20 Dec 2011

மனித உணர்வற்ற இன உணர்வாளர்கள்!!!


ஈழ மக்களை கொத்து கொத்தாக பலி வாங்கிய பின்பு மறைந்த கள்ள இன  உணர்வாளர்கள் முல்லைப்பெரியார் டாமில் மிதந்து வந்தனர்.  ஈழத்தில் ஒரு தமிழன் கொல்லப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று சூழுரை இட்டு படம் காட்டியவர்கள்; அங்கு மக்கள் கொத்து கொத்தாக காவு வாங்கப்பட்ட போது ஒன்றும் தெரியாதது போல் ஒளிந்து கொண்டார்கள்.ஆனால் தற்போதோ  அணைஉடைந்தால் எரிமலை வெடிக்கும் என பல உணர்ச்சி வசனங்களுடன் பொய் முகத்தை காட்டி கொண்டு வெளி வந்துள்ளனர். 

தமிழனை அடித்தால் பதிலடி, ஐய்யப்ப பக்தர்கள் தாக்கு, தமிழன் விரட்டி அடிக்கப்பட்டான் என்ற பத்திரிக்கை செய்திகள் வேறு! மலையாள ஊடகமாவது மரியாதையாக நடந்து கொள்ளும்  என்றால் அது ஒரு படி மேலே போய் ஆலங்குளத்தில் மலையாளி மாணவன் தாக்கு, தமிழர்கள் பெரும்வாரியான தங்கள் இடங்களை கையகப்படுத்தியுள்ளனர் என்ற செய்தியுடன் வார்த்தை போர் ஊடகம் நடத்தி கொண்டிருந்தனர். 

இந்த தமிழ மலையாள இன உணர்வால் நேரடியாக பாதிக்கப்படும் குடும்ப நபர் என்ற சூழலில் உன்னிப்பாக கவனித்து வந்த எனக்கு கிடைத்த செய்திப்படி தனிப்பட்ட வைராக்கியத்தை முல்லைப்பெரியார் என்ற பெயரில் சில வன்மம் பிடித்த மலையாளிகள் தீர்க்க முடிவெடுத்த போது கேரளத்து தமிழர்களுக்கு பெரிய கேடயமாக பாதுகாவலாக அங்குள்ள பெரும்வாரியான மலையாளிகளை   இருந்தனர் என்பதே.  

வண்டிபெரியாரில்http://www.thehindu.com/news/states/kerala/article2674541.ece கடை வைத்துள்ள என் உறவினரை முல்லைப்பெரியார் சம்பவத்துடன் இணைத்து தனிப்பட்ட வைராக்கியத்தில் இருந்த ஒரு மலையாளி தாக்க வர அங்குள்ள வியாபாரி சங்கம் அந்த நபரை கட்டுப்படுத்தியதுடன் சங்கத்தில் இருந்தே வெளியேற்றியது.  ஒரு சில இனவெறி பிடித்த மலையாளி மக்கள் ( கேரளா கிருஸ்தவ காங்கிரஸ், ஹிந்து முன்னனி) கூட்டாக சேர்ந்து தாக்க திட்டம் போட்ட போதும் கம்னீஸ்டு கட்சி, உம்மன்சாண்டி அரசியல் கட்சிகள் தமிழ் மக்களை காப்பாற்றியது என்றால் பொய்யாகாது. முண்டக்காயம் என்ற ஊரில் ஒரு தமிழனின் கடை தாக்கப்பட்ட போது மலையாளிகள் எல்லோரும் தங்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.   அவ்வகையில் தமிழர்களின் உயிர் தமிழகத்தில் விட மலையாள கரையில் பாதுகாக்கப்பட்டது என்பதில் அவர்கள் பெரிமிதம் கொள்ளலாம். கலவரம் என்ற போது ஈழப் போர் தவிர்த்து, எந்த தலைவனும் கொல்லப்பட்ட சரித்திரம் இல்லை. இதில் பலி வாங்கப்படுவது ஏழை எளிய சாதாரண மக்கள் மட்டுமே!

