10 Mar 2012

நெல்லை பல்கலைகழக கருத்தரங்கம்- நடந்தது என்ன?

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் குற்றவியில் துறை சார்பாக நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பங்கு பெற வந்த பெண் சிங்கள பேராசிரியர் ஒருவரை சில இயக்கங்கள் பேச விடாது வெளியேற்றியுள்ளனர்.   கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை ஜீவா நிரியல்லா என்பவரே அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்.  வெள்ளி அன்று தன்னுடைய கட்டுரையை சமர்ப்பிக்க இருந்த சூழலில் வியாழன் மாலை அன்றே வெளியேற்றப்பட்டுள்ளார்.  தினமணி பத்திரிக்கையில் முதல் பக்க செய்தியாக அறிய கிடைத்த இச்செய்தியில் ஆசிரியையின் கருத்துக்கள் பதியப்பட வில்லை.

 ஒரு பேராசிரியையிடம் கட்டுரை சமர்ப்பிக்க வந்த இடத்தில் நடந்து கொண்ட விதம்  சரியானதா? மேலும்  அவர் சமர்ப்பிக்க இருந்த கட்டுரை பற்றி ஒரு புரிதல் பல்கலைகழக குற்றவியல் துறைக்குக் தெரிந்திருந்தே அனுமதிக்கப்பட்டுள்ளார். பேராசிரியை பேசுவது இந்திய இறையாண்மைக்கு, தமிழ் உணர்வாளர்களுக்கு காயப்படுத்துகின்றது என்றால் ஏன் அனுமதித்திருக்க வேண்டும்.  அவர் கட்டுரை சமர்ப்பிக்கும் முன்னே ஆர்ப்பாட்டகாரர்களால் தடை செய்யப்பட காரணம் என்ன? பெருன்பான்மையான தமிழகர்கள் மத்தியில்  சிறுபான்மை சிங்கள பெண்ணாக இருந்ததாலா? என பல கேள்விகள் எழுகின்றன. சிறப்பாக  பெண்கள் தினத்தற்றே ஒரு பெண்ணை அவமதித்ததின் காரணம் தான் என்ன? 

மேலும் பல்கலைகழகம் என்பது கல்வித்துறை, மாணவர்கள், குறிப்பாக ஆராய்ச்சி சம்பந்தப்பட்டதாக இருக்கும் போது   கருத்தரங்கு அறைக்குள் நுழைந்து கோஷங்கள் எழுப்ப "எ.பி.சி.டி" கட்சிகளுக்கு உரிமை கொடுத்தது யார்?  சட்டப்படி இது நியாயப்படுத்த தகுமா என்பதும் சிந்திக்க வேண்டியுள்ளது. கருத்தரங்கில் பேராசிரியை முரண்பட்ட கருத்துக்கள் கூறியிருந்தாலும் அவரிடம் விவாதம் செய்ய மாணவர்கள் பேராசிரியர்களுக்கு வாய்ப்பு உள்ள போது;  பல்கலைகழகம் வெளியில் இருந்து வரவழைக்கப்பட்ட சிலரால் விரட்டப்பட்டதின் நோக்கம், தாக்கம் என்ன என்றும் வினவ வேண்டியுள்ளது. 

கட்சி போராளிகளுக்கு பயந்து, தலை வணங்கி ஒரு பேராசிரியை நாட்டில் இருந்து வெளியேற்றிய பல்கலைகழகம் எந்த விதத்தில் நீதியாக செயல் கொண்டது என்பதையும் நோக்க வேண்டியுள்ளது. அல்லது பல்கலைகழகம் சார்பில் நடத்தப்படும் ஒரு கருத்தரங்கம் ஆரம்பிக்கும் முன் “கானா- மான” கட்சிகளிடம் அனுமதி வாங்கியே நடத்த வேண்டும் என்றால் கல்வித் துறை அரசியல் கட்சிகளின் கையேந்திகளா? அல்லது அடிமைகளா?  சமூகத்தில் ஆக்க பூர்வமான கருத்துரையாடல்கள் நடைபெறாத  சூழலில், கல்வி நிலையங்களிலாவது சுதந்திரமான ஆக்க பூர்வமான கருத்தாக்கங்கள்; சமூக-அரசியலில் தீர்வு காணாத பல பிரச்ச்னைகளுக்கு தீர்வாக பல ஆராய்ச்சிகள் இருக்கும் போது ஒரு பேராசிரியையில் பேச்சாற்றல் எழுத்தாற்றலை தடை செய்வது வழியாக மறுபடியும் ஒரு எமெர்ஜன்ஸி நாட்டில் ஏற்படுத்துகின்றனர்.http://tamil.oneindia.in/news/2012/03/09/tamilnadu-lankan-academic-evicted-from-nellai-varsity-function-aid0091.html

கல்வியும் அரசியலும் கூட்டி கலர்ந்து கல்வியில் தரம் குறைப்பது மட்டுமல்லாது கல்வியாளர்களையும் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பேராசிரியர்கள் சங்கமோ ஆசிரிய பெருமக்களோ எந்த கருத்தையும் தெரிவிக்காது தங்கள் நிலையை தக்கவைத்து கொள்வது வழியாக சுயநலவாதிகள் என்றே அறிய தருகின்றனர். தீவிரவாதம் என்பது ஆயுதம் ஏந்துவது மட்டுமல்ல , மற்றவர்கள் கருத்தை கட்டாயமாக மறுப்பதும் திணிப்பதும்  தீவிரவாதம் தான் !

28 Feb 2012

பொய்கள் உரைக்கும் ஊடகங்கள்!


மக்களுக்கு செய்தி, தகவல்கள் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு நல்கிய ஊடகங்கள் இன்று மக்கள் மத்தியில் பயம், பொய்கள் பரப்புவதில் மும்முரமாக செயல் பட்டுகொண்டிருக்கின்றது. தமிழ் பத்திரிக்கையில், பத்திரிகை தர்மம் என்பது  உண்டு என பலரால் புகழப்பட்ட தின மணி பத்திக்கை செய்திகள் பொய்களின் அணிவகுப்பாகவே உள்ளது .

தலையங்கம் என எழுதும் தலைமை ஆசிரியர், திடீர் என உணர்ச்சி வசப்பட்டு எது எதையோ எழுதி கொண்டு வருகின்றார்.  செய்திகளள விட இந்த காமடி பீஸ் எழுத்தை தேடி படிப்பது இன்னும் சுவாரசியமே.  மாணவன் ஆசிரியை கொலை செய்தி மறு நாள் “இறைவா எங்கே போகின்றோம் “ inamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=551168&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=தலையங்கம்:இறைவா, எங்கே போகிறோம்?என்ற தலையங்கத்தில் கண்ணீர் விட்டு உணர்ச்சிவசப்பட்டு  எழுதிய பத்திரிகை ஆசிரியர் சில கதைகள் சொல்லி புலைம்பியிருந்தார். அதில் ஒன்று மாணவர்கள் கெடாது இருக்க கடவுள் பயமே ஒன்றே வழி என்று சொல்லி விட்டு திடீர் என சாமியார்கள் மேல் சந்தேகம் வந்ததும் ஹாஜியார்,  பாதிரியார் என அனைவரையும் ஒரே குட்டைக்குள் இறக்கி விட்டு கதை கதையாக  கோள் சொன்னவர்  உண்மையான காரண காரணங்கள் பற்றி அலசாது முடித்து விட்டார். ஆனால் அதே வாரம்  ஒரு மாணவன் ஆசிரியரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட போது பத்திரிக்கை ஆசிரியருக்கு உணர்வோ கண்ணீரோ வரவில்லை.

அடுத்தாக கொள்ளைக்காரர்கள் கொல்லப்பட்ட போது கொள்ளையர்கள் தற்கொலை செய்து கொண்டது போல “கொள்ளையர்கள் சாவு” என முதல் பக்க செய்தியாக  வெளியிட்டது.  மட்டுமல்ல காவலர்கள் சொன்ன பொய் கதைகளை உண்மை கதை போன்று பக்கம் பக்கமாக வெளியிட்டனர். முந்தின நாள் தொலைகாட்சியில் சொன்ன செய்திகள் கூட பத்திரிக்கை செய்தியாக வந்து சேரவில்லை.  கொள்ளையர்களை பிடிக்கின்றேன் என  சமீபத்தில் குடியிருந்த  மக்களுக்கு பயமூட்டி 5 பேரை 200 பேர் சேர்ந்து எலியை அடிப்பது போல் கொடூரமாக கொல்லப்பட்டதை "சாவு” என முடித்து கொண்டது தினமணி. கொள்ளையர்கள் விடயத்தில்  5 பேரே கொன்று முடித்த பின்பு அவர்கள் முகவரி தேடும் காவலர்களையை நாம் காண்கின்றோம். போலிஸுக்கு அன்று ஏன்  அவசரம்? 5 உயிர்கள் பலியிடப்பட வேண்டும் என்ற கட்டளையா?    

இந்த நிலையில்  மத்திய அரசின் பயங்கர வாத தடுப்பு முகாம் என்ற கருத்தையும் மக்கள் நலனுக்கு தேவை என்பது போல்  எழுதி பக்கம் நிரப்பியது. http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=555372&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%3C/font%3E%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D!

பத்திரிக்கையின் குரல் மக்களின் மனசாட்சியாக இருக்க வேண்டும், ஆனால் ஆளும் கட்சியின் ஊது குழல் போன்று அல்லது அவர்களின் கைப்பாவைகளாக செய்தி இடுவதால் என்ன நியாயம் உண்டு.    எந்த செய்தியும் தகவல்களையும் ஆழமாக பகுந்தாய்வு செய்யாது பொய்  தகவல்களை மக்களுக்கு தருவதால் பயன் இல்லை என உணர வேண்டும்.
 
