27 Jul 2025

Silenced" (கொரியப் பெயர்: "도가니" – Dogani)

 

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கொரிய திரைப்படமான "Silenced" (கொரியப் பெயர்: "도가니" – Dogani) .

காங் இன்-ஹோ (Kang In-ho) என்பவர் ஜா-ஏ அகாடமி (Ja-ae Academy) எனும் சிறப்பு தேவைகள் கொண்ட  குழந்தைகளுக்கான பள்ளியில் கலை ஆசிரியராகப் பணியேற்க,  வட ஜியோல்லா மாகாணத்தில் அமைந்துள்ள முஜின் நகரம் செல்கிறார். 

பள்ளியில் வந்து சேர்ந்ததும், அவர் பள்ளித் தலைமையாசிரியர் லீ காங்-சொக் மற்றும் அவரின் இரட்டை சகோதரரான நிர்வாகத் தலைவர் லீ காங்-பொக் ஆகியோரை சந்திக்கிறார்.அது கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் நடத்தப்படும் பள்ளி. 


தனது புதிய மாணவர்களுக்கு கலை கற்பிப்பதில் உற்சாகம் கொண்டிருந்த #இன்-ஹோ, அந்த மாணவர்கள் தன்னை ஒதுக்கி, விலகிச் செல்வதை கவனிக்கிறார். இருப்பினும், அவர் மாணவர்களிடம் அக்கறையுடன் நடந்து கொள்கிறார். 


சிறிது காலத்திற்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை பகிர   தொடங்குகிறார்கள்.  அப்போது, இன்-ஹோ ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை அறிகிறார் –பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரால்.அந்த பள்ளியின் மாணவர்கள் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளனர்,   இன்-ஹோ, பள்ளியில் நடைபெறும் இந்த கொடுமைகளை வெளிக்கொணரத் தீர்மானிக்கிறார். இதற்காக மனித உரிமை போராளி #சோ யூ-ஜின் (Seo Yoo-jin) உடன் இணைந்து செயல்படுகிறார். 


ஆனால்,  பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமல்லாமல், போலீசார், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் உள்ளூர் சமூகம்கூட இந்த கொடுமைகளை மூடிமறைக்க ஒன்றிணைந்துள்ளனர் என அவர்கள் விரைவில் உணர்கிறார்கள் –

இன்-ஹோ தன் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். ஆனாலும், அவர் முஜின் நகரத்தில் தங்கி, அந்தக் குழந்தைகளுக்கான நீதி கோரி போராடத் தொடர்கிறார்.


வழக்கறிஞர், குற்றவாளிகளுக்காக "முந்தைய பதவியின் சிறப்புரிமைகளை" (Jeon-gwan ye-u) பயன்படுத்துகிறார்.  குற்றவாளிகள் நேரடியாக பொய் பேசுகிறார்கள், லஞ்சம் கொடுத்து சலுகை தண்டனை பெற்று விடுகிறார்கள். 


தண்டனை வழங்கப்படுவதற்கு முந்தைய இரவில், லீ சகோதரர்கள் மற்றும் பாலியல் வன்முறை செய்த ஆசிரியரான பார்க் போ-ஹ்யூன் (Park Bo-hyun) ஆகியோர், தங்களது வழக்கறிஞருடன் மகிழ்ச்சியாக சிரித்து பேசி கொண்டாடுகிறார்கள்.

################################################################################

#திரைப்படத்தால் சமூக மாற்றம்


இலக்கியமும் திரைப்படமும் கொண்டிருக்கும் சக்தி விவரிக்க முடியாதது. அவை நம் சிந்தனைகளை மாற்றி, சமூகத்தையே மாற்றும் திறன் கொண்டவை. அதனால்தான் ஒரு சிறந்த இலக்கியம் அல்லது திரைப்படம் என்பதை நாம் ஒரு மதிப்புமிக்க பண்பாட்டு உரையாகவும், முக்கியமான சமூக ஆவணமாகவும் கருக்கிறோம். “The Crucible” போன்ற நாவல்களையும், “Silenced” போன்ற திரைப்படங்களையும் தொடர்ந்து காணக்கூடிய நிலை இருக்க வேண்டும், அப்படி இருந்தால் நாம் நல்ல மனிதர்களாகவும், நல்ல சமுதாயத்தில் வாழக்கூடியவர்களாகவும் மாற முடியும். இந்தப் படம் வெளியான பிறகு நீதிமன்ற தீர்ப்புகளின் மென்மையான தன்மையை எதிர்த்து பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். 