ஆனால் கூடலூர் கம்பம் பகுதியில் விவசாயம் செய்து வந்த மலையாள ஏழை விவசாயின் நிலை தான் பரிதாபம். கூடலூரில் கயிர் தொழில்சாலை நடத்தி வந்த மலையாளி தொழில்சாலை சில திருட்டு தமிழர்களால் கொள்ளையடிக்கப்பட்டு கொளுத்தப்பட்டது. மேலும் வண்டிப்பெரியாரில் ஒரே லாறியுடன் தொழில்நடத்தி வந்த மலையாளியின் லாறி கம்பம்மேட்டு எல்லகையில் வரும் போது தாக்கப்படும் என்று அறிந்து தமிழக எண் ஆக மாற்றிய பின்பும் சில வெறிபிடித்த தமிழர்களால் கொளுத்தி எரிக்கப்பட்டது. மேலும் பன்றி வளர்த்து வந்த ஒரு மலையாளியின் பண்ணையில் அக்கிரமாக சென்று ஒரே நாளில் 50 க்கும் மேற்ப்பட்ட பன்றியை கொன்று  எடுத்து சென்றனர். பன்றி மட்டுமல்ல ஆடு வளர்த்தவனின் ஆடு ஒரே நாளில் ஆட்டு கறியாகவும் திராட்சை, வாழைத் தோட்டங்கள் சில காடைய தமிழர்களால் அழிக்கப்பட்டது.

ஆனால் வண்டிப்பெரியாரில் ஒரு தமிழ் ஆசிரியரின் இருசக்கிர வாகனம் கொளுத்தியதும் தனி நபர் சண்டையின் பெயரில் என்று இருந்தாலும் வசதியாக முல்லைப்பெரியார் பிரச்சனைக்குள் கொண்டு வந்தனர். மேலும் பணம் கொடுத்து ஓட்டு இட வைப்பது போல் பணம் கொடுத்து தமிழர்களை பேச வைத்ததாகவும் செய்தி கசிகின்றது. இன்னும் ஒரு படி மேல் போய் இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் தமிழ் அரசியல்வாதிகளின் கூற்று கேலிக்குரியது மட்டுமல்ல முரட்டுத்தனமானதே.  தமிழக எல்லகையில் குடியிருக்கும் தமிழர்களால் மலையாளிகளின் இளக்காரத்தை கூட பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால் தமிழர்களின் அடாவடித்தனத்தை கண்டு அஞ்சுகின்றனர். நிச்சயமாக ஒரு கேரளா தமிழனும் தமிழக தமிழனாக மாற விரும்பவும் மாட்டான்.

தமிழர் மலையாளி உறவு என்பது நட்பு உறவை கடந்து இரத்த உறவாக மாற்றப்பட்டு இரு தலைமுறை கடந்து விட்டது.  75 வருடம் முன்பு குடியேறிய என் முன்னோர்கள் குடியேறிய அந்த பூமியில் நாங்கள் வாழ்ந்த போது பெற்ற தாய் தமிழ் அன்னை என்றாலும், வளர்த்த தாய் ஆன மலையாளத்திடம் இருக்கும் பாசவும் அளவற்றதே. கேரளாவில் தாக்கப்படும் தமிழனின் செய்தி போலவே  தமிழகத்தில் தாக்கப்படும் மலையாளிகள் செய்தியும் வலி தருகின்றது. ‘பாண்டிகள்’ என்று பல இடங்களில் நாங்கள் இகழ்ச்சிக்கு உள்ளாகியிருந்தாலும் மலையாளம் எங்களுக்கு தந்த அன்பும் மரியாதையும் தமிழகத்தில் துளியும் கிடைத்ததாக உணர்ந்ததில்லை என்பதே உண்மை.  பூ பறிக்க கோடாலி எடுக்கும் தமிழன் சில பொழுது பல வழிகளில் எங்களை வெட்டி சாய்க்கவே செய்துள்ளான்!

