என்
தமிழ் உணர்வு கடந்த காலத்திற்கு வேகமாக கூட்டி சென்றது!!! நாங்கள் பிறப்பால் தமிழகம்
நாகர்கோயில் சேர்ந்த தமிழர்களாக இருந்தும் தொழில் நிமித்தமாக எங்களுடைய தாத்தா மலைபிரதேசம்
தேடி சென்றதால் கேரளா தமிழர்கள் ஆனோம். பின்பு
பணபெட்டியுடன் தாத்தா நாகர்கோயில் தேடி வந்த போது உறவினர்கள் காட்டிய முகம் 70 வயதிலும்; தாத்தாவை மறுபடியும் மலைபிரதேசத்தை பார்த்து வரவைத்தது. இருப்பினும் தமிழ் எங்கள் உயிர் மூச்சாகவே இருந்தது
அப்படியே வளர்ந்தோம். படிப்பின் வசதி தரம்
சார்ந்து மலையாள கல்வி படிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டாலும் தமிழ் பத்திரிக்கை வாசிப்பது
தமிழில் வீட்டில் கதைப்பது என்பது எங்கள் பெருமையாக இருந்தது. பொது இடங்களில் தமிழர்களாக
எங்களை அறிமுகப்படுத்தி கொள்ள ஒரு போதும் தயங்கியது இல்லை. உண்மையை சொன்னால் “தமிழர்கள்” என்ற அடையாளம் பல இடங்களில் பாண்டிகள் என்ற கேலிக்கு உள்ளாக்கப்பட்டாலும்
எங்கள் அடையாளத்தில் ஒரு தனி கவுரவம் இருந்தது.
உயர்கல்வி வகுப்புகளில் சில ஜாதி வெறி பிடித்த ஆசிரியர்களால் மிகவும் கேவலமான காழ்ப்புணர்ச்சிக்கு
ஆளாக்கப்பட்டோம், கண்காணிக்கப்பட்டோம். இந்த
பாகுபாடு பள்ளிகளில் மட்டுமல்ல நாங்கள் வணங்க செல்லும் ஆலயங்களிலும் இருந்தது. இருப்பினும்
இந்த போராட்டம் எங்கள் வாழ்க்கையை வழி நடத்தியது செம்மையாக! பல தமிழ் குடும்பங்கள் தங்கள் தாய் மொழி மலையாளமே
என்று வாழ முற்பட்ட போது எங்கள் அடையாளம் மறையாது இருக்க சில கஷ்டங்கள் எங்களுடன் சேர்ந்தே
பயணித்தது. சில தமிழக குடும்பங்களோ தன் குழந்தைகளை
மலையாள குழந்தைகளிடம் பழக கூட அனுமதிக்காது வளர்த்தனர். ஆனால் என்னுடைய வீட்டில் தமிழும்
மலையாளவும் ஒரே போல் நாங்கள் கற்க அனுமதி தரப்பட்டது உற்சாகப்படுத்தப்பட்டோம். வீட்டில் ஒரு தமிழ் பத்திரிக்கையும் மலையாள பத்திரிக்கயும்
வாசிக்க வரவைத்து தந்தார்கள் .
எங்கள்
நாலு திசைகளிலும் மலையாளிகள் வீடுகளாக இருந்தது. நாங்கள் வீடு கட்டிய போது வடக்கு பக்கம் வசிப்பவர் எங்கள் வீட்டு சுவரில் மேல்
அவர்கள் வீட்டு சுவர் வரும்படியாக கட்டினர். தெற்கு பக்கம் குடியிருப்பவரோ நாங்கள் வீட்டு சுவர்
எழுப்பும் வரை அமைதியாக இருந்து விட்டு அவர் வீட்டு மரத்திலான சுவரை ஒரே நாளில் அகற்றி
விட்டு எங்கள் வீட்டு சுவரை அவர் வீட்டு சுவராக மாற்றினார். பின் வீட்டில் ஒரு வயதான மலையாளி முதியவர் வசித்திருந்தார்.