எங்கள் பத்திரிகை மாணவர்களுக்கு செய்தி தயாரிக்கும் பயிற்சி வகுப்பில் 5-6  பொருட்களை கொடுத்து ஒரு செய்தியாக எழுதி வர கூறுவது உண்டு. அவர்களும் அவர்கள் கற்பனை வளங்களை ஒன்று திரட்டி கதை எழுதி வருவார்கள்.  அதே போன்றே கொள்ளையன் பயன்படுத்திய சிவப்பு சட்டை காய்ந்து கொண்டு இருந்ததை வைத்து அவர்கள் குடியிருப்பை நெருங்கியதாகவும் போலிஸ் கதை சொல்லினர்.

அடுத்த நாள் தலையங்கமாக என்ன செய்தி வர போகின்றது என்று காத்திருந்த போது கூடங்குளம் பற்றிய கதையை அவிழ்த்து விட்டார். ஆசிரியரின் கருத்துப்படி ஆட்சி செய்யும் அரசு முன்பே கூடங்குளம் http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=557340&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%3C/font%3E%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D!எதிர்ப்பாளர்களை ஒடுக்கியிருந்தால் இந்த பிரச்சனைக்கு இடம் வந்திருக்காது என்றும் அணு உலை ஆபத்து என்றால் கூட இனி ஒன்றும் செய்ய இயலாது என்றும் தங்களுக்கு வரும் லாபத்தை மனதில் கண்டு செயலாற்ற  உபதேசம் செய்தார். அதாவது பழைய கால தமிழ் சினிமா போல் கொடூரனான முரடனால் கற்பழிக்கப்படட பெண் அவனுடன் வாழ்ந்து தன் வாழ்க்கையும் கண்ணீரில் மூழ்கி, படம் முடியும் போது அவனை திருத்துவாள் அல்லது அவள் மகனை வைத்து அவன் கதையை முடிப்பாள்! 


 பத்திரிக்கைகளுக்கு சமூக பொறுப்பு வேண்டும்.  எப்படியும் வாழ வேண்டும் என்று சொல்லும்  பத்திரிக்கைகள்; மாணவர்களுக்கு மட்டும் நீட்டி முழங்கி அறிவுரை சொல்லும் போது நகப்பு மட்டுமே வரும் அதில் அர்த்தம் ஒன்றும் இல்லை….. http://adiraipost.blogspot.in/2011/02/blog-post_08.html

23 Feb 2012

என்கவுன்டர் நீதி!!!

இனி நம் இந்தியாவில் சட்டம் நீதித் துறை, சிறைச்சாலைகள்,வழக்கு ஒன்றும் தேவை வராது. குற்றம் செய்தவர்களை, குற்றம் செய்ததாக  சந்தேகிப்பவர்களை குருவியைப் போல் சுட்டு ஒரே நாளில்  வழக்கை முடித்து விடலாம்!

மனித நலம், மனித உரிமை எல்லாம் காற்றில் பறக்க விடப் பட்டு    கொடிய முடிவுடன்  5 மனிதர்களை கொன்று வழக்கை முடித்துள்ளனர்.  இந்த என்கவுன்டர் வழியாக பல உண்மைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தான் உண்மை கொள்ளையர்களா அல்லது கை கூலிகளா என்பவை இனி இவர்கள் ஆவி வந்து சொல்லப்போவது இல்லை.

இதே போல் தான் கோயம்பத்தூர் பள்ளி குழந்தைகள் கொலையாளியை கொன்றும் கொலையின் பின்னனியை மக்கள் மத்தியில் வர விடாது செய்தனர்.

ஆயிரம் கோடிகள் கொள்ளையடித்தவர்களுக்கு;   அவர்கள் நியாயம் கதைக்க இடம் கொடுத்த போது இவர்கள் வெளி மாநிலத்தவர்கள் என்பதால் யார் என்றே கேள்வி இல்லாது கொல்லப்பட்டார்களா . அல்லது     இந்தியாவில் பிறந்த சாதாரண மனித உயிருக்கு  தான் விலை இல்லாது ஆகி விட்டதா? குற்றம் என்னவாகினும் குற்றம் விசாரிக்கப்படாது மனிதனை மனிதர்கள் வேட்டையாடியது நியாயமல்ல, நீதியுமல்ல!

  

19 Feb 2012

முல்லைப்பெரியார்-மீறப்பட்ட உரிமை மீறல்கள்!

சில அரசியல் லாபங்களுக்கு என சீண்டி விடப்பட்டு இரு இன மக்களின் வாழ்வில் உயிர்  பயம், வாழ்வாதாரம் பற்றிய கேள்வியை எழச் செய்த முல்லைப்பெரியார் பிரச்சனை காலத்தால் அழிக்க இயலாத சில வடுக்களையும்   தனி நபர்களுக்கு கொடுத்து சென்றுள்ளது.  தமிழக விவசாயின் வாழ்வாதாரவும் மலையாள கரையோர தமிழ் மக்களின் உயிர் பயவும்  ஒன்று சேர  இதை வைத்து ஆதாயம் அடைந்தவர்கள் சிலர்,  ஆனால் இழந்தவர்களோ பலர்.

தமிழக ஏழை மக்கள், கேரளா எல்கையை கடந்து  கூட்டம் கூட்டமாக கோஷம் எழுப்பியவாறு சென்ற போது ஆகா மக்கள் விழிப்பைடைந்து விட்டனர் அரசியல் தலைமை இல்லாதே தமிழர்கள் என்ற உணர்வுடன் போராடினர் என்று புல்லரித்து கொண்டிருந்த போதும்  பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டது. எல்கையை நோக்கி ஓடியவர்களில் மக்களுக்கென உயிரை துச்சமாக மதிக்கும் எந்த தலைமையோ பணக்கார விவசாயிகளோ அதிகார வர்கமோ இருந்திருக்கவில்லை. உயிருக்கு எந்த வித உத்திரவாதவும் கிடைக்காத ஏழை கூலித் தொழிலாளிகளே பெரும்பாலானவர்கள்!  

 எல்கையோரம்  நல்ல கூலியில் மலையாளி  நிலங்களில் வேலைசெய்த பல ஆயிரம் தமிழ் தொழிலாளர்களால் கேரளா தொழிலாளிகளின் வேலை பறிக்கப்படுவதாகவும் தாங்கள் கோரும்  ஊதியம்  விவசாய உடமைகளிடம் பெருவதில் சிக்கல் உள்ளதாகவும்;   கேரளா  தொழிலாளி சங்கத்தின் தூண்டுதலுடன் தமிழக தொழிலாளர்கள் கூலி வேலைக்கு கேரளா பக்கம் வரக்கூடாது என்று வற்புறுத்தப்பட்டனர்.  முல்லைப்பெரியார் என்ற பிரச்சனையை வைத்து  தமிழக தொழிலாளிகள்  எல்கை தாண்டி வரக்கூடாது என்பதில் கேரளா தொழிலாளிகளின் கடவுள் அச்சுதானந்தன் மும்முரமாக இருந்தார்.  (ஒபாமாவின் வேலை நயமே கேரளா அரசியல் வாதிகளால் மேற்க்கொள்ளப்பட்டது)

கிடைத்த கம்பு கட்டையுடன் கேரளா எல்கை நோகி சென்றவர்களை தாக்க மலையாளிகளும் வழியோரம் காத்திருந்தனர்.  மலையாளிகளின் கண்ணில் மண்ணை தூவி தமிழக புதல்வர்கள்   காட்டு வழியாக மலையாள எல்கை தாண்டி மலையாளிகளின் வீடுகள் என்று எண்ணி“ ரோஸா பூக்கண்டம்”(குமளிக்கு அருகாமையிலுள்ள இடம்) பகுதியிலுள்ள பல தமிழக வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதில்  ஒரு ஏழை தமிழ் பெண் உற்றோர் உறவினர் உதவி இல்லாது தன் நகை உடமைகளை விற்று, வீடு கட்டி கணவருடன் குடியேறி சில வருடங்கள் மட்டுமே ஆகியிருந்தன.

கேரளா எல்கையோரம் என்பதால் மட்டுமல்ல தேயிலை தொழிலாளர்கள் மற்றும் தமிழர்கள் வசிக்கும் பகுதி என்பதால் அரசியல்வாதிகள் மற்றும் மதவாதிகளால் புரக்கணிக்கப்பட்ட, மேலும்   ஒரு உருப்படியான கல்லூரியோ மருத்துவ மனையோ  கூட இல்லாத பகுதி இது.  தேக்கடி இருப்பதால் சுற்றலா பயணிகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை. ஆனால் கேரளா காங்கிரஸ் மற்றும் கம்னிஸ்டு அரசியவாதிகளால் பெண் வியாபாரம் மற்றும் மயக்கு மருந்து கடத்தலால்  ஊடகங்களில் இடம் பிடித்த பகுதியாகவே கேரளத்தவர்களுக்கு தெரியும்!

பல தமிழக குடும்பங்கள் வியாபார நிமித்தமாக  வசித்தாலும் குழந்தைகள் படிப்பு தமிழகத்தில்  தான் வேண்டும்  என்பதால் கம்பம் சின்னமனூர் பகுதியில்  குடும்பங்களை குடியமைத்திருந்தனர்.  மலையாள மக்களுடன் நெருங்கி வாழ்ந்த சூழலில் பழக்க வழக்கங்கள்  ஒன்றுமை இருந்ததாலும் மலையாளிகள் என எண்ணி தமிழர்களால் தமிழகத்தில் தாக்கப்பட்டனர்.  தாழ்த்தபட்ட இனத்தை சேர்ந்த தேயிலை தோட்டங்களில் அதிகாரியாக பணிபுரிந்த 70 வயதான முதியவர் தன் 3 மகள்களையும் திருமணம் முடித்து கொடுத்து விட்ட நிலையில்; ஓய்வு நாட்கள் தமிழக்த்தில் கழிக்க வேண்டும் என்ற நோக்கில்  ஒரு சிறு வீடு கட்டி தமிழகம் சின்னமனூரில் குடியிருந்தார்.  அவருடைய வீடும் கேரளாவில் ஒரு காலத்தில் வசித்திருந்தவர் என்ற காரணத்தால் அடித்து நொறுக்க்ப்பட்டது.

