13 Jun 2021

பதேர் பாஞ்சாலி

 சத்யஜித்ரே இந்திய சினிமாவில் அனைவராலும் மதிக்கப்பட்டவர்.   இவர்  ஒரு இந்திய பெங்காலி திரைப்பட இயக்குனர்.  20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக  அறியப்பட்டு வருகிறார். கலை மற்றும் இலக்கிய உலகில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெங்காலி குடும்பத்தில் கல்கத்தாவில் பிறந்து, விளம்பர துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஒரு முறை தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்ற போது பிரெஞ்சு திரைப்படத் தயாரிப்பாளர் ஜீன் ரெனொயரைச் சந்தித்திருந்தார்.   பிற்பாடு விட்டோரியோ டி சிக்காவின் இத்தாலிய நியோரலிஸ்ட் திரைப்படமான சைக்கிள் தீவ்ஸ் (1948) ஐ லண்டன் பயணத்தின் போது  பார்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.  இந்த அனுபவம்   ரேயை சுயாதீன திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடச் செய்தது.

திரைப்படம், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் உட்பட 36 படங்களை ரே இயக்கியுள்ளார். ரே ஒரு புனைகதை எழுத்தாளர், பல சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார்.  தவிர வெளியீட்டாளர், இல்லுஸ்ட்ரேட்டர், காலிகிராஃபர், இசை அமைப்பாளர், கிராஃபிக் டிசைனர் மற்றும் திரைப்பட விமர்சகர்.

அவருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கவுரவ பட்டம் வழங்கி மகிழ்ந்தது.  ரேயின் முதல் படம், பதேர் பாஞ்சாலி, 1956 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த மனித ஆவண விருது உட்பட பதினோரு சர்வதேச பரிசுகளை வென்றது.  அபராஜிட்டோ (1956), மற்றும் அபுர் சன்சார் (1959) ஆகியவற்றுடன் தி அப்பு முத்தொகுப்பை உருவாக்கினார்.

ரேயின் முதல் திரைப்படமான பதேர் பாஞ்சாலி (1955) ஒரு எளிய குடும்பத்தின் கதை சொல்லியது.  கிராமத்திலுள்ள ஒரு ஹரி என்ற பூஜாரி.  வெளியூருக்கு வேலை தேடிச்செல்கிறார். வீட்டில் மனைவி, மகன், மகள் , ஒரு வயதான பாட்டி அடங்கிய சிறு குடும்பம் வறுமையால் தவிக்கிறது.

குழந்தை துர்காவும் வளர்ந்து வருகிறார்.  அடுத்தவர்கள் தோட்டங்களில் இருந்து தனது வீட்டிலிருக்கும் பாட்டிக்கு கொய்யாப்பழம் பறித்து வந்து வைக்கிறாள். வீட்டிலுள்ள பூனைக் குட்டிகளையும், கோழிகளையும் கவனித்து கொள்கிறாள். அத்துடன் தனது தாய் கொடுக்கும் சின்ன சின்ன வீட்டு வேலைகளையும் செய்து பழகுகிறாள். அந்த ஊரிலுள்ள மட்டுப்பாவு வீட்டிலுள்ள பெண் துர்கா கொய்யாப்பழத்தை திருடினாள் என்று தாயிடம் கோபப்படுகிறார். வீட்டிலிருக்கும் பாட்டியை, துர்காவின் தாயார் ”என் மகள் திருட, நீ தான் காரணம்” என்று கூறி திட்டுகிறார்.  முதிர்தாயும் கோபத்துடன் வெளியேறி விடுகிறார்.

பின்பு அப்பு பிறந்துள்ளான் என்று கேள்விப்பட்டதும் குழந்தையை பாராமரிக்க வந்து சேர்ந்தவர் இவர்களுடனே தங்குகிறார்.  துர்காவின் தாய்க்கு தங்கள் வறுமை ஒருபுறம்.  முதிய தாயை தங்கள் அரவணைப்பில் வைப்பது பெரும் பாரமாக படுகிறது. முதிர் வயது தாயும் ஒரு நாள் கடினமாக வெயிலில் பசிமயக்கத்தில் இறந்து விடுகிறார்.


அக்குடும்பத்திலுள்ள வறுமைக்கும் அப்பாற்பட்டு துர்காவும்   அவளுடைய தம்பி அப்புவும் அந்த கிராமத்தின் சூழலில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். துர்கா  தனது தம்பி அப்புவை மிகவும் பாசமாக பார்த்துக்கொள்கிறாள்.  இருவரும் இரயில் பார்க்க செல்வது, மழையில் நனைவது கிராமத்து குழந்தைகளுடன் விளையாட்டு என நாட்கள் செல்கிறது.


