8 Jun 2021

மலையாளத் திரைப்படம் Kala (கள)! ஒரு பார்வை - ஜோ

 

Kala ’கள’ என்பதை  தமிழில் களைதல் எனப் பொருட்படுத்தலாம்.. மலையாளத்திரைப்படம்  ’கள’(Kala) பார்வையாளர்களிடம்  களையக்கூறுகிறது.  படித்தவன், பன்பானவன், பணக்காரன் என்ற ஈகோக்களை களைய சொல்கிறது இத்திரைப்படம்.

தன்னை மட்டுமே சிந்திக்காது, தன்னை சுற்றியுள்ள மனிதர்களை, இயற்கையை, மிருகங்களை எல்லாவற்றையும் பரிவுடன் பார்க்க கூறுகிறது. ஹீரோ என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் சீரோ ஆகுவதும், ஒன்றுமே இல்லாதவன்,  தாழ்ந்த இனம் என்று நினைத்துக்கொண்டு கீழ்மைப்படுத்தப்பட்டவன் வெற்றிக்களிப்புடன் நாயகனாக மாறுவதுமே ’கள’ திரைப்படம்.

இயக்கம் ரோகித் வி எஸ் , திரைக்கதை ரோகித் மற்றும்  புஷ்கரன், இசை டான் வின்சென்று, ஒளிப்பதிவு அகில் ஜோர்ஜ், படத்தொகுப்பு சமன் சாக்கோ என ஒரு இளைஞர்களின் கூட்டுப்  படைப்பு.

பொதுவாக கதாநாயகன் ,  சமூகத்தை, நபர்களை திருத்தும் படியாக கதை அமைத்து இருப்பார்கள். இத்திரைப்படத்தில் அகங்காரம் மற்றும் நாசீசிஸ்டிக் ஆன முதன்மை கதாப்பாத்திரத்தை எதிர்மறை கதாப்பாத்திரம் திருத்துகிறது  . படத்தின் முடிவில் பிரதான கதாப்பாத்திரம் எதிர்மறையாவதும், எதிர்மறை கதாப்பாதிரம் கெத்தாக ஹீரோ மாதிரி நடந்து போவதுடன் கதை முடிகிறது.

இந்த திரைப்படத்தில் ஆங்கிலத்திரைப்படம் ஜோன் விக்கின் சாயல் பல இடங்களில் தெரிகிறது. தன்னுடைய நாயை கொன்றவனை பழிவாங்குவது போல இத்திரைப்படத்தில் நாயை இழந்தவன், தன் நாயை கொன்ற முதன்மை கதாப்பாத்திரம் ஷாஜியை பழிவாங்குவதே கதையாகும். முதல்நாள் மாலை முதல் அடுத்த நாள் மாலை வரும் வரும் நடைபெறும் சம்பவங்கலை கோர்வையாக தொகுத்துள்ளர்.

பொதுவாக நாயக பிம்பம் உள்ளவர்கள் மிகவும் நல்லவர்ளும் வல்லவர்களாகவும்இருப்பார்கள். இதில் நாயக இடத்தில் இருப்பவன் தன் சொந்த வீட்டில் திருடும் அளவிற்கு தரம் கெட்டவனாக இருப்பான்.

கதையின் பின்புலனாக அட்டப்பாடி( பாலக்காடு); தமிழ்நாடு கேரளா எல்லை.  அட்டபாடியிலுள்ள ஒரு நில உரிமையாளரின் மகன் ஷாஜி. கல்லூரி தோழியான காதல் மனைவி, ஒரு மகன் மற்றும் கறுப்பி என்ற செல்ல நாய் இவர்களுடன் பூர்வீக  சொத்தை கட்டிகாத்து வரும்  அப்பா லால்.  தன் தந்தையை வயதான நேரம் கவனிக்க வேண்டும் என்ற நோக்கில் அட்டப்பாடிக்கு குடி பெயர்ந்துள்ளனர்.   ஷாஜியின் மனைவிக்கு தோட்டத்திலுள்ள வாழ்க்கை அலுப்பாக இருக்கிறது.  மகனின் கல்விக்காக மறுபடியும் பெங்களூர் போக விரும்புகிறார்.

அந்த வீட்டின் அடித்தளமாக, குடும்பச் சொத்து. அதை அனுபவிக்கும் மகன், அதை ஆகமட்டும் கண்காணித்து வரும் அப்பா! அப்பாவை கண்டு பயப்படும் மகன். தந்தை நிலத்தின் நிறம் கறுப்பாக உள்ளார். மகன் ஆடம்பர, படித்த தலைமுறையை பிரதிநித்துவப் படுத்தும் வெள்ளை நிறத்தொலி. நீளமாக வளந்த முடியுடன் மிருகம் மாதிரியான பார்வையும், தான் பணக்காரன் என்ற அகபாவவும், கறுப்பு நாயும்.

அந்த நாய் திமிறும் போது இழுத்து பிடிப்பான்,  நாய் என்பதை ஷாஜியில் ஈகோவுடன் பொருத்துகின்றனர்.  அந்த ஈகோவின் திசையில் ஈகோவை கைவிடாது வாழும் ஷாஜி. தன்னை கருணையாக நடத்தவில்லை என்று குமுறும் ஷாஜி , தன் மகனிடம், “ நீ ஆண், அழக்கூடாது, நீ விரும்புவதை போராடி எடுத்துக்கொள் என்பான்.  அந்த குழந்தையோ அந்த பெரிய வீட்டில் அத்தனை பெரிய நிலங்களுக்குள், வெளியே வர இயலாது, தன் தந்தையின் கண்டிப்பு மட்டுமல்ல தாத்தாவின் கண் காணிப்புடன் வீட்டினுள்ளில் வளர்கிறது.

