21 Aug 2022

இரவின் ஆன்மா-Dhanalakshmi Dhanalakshmi

 


வெறும் வாசிப்பு வாசிப்பு என்றே ஒரு பக்க சிந்தனையோடு , திரிந்து கொண்டிருந்த என்னை அப்படியே மடை மாற்றிப் போட்டுவிட்டது பேராசிரியை ஜெ .பி .ஜோஸ்பின் பாபா எழுதிய "இரவின் ஆன்மா " (திரைப்படங்களில் பெண்கள்) என்ற புத்தகம் . முதலில் காய்ச்சிய பாலில் தயாரித்த டிகிரி காப்பி போல , முதலில் பிழிந்தெடுத்த தேங்காய்ப் பாலின் அடர்த்தியாக , பல்வகைக் கனிகளின் பழக் கலவையாக தான் பார்த்து ரசித்த உலகமொழித் திரைப்படங்களில் தான் ரசித்தவற்றை பிறரும் படித்து இன்பம் பெறட்டும் என்று நினைத்து தன் புத்தகம் மூலம் சாரமாகப் பிழிந்து தந்த இந்த நற்குணத்திற்காகவே இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தரமான ஒன்பது வெளிநாட்டுப் படங்களும், ஒன்பது ஹிந்தித் திரைப்படங்களின் வழியாகவும் அதில் நடித்த பெண்பாத்திரங்களை மிகச் சிறப்பாக திறனாய்வு செய்து தந்திருக்கிறார் நூலாசிரியர் பேராசிரியை ஜோஸ்பின் பாபா. .

இந்த நூல் தந்த விளைவு , இவர் தந்த செம்மையான விமரிசனம் தந்த தூண்டுகோலால் இரண்டு படங்களை ( "பிங்க் " https://www.youtube.com/watch?v=TgADDuR1R68 மற்றும் "our souls at night "https://www.youtube.com/watch?v=ybPX-sd_b1Y ) பல வேலைகளுக்கு நடுவில் தேர்வு செய்து பார்த்த நான் (சொன்னால் நம்பமாட்டீர்கள்! ) எஞ்சிய மீதம் பதினாறு படங்களை பார்த்தே தீர்வதென்ற வெறியோடு எண்ணம் முழுக்க அதே சிந்தனையோடு செயல்படத் துவங்கியிருக்கிறேன் ! நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல் இது . என் மனம் கவர்ந்த எந்த படைப்புகளையும் வாசிக்க நேர்ந்து விட்டால் பெரும்பாலும் படைப்பாளரோடு அலைபேசியில் உரையாடி விடுவதை வழக்கமாய் கொண்டுள்ளேன். அப்படித்தான் இவரோடு மிகக் கூடுதல் மணித்தியாலங்கள் கதைகளை பற்றிய இவரது கண்ணோட்டத்தையே வியந்து பேசினேன் .
அப்போது அவர் மிக்க மகிழ்ச்சியோடு கூறியது :- " தனா ! பல கலை உருவங்கள் சேர்ந்த ஒருமித்த கலைப்படைப்பு திரைப்படங்கள். சமூகத்தைப் பற்றி சிந்திக்க வைப்பதுடன் சில பிரச்சினைகளுக்கு விவாத களமாகவும் ,தீர்வாகவும், சில போழ்து பார்ப்பவர்களின் எண்ணங்களை விசாலப்படுத்தவும், வாழ்க்கையைத் தத்துவ விசாரணையோடு அணுகவும் வைக்கின்றன . உலகமெங்கும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் ஒரே போன்றதுதான். அதைப் பெண்கள் எவ்விதம் அணுகுகின்றனர், சவால்களை எப்படி கையாண்டு கடக்கின்றனர், அதன் தீர்வுகள் எப்படி இருந்திருக்கின்றன என்பதைத் தான் இந்நூலில் பதிவு செய்திருக்கிறேன்" என்றார். இப்போது எனது நோக்கமெல்லாம், என் முக நூல் நட்புகள் அனைவரும் குறிப்பாக, பெண்களும் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும். உங்கள் கருத்துகளை அதன் பின் அவரது மின்னஞ்சலுக்கு இடலாம்(jpjosephinebaba5@gmail.com) பாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறையில் (Visual communication ) துணைப் பேராசிரியராக பணியாற்றிவரும் இவரது படைப்புகள் சிறப்பானவை .(நான் தேடும் வெளிச்சங்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு) தனது வளர்ந்த இரு மகன்கள் சாம், ஜெரோம் மற்றும் உறவினர், நட்புகளோடு இணைந்து குடும்பத்தையும் கவனித்து , கல்லூரி மாணவர்களோடு வழிகாட்டியாய், நல்ல நட்பு பாராட்டிக் கொண்டு, இணைய பத்திரிக்கைகளில் துணிந்து தனது கருத்துகளை சில எதிர்ப்புகளுக்கு இடையேயும் வெளிப்படுத்தும் இவரை எனது மிகச் சிறந்த நட்புகளில் ஒன்றாய் ஆக்கிக் கொண்டது எனக்குப் பெருமையே!
நூல் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :-
ஜெ.இ.பதிப்பகம், 2-123 பெருவிளை அஞ்சல்,நாகர்கோவில் ,
கன்னியாகுமாரி மாவட்டம்-629 003 அ .பே :97896 14

இரவின்ஆன்மா...#திரைப்படங்களில்பெண்கள்-Thanappan Kathir

 


தனது கணவரை 25 வயதில் இழந்தாலும் கடைசி வரை தான் கொண்ட காதலையும் வாழ்ந்த வாழ்க்கையும் நினைத்துக் கொண்டாடி 2021 இல் மறைந்த தாய்வழிப் பாட்டி மாரியாகம்மா மரிய செபாஸ்டியன் அவர்களுக்கு இந்த புத்தகத்தை சமர்ப்பணம் செய்து துவங்குகிறது இந்நூல்.

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட இந்த அற்புதமான படைப்பு நல்லதொரு சமுதாயம் அமைய அடித்தளமாக இருக்கும் என்று பதிப்பகத்தார் பதிப்புரை தந்திருக்கின்றார்கள்

பெண்கள் எதிர் கொள்ளும் ஒடுக்குதல்கள் மற்றும் புறக்கணிப்புகள், சிக்கல்களையும் தீர்வுகளையும் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்ற பொருண்மையைப் பயன்படுத்தி "இரவின் ஆன்மா" நமக்கு செய்திகளை பகிர்கிறது என்று பேராசிரியர் கோ. ரவீந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்கள்

ஒரு சினிமாவை எப்படிப் பார்ப்பது? எப்படி புரிந்து கொள்வது? என்கிற பாடத்திட்டம் நமது கல்வித் திட்டத்தில் இல்லை. அதன் தேவைப்பாட்டை விளக்குவதாக இந்த நூல் அமையப்பெற்றிருக்கிறது என்று கிருஷ்ணகோபால் அவர்கள் வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்கள்.

திரைப்படம் ஒரு மாபெரும் கலை என்பது போலவே திரைப்படங்களை பார்ப்பதும், ரசிப்பதும் ஒரு கலையை என்று தன்னுரை தந்து நம்மை இந்த கட்டுரைத் தொகுப்பிற்குள் அழைத்துச் செல்கின்றார் பேராசிரியர் ஜோசபின் பாபா.

