 Comments:

Post a Comment