அங்கு வாழும் தமிழர்களும் மலையாளியும் திருமணம் மற்றும் நட்பு உறவால் பின்னி பிணைந்து வாழ்ந்து வரும் சூழலே உணமை!  ஒவ்வொரு தமிழக குடும்பத்திலும் ஒரு மலையாளியாவது குடும்ப உறுப்பினராக இல்லை என்றால் ஆச்சரியமே. மேலும் பல தமிழர்கள் கூட மலையாளம் பேசி மலையாளிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்  ( கோழிக்கானம், ஏலப்பாறை, மூணார் பகுதி மக்கள்)

எம் குடும்பத்தில்  என் சித்தப்பா மனைவி மலையாளியாகவே இன்றும் வாழ்கின்றார். தமிழனை திருமணம் கொண்டேன் என்று சித்தி தமிழ் பேசியதும் கிடையாது அதே போல் சித்தப்பா மலையாளம் பேசியதும் கிடையாது. சமீபத்தில் அவர்கள் வீட்டிற்க்கு சென்ற போது அவர்களுடைய 3 வயது பேத்தி பாட்டியிடம் சுத்த மலையாளத்திலும் தாத்தாவிடம் தூய தமிழிலும் பேசுகின்றார்.

இச் சூழலில் முல்லைப்பெரியார் என்ற டாம் பற்றி நினைத்து கண்ணீர் விட்டு கதை எழுதும் ஊடகமோhttp://www.jacobantony.com/journey-to-mullaperiyar-shocking-facts/ தமிழ் உணர்வாளர்களோ கேரளா தமிழர்களின் பாதுகாப்பையோ உணர்வையோ கொஞ்சம் கூட நினையாது வார்த்தைகளால் போருக்கு துவக்கம் இட்டுள்ளனர். இந்த சூழல் காணும் போது என் ஈழ சகோதர்களில் நிலை தான் கண் முன் வருகின்றது. 30 வருடம் முன்பு மச்சான் என்று அன்புடன் பழகி வந்த சிங்கள-தமிழ் இளைஞர்கள் சூழ்ச்சி இனவெறி அரசியலால்  பிரிக்கப்பட்டு பெரிய விரோதிகள் ஆகி;   அன்னிய நாட்டில் தங்கள் நாட்டு கனவுடன் வாழ தள்ளப்பட்டனர்.  அகதியாய் அன்னிய நாட்டில் தஞ்சம் அடைந்த தமிழர்களுக்கு கிடைத்த மரியாதை வாழ்க்கை தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வந்த ஈழ அகதியாய் வந்தவர்களுக்கு கிடைக்கவில்லை. அன்னிய நாட்டில் 5 வருடம் வசித்த போது கிடைத்த குடி உரிமை 30 வருடம் தமிழகத்தில் வசித்த போது கிடைக்காது இரண்டாம் தர சமூக சூழலில் தான் ஈழ தமிழர்கள் வசிக்கின்றனர்.
                                                                                                                                                                        தமிழகர்கள் போல் வார்த்தையால் அடுத்தவர்களை வதைக்கும் ஒரு ஜனம் இருக்க வழியில்லை. 'பாண்டி' என்ற ஒரு வார்த்தைக்கு வாடி வதங்கிய எங்களை நோக்கி பல அவதூறான வார்த்தைகள் காத்து கிடைக்கின்றது.  சமீபத்தில் இன உணர்வாளர் என்று பீற்றி கொள்ளும் நபரின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் கண்ட போது இன உணர்வை விட மனித உணர்வை செம்மையான நிலை என்றே எனக்கு தோன்றியது.
                                                                                                                                                                                        இரு இனத்திற்க்கும் சண்டையை மூட்டி விட்டு அடித்து கொண்டு சாவதை காண ஒரு நரி கூட்டம் எப்போதுமே காத்து கிடக்கின்றது. ஈழ சகோதர்களின் அனுவங்களை  கண்டு உணர்ந்து வரும் காலங்களிலாவது இன உணர்வை விட மனித பண்பு – மனித நேயம் ஓங்கி வளர வேண்டும் என்றே என் மனம் கதைக்கின்றது!!! 