மொத்தம் 18 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. அனைத்துமே திரைப்படங்கள் குறித்தும், அதில் வருகின்ற பெண் கதாபாத்திரங்கள் குறித்தும் பேசுகின்றன. 9 உலக மொழி திரைப்படங்களும் 9 ஹிந்தி திரைப்படங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

உலகம் மொழித் திரைப்படங்களும், ஹிந்தி மொழி திரைப்படங்களும் கையாண்ட பெண்கள் பற்றி கருத்தியல் பேசுவதோடு உண்மை நிலையையும் இங்கே நமக்கு தெள்ளத் தெளிவாக இந்த கட்டுரைகள் விளக்குகின்றன.

சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் அல்லது அந்த சூழலில் அவர்கள் எவ்வாறு சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குறித்து பேசி அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டு வந்திருக்கின்றார்கள், இன்னும் இன்னும் வர காத்திருக்கின்றார்கள் என்பதனை திரைப்படங்கள் காண்பித்ததை தெள்ளத் தெளிவாக நமக்கு கடத்துகின்றார்.

ஒரு பெண்ணுடன் நேசம் கொள்ளுதல் என்பது அவளை சொந்தமாக்குவது அல்ல. அவள் மகிழ்ச்சியில், துன்பத்தில், பிரச்சனைகளிலும் பங்கு பெறுதல் என்ற புரிதலில் ஜேன் எடுத்த முடிவை லூயிஸும் ஏற்றுக் கொள்கிறார் என்று முதல் கட்டுரை பேசுவது அந்த படத்தை பார்க்க தூண்டுவதாக அமைகிறது. அந்தத் திரைப்படம் இரவில் எமது ஆன்மா. (Our Souls At Night) இதுவே புத்தகத் தலைப்புமாகும்.https://www.youtube.com/watch?v=lci71HjGvaM

தன் வாழ்க்கையில் ஆளுமை செய்த இரு பெண்களைப் பற்றிய படம் என்று இயக்குனர் சொன்ன அந்தத் திரைப்படம் ரோமா. அந்த இரு பெண்களில் ஒருவர் தன் தாய் இன்னொருவர் வளர்ப்புத்தாய். வளர்ப்புத்தாய்க்கு தான் எழுதிய அன்பின் மடலாகவே இந்த படத்தை காண்கிறேன் என்று குறிப்பிட்டிருப்பது, அந்தப் படத்தை தேடிப் பார்க்கக் கூடிய ஆவலை நமக்கு தூண்டுகிறது. படத்தின் பெயர் "Roma".

"பிளாக்" எனும் ஹிந்தித் திரைப்படம் அமிதாப்பச்சனும் ராணி முகர்ஜிம் நடித்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக இவ்விருவரும் பார்வையற்றவர்களுக்கான எழுத்து மொழி பிரெயிலியை ஏழு மாதம் கற்றனர் என்ற தகவல், எவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் அந்த ஒரு கதாபாத்திரத்தை நேர்த்தியுடன் செய்ய வேண்டும் என்று அந்த பிரெய்லி முறையினை இவர்கள் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பதனை நமக்குத் தெரிவிக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாகப் பார்த்த இந்தப் படத்தினை நினைவுகளால் நான் மீட்டிக் கொண்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.https://www.youtube.com/watch?v=J72Rlp5WAcA&t=23

பிங்க் திரைப்படமும் பெண்களினுடை ய புதிய சிந்தனையை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. வேண்டாம் என்றால் வேண்டாம் என்பதனை தெளிவாகச் சொல்லும் இத்திரைப்படம் தமிழில, நோ என்றால் நோ என்று அஜித் பேசி நடித்த "நேர்கொண்ட பார்வை" எனும் திரைப்படமாக வந்ததை நினைவுபடுத்துகின்றது.https://www.youtube.com/watch?v=TgADDuR1R68

இப்படி பெண்கள் எவ்வாறு சூழலில் சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள், அந்த பெண்களை மையப்படுத்திய படங்கள் பெண்களை முன்னிலை நிறுத்திய படங்கள் என்று பட்டியலிட்டு 18 படங்களை நமக்குத் தந்து அவற்றை தேடிப் பார்க்க வைத்திருக்கின்றார்.

திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல அவற்றின் மூலம் கருத்துக்களை வெளிக் கொண்டு வர முடியும். அந்தக் கருத்துக்களை கடத்த வேண்டிய பொறுப்பு இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இருக்கிறது. வாழ்வினுடைய நுண்ணிய பக்கங்களை, பன்முகத் திறமைகளை திரையில் காட்டிய படங்கள் வெகு குறைவு. அவற்றை காட்டுகின்ற நிலை வரவேண்டும் என்பது இந்த தொகுப்பினை வாசிக்கும் பொழுது நமக்கு தோன்றுகிறது. அந்தச் சிந்தனை இயக்குனர்களுக்கும் தோன்ற வேண்டும். புதிய புதிய இயக்குனர்கள் இதனை கருத்தில் கொண்டு படைப்புகளை கொண்டு வர வேண்டும்.
படம் பார்த்தோமா, அதைப் பற்றி சில பேரிடம் பேசினோமா என்றில்லாமல் உணர்ந்தவற்றை உணர்வுபூர்வமாக கடத்திடுவது என்பது எல்லோருக்கும் எளிதில் வாய்க்காது. எப்படி உள்வாங்கி இருந்தால் ஒரு திரைப்படத்தை கட்டுரையாக கொண்டுவர முடியும் என்பதனை இந்த கட்டுரைத் தொகுப்பு விளக்குகிறது.
தற்போதைய திரைப்படச் சூழல் ஆரோக்கியமானதாக இல்லை என்பதனை சுட்டும் இந்த கட்டுரை தொகுப்பு ஒரு புரட்சியினை வேண்டி திரையுலகம் காத்திருக்கிறது என்பதனை சுட்டுவதாக அமைகிறது. மாற்றங்கள் நிகழ வேண்டும். காத்திருப்போம்.
Dhanalakshmi Dhanalakshmi, Bala Murugan and 20 others
22 comments
1 share
Like
Comment
Share

18 Aug 2022

இரவின் ஆன்மா- Kulashekar T (Writer and Filmmaker )

Kulashekar T (Writer and Filmmaker )

 இரவின் ஆன்மா


கொரோனா உலகம் முழுக்க ஒவ்வொருவர் வாழ்க்கையில் ஒவ்வொரு மாற்றத்தை விதைத்திருக்கிறது. நல்லதில் கெட்டதும், கெட்டதில் நல்லதுமென யின்-யாங் சுழற்சியில் ஒன்றின் தலையில் இன்னொன்று வாலாக பயணிக்கிறது. அப்படியாக அந்த நேரத்தின் பயன்பாடு, ஜோஸபின் வழியாக இப்படியொரு உலக சினிமா பற்றிய நூலாக வெளிப்பட்டிருக்கிறது. அவர் பார்த்து ரசித்ததில், வித்தியாசமான பெண் கதாபாத்திரங்களை கொண்ட சில படங்களை அவர் இந்த நூலில் ஆராதித்திருக்கிறார்.


