1 Aug 2026

மோர்தெகாய் - எஸ்தர்

 தமிழ் அரசியல் பேச்சுகளில்( சபாநாயகர் உரையில் )அடிக்கடி குறிப்பிடப்படும் #மோர்தெகாய் யார்? #எஸ்தர் என்ற பெயரில் பரப்பப்படும் பரப்புரையின் தார்மீகம் பின்புலம் என்ன?

ஒரு வரலாற்று பார்வை!
மோர்தெகாய் ஒரு யூதன். வாழ்வாதாரம் இல்லாத காரணத்தால் தனது குடும்பத்துடன் அண்டை நாட்டிற்கு அகதியாகச் சென்று வாழ்ந்தவன் . அங்கு மன்னனின் அரண்மனைக்கு வெளியே அரசு அலுவலராகப் பணியாற்றினான்.. அதே நேரத்தில் ஹாமான் என்பவர் மன்னனுக்கு மிகவும் நெருக்கமான, அரண்மனைக்குள் உயர்பதவியில் இருந்த அதிகாரி.
ஹாமானுக்கு , மோர்தெகாய் தன்னைக் கண்டவுடன் வணங்கி மரியாதை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மோர்தெகாய், "நான் யூதன்; யாருக்கும் தலைவணங்க மாட்டேன்" என்ற நிலைப்பாட்டில் இருகிறான் . இதனால் ஆத்திரமடைந்த ஹாமான், மோர்தெகாய் மட்டுமல்லாமல் அனைத்து யூதர்களையும் அழிக்கச் சதி திட்டமிடுகிறான்.
அதே காலகட்டத்தில், மன்னன் அகாஸ்வேரு (செர்க்சீஸ்) தனது ஆணவம் மற்றும் குடிவெறியின் காரணமாக, தனது மனைவி ராணி வஸ்தியை பதவியில் இருந்து நீக்கிவிடுகிறான். பின்னர் புதிய ராணியைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கிறான்.
இந்தச் சூழலை மோர்தெகாய் பயன்படுத்திக் கொண்டு, தனது வளர்ப்பு மகளான எஸ்தரை, தனது யூத அடையாளத்தை மறைத்து அரண்மனைக்கு அனுப்புகிறான். பின்னர் எஸ்தர் ராணியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள் .
அதன்பிறகு நிகழும் சம்பவங்கள் பைபிளின் எஸ்தர் நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. எஸ்தரின் வேண்டுகோளின் பேரில் மன்னன் ஹாமானைத் தூக்கிலிட ஆணையிடுகிறார். மேலும், யூதர்கள் தங்களைத் தாக்க வந்த எதிரிகளை எதிர்த்துப் போராட அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் விளைவாக குழந்தைகள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுகிறார்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பின்னர் ஹாமான் வகித்த உயர்பதவி மோர்தெகாய்க்கு வழங்கப்படுகிறது.
சிலர் எஸ்தரை தமது மக்களை காப்பாற்றிய போராளியாக கருதுகின்றனர்; மற்றவர்கள் இந்த நிகழ்வுகளை அரசியல் தந்திரத்தின் வெற்றியாகப் பார்க்கின்றனர். பெண்ணை பயன்படுத்தி அதிகாரத்தை தக்க வைக்கும் ஆணின் (மோர்தெகாயின்) இழி குணத்தையும் வெளிப்படுத்துகிறது.
எஸ்தர் ஆகட்டும், பெற்றோர் இல்லா நிலையில் வளரும் பெண்கள், பாதுக்காவலர்கள் என்ற நிலையில் உள்ள ஆண்களால் அச்ச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அவல நிலையும், அச்சவாலையும் பயத்துடன் தன் உடலால் எதிர்கொண்டு அதிகாரத்தை அடையும் பெண்களையும் நினைவுப்படுத்துகிறாள்
ராணி வஸ்தி குறித்து நவீன பெண்ணியக் கண்ணோட்டம் வேறுபட்ட கருத்தை முன்வைக்கிறது. மன்னனின் அவமானகரமான கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்ததால் பதவியை இழந்தாலும், தனது சுயமரியாதையையும் கண்ணியத்தையும் காத்த பெண்ணாக அவர் இன்று பலரால் நினைவுகூரப்படுகிறார். அதனால் வஸ்தி பெண் சுதந்திரம், சுயமரியாதை மற்றும் நேர்மையின் அடையாளமாகவும் பேசப்படுகிறார்.
இந்த வரலாற்றை எவ்வாறு மதிப்பிடுவது என்பது ஒவ்வொருவரின் மதநம்பிக்கை, வரலாற்றுப் பார்வை மற்றும் மனசாட்சியைப் பொறுத்து மாறுபடுகிறது