அவர்கள் வீட்டு குப்பையை எங்கள் வீட்டு சுவர் பக்கம் சேர்த்து வைப்பதையே வழக்கமாக கொண்டிருந்தார்.
நாலாவது பக்கம் கோட்டயம் கன்யாகுமாரி
ரோடு என்பதால் சிக்கல் வரவில்லை. மழைக்காலத்தில்
தன் வீட்டு கழிவுகளை ஓடையில் திறந்து விடும் பக்கத்து வீட்டுகார நாட்டு வைத்தியர் உங்கள் வீட்டு கழிவோ ஒரு நாற்றம்
வருகின்றது என்று தன் ஆங்காரத்தை எங்கள் வீட்டு உள் வந்தே காட்டுவார். இப்படியான
சூழலிம் அவர்கள் வீட்டு திருமணங்களுக்கு நாங்கள் விருந்தாளிகளும் எங்கள் வீட்டில் அவர்களை
விருந்தாளிமாக பாவித்தும் சில நுட்பமான கருத்துரையாடலில் மோதலை தவிர்த்து வாழ்வதே எங்கள்
வழக்கமாக இருந்தது. அந்த சூழலில் வளர்ந்த எங்களுக்கு
தமிழகம் தமிழ் மக்களை அதீதமான அன்பும் ஆசையுடன்
நினைத்து பார்த்தோம். தமிழகம் சென்று விட்டால் எங்கள் துன்பம் எல்லாம் ஓய்ந்த்து என்று
எண்ணி மகிழ்ந்தோம்.
மேற்படிப்புக்காக
கேரளா கல்லூரியில் சேர்ந்த போது பெரிய ஒரு கூட்டத்தில் தனித்து விடப்பட்ட சூழல் உணர்ந்தாலும் சிறந்த கல்லூரி சூழல் பண்பான ஆசிரியர்கள் நட்பான சூழல் மகிழ்ச்சியே தந்தது. எங்கள் கேரளா
தோழிகள் எங்களிடம் தமிழ் எழுத்தை கற்று கொள்ள ஆவலுடன் அணுகி வந்துள்ளனர். தமிழக கலாச்சாரத்தை
கேட்டு தெரிந்தனர். நம் மொழியின் மரியாதையான பாங்கை(வாங்க, போங்க என்று அழைப்பதை)
மிகவும் விருப்பமாக நோக்கினர். சில ஆசிரியைகள்
பிச்சைகாரர்களை பற்றி விவரிக்கும் போது "பாண்டிகளை போல்" என்று சொல் தாங்காத வேதனையுடன் நாங்கள் எங்களுக்குள் ஒளிவதை தவிற வேறு வழி இருந்தது
இல்லை. ஆனால் எங்கள் மொழியை பாடல்களை பண்பை நேசித்தார்கள் ஆச்சரியமாக சில போது கேலியாக
என்றிருந்தாலும் நோக்கினார்கள் என்று சொன்னால் பொய்யாகாது.
எங்கள் தமிழ் தாகம் பின்பு எங்களை தமிழக கல்லூரியில்
படிக்க வேண்டும் என்ற ஆசையில் இட்டு சென்றது. கேரளா எல்கை ஓரம் கல்லூரி என்ற வகையில் ‘பெரியகுளம்
ஜெயராஜ் ‘கல்லூரியில் சேர்க்கப்பட்டடேன். நான் கல்லூரியில்
பட்டப்படிப்புக்கு சேர்ந்த போது உயர்பள்ளி வகுப்பில் படித்த என் தங்கை; தனக்கு தமிழ்
எழுத்து பரிசயம் இல்லாததால் மலையாள மொழியில்
கடிதம் எழுதுவதையே வழக்கமாக கொண்டிருந்தாள். கல்லூரி விடுதி என்பதற்க்கு பதிலாக கல்லூரி என்று தவறாக முகவரி எழுதுவதால்; இந்த கடிதங்களில்
சிலது, எனது பெயரை கொண்ட எங்கள் கல்லூரி பேராசிரியையின் கையில்
கிடைத்து விடுவது உண்டு.
அவரின் கேள்வியில் ஒரு இளக்காரம் எகத்தாளம் இருக்கும்.
