19 Feb 2012

முல்லைப்பெரியார்-மீறப்பட்ட உரிமை மீறல்கள்!

சில அரசியல் லாபங்களுக்கு என சீண்டி விடப்பட்டு இரு இன மக்களின் வாழ்வில் உயிர்  பயம், வாழ்வாதாரம் பற்றிய கேள்வியை எழச் செய்த முல்லைப்பெரியார் பிரச்சனை காலத்தால் அழிக்க இயலாத சில வடுக்களையும்   தனி நபர்களுக்கு கொடுத்து சென்றுள்ளது.  தமிழக விவசாயின் வாழ்வாதாரவும் மலையாள கரையோர தமிழ் மக்களின் உயிர் பயவும்  ஒன்று சேர  இதை வைத்து ஆதாயம் அடைந்தவர்கள் சிலர்,  ஆனால் இழந்தவர்களோ பலர்.

தமிழக ஏழை மக்கள், கேரளா எல்கையை கடந்து  கூட்டம் கூட்டமாக கோஷம் எழுப்பியவாறு சென்ற போது ஆகா மக்கள் விழிப்பைடைந்து விட்டனர் அரசியல் தலைமை இல்லாதே தமிழர்கள் என்ற உணர்வுடன் போராடினர் என்று புல்லரித்து கொண்டிருந்த போதும்  பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டது. எல்கையை நோக்கி ஓடியவர்களில் மக்களுக்கென உயிரை துச்சமாக மதிக்கும் எந்த தலைமையோ பணக்கார விவசாயிகளோ அதிகார வர்கமோ இருந்திருக்கவில்லை. உயிருக்கு எந்த வித உத்திரவாதவும் கிடைக்காத ஏழை கூலித் தொழிலாளிகளே பெரும்பாலானவர்கள்!  

 எல்கையோரம்  நல்ல கூலியில் மலையாளி  நிலங்களில் வேலைசெய்த பல ஆயிரம் தமிழ் தொழிலாளர்களால் கேரளா தொழிலாளிகளின் வேலை பறிக்கப்படுவதாகவும் தாங்கள் கோரும்  ஊதியம்  விவசாய உடமைகளிடம் பெருவதில் சிக்கல் உள்ளதாகவும்;   கேரளா  தொழிலாளி சங்கத்தின் தூண்டுதலுடன் தமிழக தொழிலாளர்கள் கூலி வேலைக்கு கேரளா பக்கம் வரக்கூடாது என்று வற்புறுத்தப்பட்டனர்.  முல்லைப்பெரியார் என்ற பிரச்சனையை வைத்து  தமிழக தொழிலாளிகள்  எல்கை தாண்டி வரக்கூடாது என்பதில் கேரளா தொழிலாளிகளின் கடவுள் அச்சுதானந்தன் மும்முரமாக இருந்தார்.  (ஒபாமாவின் வேலை நயமே கேரளா அரசியல் வாதிகளால் மேற்க்கொள்ளப்பட்டது)

கிடைத்த கம்பு கட்டையுடன் கேரளா எல்கை நோகி சென்றவர்களை தாக்க மலையாளிகளும் வழியோரம் காத்திருந்தனர்.  மலையாளிகளின் கண்ணில் மண்ணை தூவி தமிழக புதல்வர்கள்   காட்டு வழியாக மலையாள எல்கை தாண்டி மலையாளிகளின் வீடுகள் என்று எண்ணி“ ரோஸா பூக்கண்டம்”(குமளிக்கு அருகாமையிலுள்ள இடம்) பகுதியிலுள்ள பல தமிழக வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதில்  ஒரு ஏழை தமிழ் பெண் உற்றோர் உறவினர் உதவி இல்லாது தன் நகை உடமைகளை விற்று, வீடு கட்டி கணவருடன் குடியேறி சில வருடங்கள் மட்டுமே ஆகியிருந்தன.

கேரளா எல்கையோரம் என்பதால் மட்டுமல்ல தேயிலை தொழிலாளர்கள் மற்றும் தமிழர்கள் வசிக்கும் பகுதி என்பதால் அரசியல்வாதிகள் மற்றும் மதவாதிகளால் புரக்கணிக்கப்பட்ட, மேலும்   ஒரு உருப்படியான கல்லூரியோ மருத்துவ மனையோ  கூட இல்லாத பகுதி இது.  தேக்கடி இருப்பதால் சுற்றலா பயணிகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை. ஆனால் கேரளா காங்கிரஸ் மற்றும் கம்னிஸ்டு அரசியவாதிகளால் பெண் வியாபாரம் மற்றும் மயக்கு மருந்து கடத்தலால்  ஊடகங்களில் இடம் பிடித்த பகுதியாகவே கேரளத்தவர்களுக்கு தெரியும்!

