ஜோஜி 2021 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி குற்ற நாடகப் திரைப்படமாகும்,
இது திலீஷ் போத்தன் இயக்கத்தில் மற்றும் சியாம் புஷ்கரன் திரைக்கதையுடன் வெளிவந்துள்ளது. பஹத் பாசில் மற்றும் நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த கதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் மக்பத் நாடகத்திலிருந்து ஈர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடிக்கிறார். பாபுராஜ், ஷம்மி திலகன், உன்னிமாயா பிரசாத் ஆகியோர் மற்றைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பல இந்தியக் குடும்பங்களில் நடக்கும் ஒரு கதை. கோட்டயம் அருகிலுள்ள பல ஏக்கர் நிலபுலங்களுள்ள உழைப்பாளியான 74 வயது அப்பா, அவருடைய மூன்று மகன்கள் அடங்கிய குடும்பம். முதல் மகன் விவாகரத்தாகி தனது பதின்ம வயது மகனுடன் தந்தைக்கு உதவும் விவசாயியாக வாழ்கிறார்.
இரண்டாவது மகன் வியாபரத்தில் கவனம் செலுத்துகிறார்.
மூன்றாவது மகன் பொறியியல் படிப்பை இடைவழியில் விட்ட ஒரு தாந்தோன்றி. எல்லாருடனும் கனிவாக பேசுகிறான்,உதவுகிறான். ஆனால் சொத்தை பங்கு வைக்க தந்தை விரும்பவில்லை என்ற கோபத்தில் உடல் நலமற்ற நிலையில் இருந்து தேறிவரும் தந்தையை கொலை செய்கிறான். இந்த கொலையை கண்டிபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் தனது மூத்த சகோதரனையும் கொலை செய்கிறான். இத்தனை குற்றச்செயலகளுக்கும் உடந்தையாக அண்ணிக்காரி அமைதியாக வீட்டிலுள்ளார்.
தான் செய்த கொலைகள் வெளியே தெரிந்து விட்ட சூழலில் தற்கொலை செய்துகொள்ள துணிகிறான். ஆனால் காப்பாற்றப்பட்டுள்ளான்.
இந்த கதையின் பின்புலனாக கேரளா கிறிஸ்தவக் குடும்பம் எடுக்கப்பட்டுள்ளது. திரைக்கதையில் மிகவும் நுணுக்கமாக ஒவ்வொரு காட்சிகள் ஊடாக கதை சொல்கின்றனர்.
மனிதன் வாழ்க்கையில் தவறுகள் பெருக பெருக கடவுளை இறுக பற்றி கொள்வது போல் நடிப்பதை அந்த வீட்டு பெண் பைபிளை எடுக்கும் காட்சியூடாக விளக்குகிறார். மாமனார் எப்போது சாகுவார் என்று காத்துக்கிடக்கும் மருமகள், இறந்ததும் பெட்டிமுன் கவலையுடன் இருப்பதும், பூவைத்து பெட்டியை அலங்கரிப்பதும் முரண்பட்ட மனிதர்களின் இரு முகத்தை விளக்குகின்றனர். ஒரு வீட்டில் புகிரும் பெண்கள், புகுந்த வீடுகளின் நிலையை எவ்விதம் தாக்கம் செலுத்துகின்றனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
படித்த பட்டம் பெற்ற மனிதர்களின் சிந்தனை செயல்பாடுகள் உழைப்பையும் சுயகவுரவத்தையும் தன்னம்பிக்கையையும் இழந்த நிலையில் தனது தந்தையின் சொத்தை நம்பி நகர்த்தும் நிலையை சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.
கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் பாதிரியார்கள் செலுத்தும் நேர்மறை - எதிர்மறை தாக்கத்தை பற்றியும் இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கிரிமினல் குணம் கொண்ட ஜோஜி என்ற கதாப்பத்திரத்தில் நடிக்க எடுத்த துணிவு, பகத் பாஸிலுக்கு, தன் நடிப்பு மேல் இருக்கும் தன்னம்பிக்கை சார்ந்தது ஆகும். சிறப்பாகவும் நடித்துள்ளார்.
ஒரு குற்றப்பின்னணி படத்திற்கான விருவிருப்பு இல்லாது இருப்பது ஒரு குறைபாடாகும். காட்சிகள் திரையில் வரும் முன்பே கதையின் போக்கு விளங்குவது ஆர்வத்தைகுறைக்கிறதுு.
மற்றபடி நல்ல கதை, காட்சியமைப்பு, காட்சித் தொகுப்பு. ஒவ்வொரு நடிகரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாகவே செய்கின்றனர். இசையும் குறிப்பிட்ட படியில்லை என்றாலும் நல்லமே.
0 Comments:
Post a Comment