முதல் கேள்விக்கு கேரளா என்ற உடனே என்ன கேரளாக்காரியா
நீ? எஸ்டேட் தானே! கேரளா என்று பீற்றி கொள்வார்கள்
என்று அர்ச்சனை ஆரம்பித்து கடிதம் பற்றிய குறுக்கு
கேள்வி ஆரம்பித்து விடும். மேடம் என் தங்கை எழுதியதே என்று நிரூபிக்கும் முன் அவரிடம்
இருந்து வரும் காது கூசும் வார்த்தைகளுக்கு குறைவு இருந்ததில்லை. என் தங்கையிடம் கடிதமே எழுத வேண்டாம் என்றாலும் எனக்கு
கடிதம் எழுதி என் நிம்மதியே கெடுத்து கொண்டே இருந்தாள்.
ஒரு முறை என்னை கல்லூரியில் பணிபுரியும் மலையாள அருட் சகோதரியிடம் இழுத்து சென்றார்
. அவர் இது தங்கையிடம் வந்த கடிதமே என்ற போதும்
கள்ளனை பிடித்த போலிஸ் போல் முகத்தை வைத்து
கொண்டு கடிதத்தை என் முகத்தில் விட்டு சென்றார். ஒரு பச்சை தமிழச்சி பேராசிரியர் நடந்து கொண்ட விதம்,
கேரளா தமிழர்கள் என்ற காரணத்தால் அவர் பிரயோகித்த வார்த்தைகள் இன்றும் மனதை கனக்க
செய்பவை! அவர் கண்ணில் விழுந்த ஒரு தூசியாக நான் இருந்தேன் அந்த 3 வருடங்களிலும். தமிழராகவும்
மலையாளியாகவும் சேர்த்து கொள்ளாது இரண்டும் கெட்ட நிலையில் வாழ்ந்த கல்லூரி நினைவுகள்
பல மகிழ்ச்சி மத்தியிலும் கொடியதாகவே இருந்தது.
பின்பு
திருமணம் என்ற நிலையில் தமிழக தமிழனை தேட இன்னும்
பிரச்சனை இருந்தது. மலையாள மக்களிடம் மட்டுமல்ல கேரளா தமிழர்களிடவும் சில தப்பிதங்களான
எண்ணங்கள் தமிழக தமிழகர்களிடம் இருந்தது. ஆசை
கொண்டது போல் பச்சை தமிழனின் துணை கொண்டு தமிழச்சி ஆன போதும் ஜாதிய-மத சிந்தனைகள் கொண்ட தமிழர்களை கண்ட போது "பாண்டிகள்
என்று அழைக்கப்பட்டு நாங்கள் கேலியாக்கப்பட்டது காற்றில் பறந்த பஞ்சாகவே தோன்றியது.
சமீபத்தில்
ஒரு துள்ளல் தமிழச்சி என்னை கேரளா மலையாளி என்று ஆடி ஆடி விரட்டியபோது அடையாளம் அற்ற உள்ளூர் நிலைகளை எண்ணி என் மனம் வெதும்பியது. எல்லைக்கு மறுபக்கம் இருக்கும் ஈழத் தமிழர்களிடம்
சொட்ட சொட்ட காட்டும் அன்பு எங்களை போன்ற தமிழர்களிடம்
வராதா அல்லது பக்கத்து வீட்டில் வசிக்கும், உடன் வேலை செய்யும் தமிழக பெண்கள் எல்லாம்
அவர்கள் எதிராளியும் தூரத்தில் தெரியும் தமிழர்கள் மட்டும் தான் உண்மை தமிழர்களா?
மடியில் குழந்தையுடன் தெருவோரமாக பிச்சை எடுக்கும்
ஏழை பெண்ணும் தெருவில் கைகுழந்தையுடன் குப்பை பெறுக்கும் தமிழக பெண்ணும் தமிழச்சி தான்.
தமிழுக்காக உயிர், மூச்சு என்பவர்கள் தான்
தமிழர்களை மிகவும் வன்மையாக அழிக்க துடிக்கின்றனர்.
மனதில் இவ்வளவு குமுறல்களா?