இதற்கு இரவின் ஆன்மா என்று ஜோஸபின் தலைப்பு வைத்திருப்பதில் இருந்தே, இதில் ஊடாடும் பெண் கதாபாத்திரங்களின் அகவுலகம் எப்படியான நெருக்கடிக்குள் உந்தி தள்ளப்பட்டிருக்கிறது. எப்படியான ஓசை நிறைந்த மௌனத்திற்குள் அமிழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். அத்தனை அடர்வான இரண்டு சொற்களால் ஆன படிமம் இந்த நூலின் தலைப்பு. 



அவர் உலக சினிமா, இந்திய சினிமா என்று பிரித்து பயணித்து இருக்கிறார். இந்த கட்டுரையில் பிரதானமாக அவர் அலசியிருக்கும் உலக சினிமாக்களுக்குள் எப்படி எப்படி பயணித்திருக்கிறார் என்பதை பார்க்கலாம்.


அவர் ஸோல்’ஸ் அட் நைட்

வயது என்பது விசாலமான மனதை பொறுத்தமட்டில் வெறும் எண் தான். அப்படி ஐம்பதை கடந்த லூயிஸ், ஜேன் இருவரை பற்றிய காதல் கதை. லூயிஸிற்கு ஒரு மகள். மனைவி இல்லை. தனிக்கட்டை. ஜேனுக்கு ஒரு மகன். அவளும் தனிக்கட்டை தான். இருவருக்கும் இடையே காதல் அரும்புகிறது. சேர்ந்து வாழ ஆரம்பிக்கிற தருணத்தில், ஜேன் மகனின் மகனை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிறுவன் லூயிசுடன் அப்படி ஒட்டிக் கொள்கிறான்.  


ஆனாலும், ஒரு கட்டத்தில் ஜேன் தன் மகனுக்கு விவாகரத்தாகி, இருப்பிடம் மாற்றலாகி விட்டபடியால், அவன் இருப்பிடம் போய் அங்கிருந்தபடியே பேரனை பார்த்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி அவளின் மகன் மூலம் முன்வைக்கப்படுகிறது.


லூயிஸ் அந்த பிரிவை ஏற்றுக் கொள்கிறார். அவர்களுக்கிடையே உள்ள விசாலமான காதல், அந்த தடையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறது. நதியோட்டத்தோடு எந்தவித எதிர்வினையும் காட்டாமல் பயணிக்கிற சருகை போல அவர்கள் நடக்கிற அத்தனையையும் இயல்பாக எடுத்துக்கொண்டு பயணிக்க ஆரம்பிக்கிறார்கள்.


மீண்டும் தனிமை. இப்போது காதல் நினைவுகள் அவருக்கு துணையாக இருக்கிறது. ஒரு பெண்ணுடனான நேசம் என்பது அவளை உடமையாக்குவதல்ல. அவளின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு பெறுதல் என்கிற பரஸ்பர புரிதலே காதலின் கூறு என்பதை சொல்லாமல் சொல்லி செல்கிறது இந்த படைப்பு.


அதன் பின் அவர்கள் வெகுதூரத்திற்கு பிரித்தெடுக்கப்பட்டு கொண்டு போகப்பட்டாலும், மனதால் சேர்ந்தேயிருக்கிறார்கள். கைபேசி வழியாக அவர்கள் தங்களின் காதல் கதையின் பக்கங்களை ஒவ்வொன்றாக பேச ஆரம்பிக்கிறார்கள்.


தமிழில் ரிதம் என்றொரு திரைப்படம் வந்தது. அதிலும் இப்படியொரு விசயம் பேசப்பட்டிருக்கும்.


இது ஜேனின் பார்வையில் சொல்லப்பட்ட காதல் கதை அல்ல. லூயிஸின் பார்வையில் சொல்லப்பட்ட காதல் கதை. அந்த வகையில் இது லூயிஸின் காதல் கதை. இதில் ஜேனின் கதை ஒரு கிளைக்கதையாகி விடுகிறது. லூயிஸ் காதல் நிமித்தம் அத்தனையையும் ஏற்றுக் கொள்கிறவராக இருக்கிறார். ஜேன் தன் காதலின் நியாயம் பற்றி மகனிடம் எடுத்துப் பேச துணியவில்லை. ஆணாதிக்க உலகில் உலவும் உலகளாவிய பெண் மனதின் வெளிப்பாடாக இதனை பார்க்கலாம். அந்த வகையில் தன் சராசரி தனங்களில் இருந்து ஜேனினால் மீறி காதலை கைப்பிடிக்க முடியாததால், இதை ஒரு பெண்ணிய கதாபாத்திரமாக, கருவாக பார்க்க முடியாது. ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட மனிதம் ததும்பும் கருவென சொல்லலாம்.


இந்த கதையை சுவையாக தன் கட்டுரையில் ஜோஸபின் எழுத்தாக்கி இருக்கிறார். வெயில் காலத்தில் சொல்லாமல் கொள்ளாமல் வந்து செல்லும் தென்றலாய் இந்த படைப்பில் அப்படியொரு காதல் ஊடாடி நம் இதயங்களை சிலிர்க்க வைத்து விட்டுச் செல்கிறது. 

*

தி லான்ட்ரோமேட்


இந்த படத்தின் கரு அவசியம் பேசப்பட வேண்டியது. இந்த உலகத்தில் இன்சூரன்ஸ் என்கிற பெயரில் நடத்தப்படும் நிறுவனங்கள் எத்தனை மோசடியானவையாக மாறிப் போயிருக்கின்றன. அத்தனையும் வாயில் நெய் ஒழுக பேசுவார்கள். பிரபல நடிகர்களை வைத்து ஆஹா ஓஹோ என்று விளம்பரப்படுத்துவார்கள். அந்த நடிகர்களும் காசு வாங்கிக்கொண்டு வாய் கூசாமல் பொய்களை கயமை புன்னகையோடு கக்கிச் செல்வார்கள்.


பெரும்பாலும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏதாவது ஒரு வகையில் மோசடியில் ஈடுபட்டு மக்களை தந்திரமாக ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளிவந்த இமானுவேல் திரைப்படம் கூட அந்த விசயத்தை ஆழமாக பேசி இருக்கிறது. 


இந்த படைப்பு பொலீட்சர் விருது பெற்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து நடத்திய நிதி நிறுவனங்கள் எழுபத்தாறு நாடுகளில் வியாபித்து செய்த 3500 குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டிய கட்டுரை தொகுப்பே ‘சீக்ரஸி வேர்ட் இன்ஸைட் தி பனாமா பேப்பர்ஸ்’ என்கிற நூல்.


யெல்லா என்கிற மூதாட்டி தன் கணவன் இறந்ததற்கான இன்சூரன்ஸ் தொகையை வாங்க முயற்சிக்கையில், அந்த நிறுவனம் ஒரு டுபாகூர் நிறுவனம் என்பது தெரிய வருகிறது.  

தன்னை அத்தனையும் கைவிட, தான் கொண்ட தன்னம்பிக்கையோடு சட்ட யுத்தம் நடத்தி அறத்தை நிலை நாட்டுகிறாள் யெல்லா. 