இன்னும் சில தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் வண்டிபெரியார் அரசு பள்ளிகளில் வேலை செய்தாலும் தங்கள் குழந்தைகள் தமிழக கலாச்சாரத்தில் தமிழர்களாக வளர வேண்டும் என்ற நோக்கில் கம்பம் பகுதியில் குடியிருந்தனர்.  கலவர நாட்களில் பால் வாங்க கூட வெளியில் வர இயலாது  வீட்டிற்க்குள் முடக்கப்பட்டனர், பொய் தமிழ் உணர்க்வாளர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.

என் தாய் உட்பட பல வயதான பெற்றோர்கள்  கிருஸ்துமஸ் விடுமுறைக்கு தங்கள் உறவினர்களை காண தமிழகம் வர குமளி எல்கை முடியும் மட்டும்  வந்து பல மைல்கள் கால் நடையாக நடந்து  “குட்டியானை” என்று அழைக்கப்படும் சரக்கு லாரியில்  10 ரூபாய் கட்டணத்திற்க்கு பதிலாக 65 ரூபாய் கட்டணம் கொடுத்து தமிழக எல்கை கடந்து பேருந்து பிடித்து தங்கள் உறவுகளை கண்டு சென்றனர்.

மனித நேயமற்ற நிகழ்வுகளும் நடந்தேறியது. கேரளா பேருந்தில் தமிழகம் நோக்கி வந்த வாகனத்தை மறித்து பேச வைத்து மலையாளிகள் என கண்டவர்களை நடு -காட்டு வழியில் இறக்கி விடப்பட்டனர். மலையாளிகளை போன்று உருவ ஒற்றுமையுள்ள தமிழனை அடிக்க வளைந்த போது அருகிலுள்ள  வீட்டில் வசித்த முன் பின் தெரியாத தமிழ் வீரத்தாய்” இவன் என் தம்பி” என்று சொல்லி மீட்ட சம்பவங்களும் நடந்தேறியது.

பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளும் சிறிதல்ல.  மலையாளியா தமிழச்சியா என்று பேச்சு மொழியில் கண்டு பிடிக்க திணறிய போது ஒரு ஆயுதம் ஏந்திய தமிழன் கேட்டானாம் “எப்படிடா மலையாளத்துகாரிகளை கண்டுபிடிப்பது எல்லாவளுமே தமிழில் பேசுகின்றார்கள் என்று”; அதற்கு அந்த அறிவு கொளுந்து செந்தமிழன் சொல்லி கொடுத்தானாம் ” காலை பாருடா மலையாளத்துகாரி கால் சுத்தமாக வைத்திருப்பாள்” என்று….என்ன கொடுமை இது……………?

தமிழகர்களின் உரிமை உணர்வு என பேசிகொண்டே பல சில தமிழகர்களின் உரிமைகள் வலைக்கட்டாயமாக பறிக்கப்பட்டது . நதி தண்ணீர் பங்கீடு என்பது இரு மாநில பிரச்சனையாக இருந்த போது இரு இன மக்களை மோதவிட்டு புரட்சி என்ற வடிவில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மனித உணர்வை என்ன சொல்ல? இந்த பிரட்சனையை இரு மாநில அரசியல்- அதிகாரிகள் பேசி தீர்க்காது அல்லது ஆக்கபூர்வமாக சட்ட சபையில் விவாதிக்காது தீர்வை தேடுவது தலையை விட்டு விட்டு வாலை பிடிப்பது போல் தான் ஆகும்.

நம் நாட்டிலுள்ள அரசியல் அமைப்பு சட்டங்கள் இப்பிரச்சனைக்கு என்ன தீர்வு சொல்கின்றன என காண வேண்டியுள்ளது.  ஆக்க பூர்வமான கருத்துரையாடலுக்கு தளம் அமைக்க ஊடகங்களும் முன் வரவில்லை.  கிளிப்பிள்ளை போல் முல்லைப்பெரியார் வரலாற்றை பற்றியும் பென்லிகுக் தியாகத்தை பற்றியுமே கதைத்து கொண்டிருந்தனர். ஒரு வெள்ளைக்காரனை புகழ்ந்த ஒரே நிகழ்வும் இது தான்!  மக்களால் தீர்வை எட்ட இயலாத பிரச்சனைகளுக்கு  தீர்வு சொல்ல வக்கில்லாத அரசியல் அமைப்புகள் அதிகாரிகள்- அரசியல்வாதிகள் தான் தேவையா?

முல்லைப்பெரியார் பிரச்சனையும் தீர்வை இல்லாது அவசர அவசரமாக முடிக்கப்பட்டு  ரோடுகளை திறந்து விட்டு தங்கள் கருணை உள்ளத்தை தமிழர்கர்கள் வெளிப்படுத்தியதாக காட்டி கொண்டனர்.  இந்த கருணை உள்ளத்தின் பின் வெறும்   வியாபார லாபம்   மட்டுமே என்பதே உண்மை!. கிறுஸ்துமஸுக்கு போத்து இறைச்சி வியாபாரம் செய்ய வழியற்று அழுத வியாபாரிகளின் வேண்டுதல் புதுவருட வியாபாரத்திற்க்காவது வழியை விட்டு புண்ணியம் தேடினர். ஒரு மாதம்  ஒரு லட்சம் வாடகை கொடுத்து வந்த குமளி வியாபாரிகள் கொசு விரட்டும் வேலைக்கு தள்ளப்பட்ட போது அரசு விழித்து விளக்காக வந்தது. இப்படியாக நம் நாட்டில் எழுந்த  புரட்சியை வியாபார நோக்குடன் தடையிட்டு முடக்கினர். எந்த நேரத்திலும் இதில் சில முரண்பாடுகள் எழும் போது முல்லைப்பெரியார் பிரச்சனையாக வரலாம்.

அதே நேரம் இதை பற்றி நம் சட்ட சபையில் ஆக்கபூர்வமாக ஏதும் விவாதங்கள் நடந்ததா என்றால் அதுவும் இல்லை.  சொல்லி வைத்து மட்டை பந்து விளையாடி தோற்பது போல் பல்- நாவை காட்டி எதிர்கட்சி தலைவர், ஆளும் தலைவர் என தங்கள் இருப்புகளை தக்கவைக்கின்றனர்.   விவசாயிகளின் கவலை அப்படியே நிலைகொள்கின்றது.  அரிசி விலை தங்க விலைக்கு சமமாக உயர்ந்தால் ஒருவேளை விவசாயிகளின் குரலும் கேட்கப்படலாம்.  மேலும் தமிழகத்திலுள்ள நீர் நிலைகளின் பராமரிப்பை பற்றியோ அதன் இன்றைய நிலையை பற்றியோ  இன்னும் கவலை கொள்ள ஆரம்பிக்கவில்லை.  பெரியார் நதி மேல் கொண்ட தமிழ் உணர்வு தாமிரைபரணி நதி என்றோ வைகை என்று கேட்டாலோ எழாதிருப்பதின் மர்மவும் புரியவில்லை.

உடையப்பட்ட வீடுகள் போலவே உடைக்கப்பட்ட மனித மனங்களை  யார் ஒட்டவைப்பர்  என்பதும் முல்லைப்பெரியார் பிரச்சனை போன்றே விடை தெரியாத கேள்வி தான்?

11 Feb 2012

ஆசிரியையின் கொலையாளி யார்?

 ஆசிரியை கொலைச் செய்தி மிகவும் துயர் தருவதும் அதிற்ச்சியூட்டுவதுமாக இருந்தது.  கொலை செய்யப்பட்ட ஆசிரியை நினைத்து கவலைப்படுவதா அல்லது கொலை குற்றவாளியான மாணவ குழந்தையை நினைத்து வருந்துவதா?

 பெற்றோர் வளர்ப்பு சரியில்லை  கல்வி திட்டம் சரியில்லை, ஊடக தாக்கம், இன்றைய குழந்தைகள் இப்படி தான்..... என பல காரணங்கள் சொல்லி விட்டு போவதை விட ஆசிரியர்கள் உலகம் தன்னை சரி படுத்தி கொள்ள வேண்டிய, தன் நிலையை உணர வேண்டிய  நாட்கள் இது என்றே எனக்கு விளங்கியது.

 ஒரு 9 வகுப்பு சிறுவன் 2 நாட்களாக தன் பையில் கத்தியுடன் திரிவதின் உளவியல் தாக்கம், வாய்ப்பு கிடைத்த போது "சதக் சதக்" என்று குத்தி கொலை செய்ததின் பின்னணியை ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. அவன் ஒரு கல்லூரி மாணவனாக இருந்திருந்தால் நம் சிந்தனை வேறு விதமாக இருந்திருக்கும். வெறும் 14 வயதே ஆன குழந்தையை கொடூர கொலை குற்றவாளியாக மாற்றிய மர்மம் தான் என்ன?. அவனுடைய தவறின் தாக்கம் விளங்கும் போது  இளமைக் காலம் மறைந்து அவனுடைய சாதாரண வாழ்கையை இழந்திருப்பான்.

இன்றைய சூழலில் மாணவர்களை சரியாக புரிந்து கொள்ள மறுக்கின்றோம் அல்லது குழந்தைகள் சமூக வாழ்வியல் மாற்றத்தில் சிக்கி தவிப்பதை காண தவறுகின்றோம் என்றே தோன்றுகின்றது.  பெற்றோர் வேலைக்கு செல்லும்  சூழலில் குழந்தைகள் தன் தாத்தா பாட்டி, ற்றோர் உறவினர்களிடம், இருந்து வெகுதூரம் பயணப்பட்டு தனிமையில் புதிய இடங்களில் வசிக்க தங்களை தயார்ப்படுத்தி கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர். அவர்களின் தேவையை பிரட்சனைகளை புரிந்து கொள்ளவோ அவர்களை அவர்களாக எண்ணி பார்க்கவோ நேரம் இல்லாது ஓடும் பெற்றோர் ஒரு பக்கம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்  என்ற போர்வையில் கைகொள்ளும் ன்முறைகள் இன்னொரு புறம்! 

