8 Jun 2021

லஞ்ச் பாக்ஸ்(Lunch Box) : திரை விமர்சனம்

 கடந்த வருடம் மறைந்த இர்பான் கான் நடித்த திரைப்படங்களில் சிறந்த ஒன்று  லஞ்ச் பாக்ஸ் திரைப்படம்.

இளா ஒரு சாதாரணக் குடும்பத் தலைவி.  கணவர் அலுவலகம் செல்ல, தனது  மகளை பள்ளிக்கு அனுப்பி விடுவது,  சமையல், மாடிவீட்டு வயதான பெண்மணியுடன் சிறிய உரையாடலகள்  என காலத்தை கடத்தி வருகிறார்.

ஒரு போதும் கரிசனையாக நடவாத கணவர்,  அலுப்பான ஒரே வேலைகள், தன்னை புரிந்து கொள்ள யாரும் இல்லை என்ற நிலையில் ஒரு வகையான மன அழுத்தத்தில் வாழும் பெண் இளா. கணவரை கவரும் வகையில் சிறப்பாக சமைக்க வேண்டும், சிறப்பாக  உடுக்க வேண்டும், கணவரின் பரிவான ஒரு வார்த்தைக்கு ஏங்கும் நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார்.

கணவருக்கு கொடுத்துவிடும் மதியச் சாப்பாட்டு பாத்திரம் வேறு யாருக்கோ போய் சேர்வதை கண்டு கொள்கிறார் .  யார் உணவை சாப்பிடுகிறார்கள் என அறியும் நோக்கில் ஒரு நாள்   நீங்கள் யார்” என வினைவி பாத்திரத்தினுள் ஒரு துண்டு தாள் வைத்து அனுப்புகிறார்.

தான் இன்ன அலுவலகத்தில் பணி புரிகிறேன்,  விரைவில் வேலையில் இருந்து ஓய்வுப் பெறப்போகும் ஒரு கணக்காளர்.  நீங்கள் அனுப்பின உணவு மிகவும் ருசியாக இருந்தது, நன்றி என ஒரு துண்டுத் தாளில் பதில் அனுப்பி விடுகிறார்.

ஒரு போதும் பாராட்டுப் பெறாத, நிளாவிற்கு இந்த வார்த்தைகள் நெகிழ்ச்சியை தருகிறது. நெருடலாக இருந்தாலும் துண்டு பேப்பரில் வாசிக்கக் கூடிய ஓரிரு வார்த்தைகளுக்காக காத்து கிடக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் நிளா.

தன்னுடைய வலிகள், கணவரின் புரக்கணிப்பு, தன் பெற்றோரின் நிலை, என தொடர்கிறது கடிதங்கள் .  அந்த பக்கம் இருந்தும் பல போது ஆறுதல்களும், சில போது தன்னுடைய சொந்த வாழ்க்கை சோகங்களையும் பகிர்தல் நடக்கிறது.

இந்நிலையில் கணவருக்கு தன் மேல் விருப்பம் இல்லை என்றும் திருமணத்தை மீறிய ஒரு தொடர்பு பேணுகிறார் என்றும் கண்டு கொண்ட  இளா துயரில் மூழ்கிறார்.  தான், மன அழுத்தத்தில் உள்ளதாகவும் தனக்கு யாரும் இல்லை என்றும், செத்துப்போக விரும்புகிறேன் என்றதும் ’நானிருக்கிறேன்’ என பதில் அனுப்புகிறார் சஜ்ஜன்.

ஒரு கட்டத்தில் தனக்கு கடிதம் எழுதும் ஆளை கண்டு விடத்துடிக்கிறது இளாவின் மனம். இருவரும் சந்திக்க முடிவு எடுக்கின்றனர்.   ஒரு உணவகத்தில் இருவரும் குறிப்பிட்ட நேரத்தில் கண்டு கொள்ள முடிவெடுத்து தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

குறிப்பிட்டது போல் குறித்த நேரத்தில் உணவகம் வந்து சேர்ந்த இளாவை தூரத்தில் இருந்த   சஜ்ஜன் எளிதாக அடையாளம் கண்டு கொள்கிறார்.   இளா தன்னை விட மிகவும் இளமையான பெண்,  அவருடைய தற்காலிக இயலாமையை, வருத்தங்களை தன்னுடைய சுயநலனுக்காக பயன்பாடுத்தக்கூடாது என்ற  மனசாட்சி சத்தத்திற்கு இணங்கி, தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளாதே திரும்ப சென்று விடுகிறார் சஜ்ஜன்.