பெண்மை சக்தி மகத்தான சக்தி. அத்தனை சக்திகளுக்கும் மூலம் அது. அதன் வீரியத்தை அதன் சுதந்திரமே பட்டவர்த்தணப்படுத்தும். யெல்லா ஒரு எளிய பெண். அவன் வலிய பெண்ணாக சூழ்நிலை நிமித்தம் ஆக்கப்படுகிறாள். இது சந்தேகமில்லாமல் ஒரு பெண்ணிய படைப்பு தான். மேக்சிம் கார்கியின் தாய் நாவலிலும் இப்படித்தான் எதுவும் தெரியாத அம்மா, சூழ்நிலை நிமித்தம் ஒட்டுமொத்த நாட்டின் அரசியல் விழிப்புணர்வாக ஒரு கட்டத்தில் விசுவரூபமெடுப்பாள்.


எஸ்கேப் ஃபிரம் சோபிபார்


போலந்து நாட்டில் உண்டாக்கப்பட்ட வதை முகாம்களில் யூதர்கள் பட்ட பாடுகளும், அதில் சிலர் தப்பித்த கதையையும் இந்த படைப்பு பேசுகிறது. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. அப்படியாக உண்மையிலேயே இந்த வதை முகாமில் இருந்து தப்பித்த, எஸ்தர் ராப் என்கிற பெண்மணி இந்த ஆக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறார். மோட்டார் சைக்கிள் டைரீஸ் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது, சேகுவேராவுடன் அந்த பயணத்தில் ஈடுபட்ட நண்பரின் நேரடி அனுபவத்தை அந்த இயக்குநர் இப்படித்தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறார். டைட்டானிக் படத்தில் கூட அதிலிருந்து தப்பித்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் நேரடி அனுபவத்தை ஜேம்ஸ் கேம்ரூன் கேட்டு அறிந்திருக்கிறார்.


எந்த போராக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. ஒரு யுத்தம் துவங்குகிறபோது, முதலில் அங்குள்ள பெண்களே குறி வைக்கப்படுகிறார்கள். எண்ணிலடங்காத பலாத்காரம், வன்புணர்வு இதுகாறும் நடைபெற்ற, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு யுத்தத்திற்கு பின்னும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. 


லிவ் டுவைஸ் லவ் ஒன்ஸ்


எமிலியோ என்கிற ஓய்வு பெற்ற கணித ஆசிரியருக்கு அல்சைமர் நோய் பிரச்னை வருகிறது. நினைவுகளை படிப்படியாக இழந்து கொண்டு வருகிறார். முழுமையாக நினைவு தப்புவதற்குள் தன் பால்ய கால சிநேகிதி மார்கரீட்டாவை சந்திக்க விரும்புகிறார். அவரின் பேத்தி பிளாங்கா அவருக்கு உதவுகிறாள். அவர்கள் பல சிரமங்களுக்கு பிற்பாடு அவளை சந்திக்கிறபோது, மார்கரிட்டாவும் அல்சைமர் நோயின் பிடியில் சிக்குண்டிருப்பதை தெரிந்து கொள்கிறார்கள். முடிவில் இருவருமே ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து கவனித்து கொள்ளப்படுகிறார்கள். அவர்களின் பால்ய கால சிநேகித நினைவுகளோடு அவர்களின் வாழ்க்கை அங்கே மறுபடி துவங்குகிறது. உடம்பு தாண்டிய காதலை கொண்டாடுகிற தாத்தாவை நவயுக பெண்ணான பேத்தி பிளாங்காவிற்கு பிடித்து போகிறது. அதன் காரணமாகவே அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க அவள் காரணமாக மாறிப் போகிறாள். பால்யமும், காதலும் மகத்துவமானது என்பதை பதின்பருவ பிளாங்கா உணர்ந்து கொள்கிற தருணம் இந்த படைப்பில் முக்கியமான ஒரு புள்ளி என்று தோன்றுகிறது.


45 இயர்ஸ்


குடும்ப அமைப்புகளின் போதாமையை பற்றி பேசுகிற படம். ஒரு அந்யோன்யமான தம்பதியர் தங்களின் 45 வது திருமண நாளை கொண்டாடுகிற அதே வேளையில், 50 வருடத்திற்கு முன்னால் இறந்து போன காதலியின் உடல் ஆல்ப்ஸ் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி வருகிறது. 


உடனே அந்த கணவர் காதலியின் நினைவில் கரைந்து போகிறார். அதை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி, அத்தனை காலம் அந்யோன்யமாக இருந்தும், அவரை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவெடுக்கிறார்.


இதன் இயக்குநர் குடும்ப அமைப்பின் போதாமை குறித்து அவருக்கே உரித்தான கோணத்தில் யோசித்து இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறார். எப்போதும் குடும்ப அமைப்பு ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரிசமமான உரிமைகளை வழங்குவதில்லை. ஆணுக்கு இருக்கிற உரிமைகள், பெண்ணுக்கு வழங்கப்படுவதில்லை. ஆண் எப்போதும் குடும்ப அமைப்பில் முதன்மை பாத்திரம் தான். பெண் இரண்டாம் நிலை பாத்திரம் தான் என்பதை இந்த படைப்பு சொல்லாமல் சொல்லி செல்கிறது.


இந்த படைப்பு தனிநபர்களை குற்றம் சுமத்துவதில்லை. நடக்கிற சிடுக்குகளுக்கு குடும்ப அமைப்பின் பார்வையை, எதிர்பார்ப்பையே காரணமாக முன்நிறுத்துகிறது. குடும்ப அமைப்பில் உள்ள பாலின சமத்துவமற்ற போக்கு இதன் வழியாக பூடகமாய் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. காதல் இனிப்பதும், கல்யாணம் அதிருப்தியை தருவதும் இதன் பின்புலத்தில் தான்- காதலிக்கிற போது அன்கன்டிஷ்னல் லவ்வை உணர்கிறார்கள். கல்யாணம் என்று வருகிற போது குடும்ப அமைப்பு அதன் சமனற்ற நிமித்தங்களை, நிபந்தனைகளை விதிக்க ஆரம்பித்து விடுகிறது. எந்த ஒரு உறவிலும் அன்கன்டிஷ்னல் லவ் இருக்கிறபோதே, எதிர்பார்ப்பற்ற, அகம்பாவமற்ற, சுயநலமற்ற, சாசுவதமான அன்பை தரிசிக்க முடியும் என்பதை இந்த படைப்பு உணர்த்துகிறது.


தி டூ போப்ஸ்


இரண்டு அறம் சார்ந்த பாதிரியார்களுக்கிடைய நடைபெறுகிற ஆழ்மன விசாரனையே இந்த படைப்பு. ஒருவர் பிரான்சிஸ். இவர் கார்டினல் பதவி உயர்வு பெறுகிறார். ஆனால் தனக்கு எந்த அடையாளங்களும், அதிகாரங்களும் தேவையில்லை. பாதிரியாராகவே தொடர விரும்புகிறேன் என்கிறார். இவர் மரபை தாண்டிய சிந்தனை போக்கு கொண்டிருப்பவர். மற்றொருவர் போப் ஆக இருக்கிற பெனடிக். இவர் மரபார்ந்த சிந்தனை போக்கு கொண்டவர். இரண்டு பேருக்கும் இடையே உள்ள முரண்கள் அவர்களின் உரையாடல்களில் ஆக்கப்பூர்வமாக வெளிப்பட்டிருப்பதற்காக காரணம், இருவரும் மனிதத்தை மதிப்பவர்கள். 