பணக்கார வீடுகளில் இருக்கும் பெண்களுக்கும் நிம்மதி இல்லை.  பிறந்த வீட்டுக்கு கூட போராடித்தான் போக வேண்டி வருகிறது. தன் மனைவியுடன் உரையாடும் போதும் சிகரட் புகையை அவள் முகத்தில் ஊதி தள்ளும் செயல்பாடு, அவளோ புகை பிடிக்க கணவனிடம் அனுமதி கேட்கும் மன நிலை, அவள் விரும்பாத போதும் காமத்தை கட்டுப்படுத்த இயலாது சயனிக்கும் ஷாஜி.   இப்படி கதை நகர்கிறது.

ஷாஜியின் தகப்பனார், உதவியாளர் மணியன் ஊடாக தோட்ட வேலைக்கு ஆட்களை வருவிக்கிறார்கள். பாண்டிகளை (தமிழர்களை)அழைத்து வந்துள்ளேன், ஊதியம் குறைத்து கொடுத்தால் போதும் என்று கூறிக்கொண்டு மூன்று பேரை அறிமுகப்படுத்துகிறான்.

அடுத்த ட்ராக்கில் வேலையாட்கள் நான்கு பேர். அதின் தலைமையில் உள்ள பழங்குடி மனிதன், இதுவெல்லாம் நமது நிலம், மலையாளிகள் வசப்படுத்தி வைத்து நாம் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளோம் என்கிறான்.

வீட்டிலுள்ளவர்கள் காலை உணவு எடுக்கின்றனர். அதே நேரம் வீட்டிற்கு வெளியே தொழிலாளர்களும் உணவு எடுக்கின்றனர். பணக்காரனுக்கும் ஏழைகளுக்குமான உணவு வேர்பாடுகள் காட்டப்படுகிறது.

 

வேலைக்கு வந்த தமிழர்களில் ஒருவன் மூறின் நாயை ஷாஜி கொலை செய்திருப்பான். அதற்கு பழிவாங்கவே தொழிலாளியை போன்று வந்திருக்கிறான் மூற். அவன் நிலத்தில் பன்றிகளை வேட்டையாடி தின்று பிழைத்து வருகிற ஒரு தமிழர்.  பன்றியை தனது ஈட்டியில் சொருகி சுமந்து செல்லும் அளவிற்கு வலுவானவன்.  ஆனால் ஷாஜி ஒரு காட்சியில் மூறை பன்றியை போன்று இழுத்து சென்று கொண்டு இருப்பான்..

கதையின் முடிவிற்குள் வந்து விட்டோம். ஷாஜி வெற்றி பெற்றானா தன்னை விட ஏழையான தன்னைவிட தாழ்ந்த இனமாக கருதப்படும் தமிழன் வெற்றி பெற்றானா?

மனைவி தகப்பன் முன்பே வைத்து ஓட ஓட அடித்து துவைத்து, என்னை விட்டால் போதும் என்று பணியும் மட்டும் சண்டை தொடர்கிறது. பணக்காரன், படித்தவன், மேல் இனம் இவர்களின் பொய்மை பேசும் , வஞ்சகமான ஈகோக்களை அடித்து நொறுக்கி, ஷாஜி வளர்க்கும் நாய்க்கும் விடுதலை தந்து தன்னுடன் அழைத்து செல்கிறான் மூற்.

ஷாஜி மனைவிக்கு தன் கணவர் மேல் இருந்த மதிப்பான அடையாளம் உடைக்கப்படுகிறது. தனது அப்பாவை இரத்தம் சொட்ட சொட்ட அடித்த மூறை ஷாஜி மகன் ஆராதனையுடன் பார்க்கிறான்.

இத்துடன் கதை முடிகிறது.

பார்வையாளனை இருக்கை நுனியில்  வைத்து படத்தை காட்டிய யுக்தி, ஒளிப்பதிவு, தொகுப்பு, அகலமான காட்சிதொகுப்பு  காட்சி  அழகியலுக்கு சான்று.

மலையாளி தமிழன் இன வேர்பாடு, ஏழைப் பணக்காரர்கள் அந்தரம் இவையை வன்மத்துடன் பார்த்துள்ளார்ளா? பார்வையாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

எதற்கு இத்தனை வன்முறை? நீண்ட சண்டைக்காட்சிகள்.  அரை மணிநேரம் இவர்களுக்குள் நிகழும் அடி தடி சண்டை  அலுப்பூட்டுகிறது. தமிழ் திரைப்படங்களில் கட்டுண்டு புல்லரிக்கும் மலையாளி பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதற்காகவா? தமிழர்களை இளக்காரமாக அழைக்கும் ’பாண்டி’ என்ற சொல்லாடலை சமீபகாலத்திரைப்படங்களில் பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.

இரத்தம் தெறிக்க தெறிக்க எடுத்து வைத்துள்ள இத்தகைய திரைப்படங்கள் குழந்தைகள் பார்வையில் படாது இருந்தால் நல்லது

https://youtu.be/9b9MovPPewk

0 Comments:

Post a Comment