ஏமாற்றப்பட்டதாக எண்ணி வருந்தினாலும் வயதான மனிதரின் பரிவான, கருதலான மனதை அறிந்த இளா, தனது மகளுடன் சஜ்ஜனைத் தேடி அவருடைய அலுவலகம் செல்கிறார்.   ஆனால் அவர் வேலையில் இருந்து ஓய்வு எடுத்து  விட்டார் என்ற தகவல் அறிந்து ஏமாற்றமாக திரும்பினாலும்,  சஜ்ஜனை மறுபடியும் தேடி கண்டு பிடிப்பதில் முனைப்பாக இருக்கிறார்.

சஜ்ஜனோ காதல் உணர்வு தந்த மகிழ்ச்சியில், பெருமிதத்தால் உருவான பூரிப்பில் தன்னுடைய மீதமுள்ள வாழ்க்கையை  பயணங்களால், இசையால், புது மனிதர்களை சந்திக்கும்  மகிழ்ச்சியில் திருப்தி கண்டு  தன் வாழ்க்கையை நகத்த்தி கொண்டு இருப்பார்.

வாழ்க்கையில் பக்குவம் அடைந்த மனிதரும்,  வாழ்க்கையின் துயரின் உச்சத்திலிருக்கும் வெகுளியான பெண்ணுக்கும் உருவான மெல்லிய, இதமான காதலை அதன் இயல்பான போக்கில் விட்டு, நேர்மையான மனித உணர்வுகள், அதற்குள் இருக்க வேண்டிய சுயநலமற்ற அன்பைப் பற்றி சொல்லி; மெல்லிய ஒரு புல்லாங்குழல் கீதம் போல தழுவிச்சென்ற திரைப்படம் இது.

இளைமை துள்ளலாக  இர்பான் கானின் பல படங்களை கண்டுள்ள பார்வையாளர்கள்,  பணியில் ஓய்வுப்பெற போகும்,  வயதான, பக்குவமான மனிதராக நடித்திருக்கும் பாங்கு மிகவும் சிறப்பு.  ஒரு கணக்காளராக அலுவலகத்தில் பணி புரியும் நபர்களின் இறுக்கமான முகம், உடல்மொழி அப்படியே அவதானித்து அழகாக நடித்திருப்பார்.

நேரில் ஒரு பெண்ணும் ஆணும் சந்திக்கவே இல்லை. அவர்களின் உன்னதமான உணர்வை மட்டுமே வைத்து ஆர்பாட்டமில்லாது   காதலை  கொண்டாடும் ஒரு கதையை சொல்ல இயலும் என இயக்குனர் நிரூபித்துள்ளார்.

இருவரும் சந்தித்தார்களா இல்லையா என சினிமா காண்பவர்களுக்கே விட்டு வைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் வெற்றியும் இந்த முடிவு தான்.

இளாவாக நிமட் கவுர் தன்னுடைய தனித்துவமான நடிப்பாற்றலால் கவர்ந்துள்ளார்.

கதை, இயக்கம் ரிதேஷ் பட்ரா.   இர்பான் கான், நிர்மட் கவுர், நவாசுருதீன் சித்திக் பிரதான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை மாக்ஸ் ரிச்டெர், திரைக்கதை மிக்கேல் சிம்மண்ட்ஸ், படத்தொகுப்பு ஜோன் எஃப் ல்யோன் சிற்ப்பாகவே செய்துள்ளனர்.

கேன்ஸ் திரை விழாவில் மே,2013 ல் வெளியிடப்பட்டது.  இந்தி திரைப்படமாக இருந்தாலும் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் வெளியான திரைப்படம் இது.   22 கோடி பட்ஜெட்டில் எடுத்த திரைப்படம். 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சென்றது. இத்திரைப்படத்திற்கு கிடைத்த விருதுகளை எழுத ஒரு தனி பதிவே வேண்டும்.

திரைக்கதை, நடிப்பு, இயக்கம், படத்தொகுப்பு என பல நிலைகளில் பல விருதுகள் பெற்ற சிறந்த திரைப்படம் இது. யதார்த்தவாத சினிமாவை மிகவும் அழகியலுடன் அடுத்துள்ளனர். இந்த படத்தின் தொடர்ச்சியை போன்ற ஒரு கதை தான் 2018 ல் வெளியான ”Once Again’ https://www.ceylonmirror.net/40279.html ஹிந்தி திரைப்படம்.

https://youtu.be/sK3R0rvnlPs

https://youtu.be/BYd_xm3yhN8

0 Comments:

Post a Comment