இன்றைய கல்விச் சூழலில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு குற்றச்சாட்டு என்னவெனில், "மாணவர்கள் பேராசிரியர்களை மதிப்பதில்லை" என்பதாகும். ஆனால் இந்தக் கருத்தின் பின்னால் இருக்கும் உண்மையை ஆராய்ந்தால், பல கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களை மாணவர்கள் மதிக்கும் சூழலையே கல்லூரி நிர்வாக அமைப்புகள் அனுமதிப்பதில்லை என்பதாகும்.
ஒரு பேராசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, அந்த நேரத்தில் வகுப்பின் ஒழுங்கும், கற்றல் சூழலும் அவருடைய பொறுப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். ஆனால் பல கல்லூரிகளில், நிர்வாக அதிகாரிகள் துணை முதல்வர் கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களை வகுப்பு தோழர்கள் முன்னிலையில் கண்டித்து , வெளியே அழைத்துச் செல்வது நடைபெறும். இதனால் வகுப்பை நடத்திக் கொண்டிருக்கும் பேராசிரியரின் அதிகாரமும் மதிப்பும் மாணவர்களின் பார்வையில் பாதிக்கப்படுகிறது. வெறும் ஒரு வேலைக்காரி ஆசிரியை என்று தான் மாணவர்கள் மனதில் பதியும்.
இத்தகைய தருணங்களில், மாணவரின் நலனுக்காகவோ அல்லது வகுப்பின் ஒழுங்கைக் காக்கவோ பேராசிரியரால் கருத்து தெரிவிக்க முடியாத நிலை உருவாகிறது. தனது வகுப்பறைக்குள் தனது அனுமதியின்றி நடந்த தலையீட்டின் முன் அவர் அமைதியாக நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் விளைவாக, மாணவர்கள் கல்வி அதிகாரத்தை விட நிர்வாக அதிகாரமே மேலானது என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.
பல தனியார் கல்லூரிகளில் முதல்வர், துணை முதல்வர், டீன், இயக்குநர், ஒருங்கிணைப்பாளர் என பல அடுக்குகளைக் கொண்ட நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் கற்பித்தலே மையப் பொறுப்பாக இருந்தாலும், பேராசிரியர்கள் நிர்வாக வரிசையில் கீழ்நிலையிலேயே இருப்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. கல்வி நிறுவனத்தின் அறிவுசார் அடித்தளமாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள், நிர்வாகத்தின் கட்டளைகளை நிறைவேற்றும் பணியாளர்களாக மட்டுமே சித்தரிக்கப்படுகின்றனர்.
இதன் தாக்கம் மாணவர்களின் மனநிலையிலும் பிரதிபலிக்கிறது. ஒரு ஆசிரியரின் அறிவு, கற்பித்தல் திறன், ஆராய்ச்சி பங்களிப்பு போன்றவற்றின் அடிப்படையில் அல்லாமல், அவர் பயன்படுத்தும் வாகனம், அணியும் உடை, சமூகப் பின்னணி, பொருளாதார நிலை, சாதி அல்லது பிற வெளிப்புற அடையாளங்களின் அடிப்படையில் அவர்களை மதிப்பிடும் மனப்பான்மை உருவாகிறது. இந்தப் பார்வை தன்னிச்சையாக உருவாகவில்லை; கல்வியை விட அதிகாரத்தையும் பதவியையும் முன்னிறுத்தும் நிறுவன கலாச்சாரத்தின் விளைவாகவே அது வளர்க்கப்படுகிறது.
ஒரு கல்வி நிறுவனத்தின் உண்மையான வலிமை அதன் கட்டிடங்களிலும் நிர்வாகப் பதவிகளிலும் இல்லை; அறிவை உருவாக்கி பரப்பும் ஆசிரியர்களிடமே உள்ளது. பேராசிரியர்களின் சுயமரியாதை, கல்விசார் சுதந்திரம் மற்றும் வகுப்பறை அதிகாரம் பாதுகாக்கப்படாத இடங்களில், பாதிக்கப்படுவது ஆசிரியர்களின் நிலை மட்டுமல்ல; கல்வியின் தரமும் மாணவர்களின் கற்றல் அனுபவமும் ஆகும்.
எனவே, மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுவதற்கு முன், ஆசிரியர்களின் மரியாதையையும் அதிகாரத்தையும் பாதுகாக்கும் சூழலை கல்வி நிறுவனங்கள் உருவாக்குகிறதா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
See less

0 Comments:
Post a Comment