மகாத்மா என்கிற பட்டம் கூட மோகன்தாஸை உறுத்தியே இருக்கும்.

ஜென் மனநிலை என்பது அடையாளமற்று இருப்பது. மனதை கழுவி கழுவி எடையற்ற இறகாய் பறக்க விட்டிருப்பது. அப்படியான இலக்கு நோக்கியே இருவரும் வெவ்வேறு பாதை வழியே பயணிக்கிறார்கள். 


போஸ்ட் மார்டனிஸத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று அதிகாரத்தை துறப்பது. அந்த வகையில் இரு நாயகர்களும் பின்நவீனத்துவவாதிகளாக உணரத் தக்கவர்கள். இறுதியில் பெனடிக் புதிய போப்பாக பிரான்சிஸை நியமிக்கிறார். அடையாளங்களை தொலைக்க விரும்புகிற நபரிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் உச்சக்கட்ட காட்சி.


இவர்களின் உரையாடல் மதத்தின் சாதக, பாதக நிகழ்கால அம்சங்களை அலசுகின்றன. மதங்கள் மானுடத்தை பண்படுத்துவதற்காகவே தோன்றியிருக்கிறது. அதேசமயம், அதில் அரசியல் சாயம் கலக்கப்படும் போது, அது நிறுவனமயமாகி விடுகிறது. ஆணாதிக்க சமூகத்தின் கூறுகளும், மதங்களின் அடிப்படைவாததன்மையும் அதில் கூட்டாச்சி செய்ய ஆரம்பித்து விடுகின்றன.


மனோ தத்துவத்தின் தந்தையாக போற்றப்படும் ஃபிராய்டின் நீட்சியாக கருதப்படுகிற கார்ல் யூங் 1914 ல் கலெக்டிவ் அன்கான்ஷியஸ்னெஸ் என்கிற தன்னைத் தானே தன்னின் கனவு நிலை குறித்த அன்கான்சியஸ் மனநிலையை ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஒவ்வொரு மனிதரின் ஐடன்டிட்டியில் அடையாளத்தில் அவரவர் மட்டுமே தனித்திருப்பதில்லை. காலங்காலமாய், யுகம் யுகமாய் மரபணுக்களின் வழியாக பயணித்து வந்திருக்கும், அவர்களின் மூதாதய பண்புகள் தொன்மங்களாக அவர்களோடு கூட்டு பயணம் நிகழ்த்தியவண்ணம் இருக்கிறதை அவர் கனவில் கண்டடைந்த ஓவியங்கள் வழியாக, கனவை தொடர்ந்த அடுத்தடுத்த நொடிகளில் வரைந்து வரைந்து சேகரித்து, அதற்கான விளக்கத்தோடு நூலாக்கி இருக்கிறார். அப்படியான கூட்டு ஆழ்உறைமனநிலை பண்புகளின் கூறுகளே ஓரினச்சேர்க்கை முதலான பல விசயங்களுக்கு காரணிகளாக இருக்கின்றன என்பதை அதில் விளக்கியுமிருக்கிறார். அப்படியான ஒரு விசயம் இந்த படைப்பிலும் இடம் பெற்றிருக்கிறது. 


இருக்கட்டும். கார்ல் யூங் எழுதிய அந்த நூல், ஒரே ஒரு பிரதி மட்டும் தான் அவர் பிரத்யேகமாக அச்சிட்டிருக்கிறார். அந்த நூலை யாருக்கும் அவர் தரவில்லை.  ஆனால் பத்திரமாக தன்னுடைய சேஃட்டி லாக்கரில் வைத்து இருந்து இருக்கிறார். 2007 ல் அவரின் வழி வந்த மனோவியலாளர்கள் முயற்சியில் அந்த நூல் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு அறிவியல் உலகில் மிகுந்த கவனிப்பை பெறுகிறது. அப்படியான கலெக்டிவ் அன்கான்சியஸ்னெஸின் சூட்சுமங்களை தான் இரண்டு வெவ்வேறு கோணங்களில் இருந்து அலசி இறுதியில் அவர்களின் ஒற்றை இலக்கான மனிதம் என்கிற புள்ளிக்கு வந்து சேர்கிறார்கள். 


இந்த நூலின் மைய பண்பிற்கேற்ப இந்த படைப்பில் பெண் கதாபாத்திரம் எதுவும் இடம் பெறவில்லையே என்று தோன்றுகிறதா? அப்படியான பெண் கதாபாத்திரம் இல்லை தான். ஆனால், பாலின சமத்துவத்தை அடிகோல துடிக்கிற பெண் மனதின் ஆன்மா குறித்து பெண்மையை சமமாக பாவிக்க விரும்புகிற இந்த இரண்டு கதாபாத்திரங்கள் வாயிலாக அலசப்படுகிறது. அப்படித்தான், மதங்களின் தலைபீடங்களில் எந்த ஒரு பெண்ணும் அமர்த்தப்படுவதில்லை என்கிற சமனற்றதன்மையை மனிதத்தோடு இதன் மைய கதாபாத்திரங்கள் ஆய்ந்து பட்டவர்த்தனப்படுத்துகின்றன.


ரோமா


இந்த திரைப்படம் வெளிநாட்டு திரைப்படங்களின் பிரிவில் மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறது. அதில் ஒன்று இதில் வளர்ப்பு தாயாக நடித்திருக்கும் நாயகிக்கு கிடைத்திருக்கிறது. இன்னொன்று இதில் குழந்தைகளின் தாயாக நடித்திருப்பவருக்கு சப்போர்ட்டிங் ஆக்ட்ரஸ் பிரிவில் கிடைத்திருக்கிறது. இதுவே இந்த படத்தை இந்த நூலின் ஆன்மா அலசுவதற்கான காரணமாகவும் அமைந்து விடுகிறது. 


நிராதரவாக விட்டுச் செல்லப்படுகிறது ஒரு வசதியான குடும்பம். அந்த குடும்பத்தின் ஆண் வேறொரு பெண்ணோடு சென்று விடுகிறான். இந்த குடும்பத்தில் இருந்த செவிலி பெண் அந்த குடும்பத்து அங்கத்தினராகவே மாறி அந்த குழந்தைகளை காப்பாற்றி, கரையேற்றுகிறாள். அவளுமே இந்த தாய் சந்தித்த துரோகங்களை சந்திக்கிறாள். அதன் விளைவாக கருவுற்று இறந்தே பிறக்கிறது அந்த குழந்தை. அதன் பிறகு தான் அந்த தாயின் மூன்று குழந்தைகளுக்கு அவள் பெறாத தாயாக உருவெடுக்கிறாள். இது இந்த படத்தின் இயக்குநர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் மீளுருவாக்கம். உண்மையான அந்த வளர்ப்பு தாய்க்கு இப்போது 72 வயது. பெயர் லிபோரியா ரோட்ரிக்ஸ். அவர் இந்த படத்தை பார்த்து விட்டு அழுது விட்டதாக தெரிவித்திருப்பதாக கூறுகிறார் இந்த நூலின் ஆசிரியர் ஜோஸபின்.