பெரியவர்கள் தங்கள் சூழலின் நெருக்கத்திற்க்கு  தகுந்து வாழ பழக்கப்பட்டு கொள்ளும் போது  குழந்தைகளால் சமூக சூழலை புரிந்து தங்களை மாற்ற இயலாது கொள்ளும் ஒரு வித பயம் குழப்பம்,   உச்சகட்ட மன அழுத்த நிலையை இவ்வித கொலைக்கு இட்டு செல்கின்றது.
மனம் பேதலித்து அதன் நிலையை விட்டு நகழும் போதும் மாபெறும் சிதைவுகள் அவர்கள் மனதிற்க்கு மட்டுமல்ல செயலிலும் வந்து வெடிக்கின்றது. 

ஆசிரியை இறந்ததால் அவரை ஐயோ ..... என்று பரிதபிக்கும் நாம் அறியா பருவத்தில் 14 வயது சிறுவன்  கொலை, போலிஸ், ஜெயில் என்று கொண்டு செல்ல காரணமாக இருந்தது யார்? என்றும் கேட்க வேண்டியுள்ளது.

ஆசிரியர்களின் மனநிலை காலத்தின் போக்குக்கு தகந்தது போல் மாறியுள்ளதா என்றால் எதிர்மறையாகவே மாறி உள்ளது என்றே கூற இயலும். பிரம்பால் அடிக்க கூடாது என்று சட்டம் வந்த போது நாவால், செயலால் மாணவர்களை வதைக்கும் ஆசிரியர்களை காண்கின்றோம். பெற்றோர் தரம் சார்ந்து மாணவர்களை பிரித்து பார்ப்பது, தேற்வு மதிப்பெண் என்ற ஆயுதத்தை வைத்து மிரட்டுவது, தனக்கு ஒவ்வாத மாணவர்களை பிரித்து மட்டம் தட்டி வைப்பது, திட்டுவதில் பெருமை கொள்வது என அவர்கள் நிலைபாடு மெச்சும் படியாக இல்லை என்பதே உண்மை.

என் பள்ளி ஆசிரியர் ஒருவர் நினைவுக்கு வருகின்றார். நாங்கள் பள்ளி செல்ல 1 மைல் தூரம் நடந்தே செல்ல வேண்டும். எங்கள் ஆசிரியரும் கூட சில நாட்கள் நடந்து தான் வருவார். பள்ளி முதல் மணி அடித்தது என்றால் இரண்டாவது மணிக்குள்ளாக ஓடி செல்லும் மாணவர்களை தாமதமாக நடந்து வரும் ஆசிரியர் கண்டு வைத்து பள்ளி வந்ததும் வகுப்பறையில் தேடி வந்து அடிப்பார். மாணவர்களை வாய் உபதேசத்தால் திருத்தி விடலாம் என்று பல ஆசிரியர்கள் நினைக்கின்றனர். மாணவர்களுக்கு சரியான உபதேசம் நம் உண்மையான செயலாகவே இருக்க கூடும். மாணவர்களை ஆசிரியர்களை கூர்ந்து கவனிக்கின்றனர். நம் பாராட்டுதல் உற்சாகப்படுத்துதல் வழிகாட்டுதலை பெரிதும் விரும்புகின்றனர்.  தன் பாடத்தை சரியாக எடுக்காது சமூக அக்கறையை பற்றி பேசும் ஆசிரியரின் மொழி கடல் மணலில் எழுதும் எழுத்தாகவே மாறும்.

தேற்வு நாள் அன்று, தான் பயணித்த  பேருந்து விபத்துக்கு உள்ளாகி 15 நிமிடம் தாமதித்து வந்த மாண்வனிடம் தன் ஞான உபதேசத்தை நல்குவதை விடுத்து, குடிக்க ஒரு மடக்கு தண்ணீர் கொடுத்து தேற்வு எழுத வைப்பதே ஆசிரியையின் பணியாகும். மலையாளத்தில் ஒரு பொன் மொழி உண்டு “ குளிப்பித்து குளிப்பத்து குஞ்ஞினை(குழந்தையை) இல்லாதாக்கி என்று அதே போல் தான் பல ஆசிரியர்கள் சிறுவர்களை நல் வழிப்படுத்துகின்றேன் என்று தங்கள் கருணையற்ற கண்டிப்பால் மனித நிலையில் இருந்தும் முரடர்களாக மாற்றுகின்றனர்.

சமீபத்தில் நான் கண்ட ஒரு இளைஞன் கூறினார் அவர் கல்லூரி வகுப்பில் ஆசிரியையை அழவைப்பாராம். பள்ளி வகுப்ப்புகளில் தன்னிடம் கருணை அற்று நடந்து கொண்ட ஆசிரியைகளிடம் பதில் கொடுப்பதாக தெரிவதால் மகிழ்ச்சி கொண்டாராம். இன்றும் மனம் எதிலும் பிடிப்பற்று வாழ பள்ளிப்பருவத்தில் தான் எதிர் கொண்ட சில நிகழ்ச்சிகளே என்று கூறினார். சில பெற்றோருக்கு ஆசிரியர்கள் சொல்வதெல்லாம் ஞான வாக்கியம் ஆகுவது உண்டு. ஆசிரிய்ர்களின் பேச்சுக்கு இணைங்க வீடுகளிலும் தன் பெற்ற பிள்ளைகளை கொடுமையாக நடத்துவது உண்டு. 

ஒரு சிறுவன் சிறு தவறு செய்தால் அதை ஆகாயம் முட்டும் வண்ணம் பெரிதாக்கி அவன் ஆளுமையை சிதைக்கும் எத்தனையோ பள்ளிகள்- ஆசிரியர்கள் உண்டு. பள்ளிகளால் ஒடுக்கப்பட்ட விரட்டப்பட்ட பல சிறுவர்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றியை கண்டார்கள் என்ற புரிதலே ஆசிரியர்களின் அச்சுறுத்தலில் இருந்து மீட்க ஒரே வழி. 
   

நான் பயணிக்கும் பேருந்தில் ஆசிரியைகளின் செயலை கண்டு வருந்தியது உண்டு. ஒரு ஏழை தாய் தன் அழும் கைகுழந்தையுடன் நின்று கொண்டே பயணிக்க்ன்றார்.  ஆசிரியைகள் இடம் கொடுக்க முன் வரவில்லை. எழுந்து இடம் கொடுக்கலாம் தானே? என்று ஆசிரியைகளிடம் கேட்டு கொள்ளவும் யாராலும் இயலவும் இல்லை. ஆனால் எல்லோர் கண்களும் ஆசிரியைகள் பக்கம் திரும்பிய போது மனம் இல்லாது எழுந்து இருக்கை கொடுத்தார். ஆசிரியர்கள் ஒரு வித மனபிரஞ்யான நிலையில் இருந்து உண்மையான- காத்திரமாக நிலைக்கு இறங்கி வர வேண்டும். மீன் வாங்கும் சந்தயில் இருந்து வணங்கும் ஆலயம், பயணிக்கும் பேருந்து என உடை நடையால் மட்டுமல்ல தன்  செயலாலும் தங்களை பற்றி, ஏதோ கதைத்து கொண்டு வருகின்றனர். எளிமை பொறுமை ஆட்சி செய்ய வேண்டிய இடத்தில் பொறாமை காழ்ப்புணர்ச்சி ஆணவம் தாண்டம் ஆடுகின்றது.  நாடகதன்மையான உலகை காண துவங்காத குழந்தைகளுக்கு மன நெருக்கடியை கொடுக்க மட்டுமே இது இடம் கொடுக்கின்றது.

எப்போதும் செயற்க்கைத்தனத்துடன் குற்றம் கண்ட கண்ணுடன் ஈரம் அற்ற இதயத்துடனே அவர்கள் வாழ்கை செல்கின்றது. நிறைந்த மனதுடன் மாணவர்களை பாராட்டி சிரிப்பது, பெரிய மனது கொண்டு மாணவர்களை மன்னிப்பது என்பது ஆசிரியர்கள் அகராதியில் இல்லை என்று ஆகி விட்டது. தன் மகன் வயதுள்ள தன் மாணவனை அடக்க துடிக்கும் ஆசிரியை தன் மகன் தன்னுடன் எப்படி நடந்து கொள்கின்றான் என்று சுத்த இதயத்தோடு சிந்தித்தால் பல கேள்விக்கு இடம் கிடைக்கும்.

 3ஆம் வகுப்பு ஆசிரியை  பள்ளிக்கு வராத மாணவர்களிடம் மறுநாள் கேட்பாராம் “ஏன் பள்ளிக்கு நேற்று வரவில்லை நான் செத்தேனா? இருக்கேனா? என்று பார்க்கவா வந்தாய்“ என்று:- ஒரு குறும்புக்கார மாணவன் ஆசிரியை வராது அடுத்த நாள் வந்த போது கேட்டானாம் "நீங்க நாங்க செத்தோமா இல்லையான்னு பார்க்கவா வந்தீங்க" என்று....இப்போது 4 வகுப்பு படிக்கும் என் மகன் தன் தலையை காட்டி என்னிடம் கேட்கின்றான் “அம்மா தலையில் எங்கு  எழுத்தியிருக்கும், என் மிஸ் சொல்கின்றார் என் கையெழுத்து தலை எழுத்து போல் உள்ளதாம் என்று. ஆசிரியைகளை கேள்வி கேட்பது என்பது நம் குழந்தையின் பள்ளி வாழ்கைக்கு குழி தோண்டுவதற்க்கு சமம் என்பதால் பல பெற்றோர்கள் அடங்கி ஒதுங்கி செல்ல காரணமாகின்றனர். 

