தமிழ் கவிஞர் வைரமுத்து " தனது மெல்லிய மொழியுடன் தனித்து நிற்கிறார்” என்ற கருத்துடன் ஓ.என்.வி கலாச்சார அகாடமி விருது வழங்க முன்வந்தது.
யாரிந்த கவிஞர் ஓ.என்.வி! ஒரு விழுமிய கவிஞர், விருது பெற்ற திரைப்பட பாடலாசிரியர், புகழ்பெற்ற சொற்பொழிவாளர், புகழ்பெற்ற அறிஞர் மற்றும் தனித்துவமான கல்வியாளர், சமூக இயக்கங்களில் பல நிலைகளில் செயலாற்றியுள்ளவர். ஸ்வராஜியம், தத்தம்மா போன்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளவர். கேரளா மக்களின் நவீன கவிதைகளின் அடையாளமாக அறியப்பட்டவர். இணையற்ற கற்பனை, படைப்பாற்றல் மற்றும் முற்போக்கான பார்வைகளால் மலையாள இலக்கியத்தில் அழியாத முத்திரையை விட்டுச்சென்றவர் தான் ஒ.என். வி குறுப்பு. இவருடைய பாடுபொருள் சாதாரண மக்களின் துயர், வாழ்க்கை சிந்தனைகள் உள்ளடக்கி, தனக்கான தனித்துவமான பாணியில் இருந்தது. மலையாளத்தில் அவரது கவிதைப் படைப்புகள் சாதாரண மக்களின் இதயத்தையும் ஆன்மாவையும் தொட்டு, உத்வேகமாக மாற்றின. குமாரனாசான், சங்கன்ப்புழாவிற்கு அடுத்து மக்களால் அறியப்பட்டிருந்த கவிஞர்களில் ஒருவராக இருந்தார். அதனால் மக்கள் கவிஞர் என அறியப்பட்டிருந்தார்.
கொல்லம் மாவட்டம் சவறாவில் 1931 மே 27 அன்று பிறந்தார். தனது எட்டு வயதில் நிகழ்ந்த தந்தையின் அகால மரணம் இவரை திருவனந்தபுரம் என்ற தலை நகரியில் இருந்து ஒரு சிற்றூரான கொல்லத்தில் கொண்டு சேர்த்தது.
கவிதைகளில் அவரது முதல் முயற்சி அவருடைய பள்ளி நாட்களிலே தொடங்கியது. 1946 ஆம் ஆண்டு தனது 15 வது வயதில் தனது முதல் கவிதைத் தொகுப்பு ”முன்னோட்டு (முன்னுக்கு) ” வெளியிட்டார். கவிஞரின் ஆரமபகால கவிதைகள் தேசபக்தி, பக்தி, பால்யம் தொலைந்த நிராசை உணர்வுகளின் பின்னணியில் எழுதப்பட்டது.
கவிஞர், தொழில்முறையில் ஒரு கல்லூரி பேராசிரியராக இருந்தார். டால்ஸ்டாயின் 150 வது பிறந்தநாளில் பங்கேற்க சோவியத் ஒன்றியத்திற்கு சென்ற இந்திய எழுத்தாளர்கள் பிரதிநிதிகள் குழு, யூகோஸ்லாவியாவில் (1987) ஸ்ட்ருகா கவிதை விழா, அதே போன்று பேர்லினில் (1998) உலக மாநாட்டு இவற்றில் இந்திய பிரதிநிதி ஆக சென்றிருக்கிறார். சாகித்ய அகாடமியின் நிர்வாகக் குழுவில் ,கேரள கலாமண்டலத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
சூரியனுக்குக் கீழே எதுவும் கவிதைக்கு அந்நியமானது அல்ல. தனக்கு ஏற்படும் எந்தவொரு கவிதை வடிவத்தையும் கருப்பொருளையும் தன்னிச்சையாக ஏற்றுக்கொள்ள கவிஞருக்கு சுதந்திரம் உண்டு என்றார் ஒ.என்.வி.
அங்கீகாரங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன. 1971 இல் கேரள சாகித்ய அகாடமி விருது, 1975 ஆம் ஆண்டில் கேந்திரா சாகித்ய அகாடமி விருது, 1981 இல் சோவியத் லேண்ட் நேரு விருது, 1982 இல் வயலார் ராம வர்மா விருதையும் வென்றிருந்தார்.
சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளை தொடர்ந்து பன்னிரண்டு முறை வென்றுள்ளவர். இனி திரைப்பட பாடல்களுக்கு விருது பட்டியலில் தன்னை சேர்க்க வேண்டாம் எனக்கூறி ஒதுங்கினார். 1998 இல் உயரிய தேசிய விருது பத்மஸ்ரீயும் பெற்றார்.
தனது சொந்த தேசம் கேரளத்தின் நிலையை பற்றி பல விமர்சங்களும் வைத்திருந்தார். மற்றவர்கள் சுரண்டுவதற்கான அடிமைத்தனமான, அறிவுசார் பொருட்களை உற்பத்தி செய்யும் இடமாக கேரளா மாறிவிட்டது என்று கவலை கொண்டார்.