உண்மை நின்றிட வேண்டும்- பத்திரிக்கையாளர் மாலன்

 🔥உண்மை நின்றிட வேண்டும்🔥

பாரதி பற்றிய புனைவுகளை, கட்டுக்கதைகளைத்
தரவுகளோடு தவிர்க்கும் நூல். இதன் ஆசிரியர் பத்திரிக்கையாளர் மாலன் அவர்கள். புஸ்தகா பதிப்பகம் ஊடாக வெளியான நூல். தரமான அட்டை, பக்க அமைப்பு, சிறந்த எழுத்துருருவுடன் 2025 ல் வெளிவந்த நூல். விலை ரூ 290. அனைவரும் , முக்கியமாக இளம் தலைமுறை வாசிக்க வேண்டிய புத்தகம். இந்தியாவை பற்றிய ஒரு உன்னத உண்மையான தேசியப் பார்வை கிடைக்கும்.
பல வரலாற்று சம்பவங்களை நினைவுப் படுத்துகிறது. பல அறிந்த அறியாத ஆளுமைகளை அடையாளப்படுத்தி உள்ளது. முக்கியமாக பாரதியாரின் உண்மையான வரலாற்று அடையாளத்தை காட்டித்தருகிறது.

பாரதியார் பல மொழிகள் கற்றவர், பல மாநிலங்களில் வாழ்ந்தவர்.. தாய் மொழி கல்வியைப் பற்றிய அவருடைய கருத்தாக்கம் இன்னும் கவனிக்காமல் இருந்து நமது தலைமுறையை சிந்தனை இல்லா படைப் பாற்றல் இல்லா நிலையில் உருவாக்கி வருகிறோம் என்பதை மறுபடியும் சிந்திக்க வைக்கிறார்.
🙏 தேசிய கல்வி என்ற கட்டுரையில் பாரதி எழுத்துகிறார்.
தாய்மொழிக் கல்வியே தரமான கல்வி. இத்தேசத்து ஜனங்களின் #கல்வி வித்து , சத்தாக இருக்க வேண்டுமையானால் மக்கள் தங்கள் தாய்மொழியிலே கல்வி தானம் பெற வேண்டும். அதுவே சகல வளர்ச்சியின் விஸ்பரூபத்திற்கும் வேராகும்

இப்புத்தகம் ஊடாக நாம் அறியும் முக்கிய ஆளுமையாகும் ஜி. சுப்பிரமணிய ஐயர். உழைப்பையும் செல்வத்தையும் கொண்டு உருவாக்கியது ஆகும் இந்து நாளிதழ்.
இந்த #ஆசார சீர்திருத்த சபையைப் போல சுப்பிரமணிய ஐயர் சம்மந்தப்பட்டிருந்த இன்னொரு அமைப்பு திருவல்லிக்கேணி #இலக்கிய சங்கம். ஜி. சுப்பிரமணிய ஐயர் சிறந்த பத்திரிகையாளன் ஆவர். ஜி. சுப்பிரமணிய ஐயர் . அரசியல் மேடைகளில் தமிழில் பேச வேண்டும் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் . மதப் பிரசாரர்கள் ஊர் ஊராய்ப் போய் பிரசாரம் செய்வதைப் போல அரசியல் ஆர்வலர்களும் தலைவர்களும் பிரசாரம் செய்ய வேண்டும் மேலும் ஊராட்சி, நகராட்சி அமைப்புகளில் பங்கு பெற வேண்டும் என்பதைத் தமிழில் கேள்வி–பதில் வடிவத்தில் விளக்கிக் கையேடு வெளியிட்டவரும் இவர்தான். இவற்றின் நீட்சி அல்லது இன்னொரு வடிவம்தான் அவரது #பத்திரிகைகள்.