இதே சிறுவன் பெற்றோர் ஒரு வேளை மாணவனின் கோபத்தின் காரணவும் அதை தீர்க்கும் வழியும் தேடியிருந்தால், இரண்டு உயிர் துயர் கொள்ள நேர்ந்திருக்காது. இன்று அப்பெற்றோரின் துயர் காண யாரும் முன் வருவதில்லை. வாழ்க்கையில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என எண்ணி சுமக்க இயலாத கட்டணம் செலுத்தி பள்ளிக்கு அனுப்பிய குழந்தை ஜெயில் கம்பி எண்ண செல்வதை பெற்றோரால் எவ்வாறு தாங்க இயலும்.

என் பெரிய மகன் ஆசிரியர் கூட அவனுடன் மேல் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பெட்டியில் அலைபேசி மற்றும் சிடிகள் வைத்திருக்கின்றார்களா என்று உடன் படிக்கும் மாணவர்களை கொண்டு தேட கட்டளை இடுகின்றார்களாம்.  இதனால் மாணவர்களுக்குள் பகமை தேவையற்ற சண்டை சச்சரவு வெடிக்கும் என்று பாவம் ஆசிரியர்களுக்கு தான் தெரியாதா? 

கண்ணாடி போன்ற மாணவர்களின் மனதை ஆசிரியர்களால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும். தன் சுயவிருப்பம் சார்ந்து மாணவனை காண முயலும் போது அபாயங்கள் காத்திருக்கின்றது. ஒவ்வொரு மாணவனின் பலம் பலவீனம் கண்டு வழி நடத்துவதே சிறந்தாக இருக்கும்.பள்ளியில் இருந்து விரட்டப்பட்ட பில்கேட்ஸ் என்ற மாணவனிடம், ஆசிரியர்களின் வழி காட்டுதலில் திறம்பட படித்து முன் வந்த பல மாணவர்கள் பணியாளர்களாக பின்னாளில் பணிபுரிந்தனர் என்பதும் நாம் கண்டதே.

ஆசிரியர் பணியின் மகிமையை தெரியாத வரை இதே போன்ற கொலைகளும் தொடரத் தான் போகின்றது.  ஆசிரியர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தை கூட விஷம் அல்லாத அமிர்தமாக மாற வேண்டும் என்று வாழ்த்துவது மட்டுமே நம்மால் இயலும்!

2 Feb 2012

தலையணை அருவி!


சமீபத்தில் மிகவும் ரசித்து சுற்றி  பார்த்த  சுற்றுலா தலமே தலையணை ஆறு. எங்கள் மகன்களின் தண்ணீர் மேல் கொண்டுள்ள  ஆசை பொங்கல் நாள் அன்று மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி பயணிக்க செய்தது. திருநெல்வேலியில் இருந்து 55 கி.மீ தூரத்தில்  மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகி வரும் அழகிய  அருவியாக  காட்சி தருகின்றது தலையணை ஆறு!

 களக்காடு  வனத்துறை காவலர்கள் சோதனையுடன் நம்மை வரவேற்கின்றது தலையணை ஆறு.  (முதன்மையான அணை என்பதால் தலை தீபாவளி, தலை வாசல் என்பது போல்  தலை + அணை மருவி தலையணை என்று பெயர் வந்திருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கின்றது.)  
தலையணை கட்டியவர்கள் நமது நாட்டை ஆண்ட குறுநிலை மன்னர்கள் ஆவர். இந்த அணை குறித்த இன்னொரு செவிவழி கதையும் உண்டு. பாண்டிய மன்னருக்கும் எட்டு வீட்டு பிள்ளைகளுக்கும் போர் மூண்ட போது பாண்டிய மனன்ர் தன் எதிராளியின் கைகளில் சிக்கக்கூடாது என்ற நோக்கில் தன் தலையை தானே கொய்து தாமிரபரணி நதியில் விழுந்து விட்டார். அவருடைய அதலை ஒதுங்கிய இடம் தலை அணை என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது. 

 பிளாஸ்டிக் பொதிகளில்  தின் பண்டங்கள்  மற்றும் இன்ப பானியங்கள் கொண்டு செல்ல மட்டுமே காவலர்கள் தடை விதிக்கின்றனர்நியாயமான அக்கறை    என்பதால் காவலர்கள் சோதனைக்கு  பணிந்து அவர்கள் கடமைக்கு பதில் சொல்லி எங்கள் வாகனம் சோதனைச் சாவடியை கடந்து செல்கின்றது.   சோதனைச் சாவடியில் பெரியவர்களுக்கு தலா 15 ரூபாய் சிறுவர்களுக்கு 2 ரூபாய், நாம் பயணிக்கும் வாகனத்திற்கு 20 ரூபாய் என வசூலித்து வனத்திற்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.  அடர்ந்த காடுகளில்  புலிகள் மறைந்து நின்று நம்மை கவனிக்கின்றதா என்று  மனக் கண்ணில் கண்டு சென்று பயணித்து கொண்டிருந்தோம்.  எங்கள் முன் பள்ளி மாணவர்கள் கரும்பு, தூக்கு சட்டியில் சாப்பாட்டுடன் சென்று கொண்டிருந்தனர்.  பல  மக்கள் குடும்பம் குடும்பமாக நடந்தும் வாகனத்திலும் வந்து கொண்டு இருந்தனர்.  அரசு விடுதி பக்கத்தில் வந்து சேர்ந்து விட்டோம்.  அங்கு வானங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  எங்கள் வானத்தையும் ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு;  கொண்டு வந்த உணவு பொட்டலங்களுடன் நடக்க ஆரம்பித்தோம். கரடு முரடான பாதை காணும் பாதையோரம் நீர் ஊற்று சிறு சிறு அருவிகளாக ஓடி கொண்டிருக்கின்றது. தண்ணீருக்காக போரிடும் வேளையில்  நீர் வளமான இடத்தை கண்ட போது  மகிழ்ச்சியாக இருந்தது.



சிறிதும் பெரிதுமான மரங்கள், வானளவில் வளர்ந்து ஒய்யாரமாக வளர்ந்து வளைந்து நிற்கும் மரங்கள் நடுவே அழகாக சின்ன சின்ன  நீர் ஓட்டங்கள் .....ஆலைமரத்தில் ஊஞ்சல் போன்ற விழுதுகள் என இயற்கையின் மடியில் தவழ்து விளையாடுவது பெரும் மகிழ்ச்சியாகவே இருந்தது.  அப்படியே அங்கு இருந்து, இயற்கை அழகை ரசித்து பார்த்து கொண்டே    கொண்டு சென்ற  உணவை ருசி பார்த்து விட்டு  லாவகமாக நடக்க ஆரம்பித்தோம்.

ஆகா அருவி வந்து விட்டது.  தண்ணீர் வரவு மிதமாக இருந்ததுமக்கள் கூட்டம் கூட்டமாக ஆரவத்துடன் நீர்  யானையை போல் கரைக்கு வர மனமில்லாது தண்ணீருக்குள் குளித்து கொண்டு இருக்கின்றனர். சில இளம் கன்றுகள் மாறி மாறி தண்ணீரை அள்ளி தெளித்து விளையாடுகின்றனர்.  சில கணவர்கள் தண்ணீரை பயமுடன் காணும் மனைவியை மகள்களை தண்ணீருக்குள் வலுகட்டாயமாக  தள்ளியிடுகின்றனர்.  

மகன்கள் தங்கள் உடைக்கு என்னை காவல் ஏற்படுத்தி கொண்டு தண்ணீருக்குள் குதித்து விட்டனர் என்னவருடன்!   இளையவர் நாடியடிக்க..... போதும் குளித்தது... என  வெளியை வந்த போது தண்ணீரின் குளிர்  தெரிந்தது

இந்த நீர் நிலையில் பல பொழுது விபத்தால் உயிர் பலி வாங்கியுள்ளது பத்திரிக்கை செய்தியில் படித்துள்ளோம். திடீர் என காட்டாறு வரும் இடமாகும் இது. 

கொஞ்சம் தள்ளி பார்க்ககூடிய தூரத்தில் ஒரு இளம்  கணவர் கூட்டத்தை மறந்து தன் மனைவியை குளிக்க செய்து அழகு பார்த்தது தான் நெருடலாக இருந்தது.  அவர் மனைவி -அவர் தனிப்பட்ட விடயமாக  இருந்திருந்தாலும் குழந்தைகள், பெரியவர்கள் என பொதுமக்கள் கூடும் இடத்தில் சினிமா படம் என்பதை போல் திரையில் வருவதை நேராக படமிட்டு காட்டுவதை என்னால் ஜீர்ணிக்க இயலவில்லை.  இன்னும் கொஞ்சம் தள்ளி இளம் பெண்கள் குளியல் உடையுடன் கூடி நின்று கும்மாளம் அடித்து பார்வையாளர்கள் கவனத்தை அருவியில் இருந்து தன் பக்கம் ஈர்த்து கொண்டிருந்ததை காண இயன்றது. ஆண் காவலர்கள் இரு பெண் காவலர்களை அவர்கள் பக்கம் அனுப்பும் மட்டும் அவர்கள் ஆட்டம் ஓயவில்லை.

அவர்களை உற்று எல்லோரும் மேல் நோக்கி பார்த்து கொண்டிருந்த போது குரங்குகள் தன் குழந்தைகளுடன் உணவுக்கு என மனிதர்களை தேடி வர எங்கள் பார்வை அருமையான குருங்குகளின் பக்கம் திரும்பியது.  தங்கள் பச்சிளம் சின்ன குரங்குகளை வயிற்று   பகுதியில் வைத்து கொண்டு தாவுவதும் அவர்களுக்கு உணவு கொடுப்பதும் என  தாய்மையின் தூய்மையான அன்பை காண இயன்றது.

