8 May 2019

வளர்ப்பு தாய்க்கு ஓர் அன்பின் மடல் - திரைப்படம் ரோமா Roma 2018


கதைத்தளம் 1970-ல் மெக்ஸிகோவில் நடக்கிறது
ஒரு நடுத்தர வசதியான குடும்பம். பெரிய வீடு, ஹால்புத்தக அலமாரைகள்.  மேல் மாடியில் பல அறைகள்; நாலு குழந்தைகள் ஒரு வயதான பாட்டி, நாய்.


மிஸ்ட்டக்கோ இனத்தை சேர்ந்த கிளியோ (Cleo)  அங்கு தான் வீட்டு பணியாளராக வேலை செய்து வருக்கிறார்.  காலை, நாய் கழிவை  சுத்தம் செய்வதில் இருந்து குழந்தைகளை பாங்காக எழுப்புவது, ஒவ்வொருவருக்கும் தேவையான உணவுகளை எடுத்து கொடுப்பது, வீட்டு சமையல், சந்தைக்கு போவது  என வீட்டு விளக்குகளை அணைத்து விட்டு தன் அறைக்கு செல்வது வரை  சிரித்த முகத்துடன்,  மகிழ்ச்சியுடன் பணியாற்றி வருகிறார்.

வாரத்திற்கு ஒரு முறை கிளியோ(Cleo)வும் அவருடைய தோழியும் வெளியே சென்று திரைப்படம் காண்பது  கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது என காலத்தை கழித்து வருகின்றனர்.  அப்படியான ஒரு பொழுதில் தான் போராட்ட இயக்கத்தில் இருப்பவனுடன்  பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த  நெருக்கத்தில் கர்ப்பவும் ஆகி விடுகிறார்.  அந்த நபரிடம் தான்  கருவுற்று இருப்பதை கூறுகிறார்.  அவனோ  மனசாட்சியே இல்லாது  மறைந்து விடுகிறான், தேடி செல்பவளை பின்பு விரட்டியும்  விடுகிறான்.

மனம் ஒடிந்த நிலையில் கிளியோவின் முகத்தில் சிரிப்பிற்கு பதில் கவலையும், சுறுசுறுப்பான நடைக்கு பதில் பதட்டவும், குற்ற உணர்ச்சியும் ஒட்டி கொள்கிறது. மாதவும் மூன்றாகி விடுகிறது.  எப்படி தன் யஜமானியிடம் சொல்வது என தயங்கி கொண்டு இருக்கிறார்.


அந்த வீட்டு குடும்ப தலைவன் வேறு பெண்ணுடன் போனதால்;   குடும்ப தலைவியையும்(சோபியா) நாலு குழந்தைகள், வயதான தாய் (Veronica Garcia), வேலை என மிகவும் மன அழுத்ததில் உள்ளார்.

இரு பெண்கள், வெவ்வேறு நிலையிலுள்ள பெண்கள்; ஒருவர் யஜமானத்தி, இன்னொருவர் அந்த வீட்டு பணியாளர்!; தாங்கள் நம்பினவர்களால் ஏமாற்றப்பட்டு  மனமொடிந்த நிலையில்  உள்ளனர்.

காதலியுடன் ஓடிப்போனவன் போய்விட்டான். தாயின் தலையில் பாரிய சுமை விடிகிறது. தான் பெற்ற நாலு குழந்தைகளைளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும், அவர்களை விட்டு, அவர்கள் அப்பா போனதை பற்றி புரியவைக்க வேண்டும்.  அதற்கான முயற்சியில் தாய் இறங்குகிறார்.  குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட அவர்களை வெளியிடங்களுக்கு அழைத்து செல்கிறார். இப்படியாக  தன் வாழ்க்கையை குழந்தைகளுடன்  நகர்த்துகிறார்.

அதே வேளையில், பணிப்பெண் கிளியோவும்;  காதலித்தவன் பிள்ளையை கொடுத்துவிட்டு தன் பாதை நாட்டின்  போராட்டம் என போய் விட்டான். கிளியோவிற்கு குழந்தையை பெற்று எடுக்க யஜமானத்தியின் உதவியும் தேவையாக இருக்கிறது.  

வேறு வழியே இல்லை. ....தன் யஜமானியிடம் கருவுற்று இருப்பதை சொல்ல வேண்டும். யஜமானி, பணிப்பெண் தன் நிலையை கூறிய போது அது வேறு ஒரு பெண் பிரச்சினையாக பார்க்கவில்லை. தன் பிரச்சினையாகவே உணர்ந்து  சக மனிதையாக மதித்து ஆறுதலாக  தன் ஆதரவை பணிப்பெண்ணுக்கு தருகிறார்.