#ஜி. சுப்பிரமணிய ஐயர்,
#எம். வீரராகவாச்சாரியார்,
#டி.டி. ரங்காச்சாரியார்,
#பி.வி. ரங்காச்சாரியார்,
#கேசவராவ்,
#என். சுப்பாராவ் ஆகிய திருவல்லிக்கேணியை சேர்ந்த அறுவர் தான் 1878-ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று, முதன் முதலாக வெள்ளையர் அல்லாத ஒரு இந்தியர் -முத்துசாமி ஐயர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்பிற்கு பதில் கூற இந்துவைத் தொடங்கினர்.
அப்போது ஜி. சுப்பிரமணிய ஐயருக்கு 23 வயது. இவர்களில் ஜி. சுப்பிரமணிய ஐயர், வீரராகவாச்சாரியார் ஆகியோர் ஆசிரியர்கள்.
மற்ற நால்வரும் சட்டம் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள். அவர்கள் படிப்பு முடிந்ததும் வக்கீல் தொழிலிலே கவனிக்கப் போய் விட்டனர்.
ஜி. சுப்பிரமணிய ஐயர், வீரராகவாச்சாரியார் இருவர் மட்டுமே பத்திரிகையை நடத்த வேண்டிய நிலை. சுப்பிரமணிய ஐயர் ஆசிரியர் பொறுப்பைக் கவனிப்பது என்றும், வீரராகவாச்சாரியார் நிர்வாக இயக்குநராக பத்திரிகையின் விற்பனை, நிதி விஷயங்களைக் கவனிப்பது என வேலைகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. வாரப்பத்திரிகையாகத் தொடங்கிய பின் வாரம் மும்முறையாக வளர்ந்தது. 1887-ஆம் ஆண்டு சென்னையில் முதன்முறையாக காங்கிரஸ் மாநாடு நடந்த பின் 1889-ஆம் ஆண்டு மாலை நாளிதழாக மலர்ந்தது.
சமூக சீர்திருத்த ஆர்வலராகவும் இருந்தார். இந்து மதத்தில் இருந்த #தீண்டாமை, #குழந்தைத் திருமணம், கூட்டுக் குடும்பம் போன்ற வழக்கங்களைக் கடுமையாக எதிர்த்தவர். அதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்து ஆசார சீர்திருத்த சபையின் நிறுவுனர்களில் ஒருவரும் ஆவார்.

பாரதியின் இந்த அறச்சீற்றம், ஜி. சுப்பிரமணிய ஐயரின் கட்டுரை ஒன்றின் தாக்கத்தில் எதிரொலித்து.

ஜி. சுப்பிரமணிய ஐயர் சமூக சீர்திருத்தத்தைப் பேசுபவரில் நிறுத்திக் கொண்டவர் அல்ல. தன் வாழ்க்கையிலும் மேற்கொண்டுக் காட்டியவர். அவரது மூத்த மகள் சிவப்பிரியையை 13 வயதில் விதவையானபோது அவருக்கு மறுமணம் செய்து வைத்தவர். அதன் காரணமாக ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர் என எச்சரிக்கப்பட்டும், அதைப் பொருட்படுத்தாமல் அவர் அந்தத் திருமணத்தை 31-12-1889 அன்று பம்பாயில் முதல் காங்கிரஸ் மாநாடு கூடியபோது நடத்தினார்.