இந்த படத்தின் துவக்கத்தில் ஒரு படிம காட்சி இடம் பெற்றிருக்கும். அதில் படத்தின் நாயகியான அந்த பணிப்பெண் தரையை துடைத்துக் கொண்டிருப்பாள். அதில் ஒரு சாளரம். அதன் வழியாக வானம். அதில் கடந்து போகும் விமானம் என அத்தனை உயரங்களும் அவள் காலடிக்கு கீழ் பிம்பங்களாக நகரும். 


ஜோக்கர்


ஜோக்கர் என்கிற கதாபாத்திரம் நகைச்சுவை காமிக்ஸ் உலகில் மிக பிரபலம். அப்படியான ஆர்தர் ஃபிளெக் ஒர நகைச்சுவை நடிகராக ஆசைப்படும் ஒரு எளிய மனிதர் தான். நோய்வாய்ப்பட்ட அம்மா, ஏழ்மை, நிராசைகளின் படையெடுப்பால் ஆர்தரின் வாழ்க்கை தனது பிடியை படிப்படியாக இழக்க துவங்குவதாக இந்த கட்டுரை துவங்குகிறது.


மனநோயினால் அவதிப்படும் ஆர்தரின் வாழ்க்கை கட்டுப்பாடற்ற பிரமைகள், வன்முறை, அராஜகம் என சுழல்கிறது என்கிற வாக்கியம் ஜோக்கர் பற்றிய துல்லியமான சித்திரத்தை மனதில் பதிய வைத்து விடுகிறது. 

இரயிலில் ஒரு பெண்ணை சீண்டிய மூன்று நபர்களை கொலை செய்கிறவன், சோஃபி என்கிற கற்பனை காதலி எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன்னை கைவிடாதல் அவள் என கற்பனை செய்து கொண்டு கொண்டாடுகிறவன், சிறுபிராயத்தில் தன்னை அம்மாவின் காதலன் கொடுமைப்படுத்தியதை அம்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் என்பதை உணர்ந்ததும், அவளை கொலை செய்கிறவன் தான் மனபிறழ்விற்கு உட்படுத்தப்பட்ட இந்த ஜோக்கர்.


பெற்றோர்களின் நீட்சி அல்ல குழந்தைகள். பெற்றோர்களின் வழியாக வருகிறவர்கள். அவ்வளவே என்று கலீல் ஜிப்ரான் சொன்னது இங்கே போகிற போக்கில் ஞாபகம் வருகிறதை தடுக்க முடியவில்லை.


சராசரி பொதுபுத்தியும், சுயநலமுமாக இருக்கிற பெண்ணை எதிர்நாயகனின் தாய் கதாபாத்திரம் வழியாக காட்சிக்கு வைக்கிறது. இதுவும் உண்மையான பெண்ணியம் நோக்கிய பயணத்திற்கு சிந்தனையில் வழி வகுக்கிற பாதையை கட்டமைக்கிறது என்பது உண்மை தான்.


லாலாலேண்ட்


இந்த படம் காதலுக்காக காதலையே தியாகம் செய்கிற காதலை பற்றி கவித்துவமாய் பேசுகிறது. காதல் என்பது பெறுவதல்ல. கொடுப்பது. கொடுத்துக் கொண்டே இருப்பது என்பதை இங்கே பெண்மை தொட்டு செல்கிறது.


இதனை தொடர்ந்து சில இந்திய படங்களின் கட்டுரைகளையும் இந்த நூலில் இணைத்துள்ளார். அவை பற்றி சில வரிகளில் பார்க்கலாம். குயின். இந்த படம் தமிழில் முன்பு வெளிவந்த புது வசந்தம் என்கிற கதையின் மீளுருவாக்கம் என்று சொல்லலாம். தன்னை புரிந்து கொள்ளாத காதலனை துறந்து, தன்னை நம்புகிற நண்பர்களுக்காக வாழ துவங்குவது தான் இரண்டு படைப்பின் அடிநாதம். அப்படியாக தன்னை புரிந்து கொள்ளாத காதலனை துறந்து, புதிதாக கிடைத்த நண்பன் இத்தாலிக்காரனிடம் காதல் வயப்படுகிறாள் கதை நாயகி ராணி. தன் காதலை அவமதிக்கும் எதிர்நாயகனை நிராகரித்து, தன் காதலை மதிக்கும் இன்னொரு நபரை ஒரு பெண் காதலிக்கலாம் என்கிற சிந்தனையை பதிக்கிறாள் இந்த குயின்.


லஞ்ச் பாக்ஸ் கணவனால் தன் கனவுகள் யாவும் நிராசையாகி போன ஒரு பெண் புதிய காதலை தேடிக் கொள்கிற கதை. ஒன்ஸ் அகெய்ன் பெண் என்பவள் எதற்காகவும் பிறரை சார்ந்திருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிற படம். சார் என்கிற இந்தி படம் ரத்னா என்கிற கைம்பெண் அவள் வேலை செய்கிற வீட்டில் உரிமையாளரின் மனதில் இடம் பிடித்து எப்படி கரம் பிடிக்கிறாள் என்பதை பேசுகிறது. அவளுக்குள் எழும் தன்னெழுச்சி காரணமாக அவளுக்குள் இருந்த பொருளாதார ரீதியிலான காம்ளக்சில் இருந்து மீண்டு அவள் எப்படி மிளிர்கிறாள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த காதல் கதை. வித்யா பாலன் நடித்த ஷெர்னி வனங்கள், இயற்கை, விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே நடக்கிற யுத்தம் என்பது இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையே நடக்கிற யுத்தகமாக விரிகிறது. இந்த உலகம் மானுடத்திற்கு மட்டுமானதல்ல. எல்லா உயிரினங்களுக்குமானது என்பதை இந்த படைப்பு அடிக்கோடிட்டு காட்டுகிறது. வனவிலங்கு பாதுகாப்பு என்பது வாயில்லா ஜீவன்கள் மீது காட்ட வேண்டிய கருணை. அதை தான் முன்பே பல்லுயிர் ஓம்புதல் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். வனங்களையும், வனவிலங்குகளையும் மதிக்கிற போதே சுற்றுச்சூழல் சிறக்கும். கொரோனா போன்ற இயற்கை பிறழ்வுகளின் விசித்திரங்கள் வராது தடுக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி செல்கிற கதை. காது கேட்காமல், வாய் பேசாமல் பிறந்த ஹெலன் கெல்லர் எப்படி பிரெய்ல் எழுத்துகளை கண்டுபிடிக்க காரணமாக இருந்தாரோ, அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜி இந்த பிளாக் திரைப்படத்தில் வாழ்ந்து இருக்கிறார். தொடுவுணர்ச்சி வழியாக அவர் எப்படி ஒரு கல்விமானாக பரிமளித்தார். வாழ்வின் சவால்களை எப்படி எதிர்கொண்டார் என்பதை உணர்வார்த்தமாக வெளிப்படுத்துகிறது இந்த கதை. ஷிகாரா. விதுவினோத் சோப்ரா இயக்கிய படம். முக்கிய கதாபாத்திரங்களாக சிவ்குமார் அவனின் மனைவி சாந்தி மற்றும் அவனின் நண்பன் லத்தீஃப் ஆகியோர் இடம் பெறுகிறார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான காஷ்மீர் பண்டிட்டுகளை இசுலாமிய அடிப்படைவாதிகள் காஷ்மீரை விட்டு வெளியேற்றிய மனித உரிமை மீறல் சம்பவத்தை பின்புலமாக வைத்து பின்னப்பப்டட கதை. இந்த படைப்பின் வாயிலாக தலைமை என்பது மக்களை பிரித்து ஆள்வது அல்ல. ஒற்றுமையாக சேர்த்து வைத்து ஆள்வதே என்கிற கருப்பொருளை முன்நிறுத்துவதாக இந்த கட்டுரை வாயிலாக ஜோஸபின் குறிப்பிடுவது சிந்தனையை தூண்டுகிற வரிகள். முத்தாய்ப்பாக, பிங்க் என்கிற படம் தாப்சி கதாபாத்திரம் வழியாக நோ மீன்ஸ் நோ என்பதை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. பிங்க் என்றால் பெண்களின் சுதந்திரம் என்று அர்த்தம். 