அங்கு விசாரணயில்லை, குற்றப்படுத்துதல் இல்லை, பிரச்சினைக்கு உள்ளான பணியாள் பெண்ணை ஒதுக்கி விடவும் விரும்பவில்லை. அங்கு மனிதத்தின் உச்சம் என்கிற கரிசனை, அன்பு மட்டுமே உருவாகிறது.  தானே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார், குழந்தையை பெற்றெடுக்கும் நல்ல சூழலை உருவாக்குகிறார்.  மனிதன் இன்னொரு மனிதனுக்கு உதவிட  சமூக நிலையோ,  சூழலோ தடை நிற்கவில்லை. ஒருவர் மற்றொருவரை புரிந்து கொள்ளும் மனிதமே அங்கு மேல் ஓங்கி நிற்கிறது.

அந்த வீட்டிலிருக்கும் பத்து வயது பாலன், அம்மா ”ஏன் கிளியோ இப்போது பேசுவதில்லை, அவர் ஏன் அழுகிறார் என கேட்பான். தாயும் அவளுக்கு  வயிற்று வலி என்றதும் அந்த பாலகன் தன் கையால் வயிற்றை தடவி கொடுப்பான். அந்த பத்து வயது பாலன் தான்; தனது 56 ஆவது வயதில் தன் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை நினைவு கூர்ந்து ரோமா என்ற படத்தை இயக்கியுள்ள   அல்போஃன்ஸோ குவரோன்(Alfonso Cuarón)

என் வாழ்க்கையில் ஆளுமை செய்த இரு பெண்களை பற்றிய படம். ஒன்று என் தாய்(Fernando Grediaga), இன்னொருவர் வளர்ப்பு தாய். வளர்ப்பு தாய்க்கு நான் எழுதின அன்பின் மடலாகவே இப்படத்தை காண்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.  

10 வருடமாக மெருகேற்றி கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட ஸ்பானிஷ் மொழியிலான இப்படம் ஆங்கில மொழி அல்லாத வெளிநாட்டு பட வரிசையில்; 2018 ற்கான  மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது.  

இப்படத்தில் பணியாளர் பெண்ணாக நடித்திருப்பவர் புதுமுக நடிகை Yalitza Aparicio ஒரு பள்ளியின் ஆசிரியராக இருக்கையில் இப்படத்தில் நடிக்க தேர்வானவர். இவர் முதல் படத்திலே  ஆஸ்கார் பெற்றிருக்கிறார் என்பது அவரின் நடிப்பின் சிறப்பாகும்.  தாயாரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் Marina de Tavira சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். ஒளிபதிவு, இயக்கம் என மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

ஒவ்வொரு காட்சியிலும் காட்டியிருக்கும்  ஒழுங்கு, அதன் உள் கட்டமைப்பு, உண்மை தன்மை ஆச்சரியப்படுகிறது. வீட்டில் விரைந்து கிடக்கும்  பொருட்கள், வீட்டு அலமாரைகள், அலங்காரம், தன் தாயார் பயண்படுத்திய கார் மாடல், அதன்  நிறம், இயக்குனர்  வாழ்ந்து வந்த   தெருவு துவங்கி; வீட்டில் மற்றொரு ப்குதியில் பணிப்பெண்கள் தங்கியிருக்கும் அறைகள் அவர்கள் துணிகாயப்போடும் இடம் என தன் 10 வயதில் நிறைந்திருந்த  நினைவுகளை மறுகட்டமைப்பு செய்து எடுக்கப்பட்ட படம். தாங்கள் வாழ்ந்த கிராமத்தில்  செட்டுகள் போட்டு படம் ஷுட் செய்துள்ளார்

இந்த படத்தின் ஒளிபதிவு இயக்கம் திரைக்கதை எல்லாம் பார்த்து பார்த்து செதுக்கிய ஒரு சிலை போல் வடிவமைத்துள்ளார். இப்படத்தின் காட்சிகள் அவ்வளவு எளிதாக மனதை விட்டு மறைவதில்லை. இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பற்றி சொல்லப்போனால்எளிமையில் உருவான பிரமாண்டம்எனலாம்.  படம் முழுவதும் கறுப்பு வெள்ளையில். அதுவே ஒரு மயக்கும் mesmerising effect-உணர்வை  கொடுக்கிறது. ஒவ்வொரு frame-லும் அனைத்தும் (மனிதர்களும் பொருட்களும்துல்லியமாக உள்ளது . படம் மெதுவாக நகர்ந்தாலும் அழுத்தம் குறையாமல் இறுதிவரை செல்கிறது.