வேறு ஒரு சமயம், திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில் மரணம் நேர்ந்த போது, இந்தவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்து #அந்தணர்களும் #உறவினர்களும் புறக்கணித்தனர். காரணம், இந்தவர் இளம் வயதில் விதவையான தன் குழந்தைக்குத் மறுமணம் செய்து வைத்திருந்தார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட #ஜி. சுப்பிரமணிய ஐயர், அந்த வீட்டிற்குச் சென்று உறவினர்களுடன் பேசி, இறுதிச் சடங்குகள் நடைபெறச் செய்தார்.

தீண்டாமைக்கு .எதிராக எழுப்பப்பட்ட தலையங்கங்கள் காரணமாகப் பத்திரிகை பல வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருந்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. விரைவில் அவர் தீண்டாமை பற்றி எழுதிய ஒரு கூர்மையான விமர்சனத்தால் பிளவாக மாறியது.

மதத்தின் மீது நாம் கொண்டிருக்கும் எத்தகைய மதிப்பும் இந்த தீண்டத்தகாத ஏழை மக்களுக்கு விடுதலை கொண்டுவராது” என்று எழுதினார்.

ஜி. சுப்பிரமணிய ஐயர் தீண்டாமைக்கு எதிரான தன் குரலை, எழுத்துக்களை மட்டுப்படுத்திக் கொள்ள எண்ணவில்லை. அதனால் பிரபல வழக்கறிஞர் நார்ட்டன் முன் இந்துவை விட்டு சுப்பிரமணியம் விலகி விடவேண்டும் என்றும், வீரராகவாச்சாரியாரே ஆசிரியர் பொறுப்பைக் கவனிப்பார் என்றும் முடிவாயிற்று. தன் உழைப்பாலும் எழுத்தாலும் அறிவுக் கூர்மையாலும் வளர்த்த ஹிந்து பத்திரிகை விட்டு விலகினார்.

இன்னொரு சம்பவம் பிரச்சினை ஜி. சுப்பிரமணிய ஐயரின் எழுத்தின் மூலம் வந்தது மதுரையில் வெங்கோபாச்சாரியார் என்பவர் ஒரு பள்ளித் தலைமையாசிரியராக இருந்தார்.
ஒரு நாள் காலையில் மாணவர்களின் பள்ளியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வழக்கமான பிரார்த்தனைப் பாடல்களுக்குப் பின் #வந்தேமாதரம்❤️ பாடலைப் பாடினர். வெங்கோபாச்சாரியார் ஒன்றரை மணி நேரம் மாணவர்களைப் பேச்சின் மேல் நிற்க வைத்து, "மிரட்டி, இதற்குக் காரணமாக இருந்த நான்கு பேர் யார் எனக் கண்டுபிடித்து அந்த நான்கு பேரையும் பிரம்பால் விளாசிவிட்டார்.
அவர்களில் ஒருவருக்குப் மணிக்கட்டு பிசகிவிட்டது. #சுப்பிரமணிய ஐயர் சுதேசமித்திரனில் செய்தியும் வெளியிட்டு தலைமையாசிரியர் மீதும் எழுதியிருந்தார்.
அதில் ஒரு வரி: "ஹிந்து பிள்ளைகள் ஹிந்துக்களே நடத்தும் ஸ்தாபனங்களில் கல்வி தேசாபிமானம் என்கிற நல்லுணர்ச்சியைக் கற்பது., அப்படி ஹிந்து பிள்ளைகள் தேசாபிமானம் கற்பத்தால் வெங்கோபாச்சாரிக்கு கோபம் உண்டாகுமானால் இவரை விட கிறிஸ்தவ மதத்தைத் தழுவின குரங்கு மூஞ்சித் தொப்பிக்காரன் ஒருவன் பிரின்சிபலாக இருக்கலாமே?"பக்கம் 68.