#குவாஞ்சு இன்ஹ்வா பள்ளியின் ஆறு ஆசிரியர்களில் நால்வருக்கு கல்வித்துறை கடுமையான தண்டனை பரிந்துரை செய்திருந்தது. இருப்பினும், குற்றத்திற்கான வரம்புச் சட்டம் (Statute of Limitations) காரணமாக அவர்கள் தண்டனையின்றி தப்பியதுடன், பின்னர் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.  அவர்களில் இரண்டு பேர் மட்டுமே எட்டு சிறுமிகளை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டனர் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


#உண்மை சம்பவம் கதை

முன்னாள் ஆசிரியர் கிம் யோங்-இல் (வயது 71)  1964 ஆம் ஆண்டில் நடந்த இக்குற்றத்தால்  இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறினார். அதன்பின், துணைத் தலைமையாசிரியரால் அடிக்கப்பட்டு, வேலையிலிருந்து வலுக்கட்டாயமாக விலகச் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.


#படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குள், #2011 நவம்பரில் குவாஞ்சு நகராட்சி அந்த பள்ளியை அதிகாரப்பூர்வமாக மூடிவிட்டது.


2012 ஜூலையில், குவாஞ்சு மாவட்ட நீதிமன்றம் #அந்தப் பள்ளியின் 63 வயதான முன்னாள் நிர்வாகியை, 2005 ஏப்ரலில் 18 வயது மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், குற்றம் நடந்ததை சாட்சியமாகப் பார்த்த 17 வயது மாணவியை உடல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது (இருவரும் தற்கொலை செய்ய முயற்சித்தனர் என்ற தகவலும் உண்டு. குற்றவாளி கிம் என்ற பெயரால் அடையாளம் காணப்பட்டவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு 10 ஆண்டுகள் #மின் கண்காணிப்பு காலணி அணிய உத்தரவிடப்பட்டது.


மேலும்,  மிகவும் பலவீனமானவர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க புதிய #சட்ட மசோதாக்களை சட்டமன்ற உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தினர்.  2011 ஆம் ஆண்டு, கொரிய தேசிய சட்டமன்றம், இந்தப் படத்தின் கொரிய பெயரை அடிப்படையாகக் கொண்டு #“டோகானி சட்டம்” (Dogani Law) என்ற பெயரில் ஒரு முக்கிய #சட்டத்தை இயற்றியது. 


இச்சட்டம் 13 வயதிற்குள் உள்ள குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், அதற்கான குற்றவரம்புச் சட்டத்தை (Statute of Limitations) நீக்குகிறது. மேலும், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது பாலியல் வன்முறைக்கு வாழ்நாள் சிறை வரையில் அதிகபட்ச தண்டனையை வழங்குகிறது. அதேபோல், “தனது மாற்றுத்திறன் காரணமாக எதிர்க்க முடியாத நிலை” என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற பிரிவையும் ஒழித்தது.


இத்திரைப்படம் பல விருதுகளை வென்றது. இந்தக் கோரிய திரைப்படத்தின் பன்னாட்டு தலைப்பு "Silenced" ஆகும்.

2011 நவம்பர் 4ஆம் தேதி, இந்த திரைப்படம் கீழ்க்கண்ட அமெரிக்க மற்றும் கனடிய ,லாஸ் ஏஞ்சல்ஸ், சான் ஹோசே, ஹண்டிங்க்டன் பீச், நியூ ஜெர்சி, பிலடெல்பியா, அட்லாண்டா, டல்லாஸ், சிகாகோ, சீட்டில், போர்ட்லாண்ட், லாஸ் வேகாஸ், டொராண்டோ மற்றும் வான்கூவர். நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது: 

இந்த படம் வெளியான பிறகு The Wall Street Journal, The Economist, மற்றும் The New York Times போன்ற புகழ்பெற்ற பத்திரிகைகளால் விமர்சிக்கப்பட்டது. 

2019 ஆம் ஆண்டு, இந்த திரைப்படம் Netflix தளத்தில் வெளியிடப்பட்டது.

#################

இயக்குனர் கருத்து!


இத் திரைப்படம் குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மீண்டும் உயிர்ப்பிக்கிறது  2000 முதல் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சிறப்புக் குழந்தைகளுக்காக இயங்கிய ஒரு சிறப்புப் பள்ளியில் நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து வெளிவந்ததற்கு ஆறாண்டுகளாகியும், அவை இன்னும் தீர்க்கப்படாமல் இருவந்தன. இது சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கி இருந்தது.