23 comments:

 1. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வேதனையாக இருக்கிறது.

  ReplyDelete
 2. இன உணர்வை விட மனித பண்பு – மனித நேயம் ஓங்கி வளர வேண்டும் என்றே என் மனம் கதைக்கின்றது!!! //

  மிக சரியாக சொன்னீர்கள்...!

  ReplyDelete
 3. இரு இனத்திற்க்கு சண்டையை மூட்டி விட்டு அடித்து கொண்டு சாவதை காண ஒரு நரி கூட்டம் எப்போதுமே காத்து கிடக்கின்றது. //
  இதை அனைவரும் புரிந்து கொண்டால் நல்லது. உணர்வு வேகத்துக்கு இடம் கொடுக்கும் போது நாம் தான் மூளைக்கு ஓய்வு கொடுத்து விடுகின்றோமே

  ReplyDelete
 4. எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. மீண்டும் ஒரு தலைவணக்கம்.

  கேரளத்தமிழர்களின் உணர்வுகளை பசுமரத்தாணியாக பதியவைத்துள்ளீர்கள்.

  கடந்த ஒரு வாரம் நான் கனவர் குழந்தையுடன் வண்டிப்பெரியாறு, பீர்மேடு, ஏலிப்பாறை, சப்பாத்து பகுதியில் இருந்தேன். இனபேதமின்றி அங்குள்ள மக்கள் காட்டிய அன்புக்கு ஈடே இல்லை. இந்த தேன்கூட்டில் ஓயாது கல்எறியும் தமிழக தமிழர்களை எப்படி சபிப்பது என்று தெரியவில்லை.

  அப்பாவி மக்களை தூண்டிவிட்டு தங்கள் சுயநலத்தை தீர்த்துக்கொள்வது ஊடகங்கள் தான். அதைகேரள தமிழர்களின் ஒற்றுமை நிச்சயம் முறியடிக்கும்.

  //நிச்சயமாக ஒரு கேரளா தமிழனும் தமிழக தமிழனாக மாற விரும்பவும் மாட்டான்.//

  மீண்டும் ஒரு தலைவணக்கம் தோழி.

  உங்களின் இந்த பதிவை எங்கள் இணையத்தில் பதிவுசெய்துள்ளோம்.

  ReplyDelete
 5. தமிழர் சிங்களவரின் ஒற்றுமையைக் குலைத்தது தமிழ் சிங்கள அரசியல்வாதிகளே.அதே போல் ஒரு குடும்ப மொழியைச் சேர்ந்த இருவரையும் பிரிக்க அரசியல்வாதிகள் முயல்வதை தெளிவாக கூறியுள்ளீர்கள்.

  இக்கருத்துக்கள் எல்லோரிடமும் செல்லவேண்டும்.இலங்கையில் கம்யூனிசக் கட்சியைச் சேர்ந்த சண்முகதாசன் சிங்களப் பகுதிகளிலெல்லாம் கூட்டங்கள் வைத்தார் , ஆனால் தமிழின வெறியை ஊட்டின அரசியல் வாதிகளால் எமது பக்க நியாயங்களைச் சிங்கள மக்களுக்கு உணர்த்த முடியவில்லை.

  அவர்கள் இன வெறியை ஊட்டினார்கள் , சிங்கள் அர்சியல் வாதிகளும் மாறாக இனவெறியை ஊட்டினார்கள் ..