தேசிய தலைவர்களை பற்றி ட்தனித்துவமான தகவல்கள் அடங்கிய புத்தகம் இது. இப்புத்தகம் ஊடாக பல தலைவர்களை பற்றி அறிகிறோம். அவர்களோடு பாரதிக்கு இருந்த தொடர்புகளை வைத்து இப்புத்தகம் ஒவ்வொரு பகுதியாக சான்றுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

பாரதியாரின் வாழ்க்கையில் நடந்த மிகமுக்கியமான சம்பவங்களை தரவுகளுடன் பகுந்தாய்வு செய்து உள்ளது.

பாரதியார் தனது ஐந்து வயதில் தாயையும் பதின்ம வயதில் தந்தையையும் இழந்தவர். கடைசி காலத்தில் உ இவருடைய சித்தர் நம்பிக்கை, ஆன்மீக பயணம் இதன் தாக்கமாக அல்லது தொடர்ச்சியாக படுகிறது,

சித்தர்களின் தொடர்பு அவரிடம் மூன்று தாக்கங்களை ஏற்படுத்தியது.
#ஏற்கனவே வேத நூல்கள் வாசிப்பு வழி அவருள் இருந்த ‘எல்லா உயிர்களுக்கும் இறைவன் இருக்கிறார்’ என்ற கருத்தை வலுப்படுத்தியது.

​மரணத்தை வெல்வது எப்படி என்ற சிந்தனையில் ஆழமாக இறங்குகிறார். இது குறித்து விரிவாகத் தனியே ஓர் அத்தியாயம் எழுதியிருக்கிறேன்.

​அவருடைய உள்முகப் பயணம் புதிய திசையில் திரும்பி வேகம் கொண்டதெனினும் அவர் இந்த சித்தர்களின் கூட்டுறவால், குறிப்பாகக் குள்ளச்சாமியினால் போதைப் பொருட்கள் பழக்கத்திற்கு உள்ளாகினார்.
​குள்ளச்சாமியுடன் சேர்ந்து அவர் கஞ்சா போன்ற பொருட்களைப் பயன்படுத்தியதை அவர் மீது அன்பு கொண்ட வ.உ.சி, வ.வே.சு ஐயர் போன்றவர்கள் கவலையுடன் பதிவு செய்து உள்ளனர். பண்டாரங்களுடன்"பழகத் தொடங்கிய பின் அவருடைய மற்ற நட்பུக்கள் நலியத் தொடங்கியது. பாரதியின் மீதும் அவர் எழுத்தின் மீதும் அபிமானம் என்பதையும் தாண்டி மாமா என்று அழைக்கும் அளவிற்கு நெருக்கமும் அளவற்ற அன்பும் கொண்டிருந்த வ.உ.சி.யே கூட பாரதிக்கு குள்ளச்சாமியோடு இருந்த கூடா நட்பை வெறுத்தார். போதைப் பழக்கத்தினால் மட்டுமல்ல, அவர் குள்ளச்சாமியை மட்கு என்றே கருதினார்.

​ ​இத்துடன் வருமானம் குறைந்த காலம், பொருளாதார நெருக்கடி, குடும்பத்திலும் சச்சரவு, போதும் போதாதற்கு புகையிலை பழக்கத்தால் ஏற்பட்ட உடல் உபாதைகள், எல்லாமாகச் சேர்ந்து 1915 வாக்கில் பாரதி பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