இனி  நெல்லைக்கு திரும்பும் நேரம் வந்தபடியால் திரும்பி நடக்கலானோம். ஊர் எல்கைக்கு வந்து விட்டோம்.  எங்களுடன் தலையணை நதியும் கூடவே வந்து கொண்டிருந்தது.  ஊர் எங்கும் பச்சை பசேல் என்ற செடி கொடியுடன் வளமாக மாற்றும் நதி!. ஊர் எட்ட எட்ட நதி ஓடையாக மாறி அது பின்பு குட்டையாக காட்சி தருவது  நம் இதயத்தை போல் உள்ளது.  குளம் கரைகளில்  வீட்டு கழிவுகள் குப்பைகள் என அருவருப்பாக தண்ணீரை நோக்க இயலாத  விதமாக மாற்றி விட்டனர். ஊர் நடுவே இந்த நதியின் நிலை இன்னும் பரிதாபம். வீட்டு கழிவு நீர், கழிவறை கழிவுகள் யாவும் நேரடியாக நதி தண்ணீரில் கலக்கும் படியாக அமைத்துள்ளனர்.  மேற்கு தொடர்ச்சி மலையில் காலடியில் வீற்றிருக்கும் களக்காட்டு மக்களுக்கு சுத்தமான குடி தண்ணீருக்கு போத்தல் தண்ணீர் தான் உதவுகின்றது. இந்த ஊரிலுள்ள ஊராட்சி மற்றங்கள் என்ன செய்கின்றது என்று தான் கேள்வி மனதில் எழுந்தது. வீட்டுக்கு முன்பு ஓடைகளை வைத்து ஊரையை நாற்ற காடாக வைத்துள்ளனர்.

கோயில் குளத்தின் நிலை இன்னும் கொடியதாக இருந்தது. பாசி படிந்த தண்ணீருடன் சுற்றுப்புறம் தூய்மை அற்று காணப்பட்டது. அந்த ஊர் காரரிடம் விசாரித்த போது மீன் வளர்ப்பதாகவும் பன்றி கழிவு கொட்டுவதால் மோசம் அடைந்ததாக கூறினார். மேலும் நதிநிலைகளிலே வீட்டு மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டுகின்றனர் என்பது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.




இங்கு 50 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் வசிப்பதாக தகவல் கண்டேன். படித்த பல நாடுகளில் வேலை செய்யும் வசதியான மக்கள் குடியிருக்கும் பகுதியே. இருந்தும் ஏன் இயற்கையின் மேல் இந்த அளவு கவனமற்று பற்றற்று, அக்கறையற்று இருக்கின்றனர் என்பது நம்மை கவலைக்கு உள்ளாக்குகின்றது. 
                                                                                                                         இப்படியாக ஒரு அழகான நதிக்கு நேரிடும்  கொடுமையான முடிவை  கண்டு கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தோம். தமிழ் மண் மேல் பிரியமுள்ளவர்கள் நம் மண் நீர் நிலைகளையும் நேசிக்க முன் வருவார்களா?





23 Jan 2012

வன்மையான உண்மை!




என் தமிழ் உணர்வு கடந்த காலத்திற்கு வேகமாக கூட்டி சென்றது!!! நாங்கள் பிறப்பால் தமிழகம் நாகர்கோயில் சேர்ந்த தமிழர்களாக இருந்தும் தொழில் நிமித்தமாக எங்களுடைய தாத்தா மலைபிரதேசம் தேடி சென்றதால் கேரளா தமிழர்கள் ஆனோம்.  பின்பு பணபெட்டியுடன் தாத்தா நாகர்கோயில் தேடி வந்த போது உறவினர்கள் காட்டிய முகம் 70 வயதிலும்; தாத்தாவை மறுபடியும்  மலைபிரதேசத்தை பார்த்து வரவைத்தது.  இருப்பினும் தமிழ் எங்கள் உயிர் மூச்சாகவே இருந்தது அப்படியே வளர்ந்தோம்.  படிப்பின் வசதி தரம் சார்ந்து மலையாள கல்வி படிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டாலும் தமிழ் பத்திரிக்கை வாசிப்பது தமிழில் வீட்டில் கதைப்பது என்பது எங்கள் பெருமையாக இருந்தது. பொது இடங்களில் தமிழர்களாக எங்களை அறிமுகப்படுத்தி கொள்ள ஒரு போதும் தயங்கியது இல்லை. உண்மையை சொன்னால் “தமிழர்கள்” என்ற அடையாளம் பல இடங்களில் பாண்டிகள் என்ற கேலிக்கு உள்ளாக்கப்பட்டாலும் எங்கள் அடையாளத்தில் ஒரு தனி கவுரவம் இருந்தது. 

 உயர்கல்வி வகுப்புகளில் சில ஜாதி வெறி பிடித்த ஆசிரியர்களால் மிகவும் கேவலமான காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டோம், கண்காணிக்கப்பட்டோம்.  இந்த பாகுபாடு பள்ளிகளில் மட்டுமல்ல நாங்கள் வணங்க செல்லும் ஆலயங்களிலும் இருந்தது. இருப்பினும் இந்த  போராட்டம் எங்கள் வாழ்க்கையை வழி நடத்தியது செம்மையாக!  பல தமிழ் குடும்பங்கள் தங்கள் தாய் மொழி மலையாளமே என்று வாழ முற்பட்ட போது எங்கள் அடையாளம் மறையாது இருக்க சில கஷ்டங்கள் எங்களுடன் சேர்ந்தே பயணித்தது.  சில தமிழக குடும்பங்களோ தன் குழந்தைகளை மலையாள குழந்தைகளிடம் பழக கூட அனுமதிக்காது வளர்த்தனர். ஆனால் என்னுடைய வீட்டில் தமிழும் மலையாளவும் ஒரே போல் நாங்கள் கற்க அனுமதி தரப்பட்டது உற்சாகப்படுத்தப்பட்டோம்.  வீட்டில் ஒரு தமிழ் பத்திரிக்கையும் மலையாள பத்திரிக்கயும் வாசிக்க வரவைத்து தந்தார்கள் .

எங்கள் நாலு திசைகளிலும் மலையாளிகள் வீடுகளாக இருந்தது.  நாங்கள் வீடு கட்டிய போது வடக்கு பக்கம் வசிப்பவர் எங்கள் வீட்டு சுவரில் மேல் அவர்கள் வீட்டு சுவர் வரும்படியாக கட்டினர்.  தெற்கு பக்கம் குடியிருப்பவரோ நாங்கள் வீட்டு சுவர் எழுப்பும் வரை அமைதியாக இருந்து விட்டு அவர் வீட்டு மரத்திலான சுவரை ஒரே நாளில் அகற்றி விட்டு எங்கள் வீட்டு சுவரை அவர் வீட்டு சுவராக மாற்றினார்.  பின் வீட்டில் ஒரு வயதான மலையாளி முதியவர் வசித்திருந்தார்.   அவர்கள் வீட்டு குப்பையை எங்கள் வீட்டு சுவர் பக்கம் சேர்த்து வைப்பதையே வழக்கமாக  கொண்டிருந்தார்.   நாலாவது பக்கம் கோட்டயம் கன்யாகுமாரி ரோடு என்பதால் சிக்கல் வரவில்லை.  மழைக்காலத்தில் தன் வீட்டு கழிவுகளை ஓடையில் திறந்து விடும் பக்கத்து வீட்டுகார நாட்டு வைத்தியர் உங்கள் வீட்டு கழிவோ ஒரு நாற்றம் வருகின்றது என்று தன் ஆங்காரத்தை எங்கள் வீட்டு உள் வந்தே காட்டுவார்.   இப்படியான சூழலிம் அவர்கள் வீட்டு திருமணங்களுக்கு நாங்கள் விருந்தாளிகளும் எங்கள் வீட்டில் அவர்களை விருந்தாளிமாக பாவித்தும் சில நுட்பமான கருத்துரையாடலில் மோதலை தவிர்த்து வாழ்வதே எங்கள் வழக்கமாக இருந்தது.  அந்த சூழலில் வளர்ந்த எங்களுக்கு தமிழகம் தமிழ் மக்களை அதீதமான அன்பும்  ஆசையுடன் நினைத்து பார்த்தோம்.  தமிழகம் சென்று விட்டால் எங்கள் துன்பம் எல்லாம் ஓய்ந்த்து என்று எண்ணி மகிழ்ந்தோம்.

மேற்படிப்புக்காக கேரளா கல்லூரியில் சேர்ந்த போது பெரிய ஒரு கூட்டத்தில் தனித்து விடப்பட்ட சூழல் உணர்ந்தாலும் சிறந்த கல்லூரி சூழல் பண்பான ஆசிரியர்கள் நட்பான சூழல் மகிழ்ச்சியே தந்தது.  எங்கள் கேரளா தோழிகள் எங்களிடம் தமிழ் எழுத்தை கற்று கொள்ள ஆவலுடன் அணுகி வந்துள்ளனர்.   தமிழக கலாச்சாரத்தை கேட்டு தெரிந்தனர். நம் மொழியின் மரியாதையான பாங்கை(வாங்க, போங்க என்று அழைப்பதை) மிகவும் விருப்பமாக நோக்கினர்.  சில ஆசிரியைகள் பிச்சைகாரர்களை பற்றி விவரிக்கும் போது "பாண்டிகளை போல்" என்று சொல் தாங்காத வேதனையுடன் நாங்கள் எங்களுக்குள் ஒளிவதை தவிற வேறு வழி  இருந்தது இல்லை. ஆனால் எங்கள் மொழியை பாடல்களை பண்பை நேசித்தார்கள் ஆச்சரியமாக சில போது கேலியாக என்றிருந்தாலும் நோக்கினார்கள் என்று சொன்னால் பொய்யாகாது.