  பல இனக்கலவரங்கள் வந்த பொழுதும் காடையர்களிடமிருத்நு நான் உட்பட பல தமிழர்களைக் காப்பாற்றியது சாதாரண சிங்கள மக்களே.

  எங்கள் மொழி ஒருவருக்கு ஒருவர் விளங்காத பொழுதும் பலர் மொழி படித்தார்கள் , அர்சியல்வாதிகளின் சூழ்ச்சிகளால் மொழி படிப்பது கூடக் குறைந்து விட்டது ..அதே தமிழர்கள் இன்று உலக்ம் பூராகவும் சென்று அனைத்து மொழிகளையும் படித்து அந்தந்த நாடுகளில், அந்த நாட்டுக்காக உழைக்கிறார்கள்..

  தற்பொழுது இலங்கையில் சிங்கள தமிழ் மொழிகள் பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது வரவேற்கப் படவேண்டியதே ...

  ஆனால் ஒருவரை ஒருவர் புரியக்கூடிய மொழியைச் சேர்ந்த மலையாளத்திற்கும் தமிழுக்கும் இனவெறி ஊட்டுபவர்களை காறி உமிழவேண்டும் , விளக்குமாறு கொண்டு அடிக்க வேண்டும் ..

  இன்னும் என்ன வகையில் அந்த இனவெறி மூட்டுவோரை அவமானப் படுத்த முடியுமோ அதைச் செய்ய வேண்டும் ..

  இலங்கை நல்லதொரு பாடம்...

  ReplyDelete
 6. நன்றி நன்றி. தங்கள் கருத்துக்கள் என் கருத்துக்கு வலு சேர்க்கின்றது. வணக்கங்கள்!

  ReplyDelete
 7. மிகவும் நெகிழ்வான உண்மையான பகிர்தல்.வாழ்த்துக்கள் தோழர்.

  ReplyDelete
 8. இன உணர்வுகளைத் தூண்டிவிட்டு தமதுத் இருப்புக்களை நிலைநிறுத்திக்கொள்ளமுனையும் ஈனத்தனமானவர்களின் போலி முகத்திரைகளை கிழித்துப்போட்டிருக்கிறீர்கள். இனவெறியின் அதியுச்ச அழிவுகளை ஈழத்தில் பெற்றுவிட்டோம். மீண்டும் இன்னொருதடவை வேண்டாம் இந்த இனவெறி. மனிதநேயத்துடன் வாழக்கற்றுக்கொள்வோம்.

  ReplyDelete
 9. தமது பேச்சு வல்லமையால் தமிழர்களை மடையர்களாக்கி கொன்று குவித்ததில் முக்கிய பங்கு வை.கோ, சீமானுக்கு உண்டு. தமிழர்களை கொல்வதே குறியோ என்றெண்ணத் தோன்றுகின்றது.

  வேற்றுமை வளர்க்காத உங்கள் எழுத்துக்குப் பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி தீவிரமாக.

  ReplyDelete
 10. Very Correct & Timely Article. I admire the comparison given with Eelam Tamils & Kerala Tamils.

  Politicians of Tamil Nadu are never Honest, History proving this.

  ReplyDelete
 11. எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. மீண்டும் ஒரு தலைவணக்கம்.

  கேரளத்தமிழர்களின் உணர்வுகளை ப
  சுமரத்தாணியாக பதியவைத்துள்ளீர்கள்

  //நிச்சயமாக ஒரு கேரளா தமிழனும் தமிழக தமிழனாக மாற விரும்பவும் மாட்டான்.//

  தமிழர் சிங்களவரின் ஒற்றுமையைக் குலைத்தது தமிழ் சிங்கள அரசியல்வாதிகளே.அதே போல் ஒரு குடும்ப மொழியைச் சேர்ந்த இருவரையும் பிரிக்க அரசியல்வாதிகள் முயல்வதை தெளிவாக கூறியுள்ளீர்கள்.

  I want to write this...Unable in Tamil so copied & pasted.