துர்கா இப்போது வளர்ந்து விட்டார். பக்கத்து வீட்டு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் போது தனக்கும் நடவாதா என ஏங்குகிறார். அந்த பணக்கார வீட்டில் ஒரு முத்து மாலை காணாமல் போகிறது.  துர்கா தான் எடுத்து இருப்பார் என அந்த வீட்டு பெண் பழிசார துர்காவை அவள் தாய் அடித்து விசாரிக்கிறார்.  துர்கா தான் எடுக்கவே இல்லை என சாதித்து விடுகிறாள்.



அடுத்து மழைக்காலம் துவங்குகிறது. துர்காவும் அப்புவும் மழை நனைந்து வீடு வந்து சேர்கின்றனர்.  துர்கா அந்த மழையில் காச்சல் வந்து இறந்து போய் விடுகிறார்.  அக்காவை இழந்த அப்பு தனிமையாகிறான்.

பட்டணத்திற்கு போன தகப்பன் மனைவி, மகளுக்கு துணிமணிகளுடன் வீடு  திரும்புகிறார். மகள் இறந்ததை அறிந்து மனம் உடைந்து,  கிராமத்து வீட்டை விட்டு விட்டு நகரம் நோக்கி நகர்கின்றனர்.


 பொருட்களை அடுக்கி வைக்கும் போது துர்கா திருடி ஒளித்து வைத்து இருந்த முத்து மாலை அப்புவின்  கைகளில் கிடைக்கிறது.  தன் இறந்து போன அக்காவின் கவுரவத்தை எண்ணி முத்து மாலையை,  யாரும் காணாது குளத்தில் எறிந்து விட்டு பெற்றோருடன் பயணத்தை தொடர்கின்றான்.

இத்திரைப்படத்தில் ரே கதை சொல்லிய விதம், ஒவ்வொரு சட்டத்திற்கும் கொடுத்த முக்கியம், கதையை காட்சிகள் ஊடாக நகத்தியது, சில குறிப்பிட்ட  படிவத்தை வைத்து காட்சிகளால் சொல்லிய விதம் எடுத்து சொல்லக்கூடியது.


கதையில் நாயகம் பிம்பமோ , எதிர்மறை கதாப்பாத்திரங்கள் வழியாக கதாநாயகன் கதை சொல்லாது ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பார்வையுடன் கதை நகர்ந்தது.

அறிவு சமூகமாக இருந்த வங்கத்தில் இருந்த வறுமையையும் சொல்லிய் படம் இது.

படத்தின் காட்சிகள் காண்பவர்களின் மனதில் அசை போட வைத்த வித்தைகள், கதையின் போக்கு, அதன் முடிவு, பார்வையாளர்களை சிந்திக்க வைத்தது.  முக்கியமாக மனித உறவுகளை காட்டிய விதம், பாட்டிக்கும் பேத்திக்குமான பிணைப்பு, அக்காவிற்கும் தம்பிக்குமான அன்னியோன்னியம், குடும்பத்தின் வறுமையால் பெண்கள் பாதிக்கப்படும் விதம் என கதை இந்திய சமூகத்தின் வறுமை என்ற நோயை பற்றி இயல்பாக சொல்லி சென்றது.

 வாழ்க்கையில் ஒரு போது மறக்க இயலாத திரைப்படமாக மக்கள் மனதில் பதிந்து விடுகிறது பதேர் பாஞ்சாலி.

பிபுதிபூஷன் பாண்டியோபாத்யாயின் நாவலைத் தழுவி ரேயால் வரையப்பட்ட திரைக்கதை தான் மேற்கு வங்க அரசின்  தயாரிப்பில், வங்காள மொழி நாடகத் திரைப்படமாக வெளிவந்தது.   படத்தின் தயாரிப்பு செலவை சுருக்கும் விதம்  பெரும்பாலும் அமெச்சூர் நடிகர்களைக் கொண்டு, அனுபவமற்ற ஆனால் திறமையான குழுவினரால் எடுக்கப்பட்டது.

மிக முக்கியமாக, கதையோடு இசைந்த ரவி சங்கரின் கிளாசிக்கல் இந்தியன் ராகங்களைப் பயன்படுத்திய ஒலிப்பதிவு  படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தது.  எடிட்டிங் துலால் தத்தா.  சுப்ரதா மித்ரா ஒளிப்பதிவாளராக இருந்தார்.  பதேர் பாஞ்சலிக்கு ஸ்கிரிப்ட் என்பது  ரேயின் வரைபடங்கள் மற்றும் குறிப்புகளிலிருந்து தயாரிக்கப்பட்டது.  பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அந்த வரைபடங்களையும் குறிப்புகளையும் சினமாதேக் ஃபிரான்சைஸுக்கு நன்கொடையாக வழங்கினார்.

0 Comments:

Post a Comment