.மனவேற்றுமைகள் பெருக திடீரென்று
பாரதியிடம் ஏதும் சொல்லாமல், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனது தாய்வீட்டுக்குப் போய்விட்டார் செல்லம்மா. செல்லம்மா தன்னை விட்டுப் போய்த் திரும்பி வந்த ஒரு மாத காலம் பாரதி ஒருவரையும் சந்திக்காமல், பேசாமல் மெளன விரதம் இருந்துள்ளார்.
​ஊருக்குப் போன செல்லம்மா தன் சகோதரர்களை மட்டும் அழைத்துக் கொண்டு புதுச்சேரி திரும்பின செல்லம்மா; புதுச்சேரியை விட்டுக் கடையத்திற்கே திரும்பி விடலாம் என வற்புறுத்துகிறார். செல்லம்மாவின் சகோதரரும் முதல் உலக யுத்தம் முடிந்த பின்பு தமிழ் நாட்டில் பிரிட்டிஷாரின் கெடுபிடி குறைந்து விட்டதாகச் சொல்கிறார். முதலாம் உலகப் போர் முடிவு ஒப்பந்தம் கையெழுத்தான சூழலில் புதுவையை விட்டு வெளியேறினார் ஆனால் அவர் புதுச்சேரி எல்லையைக் கடந்ததும் 1918 நவம்பர் 20 அன்று கைது செய்யப்பட்டு கடலூரில் சிறை வைக்கப்பட்டார்.

எந்த தமிழ் மொழிக்கு ஒளியும் உயிரும் கொடுத்தாரோ அந்தத் தமிழ் மொழியின் புலவர்கள், அறிஞர்கள், எவரும் கைதைக் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை . எந்த மக்களுக்காக எழுதியும் பேசியும் வந்தாரோ அந்த மக்கள் கொந்தளித்து எழவில்லை.

அன்னிபெசன்றும் பாரதியும் நட்புறவு கொண்டிருந்தாலும் அன்னி பெசண்டின் சில தேசிய கருத்து ஒவ்வாததாக உள்ளது. "கிழப் பெண் நரி" என்றும் ஜே.கிருஷ்ண மூர்த்தியைப் பற்றி "இளம் கழுதைக் குட்டி"என்றும் கடுமையான விமர்சனங்களை எழுதி உள்ளார்.

தஞ்சாவூர் காங்கிரஸ் கமிட்டி, ஹோம் ரூல் இயக்கம் ஆகியவை மாத்திரம் இணைந்து கைது "விரும்பத்தக்கதாக இல்லை" என்று பொதுவாக ஒரு தீர்மானம் இயற்றின.

அநேகமாக எல்லோராலும் கைவிடப்பட்டு நிராதரவாக இருந்த பாரதியை சிறைமீட்க முயற்சிகள் மேற்கொண்டவர்கள் இரு பத்திரிகையாளர்கள்.

ஒருவர் சுதேசமித்ரன் ஆசிரியர் ஏ.ரங்கசாமி ஐயங்கார், நியூ இந்தியா, காமன்வீல் பத்திரிகைகளின் ஆசிரியரான அனி பெசண்ட்.

டிசம்பர்-17 1918 வாக்கில் விடுதலை ஆகி உள்ளார்.

யானைச் சம்பவத்திற்குப் பின் உடல் தேறி, 1921-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31-ஆம் தேதி ஈரோட்டிற்கு அருகில் உள்ள கருங்கல்பாளையம் என்ற இடத்தில் அமைந்திருந்த வாசகசாலை ஒன்றின் ஐந்தாம் ஆண்டு விழாவில் மனிதனுக்கு மரணமில்லை என்ற பாரதியின் இறுதிப் பேருரை அமைந்து உள்ளது.
​அதைக் குறித்து அதற்கு அடுத்த வாரம், (4.8.1921) எனது ஈரோடு யாத்திரை என்று காளிதாசன் என்ற பெயரில் சுதேசமித்திரனில் எழுதியுள்ளார்.

1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவுக்கு மேல் பாரதியின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது.



பாரதியின் உடல் தகனம் செய்யப்பட்ட அதே நாளில் வெளிவந்த தி ஹிண்டு நாளிதழ், “His premature death the country has lost a born poet and a sincere patriot” என்று தலையங்கம் எழுதியது.
​அவரது மறைவுச் செய்தி பரவியதும் சென்னையிலும் காரைக்குடியிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடந்த இரங்கல் கூட்டங்கள் பற்றிய செய்திகளும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் கடிதங்களும் கவிதைகளும் மித்திரனில் தொடர்ந்து ஒரு வார காலம் வெளிவந்து கொண்டேயிருந்தன