அடிப்படை கல்வி, ஒருவருடைய தாய்மொழியில் தான் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தென்னிந்தியாவின் மொழி ’தமிழ்’ என்றே பலர் நினைக்கிறார்கள். மலையாளம் உலகிற்கு ஒரு சாளரமாக மாற வேண்டுமென்று செயல்பட்டார். மலையாள மொழி கிளாசிக்கல் மொழியின் நிலையை அடையவும், கேரள கலாமண்டலம் ஒரு பல்கலைக்கழகத்தின் அந்தஸ்தைப் பெறுவதில் முக்கிய பங்கு ஆற்றியவர் ஒ. என்.வி குருப்பு.
ஒரு ஆசிரியராக தன் துறையை சேர்ந்த இளம் தலைமுறை ஆசிரியர்கள் ஒஎன்வி விமர்சனத்தில் இருந்து தப்ப இயலவில்லை. ஆசிரியர் பணியில் ஒரு மணிநேரம் கற்பிக்க நான்கு மணி நேரம் தயார் செய்ய வேண்டியிருந்தது . ஆனால் இன்று ஆசிரியர்கள் யு.ஜி.சியில் இருந்து கிடைக்கும் தங்கள் உரிமைகளுக்காக மட்டுமே பேரம் பேச ஒன்றுபடுகின்றனர் என்றார்.
மாணவர்களுக்கான ஆசிரியர்களின் பங்களிப்பு சந்தேகத்திற்குரியது . இன்று, ஆசிரியர்கள் பணத்தைப் பற்றி மட்டுமே அதிக அக்கறை கொண்டுள்ளனர், அவர்கள் ஓய்வுபெறும் போது ஒரு கல்லூரி திறக்கும் அளவிற்கு, பணத்தை சேர்த்து வைத்துள்ளனர் என்றார்.
மாணவர்கள் முதன்மையாக கல்வியை மதிக்க வேண்டும், அது அனைவருக்கும் கிடைப்பதற்காக அவர்கள் போராட வேண்டும். இன்று மாணவர்கள் மற்றவர்களின் வெறும் கருவிகள் ஆக உள்ளனர். அவர்களின் கண்கள் வெளிநாட்டு நாடுகளில் தான் உள்ளன, வெளிநாட்டில் குடிபுகிர்வது என்பது தான் அவர்களின் லட்சியமாக உள்ளது. மாணவர்கள் பாடகசாலைகளில் பல விஷயங்களைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும், பின்னர் அவர்களின் பார்வையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் விரும்பினார்
கவிதைகளை பொறுத்தவரையில் மனிதநேயம் என்ற கருத்தில் வடிவமைக்க வேண்டும் என்றும் விரும்பினார். ஒரு திறமையான கவிஞர், தனது மரபு ரீதியான மொழியை அற்புதமான புதிய உயரங்களுக்கு உயர்த்துகின்றனர். அதனால் அனைவரும் கவிஞர்களை மதிக்க வேண்டும், ஆனால் கவிதைகளில் கவிதை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஓ.என் கிருஷ்ணகுருப் மற்றும் கே லட்சுமிகுட்டி அம்மா தம்பதியரின் மூன்று குழந்தைகளில் இளையவர், முதுமை காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் பிப்ரவரி13, 2016 அன்று காலமானார்
கவிஞரின் பிறந்த நாளான மே 27 அன்று நடைபெறும் விழாவில் விநியோகிக்கப்படும் விருதுகள்; ஓ.என்.வி கலாச்சார அகாடமியால் நிறுவப்பட்டது. இந்த விருது, ரூ.3 லட்சம் பணப்பையை உள்ளடக்கியது.
2017 ல் முதல் ஓ.என்.வி இலக்கிய பரிசுக்கு பிரபல பெண் கவிஞர்-மற்றும் சமூக ஆர்வலர் சுகதகுமாரி தேர்வு செய்யப்பட்டார். அடுத்து 2018 ல் அக்கிதம் அச்சுதன் நம்பூரிசி, 2019 ல் பிரபல எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், கடந்த வருடம் 2020 எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் லீலாவதி தேர்வாகியிருந்தார்.
கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ் கவிஞரும் பேராசிரியருமான டாக்டர் சேரன் ருத்ரமூர்த்தி ஓ.என்.வி அறக்கட்டளையின் முதல் சர்வதேச கவிஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிட தகுந்தது
இந்த ஆண்டிற்கான ஒன்வி விருது, மறைந்த கவிஞர் ஓ.என்.வி.குரூப்பின் நினைவாக தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துக்கு புதன்கிழமை வழங்க இருந்தது. ONV விருதுக்கு கேரளரல்லாத எழுத்தாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை. விவாதங்களினால் விருதை ஏற்க வைரமுத்து மறுத்து விட்டார்.
0 Comments:
Post a Comment