#2009 ஆம் ஆண்டு, #எழுத்தாளர் கொங் ஜி-யங், இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை வெளியிட்டார். அது அந்த வழக்கில் மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்தது. இப்போது, அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட புதிய திரைப்படம் மீண்டும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.


#திரைப்பட இயக்குநர் ஹ்வாங் டொங்-ஹ்யோக், இது குறித்து கூறுகையில்: "இந்த படம் விவாதத்தையும் கவனத்தையும் தூண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால் இத்தனை விரைவாகவும் வெடித்துவிடும் நான் நினைக்கவில்லை. "படத்தில் காட்டப்பட்டுள்ள குழந்தை பாலியல் வன்முறை, காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளின் ஊழல் தொடர்புகள், அதிகாரிகளின் புறக்கணிப்பு இவை கட்டுக்கதையல்ல. இவை நாள்தோறும் செய்திகளில் நாம் காண்பவை."

"இந்த சமூக அநியாயங்களை மக்கள் மீண்டும் மீண்டும் கேட்கும்போது அவர்களிடம் ஏற்படும் வெறுப்பு மற்றும் கோபம் இந்தப் படத்தின் மூலம் வெடித்து விட்டது." எனக் கூறி இருந்தார்


இத் திரைப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதில் காணப்படும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறையின் தோராயமான காட்சிகள், மற்றும் மிகவும் மனமுடைந்த முடிவு ஆகியவை காரணமாக, இது ஒரு மனச்சோர்வூட்டும் படம் என்று கூறப்பட்டது.

பலரும் இயக்குநரிடம் முடிவை மாற்றி, நாயகர்கள் வழக்கில் வெல்வதை போன்று காட்டும்படி கேட்டனர். ஏனெனில் மக்கள் சந்தோஷமான முடிவுகளை விரும்புகிறார்கள். ஆனால் இயக்குநர் சம்மதிக்கவில்லை

 

"நான் ஒரு உணர்ச்சி தூண்டும் படம் எடுக்கவில்லை; உண்மையைச் சொல்ல விரும்பினேன்." இது மக்களுக்கு அனுகூலமற்ற உணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத் தான் இப்படிச் செய்தேன். இரண்டு விஷயங்களை நினைத்தேன் — ஒன்று, இந்தச் சம்பவம் உலகத்திற்கு தெரியவேண்டும்; இரண்டாவது, இந்த வழக்கு எப்படிக் குழைப்ப பட்டது என்பதிலிருந்து, சமூகத்தின் கட்டமைப்பின் குறைபாடுகளை வெளிக்கொணர வேண்டும்." இந்த வழக்கால்   பாதிக்கப்பட்டோருக்காக போராடும் குழுவினர், இந்தப் படம் உண்மையை முழுமையாக வெளிக்கொணரவில்லை என்றும் கூறினர்:


"எழுத்தாளர் கொங் ஜி-யங் என்னிடம் சொன்னார், நாவலில் அவரால் உண்மையில் நடந்தவற்றில் மூன்றில் ஒரு பங்கையே மட்டும் எழுத முடிந்தது. என் படம், அந்த நூலில் இருந்த அனைத்தையும் கூட கையாள இயலவில்லை," என இயக்குநர் கூறினார்.


இயக்குனர் ஹ்வாங் #சூல் தேசிய பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறைப் பட்டம் பெற்றவர் :"மாணவராக இருந்தபோதே சமூகப் பிரச்சனைகளில் மிகுந்த ஆர்வம் இருந்ததால், நிறைய போராட்டங்களில் பங்கு பெற்றுள்ளதே படங்களை எடுக்க ஆரம்பித்ததற்குக் காரணம் என்கிறார்.  இந்த தீர்க்கப்படாத சமூக பிரச்சனைகள் மீது இருந்த நிராசை தான்." இப்படம் என்கிறார்.


"ஒரு படம் மூலம் சமூகத்தை மாற்ற முடியாது. ஆனால் இந்தப் படம் வெளிவந்து ஏற்படுத்திய தாக்கத்தை பார்த்தால், திரைப்படங்கள் சமூகத்தை நேர்மறையாக பாதிக்கக்கூடிய சக்தி உள்ளன என்று  நாம்  எண்ணிக் கொள்ளலாம்."என்கிறார்.


"இந்த வழக்கை மீண்டும் திறந்து குற்றவாளிகளை மறுபடியும் விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க முடியாது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு வேதனைப்பட்டனர் என்பதைக் காட்டலாம்;  ஏனெனில் அவர்கள் இன்னும் மன்னிப்பே கேட்கவில்லை என்கிறார்.

0 Comments:

Post a Comment