 எங்கள் தமிழ் தாகம் பின்பு எங்களை தமிழக கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் இட்டு சென்றது.  கேரளா எல்கை ஓரம் கல்லூரி என்ற வகையில் ‘பெரியகுளம் ஜெயராஜ் ‘கல்லூரியில் சேர்க்கப்பட்டடேன்.    நான் கல்லூரியில் பட்டப்படிப்புக்கு சேர்ந்த போது உயர்பள்ளி வகுப்பில் படித்த என் தங்கை; தனக்கு தமிழ் எழுத்து பரிசயம் இல்லாததால் மலையாள மொழியில் கடிதம் எழுதுவதையே வழக்கமாக கொண்டிருந்தாள்.  கல்லூரி விடுதி என்பதற்க்கு பதிலாக  கல்லூரி என்று தவறாக முகவரி எழுதுவதால்; இந்த கடிதங்களில் சிலது, எனது பெயரை கொண்ட எங்கள் கல்லூரி பேராசிரியையின் கையில் கிடைத்து விடுவது உண்டு.

 அவரின் கேள்வியில் ஒரு இளக்காரம் எகத்தாளம் இருக்கும்.  முதல் கேள்விக்கு கேரளா என்ற உடனே என்ன கேரளாக்காரியா நீ? எஸ்டேட் தானே!  கேரளா என்று பீற்றி கொள்வார்கள் என்று அர்ச்சனை ஆரம்பித்து கடிதம் பற்றிய  குறுக்கு கேள்வி ஆரம்பித்து விடும். மேடம் என் தங்கை எழுதியதே என்று நிரூபிக்கும் முன் அவரிடம் இருந்து வரும் காது கூசும் வார்த்தைகளுக்கு குறைவு இருந்ததில்லை.  என் தங்கையிடம் கடிதமே எழுத வேண்டாம் என்றாலும் எனக்கு கடிதம் எழுதி என் நிம்மதியே கெடுத்து கொண்டே இருந்தாள்.  ஒரு முறை என்னை கல்லூரியில் பணிபுரியும் மலையாள அருட் சகோதரியிடம் இழுத்து சென்றார் .  அவர் இது தங்கையிடம் வந்த கடிதமே என்ற போதும்  கள்ளனை பிடித்த போலிஸ் போல் முகத்தை வைத்து கொண்டு கடிதத்தை என் முகத்தில் விட்டு சென்றார். ஒரு பச்சை தமிழச்சி பேராசிரியர் நடந்து கொண்ட விதம்,  கேரளா தமிழர்கள் என்ற காரணத்தால் அவர் பிரயோகித்த வார்த்தைகள் இன்றும் மனதை கனக்க செய்பவை! அவர் கண்ணில் விழுந்த ஒரு தூசியாக நான் இருந்தேன் அந்த 3 வருடங்களிலும். தமிழராகவும் மலையாளியாகவும் சேர்த்து கொள்ளாது இரண்டும் கெட்ட நிலையில் வாழ்ந்த கல்லூரி நினைவுகள்  பல மகிழ்ச்சி மத்தியிலும் கொடியதாகவே இருந்தது.                                                                                                
பின்பு  திருமணம் என்ற நிலையில் தமிழக தமிழனை தேட இன்னும் பிரச்சனை இருந்தது. மலையாள மக்களிடம் மட்டுமல்ல கேரளா தமிழர்களிடவும் சில தப்பிதங்களான எண்ணங்கள் தமிழக தமிழகர்களிடம் இருந்தது.  ஆசை கொண்டது போல் பச்சை தமிழனின் துணை கொண்டு தமிழச்சி ஆன போதும்  ஜாதிய-மத சிந்தனைகள் கொண்ட தமிழர்களை கண்ட போது "பாண்டிகள் என்று அழைக்கப்பட்டு நாங்கள் கேலியாக்கப்பட்டது காற்றில் பறந்த பஞ்சாகவே தோன்றியது.   

சமீபத்தில் ஒரு துள்ளல் தமிழச்சி என்னை கேரளா மலையாளி என்று ஆடி ஆடி விரட்டியபோது அடையாளம் அற்ற உள்ளூர் நிலைகளை எண்ணி என் மனம் வெதும்பியது.  எல்லைக்கு மறுபக்கம் இருக்கும் ஈழத் தமிழர்களிடம் சொட்ட சொட்ட காட்டும் அன்பு எங்களை போன்ற தமிழர்களிடம் வராதா அல்லது பக்கத்து வீட்டில் வசிக்கும், உடன் வேலை செய்யும் தமிழக பெண்கள் எல்லாம் அவர்கள் எதிராளியும் தூரத்தில் தெரியும் தமிழர்கள் மட்டும் தான் உண்மை தமிழர்களா?   மடியில் குழந்தையுடன் தெருவோரமாக பிச்சை எடுக்கும் ஏழை பெண்ணும் தெருவில் கைகுழந்தையுடன் குப்பை பெறுக்கும் தமிழக பெண்ணும் தமிழச்சி தான்.  தமிழுக்காக உயிர், மூச்சு என்பவர்கள் தான் தமிழர்களை மிகவும் வன்மையாக அழிக்க துடிக்கின்றனர்.

20 Dec 2011

மனித உணர்வற்ற இன உணர்வாளர்கள்!!!


ஈழ மக்களை கொத்து கொத்தாக பலி வாங்கிய பின்பு மறைந்த கள்ள இன  உணர்வாளர்கள் முல்லைப்பெரியார் டாமில் மிதந்து வந்தனர்.  ஈழத்தில் ஒரு தமிழன் கொல்லப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று சூழுரை இட்டு படம் காட்டியவர்கள்; அங்கு மக்கள் கொத்து கொத்தாக காவு வாங்கப்பட்ட போது ஒன்றும் தெரியாதது போல் ஒளிந்து கொண்டார்கள்.ஆனால் தற்போதோ  அணைஉடைந்தால் எரிமலை வெடிக்கும் என பல உணர்ச்சி வசனங்களுடன் பொய் முகத்தை காட்டி கொண்டு வெளி வந்துள்ளனர். 

தமிழனை அடித்தால் பதிலடி, ஐய்யப்ப பக்தர்கள் தாக்கு, தமிழன் விரட்டி அடிக்கப்பட்டான் என்ற பத்திரிக்கை செய்திகள் வேறு! மலையாள ஊடகமாவது மரியாதையாக நடந்து கொள்ளும்  என்றால் அது ஒரு படி மேலே போய் ஆலங்குளத்தில் மலையாளி மாணவன் தாக்கு, தமிழர்கள் பெரும்வாரியான தங்கள் இடங்களை கையகப்படுத்தியுள்ளனர் என்ற செய்தியுடன் வார்த்தை போர் ஊடகம் நடத்தி கொண்டிருந்தனர். 

இந்த தமிழ மலையாள இன உணர்வால் நேரடியாக பாதிக்கப்படும் குடும்ப நபர் என்ற சூழலில் உன்னிப்பாக கவனித்து வந்த எனக்கு கிடைத்த செய்திப்படி தனிப்பட்ட வைராக்கியத்தை முல்லைப்பெரியார் என்ற பெயரில் சில வன்மம் பிடித்த மலையாளிகள் தீர்க்க முடிவெடுத்த போது கேரளத்து தமிழர்களுக்கு பெரிய கேடயமாக பாதுகாவலாக அங்குள்ள பெரும்வாரியான மலையாளிகளை   இருந்தனர் என்பதே.  

வண்டிபெரியாரில்http://www.thehindu.com/news/states/kerala/article2674541.ece கடை வைத்துள்ள என் உறவினரை முல்லைப்பெரியார் சம்பவத்துடன் இணைத்து தனிப்பட்ட வைராக்கியத்தில் இருந்த ஒரு மலையாளி தாக்க வர அங்குள்ள வியாபாரி சங்கம் அந்த நபரை கட்டுப்படுத்தியதுடன் சங்கத்தில் இருந்தே வெளியேற்றியது.  ஒரு சில இனவெறி பிடித்த மலையாளி மக்கள் ( கேரளா கிருஸ்தவ காங்கிரஸ், ஹிந்து முன்னனி) கூட்டாக சேர்ந்து தாக்க திட்டம் போட்ட போதும் கம்னீஸ்டு கட்சி, உம்மன்சாண்டி அரசியல் கட்சிகள் தமிழ் மக்களை காப்பாற்றியது என்றால் பொய்யாகாது. முண்டக்காயம் என்ற ஊரில் ஒரு தமிழனின் கடை தாக்கப்பட்ட போது மலையாளிகள் எல்லோரும் தங்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.   அவ்வகையில் தமிழர்களின் உயிர் தமிழகத்தில் விட மலையாள கரையில் பாதுகாக்கப்பட்டது என்பதில் அவர்கள் பெரிமிதம் கொள்ளலாம். கலவரம் என்ற போது ஈழப் போர் தவிர்த்து, எந்த தலைவனும் கொல்லப்பட்ட சரித்திரம் இல்லை. இதில் பலி வாங்கப்படுவது ஏழை எளிய சாதாரண மக்கள் மட்டுமே!

ஆனால் கூடலூர் கம்பம் பகுதியில் விவசாயம் செய்து வந்த மலையாள ஏழை விவசாயின் நிலை தான் பரிதாபம். கூடலூரில் கயிர் தொழில்சாலை நடத்தி வந்த மலையாளி தொழில்சாலை சில திருட்டு தமிழர்களால் கொள்ளையடிக்கப்பட்டு கொளுத்தப்பட்டது. மேலும் வண்டிப்பெரியாரில் ஒரே லாறியுடன் தொழில்நடத்தி வந்த மலையாளியின் லாறி கம்பம்மேட்டு எல்லகையில் வரும் போது தாக்கப்படும் என்று அறிந்து தமிழக எண் ஆக மாற்றிய பின்பும் சில வெறிபிடித்த தமிழர்களால் கொளுத்தி எரிக்கப்பட்டது. மேலும் பன்றி வளர்த்து வந்த ஒரு மலையாளியின் பண்ணையில் அக்கிரமாக சென்று ஒரே நாளில் 50 க்கும் மேற்ப்பட்ட பன்றியை கொன்று  எடுத்து சென்றனர். பன்றி மட்டுமல்ல ஆடு வளர்த்தவனின் ஆடு ஒரே நாளில் ஆட்டு கறியாகவும் திராட்சை, வாழைத் தோட்டங்கள் சில காடைய தமிழர்களால் அழிக்கப்பட்டது.