பல தமிழக குடும்பங்கள் வியாபார நிமித்தமாக  வசித்தாலும் குழந்தைகள் படிப்பு தமிழகத்தில்  தான் வேண்டும்  என்பதால் கம்பம் சின்னமனூர் பகுதியில்  குடும்பங்களை குடியமைத்திருந்தனர்.  மலையாள மக்களுடன் நெருங்கி வாழ்ந்த சூழலில் பழக்க வழக்கங்கள்  ஒன்றுமை இருந்ததாலும் மலையாளிகள் என எண்ணி தமிழர்களால் தமிழகத்தில் தாக்கப்பட்டனர்.  தாழ்த்தபட்ட இனத்தை சேர்ந்த தேயிலை தோட்டங்களில் அதிகாரியாக பணிபுரிந்த 70 வயதான முதியவர் தன் 3 மகள்களையும் திருமணம் முடித்து கொடுத்து விட்ட நிலையில்; ஓய்வு நாட்கள் தமிழக்த்தில் கழிக்க வேண்டும் என்ற நோக்கில்  ஒரு சிறு வீடு கட்டி தமிழகம் சின்னமனூரில் குடியிருந்தார்.  அவருடைய வீடும் கேரளாவில் ஒரு காலத்தில் வசித்திருந்தவர் என்ற காரணத்தால் அடித்து நொறுக்க்ப்பட்டது.

இன்னும் சில தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் வண்டிபெரியார் அரசு பள்ளிகளில் வேலை செய்தாலும் தங்கள் குழந்தைகள் தமிழக கலாச்சாரத்தில் தமிழர்களாக வளர வேண்டும் என்ற நோக்கில் கம்பம் பகுதியில் குடியிருந்தனர்.  கலவர நாட்களில் பால் வாங்க கூட வெளியில் வர இயலாது  வீட்டிற்க்குள் முடக்கப்பட்டனர், பொய் தமிழ் உணர்க்வாளர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.

என் தாய் உட்பட பல வயதான பெற்றோர்கள்  கிருஸ்துமஸ் விடுமுறைக்கு தங்கள் உறவினர்களை காண தமிழகம் வர குமளி எல்கை முடியும் மட்டும்  வந்து பல மைல்கள் கால் நடையாக நடந்து  “குட்டியானை” என்று அழைக்கப்படும் சரக்கு லாரியில்  10 ரூபாய் கட்டணத்திற்க்கு பதிலாக 65 ரூபாய் கட்டணம் கொடுத்து தமிழக எல்கை கடந்து பேருந்து பிடித்து தங்கள் உறவுகளை கண்டு சென்றனர்.

மனித நேயமற்ற நிகழ்வுகளும் நடந்தேறியது. கேரளா பேருந்தில் தமிழகம் நோக்கி வந்த வாகனத்தை மறித்து பேச வைத்து மலையாளிகள் என கண்டவர்களை நடு -காட்டு வழியில் இறக்கி விடப்பட்டனர். மலையாளிகளை போன்று உருவ ஒற்றுமையுள்ள தமிழனை அடிக்க வளைந்த போது அருகிலுள்ள  வீட்டில் வசித்த முன் பின் தெரியாத தமிழ் வீரத்தாய்” இவன் என் தம்பி” என்று சொல்லி மீட்ட சம்பவங்களும் நடந்தேறியது.

பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளும் சிறிதல்ல.  மலையாளியா தமிழச்சியா என்று பேச்சு மொழியில் கண்டு பிடிக்க திணறிய போது ஒரு ஆயுதம் ஏந்திய தமிழன் கேட்டானாம் “எப்படிடா மலையாளத்துகாரிகளை கண்டுபிடிப்பது எல்லாவளுமே தமிழில் பேசுகின்றார்கள் என்று”; அதற்கு அந்த அறிவு கொளுந்து செந்தமிழன் சொல்லி கொடுத்தானாம் ” காலை பாருடா மலையாளத்துகாரி கால் சுத்தமாக வைத்திருப்பாள்” என்று….என்ன கொடுமை இது……………?

