திரைப்படத்தின் தலைப்பு நரி வேட்டை என்று வைத்துள்ளனர். நரவேட்டை /நரநாயாட்டு -மனிதவேட்டை என்று தானே வந்து இருக்க வேண்டும். நரி என்பது நரியாக குறிப்பிட்டால் இந்த அரசியல் அதிகாரத்தை நரிகள் வேட்டையாடுகின்றனர் என்று குறிப்பிடுகிறார் என புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
'நரிவேட்டை’ கேரளாவில் 20 வருடங்களுக்கு முன்பு 2003ஆம் ஆண்டு நடைபெற்ற வயநாடு, முத்தங்கா என்ற இடத்தில் நடந்த பழங்குடி (ஆதிவாசிகளின்) மக்களின் சொந்த நிலம் வேண்டி செய்த போராட்டம் அதை தொடர்ந்து போலிஸ், அரசின் கட்டளைக்கு அடங்கி அம்மக்களை மனிதமற்ற முறையில் ஒடுக்கியதை பற்றிய உண்மை சம்பவத்தை ஆதாரமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இத் திரைப்படம் தற்போது கேரளா முழுவதும் வெளியிட்டு விமர்சன பாராட்டுகளை பெற்றுக்கொண்டு வருகிறது.
முத்தங்கா போராட்ட குழுவுடன் போராட்டம் துவங்கி 40 நாட்களுக்கு பின்பு தான் முதலமைச்சர் பேச முன் வந்தார். பழங்குடிகளின் உரிமையை ஆதரித்த, கேரளா அரசின் பூமி பகுந்தளிக்கலில் நிகழ்ந்த ஊழலின் எதிரொலி தான் இக்கலவரம் என்று அன்றைய இடதுசாரி தலைவி கவுரிஅம்மா சொல்லியிருந்தார். முத்தங்கா நிலத்தை தனியாருக்கு சுற்றுலா வளர்ச்சிக்காக கொடுக்கும் ஒரு நோக்கமும் அரசிற்கு இருந்தது என்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் , ஏ.கே ஆண்டணியின் ஆட்சியில் நிகழ்ந்த, 20 வருடங்கள் ஆன நிலையில் எளிய பழம்குடி மக்களின் ஜனநாயக உரிமையை நிலைநிறுத்த போராடிய மக்களை ஒடுக்க அரசு கைகொண்ட நரித்தனம் பற்றி பேசிய திரைப்படம் இது. நரிவேட்டை’ திரைப்படம், மறக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்படாத உண்மைகளை இளைய தலைமுறைக்கும், கடந்த தலைமுறைக்கும் நினைவூட்டி உள்ளது. அப்போதைய ஊடகத்தல் ஆந்திரா நக்சல்கள் ஈழப்புலிகள் இந்த போராட்ட குழுவினருடன் கலந்து உள்ளனர் என ஊடகவியாளர்களை வைத்து எழுதியும் தவறான செய்தியையும் பரவவிட்டனர். .
“முத்தங்கா போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கீதானந்தன் போன்றவர்கள், படத்தில் தங்களை காட்டியிருப்பதை பற்றி விமர்சனங்கள் முன்வைத்துள்ளனர். இருப்பினும் இது பொதுவாக மக்களிடையே விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. கூடுதல் உண்மைகளை வெளிவரவும் இத்திரைப்படம் காரணமாகலாம். பழங்குடிகளின் உரிமை பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு வரலாம். இவர்களுக்கான நிலம் மற்றும் உரிமைகள் பெறா வண்ணம் இவர்களின் மதமாற்றத்திற்கு உற்சாகப்படுத்துவதும் அரசின் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.
ஆர்யா சலீம் பழங்குடி தலைவியாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார், மேலும் பழங்குடி மக்களில் போராளியாக சி. கே. ஜனுவை நினைவூட்டியதற்காக சிறப்பு பாராட்டுக்குரியவர்.
திரைப்படத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள வர்கீஸ் பீட்டர் என்னும் கதாபாத்திரம், உண்மையைச் சொல்ல முயலும் ஒரு இளைஞனின் உருவகமாக உள்ளது. நிஜத்தில் இதுவரை உண்மையைச் சொல்ல யாரும் தைரியமாக முன்வரவில்லை என்பதே உண்மை.