ஆனால் வண்டிப்பெரியாரில் ஒரு தமிழ் ஆசிரியரின் இருசக்கிர வாகனம் கொளுத்தியதும் தனி நபர் சண்டையின் பெயரில் என்று இருந்தாலும் வசதியாக முல்லைப்பெரியார் பிரச்சனைக்குள் கொண்டு வந்தனர். மேலும் பணம் கொடுத்து ஓட்டு இட வைப்பது போல் பணம் கொடுத்து தமிழர்களை பேச வைத்ததாகவும் செய்தி கசிகின்றது. இன்னும் ஒரு படி மேல் போய் இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் தமிழ் அரசியல்வாதிகளின் கூற்று கேலிக்குரியது மட்டுமல்ல முரட்டுத்தனமானதே.  தமிழக எல்லகையில் குடியிருக்கும் தமிழர்களால் மலையாளிகளின் இளக்காரத்தை கூட பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால் தமிழர்களின் அடாவடித்தனத்தை கண்டு அஞ்சுகின்றனர். நிச்சயமாக ஒரு கேரளா தமிழனும் தமிழக தமிழனாக மாற விரும்பவும் மாட்டான்.

தமிழர் மலையாளி உறவு என்பது நட்பு உறவை கடந்து இரத்த உறவாக மாற்றப்பட்டு இரு தலைமுறை கடந்து விட்டது.  75 வருடம் முன்பு குடியேறிய என் முன்னோர்கள் குடியேறிய அந்த பூமியில் நாங்கள் வாழ்ந்த போது பெற்ற தாய் தமிழ் அன்னை என்றாலும், வளர்த்த தாய் ஆன மலையாளத்திடம் இருக்கும் பாசவும் அளவற்றதே. கேரளாவில் தாக்கப்படும் தமிழனின் செய்தி போலவே  தமிழகத்தில் தாக்கப்படும் மலையாளிகள் செய்தியும் வலி தருகின்றது. ‘பாண்டிகள்’ என்று பல இடங்களில் நாங்கள் இகழ்ச்சிக்கு உள்ளாகியிருந்தாலும் மலையாளம் எங்களுக்கு தந்த அன்பும் மரியாதையும் தமிழகத்தில் துளியும் கிடைத்ததாக உணர்ந்ததில்லை என்பதே உண்மை.  பூ பறிக்க கோடாலி எடுக்கும் தமிழன் சில பொழுது பல வழிகளில் எங்களை வெட்டி சாய்க்கவே செய்துள்ளான்!

அங்கு வாழும் தமிழர்களும் மலையாளியும் திருமணம் மற்றும் நட்பு உறவால் பின்னி பிணைந்து வாழ்ந்து வரும் சூழலே உணமை!  ஒவ்வொரு தமிழக குடும்பத்திலும் ஒரு மலையாளியாவது குடும்ப உறுப்பினராக இல்லை என்றால் ஆச்சரியமே. மேலும் பல தமிழர்கள் கூட மலையாளம் பேசி மலையாளிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்  ( கோழிக்கானம், ஏலப்பாறை, மூணார் பகுதி மக்கள்)

எம் குடும்பத்தில்  என் சித்தப்பா மனைவி மலையாளியாகவே இன்றும் வாழ்கின்றார். தமிழனை திருமணம் கொண்டேன் என்று சித்தி தமிழ் பேசியதும் கிடையாது அதே போல் சித்தப்பா மலையாளம் பேசியதும் கிடையாது. சமீபத்தில் அவர்கள் வீட்டிற்க்கு சென்ற போது அவர்களுடைய 3 வயது பேத்தி பாட்டியிடம் சுத்த மலையாளத்திலும் தாத்தாவிடம் தூய தமிழிலும் பேசுகின்றார்.

இச் சூழலில் முல்லைப்பெரியார் என்ற டாம் பற்றி நினைத்து கண்ணீர் விட்டு கதை எழுதும் ஊடகமோhttp://www.jacobantony.com/journey-to-mullaperiyar-shocking-facts/ தமிழ் உணர்வாளர்களோ கேரளா தமிழர்களின் பாதுகாப்பையோ உணர்வையோ கொஞ்சம் கூட நினையாது வார்த்தைகளால் போருக்கு துவக்கம் இட்டுள்ளனர். இந்த சூழல் காணும் போது என் ஈழ சகோதர்களில் நிலை தான் கண் முன் வருகின்றது. 30 வருடம் முன்பு மச்சான் என்று அன்புடன் பழகி வந்த சிங்கள-தமிழ் இளைஞர்கள் சூழ்ச்சி இனவெறி அரசியலால்  பிரிக்கப்பட்டு பெரிய விரோதிகள் ஆகி;   அன்னிய நாட்டில் தங்கள் நாட்டு கனவுடன் வாழ தள்ளப்பட்டனர்.  அகதியாய் அன்னிய நாட்டில் தஞ்சம் அடைந்த தமிழர்களுக்கு கிடைத்த மரியாதை வாழ்க்கை தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வந்த ஈழ அகதியாய் வந்தவர்களுக்கு கிடைக்கவில்லை. அன்னிய நாட்டில் 5 வருடம் வசித்த போது கிடைத்த குடி உரிமை 30 வருடம் தமிழகத்தில் வசித்த போது கிடைக்காது இரண்டாம் தர சமூக சூழலில் தான் ஈழ தமிழர்கள் வசிக்கின்றனர்.
                                                                                                                                                                        தமிழகர்கள் போல் வார்த்தையால் அடுத்தவர்களை வதைக்கும் ஒரு ஜனம் இருக்க வழியில்லை. 'பாண்டி' என்ற ஒரு வார்த்தைக்கு வாடி வதங்கிய எங்களை நோக்கி பல அவதூறான வார்த்தைகள் காத்து கிடைக்கின்றது.  சமீபத்தில் இன உணர்வாளர் என்று பீற்றி கொள்ளும் நபரின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் கண்ட போது இன உணர்வை விட மனித உணர்வை செம்மையான நிலை என்றே எனக்கு தோன்றியது.
                                                                                                                                                                                        இரு இனத்திற்க்கும் சண்டையை மூட்டி விட்டு அடித்து கொண்டு சாவதை காண ஒரு நரி கூட்டம் எப்போதுமே காத்து கிடக்கின்றது. ஈழ சகோதர்களின் அனுவங்களை  கண்டு உணர்ந்து வரும் காலங்களிலாவது இன உணர்வை விட மனித பண்பு – மனித நேயம் ஓங்கி வளர வேண்டும் என்றே என் மனம் கதைக்கின்றது!!! 

18 Dec 2011

கப்பை கிழங்கு மீன் கறி விருந்து!


திருநெல்வேலியில் இந்த வாரம் பழக்கடை, காய்கறி கடையில் கப்பை மலிவாக காணப்பட்டது! கேரளாவில் கப்பை என்று அழைக்கும் ருசியான இக்கிழங்கு வகை மரச்சீனி என்று தமிழில் அழைக்கின்றனர்.    கப்பையும் மீனும் சேர்த்து உண்டால் அதன் ருசியே அலாதி தான். ஒவ்வொருவர் விருப்பம் தகுந்தும் கப்பையை பலவகையில் சமைத்தாலும் அதன் ருசிக்கும் ஈடு இணை ஏதும் இல்லை.

                                                                                                              ஏழைகளின் உணவாக இருந்த இதன் விலையும் தற்காலம் கிலோ 40 ரூபாய் என ஏறி விட்டது. நான் வளர்ந்த ஊரில் 6 மாதம் தொடர் மழை என்பதால் வேலை அற்ற பல ஏழைகளுக்கு போஷாக்கான உணவு வகைகளில் ஒன்றாக இருந்தது இது.  இதை மலையாளிகள் வறுத்து சிப்ஸாகவும் வேகவைத்து- காயவைத்து வருடம் முழுதும் உணவாக பயன்படுத்துவர். கப்பைகாலன் என்று மலையாளியை திட்டும் தமிழன் கூட கப்பையை ருசித்து சாப்பிடுவர். மலையாளிகளின் வீட்டு தோட்டத்தில், முற்றத்தில் கப்பை செடி அலங்காரமாக நிற்பதை காணலாம். அனைவரும் விரும்பி உண்ணும் கப்பையை என் பாணியில் சமையல் செய்து தருகின்றேன்.

 தேவையான பொருட்கள்

ப்பை – 1கிலோ

தேங்காய்- 1 கப்
தேங்காய் எண்ணைய் அல்லது சமையல் எண்ணைய்- 1 கரண்டி
ஜீரகம் – சிறு அளவு
வெள்ளைப்பூண்டு- 4 - 5 பல்
இஞ்சி- சிறியதுண்டு
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
குழையும் அல்லது மசியும் அளவுக்கு நன்றாக கப்பையை வேக வைத்து வடித்து வைத்து விடவும்.
இனி தேங்காய் துருவலுடன்  ஜீரகம், சின்னவெங்காயம் 3, தேங்காய் துருவல் ஜீரகம், வெள்ளைப்பூண்டு (4-5 பல்), சிறியதுண்டு இஞ்சி, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மைப்போல் அரைத்து வைத்து கொள்ளவும்.
இனி வாய் அகன்ற ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து சூடான பின்பு, சிறிது எண்ணை விட்டு; காய்ந்ததும் கடுகு இட்டு தாளிக்கவும்.
கடுகு பொரிய துவங்கியதும் 3-4 சின்ன வெங்காயம் நறுக்கிய துண்டுகள் இட்டு வதக்கிய பின்பு கருவேப்பிலை சேர்க்கவும். இவையுடன் அரைத்த விழுதுவையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இத்துடன் மசிந்த கப்பையும் சேர்த்து நன்றாக கிளறி பாத்திரத்தில் எடுத்து பருமாறி விடவும். மீன் குழம்பும் சேர்த்து ஒரு பிடி பிடித்தால் இன்று கொண்டாட்டம் தாங்கோ!!!