தமிழகர்களின் உரிமை உணர்வு என பேசிகொண்டே பல சில தமிழகர்களின் உரிமைகள் வலைக்கட்டாயமாக பறிக்கப்பட்டது . நதி தண்ணீர் பங்கீடு என்பது இரு மாநில பிரச்சனையாக இருந்த போது இரு இன மக்களை மோதவிட்டு புரட்சி என்ற வடிவில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மனித உணர்வை என்ன சொல்ல? இந்த பிரட்சனையை இரு மாநில அரசியல்- அதிகாரிகள் பேசி தீர்க்காது அல்லது ஆக்கபூர்வமாக சட்ட சபையில் விவாதிக்காது தீர்வை தேடுவது தலையை விட்டு விட்டு வாலை பிடிப்பது போல் தான் ஆகும்.

நம் நாட்டிலுள்ள அரசியல் அமைப்பு சட்டங்கள் இப்பிரச்சனைக்கு என்ன தீர்வு சொல்கின்றன என காண வேண்டியுள்ளது.  ஆக்க பூர்வமான கருத்துரையாடலுக்கு தளம் அமைக்க ஊடகங்களும் முன் வரவில்லை.  கிளிப்பிள்ளை போல் முல்லைப்பெரியார் வரலாற்றை பற்றியும் பென்லிகுக் தியாகத்தை பற்றியுமே கதைத்து கொண்டிருந்தனர். ஒரு வெள்ளைக்காரனை புகழ்ந்த ஒரே நிகழ்வும் இது தான்!  மக்களால் தீர்வை எட்ட இயலாத பிரச்சனைகளுக்கு  தீர்வு சொல்ல வக்கில்லாத அரசியல் அமைப்புகள் அதிகாரிகள்- அரசியல்வாதிகள் தான் தேவையா?

முல்லைப்பெரியார் பிரச்சனையும் தீர்வை இல்லாது அவசர அவசரமாக முடிக்கப்பட்டு  ரோடுகளை திறந்து விட்டு தங்கள் கருணை உள்ளத்தை தமிழர்கர்கள் வெளிப்படுத்தியதாக காட்டி கொண்டனர்.  இந்த கருணை உள்ளத்தின் பின் வெறும்   வியாபார லாபம்   மட்டுமே என்பதே உண்மை!. கிறுஸ்துமஸுக்கு போத்து இறைச்சி வியாபாரம் செய்ய வழியற்று அழுத வியாபாரிகளின் வேண்டுதல் புதுவருட வியாபாரத்திற்க்காவது வழியை விட்டு புண்ணியம் தேடினர். ஒரு மாதம்  ஒரு லட்சம் வாடகை கொடுத்து வந்த குமளி வியாபாரிகள் கொசு விரட்டும் வேலைக்கு தள்ளப்பட்ட போது அரசு விழித்து விளக்காக வந்தது. இப்படியாக நம் நாட்டில் எழுந்த  புரட்சியை வியாபார நோக்குடன் தடையிட்டு முடக்கினர். எந்த நேரத்திலும் இதில் சில முரண்பாடுகள் எழும் போது முல்லைப்பெரியார் பிரச்சனையாக வரலாம்.

அதே நேரம் இதை பற்றி நம் சட்ட சபையில் ஆக்கபூர்வமாக ஏதும் விவாதங்கள் நடந்ததா என்றால் அதுவும் இல்லை.  சொல்லி வைத்து மட்டை பந்து விளையாடி தோற்பது போல் பல்- நாவை காட்டி எதிர்கட்சி தலைவர், ஆளும் தலைவர் என தங்கள் இருப்புகளை தக்கவைக்கின்றனர்.   விவசாயிகளின் கவலை அப்படியே நிலைகொள்கின்றது.  அரிசி விலை தங்க விலைக்கு சமமாக உயர்ந்தால் ஒருவேளை விவசாயிகளின் குரலும் கேட்கப்படலாம்.  மேலும் தமிழகத்திலுள்ள நீர் நிலைகளின் பராமரிப்பை பற்றியோ அதன் இன்றைய நிலையை பற்றியோ  இன்னும் கவலை கொள்ள ஆரம்பிக்கவில்லை.  பெரியார் நதி மேல் கொண்ட தமிழ் உணர்வு தாமிரைபரணி நதி என்றோ வைகை என்று கேட்டாலோ எழாதிருப்பதின் மர்மவும் புரியவில்லை.

உடையப்பட்ட வீடுகள் போலவே உடைக்கப்பட்ட மனித மனங்களை  யார் ஒட்டவைப்பர்  என்பதும் முல்லைப்பெரியார் பிரச்சனை போன்றே விடை தெரியாத கேள்வி தான்?

0 Comments:

Post a Comment