சொந்த தாயை போல்; நான்கு குழந்தைகளை கவனித்து வரும் கிளியோ தனக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது என்றதும் பிரத்தியேக மகிழ்ச்சியில், கற்பனையில் குவிந்திருப்பது அழகு.   ஆனால் சோதனை யாரை விட்டது குழந்தை இறந்து பிறந்திருப்பது அவரை மட்டுமல்ல நம்மையும்  அழவைத்து விடும்.

பின்புள்ள கிளியோவின் வாழ்க்கை பழைய வாழ்க்கையின் மகிழ்ச்சி இல்லாது, சுருதி அற்று செல்லும்.  ஒரு நாள்  யஜமானியின்  குழந்தைகள் அலைகளில் மாட்டி கொள்வார்கள். தன் உயிரையும் மதிக்காது காப்பாற்றி வருவார்.  அந்த காட்சியில் ஒரு பணிப்பெண் தாயாகும் நிலையை காட்சி மொழியில் காட்டியிருக்கும் விதம் அருமை.

மனித வாழ்க்கை அன்பால் கட்டமைக்க வேண்டியது. பிற மனிதனை தான் பேணும் நெறிகளின் பொருட்டு துன்பப்பட வைப்பது அல்ல என்பதை விளக்கியிருப்பார். பணக்காரர்கள் விருந்தில் சுவாரசியம் அற்று கிடக்கும் பணிப் பெண்கள், பணியாளர்கள் கலந்து கொள்ளும் விருந்திற்கு சென்று விட்டு தாமதமாக திரும்புவார். அப்போது  தனது யஜமானியின் தனிமையை களவான ஒருவன் முயன்று கொண்டு இருப்பான்.  யஜமானி நெறி தவறாதவள். அவனை தட்டி விட்டு விட்டு கடந்து செல்வார்.  யஜமானி தனதான நெறியில் கட்டுகோப்பானவளாக இருந்தாலும் தன் பணிப்பெண்ணின் தவறை, நீதியிடும் இடத்தில் இருந்து நோக்காது மனித நேயத்துடன் அணுகும் ஈரநெஞ்சக்காரியாக இருப்பார்.  பெண்கள் ஒருவருக்கொருவர்`            `தங்கள் பேரன்பால் தழுவி கொண்ட  பேரன்பை சொல்லிய திரைப்படம் இது.  

பொதுவாக வாழ்க்கை கதை சொல்லும்படங்கள்; படம் எடுப்பவரை பற்றியதாக அல்லது வரலாற்றில் இடம் பெற்ற மாபெரும் ஆளுமைகளை பற்றிய படங்களாகவே இருந்துள்ளது. ஆனால் இப்படம் தன் வீட்டில் ஒன்பது மாதத்தில் இருந்து தன்னை வளர்த்திய வளர்ப்பு தாயை பற்றி எடுத்த படம் என்பது இன்னொரு சிறப்பாகும்.  , தற்போது 72 வயதாகும் லிபோரியா ரோட்ரிகெஸ் (Liboria Rodriguez) இந்த படத்தை பார்த்த போது அழுதார் எனக்குறிப்பிட்டுள்ளார்.
 
நல்ல படம் என்பது நல்ல மனிதர்களை, ஈரமான மனங்களை உருவாக்குவது அவ்வகையில் ரோமா சிறந்த படம்

 1970 களில் தாங்கள் குடியிருந்த காலனியின் பெயரான ரோமா என்பதை படத்தின் தலைப்பாகவும் தேர்வு செய்துள்ளார் இயக்குனர்.

நெட்ஃப்லிக்ஸின் முதல் படமே 10க்கு மேற்பட்ட ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இது ஒரு. 17 வயதிற்கு மேலுள்ள நபர்கள் பார்க்க அனுமதியுள்ள  R-சாற்றிதழ் பெற்ற படம் ஆகும்.

இந்த படத்தில் தயாரிப்பு டிசைனராக தன்னுடைய தந்தை பணியாற்றியதையும் நினைவு கூறுகிறார்.  தன் குழந்தைப்பருவத்தில் தன் சகோதரி விளையாண்ட விளையாட்டு பொம்மைகளை  கூட இயக்குனர் நினைவு வைத்திருப்பதை நினைத்து  தந்தை ஆச்சரிப்படுகிறார்.

உலகம் முழுக்க இருந்து நெட்ஃப்லிக்ஷ் ஊடாக 137.1 மிலியன் மக்கள் பார்த்துள்ளனர் .  பல  தியேட்டருகளிலும் திரையிடப்பட்டுள்ளது.


0 Comments:

Post a Comment