  Your Article is Wonderful I have mailed it all my Known friends

  ReplyDelete
 12. ஒவ்வொரு இனக்கலவரத்திலும் தாக்கப்படுவோர்கள் இருபக்கமும் பரிதவிக்கும் ஒடுக்கப் பட்ட மக்களே. ஜோஸபின் கதைக்கவில்லை; உண்மைகளை உணர்த்தியிக்கிறார் ! உணர்ச்சிக்கு அடிமை ஆகாமல் நல்லுறவு காக்க இத்தகைய கட்டுரைகள் அவசியம்...அதை எழுதும் எழுத்தாளர்கள் கூடுதல் தேவை. பாராட்டுக்கள் ஜோ.

  ReplyDelete
 13. Thanks! Cool photo!

  ReplyDelete
 14. /////Anpu Sakothary said...
  தமது பேச்சு வல்லமையால் தமிழர்களை மடையர்களாக்கி கொன்று குவித்ததில் முக்கிய பங்கு வை.கோ, சீமானுக்கு உண்டு. தமிழர்களை கொல்வதே குறியோ என்றெண்ணத் தோன்றுகின்றது.

  வேற்றுமை வளர்க்காத உங்கள் எழுத்துக்குப் பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி தீவிரமாக./////


  என்ன நீங்கல்லாம் பெரிய எழுத்தாளர்கள் அப்படித்தானே? இங்க குடிக்க தண்ணீ இல்லாம தமிழன் சாகணுமா? போராட்ட தலைவர்களை கொச்சை படுத்துறது நியாமில்லை ?

  ReplyDelete
 15. http://tamilmalarnews.blogspot.in/

  ReplyDelete
 16. Mark Antony · FollowMarch 14, 2013 12:21 pm


  உலகறிந்த யதார்த்தபூர்வமான உண்மை ! ஆனால் தமிழரும் மற்றும் இதர திராவிட இனத்தோரும் இதை உணர மறுபதுதான் வேதனைக்குரிய விடயம் . நாம் எமது புவியியல் பின்னணி மற்றும் பரந்து வாழும் சூழல் ஆகியவற்றுக்கு முதலிடம் கொடுத்து சிந்தித்துச் செயல்பட வேண்டும். குஜராத்திகளிடமிருந்தும் பெங்காலிகளிடமிருந்தும் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும் இஸ்லாமியனானும் சரி இந்துவானாலும் சரி தங்களை குஜரத்திகலென்று அறிமுகம் செய்துக்கொல்வதில் பெருமையடைகிறார்கள் அதனால்தான் சந்துஷ் பட்டேலும் மொகமது பட்டேலும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

  ReplyDelete
 17. இடுகாட்டான் இதயமுள்ளவன்March 14, 2013 12:27 pm

  ·
  30 வருடம் முன்பு மச்சான் என்று அன்புடன் பழகி வந்த சிங்கள-தமிழ் இளைஞர்கள் சூழ்ச்சி இனவெறி அரசியலால் பிரிக்கப்பட்டு பெரிய விரோதிகள் ஆகி;;;;;;;; சங்கடமான வரிகள் .

  ReplyDelete
 18. Murugan Thangasivam · Madurai Medical CollegeMarch 14, 2013 12:28 pm


  அன்னிய நாட்டில் தஞ்சம் அடைந்த தமிழர்களுக்கு கிடைத்த மரியாதை வாழ்க்கை தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வந்த ஈழ அகதியாய் வந்தவர்களுக்கு கிடைக்கவில்லை...... மிக மிக கசப்பான உண்மை.