ReplyDeleteThambirajah Elangovan · Subscribed · Paris, France · 320 subscribers
ReplyDelete''தமிழுக்காக உயிர் - மூச்சு என்பவர்கள் தான் தமிழர்களை மிகவும் வன்மையாக அழிக்கத் துடிக்கின்றனர்."
தங்கள் உள்ளக் குமுறலை - வேதனையை உணரமுடிகிறது...!
வாய்வீரம் கொட்டியே இனநாசம் செய்யும் தமிழர்கள். தமிழுக்காக உயிர் - மூச்சு என்பவர்கள் தங்கள் முதுகின் மேலுள்ள அழுக்கினை முதலில் போக்கத் துணியட்டும்..!
ஈழத்தமிழர்களிடம் சொட்டச் சொட்ட அன்பா..? எல்லாம் பிழைப்பு வாதம்..!
முப்பது ஆண்டுகளாக அங்கு (தமிழகத்தில்) முகாம்களில் சொல்லொணாத் துன்பத்தில் வாடும் ஈழத்தமிழர்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள்..? ஒரு நேர உணவு கொண்டுபோய்க் கொடுத்திருப்பார்களா..?
உசுப்பேத்தி.. ஏத்தி... வாய்வீரம் கொட்டி - தம் வயிறு வளர்ப்பதோடு மிஞ்சியுள்ள ஈழத்தமிழர்களையும் அழித்தொழிக்கத்தான் உதவுகிறார்கள்.
ஐரோப்பாவில் ஐந்து வருடங்கள் வாழ்ந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தமிழகத்தில்..?
''தமிழ் இரத்தம் - இரத்த உறவுகள் - விரைவில் போர் வெடிக்கும்" எனச் சிலர் குரல் எழுப்புவது - வன்முறை ஓதுவது ஏன் என்பது தமிழகச் சாதாரண மக்களுக்கும் இப்போது புரியத் தொடங்கிவிட்டது...!
பதவி ஆசையாலும் - புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வருந்தி உழைக்கும் பணத்தில் - ''ஓசி"யில் உலகநாடுகளில் உல்லாசமாகச் சுற்றுவதற்கும் - தங்கள் பணப்பெட்டியை நிரப்புவதற்கும் தான் அவர்களது வீர முழக்கங்கள்..!
அத்தோடு எதையும் சரிவரத் தெரியாமல் வீர வரலாறு - கதை எழுதி - நாளொரு நூல் வெளியிட்டு பணப்பெட்டி நிரப்புகிறார்கள்..!
எல்லாம் இழந்து கையறு நிலையிலுள்ள ஈழத்தமிழர்கள் தற்போது உண்மையை உணரத்தொடங்கிவிட்டனர்.
அல்லறும் தமிழக மக்களின் அவலங்களைப்பற்றி அவர்கள் பேசட்டும்..! அந்த மக்களின் வாழ்வுக்கான போராட்டங்களை முதலில் அவர்கள் முன்னெடுக்கட்டும்..!
உண்மையாகவும் - நேர்மையாகவும் நடக்கச் சாதாரணமக்கள் கற்றுக்கொடுப்பார்கள்.!
மனச்சாட்சியின்படி அவர்கள் பேசட்டும்..!
உண்மையாகச் சிந்திப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்..!
Reply · 1 · Like · Follow Post · 3 hours ago
Theva Thasan · Paris, France
ReplyDeleteஉண்மையை உரத்துப்பேசியுள்ளீர்கள் அச்சம் வேண்டாம் உங்கள் மனசாட்சியுடன் பயணியுங்கள் இன்றைகு் உங்கள் எழுத்தை ஏழனமாக பார்ப்பவர்கள் நாளைக்கு உங்கள் எழுத்துக்கு சாமரம் வீசுவர்.......
Reply · 1 · Like · Follow Post · 59 minutes ago
Srikandarajah கங்கைமகன் · Jaffna uni, colobmo uni, annaamalai uni
ReplyDeleteவணக்கம் பாபா. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். வன்மையான உண்மை. உங்கள் எழுத்து உண்மையான வன்மை.