இப்படியாக தரமான உலக சினிமாக்களோடு, இந்திய சினிமாகளையும் சேர்த்து தான் எழுதிய கட்டுரைகளை தொகுத்து இந்த நூலை சிருட்டித்திருக்கிற ஜோஸபின், புதிய சினிமா என்பதற்கு கலை அந்தஸ்தை இந்த புத்தகம் வாயிலாக வழங்கி இருப்பதை மனப்பூர்வமாக உணர முடிகிறது. எத்தனை விதமான பெண் ஆளுமைகள் இந்த படைப்புகளுக்குள் ஊடாடுகிறார்கள். அத்தனையையும் ஒரு சேர தரிசிக்கிற வாய்ப்பை இந்த நூல் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

*


      




9 Aug 2022

காட்டுத்தனம்-அழகுமித்ரன் -Novel

 

கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பி பிறப்பிடமாக கொண்ட அழகு மித்ரன் இதழியலில் முதுகலை பட்டம் பெற்றவர். நாடகம், கவிதைகள், கதைகள் எழுதி வருபவர். ஆவணப்படங்கள் இயக்கியுள்ளார். தற்போது வனத்துறையில் பணியாற்றி வருகிறார்.

காட்டுத்தனம் என்ற நாவல்,  காட்டின் பாதுக்காப்பை மையமாக கொண்டு எழுதுப்பட்ட நாவல். கதை நடக்கும் காலம் 1980-2000  வரை உள்ள காலம்.  தீ-தடுப்பு காவலர் குடும்பத்தை கதாப்பாத்திரங்களாக கொண்டு கதை நகர்கிறது.  அக்குடும்பத்திலுள்ள தனலக்‌ஷ்மி கதை சொல்லும் பாணியில் கதையை அமைத்துள்ளார் ஆசிரியர்.

 

20 வருடம் கடந்த நிலையில், தனது சித்தப்பா மற்றும் தம்பி அர்ஜுன் குடும்பத்துடன் சொந்த ஊர் காண வருகிறார் தனலட்சுமி. இரயில் பயணத்தின் இடையில்  நினைவாக கதை விரிய ஆரம்பிக்கிறது.

காட்டின் அழகு, அங்கு இருக்கும் பறவைகள் உயிரினங்கள் அதன் பழக்க வழக்கங்கள், காட்டு பழங்கள், காட்டின் இயல்பு, பற்றி பல இடங்களில் விவரிக்க படுகிறது சுவாரசியமகா உள்ளது.  வயிற்று பிழைப்பிற்காக காட்டை நம்பி இருக்கும் காட்டின் அருகில் வசிக்கும் ஏழை மக்கள், அதே காட்டில் சாராயம் காய்ச்சும், கள்ளக்கடத்தல் செய்யும் அடாவடி சனங்கள், பெண்களை பாலியலாக துன்புறுத்தும் மக்கள், காடு கொள்ளைக்கு  துணை போகும் அதிகாரிகள் என்ற நிலையும் விவரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நல்ல அதிகாரிகள் காட்டை  காக்க வரும் போது  நிகழும் மாற்றங்கள் என கதை நகர்கிறது.

 

தனது தம்பி அம்மா அப்பா அடங்கிய குடும்பம். பாசமான அம்மா கலகலப்பான தினம் தினம் கதை சொல்லும்  அப்பா,  அனுசரனையான தம்பி என்று போய் கொண்டு இருந்த வீட்டில்;   திடீர் என தகப்பனார் இறப்பதுடன் தனலட்சுமியின் கல்வியும் தடை படுகிறது. தாயாரும் சுகவீனமாக மாறி விட்ட சூழலில், தனது தம்பியை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு பாக்கியம் மற்றும் மற்றும் தனத்துடன் காட்டில் விறகு மற்றும் நெல்லிக்கா பெறுக்கி விற்று வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறாள். தனத்திற்கு வன விலங்குமேல் இருக்கும் உணர்வுபூர்வமான  பிரியம் காடு தீ பிடிக்காது காப்பதுடன் தீ பிடித்தால் தடுக்க, தீயை அணைக்க என்று முனைப்புடன் செயல்படுகிறாள்.

 

இப்படி இருக்க செல்லன் என்ற ஒருவன் காட்டுக்கு செல்லும் பெண்களை பாலியலாக வல்லுறவு செய்யும் வழக்கம் உள்ளவனாக உள்ளான். செல்லன் வழியாக பண்ணையாரால் தான் தனது தந்தை தள்ளி விடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என தெரிந்து கொள்கிறாள்.  பண்ணையார் தனலட்சிமியின் அம்மாவிடம் தவறாக நடக்க ஒரு போது முயல்கிறான்,  அதை தனது அப்பாவிடம் அம்மா சொன்னதையும் தனலட்சுமி கேட்டு உள்ளாள். பண்னையாருக்கும் தனத்தின் அப்பாவிற்கும் நடந்த சண்டையில் தனலட்சிமியின் அப்பா இறந்து இருக்கலாம் என்று நம்பும் சூழல் வருகிறது.  தனது தகப்பனாரை செல்லன் அல்லது பண்ணையார் கொன்று இருக்கலாம் என்று நம்புகிறாள் தனம். செல்லன் ஒரு நாள் தனலட்சிமியை பாலியலாக துன்புறுத்த முயல்கிறான். தனக்கு நடந்த பாலியல் அச்சுறுத்தலையும் தனது தாயிடம் சொல்லாது தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு வருகிறாள்.  ஆனால் அதில் இருந்து தாயின் வார்த்தை மீட்கிறது தனத்தை.  

இன்னிலையில் தனலட்சிமியின் சித்தப்பா வந்து தனது அண்ணன் குடும்பத்தை சென்னை தன்னுடன் அழைத்து செல்கிறார் . அங்கு சென்ற மூன்றாம் வருடத்தில் தாயும் இறந்து போகிறாள்.

எல்லாம் முடிந்து இருபது வருடம் கடந்த நிலையில் தனியாளாக  தொழிலில் பிரகாசிக்கும் தனலட்சுமி தன் தோழிகளை  சந்திப்பதுடன் குழந்தை குட்டிகளுடன் வாழும் தனது தோழிகளுக்கு   நிறைய பணம்  தந்தும் உதவுகிறாள்.