டோவினோ தாமஸின், வர்கீஸ் பீட்டர் என்ற கதாப்பாத்திரப் பெயர் போலிஸால் கொலை செய்யப்பட்ட வயநாட்டை செர்ந்த வர்கீஸ் என்ற உண்மை நக்சலையும் நினைவுப்படுத்தியது. வர்கீஸ் ஒரு ஏழைத்தாயின் மகன். நன்றாக படித்து பட்டதாரியான இளைஞன். தான் விரும்பும் அரசு வேலைக்கு வர வேண்டும் என ஆசை கொண்டு பல அரசுத் தேர்வுகள் எழுதி வரும் இளைஞர். இந்நிலையில் போலிஸ் வேலைக்கு தேர்வு ஆகிறான். ஆனால் பிடிக்காத போலிஸ் வேலையை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவனுடைய வாழ்க்கை சூழல் உந்துகிறது. காதலி வங்கியில் பணி செய்து வரும் சூழலில் அவளை திருமணம் முடிக்க இந்த வேலையை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான். முதல் பணி இடமாகவே ஆதிவாசி போராட்ட களம் அமைகிறது. அங்கு தனது நண்பன் போலிஸ் பஷீர் கொல்லப்படுகிறார். அந்த மரணம் ஆதிவாசிகள் செய்தது என சந்தேகப்பட்டாலும் அதன் உண்மையை கண்டு பிடிக்கும் போது அதிற்சிக்கு உள்ளாகிறான். போலிஸ்காரர்கள் மிகவும் நம்பின மிகவும் மதித்த தமிழன் உயர் அதிகாரி தான் இதன் பின்னால் என அறிந்து கொள்கிறான். இயக்குனர் சேரன் உயர் தமிழ் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். (எப்போதும் போல மலையாள திரையுலகின் தமிழ் இனம் மேலுள்ள வன்மமாகவும் தெரிகிறது இப்பாத்திரப்படைப்பு. கேரளாவில் ஏற்கனவே லக்ஷ்மணா, ஜயராம் படிக்கல் போன்ற கொடும் போலிஸ் அதிகாரிகள் இருக்கும் போது தமிழன் போலிஸ் உயர் அதிகாரியை கொடிய, வில்லத்தனம் பிடித்த கொடும் கோலன் அதிகாரியாக காட்டினது நெருடலாகத்தான் உள்ளது. சேரன் உயரமும் போலிஸ் அதிகாரியாக நடிக்க போதவில்லை என்றே தோன்றினது. ஆனால் வில்லனாக சிறப்பாக நடித்து இருந்தார் என்பதையும் மறுக்க இயலாது.)
பிற்பாடு வர்கீஸால் போலிஸ்காரர்களால் ஆதிவாசிகள் மேல் செய்த வன்முறையை மறைத்து போலிஸ் அதிகாரியாக தொடர மனம் அனுமதிக்கவில்லை. நடந்த உண்மையை நீதிமன்றத்திற்கு எட்ட வைக்கிறார். கொடும்கோலனான போலிஸ் அதிகாரி நீதி விசாரணைக்கு உள்படுத்தபடுவதுடன் கதை முடிகிறது. வேடனின் பாட்டை கடைசி பாடலாக சேர்த்துள்ளனர். பெரும் போராட்டத்தை பற்றி சொல்லிய கதையில் ஜானு போன்ற பழங்குடி பெண் தலைமை தாங்கிய, இந்திய அரசின் அரசியல்மைப்பு மீறலை, தங்கள் உரிமையை தேசிய சர்வதேச அளவிற்கு கொண்டு சென்ற கதாப்பாத்திரங்களை கண்டு கடைசியில் வேடன் பாடல் அப்படி பெரிய தாக்கத்தை உணர்வு ரீதியாக ஏற்படுத்தவில்லை. உண்மையான போராட்டங்களை வேடன் போன்ற கலைஞர்களின் வேடத்திற்குள் ஒளித்து வைக்கும் தற்கால அரசியல் சூழ்சியை மட்டுமே நினைவுப்படுத்தியது. 1.3 சதவீதம் வரும் பழங்குடி மக்களின் உரிமை பற்றி எந்த அரசிற்கும் அக்கறை இல்லை. தற்கால பிரணாய் அரசு இது போன்ற போராட்டம் வராது இருக்க வேடன் போன்ற வேடம் போடும் பாடகர்களை மக்களிடம் கடத்தி போராட்டத்தை பாடல் கஞ்சா பாவனை என மடை மாற்றி விடுவதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
பாதேரி (வயநாடு) அருகே நடத்தப்பட்ட சில பிரமாண்ட காட்சிகளில், 1800-க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் பங்கேற்றுள்ளனர். ”சினிமா ஒரு கலையும் , ஆனால் அதே சமயம் ஒரு தொழிலும் ஆக இருக்கையில் இது போன்ற திரைப்படங்கள் பெரும் நம்பிக்கையை தருகிறது.
அரசியல் கேள்விகளை நமது திரைப்படங்கள் எடுத்து உரைப்பது மகிழ்ச்சிக்குரியது. அந்த அர்த்தத்தில், ‘நரிவெட்ட’ ஒரு தைரியமான, தீவிரமான முயற்சி. சினிமா வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்ல, சவால் விடுக்கும் ஒரு மீடியம் ஆகவும் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், புதிய தலைமுறையை சிந்திக்க வைக்கும் இப்படைப்பு காலந்தோறும் நமக்குத் தேவை.
0 Comments:
Post a Comment