27 May 2020

அன்னையர் தினம்

இன்று அன்னையர் தினம் என்றதும் பல ஆண்கள் அனாதை ஆசிரமத்தில் தாய்மார்களை சேர்த்து விட்டதை பற்றி கண்ணீர் கவிதை எழுதுவார்கள் .
தாயை கடைசி காலம் வரை கண் கலங்காது கவுரவமாக பார்த்து கொள்வதில் மகனின் கடமை நிறையவே உள்ளது.
தென்னகத்தில் அம்மாவை பார்த்து கொள்ளும் பாரிய கடமை, அடுத்த வீட்டில் இருந்து தன்னுடன் வாழ வந்த பெண்ணிற்கு என தப்பு கணக்கு வைத்துள்ளனர்.
தாயை அனாதையாக விடும் மனக்குத்தையும் மனைவி மேல் சுமத்தி விடுவார்கள்.
தாய்மார்களும் தங்களை பார்த்துக்கொள்ளும், தங்களை நேசிக்கும் மனநிலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.50 வயது ஆவதற்கு முன்னே பல தாய்மார்கள்; தாங்கள் நோயாளிகள், தங்களை யாராவது தாங்க வேண்டும் என்ற குழந்தைமைக்குள் புகுந்து விடுகின்றனர்.
தாய்மை அதிகாரவும் அல்ல , உரிமையுமல்ல. அது மனித வாழ்க்கையில் கடந்து சென்ற அழகான நிலை. அந்த நிலையை எண்ண எண்ண மகிழ்ச்சி கொள்ளலாம் இருமாப்பு கொள்ள ஒன்றுமில்லை.
இந்தியாவில் பெற்ற குழந்தைகளை மட்டுமே வளர்க்கும் சமூக சூழல் உள்ளது. தான் பெற்ற குழந்தைகளுடன் பெற்றோரற்ற ஒரு குழந்தைக்காவது தாயாக வளர்ப்பதை தாய்மைகள் நினைத்து பார்க்க வேண்டும்..
தன் குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பது, அதை செத்த பிறகு தருகிறேன் என ஆசை காட்டுவது , நான் வளர்த்தேன் நீ என்னை கடைசி காலம் வரை பார்த்தே தீர வேண்டும் என்ற உணர்ச்சிப் பிடியில் வைக்க தேவையில்லை. அது உண்மையான தாய்மையும் அல்ல.
தாய்மை ஒரு மன நிலை. அந்த மனநிலையில் பொறாமை, போட்டி, இல்லாது அன்பு நிரம்பி வழிவதால் போற்றுகிறோம். அந்த மனநிலை பெற்ற பிள்ளையிடம் மட்டுமல்ல எல்லா உயிர் இனங்களிடவும், பரிவுடன் பரவி விரவிக் கிடப்பதால் பூமி அன்பாக காட்சியளிக்கிறது.

0 Comments:

Post a Comment