தற்போது செல்லன் பாறையில் வழுதி விழுந்து இறந்ததை  அறிகிறாள். போலிசால் விசாரிக்கப்பட்ட பண்ணையார் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கிறான். தனலட்சுமியிடம் கல்வி கற்ற கணபது தற்போது  வனத்துறை அதிகாரியாக உள்ளான்.

 

இந்த நாவலில் கடவுள் கண்டிப்பார், சட்டத்தை அணுகுவதை கதாப்பாத்திரங்கள் விரும்பாது இருப்பது, ஆண்களீன் பாலியல் வன்முறைக்கு பெண்கள் எளிதாக இலக்காகுவது என்ற வகையிலுள்ள சில இடங்களீல் உள்ள கதைப் பின்னல் காலச் சக்கிரத்தில் பெண்களை 19 நூற்றாண்டின் துவக்கத்திற்கு தள்ளுவதை அரசு ஊழியரான கதாசிரியர் தடுத்து இருக்கலாம்.

காட்டுத்தனம் குணம் கொண்ட தன லட்சுமி, யானைகள் கூட பணியும் தனலட்சுமியை காட்டுத் தனம் என்று புனைந்துள்ளார். தன் சகோதரன் திருமணம் செய்து குழந்தை குட்டிகளுடன் வாழ தனத்தை மட்டும் திருமணம் செய்ய விடாது தனி ஆளாக விட்டுள்ளது இயல்பயும் கடந்த  பெண் பரிசுத்தம் அல்லது பெண் விடுதலையா என்ற கேள்வி மனதில் மிஞ்சாது இல்லை.

 

 

 

 

  

தாணப்பன் கதிரின் முதல் சிறுகதை தொகுப்பு-சுற்றந்தழால்

 


திருநெல்வேலியை சேர்ந்த பா. தாணப்பன் என்கிற தாணப்பன் கதிர்  எழுதிய முதல் சிறுகதை தொகுப்பாகும் ”சுற்றந்தழால்” . தனது தந்தை ப். பரதேசியா பிள்ளை அவர்களுக்கு இப்புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர், கவிஞர், நெல்லையின் பிதாமகன் வண்ணதாசன் அவர்கள் முன்னுரை எழுதி உள்ளார்.

 

முன்னுரையில் எழுத்தாளர் குறிப்பிட்டு உள்ளது போலவே எழுத்தாளரின் வாழ்வோடு இணைந்த காட்சிகளை சிறுகதை எனும் உருவத்திற்குள் கொண்டு வந்துள்ளார்.

 

இத்தொகுப்பில்  ஆக 15 கதைகள் இடம் பெற்றுள்ளன.

ஆசாரம் , தீட்டு என வாழும் பிராமண குடும்பத்தில்  ஆணாக பிறந்து  பெண்ணாகி மாறின நபர்,  தனது தகப்பனார் இறந்த போது தனது தாயை தன்னுடன் அழைத்து செல்வதுடன்  முதல் கதை பிருகன்னளை முடிகிறது.

தாங்கள் வளர்க்கும் பசு தொலைந்து போவது அது பிற்பாடு கோயில் பசுவாக மாறுவதும், பசுவை பிரியும் துயருடன் கதை முடிகிறது.  அடுத்த கதை கொரோனா தொற்று மக்களை பாதித்த விதம், திருநெல்வேலி வாழ்க்கை சூழல் மாறின விதம்,   கொரோனா வேளையில் ஆட்குறைப்பு  என்ற பெயரில் நிர்வாகம் முடிவெடுத்த போது, சிறப்பாக வேலை பார்த்து வந்த ஆசிரியை இழந்த வேலை அதனால் பாதிப்படைந்த ஆசிரியையின் குடும்பம் என கதை நகர்கிறது.

 

 சுற்றந்தழால் என்ற கதை; திருமணம் ஆகி சடுதியில் விவாகரத்து ஆன தம்பதிகள் பற்றிய கதை. அடுத்த கதையில் தனது தாயாரின் தூண்டுதலால் விவாகரத்து கேட்ட மனைவி, பின்பு மனம் மாறி தனது காதல் கணவருடன் இணையும் கதை. அடுத்த கதையில் பிரஞ்சை இல்லாது கடந்து போகும் திருநெல்வேலி வரலாற்று இடங்களில் ஒன்றான தைப் பூச மண்டபம் பற்றி குறிப்பிட்டு உள்ளார் என்பது சிறப்பு.

 

எப்போதும் அம்மா வீட்டில் இருந்த  கிடைக்கும் பொருட்கள் மேல் பெண்களுக்கு எப்போதும் ஒரு ஈடு பாடு உண்டு. அவ்வகையில் கிடைத்த சாதம் குக்கர் உடையும் வரை பயண்படுத்தி கடையில் பழைய பொருளாக கொடுக்க வேண்டி வந்த துயரை சொல்வது நெகிழ்ச்சியாக உள்ளது நெளிந்த நேசம் என்ற கதையில்

 

’இறங்கும் மனிதர்களும் இரங்கா மனிதர்கள்’ என்ற கதை ஊடாக கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் தொழிலாளகளின் துயரை பற்றி அறிகிறோம்.

 

ஈரம் என்ற கதையில் பக்கத்து மாநிலங்களிடம்  உள்ள தண்ணீர் பிரச்சினை அரசியலாக இருக்கும் வேளையில், பக்கத்து வீட்டுக்காரர்களுடன்  தண்ணீர் பிரச்சினையை தீர்க்க இயலாது உள்ள சூழலை  விளக்கியுள்ளார்.

அப்பாவிற்கும் தனக்குமான உணர்வு பூர்வமான உறவை,  டயறி எழுத்து போன்றவற்றுடன் இணைத்து எழுதி உள்ளது உணர்வு பூரமாக உள்ளது.

 


நவீன கலத்தில் வேலைக்கு போய் வந்து வாழும் அவசர வாழ்க்கையில் இணையம் ஊடாக பகிரும் வாழ்த்துக்கள் தரும் சின்ன சின்ன சந்தோஷங்கள் பறிறி அடுத்த கதையில் காணலாம்.

வீட்டில் வளர்த்த தென்னைம்பிள்ளை வெட்டப்பட்டதில் உள்ள சோகத்தை வடித்துள்ளார் அடுத்த கதையில்.

 

அடுத்த கதை ஒரே ஊரில் இருக்கும் காதலியின் பிரிந்து போக வேண்டிய பிரிவு அடுத்த  நிறைவு கதையாக திருநெல்வேலியில்  வயல்கள்  சாலைகளாகவும்  விபத்துக்களின் விளைனிலமாக மாறும் அவலம் பற்றி சொல்லப் பட்டுள்ளது.

 

இப்படி ஒவ்வொரு கதையும் திருநெல்வேலி மனிதர்களையும் திருநெல்வேலி வாழ்க்கையையும் இங்கய சமூக சூழலையும் விளக்கி விதம் எளிய, நேர்கோட்டில் கதை சொல்லும் பாங்காக இருந்தது. சில கதைகளுக்கு இன்னிம் மெனக்கெட்டு இருக்கலாம் என்று தோன்றியது.

மனித உறவுகள், சமூக பிரச்சினைகள், சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் என கதைகள் யாவும் சமக்காலத்தின் பிரச்சினையை  நினைவுப்படுத்தி கொண்டே இருந்தது என்றால் மிகை அல்ல.