  ReplyDelete
 19. Thankappan Arumugaperumal ·March 14, 2013 12:28 pm


  பேசித் தீர்க்க வேண்டியதை வன்முறையால் தீர்வு காண்பது கானல் நீரே. ஏன் தான் மக்களை உசுப்பேற்றி அதனால் ஏற்படும் தீக்கனலில் குளிர் காய்கிறார்களோ....மொழியாலும் நில அமைப்பாலும் இரு மாநில எல்லைகளிலும் ஒற்றுமையாய் நேற்று வரை தேநீர் குடித்தவர்கள் கடையை உடைப்பதும் ஒரு லாறி வைததுப் பிழைத்தவனின் வயிற்றில் அடிப்பதும் காண சகிக்க வில்லை. தன்னுடைய அண்ணனை, அக்காவை.
  ஒருவன் அடிப்பது போலவே காண்கிறேன். 1963-ல் இருந்தே ஒரு முடிவும் தெளிவாக எடுக்கததால் , அதுவும் அன்றைய கால கட்ட தேசியத் தலைவர்கள் கண்டும் காணாமல் விட்டதால் இன்று பரந்த நோக்கமில்லா குறுகிய மாநிலக் கண்ணோட்டம் கொண்ட தலைவர்கள் நல்ல முடிவினை நோக்கி நகருவார்கள் என்று எப்படி எதிர் பார்க்க முடியும்.
  காலம் தான் பதில் சொல்ல வெண்டும்.
  உங்கள் எழுத்தின் ஆதங்கம் என்னிலும் இருக்கிறது.

  ReplyDelete
 20. சி.ஏ. மரிய ராஜ் · St. Xavier's College, PalayamkottaiMarch 14, 2013 12:29 pm


  உண்மைதான். உள்ளம் வலிக்கத்தான் செய்கிறது..அதற்காக இன உணர்வு தமிழனுக்கு கூடாது என்பதல்ல.. தமிழனுக்கு அது சுத்தமாகவே கிடையாது என்பதுதான் உண்மை.
  இன உணர்வை விட மனித நேயம் முதன்மையானதுதான்.. ஆனால் அது எல்லா இனத்திலும் காணப்பட வேண்டும்..உங்கள் சித்தி தமிழ் பேச மாட்டார்,, அது அவரது விருப்பமாகவும்
  உரிமையாகவும் கூட இருக்கலாம்..ஆனால் சித்தப்பா மலையாளம் பேசத்தான் செய்வார். குடும்ப உறவுகளில் எல்லா இனததவரும்,மொழியினரும் கூட இணைய முடியும்.. ஆனால்
  இங்கு ஒரு மலையாளியை,அல்லது கன்னடத்தவரை,தலைமைக்கு தமிழன் கொண்டு வந்ததைப் போல மலையாள தேசத்திலோ,மற்ற மானிலத்திலோ தமிழனுக்கு இடம் கிடைக்குமா?
  முரட்டு தமிழனும் ஏமாற்று தமிழனும் இங்கேயும் இருக்கிறான்.. ஆனால் அவன் தமிழனாக அல்ல.மனித இனத்திற்கே
  உறிய இழி குணங்கள் அவை.. ஆனால் பெரும்பாலும் இங்கு இளிச்சவாய்த் தமிழர்களும்,ஏமாளித் தமிழர்களுமே அதிகம்..
  இங்குள்ள அரசியல்வாதிகள் போலியானவர்கள்தான்..அரசியல்வாதியின் தகுதியே அதுதான்.. ஆனால் தமிழ்னாட்டுத்
  தமிழனை நம்பி அரசியல் நடத்த முடியாது,அதுவும் இன உணர்வு அரசியல் நடத்த முடியாது என்பதனாலயே அவர்களும் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்கள்..
  அணைக்கட்டு விவகாரத்தில் இரு தரப்பிலுமே நியாயங்கள் இருக்கலாம்.ஆனால் மலையாளிகள் இந்தியாவின்
  ஆட்டுவிக்கும் அனைத்து துறைகளிலும் ஊடுறுவி,ஈழ விவாகாரம் முதல்,எல்லா இடத்திலும் தமிழனுக்கு ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை..
  எல்லா இடத்திலும் அறை வாங்க கன்னத்தைக் காட்டிக் கொண்டிருந்தால் அது முட்டாள்தனமே! இயேசு நாதர் கூட
  ஒரு கட்டத்தில் தன்னை அறைந்தவனை நோக்கி "ஏன் என்னை அடித்தாய்?" என்று குமுறி எழத்தான் செய்தார், அதுதான் நீதிக்கான போராட்ட உணர்வு..
  என்ற போதிலும் தங்களின் கருத்துக்கள் நேர்மையானவையே! தங்களின் ஆதங்கமும் தீர்க்கப்பட வேண்டியதே!

