8 Jun 2021

திரைப்படம் ’கர்ணன்'-சில சமூக சிந்தனைகள்!

 

மாரி செல்வராஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில், கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ் தானு தயாரிப்பில் 2021 இல் வெளிவந்த திரைப்படம் கர்ணன்.  லால் , யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், கவுரி கிஷன் மற்றும் லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் முக்கிய கதாப்பாத்தித்தில்  தனுஷ் நடித்துள்ளார். தனுஷ் ஜோடியாக ராஜீஷா விஜயன் நடித்து இருந்தார்.    சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, செல்வா ஆர்.கே படத்தொகுப்பும் செய்துள்ளார்.

 அதிரடி காட்சிகள், பரபரப்பான பின்னணி இசை,  சிறப்பான நடிப்பு என எல்லோர் மனதிலும் இடம் பெற்றத் திரைப்படம் ‘கர்ணன்’.

முதல் பகுதியில்,  ஒரு கிராமத்து வாழ்க்கையை திரைப்படங்களில் இருக்கக்கூடிய சில சுவாரசிய புனைவுகளுடன் சிறப்பாக காட்டியுள்ளனர்.


பெருவாரி காட்சிகள் பார்வையாளரின் உணர்ச்சியை  தூண்டி ஒரு  சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது இரண்டாவது பகுதியில்.   காவல்துறை  அதிகார சித்திரவதைகளிலிருந்து தன் கிராமவாசிகளை மீட்டு அவர்களைப் பாதுகாக்கும் வலிமை மிக்க இளைஞனாக கர்ணன் கதாபாத்திரம் வடிவமைத்துள்ளனர்.  .

மாரி செல்வராஜின் வலுவான ஸ்கிரிப்ட் படத்தை சுவாரசியமாக  நகத்துகிறது.  இது வன்முறை படமா என்ற கேள்விக்கு இல்லை வன்முறை படமாக இருக்கக்கூடாது என பார்த்துப் பார்த்து எழுதியுள்ளேன் என்கிறார் மாரி செல்வராஜ்.  இது ஒரு போர் படம் என்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள் மற்றும் தான் சந்தித்த சூழல்களை பின்புலமாக கதை எழுதியுள்ளதாக குறிப்பிடுகிறார்.

இத் திரைப்படம் சாத்தான்குளம் கொலையை நினைவுப்படுத்தியதை யாராலும் மறுக்க இயலாது.   சினிமாவிற்கும் உண்மைக்கும் தொடர்பு இருக்க போவதில்லை.  இருந்தாலும் ஆழமான சினிமா அறிவு சார்ந்த கருத்துக்கள் ஒரு சாதாரண பார்வையாளனுக்கு இருக்க போவதில்லை . அப்படி இருக்கையில் அதீத கற்பனைவளம் கொண்டு பலவித ஆயுதங்களை பாவித்து, அதிகாரவர்கத்தை ஆயுதத்தால் அடக்குவதாக எடுத்து இருக்கும்  இது போன்ற  திரைப்படங்கள் சமூகத்திற்கு கொடுக்கும்  பங்கு என்ன? இத்திரைப்படம் தந்த ஊக்கத்தால் காவல் நிலையங்களை எளிதாக எடைபோட்டு  ஒரு இளைஞன் செயல்பட்டால்,உண்மையில் என்னவாகும்?


மனித உரிமை மீறல்களை அதிகார வர்க்கம் கைகொள்ளும் போது, பொதுமக்கள் எப்படியாக சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றது போல் இரண்டாம் பகுதி அமைந்திருந்தால் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும் . அதை விடுத்து சில உரையாடல்கள் நேரடியாக ஜாதி அரசியலை நினைவுப்படுத்துகிறது. வெற்று புரட்சியை தக்கவைக்கிறது.

அடுத்து கதை நடக்கும் ஊர் பெயர் பொடியன்குளம் என்பது பலரை 1995 ல் திருநெல்வேலி பக்கம் நடந்த கொடூர நிகழ்வை நினைக்க வைத்ததை யாராலும் மறுக்க இயலாது.  இந்த திரைப்படம் வெளிவந்த பின்பு, பல பத்திரிக்கையாளர்கள் , சமூக ஊடக நபர்கள் அந்த கிராமத்தை நோக்கி படை எடுத்தனர்.

பல வித மிருகங்களை இத்திரைப்படத்தில் காட்டப்பட்டிருந்தது. அதை பற்றிய கேள்விக்கும் கதை எழுதி இயக்கிய மாரிசெல்வராஜ் பதில் நான் ஒரு சில புனைவுகளை நினைத்து கதை எழுதியுள்ளேன்.  பார்வையாளர்கள் அதையும் மீறி சிந்தித்து இருந்தனர் என்கிறார்.

திரைப்படம் என்பது வெறும் ஒரு பொழுது போக்கு கருவியா?

தமிழகத்தை பொறுத்த வரையிலும் சினிமா என்பது கலை என்பதையும் கடந்து  பண்பாடும், சமூக அரசியல் வாழ்க்கையை நிர்ணயிக்கும்   பெரும் கருவியாக  உள்ளது.  சினிமா என்ற  கலை மனிதர்களை சிந்திக்க வைக்க வேண்டும், தனது அடையாளங்களை கடந்து மனிதர்களை மனிதர்களாக  மதிக்க செய்யவேண்டும்,  இனங்களுக்குள் துவேஷத்தை வளர்க்க கூடாது என்று மட்டுமே மனித நேயர்களால் கருத இயலும்.   மற்றபடி கர்ணன் சிறந்த கலைஞர்களை கொண்ட ஒரு வெற்றி படம் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

0 Comments:

Post a Comment