  ReplyDelete
 21. நாஞ்சில் மனோ ·March 14, 2013 12:30 pm


  தனிப்பட்ட வைராக்கியத்தில் இருந்த ஒரு மலையாளி தாக்க வர அங்குள்ள வியாபாரி சங்கம் அந்த நபரை கட்டுப்படுத்தியதுடன் சங்கத்தில் இருந்தே வெளியேற்றியது.

  ReplyDelete
 22. பொன்னர் அம்பலத்தார் ·March 14, 2013 12:31 pm


  வணக்கம் ஜோஸபின், படித்தவர்முதல் பாமரன்வரை பெரும்பாலும் அனைவரிடமிருந்தும் இனஎழுச்சிகோசங்களே ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் துணிவுடன் எழுதப்பட்ட உங்கள் மனிதநேயமிக்க பதிவிற்கு வாழ்த்துக்கள். இன உணர்வுகளைத் தூண்டிவிட்டு தமதுத் இருப்புக்களை நிலைநிறுத்திக்கொள்ளமுனையும் ஈனத்தனமானவர்களின் போலி முகத்திரைகளை கிழித்துப்போட்டிருக்கிறீர்கள். இனவெறியின் அதியுச்ச அழிவுகளை ஈழத்தில் பெற்றுவிட்டோம். மீண்டும் இன்னொருதடவை வேண்டாம் இந்த இனவெறி. மனிதநேயத்துடன் வாழக்கற்றுக்கொள்வோம்.
  சகோ. ஜோஸபின் உங்களது இந்தக்கருத்து அதிகமானவர்களிடம் சென்றடையவேண்டும் என்பதற்காக இந்தப்பதிவை தமிழ் திரட்டிகள் பலவற்றிலும் இணைத்துவிடுள்ளேன்.

  ReplyDelete
 23. Dr.Muttiah Kathiravetpillai Muruganandan University of CeylonMarch 14, 2013 12:32 pm


  இனக் குரோதத்தால் பல தசாப்பதங்களாக இழப்புகளைச் சந்தித்த எமக்கு உங்களது உணர்வு பிடித்திருக்கிறது.

  பலர் குரோதத்துடன் எழுதியது போலன்றி நீங்கள் எழுதியவை மனித நேயத்துடன், இனக்குரோதத்திற்கு எதிரானதாக அமைதியான சக வாழ்வை நாடுவதாக இருப்பதைப் பாராட்டுகிறேன்.

  "தமிழகத்தில் தாக்கப்படும் மலையாளிகள் செய்தியும் வலி தருகின்றது. "

  "கேரளத்து தமிழர்களுக்கு பெரிய கேடயமாக பாதுகாவலாக அங்குள்ள பெரும்வாரியான மலையாளிகளை இருந்தனர் என்பதே. "

  "பலி வாங்கப்படுவது ஏழை எளிய சாதாரண மக்கள் மட்டுமே."

  "..50 க்கும் மேற்ப்பட்ட பன்றியை கொன்று எடுத்து சென்றனர். பன்றி மட்டுமல்ல ஆடு வளர்த்தவனின் ஆடு ஒரே நாளில் ஆட்டு கறியாகவும் திராட்சை, வாழைத் தோட்டங்கள் சில காடைய தமிழர்களால் அழிக்கப்பட்டது."

  ReplyDelete